பஸ் ஸ்நேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 6,623 
 

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், ” ஹலோ ” சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். ” என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ? ”

” நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க? ”

தலையாட்டினாள். ” ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை. ”

” நீங்க அமெரிக்காவுக்குப் புதுசு. அதுவும் L1 விசாவில் வந்திருக்கிங்க இல்லையா அதான். ”

” அதனால? ”

” பொதுவா இங்க ஒரு இந்தியனை இன்னொரு இந்தியன் விரோதி மாதிரிப் பார்ப்பான். அதிலும் L1 விசாவில் வந்திருக்கும் அவுட் ஸோர்சிங் ஆள்ன்னு தெரிஞ்சா பரம விரோதி மாதிரிப் பார்ப்பான். ”

” ஏன் அப்படி? ”

” ஏன்னா நீங்க இந்தியாவிலிருந்து வந்து ஒரு மூணு மாசமோ ஆறு மாசமோ இருந்துட்டுப் போறதுக்குள்ளே பத்து H1B ஹோல்டர் வயித்திலடிச்சுட்டுப் போயிடுவிங்க. எங்களுக்குக் குடுக்கிற சம்பளத்தில் பாதி – இல்ல – பாதியிலும் பாதி உங்களுக்குக் குடுத்தாப் போதுமே ! அதனால க்ளையண்ட் எங்களைத் தூக்கிட்டு உங்களை வெச்சிப்பான். ”

” என்னங்க, அவுட் ஸோர்சிங்கால இந்தியாவோட பொருளாதாரம் ஓஹோன்னு போயிட்டிருக்கு. அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க ? ”

” அவனவனோட வீட்டுப் பொருளாதாரம் முக்கியமா, இல்லை நாட்டுப் பொருளாதாரமாங்கறது சிக்கன்-எக் ப்ராப்ளம். அதை விடுங்க உமா. என்கிட்டே என்னவோ கேக்க வந்திங்களே? ”

நான் சிநேகமாய்ப் பேசியதில் அவளிடமிருந்து தயக்கம் கழன்றிருந்தது.

” இங்க வந்ததிலிருந்து பர்கரும் சீஸும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கெல்லாம் மரத்துப் போயிடுச்சு. பக்கத்தில் எங்கே இந்தியன் ஸ்டோர் இருக்குன்னு சொல்ல முடியுமா? ரைஸ் வாங்கி தயிர் சாதம் பண்ணி சாப்பிடணும் போல இருக்கு. ”

” எங்கே தங்கிருக்கிங்க? ”

” ஏர்போர்ட் பக்கத்தில் ஒரு ஹோட்டல்ல தங்கிருக்கேன். கிச்சன் அட்டாச்டு. ”

” நீங்க எட்டாம் நம்பர் பஸ்சில் போகணும். நீங்க போற வழியில் இந்தியன் ஸ்டோர் எதுவுமில்லை. ஒண்ணு செய்ங்க. நான் போற பஸ்சில் வந்திங்கன்னா நான் இந்தியன் ஸ்டோர் கிட்டே உங்களை இறக்கி விடறேன். வாங்க வேண்டியதை வாங்கிட்டு திரும்ப எதிர்ப்பக்கம் பஸ்சைப் பிடிச்சு இங்கே வந்து சேர்ந்துடுங்க. சரியா? ”

தயிர்சாதம் அவளைத் தலையாட்ட வைத்தது. மெல்லக் கேட்டாள். ” ஆமா நீங்க கார் வாங்கலையா? ”

நான் சிரித்தேன். ” குரங்கு அப்பம் பங்கு போட்ட கதையை ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக் கொடுப்பாங்களே, அது அமெரிக்காவுல வேலை பார்க்கப் போறவங்களுக்காகத்தான் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்காங்க. மூணு லேயர் தாண்டி கைக்கு வர்றது கொஞ்சமே கொஞ்சம் சம்பளம். அதிலும் பாதிக்குப் பாதி வருமான வரி. எங்கே கார் வாங்கறது. அமெரிக்காவைப் பத்தி நீங்க கற்பனை பண்ணிட்டிருக்கிற காலமெல்லாம் மலையேறிடுச்சுங்க உமா. ”

அவள் சற்றே சங்கடமான பார்வையுடன், ” ஸாரிங்க. ” என்றாள்.

பஸ் வந்தது. பதினைந்து நிமிஷத்தில் இந்தியன் ஸ்டோர் இருந்த காம்ப்ளக்ஸ் வந்து விட, ” இங்கதான் நீங்க இறங்கணும். இந்தியா பேலஸ்ன்னு போட்டிருக்கு பாருங்க. அதான் இந்தியன் ஸ்டோர்ஸ். வெங்காயம் பச்சை மிளகாயிலிருந்து, ஊறுகாய் உளுத்தம்பருப்பு வரைக்கும் எல்லாமே கிடைக்கும். ”

” நீங்க இங்கே இறங்க மாட்டிங்களா? ” பரிதாபமாய்க் கேட்டாள். புது ஊர், புது இடம், புது மனிதர்களைப் பார்க்கிற மிரட்சி அவள் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

” ஓக்கே, பர்ச்சேஸ் பண்ணிக் குடுத்துட்டு உங்களை மறுபடி பஸ் ஏத்தி விட்டுட்டே போறேன். ”

” தாங்க்ஸ் எ லாட். உங்களுக்கு ரொம்ப சிரமம் குடுக்கறேன். ”

” நோ ப்ராப்ளம். ”

Manபுளியோதரை பேஸ்ட், ரசப் பவுடர், தக்காளி ஊறுகாய் என்று உறைப்பான சமாசாரங்களாய் வாங்கிக் குவித்தாள். பிதுங்கும் பிளாஸ்டிக் கேரி பேகுகளோடு இந்தியன் ஸ்டோரிலிருந்து மீண்டும் பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம். காலையிலிருந்து விரோதப் பார்வைகளையே பார்த்திருந்த உமா என்னுடைய சிநேகப் பேச்சிலும், உதவியிலும் ரொம்பவும் நெக்குருகிப் போயிருந்தாள். “நீங்க தப்பா நினைச்சிக்கலைன்னா உங்க செல்போன் நம்பரை நான் குறிச்சு வெச்சுக்கலாமா? இதே மாதிரி மறுபடி ஏதாவது உதவி தேவைப்பட்டா கூப்பிடலாமா? ”

நான் அவளை உற்றுப் பார்த்ததும் – சட்டென பதைபதைத்தாள். ” ஸாரி, உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். ”

மெல்லப் புன்னகைத்தேன். ” உங்களுக்கு போன் நம்பர் தரதைப் பத்தி ஒண்ணுமில்லை. ஆனா அதனால பிரயோஜனமில்லை. ஆபிஸ்ல எனக்கு ரீப்ளேஸ்மென்ட்டாதான் நீங்க வந்திருக்கிங்க. இன்னிக்கு சாயந்திரம் என்னோட க்யூபுக்கு வந்து சொல்லிட்டாங்க. இதுதான் உங்க கடைசி தினம், இன்னும் அரை மணி நேரத்தில் உங்க உடமைகளையெல்லாம் எடுத்துக்கிட்டு, ஐடி பேட்சை செக்யூரிட்டிகிட்டே ஒப்படைச்சிட்டுக் கிளம்புன்னு சொல்லிட்டாங்க. இனி நான் அடுத்த வேலை தேடணும். எந்த ஊர்ல கிடைக்குதோ அங்கே ஓடணும். அது வரைக்கும் பசிக்காது. தூக்கம் வராது. உங்க பஸ் வந்துருச்சு உமா. ”

-மே 04, 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *