பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன மந்திரவாதி கதை
மிஸ்டர் விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின்மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இரண்டாவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘மாரப்பன், மாரப்பன்’ என்று ஒரு மந்திரவாதி இந்த மாநிலத்திலே உண்டு. அவன் ஊர் ஊராகச் சென்று, தனக்குத் தெரிந்த வித்தைகள் பலவற்றைக் காட்டிப் பிழைப்பதுண்டு. அப்படி ஒரு நாள் ஒர் ஊரில் அவன் வித்தை காட்டிக் கொண்டிருக்குங் காலையில், மூன்று வாலிபர்கள் சேர்ந்தாற் போல் அதைப் பார்க்க வந்தார்கள். மந்திரவாதி வழக்கம் போல் மணலைக் கயிறாக்கிக் காட்டி, கயிற்றைப் பாம் பாக்கிக் காட்டி, மாங்கொட்டையை மரமாக்கிக் காட்டி முடித்த பிறகு, ‘இதோ, இந்தப் பெட்டியிலிருந்து ஒர் அழகான பெண் வரப்போகிறாள், பாருங்கள்! இதோ, இந்தப் பெட்டியிலிருந்து ஒர் அழகான பெண் வரப் போகிறாள் பாருங்கள்!’ என்று சொல்லிக் கொண்டே சென்று, தன் மனைவி மகுடியின் உதவியுடன் ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டத்தினருக்கு நடுவே வைத்தான். காலியாயிருந்த அந்தப் பெட்டியை அவன் எல்லோருக்கும் திறந்து காட்டி, ‘நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; சந்தேகமாக இருந்தால் பெட்டிக்கு அருகேகூட வந்து பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்று சொல்லிப் பெட்டியை ‘டப்’ பென்று மூடி, ‘சூ! மந்திரக்காளி, மாயக்காளி! ஓடி வாடி, ஜக்கம்மா!’ என்று தன் கையிலிருந்த ஒரு சிறு கோலால் அந்தப் பெட்டியை ஒரு தட்டுத் தட்ட, அதைத் திறந்து கொண்டு அழகான பெண் ஒருத்தி ‘ஜிலுஜிலு’ வென்று வெளியே வருவாளாயினள்.
வேடிக்கை பார்க்க வந்திருந்த வாலிபர்கள் மூவரும் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி, ‘உண்மையிலேயே இவள் பெண்ணாயிருப்பாளோ? அல்லது, மாயமாய் வந்ததுபோல் மாயமாய் மறைந்துவிடுவாளோ?’ என்று அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண்ணாகப்பட்டவள் கூட்டத்தைச் சுற்றிக் கையேந்தி வருவாளாயினள்.
ஏந்திய கையில் எல்லோரும் ஐந்து பைசா, பத்து பைசா என்று போட, வாலிபர்கள் மூவரும் முறையே ஒரு ரூபா, இரண்டு ரூபா, மூன்று ரூபா என்று போட்டி போட்டுக் கொண்டு போட்டுவிட்டு, அவளுடைய நன்றியை எதிர்பார்த்து நிற்பாராயினர். அவளோ தலைக்கு ஒரு புன்னகையாகத் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு, தன்னுடைய கையில் சேர்ந்த காசை மந்திரவாதியிடம் கொடுத்துவிட்டு நிற்பாளாயினள்.
அதுவரை அவள் மாயமாய் மறையாமலிருந்ததைக் கண்ட வாலிபர்கள் மூவரும், அவள் அந்த மாரப்பனின் பெண்ணாய்த்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்து, அவர்கள் தங்கள் கடையைக் கட்டும் வரை அங்கேயே காத்திருப்பாராயினர்.
காசை எண்ணிப் பைக்குள் போட்டுக் கொண்டதும் கடையைக் கட்டித் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன் பரிவாரங்களுடன் கூடாரத்தை நோக்கி அந்த மந்திரவாதி நடக்க, அவனுடைய பரிவாரத்தில் அவன், அவன் மனைவி மகுடி, பெட்டிக்குள்ளிருந்து வந்த அந்தப் பெண்-ஆக மூவரைத் தவிர வேறொரு வாலிபனும் இருக்கக் கண்டு, ‘அவன் யாராயிருக்கும்? அவளுடைய அண்ணனாயிருப்பானோ? அல்லது கணவனாயிருப்பானோ? அப்படியிருந்தால் அந்தப் பெண் தங்களுக்குக் கிடைக்காமற் போய்விடுவாளோ? அவள் கிடைக்காமற் போய்விட்டால் தாங்கள் உயிர் வாழ்வது எங்ஙனம்?’ என்று பலவாறாக எண்ணிக் குழம்பிக் கொண்டே, வாலிபர்கள் மூவரும் அவர்களைத் தொடருவாராயினர்.
வழியில் ஏதோ பேச்சோடு பேச்சாக, ‘இந்த வருசமாவது தங்கச்சிக்கு எப்படியாவது கலியாணத்தைச் செஞ்சு முடிச்சிடணும்’ என்று அவர்களோடு சென்ற அந்த வாலிபன் சொல்ல, ‘தங்கச்சியா? நல்ல வேளை, பிழைத்தோம்!’ என்று வாலிபர்கள் மூவரும் தங்கள் மார்பைத் தாங்களே தடவி விட்டுக் கொள்ள, ‘அவளுக்கென்று ஒருவன் எங்கே பிறந்திருக்கிறானோ?’ என்று மாரப்பன் ஏங்க, ‘இதோ, ஒருவருக்கு மூவராகப் பிறந்திருக்கிறோம்’ என்பதுபோல் மையல் கொண்ட வாலிபர்கள் மூவரும் பையப் பைய அவர்களை நெருங்குவாராயினர்.
‘இருப்பது ஒருத்தி; அவளை மூன்று பேர் எப்படிக் கலியாணம் செய்துகொள்ள முடியும்? என்றான் அவர்களில் ஒருவன்.
‘அதென்னவோ எனக்குத் தெரியாது; அவளை நான்தான் கலியாணம் செய்து கொள்வேன்!’ என்றான் இன்னொருவன்.
‘நீங்கள் இருவரும் எப்படியாவது போங்கள்; அவள் எனக்குத்தான்; எனக்கே எனக்குத்தான் என்றான் மற்றொருவன்.
இதனால் ஏற்பட்ட சர்ச்சையில் நண்பர்களாயிருந்த மூவரும் விரோதிகளாகி, ஒருவரை விட்டு ஒருவர் பிரிய, அவர்களில் ஒருவன் மற்ற இருவருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணின் தந்தையைச் சந்தித்து, ‘உங்கள் பெண்ணை நான் மணந்துகொள்ள விரும்புகிறேன்!’ என்று சொல்ல, ‘சரி’ என்று சொல்லிவிட்டான் அவன்.
அதே மாதிரி இன்னொருவன் அந்தப் பெண்ணின் தாயைச் சந்தித்து, ‘உங்கள் பெண்ணை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க, ‘சரி’ என்று சொல்லிவிட்டாள் அவள்.
மற்ற இருவரையும் பின்பற்றி மூன்றாமவனும் அந்தப் பெண்ணின் அண்ணனைச் சந்தித்து, ‘உங்கள் தங்கையை நான் மணந்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்ல, ‘சரி’ என்று சொல்லிவிட்டான் அவன்.
பெண்ணுக்குரியவர் மூவர்; அந்தப் பெண்ணை மணந்து கொள்ள விரும்பியவர் மூவர். அவர்களும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டனர்; இவர்களும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொண்டு விட்டனர்.
விஷயம் அம்பலத்துக்கு வந்தபோது, ‘யாருக்கு யார் அந்தப் பெண்ணைக் கொடுப்பது? யார் அவளுக்கு மாலையிடுவது?’ என்று ஒருவருக்கும் விளங்கவில்லை!
நீண்ட நேரம் தாடியை உருவி யோசிப்பதற்குப் பதிலாகத் தலையைத் தடவி யோசித்த பிறகு மந்திரவாதி சொன்னான்:
‘நாளை காலை மூவரும் கூடாரத்துக்கு வாருங்கள்; என் பெண்ணை ‘ஜக்கம்மா!’ என்று அழைத்துப் பேசுங்கள்; உங்களில் யாரை அவள் மணந்து கொள்ள விரும்புகிறாளோ, அவருக்கு நான் அவளைக் கொடுத்து விடுகிறேன். என்ன, சரிதானா?’
‘சரி’ என்று மூவரும் போய், மறுநாள் காலை அவன் கூடாரத்துக்கு வந்தனர்.
இருவர் வெளியே நிற்க, ஒருவன் உள்ளே போய், ‘ஜக்கம்மா!’ என்றான்; அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
மீண்டும் அவன், ‘ஜக்கம்மா!’ என்றான் சற்று உரக்க.
அப்பொழுதும் அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
மூன்றாம் முறையாக, ‘ஒ, ஜக்கம்மா!’ என்று அவன் தொண்டை கிழியக் கத்த, அப்பொழுதும் அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்ல, ‘சரியான செவிடு போலிருக்கிறது; இதைக் கட்டிக் கொண்டு யாரால் மாரடிக்க முடியும்?’ என்று அவன் எடுத்தான் ஒட்டம்!
அவனுக்கு அடுத்தாற்போல் இரண்டாமவன் வந்து, ‘ஜக்கம்மா!’ என்றான்.
அவள் திரும்பினாள்; ‘என்னை மணக்க உனக்குச் சம்மதமா?’ என்றான் அவன்.
‘பேபே பே பேபே!’ என்றாள் அவள்!
‘இதென்னடா இழவு! இவள் ஊமையாயிருக்கிறாளே? என்னதான் அழகாயிருந்தாலும் இவளைக் கலியாணம் பண்ணிக்கொண்டு என்ன செய்வது?’ என்று அவன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பிடித்தான் ஒட்டம்!
மூன்றாமவன் வந்து, ‘ஜக்கம்மா!’ என்றான் மெல்ல.
அவள் புன்னகையுடன் திரும்பினாள்.
‘என்னை மணக்க உனக்குச் சம்மதமா?’ என்றான் அவன்; ‘சம்மதம்!’ என்றாள் அவள்.
‘அப்படியானால் நீ செவிடும் இல்லை, ஊமையும் இல்லையா?’ என்று அவன் கேட்க, ‘இல்லை, நீங்கள் மூவரும் என்மேல் கொண்ட காதல் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை அறிந்துகொள்ளவே நான் அவ்வாறு நடித்தேன்!’ என்று அவள் சொல்ல, ‘சரியான சோதனை! அந்தச் சோதனையில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்!’ என்று அவன் வியக்க, அவர்கள் இருவருக்கும் அக்கணமே மணம் முடித்து வைத்துவிட்டான் மந்திரவாதியான அந்தத் தந்திரவாதி.’
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இவர்களில் யார் புத்திசாலி?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘சந்தேக மென்ன, மந்திரவாதிதான்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மறுபடியும் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க… காண்க…. காண்க…
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.