அப்பாவின் ஜிப்பா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 4,554 
 
 

மழை திறந்த வெள்ளம். ‘நாற்பது அடியில் தண்ணீர்’ என்று புரோக்கர் சொன்னதை நம்பி நகரின் எல்லையில் வாங்கிய பிளாட்டில் நானூறு அடி போர் போட்டுத் துளைத்துத் தண்ணீரைப் பார்த்த எங்கள் வீடு இருக்கும் தெருவில் இப்போது நான்கு அடி உயரவெள்ளம்.

மழை பொய்க்காத காலத்தின் ஆண்டு பிரம்மோத்ஸவம். ஏரியாவில் உள்ள அத்தனை வீடுகளிலும் தரைத்தளத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ள தண்ணீரின் ராஜ்ஜியம். எங்கள் வீட்டின் படுக்கையறை, சமையலறை என்று ஓரிடமும் பாக்கி வைக்காமல் கண்களில் மின்னும் ஆர்வத்துடன் நுழைந்து நோட்டமிடும்புதுமழைக் குழந்தை.

“என்ன யோசனை, கவிதையா ?” என்று உலுக்கினாள் சின்மயா.

பதில் என்று எதைச் சொன்னாலும் திட்டு விழும்.

“போதும், உங்க கவிதை கிறுக்கு எல்லாத்தையும் அப்படியே மூட்டை கட்டிட்டு பேங்க் பாஸ் புக், செக் புக், ஏடிஎம் கார்டு, கேஷ், அப்புறம் என்னோட டிகிரி சர்டிஃபிகேட் இதுங்களை மட்டும் எடுத்துக்கிட்டு ரெடியாகுங்க! செல்போன், சார்ஜர் ரெண்டையும் மறந்துடாதீங்க மிஸ்டர் மறதி மாஸ்டர்!”
படபடவென்று கட்டளை பிறப்பித்த சின்மயா எங்கள் இருவருக்கும் நாலைந்து நாள்களுக்கான துணிமணிகளை எடுத்துக்கொள்ள மாடியறைக்குச் சென்றாள்.

இந்த ஆண்டு மழை ஜாஸ்திதான். ஏரியாவாசிகள் தாற்காலிகமாக எங்கேயாவது போய் இருந்துகொள்ள வேண்டியதுதான். இன்னும் சற்று நேரத்தில் ஃபைபர் படகுகளில் எங்களை ஏற்றிக்கொண்டு ஊருக்குள் அழைத்துச் சென்று விடுவதற்காகத் தீயணைப்புத் துறை வீரர்கள் வரவிருப்பதாகத் தகவல். சீக்கிரம் தயாராக வேண்டும். ஊருக்குள் இருக்கும் சின்மயாவின் அண்னன் வீட்டுக்குச் சென்று தங்குவதாக முடிவு. வேறு வழி எதுவும் இல்லை என்பதே யதார்த்தம். கொஞ்ச நாளைக்கு அங்கிருந்தே என் ஆபீஸூக்கு நான் போக வேண்டியதுதான்.

வீட்டுக் கடன் ஓரளவுக்காவது அடையும் வரையில் குழந்தை பெறுவதைத் தள்ளி வைக்க உத்தேசம். இப்பொழுதுக்கு எங்கள் இருவரைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டால் போதுமானது.

நேராக பெட் ரூமுக்குச் சென்றேன். சின்மயா நாங்கள் வைத்திருந்த பலவீனமான லோக்கல் தயாரிப்பு பீரோவை நம்பாமல் எங்களுடைய பாஸ் புக் வகையறாக்களை ரெக்ஸின் பை ஒன்றில் வைத்து ஒரு வேஷ்டியால் சுற்றி பெட்ரூம் ஸ்லாப் மீது வைத்திருந்தாள். வீடு கட்டிய வகையில் பெற்ற கடன்களில் ஒரு பகுதிக்காகச் சின்மயாவின் நகைகள் மழை வெள்ளம் பற்றிய கவலை எதுவும் இன்றி சர்வபத்திரமாக வங்கி லாக்கரில் உறங்குகின்றன. ஆக, பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பு மிகுந்த பொருள் எதையும் (எனது மூளையைத் தவிர) எங்கள் வீட்டில் நாங்கள் வைத்திருக்கவில்லை.

இரும்பு ஸ்டூலை எடுத்துப் போட்டு ஏறி அந்த ரெக்ஸின் பையை எடுத்தவனின் கவனத்தை அதன் பக்கத்திலேயே இருந்த பூட்டாத டிரங்க் பெட்டி இழுத்தது. இழுக்காமல் என்றைக்காவது அது இருந்திருக்கிறதா என்ன?

இப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்க்க நேர்ந்தது போன்றதோர் ஆவலுடன் அந்தப் பழுப்பேறிய டிரங்குப் பெட்டியைச் சற்றே என் பக்கமாக இழுத்து மேல்பாகத்தைத் திறந்து துழாவி வெளியே எடுத்தேன் அந்த பொக்கிஷத்தை! ஜீ பூம் பா! அது என் அப்பாவின் ஜிப்பா.

பள்ளிக்கூட வாத்தியார்கள் மெதுவாக வேஷ்டி, ஜிப்பாவிலிருந்து பேண்ட் ஷர்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த காலம் அது. தமிழ் வாத்தியார்கள் மட்டும் நீண்ட காலத்துக்குப் பிடிவாதமாக வேஷ்டி, ஜிப்பா, அங்கவஸ்திரத்தைக் கைவிடாதிருந்தார்கள்.

என் அப்பா ஒரு தமிழ் வாத்தியார்.

வேஷ்டி ஜிப்பாவுக்கு என்றோரு மரியாதையும் கம்பீரமும் இருக்கத்தான் செய்தது. அப்பாவுடன் அந்தப் பள்ளியில் பணிபுரிந்த மேலும் இரண்டு தமிழ் வாத்தியார்களும் வேஷ்டி, ஜிப்பா, அங்கவஸ்திரம்தான். அவர்களில் ஒருவர் மட்டும் காலப்போக்கில் முக்கால் கை வைத்த ஜிப்பா அணியத் தொடங்கினார்.

அப்பாவும் எங்கள் ஒன்பதாம் வகுப்பு சரித்திர ஆசிரியர் ஜோஸப் ஸார் போன்று டிப் டாப்பாகப் பேண்டு, முழுக்கை டெரிலின் சட்டை, பாலிஷ் செய்த ஷூ, கச்சிதமான மீசை, கிராப்புடன், முகத்துக்கு ஸ்னோவும் ஸாண்டல் பவுடரும் போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கு வந்தால் எப்படியிருக்கும் என்று நான் நினைக்காத நாள் இல்லை.

ஒரு தடவை அப்பாவிடம் சொல்லியும் இருக்கிறேன்.

“போடா கிறுக்குப் பயலே, அப்புறம் நானும் கவுன்தான் போடுவேன்னு உங்கம்மா கிளம்பிடுவாளே, தேவையா இது?” என்று பலமாகச் சிரித்தபடியே அம்மாவின் முகக் கோணலை ரசித்தார்.

ஆசிரியர் பணியின் கடைசி நாள் வரையிலும் கட்டுக்குடுமி, காதில் கடுக்கன், நெற்றியில் திருமண்காப்பு, பளிச் என்று சலவை செய்த வேஷ்டி, ஜிப்பா, இடது தோளில் நாசூக்காக அமர்ந்த விசிறிமடிப்பு அங்கவஸ்திரம் இவற்றில் எதையும் என் அப்பா கைவிடவேயில்லை.

சலவைத் தொழிலாளி வீராசாமி எங்கள் ஊர் அதிசயங்களில் ஒன்று.

அப்பா பள்ளிக்கூடத்து உடுத்துச் செல்லும் துணிகளை மும்மூன்று செட்டுகளாக எடுத்துச் சென்று சொன்ன தேதி தவறாமல் வெளுத்துக் கொண்டு வந்து திரும்பும் வீராசாமிக்கு நாற்பது வயசிலேயே நடிகர் பாலையா போன்று சற்றே முதியவர் போன்றதொரு தோற்றம். அறுபது வயது என்றாலும் நம்பலாம்.

வீராசாமி வெளுத்துக் கொடுக்கும் அப்பாவின் வேஷ்டிகளும், ஜிப்பாக்களும் சலவை செய்யப் பட்டு மொடமொடவென்று உறுதியான செவ்வகப் பலகைகளைப் போல இருக்கும்.

அப்பாவின் அங்கவஸ்திரமோ, நீளவாக்கில் பதினாறாக மடிக்கப்பட்டு பயில்வான்கள் அணியும் இடுப்பு பெல்ட் போன்று தோற்றமளிக்கும். அப்பா ஸ்கூலுக்குக் கிளம்பும்போது அவருடைய இடது தோளில் கச்சிதமாக கம்பீரமாக அமர்ந்துகொள்ளும். அத்தனை உருப்படிகளும் வெள்ளை வெளேர் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

வீராசாமி துணிவெளுக்கப் பயன் படுத்துவது சவுக்காரமா, 501 பார் சோப்பா எதுவென்று தெரியாது, ஆனால், இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டுத் துணிசோப்புகள் எதுவும் இதுபோன்ற வெளுப்பை கொடுக்காது என்பது நிச்சயம்.

நீலம் போட்டுதான் அலசியிருக்க வேண்டும். ஆனால், அப்பாவின் துணிகளில் ஒரு சிறிய நீலத் திட்டு கூடப் பார்க்க முடியாது.

வீராசாமி ஓர் உற்சாகப் பேர்வழி. ஆடிக் கிருத்திகைக் காவடி ஊர்வலங்களிலும், ஊரிலுள்ள அத்தனை அம்மன் கோயில்களின் திருவிழாக்களிலும் களைப்பே இல்லாமல் பம்பை உடுக்கை ஒலிக்கேற்ப வீராசாமி போடும் ஆட்டம் எங்களை ஆச்சரியப்படுத்தும்.

அப்பாவால் ஒவ்வொரு சலவைக்கும் பணம் கொடுக்க முடியாது. இருநூற்றுச் சொச்சம் சம்பளத்தில் வீட்டு வாடகை, பால், தயிர், சலவைத் தொழிலாளி.. என மாதம் முதல் வாரத்தில்தான் செட்டில்மென்ட் ஆகும்.

அப்பாவைப் போன்று வீராசாமிக்கு இன்னும் எத்தனை கஸ்டமர்களோ. ஆனால், எங்கள் வீராசாமி அதற்கெல்லாம் கொஞ்சம் கூடக் கவலைப்படுவதில்லை.

காரணம் இருக்கிறது.

சலவைக்காசு மாதம் ஒரே முறைதான். ஆனால், வீராசாமி அப்பாவின் துணிகளைக் கொடுக்க மாதத்தில் பத்துமுறை எங்கள் வீட்டுக்கு வந்தாலும் பத்து முறையும் பசுந்தயிர் போட்டுப் பிசைந்த தயிர்சாதமும் தொட்டுக் கொள்ள வத்தல் குழம்பும் வாழைப்பூ மடலில் வைத்து அம்மா கொடுப்பதை சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லத் தவறுவதில்லை.

சமயத்தில், “நேத்து ராவுலேர்ந்து தலை வலிக்குதும்மா. அம்மா கையால ஒரு வாய் காப்பி கொடுத்தீங்கன்னா?” என்று உரிமையாகக் கேட்டுக் குடிப்பதும் உண்டு.

வீராசாமிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஏதோ விசேஷ பந்தம் போல் உணர்ந்த காலம் அது.

அப்பா ரிட்டயர் ஆன பிறகும், வீராசாமிக்குத் தன்னைப் போல இன்னொரு ரெகுலர் கஸ்டமர் கிடைக்கும் வரையிலும் வேஷ்டி, ஜிப்பா இரண்டையும் சலவைக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.

ரிட்டயர் ஆன புதிதில் விசிறிமடிப்பு அங்கவஸ்திரத்தைத் தவிர்க்கத் தொடங்கியவர், நாளடைவில் புதிதாக ஜிப்பாவுக்குத் துணிவாங்கித் தையல் காரரிடம் தைக்கக் கொடுப்பதையும் தவிர்க்க ஆரம்பித்தார்.

“எப்போவாவது வெளியில போகும்போது போட்டுக்கத்தானே ஜிப்பா தேவைப் படப்போகிறது, ஏற்கெனவே இருக்கிற ஜிப்பாக்களே என் ஆயுசுக்கும் வரும்” என்று சொல்லிவிட்டார். கைவைத்த பனியன் மட்டும் வருடத்துக்கு இரண்டே இரண்டு வாங்குவார்.

அப்பா சொன்னது போலவே ரிட்டயர் ஆகிய பிறகு அவருக்கு ஜிப்பா அணியும் தேவை ஒன்றும் அடிக்கடி நேரவில்லை. பென்ஷன் தொடர்ந்து கிடைப்பதற்காக வருஷாவருஷம் தாலுகா ஆபீஸ் கருவூலத்துக்குச் சென்று உயிருடன் இருப்பதாக நிரூபிப்பதற்கும், ஒரே பிள்ளையான எனக்காக ஒன்றிரண்டு இடங்களில் பெண் பார்ப்பதற்காக வெளியூர்ப் பிராயணம் செய்ய வேண்டியிருந்த பொழுதுகளிலும் அப்பாவின் திருமேனியை ஜிப்பா அலங்கரித்து விட்டு, அப்பா கையாலேயே சன்லைட் சோப்புப் போட்டு துவைக்கப்பட்டு மீண்டும் டிரங்குப் பெட்டிக்குள் குடியேறிவிடும்.

தனக்கு முன்னதாக அம்மா இறந்த கவலையில் மனசும் உடம்பும் இளைக்கத் தொடங்கிய அப்பாவின் ஜிப்பாக்கள் சற்றே தொளதொளக்க ஆரம்பித்துப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அவை நலிந்து கிழிய, சற்றே காத்திரமான ஜிப்பா ஒன்றே ஒன்று மட்டும் அப்பாவின் எண்பது வயசு வரையில் அவர் கூடவே டிரங்குப் பெட்டியில் பயணித்தது.

பதினைந்து நாள்கள் ஐ.சி.யூ.வில் இருந்து விட்டு வீடு திரும்பாமல் அங்கிருந்தே தனது இறுதிப் பயணத்தை அப்பா தொடங்குவதற்கு முந்தின நாள் மிஞ்சியிருந்த அந்த ஜிப்பாவை அப்பாவுக்கு உடுத்திப் பார்க்க ஆசை வந்தது.

நர்ஸ் சிரித்துவிட்டு, “சீஃப் டாக்டர் ஒத்துக்கொள்ள மாட்டார்!” என்றாள்.

வாஸ்தவம்தான். இசிஜி டியூப்புகளையும், ஓயாமல் க்ளூகோஸ் பயணித்துக் கொண்டிருக்கும் குழாயையும் அகற்றாமல் எப்படி அப்பாவுக்கு ஜிப்பாவை அணிவிக்க முடியும்.

அரை மனசுடன் அந்த ஜிப்பாவை அப்பாவின் மேல் ஒரு போர்வை போலப் போர்த்திவிட்டு எடுத்து மடித்துப் பையில் வைத்துக் கொண்டேன்.

பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சின்மயா, “இன்றைக்கு மட்டும் ஏனோ உங்களைக் கிறுக்குன்னு சொல்லத் தோணலை டியர் !” என்றாள் ஆத்மார்த்தமாக.

அம்புலி மாமா கதையில் மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போல அப்பாவின் ஜிப்பா மீண்டும் அந்த டிரங்குப் பெட்டியில் ஏறிப் பரண்வாசத்தைத் தொடர்ந்தது. பின்னாளில் நாங்கள் கட்டிய புது வீட்டில் ஸ்லாப் மீது அதன் வாசம். அப்பாவின் ஜிப்பாவிலோ என்றென்றும் தொடரும் அப்பாவின் வாசம். அப்பாவின் நினைவுத் தினங்கள் மட்டுமின்றி, அப்பாவின் நினைப்பு வரும்போழுதெல்லாம் ஒருமுறை எடுத்து முகர்ந்து மீண்டும் டிரங்குப் பெட்டியிலேயே வைத்து விடுவேன்.

இதோ இப்பொழுதும் அப்பாவின் ஜிப்பா எனது கைகளில். காலங்கள் கடந்த அப்பாவின் வாசத்துடன், அந்த உற்சாக வீராசாமியையும் நினைவு படுத்திக் கொண்டு!

வீராசாமி இப்பொழுது உயிருடன் இருக்கக் கூடுமெனில், ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்.

“என்னங்க, எவ்வளவு நேரம். எல்லா இம்பார்டண்ட் ஐட்டங்களையும் எடுத்து வெச்சீங்களா..? வாங்க, இன்னும் கதவைப் பூட்ட வேண்டிய கஷ்டம் வேற இருக்கு!”

வழக்கம் போலவே என்னை நிகழ் உலகத்திற்கு மடைமாற்றும் சின்மயாவின் குரல்.

பாஸ் புத்தகம் எல்லாம் அடங்கிய ரெக்ஸின் பையை எடுத்தவன், இன்னும் ஒரே ஒரு முக்கியமான ஐட்டம்தான் சின்னி என்றபடி அப்பாவின் ஜிப்பாவை எடுத்து அந்தப் பைக்குள் திணித்தபடி இரும்பு ஸ்டூலை விட்டுக் கீழே இறங்கினேன்.

பெட்ரூமில் தற்பொழுது கணுக்கால் அளவுக்கு உயர்ந்திருந்த புதுவெள்ளத்தின் சில்லிப்பு நரம்புக்குள் ஊடுருவியது.

– டிசம்பர் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *