முன்னுரை
கற்பனைக் கவியரங்குகள், நாடக மேடையில் நடப்பதாக விரியும் இந்த நாடகத்தில் என்னுடைய கற்பனை மாந்தர், கவிஞர்களாக உலா வருகிறார்கள். தங்கள் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவரவர் கதைகளையும் கூறுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்த தகவல் களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாசகர்களுக்கு விருந்தாகும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன்.
-எஸ். மதுரகவி
முதற் காட்சி | இரண்டாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் கவியரங்க அமைப்பு காணப்படுகிறது. நடுவே பெரிய ஆசனத்தில் கவியரங்க நடுவர் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார்.
அவருக்கு இரண்டு பக்கங்களிலும் ஆடவரும் மகளிருமாக சிறிய ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். நடுவர் அமர்ந்தபடியே பேசுவார். மற்றவர்கள் நின்று பேச மேடையின் வலப்பக்கத்தில் உரை மேசை உள்ளது.
சரி, வாருங்கள் வசன கவிதை மழை பொழியும் கவியரங்கத்தைக் காண்போம்.)
நடுவர் அரங்கநாதனின் முன்னுரைப் பேச்சு
கடல் சூழ்ந்த உலகின் கண் உறையும் கருணை மிக்க மகா சனங்களே! தன்னிகரில்லா தமிழ் மொழியில் கவியரங்கம் நடத்திட அடியேன் இங்கு வந்துள்ளேன்.
கவி மழையில் நீங்கள் நனைந்திட உறுதுணை புரிய இங்கே இத்தனை கவிகள் வந்துள்ளனர். தங்கள் அனைவரையும் இந்த நன்னாளில் கருணை உடையவர்கள் என்றே உரைத்தேன்.
எங்கள் கவிமொழிகளைக் கேட்க வந்த நீங்கள் கருணை மிக்கவர்கள்தான் என்பதில் ஐயப்பாடு ஏதும் இல்லை அன்றோ?
நான் செப்பும் தலைப்புகளில் தங்களைச் சிந்திக்கச் செய்யும் கவிதைளை இங்கே மடை திறந்த வெள்ளமென இங்கு உள்ள கவிஞர்கள் பொழிவார்கள்.
ஆம். சிந்திக்க வைத்த கூற்றுதான் என்னவென்று உங்களைச் சிந்திக்க வைப்பார்கள்.
இதோ முதலில் கவிதையை வழங்க வருகிறார் இளம் மங்கை அழகுநிலா. இவருக்கு நான் தரும் தலைப்பு கருமை
(அழகுநிலா உரை மேசை அருகே நின்று பேசுகிறாள்)
அழகுநிலா
அடியேனைப் பற்றி அறிமுகமாக எதுவும் சொல்லாத நடுவர் மீது எனக்கு வருத்தம். இவரை நல்லவர் என்று கொண்டாடுவது எப்படி பொருந்தும்?
என் கட்டழகைப் பற்றியும் கவிதைத் திறன் பற்றியும் சுட்டிக் காட்டினால் நடுவரின் செயற்கைப் பல் விழுந்து விடவா போகிறது? கருப்பு மீது எங்களுக்கு காதல் என்றும் என்றே ஆடவர் நினைக்கின்றார். கருப்பே அழகு காந்தலே ருசி என்றே பேசித் திரிகின்றார்.
காந்தல் உப்புமாவுக்காக காரிருள் வரை சண்டை போடும் புருடர்கள் கருப்பே அழகு என்று காட்ட காந்தலைத் தூக்கிப் பிடிக்கின்றார்கள்.
நடுவரைக் கைப்பிடித்த எங்கள் அக்காள் பங்கயப் பாவைக்கு இவருடைய கரிய நிறம் மீதா காதல்?
இவருடைய வற்றாத செல்வத்தின் மீதுதான் காதல். ஆதலினால் இவரைக் காதலித்தாள். கரம் பற்றினாள்.
சொத்து என்பது இல்லாவிட்டால் இந்த சொத்தைப் பல் பேராசானை எந்த தத்தை கைப்பிடிக்க வருவாய்?
நடுவர் : என்னைப் பற்றிய புகழுரைகள் போதும். இளம் கட்டழகியே. நான் சொன்ன தலைப்பில் கவிதை மொழிந்திடுங்கள்.
அழகுநிலா : இந்த உரை நடுவருக்குப் பெருமை சேர்க்கும் உரை நான் இப்பொழுது கவிதை பாடுகிறேன்.
நடுவர் : அப்பாடா!
அழகு நிலா : கருமை நிற முகில்களே கொடையாக கனமழையை அள்ளித் தருகின்றன. எப்பொழுதும் அருங்குணங்களைப் பார்க்காமல் நிறங்களைப் பார்த்து வெறுப்பது மனித குலத்திற்கு மாண்பைத் தராது என்றும்.
திருக்கோயிலின் கருவறையில் இறைவன் கருநிறத்தில் காட்சி தருகிறான் அருளை அள்ளித் தருகிறான். அவனை அன்போடு கும்பிட்ட நெஞ்சம் ஆலயத்திற்கு வெளியே மனிதர்களிடையே நிற மாறுபாடு பார்த்து நிற்கும்.
கருமை கருப்பு என்றெல்லாம் வெறுப்பு கொள்வது நாகரிகம் படைத்த மக்களுக்கு அழகு ஆகாது.
நடுவர் : இரட்டை நாக்கு உடையவரா நீங்கள்?
அழகுநிலா : இந்தக் கவிதைக்காரியின் இயல்பைப் புரிந்து கொண்ட அரங்க நாதனாரே
நடுவர் : செவி மடுத்து நிற்கிறோம் விரைவாக கவிதை சொன்னால் நலம் பயக்கும். இவர்கள் காத்திருக்கிறார்கள்.
அழகுநிலா : மேடை கிடைத்தால் எளிதில் இறங்கி விடக் கூடாது என்பது என் பாட்டனாரின் அறிவுரை.
பாட்டனாரை இங்கிருந்து வணங்கி கருமையைப் பற்றிப் பேசுகிறேன்.
கருமையின் பெருமை பெண் பாலாருக்கு நன்றாகத் தெரியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய அழகிய கரு விழிகளுக்கு அழகூட்டும் கண் மை கருப்பு. எங்கள் கூந்தலைப் பார்த்து நீங்கள் சொக்கிப் போகிறீர்களே. அதற்கு காரணம் அதன் கரு நிறம்
நடுவர் : சாயம் எங்கே வாங்குகிறீர்கள்? எந்த சாயம் வாங்குகிறீர்கள் அம்மணி
அழகுநிலா : என்ன கேட்டீர்கள்?
நடுவர் : சாயம், கண்மை எல்லாம் எங்கே வாங்குகிறீர்கள் என்றேன்.
அழகுநிலா : எங்கள் ஒப்பனை இரகசியத்தை அவையில் ஒப்பித்து விடுவோம் என்று நினைக்கிறீர்களா?
நடுவர் : பொத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? உடைத்துச் சொல்லுங்கள். அனைவரும் தங்களைப் போல் மேனி மினுங்க உலா வரட்டும்.
அழகுநிலா : பார்த்தீர்களா அவையோரே. குறிப்பான கவிதை சொல்ல வந்த அடியாளை அழகுக் குறிப்புகளை அடுக்கு அடுக்காக அள்ளித் தரச் சொல்கிறார் அருமையான நடுவர். அடுக்குமா இந்தச் செயல்?
நடுவர் : வாயைப் பூட்டாமல் வார்த்தை சொல்லி விட்டேன்.
அழகுநிலா : கருமை நிறச் சாயம் ஒரு சில தினங்களில் மாயம். இதுதான் ஆடவரின் ஒப்பனை இலட்சணம். பெண்களின் கூந்தல் திட்டுத் திட்டாய் வெளுத்துச் சிரித்ததைக் கண்டதுண்டா?
நடுவர் : என்னுடைய பாட்டிக்கு நான் பார்த்த காலம் முதலாய் பஞ்சுத் தலை
அழகுநிலா : பாட்டியே விரும்பி ஏற்ற கோலம். நாங்கள் விரும்பாத எதையும் எங்கள் மீது திணிக்க முடியாது என்பதற்குத் தங்கள் பாட்டியின் பஞ்சுத் தலையே கட்டியம் கூறும். கருமையே சிறந்தது, கருமையே நல்லது.
ஆடவருக்கும் பெண்டிருக்கும் இந்த அரங்கத்தில் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் – கருமையே அழகு. ஆம் கருமையே கூந்தலுக்கு அழகு. கருங்கூந்தல் என்பதே இந்தியப் பெண்களின் இணையற்ற மாண்பு. அதை மாற்ற முயல்வது எங்ஙனம் நியாயம்?
ஒப்பனை செய்யுங்கள் அதற்கு கருமையை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
பல வண்ணங்களை ஏற்றிப் பார்க்க கூந்தல் ஆடையா என்ன?
வெவ்வேறு வண்ணப் பூச்சு வேண்டாம் ஏந்திழையரே. பல் ளிக்காத கரு நிறப் பூச்சைப் பயன்படுத்துங்கள் என்றும். மங்கையரின் கூந்தல் கருப்பாக மிளிர்ந்து கவர்ந்திழுக்கட்டும் என்றும் கூறி நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.
நடுவர் : கருமை என்ற தலைப்பில் கட்டழகி அழகுநிலா கண்ணியமாய்க் கவிதை சொன்னார்
தலைமுடியில் பல வண்ணப் பூச்சு வேண்டாம் என்கிற சமுதாயத்திற்குத் தேவையான கருத்தை முன் வைத்தார். அலங்கார இரகசியத்தை சொல்ல மறுத்தார். என் இல்லறக் கதையைப் போட்டு உடைத்தார்.
அவர் ஆற்றிய அரும் பணிக்கு நன்றி கூறி உமிழ் நீர் என்ற தலைப்பில் கவிதை உரை ஆற்ற தம்பி உலகநாதனை அழைக்கின்றேன்.
உலகநாதனும் அடியேனைப் பற்றிப் பேசிக் கலகம் விளைவித்து விடக் கூடாது என்பதால் அறிமுகமாக சில வார்த்தைகள் சொல்லி வைக்கிறேன்.
உலகநாதன் கவிதை உரைத்தால் எவரும் அருகில் நிற்பதில்லை என்பதால் அடியேன் ஈரம் கொண்டு அவரை நான் இங்கே அழைத்து வந்தேன்.
எட்டு இலட்சம் கொடுத்தாலும் எட்டே நாளில் செலவழித்து மீண்டும் கடன் கேட்க வரும் உலகநாதனைக் கண்டால் உறவினர் ஓடி விடுவர். தோழர்கள் பறந்தோடுவார்கள். வங்கிக் கணக்கு பல உண்டு. எதிலும் பணம் போடுவதில்லை எல்லாம் பேருக்கு.
இல்லக் கிழத்தி பணம் கேட்பாள் என்பதால் பல நாள் இரவிலும் அலுவலகத்தின் குளுகுளு அறையில் உறங்கிடுவார்.
ஈன்றெடுத்த அன்னை மாத்திரை மருந்துக்காகிலும் பணம் கொடு என்றே இறைஞ்சுவதால் அவர் இருக்கும் பக்கம் இவர் எட்டிப் பார்ப்பதில்லை.
இப்படிப்பட்ட பண்பாளர் தம்பி உலகநாதன் வருகிறார் வாருங்கள்.
(உலகநாதன் உரை மேசை அருகே)
உலகநாதன்
அனைவருக்கும் வணக்கம்.
நல்லவரான நடுவர் அவர்களே,
தங்கள் தந்தையார் உமக்கு சேர்த்து வைத்த செல்வம் ஏராளம். தாராளத்திற்கு மேல் ஏராளம்.
அதன் பயனாக அருமை அக்காள் தங்களுடன் இணைந்தார் என்பதை ஆயிழை அழகுநிலா ஊரறியச் சொன்னார்.
நடுவர் : அதை ஏன் மீண்டும் கிளறுகிறீர்? உமக்கு இட்ட பணியைப் பாரும்.
உலகநாதன் : என்ன சொல்ல விழைகிறேன் என்றால் பொருளாதாரம் வலுவாக இருந்ததால், நல்ல மெல்லிடையார் உமக்குத் தாரமாக வாய்த்தார்.
நடுவர் : என் இல்லத்தரசியை நீர் பார்த்தது இல்லை போலும்.
உலகநாதன் : உயர்வு நவிற்சி. அக்காளை மெல்லிடையார் ஆக நினைத்துப் பார்க்க உமக்கு வாய்ப்பளித்தேன்.
நடுவர் : சரிதான்.
உலகநாதன் : என் தந்தையார் வைத்து விட்டுப் போன கடன்களை அடைக்க அடியேன் பட்டபாடு ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
இதனிடையே மாமனார் அடைக்காமல் விட்டு வைத்த கடனையும் தீர்க்க வேண்டும் என்றே இல்லாள் ஓயாமல் கூறுவதால் இராப் பொழுதையும் கழிக்கிறேன் அலுவலக அறையில். உலகம் காண சொந்தக் கதையைக் கொட்டுவது தான் இன்றைய நாகரிகம் என்பதால் உரைத்தேன். அதனால் எனக்கு இல்லை வெட்கம் என்ற ஒன்று.
நடுவர் : அதுதான் தெரிந்ததே….. மேலே …..
உலகநாதன் : அடியேனுக்கு மாமன் அருமையான தலைப்பு அளித்தார்.
நடுவர் : மாமனா?
உலகநாதன் : தங்கள் மனைவியார் எங்களுக்குத் தமக்கை என்றோமே, அதனால் தங்களுக்கு மாமன் இடம்
நடுவர் : சரி மருமகனே…… கடன் தீர்க்க புதல்வியை இரண்டாம் தாரமாகத் தாருங்கள் என்று கேட்டு விடப் போகிறீர்.
உலகநாதன் : என் மனைவியும் தங்கள் மகளும் உடன் பட்டால் கடன் தீர்க்க இது நல்ல ஏற்பாடு. சாத்தியமாக்க முயற்சி செய்கிறேன்.
நடுவர் : தவளை வாய் எனக்கு.
உலகநாதன் : உமிழ் நீர் பற்றி பேசுகிறேன். எச்சில் துப்பாதே என்று எழுதி வைத்த இடத்திலும் துப்பாமல் இருப்பதில்லை நம் மக்கள். நடுவர் அவர்களே…
அரசியல்வாதிகளை விமர்சித்துக் கிழிக்கிறார்கள் இலக்கியவாதிகளை இரண்டில் ஒன்று பார்க்கிறார்கள்.
சினிமாக்காரர்களையும் விட்டு வைப்பதில்லை. மக்களை விமர்சனம் செய்ய யாரும் வருவதில்லை.
எடுத்துச் சொல்லுங்கள், படித்துப் படித்துச் சொல்லுங்கள்.
மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எச்சிலைக் கண்ட இடங்களில் துப்பக் கூடாது என்று எழுதி வையுங்கள்.
கண்ட இடங்களில் துப்புவதால் பன்றிக் காய்ச்சல் பரவும் என்று பரப்புரை செய்தாலும் மக்கள் கவனத்தில் நிறுத்திக் கொள்வதில்லை.
முகத்தைச் சுளிக்கச் செய்யும் வண்ணப் பொடி எச்சில் கோலம் மாநகரின் கட்டிடங்களில்.
இங்கே துப்பு என்று எழுதி வைத்த இடத்தில் துப்புபவருக்கு பரிசு என்று எழுதி வைத்தால் பலன் கிட்டுமா?
உமிழ் நீரை உடனே துப்ப உந்துதல் தரும் மூளை. அதனை அடக்கி வைத்து தக்க இடம் நாடி துப்புவதே முறையாகும்.
அறிவுரை சொல்ல அடியேனுக்குத் தகுதி இல்லை. எனினும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். தூய்மை நம் கைகளில்.
நன்றி, வணக்கம்.
நடுவர் : சில அடுக்கக வணிக வளாகங்களில் சுவர்களில் எல்லாம் வண்ண பொடியைத் துப்பி வைப்பது தகுமா என்று வினவுகிறார்.
நாம் அனைவரும் சிந்திப்போம். ஆனால் மறந்துவிட்டு அடுத்த வேலை பார்ப்போம்.
நாம் இப்பொழுது அடுத்த வேலை அடுத்த கவிதையைப் பார்ப்போம்.
பேராசிரியர் பார்த்திபன்…..
வாங்க அண்ணே இரவு நேரம் பற்றி….
(பார்த்திபன் உரை மேசை அருகே)
பார்த்திபன்
அடியேனைத் தமையனாக்கித் தமது வயதைக் குறைத்துக் காட்டத் துடிக்கும் நடுவர் அவர்களே.
நீங்கள் ஒப்பனை உத்திகள் அறிய முற்பட்டது ஏன் என்பது அவையோருக்குப் புரிந்திருக்கும்.
நடுவர் : எனக்கு இது தேவைதான் ஐயா.
பார்த்திபன் : இந்த ஐயா என்ற வார்த்தை முன்பே வெளிப்பட்டிருந்தால்…..
நடுவர் : என் மானம் காற்றில் பறந்திருக்காது மீண்டும். ஆனது ஆயிற்று இரவு நேரம் பற்றி சரசம் விரசம் இன்றிப் பேசுங்கள்.
பார்த்திபன் : இரவு நேரம் உறங்கும் நேரம்
நடுவர் : நல்ல கண்டுபிடிப்பு.
பார்த்திபன் : இரவு நேரம் உறங்கும் நேரம் என்னை உறங்க விடுவதில்லை யாரும்.
என் மகன் பண்பலையை ஒலிக்க விடாமல் ஒரு நாளும் உறங்குவதில்லை. காதுக் கருவி அவனுக்குப் பிடிப்பதில்லை.
வானொலியை நிறுத்தி வைத்தாலும் எழுந்து மீண்டும் ஒலிக்கச் செய்வான்.
இப்படியாக இரவு நேரம் எனக்கு சோதனை நேரம்….
நடுவர் : தொலைக்காட்சிப் பெட்டியில் நடுநிசி பாடல் காட்சியைப் பார்க்காமல் இருக்கிறானே அதற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
பார்த்திபன் : மற்றொரு நாள் இராப் பொழுது மகனும் மனைவியும் வீட்டில் இல்லை.
நடுவர் : நல்லது தானே.
பார்த்திபன் : உறக்கம் என் விழிகளைத் தழுவிய நேரம். அழைப்பு மணி ஒலித்தது.
அடுக்கக வீட்டின் பக்கத்து வீட்டு இளைஞன் பணிவாய் நின்றான். அந்த இளைஞன் கூறலானான் அப்பாவுக்கு மாரடைப்பு என்று.
பதைபதைத்து என் வீட்டை அடைத்து அவனுடன் நடந்தேன். வாலிபனின் தந்தை படுத்திருந்த ஊர்தியை நோக்கி விரைந்தேன்.
ஏனப்பா நீயும் வர வேண்டுமே என்றேன்.
மாமா நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இதோ நான் கிரிக்கெட் ஆட்டம் முடிந்ததும் வந்து விடுகிறேன் என்றான் அந்தக் கட்டிளங் காளை.
இப்படியாக இரவு நேரம் அடியேனுக்கு சோதனை நேரம். மற்றும் ஒரு நாள் இரவின் மடியில் ஊர் இருந்த போதில் இரவு முழுவதும் பொட்டுத் தூக்கம் இல்லை கண்களில். விடியும் பொழுதில் அயர்ந்தன விழிகள்.
ஒண்டுக் குடித்தனத்தில் அண்டை அயலாரின் சண்டை ஓயாது என்பார்கள் முன்பெல்லாம். மெத்தப் படித்தவர் வாழும் மாநகர அடுக்ககக் குடியிருப்பிலும் குடும்பச் சண்டை அண்டை அசலாரின் உறக்கத்தைப் போக்கடிக்கிறது.
எதிர் வீட்டில் அதிகாலையில் தொடங்கிய து புருசன் மனைவி சச்சரவு. சாத்திய கதவையும் தாண்டி வந்த கூச்சல் தூக்கத்தை விரட்டியது.
இரவு நேரம் உறங்கும் நேரம். என்னை உறங்க விடுவதில்லை யாரும்.
நன்றி, வணக்கம்.
நடுவர் : அந்தோ பரிதாபம். மாத்திரை விழுங்கிப் பாருங்கள். உறக்கம் பிடிக்கும். மாத்திரைகள் அதிகமானால், நிரந்தர நித்திரை. தூக்கம் கெட்ட அனுபவ மொழிகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட பண்பாளர் பேராசிரியர் பார்த்திபனாருக்கு நன்றி.
அடுத்து ஆயிழை ஆதிரை வருகிறார். இவர் அரசாங்க அதிகாரி. பல கவியரங்குகளில் தமது கவி மலர்களை சமர்ப்பித்தவர். சுவைஞர்களைச் சொற்களால் கட்டிப் போட்டவர். அச்சம் என்ற தலைப்பில் கவிதை சொல்ல வாருங்கள் ஆதிரை அம்மா.
(ஆதிரை உரை மேசை அருகே)
ஆதிரை
தமிழுக்கும் தமிழருக்கும் முதற் கண் வணக்கம்.
நடுநாயகமாகத் திகழும் நடுவர் அவர்களே,
விதம் விதமான அழகு அழகான செல்பேசிகளைக் கண்டால் ஆசையாக இருக்கிறது. அநாமதேய அழைப்பு, வர்த்தக அழைப்பு இவற்றைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.
குழந்தைகளுக்கும், கணவருக்கும் பல்வகைத் தின்பண்டங்கள் தயாரித்துப் பரிமாற ஆசையாக இருக்கிறது. பலசரக்கு விலைப்பட்டியலைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.
அலுவலகத்தில் அனைவராலும் பேசப்படும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அந்தக் கதை மாந்தர் போல் என் மாமியும் நாத்தியும் நடந்து கொண்டால் என்ன ஆவது என்று அச்சமாக இருக்கிறது.
துள்ளிக் குதித்து பள்ளிக்குச் செல்லும் என் பிள்ளைகளைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. கல்விக் கட்டணக் கணக்கைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.
குழைந்து வரும் கணவரைப் பார்த்தால் குதூகலமாக இருக்கிறது. கொஞ்சி முடித்த பின் அவர் கேட்கப் போகிற பணத்தை நினைக்க நினைக்க அச்சமாக இருக்கிறது.
நீண்ட நாள் கழித்து வீடு தேடி வரும் தம்பியைப் பார்த்தால் பாசம் பொங்குகிறது. என்ன வில்லங்கத்தில் இழுத்து விடுவானோ என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
மேலதிகாரியின் அபூர்வமான புகழுரையைக் கேட்கக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது. சிக்கலான வேலையை எளிதாக தலையில் கட்டி விடுவாரோ என்று அச்சமாக இருக்கிறது.
அச்சம் தவிர் என்னும் முண்டாசுக் கவிஞனின் வார்த்தையை மூல மந்திரமாக்கி நெஞ்சுள்ளே சொல்லிச்சொல்லி அச்சத்தைப் போக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன் அனுதினமும். நன்றி வணக்கம்.
நடுவர் : வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் அச்சங்களை எடுத்துச் சொல்லி முத்தாய்ப்பாக புதிய ஆத்திசூடியின் முதல் வரியே வாழ்வின் சூத்திரம் என்றார்.
இரட்டை வருமானக்காரர்களே, விலைவாசியைக் கண்டு மருண்டால் ஒற்றை வருவாய் உடையோரும் சொற்பமாக சம்பாதிப்போரும் என்ன செய்வார்கள்? எனக்கு அதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
கிடுகிடுவென வளரும் விலைவாசியை எதிர்கொள்ள அடி யேன் உணவு வேளையைக் குறைத்து விட்டேன். நான்கு வேளையை மூன்று வேளையாக….
என்ன சிரிப்பைக் காணோம்… இப்பொழுது இளங்கவிஞன் இளவரசு வருகிறார்.
இவருக்கு நாம் தரும் தலைப்பு விழாக் காலம் இவர் என்னுடைய சீடர். வா தம்பி கவி பாடு. என் பேரைக் காப்பாற்று.
(இளவரசு உரை மேசை அருகே )
இளவரசு
என்றும் மாறா இளமை கொண்ட….. நடுவர் : பலே
இளவரசு : என்றும் மாறா இளமை கொண்ட இன்பத் தமிழில் கவி பேச அடியேனை அழைத்த என் ஆசானுக்கு வணக்கம்.
நடுவர் : சரி தான் வணக்கம். ஆகட்டும். விழாக் காலம் பற்றிப் பேசு நேரத்தை வீணடிக்காமல்.
இளவரசு : விழாக் காலம். வெட்டிய மரங்களுக்குப் பதிலாக எண்ணற்ற மரக்கன்றுகளை நடும் காலமே விழாக் காலம்.
வாகனப் புகையைத் தவிர்க்க ஆவண செய்து ஓசோன் படல ஓட்டையை மேலும் பெரிதாக்காமல் இருக்கும் காலமே விழாக் காலம்.
சுற்றுச் சூழல் சீர்கேடு, பல்லுயிர் சிதைவு, நீர் ஆதாரம் பாழாதல், இவற்றைப் பற்றி எல்லாம் ஊடகங்கள் அனைத்தும் பெரிதாகப் பேசுகிற காலமே, விழாக் காலம்.
சாதிக் கலவரம், மத மோதல்கள் எதுவும் இல்லாமல், நல்லிணக்கம் அனைவரது நெஞ்சங்களில் நிரந்தரமாகக் குடியேறும் காலமே விழாக் காலம்.
ஒலி மாசு, காற்று மாசு, நீர் மாசு, இதை எல்லாம் எண்ணிப் பார்க்க எவருக்கும் இல்லை மனசு.
பெட்டிக் கடைக்குச் செல்ல பெட்ரோல் வாகனம் எதற்கு?
தேவையற்ற நேரத்தில் ஓடும் மின் சாதனங்களை நிறுத்துகிறோமா நாம்?
நமது அன்றாட நவீன வசதியான கைபேசிக்காக ஆங்காங்கே கோபுரங்கள், காணாமல் போன சிட்டுக் குருவிகள். பச்சைக் கிளிகள், கிளி சோதிடரிடம் மட்டும். வேறு எங்கும் காணோம்.
நகரமயமாக்கல் காரணமாய், விளை நிலச் சுருக்கம். விண்ணை முட்டும் தானிய காய்கறி விலைகளால் அனைவருக்கும் மனப் புழுக்கம்.
நிலம் என்னும் நல்லாள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறாள். நாம் அதை எல்லாம் உணராமல்….. மன்னிக்க வேண்டுகிறேன். சிரித்துக் கொண்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நேரம் இருப்பவர்கள் எல்லோரும் சுற்றுச்சூழல் காக்க ஏதேனும் செய்யுங்கள்.
மின் அஞ்சலில் செல்பேசியில் சமூக ஊடகங்களில் வலைப்பூக்களில் செய்தி செயலிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு யோசனைகளைப் பரப்புங்கள்.
பூமித் தாயைப் புறக்கணித்த பொறுப்பற்ற ஊதாரிப் பிள்ளைகள் நாம்.
சிந்திக்க வேண்டிய வேளை இது. வெட்கித் தலை குனிய வேண்டிய தருணம் இது. விழாக்காலம் வருமா நிலம் என்னும் நல்லாளுக்கு?
சிந்திப்போம், விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
நடுவர் : நம் அனைவரையும் பொறுப்பற்றவர் என்று சாடி அமர்ந்துள்ள தம்பி நம்மைச் சிந்திக்கத் தூண்டியுள்ளார்.
அதற்காக சிரிப்பு எதற்கு என்ற கேள்வியை வேறு கேட்டு விட்டுப் போனார். சிரிப்பு என்ற ஒன்று இல்லாது போனால் என்றோ என் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பேன் என்றார் உலகம் போற்றும் நம் தேசப் பிதா.
சிரிப்பு உள்ளங்களை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடு. இயற்கை பிற ஜீவராசிகளுக்கு சிரிப்பை வழங்கவில்லை. சிரித்து மகிழுங்கள். உள்ளக் கொதிப்பை அகற்றுங்கள். புத்துணர்ச்சி பெற்றிடுங்கள்.
நடுவர் : இப்பொழுது மங்கையர்க்கரசியார் மகத்தான கவி கூற வருகிறார். புன்னகை மாறாத முகத்தால் இவரை நாங்கள் புன்னகை அரசி என்றே அழைப்போம்.
பேரப் பிள்ளைகளைப் பார்த்த இவரின் இளமை இரகசியம் எனக்கு நெடுநாளாய்ப் புரிந்தது இல்லை. மலர்ந்த முகம் மாறாமல் இருப்பதாலா? வீட்டு நிர்வாகத்துக்கு இடையே ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ள இவருக்கு நாம் தரும் தலைப்பு பறவைகள் சரணாலயம்.
(மங்கையர்க்கரசி உரை மேசை அருகே)
மங்கையர்க்கரசி
சங்கத்தால் சிறப்புற்று சமயக்குரவர் பாடல்களால் சீரிளமை பெற்றுத் திகழும் தங்கத் தமிழ்த்தாயை வாழ்த்தி நடுவரையும் அவையோரையும் வணங்குகிறேன்.
இவள் என்று பிறந்தவள் வல்லுனர்களாலும் கணிக்க முடியாதவள் என்றே பாரதி போற்றிய பாரதத் தாயையும் வணங்குகிறேன்.
நடுவர் அரங்கநாதன் அவர்களைப் பற்றி தனிநபர் விமர்சனம் ஓங்கி ஒலித்தது இந்த அரங்கில்.
துன்பம் என்று வந்தவருக்கு வாரி வழங்குபவர் அரங்கநாதன். அழுது கடன் என்று இவரிடம் பெற்றுச் சென்று திருப்பித் தராதவர் பல பேர்.
கருமேகம் ஆற்றும் அருஞ்செயல் நிலாவுக்குத் தெரியாது. அழகு நிலாவுக்குத் தெரியாது. தந்தையார் விட்டுச் சென்ற செல்வங்களை எல்லாம் இவரும் மனைவியும் மகளும் அனுபவித்து இன்பம் அடைவதில்லை.
முதியோர் இல்லங்களுக்கு மாதந்தோறும் நன்கொடைகள் தருகிறார்.
ஏழை மாணாக்கர்களின் உயர் கல்விக்கு இயன்றதைத் தருகிறார். ஆதரவற்றோர் அமைப்புகளுக்கும் நிதி உதவி செய்கிறார்.
இவரது அறச்செயல்களை மனைவியாரும் புதல்வியும் தடுப்பதில்லை, முனகுவதில்லை. முழு ஆதரவு காட்டுகின்றனர். குடும்பத்தின் துணை இல்லாமல் செய்ய முடியாது எந்த காரியத்தையும். தர்ம காரியத்திற்கும் அவர்களின் சம்மதம் தேவை. கணவர் போலவே சிந்திப்பவர் இவரது மனைவி. தந்தையைப் போலவே தாராள மனம் கொண்டவர் இவரது புதல்வி.
உலகநாதனின் அன்னையார் கேட்ட மருந்து செலவுத் தொகையை அரங்கநாதன் தந்து வருகிறார் மாதா மாதம். தம்பி உலகநாதனுக்கே இத் தகவல் தெரியாது.
பிள்ளைகளைப் பெற்றெடுத்து ஆளாக்கி அதன் பின்னர் பேரப் பிள்ளைகளைப் பேணுவதில் ஓடிவிட்டது என் காலம். பறவைகள் சரணாலயம் பற்றிப் படித்ததுதான். நேரில் கண்டதில்லை.
தகுதி உடையவர்களுக்குப் பலன் கருதாது உதவிகள் வழங்கும் அரங்கநாதனார் குடும்பமே நான் கண்ட பறவைகள் சரணாலயம்.
வயதில் மூத்தவள் என்பதால் வாழ்த்தி நிற்கிறேன். தொடரட்டும் தங்கள் அறப்பணி, வாழ்க பல்லாண்டு. நன்றி வணக்கம்.
நடுவர் : இப்படி ஒருவர் பேசிச் சென்றால் என் புகழ் பாட நானே செய்து கொண்ட ஏற்பாடு இந்த நிகழ்ச்சி என்றே நானிலத்தார் பேசுவர்
இங்கே இளம் வட்டத்தினர் உரிமையுடன் நையாண்டி செய்வதால் நைந்து போகாது என் மனம்.
அம்மையார் அவையில் கூறியது போல் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. மனைவியாரும் மகளும் ஒத்துழைப்பதால் இயன்றதைச் செய்கிறேன். தொண்டாகவே செய்கிறேன்.
அடுத்து இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நின்றவூர் நித்திலம் சில வார்த்தைகளை நம்முடன் பதிர்ந்து கொள்ள விரும்புகிறார். அவருக்கு சில மணித்துளிகள் தருவோம்.
பாரதி பற்றி நூல்கள் பல படைத்தவர். செவி மடுப்போம் அவருடைய சிந்தனைத் துளிகளை.
(நின்றவூர் நித்திலம் உரை மேசை அருகே)
நின்றவூர் நித்திலம்
தமிழ் அமுதம் பருகித் களித்திருக்கும் அவையோருக்கு வணக்கம். எனக்கு ஒரு மனக்கவலை.
மகாகவி பாரதி மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று சொல்லிச் சென்றதாக திரைப் படங்களில் கூறுகிறார்கள். ஊடகங்களில் பேசுகிறார்கள். தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்ன அமரகவி இப்படி சொல்லிச் சென்றிருப்பானா என்று அவசர உலகினர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பாரதியின் முழுக் கூற்றை அங்கே எடுத்துரைக்க அனுமதி தர வேண்டுகிறேன்.
நடுவர் : சுருக்கமாகக் கூறுக. இது தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே.
நின்றவூர் நித்திலம் : பாரதியார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இப்பொழுது வாசித்துக் காட்டுகிறேன்.
தமிழ்த்தாய் வாழ்த்து
தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு சந்தம்
பாடலின் முதற் பகுதி
“ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”
7வது பகுதி
“தந்தை அருள் வலியாலும் முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கண் மட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்”
8வது பகுதி
“இன்றொரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத் தகாதவன்
கூறினன் கண்டீர்”
கவனியுங்கள் அவையோரே கூறத் தகாதவனின் கூற்றைத்தான் பாரதி, தமிழ் அன்னை வாயிலாக கூறுகிறான்
9வது பகுதி
“புத்தம் புதிய கலைகள் –
பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் கலைகள்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்”
11 மற்றும் 12 பகுதிகள்
“என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
இந்த வகை யெனக்கு எய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்”
என்று தமிழ்த்தாய் தம் மக்களிடம் கூறுகிறாளாம்.
மேலும் பாருங்கள்
“தந்தையருள் வலியாலும் இன்று சார்ந்த
புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும் பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்”
தமிழ் மொழி என்றும் இருக்கும் என்பதே கவி வாக்கு. மாற்றிச் சொல்வதால் மாறி விடாது அவன் கூற்று. நன்றி, வணக்கம்.
நடுவர் : நன்றாக எடுத்துரைத்தீர் நன்றி.
நடுவர் : அடுத்து இளைஞி இனியவள் வருகிறார். இனிய கவிதை செப்புவார். காதல் உமக்கான தலைப்பு. அழகிய தமிழ் மகளே வாருங்கள்
(இனியவள் உரை மேசை அருகே)
இனியவள்
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் நற்றமிழர் அரங்கநாதன் அவர்களே !
நடுவர் : இப்படி ஒரு பனிக்கட்டியா?
உம்மைப் பார்க்கப் பார்க்க எமக்குப் பொறாமையாக இருக்கிறது.. நாங்கள் எடையைக் குறைக்க செய்யாத வேலைகள் இல்லை நீரோ மெல்லிய தமிழ் மகளாக இருக்கிறீர்.
இனியவள் :
வாயைக் கட்டினால்
வம்பு தும்பு இல்லை
வயிற்றைக் கட்டினால்
எடை அதிகரிப்பு இல்லை
நடுவர்:
காலம் கடந்து விட்டது
இனிமேல் என்ன செய்ய?
இனியவள் :
நடுவர் அவர்களே
காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
என்று பாடினார் பாரதி
முழுமை பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை கூட வரும் என்றார்
கவியரசர் கண்ணதாசன் திரைப் பாடலில்
நடுவர் : சொந்தமான சரக்கு ஒன்றும் இல்லையோ கைவசம்.
இனியவள் : ஊடலில் தோற்றார் வென்றார் என்றார் வள்ளுவப் பெருந்தகை.
நடுவர் : நீர் என்ன சொல்ல வருகிறீர் என்று எதிர்பார்க்கிறது இந்த அவை.
இனியவள் : காதலில் தோற்றவர் அடுத்த காதலுக்கு வழிவகை தேடுகிறார். நாம் அன்றாடம் காணும் காதல் காட்சிகளில் ஒன்று. மனைவி மீது மாறாத காதல் கொண்ட கணவனைப் பிரித்தனர். அந்தோ பரிதாபம்.
நடுவர் : இது என்ன கதை சொல்கிறீர்?
இனியவள் : குறுக்கிடாமல் கேளுங்கள். மனைவி மீது மாறாத காதல் கொண்ட கணவனைப் பிரித்தனர். அந்தோ பரிதாபம்! பிரித்த பாவத்தைச் செய்தவர்கள் அவர்களுடைய பிள்ளைகள். அம்மா ஒருவர் வீட்டில் அப்பா ஒருவர் வீட்டில்.
இறுதி வரை உடன் வரும் மனைவியை இவர்கள் பிரித்து வைப்பார்கள். வீட்டில் காதல் பறவை வளர்ப்பார்கள்.
கூற்றுவன் என்ற கொடியவனைத் தவிர வேறு எவரும் உங்கள் துணையிடமிருந்து பிரித்திடாமல் இருக்க விவேகமாக நடந்து கொள்ளுங்கள். சேமிக்கத் தொடங்குங்கள் இக்கணமே.
கணக்கில் இருப்பு இருந்தால் பிணக்குகளை வெற்றி கொள்ளலாம். பிள்ளைகளையும் கைக்குள் வைக்கலாம்.
காதலியுங்கள். காதலியை ஏமாற்றாமல் மனைவியாக்கிக் கொள்ளுங்கள்.
காதலியைத் தேடுவதற்கு முன்பே சேமிக்கத் தொடங்குங்கள்.
கல்வி, மருத்துவம் எதைத் தொட்டாலும் எக்கச்சக்கம். செலவோ உச்ச பட்சம்.
நன்று செய்யுங்கள். நன்றும் இன்றே செய்யுங்கள் இன்றும் இப்போதே செய்யுங்கள்.
வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கத் தொடங்குங்கள். செல்வம் சேர்க்கும் வழியைப் பாருங்கள். பொழுது போக்கியதெல்லாம் போதும். ஆக்கப் பூர்வமாக சேமிக்கத் தொடங்குங்கள்.
தலை நரைத்து உடல் தளர்ந்து போகும் காலத்தில் மனம் தளராமல் உங்கள் இணையைப் பிரியாமல் இருக்க நினைத்தால் கருத்துடன் இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும். நன்றி வணக்கம்.
நடுவர் : மெல்லிய தமிழ்மகள் இதயம் கவர்ந்த இனியவள் முதுமைக் காலத்தை நிம்மதியின் மடியில் அமர்த்தி வைக்க ஏதுவாக இப்பொழுதே சேமிக்கத் தொடங்குங்கள் என்றே வேண்டிச் சென்றார்.
பக்குவமான வார்த்தைகளை உதிர்த்த இளம் பாவைக்கு நமது நன்றிகளைக் கூறுவோம். பக்குவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு இல்லை என்பதைச் சுடடிக் காட்டிய ஏந்திழையே நீர் அனைத்துப் பேறுகளையும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன் வயதால் மூத்தவன் என்பதால்.
அடுத்து ஏழுமலை அவர்கள் வருகிறார். கல்லூரிக்குச் செல்லாத படிக்காத மேதை. வாசித்து வாசித்து இவர் கற்றறிந்தது ஏராளம். நகரத்தில் வாழும் நமக்குத் தெரியும் ஆன்ட்ராய்டு உள்ளிட்ட அனைத்தும் இவருக்கு அதிகமாக அத்துப்பிடி. வாசிப்பே இவர் சுவாசம் எழுதுவது குறைவு. வாசிப்பதே அதிகம் அதிகமாகப் பேசுவதும் இல்லை.
பேசினால் வம்பு என்றாரே இங்கே ஓர் இளம் பெண்மணி. வம்பைத் தவிர்த்து மனத்தைத் தெம்புடன் வைத்திருக்கும் ஏழுமலையானே வாருங்கள். வானம் அடியேன் உமக்குத் தரும் தலைப்பு
(ஏழுமலை உரை மேசை அருகே நின்று பேசுகிறார்)
ஏழுமலை
அகத்தியன் கண்டெடுத்த அருந்தமிழுக்கு வணக்கம் கூறி அடியேன் உரையை அவை முன் படைக்கிறேன்.
ஊரகப் பகுதியைச் சேர்ந்தவனை மாநகரில் கவி பாட அழைத்த நடுவர் அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த நன்றி மலர்களை சமர்ப்பிக்கிறேன்.
முதற்கண் நாட்டுப்புற நகைச்சுவை ஒன்றை அவையில் பகிர்ந்து கொள்ள நடுவரிடம் அனுமதி வேண்டுகிறேன்.
நடுவர் : இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களே என்பதே தேசத்தந்தை காந்தியடிகளின் கூற்று. நகர மயமாக்கலுக்கு முன்பாக கிராமங்கள் ஆக இருந்தவை தானே நமது நகரங்கள்?
நாட்டுப்புற நகைச்சுவையைக் கூறுங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.
நீங்கள் படித்த நகைச்சுவையை, புதிய தகவலை உடனடியாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். மொபைல் மெசஞ்சர் இருக்க பகிரத் தயங்குவானேன்?
ஏழுமலை : மாமியாரும் மருமகளும் துக்க வீட்டுக்குச் செல்கிறார்கள்.
துக்க வீட்டுப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் போது மாமியார் பந்தலில் தொங்கும் பாகற்காயைப் பார்த்து விடுகிறாள் மருமகள் ஒப்பாரியிலேயே மாமிக்கு சேதி சொல்கிறாள்.
பந்தலிலே பாவக்காய், பார்த்து அறு மாமியாரே.
மாமியாரும் ஒப்பாரியில் பதில் இறுக்கிறாள் போகும் போது பார்த்துக்கலாம் பொறுத்திருப்பாய் மருமவளே.
இவர்கள் பேசியதைக் கவனித்த வீட்டுக்காரி சும்மா இருப்பாளா என்ன?
அவளும் ஒப்பாரியிலேயே சொல்லி வைக்கிறாள் எச்சரிக்கை.
விதைக்கல்லோ விட்டிருக்கோம் விரலாலே தொட்டிடாதே.
நடுவர் : ஒப்பாரியிலேயே தகவல் பரிமாற்றம் நன்றாக உள்ளது நாட்டுப்புற நகைச்சுவை சரி…
ஏழுமலை : வந்த வேலையைப் பாருங்கள் என்கிறீர்கள்.
நக்கீரனார் புறநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே
செல்வத்தின் பயனே ஈதல்
பிறருக்கு உவந்து அளிக்காமல்
யாமே நுகர்வோம் என்று வாழ்வது தவறு என்பது இதன் பொருள்.
அப்படிப்பட்ட ஈதலை அறமாகக் கொண்டிருக்கும் நடுவரின் மனமே வானம். அவரைப் போல் சிலர் இருக்க வாழ்வில் ஏற்பட்ட நட்டங்களுக்கு ஈடாகப் புதிய துணை தேடும் உலகநாதனைப் போலவும் சிலர் இருந்தால் என்ன ஆகும் சமுதாயம்?
நடுவர் : அவரே மறந்ததை நீர் ஏன் கிளறுகிறீர்? இதற்குத் SIT GOT….
ஏழுமலை : பேருந்து ஏறி வந்தேன் என்று எண்ணி விட வேண்டாம். ஒருவனுக்கு ஒருத்தி என்றே வாழ்ந்தால் இல்லறம் என்றும் இனிக்கும் என்பதை நினைவூட்ட விரும்பினேன். இன்றைய தலைமுறையினருக்கு. வானத்தைப் பற்றிய வார்த்தைகளுக்கு வருகிறேன்.
நடுவர் : அப்பாடா !
ஏழுமலை : வானத்திலிருந்து பொழியும் மழை என்னும் அமிழ்தமே உலகை வாழ வைக்கிறது.
விண்ணிலிருந்து இறங்கி வரும் மாமழை இல்லாது போனால் உலகின் உயிர்களைப் பசிப் பிணி வாட்டி வதைக்கும்.
மழை என்பது இல்லாது போனால் தெய்வங்களுக்குப் பூசனை இல்லாது போய் விடும்.
நீர் என்பது இல்லாமல் இந்த உலகம் இயங்காது. இவை யாவும் என் வார்த்தைகள் அன்று. தமிழ்த் தலைமகன் திருவள்ளுவன் ‘வான் சிறப்பு’ என்னும் அதிகாரத்தில் அருளிய கருத்துக்கள் இவை.
குறளின் குரலைப் புது விதமாய்ச் சொல்லி வைத்தேன் உங்களுக்கு.
வான் மழையால் நாம் வாழ மரங்கள் வளர்ப்போம். பொழியும் மழையை சேமித்துப் பாதுகாப்போம். நகரங்களில் மாடித் தோட்டம் போடுங்கள். அதற்காக அரசு தரும் உதவிகளைப் பயன்படுத்திடுங்கள்.
கைப்பேசியிலேயே பேசிப் பேசிக் காலம் கழிப்பதை விட்டுவிட்டு தாவரங்களுடன் பேசிப் பாருங்களேன். மாற்றம் கிடைக்கும், வெப்பமும் குறையும்.
நீர் ஆதாரங்களை மாசுப்படுத்தாமல் பாதுகாத்திட வேண்டியது இன்றியமையாத ஒன்று என்பதை உணரவில்லை யாரும். செடி கொடிகளை வளர்த்திடுங்கள். அவற்றைப் பற்றி சொல்லிக் கொடுங்கள் பிள்ளைகளுக்கு.
பசுமை இலக்கியத்தைப் படைக்க முடியும் மனம் கொள்ளுங்கள் அதனை உடனே படைத்திட.
பசுமையால் அனைவரும் பரவசம் அடையும் வந்துவிட்டால் அயல் நாட்டவரைப் பார்த்து நாம் கேட்கலாம் புவி வெப்ப மயமாதலா? அப்படி என்றால் என்ன என்றே.
பசுமையை நோக்கி நடை போட நினையுங்கள் எண்ணமே செயலாகப் பரிமாணம் பெறும் அல்லவா? மிக்க நன்றி வணக்கம்.
நடுவர் : நானும் ஒரு பாட்டுக்காரன் என்பதால் கவிதை பாடுங்கள் நீங்களும் என்கிறார் சகோதரி மங்கையர்க்கரசி.
வாசிப்பின் பெருமை அவர் தந்த தலைப்பு.
ஏதும் அறியா என் நாவிலும் கவிதைகள்
தந்தாள் தமிழன்னை
அவளைப் போற்றுவதே என்றும் என் கடமை.
எண்ணற்ற கவிவாணர் எழுதி வைத்த காப்பியங்கள்
அடியேனும் எழுதத் துணிந்தேன்
ஆசையால் சொல் ஓவியங்கள்.
தமிழ் இன்பம் தமிழே இன்பம் என்றெல்லாம்
சொன்னால் போதுமா?
வெல்லம் என்றால் சுவை வருமா?
தமிழைச் சுவைக்காமல் மனதுக்கு
இனிமை புரியுமா?
தாய்மொழிக்கு நேசம் தருவதில்
இணை இல்லை தமிழருக்கு
இன்தமிழ் நூல்கள் வாசிப்பதிலும் அதிகமாய்
ஈடுபட்டால் உலகில் இவர்களுக்கு நிகர் இருக்காதே
எண்ணற்ற கவிவாணர் எழுதி வைத்த காப்பியங்கள்
வாசிப்பதற்கு சில நேரம் அனுதினமும் செலவழித்திடுங்கள்.
காலம் எல்லாம் வளர்ந்திடும்
மங்காத தமிழ் ஒளியே
வாசித்தால் கிட்டுமே மங்காத அறிவொளியே
பள்ளியில் படித்த தமிழ்ப் பாட்டு
இன்றும் நெஞ்சில் குடியிருக்கும் இடம் போட்டு.
இலக்கியங்கள் படிக்கப் படிக்க பரவசம்
தேடித் தேடி வாசிக்க அதுவே தரும் தனிசுகம்.
ஆம், நம் தமிழை நித்தம் நித்தம் வாசிப்பீர். அவா உள்ளவருக்கு இலக்கிய இன்பத்தை அள்ளித் தருவீர். அன்றொரு நாள் மணிமேகலை என்னும் மாது அமுத சுரபியிலிருந்து அனைவருக்கும் உணவை அள்ளித் தந்ததைப் போல. இலக்கியம் வாசித்தல் குறித்து இந்த அவையில் ஆசையுடன் எடுத்துரைத்தேன்.
இதனைப் புதிய தலைமுறையினருக்கும் புரிய வையுங்கள் என்றே தங்களை வேண்டி நிற்கிறேன்.
நடுவர் : இப்பொழுது இளம்பெண்மணி மாதவி நம்மிடையே கவிதை உரை ஆற்ற வருகிறார். வாருங்கள். மாதவி. தலைப்பு : மரம்.
(மாதவி உரை மேசை அருகே)
மாதவி
நடுவர் அவர்களுக்கும் அவையோருக்கும் வணக்கம். மரம் என்கிற தலைப்பை தனிமரம் என்றாக்கிக் கொள்கிறேன். தாங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்….
தனிமரம் என்பது நான் எழுதிய கதைத் கவிதை….. இதில் ஓர் ஏந்திழை தன் கதையைக் கூறுகிறாள் தன்மை நிலையில்
நடுவர் : ராபர்ட் க்ரீவ்ஸ் என்னும் பேனா மன்னர், நான் கிளாடியஸ் (I,Claudius) என்ற புதினத்தை பேரரசன் கிளாடியஸ், தானாக தன் வரலாற்றைக் கூறுவது போல் படைத்திருப்பார். அதே பாணியில் பன்முக எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன், நான் கிருஷ்ணதேவராயன் என்ற வரலாற்றுப் புதினத்தை அளித்தார். நீங்கள் தொடருங்கள்.
மாதவி : தனித்திருந்தேன் நேற்றிரவு
கண் நிறைந்த கணவர் என் கண் அவர்
ஊரில் இல்லை என்பதால்
தனித்திருந்தேன் நேற்றிரவு.
திருமணமே வேண்டாம் வாழ்வில்
என்றே தன்னந்தனியாய்
வாழ்ந்த என்னை
நான் உண்டு என் வேலை
உண்டு விடுதி அறை உண்டு
என்று வாழ்ந்தவளைக்
கவர்ந்து கொய்து விட்டார் அவர்.
அதனால் இணைந்தோம்
இல்லறத்தில் நானும் அவரும்
இன்று என் தோழி ராதாவின் திருமணம் –
மேற்கு மாம்பலத்தில் மண்டபம் தேடி கல்யாணப் பரிசு
கொடுத்துப் போக வேண்டும் அலுவலகத்திற்கு.
உறங்கி விட்டேனே. நாக்கைக் கடித்து எழுந்தேன் கட்டிலை விட்டு. அவசரமாய்க் குளித்து, அவசரமாய்த் தயாரானேன். திருமண நிகழ்ச்சிக்குப் பட்டுப் புடவை பிடித்ததில்லை என்றும் எனக்கு.
எனக்குப் பிடித்த சுடிதார் அணிந்து கொஞ்சமாய் அலங்கரித்துப் புறப்பட்டேன் வீட்டை அடைத்து.
பட்டுப்புடைவைப் பெண்கள் புடை சூழ
தோழிக்கு அந்த மாப்பிள்ளை
தாலி பூட்டினார்.
பூட்டினார் என்றா நினைத்தேன்?
சரியான சொல்தானா என்று
எண்ணம் ஓட ஓரத்தில்
நின்ற என் தலையுடன்
மோதி நின்றாள் ஓர் இளம் பெண்மணி.
அம்மா என்று அவளைப்
பட்டுப் பாவாடை கட்டிய சுட்டி
நிலா அழைத்தது.
அந்த நிலாத்துண்டு வாங்க டாடி
என்று அழைத்துத் திரும்பிப் பார்த்தது.
குட்டிப் பாப்பாவின் அப்பாவைப்
பார்த்து அதிர்ந்து போனேன். நிற்கும்
நிலம் நழுவுவது போல் நெஞ்சுள் மயக்கம்.
என் தலையுடன் மோதியவள்
சினம் பொங்க என்னைப் பார்த்தாள்
பட்டுப் பாவாடைக் குழவியைத்
தூக்கி நகர்ந்து போனாள்.
நான் மணமேடையிலிருந்து
கீழே இறங்கினேன் பையப் பைய
கூட்டம் இல்லா இடத்தில்
ஒற்றை நாற்காலியில் அமர்ந்தேன்.
என்னை நானே தேற்றிக் கொண்டு,
கண்ணீரைக் கைக் குட்டையால்
துடைத்துக் கொண்டு
மீண்டும் மணமேடை ஏறி
தோழிக்குப் பரிசுப் பொதியைக்
கொடுத்து கை குலுக்கி இறங்கினேன்.
அவள் மணக் கோலத்தை
வாழ்த்திய நான்,
என் மணக் கோலத்தை
நெஞ்சிலிருந்து அழித்தேன்
தனியாகத் தான் வந்தேன் கல்யாணத்திற்கு
மீண்டும் தனி ஆளாகப்
போகிறேன் வாழ்க்கைக்கு…
(சற்று நேரம் அமைதி)
உலகநாதன் அண்ணன் சொன்னார் சொந்தக் கதையை அரங்கில் ஊரறியச் சொல்வதே இன்றைய போக்கு என்று.
ஆம். என் கதையில் வந்த ஏமாளி இளம் பெண் வேறு யாருமல்ல….. அடியாள் தான்…..
(உடைந்து போய் அழத் தொடங்குகின்றாள்)
மங்கையர்க்கரசி அவள் அருகே வந்து அவளுடைய கூந்தலை ஆறுதலாக வருடிக் கொடுக்கிறார். மாதவி மேலும் விம்முகிறாள்)
(மௌனம் நிலவுகிறது.)
(மங்கையர்க்கரசி உரை மேசை அருகே)
மங்கையர்க்கரசி
நடுவர் அவர்களே!
அவையோரே! அறிவார்ந்த பணிகள் அனைத்திலும் பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கும் யுகத்திலும் அவர்கள் ஏமாற்றங்களுக்கு உள்ளாவது தொடர்கிறது. இளம்பெண் மாதவி நடந்ததை கெட்ட கனவாக நினைத்து மறந்திடுதல் நலம் பயக்கும்.
நடுவர் : அவர் அடைந்த ஏமாற்றங்களுக்கு நாம் எல்லாம் பார்வையாளர்கள். என்ன வேண்டுமானாலும் பேசலாம். அனுபவிக்கும் அவருக்கு அல்லவா வேதனையும்… சோதனையும்? தாங்கள் அவருக்குத் தங்கள் இல்லத்தில் சில மாதம் இடம் கொடுங்கள். கலகலப்பான உங்கள் குடும்பச் சூழல் அவருக்கு மாறுதலையும் ஆறுதலையும் கொடுக்கும். வேண்டுகோளாகத் தான் கூறுகிறேன்.
மங்கையர்க்கரசி : தாங்கள் கட்டளையாகக் கூறினாலும் நிறைவேற்ற நான் சித்தமாக இருக்கிறேன். வீட்டில் தங்க இடம் என்ன… வீட்டு உறுப்பினர் ஆகவே ஆக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். அவர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரட்டும். வழக்குகளை முடித்து வரட்டும். என் பேரனை அவருக்கு வாழ்க்கைத் துணையாக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
அவர் விரும்பினால் இறைவன் நினைத்தால் பாட்டி சொல்லைத் தட்டாதவன் என் பேரன்.
(நடுவர் கைகளைத் தட்டுகிறார். அவையில் கரவொலி ஓங்கி ஒலிக்கிறது.)
நடுவர் :
சென்றது இனி மீளாது இன்று
புதிதாய்ப் பிறந்தோம் என்றான் பாரதி.
வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட
வில்லை என்று அந்தத் தங்க
நிற மங்கை மாதவியிடம் சொல்ல நினைத்தேன்.
வாழ்க்கையை மாற்றியமைத்துத்
தருகிறேன் நான் என்று முன் வந்தார்
பாட்டி…
மன்னிக்கவும் மங்கையர்க்கரசி
அவருடைய நீல வான
நெஞ்சைப் போற்றி நிற்கிறேன்.
மங்கையர்க்கரசியார், ஆடவர்
பெண்களை ஏமாற்றுவதாக மொழிந்தார்.
அக்கூற்று உண்மை தான் எனினும்
இரு பாலாரும் ஒருவரை
ஒருவர் ஏமாற்றுதல் மிகுந்து
வருகிறது என்பதை நாள்தோறும் வரும்
செய்திக் கதைகளைப் பார்த்தால் புரியும்.
மாதவி அவர்களே
கசப்பான கடந்த காலத்தைக்
கனவென மறக்க முயலுங்கள்.
புத்துணர்ச்சியுடன் புது வாழ்வை
நோக்கிப் புறப்படுங்கள்.
வாழ்த்துக்கள். அனைத்து
பேறுகளும் பெற்று நீடுழி வாழ்க.
(மங்கையர்க்கரசியும் மாதவியும் உரை மேசையை விட்டு நகர்ந்து செல்கிறார்கள்)
நடுவர் : அனைவரையும் கலங்க வைத்தது இந்த இளம் மங்கையின் கண்ணீர்க் கதை.
வெள்ளம் வடியும்
இரவு விடியும் என்றே
நம்பிக்கை கொள்ள வேண்டும்
வேதனைப்படுவோர் எல்லாம்.
இப்பொழுது இளைஞர் ஸ்ரீராம்
வருகிறார். வாரும் வாலிபரே
உமக்கு நான் தரும் தலைப்பு. கருணை.
வளர்ந்து கெட்ட… மன்னிக்க வளர்ந்து நிற்கும் இந்த இளைஞர் சமூக வலைதளங்களில் எண்ணற்ற நண்பர்களைக் கொண்டிருப்பவர். அந்தக் காலத்தில் பேனா நண்பர்களைப் பெற கடிதம் எழுதிக் காத்திருப்பார்கள். இன்று விரல் நுனியில் சொடுக்கினால் நண்பர்களைப் பெறுகிறார்கள். ஏற்கனவே தலைமுறை இடைவெளி இப்பொழுது டிஜிட்டல் டிவைட் சேர்ந்து கொண்டது அல்லவா?
(ஸ்ரீராம் உரை மேசை அருகே)
ஸ்ரீராம்
அனைவருக்கும் வணக்கம். நடுவர் அவர்களுக்குத் தனியாக ஒரு வணக்கம்.
தாங்கள் டிஜிட்டல் டிவைட் பற்றிக் கூறியதற்கு விளக்கம் தர அனுமதிக்க வேண்டுகிறேன்.
பெரியவர்களின் வழித் தோன்றல்கள் தானே நாங்கள். அவர்கள் இல்லாமல் வானிலிருந்தா வந்தோம்? தலைமுறை இடைவெளி என்பது ஒரு கற்பனைக் கோடு கற்பிதக் கோடு அழித்து விடலாம் முனைப்போடு.
மங்கையர்க்கரசியார், கணிணி இயக்க கற்றுக் கொடுப்பது அவரது பேரப்பிள்ளைகள்.
தங்களுக்கு கம்ப்யூட்டர், இணையத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு நிவாரணியாக உடன் எப்பொழுதும் நிற்கிறார்
தங்கள் புதல்வியார். டிஜிட்டல் டிவைட்-ஐ நீங்கள் ஒட்டிக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் தலைமுறை இடைவெளி யையும் ஒட்டிக் கொள்ளலாம்.
நடுவர் : அறியாமல், சிந்திக்காமல் வார்த்தை சொல்லி விட்டேன். நீர் அறிவுரை வெள்ளத்தில் நீந்த வைக்கிறீர்…
ஸ்ரீராம் : அதிகப் பிரசங்கம் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.
நடுவர் : புரிந்தால் சரி.
ஸ்ரீராம் : கவிதைக்கு வருகிறேன்.
நடுவர் : அப்பாடா…..
ஸ்ரீராம் : கருணை….
அன்றொரு நாள் … கதிரவன் மறையும்
மாலைப் பொழுதில்
தேவதத்தன் என்னும்
இளைஞன், அன்புக்கு
அர்த்தம் தெரியாத
இளைஞன், தன்னுடைய
அம்பால் ஒரு பறவையை
வீழ்த்தினான்.
அருகில் உள்ள சோலையில்
உட்கார்ந்திருந்த மற்றொரு
இளைஞனின் மடியில்
துடிதுடித்த பறவை விழுந்தது.
அந்த இளைஞன் அதற்கு
உடனடியாக சிகிச்சை செய்து
பிழைக்க வைத்தான்.
தேவதத்தன், பறவை என்னுடையது
என்றான். இளைஞன் தர மறுத்தான்.
இருவரும் மன்னனிடம் தர்பாரில்
முறையிட்டனர்.
தேவதத்தன், மன்னனின் தம்பி மகன்.
பறவையைக் காப்பாற்றிய இளைஞனோ
மன்னனின் பாசப் புதல்வன்.
மன்னன் சிந்தித்தான். தீர்ப்பு
சொல்லும் பொறுப்பை அவையிலிருந்த ஒரு
பெரியவரிடம் ஒப்படைத்தான்.
உயிர் எடுக்க முயன்றவனை
விட உயிர் காக்க முயன்றவனே உத்தமன்
என்று பெரியவர் உரைக்க
அவையினர் அனைவரும் நன்று நன்று
என்று ஏற்றுக் கொண்டாடினர்.
பறவை, காப்பாற்றிய இளைஞனின்
கதகதப்பான கரங்களில் அமர்ந்து இருந்தது.
கருணை கொண்டு பறவையைக்
காப்பாற்றிய இளைஞனின் பெயர்
சித்தார்த்தன் பின்னாளில்
புத்தனாகப் பரிணமித்த உத்தமன்.
இந்தக் கதை புத்தனின்
கருணையை மட்டுமா நமக்குப்
பறை சாற்றுகிறது
இந்தக் கதையில் வந்த
பறவையைப் போலவே
யார் கையில் எந்த
இடத்தில் சென்று சேர்கிறோம்
என்பதைப் பொறுத்தே
வாழ்வும் அமையும்.
வாய்ப்புக்கு நன்றி.
நடுவர் : புத்தனின் வாழ்வுச் சம்பவத்தை உரைத்த இளைஞர் ஸ்ரீராமுக்கு நன்றி.
நாடென்ன செய்தது எனக்கு என்று கேட்பதை விட நீ என்ன செய்தாய் அதற்கு என்று கேள் என்றார் கென்னடி. இந்த வரிகள் மக்கள் திலகம் அவர்களின் திரைப் பாடலிலும் இடம் பெற்றது. தம்பி ஸ்ரீராம், சமூக வலைத் தளங்களை இரத்த தானம் உள்ளிட்ட செயல்களுக்குப் பயன்படுத்துவதாக செல்வி அழகுநிலா தெரிவித்தார். சமூக வலைத் தளங்களை ஆக்கச் செயல்களுக்குப் பயன்படுத்தும் இளைஞருக்கு நமது பாராட்டு.
ரோஜாவை எப்படி அழைத்தாலும் இனிமை தானே என்றார் ஷேக்ஸ்பியர். மற்றொரு இளம் பெண்மணி ரோஜா வருகிறார். வாருங்கள் ரோஜா….
(ரோஜா உரை மேசை அருகே)
ரோஜா
நன்றி. ராஜா.
நடுவர் : எனக்கு அரச பட்டம் வேண்டாம். குடிமகனாகவே ருக்க ஆசை. தங்களுக்கு அடியேன் தரும் தலைப்பு குழந்தைகள்
ரோஜா : நன்றி நடுவர் அவர்களே. அனைவருக்கும் வணக்கம். செந்தமிழை வாழ்த்தி தொடங்குகிறேன்.
குழந்தைகள்
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் வாழ்வின்
குழந்தைகள் என்கிறான்
கலீல் கிப்ரான்.
பெற்றெடுத்து அன்பில் பேணி
வளர்த்த குழந்தைகள்
தங்கள் வாழ்வுப் பாதையை
நோக்கிச் சென்று விடுவார்கள்.
வாழ்வுப் பாதை அவர்களை
வெளி நாடுகளுக்கும் அழைத்துச்
செல்லும் அல்லவா?
இறுதி வரை உடன் வருபவர்
அன்று உங்களைக் கரம் பிடித்தவர் மட்டுமே.
உங்கள் இணையுடன் என்றும்
இணைந்திடுங்கள். இணைந்திருங்கள்
ஜோடிப் பறவைகளைப் போலவே.
கணவருடன் பிணக்குக் கொண்டு
தனித்திருந்தால், வேண்டாம் என்றிருந்தால்
வெற்றிடம் எதிரே நிற்கும் என்றும்.
பிள்ளைகளால் அந்த வெற்றிடத்தை
நிரப்ப முடியாது என்ன செய்தாலும்
அடித்தாலும் பிடித்தாலும் அவருடனேயே
இருங்கள். தாம்பத்யத்தின் பொருள்
முழுமையாகப் புரியும் உங்களுக்கு
மனம் நிம்மதியில் லயிக்கும்.
மிக்க நன்றி.
நடுவர் : குழந்தைகளைப் பற்றி கவி உரைக்கச் சொன்னோம். இளம் மங்கை ரோஜா, இல்லறம் பற்றிய பக்குவ உரைகளைச் சொல்லிச் சென்றார். வீம்பும் வம்பும் என்றும் நன்மை தராது. இனியவள் வம்பைப் பற்றிச் சொன்னார். ரோஜா வீம்பின் தீமையை உரைத்தார். இப்பொழுது உறக்கம் பற்றிச் பேச கவிஞர் வாசுதேவன் வருகிறார். பேச வாங்க வாசு.
(வாசுதேவன் உரை மேசை அருகே)
வாசுதேவன்
நடுவர் அவர்களுக்கும் அவையினருக்கும் வணக்கம். வாய்ப்புக்கு நன்றி.
உறக்கம் என்பது மிகவும் இனிப்பான மருந்தாகும்.
நடுவர் : யார் சொன்னது?
வாசு அடியேன் கூறவில்லை. உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் கூற்று. உறக்கம் உங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். உறக்கம் கனவுகளால் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
நடுவர் : பகலில் உறங்கினால் எடையைக் கூட்டும். வாசு : தங்களைப் பார்த்தால் தெரிகிறது ஐயா. நடுவர் : எனக்கு வேண்டும்…
வாசு : கிறக்கத்தின் பின் உறங்குவோர் உண்டு. உண்டபின் உறங்குவோர் உண்டு.
நடுவர் : எவருக்கும் தெரியாத தகவல்களைத் தெரிவிக்கிறீர்களே…
வாசு : தங்கள் நையாண்டி புரிகிறது.
நடுவர் : புரிந்தால் நல்லது.
வாசு : அரிய தகவலை அவைக்குச் சொல்லி அமரவே வந்தேன்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மைக் கதையாகும் இது.
நடுவர் : கதை விடுங்கள்…. சரி, கூறுங்கள்.
வாசு : ஓர் ஆலையில் குறிப்பிட்ட இயந்திரத்தில் ஸ்விட்ச்சைப் பொருத்திட பொறியாளர்கள் திணறித் திணறி ஓய்ந்து போனார்கள். ரே ஹேமர் டார்ம் என்கிற தொழிலாளி இது பற்றியே எண்ணமிட்டான். எப்பொழுதும் போல் ஆலையின் மறைவிடத்தில் குட்டித் தூக்கம் அவனைத் தழுவ கனவில் பொருத்துவதற்கான சரியான வடிவமைப்பு விரிந்தது.
உதறி எழுந்தான். ஓடினான். செயல்படுத்திக் காட்டி பாராட்டுக்கள் பெற்றான். கனவு அவனுக்குத் தந்தது பதினைந்தாயிரம் டாலரை ஈட்டி. அதுவரை அந்த நிறுவனத்தில் எவருக்கும் கிடைத்திராத பரிசுப் பணம் அது.
உறக்கத்தில் விழித்திருந்த அவன் உள்மனம் பெற்றுத் தந்தது பெரிய வெகுமானம். ஆழ் மனம் ஆழ்கடல் போன்றது. சரியாகப் பயன்படுத்தினால் அது தரும் ஆக்கம்.
உங்கள் திட்டங்களைத் திரும்பத் திரும்ப நினையுங்கள். ஆழ்மனத்தால் வெற்றிகள் குவியும் உங்கள் வாழ்வில்
நன்றி. விடை பெறுகிறேன்.
நடுவர் : தூக்கத்தில் நிம்மதி பற்றி கவியரசர் கண்ணதாசன் கூறினார். நிம்மதி மட்டும் இல்லாமல் வருமானமும் உறக்கம் ஈட்டித்தரும் என்று வாசு கூறினார். இந்த உண்மைக் கதையை உங்கள் மேலாண் இயக்குநரிடம் கூறுங்கள். வாசு.
நீங்கள் அலுவலகத்தில் அவர் எதிரேயே உறங்கலாம் நன்றாக. வேலை போய் விட்டால் என் வாசல் வந்து நின்று விடாதீர்கள். உலகநாதனின் அலுவலகத்தில் இணைந்தால் அல்லும் பகலும் அங்கேயே உறங்கலாம். மன்னிக்க.. கிண்டல் புரிந்ததற்காக. வாசுவின் உள் மன ஆற்றல்கள் பற்றிய சிந்தனைகளை நினைவில் கொண்டால் நன்மைகள் விளையும் வாழ்வில்.
இப்பொழுது இந்த அமர்வில் இறுதியாக நம்முடன் மகிழ்ந்து பேச அன்புச் சோழன் வருகிறார். இவர் மேலாண்மையியல் வல்லுனர். ஒரு தனியார் நிறுவனத்தின் சிறந்த நிர்வாகி இவருக்கு நான் தரும் தலைப்பு பாடம்.
(அன்புச் சோழன் உரை மேசை அருகே)
அன்புச் சோழன்
நடுவருக்கும் அவையோருக்கும் அடியேனுடைய வணக்கங்கள்.
பாடம் –
ஒவ்வொரு நாளும் நமக்குத் தரும் ஒவ்வொரு வித பாடம். படித்ததை மறப்பதே நமது சுபாவம்.
நடுவர் : திருந்தாத உள்ளங்கள்… என்ன செய்வோம்? என்னையும் சேர்த்துத்தான்….
அன்புச் சோழன் : இன்று தாமாகக் கற்றுக் கொள்ள சுயமாக அறிந்து கொள்ள கூகுள் தேடுபொறி பெரிதும் துணை புரிகிறது. விரைவில் குழந்தைகளுக்காகவும் கிட் கூகுள் உலா வரப் போகிறது.
ஆனால், அந்தக் காலத்தில் தாமாகவே முயன்று படித்து படித்துக் கற்றார் ஒரு பெருந்தகை இங்கிலாந்தில். அன்னாரது பெயர் வில்லியம் ஜோன்ஸ். சிறுவனாக இருந்தபோது அம்மாவைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார் அன்றாடம். அது தானே சிறார்களின் சிறப்பியல்பு.
அன்னையார், நீயே முனைந்து விடாமல் தேடிப் தேடிப் படி என்று சொல்லி வைத்தார்.
அன்னையின் வாக்கை சிரமேற்கொண்டு புத்தகங்களைப் படித்துப் படித்து தமது அறிவாற்றலை வளர்த்துக் கொண்டார். இங்கிலாந்து அரசின் பட்டமும் பதவியும் அவரைத் தேடி வந்து நின்றது.
நடுவர் : அரிய தகவல்களை அளித்தீர் அவையில். மிக்க நன்றி.
அன்புச் சோழன் : நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் அதனால் ஐயா எனக்குக் கூறுகிறீர் நன்றி.
நடுவர் : வெள்ளை மனசுக்காரர்…
அன்புச் சோழன் : நிர்வாகவியலில் நான் படித்த ஒரு பாடத்தைச் சொல்லி அமர்கிறேன். நிர்வாகத்தில் படிநிலை அமைப்புதான் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
அதுவே ஆங்கிலத்தில் ஹையார்க்கி. ஒவ்வொருவரும் மற்றொருவருக்குக் கீழ் பணிபுரியும் நிர்வாகக் கட்டமைப்பே ஹையார்க்கி
மேலாண்மையியலில் புது வித சிந்தனையாக ஹோலக்ரசி பூத்துள்ளது.
இதற்குப் பொருள் ஊழியர் பங்கேற்பு மேலாண்மை. அவரவருக்கும் உரிய பங்கு பணி அவரவர் கையில். ஊதிய நிர்ணயமும் அவரவர் கையில். அதட்டுவோர் இல்லை அதிகாரம் செலுத்துவோர் இல்லை. பொறுப்பாய் பாங்காய்ச் செய்வர் அனைவரும் அவரவர் பணிகளை. இந்த வித நிர்வாக முறையும் ஜெயித்துள்ளதைக் காட்டும் அயல்நாட்டுக் காட்சி. அமெரிக்காவின் கலிபோர்னியா மார்னிங் ஸ்டார் நிறுவனம் இதற்கு அத்தாட்சி.
நடுவர் : நிர்வாகவியல் பற்றிய புது விதத் தகவலுக்கு நன்றி.
அன்புச் சோழன் : மிக்க நன்றி. விடை பெறுகிறேன். வணக்கம். (வேண்டா வெறுப்பு தொனி)
நடுவர் : நேரமின்மையே காரணம். அன்பர் அன்புச் சோழன் வருத்தம் கொள்ள வேண்டாம்.
அவையோரே. எங்கள் கவிமொழிகளைச் செவி மடுத்துக் களித்தீர்கள் இதுகாறும். உலகில் அமைதி சூழட்டும். மற்றொரு அரங்கில் சந்திப்போம். இப்போது விடைபெறுவோம்.
மிக்க நன்றி.
வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர்
வாழிய பாரதமணித் திருநாடு.
(திரை)
– தொடரும்…
குறிப்பு: இந்த நாடகத்தின் சூழ்நிலை, பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.