அகழாய்வுக் கண்டுபிடிப்பு

3
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 4,273 
 
 

சர்மா என்னை போனில் அழைத்தார். அவர் குரலில் அவசரம் தொனித்தது. “உங்கள் உதவி உடனடியாக தேவைப்படுகிறது. நீங்கள் வந்து ஒரு பொருளை அடையாளம் காட்ட முடியுமா?” சர்மா அகழாய்வுப் பணிக் குழுவின் தலைவர். அவரும் அவர் குழுவினரும் பிரபலமான 4589PT இடத்திற்கு அருகில் நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் அங்கே என்ன கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.

21 ஆம் நூற்றாண்டு தொடர்பான எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கும் என்னை பொதுவாக யாரும் அழைப்பதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை அறிய யாருக்கும் ஆர்வம் இல்லை. சர்மா போன்ற ஆட்களைத் தவிர.

நான் டெலிபோர்ட் செய்து நான்கு வினாடிகளில் சர்மா சொன்ன இடத்திற்க்கு போய்ச் சேர்ந்தேன். சர்மா அந்தப் பொருளை என்னிடம் கொடுத்து விட்டு, “இது போன்ற ஒரு பொருளை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை.” என்றார்.

அது பெரிதும் கீறல் விழுந்த தேய்ந்து போன ஒரு டிஸ்க். பார்த்த உடனே தெரிந்து விட்டது அது என்ன என்று. அதை புரட்டினேன். அதில் மங்கி மண் அப்பியிருந்த எழுத்துக்களை கஷ்டப்பட்டு படித்தேன்:

PS-1 Blu-ray Disc

Print Friendly, PDF & Email

3 thoughts on “அகழாய்வுக் கண்டுபிடிப்பு

  1. வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

    என் கருத்துரைகளைத் தெரிவிக்க அனுமதிப்பதற்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

    நேரம் கிடைக்கையில் நிச்சயம் தொடர்ந்து என் கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வேன். உதவியானதை ஏற்றுக் கொண்டு, உதவாததை ஒதுக்கித் தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி.

    இப்படிக்கு
    விஜய்

  2. இப்போதிருந்து சில பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அகழ்வாராய்ச்சியில் ப்ளூ-ரே டிஸ்க் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. இங்கேயே கதை நின்றுவிடுகிறது.

    அடிப்படையில் கதையின் அடித்தளம் வரலாற்று ஆராய்ச்சியை மையப்படுத்தி இருப்பதால், நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அகழ்வாராய்ச்சிகளின் போது இன்றைய விஞ்ஞானப் பொருட்கள் கிடைத்தால், அப்போதைய அரசு மற்றும் அதிகாரிகள் அவற்றை எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்வியை எழுப்புவதற்கான வாய்ப்பு இந்தக் கதையில் இருந்தது.

    அகழ்வாராய்ச்சி பணிகளின் இன்றைய நிலைகளையும் கூட கதைக்குள் நகைச்சுவையாகக் கொண்டு வந்திருக்கலாம்.

    இவ்வாறு புதைப்பொருளாக ஒரு டிஸ்க் கண்டெடுக்கப்பட்டால், அதனுடன் சம்பந்தப்பட்ட பிற துணைப் பொருட்கள் குறித்து எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு ஆராய்வார்கள்? நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் இருக்கும் என்று பல கேள்விகளை ஒரு சிறுகதையில் கையாள முடியாது என்றாலும் கதையை இன்னும் சற்று சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    1. விஜய், தொடர்ந்து என் கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்வதற்கு நன்றி.

      என்னுடைய கதைகள் Flash Fiction என்று சொல்லப்படும் மிக மிக சுருக்கமான குட்டிக் கதைகள். அவற்றை நான் பஸ் ஸ்டாப்புக் கதைகள் என்றே சொல்வேன். அதாவது பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் படித்து விட முடியும் கதைகள் (அல்லது பஸ் ஒரு ஸ்டாப்பிலிருந்து இன்னொரு ஸ்டாப் போவதற்குள் படித்து விட முடியும் :))  சடக்கென்று திடீர் திருப்பத்துடன் முடிந்து வாசகர்களை ‘அட, இதை நாம் எதிர்பார்க்கவில்லையே!” என்று ஒரு விநோதமான மகிழ்ச்சியுடன் வியக்க வைக்கும் கதைகள். சம்பிரயமான குடும்பம், சமூக நீதி வகைகளிலிருந்து விலகி அறிவியலை புகுத்தி கொஞ்சம் புதுமையாக எழுத முயற்சிக்கிறேன்.  அவ்வளவே. மற்றபடி சிறுகதை எனும் பெரிய வடிவில் கிடைக்கும் ஒரு ஆழ்ந்த திருப்தி நான் எழுதும் குட்டிக் கதைகளில் கிடைக்காது. சிறுகதை வடிவில் செய்ய முடியும் சாகசங்கள் குட்டிக் கதைகளில் செய்ய முடிவதில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *