வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 11,336 
 
 

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

“அஞ்சு மணிக்கு ஏர் இண்டியா விமானம் வருதாம். கலைஞரை வரவேற்க ‘நரிடா’ போகணுமே! எல்லாரும் புறப்படுங்க” என்று இரண்டு மணிக்கே அவசரப்படுத்தினார் விழாவேந்தன்.

“கோபாலகிருஷ்ணனும், அரசு உயர் அதிகாரிகளும், சக்ரவர்த்தியின் அந்தரங்கச் செயலர் யோஷினாரியும் இப்பவே புறப்பட்டுப் போறாங்க. சேர்ந்தாப்ல அம்பது கார் போகப் போகுதாம்” என்றார் நன்னன்.

“நாமகிரிப்பேட்டை?”

“அவங்களுக்கு ஸ்பெஷலா டொயாட்டா வேன் போகுது!”

“டோக்கியோவே வெறிச்சினு ஆயிட்ட மாதிரி இருக்கே! அவ்வளவு பேருமா ஏர்போர்ட் போறாங்க?” என்று கேட்டார் மனோரமா.

“ஹமாமட்ஸு ஸ்டேஷன்லேருந்து நரிடா ஏர்போர்ட்டுக்கு நிமிஷத்துக்கு ஒரு ரயில் போயிட்டிருக்காம்; தமிழ் நாட்டிலிருந்து ஏகப்பட்ட பேர் வரதால அவங்களை ஸிடியில கொண்டு வீடறதுக்கு ஜே.என். ரயில்வே ஸ்பெஷல் ஏற்பாடு” என்றார் புள்ளி.

“தேரும் வள்ளுவர் சிலையும் அற்புதமா அமைஞ்சு போச்சு. அடாடா! வள்ளுவர் கழுத்தில் முத்துமாலையைப் பார்த்தீங்களா? கண் கொள்ளாக் காட்சி! மகாராணி கொடுத்தாங்களாம். ஒவ்வொரு முத்தும் நம்ப விழாவேந்தன் கண் மாதிரி பெரிசு பெரிசா அழகா இருக்கு” என்றார் மனோரமா.

“அடாடா, முத்துக்களின் அழகே அழகு! அடக்கமா, அமைதியா, ஒளி வீசறதைப் பாக்கிறப்ப நிறைகுடமா, பெருந்தன்மையா உள்ள பெரிய மனிதர்களைப் பாக்கிற மாதிரி இருக்கு” என்றார் நன்னன்.

“இந்த வள்ளுவருக்கு முத்துமாலை போட்டிருப்பதைக் கண்டால் கலைஞர் ரொம்ப சந்தோஷப்படுவார்”

“கலைஞரைப் பார்க்கிறப்ப வள்ளுவர் என்ன செய்வார் சொல்லுங்க, பார்க்கலாம்!”

“என்ன செய்வார்?”

“இவ்வளவு பெருமையும் எனக்கு உங்களாலதான் என்று சொல்லி தன் கழுத்திலுள்ள முத்துமாலையைக் கழற்றி கலைஞர் கழுத்திலே போட்டுருவார்” என்றார் நன்னன்.

“ஒன்று சொன்னாலும் நன்றே சொல்கிறார் நன்னன்!” என்று சிரித்தார் ஷோஜோ.

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0085-pic

விமான கூடத்தில் நாமகிரிப்பேட்டை நாதஸ்வர இசை , முழக்கத்துடன் கலைஞரை வரவேற்கப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஒவ்வொருவராய் மாலை போட்டு முடிய ஒரு மணி நேரமாயிற்று. யோஷினரரி, கோபாலகிருஷ்ணன், கலைஞர் மூவரும் மகரராஜா அனுப்பியிருந்த கப்பல் போன்ற காரில் ஏறிக் கொண்டார்கள்.

தயாளு அம்மாளுக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் தனித் தனிக் கார்கள் வந்திருந்தன. அவர்களிருவரையும் மனோரமாவும் மகாராணியின் அந்தரங்கச் செயலாளரும் வரவேற்று மாலை போட்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து ஐம்பது அறுபது கார்கள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சங்கிலித் தொடர்போல் சென்றன.

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0086-pic

“கபூகிஸா தியேட்டர்ல ராஜாத்தி அம்மாதான் கலை விழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கப் போறாங்க,” என்று பெருமையோடு சொன்னார் மனோரமா.

விமான கூடத்தில் தமிழர்களும், ஜப்பானியரும் வெளி நாட்டவரும் திரிவேணி சங்கமம் போல் கூடியிருந்தார்கள்.

ஜப்பானியப் பெண்களில் சிலர் தங்கள் குழந்தைகளை முதுகிலே சுமந்துகொண்டு நாமகிரிப்பேட்டையின் நாதசுர இசையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

“இந்த ஜப்பானியப் பெண்கள் குழந்தைகளைப் பத்து மாசம் வயிற்றிலே சுமக்கிறார்கள். பெற்றெடுத்தபின் முதுகிலே சுமக்கிறார்கள்” என்றார் புள்ளி சுப்புடு.

தவில் வாத்தியக்காரர்கள் ஆவேசமாக மாறிமாறி முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

“இந்த தவிலைப் பாக்கறப்போ கலைஞரின் பேச்சு தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது” என்றார் நன்னன்.

“அதென்ன பேச்சு? சொல்லுங்க” என்று கேட்டார் புள்ளி.

“குழந்தையை அடித்தால், அது அழும். எதிரி ஒருவனை அடித்தால், அவன் குமுறுவான். கொந்தளிப்பான், திருப்பி அடிப்பான். ஆனால் இந்த தவில் இருக்கிறதே, அதை அடித்தால் ‘அடிக்கிறாயே!’ என்று அமுவதுமில்லை. கோபித்துக்கொள்வதுமில்லை. அது தன் கோபத்தை நாதமாக வெளிப்படுத்தி நம்மை மகிழ்விக்கிறது. தீங்கு செய்யப்படுகிற நேரத்திலே அந்தத் தீங்கையும் நன்மையாகக் கருதி மற்றவர்களுக்கு நாதமாகப் பொழிகின்ற தவிலைப்போல் நாமும் ஏன் இருக்கக் கூடாது என்கிற உணர்வு தமக்கெல்லாம் உண்டாக வேண்டும் என்று பேசியிருக்கிறார்” என்றார் நன்னன்.

“அருமையான கருத்து!” என்றார் புள்ளி.


அன்று இரவு இம்பீரியல் பாலஸில் கலைஞருக்கும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நல்லி குப்புசாமி, ஏ.நடராஜன் (டி.வி.) போன்ற தமிழ்நாட்டுப் பிரமுகர்களுக்கும், கலைக் குழுவினருக்கும் மட்டும் மகாராஜாவும் மகாராணியும் தமிழ்நாட்டுப் பாணியிலேயே, வாழை இலை போட்டு, வடை பாயசத்தோடு விருந்து அளித்தார்கள்.

“அடாடா, நம்ம தேர், நம்ம திருவிழா, நம்ம நாதசுரம், நம்ம சங்கீதம், நம்ம வாழை இலை, நம்ம சாப்பாடு, நம்ம திருவள்ளுவர்! வெளிநாட்டில் இருக்கிற நினைவே நமக்கெல்லாம் இல்லை” என்றார் புள்ளி.

“ஒரு சின்ன திருத்தம்” என்றார் நன்னன்.

“என்ன அது?”

“திருவள்ளுவர் மட்டும் நம்ம திருவள்ளுவர் இல்லை. அவர் உலகத்தின் பொதுச்சொத்து!”

“வாழை இலைகூட நம்முடையதில்லை. மலேசியாவிலிருந்து வந்தது” என்று விழாவேந்தன் ஜோக் அடித்தார்.


மறுநாள் காலை குறித்த நேரத்தில் விழா ஆரம்பமாயிற்று. மாடிகள், மொட்டைமாடிகள் எங்கு பார்த்தாலும் ஒரே தலை மயம்தான்.

அந்த ஜன சமுத்திரத்துக்கு நடுவே வள்ளுவர் கோட்டத் தேர் அழகாக, அலங்காரமாக, கம்பீரமாக புதுக் கவர்ச்சியோடு நின்றுகொண்டிருந்தது. நடுவே வள்ளுவர் சப்பணம் கட்டி வீற்றிருந்தார். தமிழ்நாட்டுக் கலைஞர்கள் பலபேர் தேர்த்தட்டில் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு இடையே புள்ளி சுப்புடுவும், பரதநாட்டியப் பெண்களும் கிமோனோ அணிந்த கெய்ஷாப் பெண்களும் மூலைக்கு ஒருவராய் நின்று கொண்டிருந்தனர்.

திருமதி மணிகிருஷ்ணசாமி தம் இனிய குரலில் இறை வணக்கம் பாட, திருமதி தயாளு அம்மாள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, நாமகிரிப்பேட்டையர் மங்கள வாத்தியம் இசைக்க, விழா ஜாம்ஜாம் என்று ஆரம்பமாயிற்று. பார்க்குமிடமெல்லாம் டி.வி. காமிராக்கள்!

முதலில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் பேசத் தொடங்கினார்:

“தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே, சக்ரவர்த்தி அவர்களே, மகாராணி அவர்களே, ஜப்பானியப் பிரதமர் அவர்களே மற்றும் இங்கே கூடியுள்ள அயல் நாட்டு அதிபர்களே, பிரமுகர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் எல்லோரையும் இங்கே வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் தேர் உண்டென்றாலும் திருவாரூரில் நடைபெறும் தேரோட்டம் தான் மிகப் பிரபலமானது. அங்கெல்லாம் ஆலயங்களிலுள்ள உற்சவ மூர்த்திகளைத்தான் தேரில் வைத்து வீதிவலம் வருவார்கள். திருவிழாவையொட்டி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண ஏராளமான பேர் வெளியூர்களிலிருந்து வந்து கூடுவார்கள். தேர்த் திருவிழா என்றாலே கூட்டம் என்றுதான் பொருள். இப்போதெல்லாம் தமிழகத்தில் கலைஞர் பேசுகிறார் என்றால் தான் தேர்த் திருவிழாக் கூட்டம் கூடுகிறது. ஜப்பானிலும் அடிக்கடி இம்மாதிரியான தேர் உற்சவங்கள் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்நாட்டில் தேரை வடம்பிடித்து இழுப்பதற்குப் பதிலாக மனிதர்களே சுமந்து செல்வது வழக்கமாம். இந்த விழாவுக்கு வெளிநாடுகளிலிருந்தெல்லாம் லட்சக்கணக்கான பேர் வந்து கூடியிருக்கிறீர்கள்.

வள்ளுவர் எல்லா நாட்டுக்கும் பொதுவானவர். அவருடைய குறள்கள் வேதங்கள் போன்றவை. உலக மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை ஈரடிகளில் வகுத்துக் கொடுத்த பெரும் புலவர் வள்ளுவர். அவருக்கு இங்கே நடைபெற்று வரும் விழாவைக் காணும்போது ‘தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்ற நாமக்கல் கவிஞரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் போன்ற தமிழகக் கவிஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்கள் பெயரால் கட்டடங்களுக்குப் பெயர் சூட்டுவது, அவர்கள் குடும்பத்தாருக்கு நிதி அளிப்பது போன்ற செயற்கரிய செயல்கள் புரிந்துவரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை இப்போது இந்த உலகமகாக் கவிஞர் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

அடுத்தாற்போல் கலைஞர் எழுந்து பேசத் தொடங்கினார். அவர் தோளில் போட்டிருந்த நீண்ட அங்கவஸ்திரம் முதுகுப் பக்கமாகப் போய் இடது கை மணிக்கட்டு வழியாக மேலே வந்து முடிந்திருப்பதை சக்ரவர்த்தி அவர்கள் சற்று நேரம் விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“தமிழ்நாட்டில் இப்படித்தான் எல்லாரும் அங்கவஸ்திரம் அணிவார்களா?” என்று அவர் அருகிலிருந்த கோபால கிருஷ்ணனைக் கேட்க, “இல்லை. வ.உ.சி., வள்ளுவர், காமராஜ், அண்ணா, ராஜாஜி இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைல்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

கலைஞர் எழுந்து பேசத் தொடங்கினார்:

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0090
TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0091
TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0092
TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0093
TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0094
TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0095

‘ஓ! இவள் அந்த கெய்ஷாப்பெண், ஷூமாசிச்சி அல்லவா? இவளைத்தானே தேடிக்கொண்டிருந்தோம். அன்று வீட்டில் இல்லாமல் போனவள்! இங்கே வந்து. என்ன செய்கிறாள்?’

அமெரிக்கப் பெண் போல் ஜீன்ஸ்ஷர்ட் சகிதம் இருந்தாள். ஷர்ட் தொளதொள! வியப்புகாட்டி நிமிர்ந்தபோது அவளது இரு மார்பகங்களும் ஷர்ட்டை முட்டிக்கொண்டு ஜார்ஜைப் பார்த்தன!

“ஓ! நீ இங்கேதான் ஒளிந்துகொண்டிருக்கிறாயா?” என்றான் தவித்துக்கொண்டு.

“ஒளிந்திருக்கிறேனா! ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்றாள் ஷூமாசிச்சி.

“உன்னைத் தேடி பலமுறை வீட்டுக்குப் போனேன்”

“எதுக்கு?”

“சும்மாத்தான்!”

“நான் இங்கே வந்தாச்சு, பரதநாட்டியம் கத்துக்க!”

“பரத நாட்டியமா! இங்கேயா?”

“ஆமாம். தமிழ்நாட்டுப் பெண்கள் இங்கேதான் வந்திருக்காங்க! கபூகிஸா தியேட்டர்ல டான்ஸ் ஆடப் போறாங்க!”

“அப்படியா! அது வேற உண்டா!”

“ஆமாம்; நீங்க எப்படி இந்த ரூமுக்குள்ளே வந்தீங்க?”

“நீங்க இங்கே இருப்பீங்கன்னு தெரியும். வந்துட்டேன்!”

“எப்படித் தெரியும்?”

“கீழே ரிஸப்ஷன்லே விசாரிச்சேன். சொன்னாங்க.”

“ஓ! அப்படிக் கண்டுபிடிச்சீங்களா?”

அவன் போன பிறகு அவள் ஹோட்டல் மானேஜரின் பிரத்யேக நம்பரைக் கூப்பிட்டாள்.

“அகியோ! நான். இங்கே இருப்பது யாருக்கும் தெரியாதில்லே?”

“தெரியாது; எல்லாச் சிப்பந்திகளிட்டேயும் சொல்லி வச்சிருக்கோம், யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்று. ஒருத்தருக்கும் தெரியாது.”

“ஆமாம். தெரியக்கூடாது” என்று ஒரு உத்தரவுபோல் சொன்னாள் ஷூமாசிச்சி.

அதே நேரம், ‘ஓ, ஜார்ஜ், நீ என்னை ஏமாற்றுகிறாயா? உனக்குக் குறைந்த அறிவாளி அல்ல நான்’ என்று நினைத்தவளாய் அரசாங்க ரகசிய இலாகா நம்பரைச் சுழற்றி, அவர்களிடம் சில தகவல்களைச் சொன்னாள்.


தேர்த் திருவிழாவுக்கு இவ்வளவு கூட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு தென்னிந்தியக் கோயில் போல் தூரத்தில் தேர் தெரிந்தது.

பென்னட் நிதானத்துடன் கூட்டத்தில் நெம்பி நெம்பி முன்னே போய்க்கொண்டிருக்க, ஒரு எச்சரிக்கையான தூரத்தில் ஜார்ஜ் முன்னேறிக் கொண்டிருந்தான்.

சற்றுத் தொலைவிலேயே ஓரிடத்தில் நின்று கொண்டு பைனாகுலரை எடுத்துத் தேரை நோக்கினான். ஒரு ‘ஸர்வே’ போல் நுணுக்கமாய்ப் பார்த்தான்.

தேர் ஒரு வர்ணக் கலவையாக இருந்தது. அதன் நாலு பக்கங்களிலும் பெரிய பெரிய தொம்பைகள் யானையின் துதிக்கை போல் ஆடிக்கொண்டிருந்தன!

தேர்த்தட்டில் நிறைய இந்தியர்கள். நின்றார்கள். உற்றுப் பார்த்தபோது. புள்ளி சுப்புடு கையும் காமிராவுமாகத் தென்பட்டார்.

இடது தோளில் இன்னொரு காமிரா தெரிந்தது. அதுதான் பென்னட் கொடுத்த காமிரா.

ஜார்ஜுக்கு மகிழ்ச்சி ஏற்பட, அடுத்தகணமே அது மறைந்து ஒரு திகைப்பு ஏற்பட்டது!

அது யார், இந்தியப் பெண் உடையில்? தேர்த்தட்டின் நான்கு பக்கங்களிலும் நான்கு பெண்கள் நின்றார்கள். முன் பக்கம் இடது மூலையில் நிற்பவள் யார்? ஷூமாசிச்சியா! ஆம்; அவளே தான் மூக்கும் முழியும் நன்றாகத் தெரிகிறதே.

சடங்குகள் துரிதமாக நடந்தன.

அதிர்வேட்டுகள் முழங்கின. பிரமுகர்கள் பேசினார்கள்! தேர் இழுப்பதற்குத் தயாராகிவிட்டது.

கலைஞர் பேசி முடிந்ததும் விழா வேந்தன் பச்சைக் கொடி காட்ட வேண்டியது தான் பாக்கி. கூட்டம் அந்த நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கொடி அசையப் போகிறது. தேர் நகரப் போகிறது!.

புள்ளி தேர்த்தட்டு விளிம்பில் வந்து நின்று கீழே நிற்கும் அதிபர்களையும், கூட்டத்தையும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.

பிரமுகர்களில் பிரெஞ்ச் பிரசிடென்ட் க்ரே கலர் சூட் அணிந்து நடுநாயகமாகத் தெரிந்தார். மற்ற நாட்டுத் தலைவர்களும் அதே அணியில் அமர்ந்திருந்தார்கள்.

‘புள்ளி எப்போது மற்றொரு காமிராவை எடுத்து பிரமுகர்களைச் சுடப் போகிறான்?’ பென்னட் தவித்தான்!

ஷூமாசிச்சி இந்தியப் பெண்களைப்போல் உடை அணிந்து நடனமாடத் தயாராயிருந்தாள்.

அவள் கண்கள் நாலா பக்கமும் வீசின.

வலது ஓரம் தூரத்தில் சிவப்பு நிறப் பாண்ட்டின் மீது அவள் குறி அந்த பாண்ட்டை அணிந்திருப்பவன் யுமாட்டா.

ஜப்பானின் ரகசிய இலாகாவின் ஆர்.டி. என்ற பிரிவின் தலைவன்.

“ஷூமாசிச்சி! எதாவது சந்தேகமாத் தெரியுதா?” என்று கேட்டான் யுமாட்டா தனது வொயர் லெஸ் மூலம்.

ஷமாசிச்சி காதில் ரகசியமாகச் சிறு கருவி பொருத்தப் பட்டிருந்தது. அவள் மார்புத் துணியோடு சின்ன மைக் ஒன்றும் ஒட்டியிருந்தது. அவள் பதில் சொன்னாள்:

“யுமாட்டாஸான்! இதுவரைக்கும் ஒன்றும் தெரியலையே!”

“தேர்த்தட்டிலே. கவனிச்சியா!”

“கவனிச்சேன்! எல்லாரும் இந்தியர்கள் தான்!”

“எல்லோரும் விழாவுக்கு வந்திருப்பவர்கள் தானே? வேற்று முகம் இருக்கிறதா?”

“இல்லை!”

“அது யாரு! எவனோ ஒரு இந்தியன் கையிலே காமிராவோட கண்டதையெல்லாம் படம் எடுக்கிறானே!”

“அவன் இந்திய கோஷ்டி ஆள் தான். அமெச்சூர் காமிராக்காரன்!”

“அவனிடம் இன்னொரு காமிரா இருக்குதே, பார்த்தாயா?”

ஷூமாசிச்சி நாட்டிய பாவனையில் முகத்தைத் திருப்பிக் கண்ணோட்டமிட்டாள்.

“ஆமாம்; இரண்டாவது காமிரா தெரிகிறது. அது ஏது அவனிடம்”

ஓட்டல் அறையில் அவன் ஒரே ஒரு ‘கானன்’ காமிராவை மட்டும் வைத்துக்கொண்டு அலைந்தது அவளுக்குத் தெரியும்!

இரண்டாவது காமிரா அவனிடம் எப்படி, எப்போது வந்தது?

காமிராவை உற்றுப் பார்த்தாள். ஒரு ஓரத்தில் ‘மினால்டா’ என்று போட்டிருந்தது.

மினால்டா காமிரா வகைகள் அத்தனையும் அவள் பார்த்திருக்கிறாள். அத்தனையும் அவளுக்கு அத்துபடி!

ஆனால், இது போன்று ஒரு விசித்திரமான காமிராவைப் பார்த்ததில்லை.


புள்ளி கனஜோராக வளைய வந்தார்.

கலர்ப் படங்களை இஷ்டத்துக்கு எடுத்துக் கொண்டிருந்தார்

ஒவ்வொரு முறை எடுத்த பிறகும் அவர் கூட்டத்தின் இடது பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கேதான் அந்த மரம் இருந்தது. அவரது கண்கள் அடிக்கடி அந்த மரத்தை நோக்கிப் போயிற்று.

மரத்தின் அருகே ஜார்ஜ் வருவதாகச் சொல்லியிருந்தான்!

“பூப்போட்ட குடையை விரிப்பேன். என்னை அடையாளம் கண்டுகொள்!” என்று கூறியிருந்தான்.

புள்ளிக்கும் கண் பூத்துப் போயிற்று. லட்சக்கணக்கான பேருக்கு இடையே ஜார்ல் எங்கே சிக்கிக்கொண்டிருக்கிறானோ?

‘இவன் வர்றதுக்குள்ளே தேர் நிலைக்கு வந்துடும் போல இருக்கே!’ என்று பரபரத்தார்.

“நான் வருவேன். பூப்போட்ட குடையை, விரிப்பேன். அதைப் பார்த்துப் புரிஞ்சுக்கணும். அந்தக் குடை உச்சிக் காம்பிலே ஒரு பல்ப் இருக்கும். அதிலே வெளிச்சம் தெரிஞ்சதும் நாங்க கொடுத்த காமிராவிலே படம் எடுக்கணும்’னு சொல்லி யிருந்தான்! வெள்ளைக்காரன்னா அபார மூளை தான்! சரியான லைட்டிங் பார்த்து, நல்ல சந்தர்ப்பம்னு தெரிஞ்சதும் குடைக் காம்பில் ஒளி அடிச்சு நமக்கு சிக்னல் கொடுப்பான் போல இருக்கு. அப்பத்தான் நான் எடுக்கும் படம் நல்லா வரும்னு நினைக்கிறாங்க போலிருக்கு என்று எண்ணிக் கொண்டார் புள்ளி.

ஜார்ஜ் கொஞ்சம் வன்மைகளை உபயோகித்து, ஜப்பானியத் திட்டுகளை வாங்கிக்கட்டிக் கொண்டுதான் அந்த மரத்தை அடைய முடிந்தது.

முன்னால் போன பென்னட் லேசாகத் திரும்பி ஒரு கண் ஜாடை கொடுத்தான்.

மரத்தின் அருகில் நின்ற ஜார்ஜ் நிறைய ‘எக்ஸ்க்யூஸ் மீ’க் களை உதிர்த்துக்கொண்டு, அந்தக் குடையை மேலே தூக்கினான்.

‘படக்’ என்று ‘ஹூக்’கை அழுத்த குடை மேலே பூக்கள் டிசைனோடு விரிந்தது.

‘யுமாட்டாஸான்! இந்தக் காமிரா புள்ளி அந்த மரத்தைப் பார்த்துகிட்டே இருக்கான்! இப்போ மரத்தடியிலே யாரோ பூ டிசைன் குடையை விரிச்சாங்க புள்ளி முகம் மலர்ந்து போச்சு!.. ஏதோ அனுமதி கிடைச்சதுபோல இரண்டாவது காமிராவை எடுக்கிறான்!” ஷமாசிச்சி செய்தி அனுப்பினாள்!

உடன் பதில் குரல் பரபரத்து வந்தது.

“ஷூமா சிச்சி! ஆள் அனுப்பி விசாரிச்சாச்சு. ஓட்டல்லே ஒரு வெள்ளைக்காரன் புள்ளியிடம் அந்தக் காமிராவைக் கொடுத்திருக்கிறான். நீ சொன்ன அதே ஜார்ஜ்தான் அந்த இரண்டாவது காமிராவிலே ஏதோ விஷமம் இருக்கணும்!”

“ஆமாம்! புள்ளி அடிக்கடி அந்த மரத்தைப் பார்ப்பது சந்தேகத்தைத் தருகிறது”

“ரைட் புரிஞ்சு போச்சு! அந்த வெள்ளைக்காரனிடமிருந்து சிக்னல் எதிர்பார்க்கிறான். ஷமாசிச்சி! அவன் அந்த திசையில் பார்க்க முடியாதபடி தடுத்துவிடு! க்விக்!”


பென்னட் தவித்தான். அவன் சிக்னல் கொடுக்க, ஜார்ஜ் தனது குடைக் காம்பில் இருக்கும் பல்பை எரியச் செய்தான்.

சுளீர் என்று அதன் ஊசி வெளிச்சம் வெகு தூரம் தெரிந்தது!

ஆயினும், ஆச்சரியம்! அந்த வெளிச்சம் அடித்தும் பென்னட் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

திரும்பித் திரும்பி மேடையையும் ஜார்ஜின் குடையையும் பார்த்தான்.

கோபம் பொங்கியது அவனுக்கு. கூட்டத்தை விலக்கி விலக்கி ஜார்ஜ் அருகே விரைந்தான்.

யாரும் தன்னை கவனிக்காதபடி வேறு திசையில் பார்த்துக் கொண்டு “ஜார்ஜ்! இதென்ன! அந்த இந்தியன் ஒரு மண்டுவா இருக்கானே! விளக்கு எரிந்தும் நம்ம காமிராவை இயக்காமல் நிற்கிறானே!” என்று கூறினான்.

“இல்லை பாஸ்! அவன் நம்மைப் பார்க்க முடியாதபடி அந்தக் கிராதகி மறைக்கிறாள்!”

“யார் அது?”

ஷமாசிச்சி என்று ஜார்ஜுக்குத் தெரியும்.. பெயரைச் சொன்னால் ஆபத்து என்பதால் சொல்லவில்லை.

“அவள் இந்தியப் பெண் இல்லை. ஜப்பானியப் பெண் தான் இந்திய உடைதரித்து நடனம் ஆடுகிறாள்! நடனத்தில் வேண்டுமென்றே ஜப்பானியக் குடையை விரித்து, புள்ளியின் பார்வையை மறைக்கிறாள்!”.


புள்ளி கோபமாக ஷமாசிச்சியைப் பார்த்தார். அவளது விரித்த குடையைத் தாண்டி அந்த மரத்தைப் பார்க்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.

ஷமாசிச்சி நடனமாடிக்கொண்டே குடையைச் சுழலவிட்டு அங்குமிங்கும் நகர்த்தி புள்ளியின் பார்வையை மறைத்துக் கொண்டேயிருந்தாள்.

கோபம் வந்தது புள்ளிக்கு பற்களை நறநறவென்று கடித்தார்.

அதே நேரம் ஷமாசிச்சியின் காதில் யுமாட்டாவின் பதட்டக் குரல் விழுந்தது.

“ஷமாசிச்சி வீடாதே! அவன் பார்வையைத் தடுத்துக் கொண்டே இரு! நமது ஆட்கள் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அதுவரை சமாளி!”


பென்னட்டுக்கு இங்கே கோபம். “ஜார்ஜ்! அந்த ஆசாமி உன் பல்பைப் பார்க்க முடியாமல் கஷ்டப்படறான்! நீ விளக்கைப் போட்டுக்கிட்டு உயர எம்பிக் குதி! சீக்கிரம் சீக்கிரம்!”

பென்னட் அதைச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக அப்பால் செல்ல, ஏதோ ஒரு நெருடல் தோன்றி திரும்பிப் பார்த்தான்.

அவன் நினைத்தது சரியாக இருந்தது.

இரு கண்கள் அவனை ஒரு கோணத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன.

யார் அது தெரிந்தமுகம்தான். ஆமாம்; அந்த ஐஸ்கிரீம் பார்லரின் முதலாளி!

‘சுளீர்’ என்று ஒரு நாடி இழுத்தது:

‘இவன் ஒற்றனா? அல்லது ஜப்பானிய ஒற்றனுக்கு உடந்தை ஆசாமியா?’

சட்டென்று திரும்பி அந்த பார்லர் ஆசாமி நின்ற பக்கம் நெம்பிக் கொண்டு போக, பார்லர் ஆசாமி அங்கிருந்து அகல முயன்றார். ‘தம் கையிலிருந்த பொய்த் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்!

வெறும் சத்தமும், புகையுமாய்க் கிளம்பினால் போதும்! அதற்குத்தான் அந்த முயற்சி! அந்த ஒற்றர் கும்பல்களுக்கிடையே எத்தனையோ சங்கேத சமிக்ஞைகள்.

இதற்குள் ஜார்ஜ் எம்பிக் குதிக்க, புள்ளி பல்பைப் பார்த்துவிட, பிரமுகர்களை நோக்கி அவர் காமிராவைத் திருப்பிவிட்டார்!

டக், டக், டக் என்று விநாடிகள் பறக்க, இதோ ட்ரிகரை அழுத்தப் போகிறார் புள்ளி.


“யாவ்வ்வ்” என்று ஒரு கராத்தே கதறல் அந்தத் தேரையே உலுக்கியது!

பறந்து வந்த ஜப்பானிய ஒற்றன் ஒருவனுடைய கால் ராக்கெட்போல் வந்து அந்தக் காமிராவை உதைத்து ஆகாயத்தில் பறக்க விட்டது.

“அடேய் அநியாயக்காரா!” என்று புள்ளி கூச்சல் போட, தேர்த்தட்டில் ஒரே களேபரம்!


அதே நேரம் அந்த மரத்தின் பக்கத்திலும் ஒரு பொய் வெடிச் சத்தம் கிளம்புவதைக் கேட்டு ஏராளமான ஜப்பானிய ஒற்றர்கள் ஏவுகணைகள் போல் வந்து குதித்தார்கள்!

திமிறிக் கொண்டு ஓடப் பார்த்த பென்னட்டையும், ஜார்ஜையும் எளிதாகப் பிடித்து அமுக்கிவிட்டார்கள்.

தேருக்கு வெளியே விழுந்த அந்தக் காமிராவைத் தூக்கி, புல்லட் வெளிவர முடியாத அளவுக்கு அதை ஒரு பைக்குள் போட்டு வெகு தூரம் கொண்டு போய்விட்டார்கள் சில ஜப்பானிய ஒற்றர்கள்.

எல்லாம் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து போயிற்று.

சிலருக்குத்தான் ஏதோ ‘கசமுசா’ நடந்ததுபோல் லேசாகத் தெரிந்தது. ஆனாலும், என்னவென்று தெளிவாகப் புலப்படவில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேருக்கு நடந்தது எதுவுமே தெரியவில்லை.


மறுநாள், பிரெஞ்ச் பிரசிடெண்ட் கொல்லப்பட இருந்ததையும், அவரைக் கொல்வதற்காக ஒரு வெள்ளைக்காரக் கூட்டம் ஜப்பானுக்கு வந்து ரகசிய வேலை செய்ததையும், கிஜிமா,மாசிச்சி, ஐஸ்க்ரீம் பார்லர் முதலாளி மூலமாக அதைத் துப்பறிந்து ஜப்பானிய அரசு ஒற்றர்கள் முறியடித்ததையும், தினசரி பத்திரிகைகளில் மக்கள் பக்கம் பக்கமாய்ப் படித்தார்கள்.

ஜார்ஜின் கவனப் பிசகினால் அவன் பார்லரில் மறந்து விட்டுப்போன டயரியை ஷூமாசிச்சி, பார்லர் முதலாளி, கிஜிமா மூவருமே படித்து விட்டிருந்தார்கள். எனினும், பிரெஞ்ச் பிரசிடெண்டை ஜார்ஜ் குழுவினர் எப்படிக் கொல்லப்போகிறார்கள் என்பது மர்மமாகவே இருந்தது. ஜப்பானிய ஒற்றர்கள் எல்லா விதமாகவும் யோசித்து அதற்குத் தக்கபடி திட்டமிட்டு வைத்திருந்தார்கள்! அவர்களது அசாத்தியமான திறமையும், எச்சரிக்கை உணர்வும், மதிநுட்பமும் கவனமும்தான் அந்தச் சூழ்நிலையை முறியடித்தது.

ஜப்பானியப் போலீஸார் ஜார்ஜைக் கைது செய்துகொண்டு போகும்போது கிஜிமா தூரத்திலிருந்து கண் கலங்கிப் பார்த்தாள்.

அவள் முகத்தில் லேசான சோகம்!

நல்லவேளை! ஜார்ஜுடன் காதலில் மூழ்கித் தலைகால் தெரியாமல் நடந்து கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

அப்படிப் போயிருந்தால் அவளால் அவளது நாட்டுக்கு ஒரு களங்கம் ஏற்பட்டிருக்குமே!

இப்போது நிம்மதியாகப் புன்முறுவல் பூத்தாள், நாட்டுக்காக ஒரு அரும்பும் காதலைத் தியாகம் செய்தோம் என்ற மனத்திருப்தியுடன்!

– தொடரும்…

– வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, முதற் பதிப்பு: ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ் , சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *