மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் சொன்ன கோபாலன் கதை
மூன்றாவது நாள் காலை போஜனாகப்பட்டவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருத்துக் கொண்டே வந்த தம் தொந்தியைக் கவலையுடன் தடவிக் கொடுத்தவாறு உட்கார்ந்திருக்க, அதுகாலை யாரோ ஒரு பிச்சைக்காரன் ‘என்னைப் பார்த்தீர்களா?’ என்பதுபோல் எலும்பும் தோலுமாக வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் நின்று, ‘ஐயா, தரும துரையே!’ என்று குரல் கொடுக்க, ‘இவன் தருமதுரையென்றால், நான் தருமதுரையாகி விடுவேனா?’ என்பதுபோல் அவர் தொந்தி குலுங்கத் துள்ளி எழுந்து அவனை விரட்டுவதற்காக நாயைத் தேட, அது எங்கேயோ போயிருக்கக் கண்டு, தாமே நாயாகி அவனை ‘விரட்டு, விரட்டு’ என்று விரட்டிவிட்டு வந்து மீண்டும் அமர, அதுகாலை, ‘குளிக்கவில்லையா, வெந்நீர் தயாராயிருக்கிறதே?’ என்று சொல்லிக் கொண்டே அன்னார் மனையரசி ‘அன்ன நடை’க்குப் பதிலாக ‘ஆனை நடை.’ நடந்து அங்கே வர, ‘இதோ வந்துவிட்டேன்!’ என்று அவரும் முக்கி முனகி எழுந்து சென்று குளித்து, பூஜை அறைக்குள் நுழைந்து, சுவாமி படங்களுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘நிஜக் கணக்கு நோட்டுக்க’ளெல்லாம் சரியாயிருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்த்த பின், திருநீறுக்குப் பதிலாக முகப்பவுடரை எடுத்து நெற்றியில் ஒரு கீற்று இழுத்துக்கொண்டு வெளியே வர, அதுகாலை அவருடைய அருமை நண்பர் ஒருவர், “என்ன, பூஜையெல்லாம் முடிந்தாச்சா?” என்று இளித்துக் கொண்டே வந்து அவருக்கு முன்னால் நிற்க, “முடிந்தது, முடிந்தது!” என்று படு பவ்வியமாகத் தலையை ஆட்டியபடி அவரை வெளியே இருந்த நாற்காலி யொன்றில் உட்கார வைத்து, “இன்றையப் பத்திரிகையைப் பார்த்தீர்களா?” என்று சொல்லிக்கொண்டே காலைப் பத்திரிகை ஒன்றை எடுத்து அவருக்கு முன்னால் போட்டுவிட்டுத் தாம் மட்டும் உள்ளே போய் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு வந்து, “கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதோ? நீங்களும் சாப்பிட்டிருக்கலாமே?” என்று அன்றைய ‘முதல் பொய்’யை அன்னாருக்கு ‘அங்குரார்ப்பணம்’ செய்துவிட்டு ‘டிரஸ்’ செய்துகொள்ள ஆரம்பிக்க, அதே சமயத்தில் அவருடைய காரியதரிசி நீதிதேவன் அங்கே பிரசன்னமாகி, ‘’நான் வந்தாச்சு!” என்று அறிவிக்க, “இதோ, நானும் வந்தாச்சு!” என்று அவர் தம் அருமை நண்பரை ‘அந்தர’த்தில் விட்டுவிட்டு, மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்கத் தம்முடைய காரியதரிசியுடன் மலையில்லா மலைச் சாலைக்கு விரைவாராயினர்.
அங்கே அவர்கள் இருவரும் ‘லிப்ட்’டில் ஏறி, மூன்றாவது மாடிக்கு வந்தகாலை, அந்த மாடியின் ரிஸப்ஷனிஸ்டான கோமளம் அவர்களை நோக்கிப் பறந்து வந்து, “நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று சொல்ல, ‘’சொல்லுங்கள், சொல்லுங்கள்!” என்று அவர்கள் இருவரும் அவளைத் தொடர்ந்து செல்ல, “கேளுங்கள், கேளுங்கள்!” என்று அவள் சொன்ன கதையாவது;
“கேளாய், போஜனே! ‘கோபாலன், கோபாலன்’ என்று ஒரு கல்லூரி மாணவன் கோபாலபுரத்திலே உண்டு. பி.காம். இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த அவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருந்தான். அதாகப்பட்டது, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அவன் வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவான். அவனைக் காணாமல் அம்மா மங்களம் அழுவாள்; அப்பா மணவாளன் அவனைத் தேட வேண்டிய இடங்களிலெல்லாம் தேடிவிட்டு, கடைசியாகப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் எழுதிக் கொடுத்து விட்டு, ‘பையனைக் காணோம்; கண்டுபிடித்துத் தருவோருக்குப் பரிசு ரூபா ஐந்நூறு’ என்று பத்திரிகைகளில் அவன் படத்தைப் போட்டு விளம்பரமும் செய்வார். இரண்டு நாட்களுக்கெல்லாம் யாராவது ஒருவன் வந்து அவனைப் பற்றி ‘டிப்’ஸைக் கொடுப்பான்; அதன்படி போய்ப் பார்த்தால் அவன் அங்கே இருப்பான். ‘ஏண்டா, இப்படிச் செய்கிறாய்?’ என்றால், ‘நான் ரோலக்ஸ் வாட்ச் வேண்டுமென்று கேட்டேனே, வாங்கிக் கொடுத்தீர்களா? ஸ்கூட்டர் வேண்டுமென்று சொன்னேனே, வாங்கிக் கொடுத்தீர்களா?’ என்று இப்படி ஏதாவது சொல்வான். அப்பா அவற்றை வாங்கிக் கொடுப்பதோடு, அவனைப் பற்றிய ‘டிப்ஸ்’ கொடுத்தவனுக்கும் ரூபா ஐந்நூறு அழுது வைப்பார்.
அத்துடன் அவரைப் பிடித்த தலைவலி விடுமா என்றால் விடாது. சில நாட்களுக்கெல்லாம் அவனுக்குப் பதிலாக அவனுடைய ரோலக்ஸ் வாட்ச்சோ, ஸ்கூட்டரோ காணாமற் போய்விடும். ‘எங்கே போச்சு?’ என்று அப்பா கேட்க வேண்டியதுதான் தாமதம், பையன் மறுபடியும் காணாமற் போய்விடுவான். அதைத் தொடர்ந்து அம்மாவின் அழுகை, அப்பாவின் தேடல், போலீஸில் புகார், பத்திரிகைகளில் விளம்பரம், பரிசு ரூபா ஐந்நூறு எல்லாம் தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படி ஒரு முறையா, இரண்டு முறையா? ஏழெட்டு முறை அவனைத் தேடிப் பிடித்து அலுத்துப்போன அவன் அப்பா, ஒரு நாள் அது குறித்து எங்கள் விக்கிரமாதித்தரைக் கலந்து ஆலோசிக்க, ‘இப்படியும் பிள்ளை உண்டா? அந்தப் பிள்ளையைப் பார்ப்பதற்கு முன்னால் அவனுடைய வீட்டை நானும் சிட்டியும் பார்க்க வேண்டுமே?’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அதற்கென்ன வாருங்கள்!’ என்று அவன் அப்பா அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தம் வீட்டுக்குப் போவாராயினர்.
கோபாலன் வீட்டை உள்ளேயும் வெளியேயுமாக ஒரு முறைக்கு இரு முறை சுற்றிச் சுற்றி வந்த பின்னர், அங்கே அவன் ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக நிற்பது போல் ஒரு படம் இருக்கக் கண்டு, ‘இது என்ன படம்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘அவனுடைய கலியாணப் படம்தான்!’ என்பதாகத்தானே பிள்ளையைப் பெற்றவர் சொல்லிவிட்டுப் பெருமூச்சு விடுவாராயினர்.
‘ஒஹோ, கலியாணமான பையனா!’ என்ற விக்கிரமாதித்தர் ‘எங்கே அவன் மனைவி?’ என்று அவரைக் கேட்க, ‘என்னைக் கேட்காதீர்கள்; இவளைக் கேளுங்கள்!’ என்று அவர் தம் மனைவி மங்களத்தைச் சுட்டிக் காட்ட, ‘அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள்?’ என்று அவளும் பெருமூச்சு விட்டவாறு சொன்னதாவது:
மங்களம் சொன்ன கோகிலம் கதை
‘மயிலையம்பதி, மயிலையம்பதி’ என்று சொல்லா நின்ற ஊரிலே இவருக்கு ஓர் அருமைத் தங்கை இருந்தாள். அவள் ‘கோகிலம், கோகிலம்’ என்று ஒரு பெண்ணைப் பெற்று வைத்துவிட்டுக் கண்ணை மூடினாள். அவள் அப்பா இரண்டாந்தாரமாக ஓர் இளம் பெண்ணை மணக்க, அந்தப் பெண்ணுக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஒத்து வராமற் போக, ‘கொடுமை, கொடுமை! சித்தியின் கொடுமையை என் தங்கையின் பெண்ணால் தாங்க முடியவில்லை!’ என்று இவர் அவளை அழைத்துக்கொண்டு இங்கே வந்தார். நான் அப்போதே சொன்னேன், ‘இங்கே ஒரு பையன் இருக்கிறான்; அவனுடன் இவள் இருக்கவேண்டாம்’ என்று. இவர் கேட்கவில்லை; அதன் பலன் என்னவாகியிருக்கும் என்பதை இந்தக் காலத்தில் ஒருவர் சொல்லியா இன்னொரு வருக்குத் தெரியவேண்டும்? அதுதான் எல்லோருக்கும் தெரிந்த கதையாயிருக்கிறதே? அந்தக் ‘காதல் கதை’ இங்கேயும் உருவாயிற்று. ‘படிப்பு முடிவதற்கு முன்னால் காதல் என்ன வேண்டியிருக்கிறது காதல்!’ என்று நினைத்த நான், அவர்களுடைய காதலுக்கு எவ்வளவு தூரம் முட்டுக்கட்டை போட முடியுமோ, அவ்வளவு தூரம் முட்டுக்கட்டை போட்டேன்; பலன் இல்லை. ‘ஒன்று, அவளைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டுவிடுங்கள்; விடாவிட்டால் அவளுக்கு உடனே வேறு யாராவது ஒருவனைப் பார்த்து கலியாணமாவது செய்து வைத்துவிடுங்கள்!’ என்றேன். இவருக்கோ அவளைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட விருப்பமில்லை. ஆகவே, இவர் அவளுக்கு ஏற்றாற்போல் ஒரு பையனைத் தேடினார், தேடினார், அப்படித் தேடினார். கடைசியில் யாரோ ஒருவன் கிடைத்தான். அவனுக்கும் அவளுக்கும் இவர் கலியாணம் செய்து வைக்கப் போக, அந்தக் கலியாணத்தன்று, ‘உங்கள் பிள்ளை இந்தப் பெண்ணோடு ஏற்கனவே உறவு கொண்டிருந்தானாமே, அதை மறைத்து என் பிள்ளையின் கழுத்தில் இவளைக் கட்டப்பார்த்தீர்களே?’ என்று சம்பந்தி வீட்டார் தங்களுக்கு வந்த ‘மொட்டைக்கடிதம்’ ஒன்றைக் கொண்டு வந்து இவரிடம் நீட்டி மல்லுக்கு நிற்க, மணமகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மணமகன் சொல்லிக்கொள்ளாமல் எழுந்து நடையைக் கட்ட, ‘அவமானம், அவமானம்!’ என்று துள்ளிக் குதித்த இவர், நான் என்ன சொல்லியும் கேட்காமல் தம்முடைய மகன்கையில் தாலியை எடுத்துக் கொடுத்து, ‘ம், கட்டுடா கட்டு!’ என்று அதே முகூர்த்தத்தில் அவள் கழுத்தில் அவனைத் தாலி கட்டச் சொல்லிவிட்டார், ‘சாந்திக் கலியானத்தை’யாவது அவன் படிப்பு முடியும் வரை இவர் தள்ளிப் போடக்கூடாதா? அதையும் அன்றிரவே நடத்திவிட வேண்டுமென்று இவர் குதியாய் குதித்தார். எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. ‘அது எப்படி நடக்கிறதென்று பார்த்துவிடுகிறேன்!’ என்று நான் அவளைத் தூக்கி ஒரு டாக்சியில் போட்டுக்கொண்டு போய், ‘நீயாச்சு, உன் சித்தியாச்சு!’ என்று அவள் வீட்டில் அவளைத் தள்ளி விட்டு வந்துவிட்டேன்!’ என்று மங்களம் தன் கதையைச் சொல்லி முடிக்க, ‘அப்புறம் என்ன ஆயிற்று?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘யாருக்குத் தெரியும்? இவரைக் கேளுங்கள்!’ என்று அவள் கணவரைச் சுட்டிக் காட்ட, அவர் சொன்னதாவது:
மணவாளன் சொன்ன மர்மக் கதை
‘கலியாணத்துக்குப் பிறகு கோபாலனையும் கோகிலத்தையும் இவள் பிரித்து வைத்தது எனக்கு அவ்வளவு உசிதமாகப் படவில்லை. ஆயினும், ‘படிப்பை உத்தேசித்துத் தானே பிரித்து வைக்கிறாள்?’ என்று நானும் ஒன்றும் சொல்லவில்லை; பையனும் ஒன்றும் சொல்லவில்லை.
இங்ஙனம் இருக்குங்காலையில், ஒரு நாள் உடனே தன் வீட்டுக்குப் புறப்பட்டு வருமாறு கோகிலத்தின் சித்தியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வர, ‘என்னவோ, ஏதோ’ என்று நானும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினேன்.
அங்கே கோகிலம் தலைவிரி கோலமாக ஊஞ்சல் பலகையின்மேல் உட்கார்ந்திருந்தாள். அவள் வயிறு கொஞ்சம் எடுப்பாயிருந்தது. ‘அன்றையச் சாப்பாடு கொஞ்சம் ருசியாயிருந்து, ஒரு பிடி அதிகமாகச் சாப்பிட்டிருப்பாளோ, என்னவோ?’ என்று நினைத்த நான், ‘அதை எப்படி அவ்வளவு வெளிப்படையாகக் கேட்பது?’ என்று எண்ணி, ‘என்ன உடம்புக்கு?’ என்றேன்.
அவ்வளவுதான்; விடுவிடுவென்று அங்கே வந்த அவள் சித்தி, ‘அவளுடைய உடம்புக்கு என்ன கேடு? மூன்று மாதங்களாக அவள் முழுகாமல் இருக்கிறாளாக்கும்!’ என்று என் தலையில் திடீரென்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள்.
‘அச்சச்சோ!’ என்ற நான், ‘உன்னை இந்த அநியாயத்துக்கு உள்ளாக்கிவிட்ட அந்த மாபாவி யார் அம்மா?’ என்று அவளை மெல்லக் கேட்டேன்.
‘ஆமாம்; இவளைத்தான் அவன் அநியாயத்துக்குள்ளாக்கி விட்டானாக்கும்? அவனை இவள் அநியாயத்துக் குள்ளாக்கிவிடவில்லையா? உங்களுக்கு ஏன்தான் இந்த ஓரவஞ்சனையோ தெரியவில்லை. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைந்து விடுமாக்கும்?’ என்று அவள் சித்தி பொரிந்தாள்.
‘நூலுக்கு ஊசி இடம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் ஊசியின் கையிலா இருக்கிறது? அதை வைத்துக் கொண்டிருப்பவர்களின் கையிலல்லவா இருக்கிறது?’ என்றேன் நான், அந்த நிலையிலும் அவளைக் கொஞ்சம் சிரிக்க வைத்து அவள் வாயை அடக்க.
அவளா சிரிப்பாள்? ‘இந்த வக்கணையில் ஒன்றும் குறைச்சல் இல்லை! நான் அப்போதே சொன்னேன், ‘அவள் எஸ். எஸ். எல். ஸி வரை படித்தது போதும், போதும்’ என்று. கேட்டீர்களா? அங்கே அழைத்துக்கொண்டு போய் அவளைக் காலேஜில் வேறு சேர்த்துத் தொலைத்தீர்கள்! அப்படித்தான் சேர்த்துத் தொலைத்தீர்களே! அவளுக்குக் கலியாணத்தையாவது பண்ணாமல் இருந்தீர்களா? அதையும் பண்ணித் தொலைத்தீர்கள்! அப்புறம் கேட்பானேன்? ‘லைசென்ஸ் கட்டிய நாய்’ போல் அவள் எங்கு வேண்டுமானாலும் திரிய ஆரம்பித்துவிட்டாள்! அதன் பலன் இப்போது அவள் வயிற்றில் மட்டுமா வந்து விடிந்திருக்கிறது? நம் எல்லோருடைய தலையிலும்தான் வந்து விடிந்திருக்கிறது!’ என்று நான் எதிர்பார்த்ததற்கு நேர் விரோதமாக அவள் வாய் நீண்டது.
‘ஸ், ஏன் இப்படி இரைகிறாய்? இரையக்கூடிய விஷயமா இது?’ என்றேன் நான்.
‘மூன்று மாதங்களாக மூடி மறைத்தது போதாதா? இன்னுமா மூடி மறைக்கவேண்டும் என்கிறீர்கள்? இனி ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்று அவள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவேண்டும்; இல்லை, அவளுக்குப் பதிலாக நாமாவது நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியே கிடையாது!’
‘அதற்கு என்ன அவசரம் இப்போது? எதற்கும் ‘யார், என்ன?’ என்று விசாரித்துத்தான் பார்ப்போமே?’
‘எல்லாம் விசாரித்துப் பார்த்தாச்சு! அவள் எங்கே வாயைத் திறக்கிறாள்? செய்ததையும் செய்துவிட்டு ஊமைக் கோட்டான் மாதிரி வாயைத் திறக்காமல் இருக்கிறாள்!’ என்று சொல்லிக்கொண்டே அவள் கோகிலத்தின் கன்னத்தில் ஓர் இடி இடிக்கப் போனாள்.
நான் அவளைத் தடுத்து, ‘கொஞ்சம் பொறு, நானே விசாரிக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு, ‘சொல், அம்மா! யார் அவன்?’ என்றேன்.
‘அம்மா, அம்மா என்றால் சொல்வாளா? ‘கண்ணே, கண்ணே!’ என்று வேண்டுமானால் கொஞ்சிப் பாருங்கள்; சொல்வாள்!’ என்றாள் அவள் கேலியாக.
பொறுமையிழந்த நான், ‘கொஞ்ச நேரம் நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னால் உள்ளதைச் சொல்பவள்கூடச் சொல்லமாட்டாள் போல் இருக்கிறதே?’ என்று அவள்மேல் எரிந்து விழுந்தேன்.
‘என்னால்தானா சொல்லவில்லை? அவள் அருமை அப்பா நேற்று முழுவதும் தன்னால் ஆன மட்டும் அவளைக் கேட்டுப் பார்த்துவிட்டுக் கடைசியில் என்ன செய்தார் தெரியுமா, உங்களுக்கு.’
‘என்ன செய்தார்?’
‘வேறு என்ன செய்ய முடியும்? ‘இனி உன் முகத்தில்கூட விழிக்கமாட்டேன்’ என்று அவர் தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளியே போய்விட்டார்!’
‘அடப் பாவமே! எப்பொழுது திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்?’
‘அவர் என்னிடம் ஒன்றும் சொல்லிவிட்டுப் போக வில்லை; நான்தான் அவர் போனதிலிருந்து இரண்டு குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு அனாதைபோல் அழுது கொண்டிருக்கிறேன்!’ என்று அவள் நிஜமாகவே அழ ஆரம்பிக்க, நான் அவளைச் சமாதானம் செய்துவிட்டு, ‘சொல், கோகிலம்? இந்த விஷயம் கோபாலனுக்குத் தெரிந்தால் அவன் உன் அப்பாவைப்போல் முக்காட்டைப் போட்டுக் கொண்டு வெளியே போகமாட்டான்; உன்னையும் கொன்று விட்டுத் தன்னையும் கொன்றுக் கொண்டு விடுவான்!’ என்று அவளை மிரட்டினேன்.
அவளோ அதற்கும் அசைந்து கொடுக்காமல் ‘ஊஹும்!’ என்று தலையை ஆட்டினாள். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது; ‘சொல்லப் போகிறாயா, இல்லையா?’ என்று அவளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினேன்.
‘மாட்டேன், மாட்டேன், சொல்லவே மாட்டேன்!’ என்றாள் அவள், அதற்கும் அஞ்சாமல். அதற்கு மேல் அவளை என்ன செய்வதென்று என்று ஒன்றும் தோன்றாமற் போகவே, நானும் அவள் அப்பாவைப்போலவே தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து விட்டேன். இதுதான் அந்தக் கோகிலத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த கதை!’ என்று அவளைப் பற்றிய மர்மத்தைத் துலக்காமலே மணவாளன் தம்முடைய ‘மர்மக் கதை’யைச் சொல்லி முடிக்க, ‘அந்த வீட்டில் வேலைக்காரர்கள் யாராவது உண்டா?’ என்று விக்கிரமாதித்தர் அன்னாரை விசாரிப்பாராயினர்.
‘வேலைக்காரர்கள் என்று அங்கே யாரும் இல்லை; வேலைக்காரி என்று ஒரே ஒருத்தி மட்டும் உண்டு. அவளும் இப்போது அங்கே வேலை செய்வதாகத் தெரியவில்லை!’ என்று மணவாளனாகப்பட்டவர் சொல்ல, ‘அவள் வீட்டைத் தெரியுமா, உங்களுக்கு?’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, ‘தெரியும்; அவள் இப்போது எங்கள் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறாள்!’ என்று அவர் சொல்ல, ‘கூப்பிடுங்கள், அவளை!’ என்று விக்கிரமாதித்தர் அவரை விரட்டுவாராயினர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வேலைக்காரி வந்து விக்கிரமாதித்தருக்கு முன்னால் நிற்க, ‘கோகிலம் வீட்டில் வேலை செய்வதை நீ ஏன் விட்டுவிட்டாய்?’ என்று விக்கிரமாதித்தர் அவளைக் கேட்க, ‘என்னவோ பிடிக்கவில்லை, விட்டு விட்டேன்!’ என்று அவள் விக்கிரமாதித்தரைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பாளாயினள்.
‘அங்கே பார்க்காதே, இங்கே பார்! ஏன் பிடிக்கவில்லை?’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, ‘அதைக் கேட்காதீர்கள், சுவாமி! சொன்னால் இங்கே உள்ளவர்களுக்குப் பிடிக்காது; வருத்தம் வரும்!’ என்று அவள் பின்னும் முகத்தைத் திருப்ப, ‘வராது, சொல்?’ என்று அவராகப்பட்டவர் அவளை வற்புறுத்த, ‘நானும் பிள்ளை குட்டி பெற்றவள், சுவாமி! என்னதான் தப்புத் தண்டா செய்யட்டும்; வாயும் வயிறுமாக இருந்த ஒரு பெண்ணை அவள் சித்தி அப்படி அடித்து விரட்டலாமா? அதைப் பார்த்ததிலிருந்து தான் எனக்கு அங்கே வேலை செய்யவே பிடிக்கவில்லை!’ என்று அதற்குள் கலங்க ஆரம்பித்து விட்ட தன் கண்களை அவளாகப்பட்டவள் தன்னுடைய முந்தானையால் துடைக்க, ‘அழாதே! அதற்குப் பின் அந்தப் பெண் என்ன ஆனாள் என்று உனக்குத் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் அவளை மெல்லக் கேட்க, ‘அந்த வேதனைக் கதையை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி?’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே அவள் சொன்னதாவது:
வேலைக்காரி சொன்ன வேதனைக் கதை
‘என்னவோ, எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். சரியாயிருந்தால் ‘சரி’ என்று எடுத்துக் கொள்ளுங்கள்; தப்பாயிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். ‘அப்பனாயிருக்கட்டும், அண்ணனாயிருக்கட்டும்; வயதுக்கு வந்த ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு கலியாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை மீறி அந்தக் குழந்தையின் அப்பா இரண்டாவது கலியாணம் செய்துகொண்டது முதல் தப்பு; அப்படியே பண்ணிக் கொண்டாலும் இளையாளுக்குப் பயந்து அவளை மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தது இரண்டாவது தப்பு; அந்த மாமா வயதுக்கு வந்த பிள்ளையோடு வயதுக்கு வந்த பெண்ணைப் பழகவிட்டது மூன்றாவது தப்பு; அப்படிப் பழகிய பிறகு அதை இன்னொருவன் தலையில் கட்டப் பார்த்தது நான்காவது தப்பு: அந்த இன்னொருவன் விழித்துக் கொண்ட பிறகு அதை அதன் மாமாவின் பிள்ளைக்கே கட்டி வைத்தது சரிதான் என்றாலும், கட்டி வைத்தபின் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தது ஐந்தாவது தப்பு. இத்தனை தப்பு பண்ண பெரியவர்கள் அந்தக் குழந்தை பண்ண ஒரே ஒரு தப்புக்காக அதை வீட்டை விட்டே விரட்டிவிடலாமா? நீங்களே சொல்லுங்கள்!
தாயற்ற அது நடுத் தெருவில் நின்று அழுதபோது என் மனசு கேட்கவில்லை; ‘நான் அப்போதே சொன்னேனே, கேட்டாயா குழந்தை?, என்றேன். ‘என்ன சொன்னாய்?’ என்கிறீர்களா? சொல்கிறேன்; ‘கன்னிப் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை; உன்னை வளைய வரும் பயலுக்கே உன்னைக் கலியாணம் பண்ணி வைத்துவிடுவார்கள். நீயோ கலியாணமான பெண்; இப்படியெல்லாம் செய்யக் கூடாது, அம்மா!’ என்று சொன்னேன். அது கேட்கவில்லை; ‘தஸ்,புஸ்’ என்று தான் படித்த கோணல் பாஷையில் ஏதோ சொல்லி, என் வாயை அப்போது அடக்கிவிட்டது.
அதைத் தேடி வந்த பையனும் அப்படி ஒன்றும் மோசமாயில்லை; பார்ப்பதற்கு லட்சணமாய்த்தான் இருந்தான். அவனும் கொஞ்சம் கோணல் பாஷை படித்தவன் போலிருக்கிறது. அந்தப் பாஷையிலேயே அவனும் அதனுடன் பேசுவான். எனக்கு ஒன்றும் புரியாது. இதெல்லாம் எப்பொழுது நடக்கும் என்கிறீர்கள்? இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு சித்தியும் அப்பாவும் சிரித்துப் பேசிக் கொண்டே மாடியறைக்குப் படுக்கப் போய்விட்ட பிறகு நடக்கும். அப்படித்தான் படுக்கப் போகிறார்களே, அந்தக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போய் அவர்கள் அங்கே படுக்க வைத்துக் கொள்ளக் கூடாதா? மாட்டார்கள்; அதைக் கீழேயே விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். அப்போதுதான் அந்தப் பயல் திருடனைப் போல் பதுங்கிப் பதுங்கி வருவான்; இருட்டில் திருட்டுப் பாலைக் குடித்து விட்டுப் போகும் பூனையைப்போல் தன் காரியத்தை முடித்துக் கொண்டு போய்விடுவான்.
இதை நான் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இப்படித் தினமும் நடக்கும் என்கிறீர்களா? நடக்காது. எப்பொழுதோ ஒரு நாள்தான் நடக்கும். இந்தக் கூத்து நடப்பதற்கு முன்னாலேயே இதை நான் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் எனக்குப் பலகாரம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்; சில சமயம் பணமும் கொடுப்பார்கள். ‘இதெல்லாம் எதற்கு, வேண்டாம்!’ என்பேன் நான். கேட்க மாட்டார்கள்; கட்டாயப்படுத்திக் கொடுப்பார்கள். வாங்காவிட்டால் ‘சித்திக்கும், அப்பாவுக்கும் பயப்படுவது போதாதென்று இந்தக் குழந்தைகள் நமக்குமல்லவா பயப்பட வேண்டியிருக்கும்?’ என்று நான் அவற்றை வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்து விடுவேன்!
இதெல்லாம் பழைய கதை. புதிய கதை என்ன வென்றால், நடுத் தெருவில் நின்று அழுத அந்தக் குழந்தையை நான் என்னுடைய வீட்டுக்கு அழைத்தேன். அது வரவில்லை; அதற்குப் பதிலாக ‘எனக்கு ஒரு வீடு பார்க்கிறாயா?’ என்றது அது. ‘ஏன்.’ என்றேன் நான்; ‘நாங்கள் இருவரும் குடியிருக்கத்தான்!’ என்று. அது சொல்லிற்று. ‘பார்ப்பவர்கள் ஏதாவது சொல்ல மாட்டார்களா?’ என்றேன்; ‘சொன்னால் சொல்லட்டும்!’ என்று அது எதற்கும் துணிந்து நின்றது. ‘இளங்கன்று பயமறியாது’ என்று நினைத்த நான், ‘வீடு கிடைக்கும் வரை எங்கே இருப்பாய்?’ என்றேன். ‘ஹாஸ்டலில் என் சிநேகிதி ஒருத்தி இருக்கிறாள்; அவளுடன் இருப்பேன்!’ என்றது. ‘சரி, அந்த இடத்தைக் காட்டு; வீடு கிடைத்தால் வந்து சொல்கிறேன்!’ என்றேன் நான்; ‘காட்டுகிறேன்; ஆனால் நீ அந்த இடத்தை வேறு யாருக்கும் காட்டிக் கொடுத்து விடக் கூடாது!’ என்றது. அது. ‘அப்படிச் செய்வதாயிருந்தால்தான் எப்பொழுதோ செய்திருப்பேனே!’ என்றேன் நான் சிரித்துக்கொண்டே. அதுவும் அழுவதை மறந்து சிரித்துக்கொண்டே என்னை அழைத்துக்கொண்டு போய் அந்த இடத்தைக் காட்டிற்று.
அதைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, ‘ஆமாம், அந்தப் பயல் உன்னுடன் குடித்தனம் செய்ய ஒப்புக் கொண்டானா?’ என்றேன்; ‘ஒப்புக் கொண்டார்!’ என்றது அது. ‘என்னவோ? பார்க்கவே பார்த்தாய், அந்தரத்தில் விடாதா ஆளாகப் பார்த்தாயே? அதைச் சொல்!’ என்று நான் அன்றே அந்த வீட்டு வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டுக் குழந்தைக்கு ஏற்ற வீடாகத் தேடி அலைந்தேன்.
கடைசியாக மாம்பலத்தில் ஒரு வீடு கிடைத்தது. குழந்தையை அழைத்துக்கொண்டு போய் அந்த வீட்டைக் காட்டினேன்; பிடித்திருந்தது. அதற்கு மேல் அந்தப் பயலும் ஒரு நாள் வந்து வீட்டைப் பார்த்தான்; அவனுக்கும் பிடித்திருந்தது. இருவரும் ஒரு நல்ல நாள் பார்த்து அதில் குடியேறினார்கள். இதுவரை நல்ல முறையில்தான் குடித்தனமும் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் இருவருடைய முகத்திலும் எப்பொழுது பார்த்தாலும் ஏதோ ஒரு வேதனை குடி கொண்டிருக்கிறது. அதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!’ என்று அவள் தன் ‘வேதனைக் கதை’யைச் சொல்லி முடிக்க, ‘ஏறு, வண்டியில்!’ என்று விக்கிரமாதித்தர் அவளுக்குத் தம் காரின் கதவைத் திறந்து விடுவாராயினர்.
‘எதற்கு, சுவாமி?’ என்று அவள் பீதியுடன் கேட்க, ‘மாம்பலம் போக!’ என்று அவர் சாவதானமாகச் சொல்ல, ‘ஐயோ, வேண்டாம் சுவாமி! அந்தக் குழந்தைகளை ஒன்றும் செய்ய வேண்டாம், சுவாமி!’ என்று அவள் அலற, ‘ஒன்றும் செய்ய மாட்டேன்; நீ ஏறு, வண்டியில்!’ என்று விக்கிரமாதித்தர் அவளை வண்டியில் ஏற்றிவிட்டு, அவளுடன் மங்களத்தையும் மணவாளனையும் ஏறச் சொல்லிவிட்டு, தாமும் சிட்டியுடன் ஏறி, ‘மாம்பலத்துக்குப் போ!’ என்று பாதாளசாமியிடம் சொல்வாராயினர்.
வண்டி மாம்பலத்தை அடைந்ததும், ‘எங்கே இருக்கிறது அவர்களுடைய வீடு?’ என்று விக்கிரமாதித்தர் வேலைக் காரியைக் கேட்க, அவள் அவர்களுடைய வீட்டைக் காட்ட, பாதாளசாமி வண்டியைக் கொண்டு போய் அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்துவானாயினன்.
‘இறங்குங்கள்!’ என்றார் விக்கிரமாதித்தர்; எல்லோரும் இறங்கினார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு அவர் உள்ளே செல்ல, அங்கே கோகிலத்தோடு இருந்த கோபாலன் அவர்களைப் பார்த்ததும் ‘திருதிரு’ வென்று விழிக்க, ‘இவன்தானே அடிக்கடி காணாமற் போகும் உங்கள் கோபாலன்?’ என்று விக்கிரமாதித்தர் மணவாளன் பக்கம் திரும்பிக் கேட்க, ‘இவனேதான்!’ என்று அவர் வாயெல்லாம் பல்லாய்ச் சொல்ல, ‘கலியாணத்துக்குப் பிறகு நீங்கள் வைக்காத தனிக் குடித்தனத்தை இவர்களே வைத்துக் கொண்டு விட்டார்கள்; அவ்வளவுதான் விஷயம். குடித்தனம் என்றால் சும்மா நடக்குமா? செலவுக்குப் பணம் வேண்டாமா? அதற்குத்தான் இவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருக்கிறான்! இவன் இருக்குமிடத்தை அவ்வப்போது உங்களிடம் வந்து சொல்லி, இவனுக்காக நீங்கள் கொடுக்கும் ரூபாய் ஐந்நூறை வாங்கிக்கொண்டு போய் இவனிடம் கொடுப்பவர்கள் வேறு யாருமில்லை; இவனுடைய நண்பர்கள்தான்!’ என்ற விக்கிரமாதித்தர், ‘ஏன் தம்பி, அப்படித்தானே?’ என்று கோபாலனைக் கேட்க, ‘ஆமாம்!’ என்று அவன் தலையைக் குனிந்துகொண்டே சொல்ல, ‘கோகிலத்தின் கலியாணத்திபோது ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே, அதை எழுதியவன்கூட நீதானே?’ என்று அவர் பின்னும் கேட்க, ‘நானேதான்!’ என்று அவன் பின்னும் சொல்ல, ‘இப்போது எல்லா மர்மங்களும் விளங்கி விட்டன அல்லவா? இனி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்; ஆனால் ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். அதாகப்பட்டது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி இவர்களைப் பிரித்து வைக்காதீர்கள். படிப்பவர்கள் எந்த நிலையிலும் படிப்பார்கள்; படிக்காதவர்கள் என்ன செய்தாலும் படிக்க மாட்டார்கள்!’ என்று சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் நடக்க, சிட்டி அவரைத் தொடருவாராயினர்.”
மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கோமளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…..
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.