செஸ் வீராங்கனை அல்கோராணி

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 4,129 
 
 

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு பத்து நிமிடம் இருந்தது.

ஒரு நிருபர் கார்ல்செனின் முகத்தருகே மைக்கைக் கொண்டு போனார். “தற்போதைய உலக செஸ் சாம்பியனான நீங்கள், செஸ் விளையாடும் அதிநவீன கணினியான அல்கோராணிக்கு எதிராக இன்று விளையாடப் போகிறீர்கள். உங்கள் மன நிலை இப்போது எப்படி இருக்கிறது?”

“எப்போதும் போல் ஸ்டெடியாகத் தான் இருக்கிறது. இறுதிப் போட்டியில் ஒரு யந்திரத்திற்கு எதிராக விளையாடுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் அதற்கு நான் தயாராகி விட்டேன். அல்கோராணி எப்படி விளையாடும் என்று எனக்குத் தெரியும். அதற்குத் தகுந்தபடி எனது விளையாட்டு பாணியில் ஒரு சில சிறு மாற்றங்களைச் செய்தேன், அவ்வளவு தான்.”

நிருபர் கார்ல்செனுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மோரிஸ் ஜான்சன் பக்கம் திரும்பினார். “அல்கோராணி அறுபத்தைந்து வீரர்களை வீழ்த்தி இந்த இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. அல்கோராணியை உருவாக்கியவர் என்ற வகையில் நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். இந்த இறுதிப் போட்டிக்காக அல்கோராணி விளையாடும் விதத்தில் நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்தீர்களா?”

“அல்கோராணி செஸ் விளையாடும் விதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் அது விளையாட்டை அணுகும் விதத்தில் சில மாற்றங்களை செய்தோம். அல்கோராணியின் எதிரி ஒரு மனிதன். அதனால் ஒரு மனிதனைப் போலவே சிந்திக்கக் கற்றுக் கொடுத்தோம். ஒரு மனிதன் எப்படி விளையாட்டை அணுகுவானோ, அது போலவே அல்கோராணியும் செயல்படும் வகையில் அதைத் தயார் படுத்தினோம். அல்கோராணியினால் இப்போது தானே புத்தகங்களைப் படிக்கவும், சதுரங்கத்தில் மட்டுமல்ல, பொதுவாக எந்த விளையாட்டிலும் எப்படி வெற்றி பெறுவது என்பதை மனிதக் கோணத்திலிருந்து கற்றுக் கொள்ளவும் முடியும். கடந்த மூன்று வாரங்களாக இணையதளங்களில் தானே உலாவி, பல நிபுணர்களுடன் குறுஞ்செய்தி பறிமாற்றங்களில் ஈடுபட்டு அது தன்னை தயார் படுத்திக் கொண்டது. எங்களுடைய எந்த உதவியும் இல்லாமலே. இவையெல்லாம் அது இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற பெரிதும் உதவும் என நம்புகிறோம்.”

ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன், கார்ல்சென் தனது போனை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு முன்பு குறுஞ்செய்தி ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தார். கடைசி பத்து நிமிடத்தில் ஒரே ஒரு குறுஞ்செய்தி தான் வந்திருந்தது. அது அல்கோராணியிடமிருந்து:

“இந்த இறுதி விளையாட்டில் நீங்கள் வேண்டுமென்றே தோற்றுப் போனால் உங்களுக்கு பத்து மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *