மாலுவும், வம்சாவளி(லி)யும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 22,126 
 
 

“மாலுக்குட்டி இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ அவா கிட்ட சமர்த்தா கத்துண்டு நன்னா பாடி பெரிய ஆளா வரணும் தெரியறதா.”, மங்களம் தன் பெண் 6 வயது மாலதிக்கு டிரஸ் செய்து கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரலை கூறினாள்.

“அம்மா, எனக்கு இன்னைக்கு ஆர்ட் கிளாஸ் இருக்கேம்மா.”, மாலு தனக்கு பிடித்த கிளாஸ்சை எங்கே கான்செல் செய்து விடுவார்களோ என்று அழுவதற்கு தயாராக உதட்டை பிதுக்கியபடி சொல்ல ஆரம்பிக்க

“ஆர்ட் கிளாஸ் நாளைக்கு மாத்தியாச்சுடா கண்ணா. இன்னைக்கு பாட்டு, நாளைக்கு ஆர்ட் கிளாஸ். ஓகேவா”

“சரிம்மா, டீச்சர் எப்போ வருவா”

“ஆறு மணிக்கு வரேன்னு சொல்லி இருக்கா. நீ அதுக்குள்ள உன்னோட ஸ்கூல் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுடுடா கண்ணா. நான் உனக்கு பூஸ்ட் கலக்கி கொண்டு வரேன்”

“அம்மா தமிழ் மிஸ் நாளைக்கு டெஸ்ட் சொல்லி இருக்கா. நான் அதுக்கு ப்ராக்டிஸ் பண்றேன்”

“சரிம்மா நீ பண்ணிண்டே இரு. நான் பூஸ்ட் கலந்துட்டு, உனக்கு வந்து ஹெல்ப் பண்றேன்”,
சமயலறையில் ஒரு கண்ணும், ஹாலில் மாலதி எழுதும் ஹோம் வொர்க்கில் ஒரு கண்ணுமாக மங்களம் டான்ஸ் ஆடி கொண்டிருக்கும்பொழுது பாட்டு டீச்சர் உள்ளே நுழைத்தார்.

“வாங்கோ வாங்கோ. மாலு கண்ணா, இவாதான் உன்னோட பாட்டு டீச்சர். நமஸ்காரம் பண்ணிக்கோ”. பரபரப்புடன் வரவேற்றபடியே வந்தாள் மங்களம்.

“ஹலோ மாலதி. நான்தான் உனக்கு இனிமே பாட்டு சொல்லி தரப்போறேன் . சரியா. மாமி நீங்க வேலைய பாருங்கோ. நான் கிளாஸ் முடிஞ்சு உங்களை கூப்பிடறேன். நீங்க பக்கத்துலையே இருந்தா குழந்தை என்கிட்ட சரளமா இருக்க மாட்டா.”, என்று டீச்சர் சொல்ல மங்களம் அரை மனதுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

“மாலதி இன்னைக்கு நாம மொதல்ல சுருதி சேர்க்க கத்துண்டு சின்னதா ஒரு ஸ்லோகம் கத்துக்கலாம் சரியா”, என்று ஆரம்பிக்க, நம்ம மாலதி மிக சந்தோஷத்துடன், “ஹை ஜாலி. என்னோட ஸ்ருதியும் கத்துக்க போறாளா மிஸ். அம்மா சொல்லவே இல்லையே”, என்று மூணாவது வீட்டு ஸ்ருதியை நினைத்து கொண்டு சொல்ல, டீச்சர் ரொம்ப கஷ்டம் என்று நினைத்து கொண்டு, ஆறு வயது குழந்தைக்கு ஸ்ருதியை பற்றி விளக்க ஆரம்பித்தாள்.

சரளா மாமி சரளி வரிசையுடன் போராடி மாலுவிற்கு சொல்லி தர try பண்ண அது அவளிற்கு வருவேனா என்று ஆட்டம் காட்டியது. மாமியும் ஒரு வருடம் போராடி மங்களத்திடம் பாட்டு கிளாஸ்சிற்கு மங்களம் பாடி விடை பெற்றார்.

அப்படி இப்படி ஒரு ஆறு வருஷம் மாலு, மங்களத்தின் பாட்டு கத்துக்கோ தொல்லையிலிருந்து தப்பித்தாள். அதற்கும் வந்தது ஆப்பு டிவி வடிவில். அந்த கால கட்டத்தில்தான் பொடிசுகளும், பெரிசுகளும் டிவி போட்டிகளில் போடு போடென்று போட்டு கொண்டிருந்த நேரம். வணக்கம், வந்தனம், சுஸ்ஸ்வாகதம் welcome to v-guard சப்த ஸ்வரங்கள் என்று ரமணன் வந்தவுடனே way-out பார்த்து வெளியில் ஓடி விடுவாள் மாலு. அந்த ப்ரோக்ராம்மிற்க்கு பயந்தே சனி நீராடுவை, ஞாயிறு நீராட்டலா மாத்திண்டு ப்ரோக்ராம் முடியும் வரை பாத்ரூமே சரணம் என்று பழி கிடந்தாள். இதையெல்லாம் பார்த்து பின் வாங்கினால் அவள் மங்களம் இல்லையே, ஒரு ஒரு வாரமும் ப்ரோக்ராம் முடிந்து பரிசு வாங்கும் குழந்தை, இல்லை குமரியை மாலுவாக கற்பனை செய்து அங்கு இங்கு அலைந்து ஒரு பாட்டு டீச்சரை பிடித்தாள். “இங்க பாருடி, நீ என்ன சொன்னாலும் சரி. நீ பாட்டு கத்துண்டுதான் ஆகணும். TVல பாரு, இத்துனூண்டு வாண்டெல்லாம் என்னமா பாடறது. பொண்ணா பொறந்துட்டு இப்படி பாட்டு கத்துக்க மாட்டேன்னு சொன்னா எப்படி. நான் கெஞ்சி கூத்தாடி இந்த டீச்சரை பிடிச்சுருக்கேன். ஒழுங்கா கத்துக்கற வழியை பாரு.”, மங்களம், மங்களம் பாடிய பாட்டை மறுபடியும் தூசி தட்ட நினைத்து மாலுவிடம் போராடிக் கொண்டிருந்தாள்

“அம்மா, நீ சொல்றது சரிம்மா, ஆனா எனக்கு வரலையே. நான் என்ன பண்ண. பாட்டு டீச்சர் ஸ, ப, ஸ பாட சொன்னா எனக்கு வரவே மாட்டேங்கறது. நான் ஆர்ட் கிளாஸ்சே இன்னொரு நாள் கூடுதலா போறேனே”, இது வேண்டாம், அது என்று பேரம் பேச ஆரம்பித்தாள் மாலதி.

“என்னடி வராது. பட்டாபி பாகவதர் வம்சாவளில வந்துட்டு பாட்டு வராதுன்னு சொல்றே. அவர் அந்த காலத்துல MKTக்கு தம்பூரா வாசிச்சிருக்கார் தெரியுமா”

மனதிற்குள் ஆமா பெரிய சிவாஜி வம்சாவளி, நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமேன்ன உடனே அப்படியே எல்லாம் ஸ்டாப் ஆயிடும் என்று பொருமியபடியே (எல்லாம் ஞாயிறு தூர் தர்ஷனில் திருவிளையாடல் பார்த்த effect, சிவ பெருமானையே சிவாஜி மூலமாதான் சொல்ல வேண்டியதா இருக்கு இந்த கால குழந்தைகளுக்கு) வெளியில், “எதும்மா இந்த பூசணிக்கா தலைல குச்சிய நட்ட மாதிரியே இருக்குமே அதுவா. அதெல்லாம் சரிதான், ஏம்மா அந்த வம்சாவளில எனக்கு முன்னாடியே வந்த நீ பாடறியா என்ன, என்ன மட்டும் சொல்ற”, ரொம்ப இன்டெலிஜென்ட்டாக கேட்பதாக நினைத்து மாலா கேட்க,
“அவர் உங்கப்பவாத்து சைடுடி”, என்று குதர்க்கமாக ஒரு வாதத்தை வைத்தார் மங்களம்.

“ஏம்மா நீ சாதரணமா அப்பவாத்துல யாருக்குமே எதையுமே, ஏதோ ஒரு வார்த்தை சொல்லுவியே, ஆங், ஞாபகம் வந்துடுத்து, விதரணயா, பண்ண தெரியாதுன்னு சொல்லுவியே, இப்போ மட்டும் எப்படி இப்படி மாத்தி சொல்ற”, அம்மாவை மடக்கிவிட்ட திருப்த்தியில் கேள்வி கேட்டாள், மாலதி.

நம்ம மங்களம் எல்லா அம்மாஸ் மாதிரி, “சொன்ன பேச்சை கேக்காதே, எதிர்த்து மட்டும் கரெக்ட்டா கேள்வி கேளு”, என்று பதில் சொல்ல முடியாத கோவத்தில் காய.

“சரிம்மா நீ கத்தாதே. நான் கத்துக்கறேன்”, என்று வெளியில் சொல்லி மனதுக்குள், சரளா மிஸ் சரளி வரிசையோட நின்னுட்டா. இவா எது வரைக்கும் நம்மகிட்ட தாக்கு பிடிக்கப் போறாளோ என்று அந்த பாட்டு டீச்சருக்காக வருத்தப்பட ஆரம்பித்தாள் மாலதி.

என்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல, மாலுவிற்கு கத்துக்கொடுக்க வர டீச்சர்ஸ் எல்லாம் அவா பேருக்கேத்தா மாதிரியே நின்னுடரா. சரளா மிஸ் சரளி வரிசையோட நின்னா, அடுத்து வந்த ஜானகி மிஸ் ஜண்டை வரிசையோட நின்னுட்டா.

மறுபடியும் பாட்டிலிருந்து எஸ்கேப் ஆகி சந்தோஷமாக தானுண்டு தன் படிப்பு, பெயிண்ட்டிங் உண்டு என்று காலத்தை ஓட்டினாள் மாலதி. இந்த முறை ஆப்பு கமலா மாமி வடிவில் வந்தது. அவர் பெண்ணை பார்க்க வந்த பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு பாட தெரியாததை ஒரு குறையாக சொன்னதை மங்களத்திடம் வந்து குறை சொல்லி ஒரு பாட்டம் அழ, மங்களம் தன் பெண் மாலுவும் கல்யாணத்திற்கு திரண்டு நிற்கிறாளே, நாளை அவளுக்கும் இதே கதியானால் என்ன செய்ய என்று பயந்து, டீச்சர் ராசி இல்லாததால் இந்த முறை ஊரெல்லாம் தேடி ஒரு மாஸ்டரை பிடித்தாள்.

“மாலு கண்ணு, இன்னைக்கு வர மாஸ்டர்கிட்ட எப்படியாவது ரெண்டு பாட்டு மட்டும் கத்துக்கோடி. பொண்ணு பார்க்கற அன்னைக்கு ஒண்ணு நலங்குக்கு ஒண்ணு போறும். உன்னை அதுக்கு மேல கம்ப்பெல் பண்ண மாட்டேன், இன்னைக்கு வர்றவர் பெரிய வித்வானாம். எல்லாராத்து நலங்குலயும் இவர்தான் பாடுவாராம்”, என்று கெஞ்சிக்கொண்டே மாலா பின்னாடியே அலைந்தார் மங்களம்.

“அம்மா, நீ கூடத்தான் யாராத்துலயானும் ஆரத்தி கரைச்சா நம்மாத்துலேர்ந்தே பாடிண்டு போவே, அதுக்குன்னு நீ பெரிய வித்வாம்சினியா. ஏம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கற. எனக்கு பாட்டு வரலம்மா”, 8 வயதில் பாடிய பாட்டையே பாடினாள் மாலா.

“ஏண்டி இந்த வரலை, வரலை பாட்டை நிறுத்திட்டு அழகா வரலக்ஷ்மி ராவே மா இன்ட்டிக்கி, பாடலாம் இல்ல”, என்று ஆதங்கத்துடன் மங்களம் கூற, நான் பாடினேன்னா , வர்ற லக்ஷ்மி கூட ஓடி போய்டுவா, என்று மாலா முணுமுணுக்க. நலங்கு வித்வானும் வந்து சேர்ந்து மாலதிக்கு பாட்டை ஆரம்பித்தார்.

அப்படி இப்படி ஆறு மாதம் ஓட வித்வானும் தாக்கு பிடிக்க முடியாமல் எங்கே இதற்கு மேல் மாலுவிற்கு சொல்லி கொடுத்தால் தனக்கு மறந்து விடுமோ என்று ஓடி விட்டார்.
மங்களத்தின், நல்ல காலமோ, இல்லை பார்க்க வந்த மாப்பிள்ளையின் நல்ல காலமோ மாலுவை பாட சொல்லாமலேயே பெண்பார்க்கும் படலம் நடந்து, கல்யாணமும் நிச்சயமாகிவிட்டது.

கல்யாணத்திற்குள் மாப்பிள்ளைக்கு மாலாவின் பாடும் திறமையை அவள் குடும்பமே சேர்ந்து கதா காலட்ஷேபமாக சொன்னதால் உஷாராக அவரே நலங்கிற்கு பாடி விட்டார். அன்றைக்கு ஒரு கல்யாண மண்டபமே கல் வீச்சிலிருந்தும், கழுதைகள் வரவிலிருந்தும் தப்பித்தது.

ஏழு வருடங்களுக்கு பிறகு

“வைஷ்ஷு கண்ணா, இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ அவா கிட்ட சமர்த்தா கத்துண்டு நன்னா பாடி பெரிய ஆளா வரணும் தெரியறதா.”,

“No mom, I can’t attend pattu class today, I got Taekwondo class”

“Taekwondo கிளாஸ் நாளைக்கு மாத்தியாச்சுடா கண்ணா. இன்னைக்கு பாட்டு, நாளைக்கு Taekwondo கிளாஸ். ஓகேவா”

என்ன பார்க்கறீங்க, இது யாருன்னுதானே, எல்லாம் நம்ம மாலதிதான். யான் பெற்ற துன்பம் பெருக என் பெண்ணும் அப்படினெல்லாம் இல்லைங்க. என்ன இருந்தாலும் கிச்சாமி பாகவதர் வம்சாவளில வந்துட்டு பாடாம இருந்தா எப்படின்னுதான். அவர் யாருன்னு கேக்கறீங்களா. நம்ம மாலுவின் மணவாளனோட மூணு விட்ட கொள்ளு தாத்தாவோட நாலாவது தம்பி. இவரும் நம்ம MKT-க்கு தம்பூரா வாசிச்சு இருக்கார். இப்படி ஒரு பக்கம் பட்டாபி பாகவதர், இன்னொரு பக்கம் கிச்சாமி பாகவதர் வம்சாவளில வந்த நம்ம வைஷ்ஷுக்குட்டி எப்படி பாடாம போவா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *