நினைவுகளில் என்றும் அவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 4,869 
 

மழை வரும் போல் இருந்தது. கரு மேகங்கள் வானத்தில் நிறைந்து காணப்பட்ட்து.

வெளியே கிளம்பலாமா? என நினைத்துக்கொண்ட தேவசகாயம், வானத்தை பார்த்து சிறிது தயங்கினார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே குரல் கொடுத்து லட்சுமி, லட்சுமி, என்று அழைத்தார்.

உள்ளறையிலிருந்து வெளியே வந்த லட்சுமி மழை வர்ற மாதிரி இருக்கு, குடை எடுத்துட்டு வாயேன். இந்த மழையில வெளியில போகணுமா? கேட்ட மனைவியை உற்று பார்த்து, நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா நானே போன் பண்ணி வர்றேன்னு சொல்லிட்டேன்.சொன்னவர் மனைவி கொண்டு வந்து தந்த குடையை கையில் வைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.

பஸ் நிலையத்துக்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும், அங்கிருந்து கோயமுத்தூர் பஸ் ஏறி உட்கார்ந்தால் போதும், போய் சேர ஒரு மணி நேரம் ஆகிவிடும். மழை வந்தாலும் நனைவதற்கு வாய்ப்பில்லை. அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம், மனதில் நினைத்தவாறூ தன் நடையை துரிதப்படுத்தினார்.

பேருந்தில் பழைய பாடல்கள் ஒலிபரப்பினர், அதை கேட்டுக்கொண்டே வந்த தேவசகாயத்தின் நினைவுகள், தன் தந்தைக்கும் இந்த பாட்டு மிகவும் பிடிக்கும், அடிக்கடி வீட்டில் உச்சகுரலில் பாடிக்கொண்டிருப்பார். அம்மாவும் அதற்கு சளைத்தவளல்ல, அவளுக்கும் திரைப்பட பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவளும் எதிர்ப்பாட்டை பாட ஆரம்பிப்பாள். சண்டை வந்து விடும், நான் பாடும் பாடல்களை நீ பாடாதே என்று இவர் வீம்பு பிடிப்பார். அம்மா அதற்கு சளைக்க மாட்டாள்.இருவருக்குள் யார் முதலில் பாட ஆரம்பித்தது என்று வாக்கு வாதம் வளர்ந்து இருவரும் பாடுவதை நிறுத்தி விட்டு அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள்.

அவரிடம் இருந்து இப்படி ஒரு வேண்டுகோள் வரும் என்று இவர் எதிர் பார்க்கவில்லை.அவருடைய வேண்டுகோள் வைத்தபோது இவருக்கு இருபத்தி ஐந்தோ அல்லது ஆறோ வயது இருக்கும்.

இவர் பனிரெண்டு வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். இவருக்கு பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் ஆசை.

ஆனால் அப்பா, முதலில் வேலைக்கு உத்தரவாதமுள்ள கல்வியை கற்றுக்கொள், பிறகு உன் பட்டப்படிப்பை பார்க்கலாம், என்று சொல்லி ஆசிரியப்பயிற்சி பள்ளியிலேயே சேர்த்து விட்டார். எப்படியோ படித்து முடித்தவர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டு மேற் கொண்டு பட்டப்படிப்பில் சேர்ந்து விட்டார்.

அப்பாவின் கணிப்பு தப்பவில்லை, பட்டப்படிப்பு முடித்து வெளியே வந்த ஆறு மாத்த்திற்குள், ஆசிரியர் வேலைக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது.தந்தையை போலவே தானும் ஆசிரியராய் பணிக்கு செல்வது இவருக்கு சந்தோசமாய் இருந்தது. இவர்கள் இருவரையும் விட அம்மாவுக்குத்தான் மிகுந்த சந்தோசம், அப்பாவும், மகனும் ஒரு சேர வாத்தியார் வேலைக்கு கிளம்புவது இவளுக்கு பெருமை.

தேவசகாயம் பணிக்கு சேர்ந்து ஐந்தாறு வருடங்கள் இருக்கும்,அப்பா அவரை ஒரு நாள் தேவா நான் உங்கிட்ட ஒரு சகாயம் செஞ்சு தர் சொல்லி கேப்பேன், முடியாதுன்னு சொல்லிடாதே. அவரின் பேச்சு இவருக்கு வியப்பை தந்தது.என்னப்பா நீ, எப்பவும் இப்படி பேசினதில்லையே, இன்னைக்கு ஏன் இப்படி பேசறே?

இல்லை, எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தரணும். மீண்டும் தந்தையின் கேள்வி ஒரு புதிராய் இருந்தது. என்னதுன்னு சொல்லு இவர் விடாப்பிடியாய் கேட்கவும், திருமணத்துக்கு முன் அவர் ஒரு பெண்ணை விரும்பியதாகவும், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாய் உன் அம்மாவை திருமணம் செய்து கொள்ள நேர்ந்து விட்டது.

அந்த பெண் அதற்கு பின்னால் எனக்கு வேறொரு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.இத்தனை வருசமா கல்யாணமே பண்ணாம இருந்திட்டா. அவளும் டீச்சரா இருக்கறதுனால அவளுக்கு இப்ப எந்த பிரச்சினையும் இல்லை. தன்னை காப்பாத்திட்டு இருக்கறா. ஆனா தினம் தினம் நான் மனசுக்குள்ள குற்றவாளியா நினைச்சுகிட்டே இருக்க வேண்டி இருக்கு. அவர் சொன்னதை கேட்ட தேவசகாயத்திற்கு அவர்களை பார்க்கவேண்டும் போலிருந்தது. இந்த காலத்தில் இப்படி ஒரு வைராக்கியமான பெண்ணா? நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.நானே உன்னை கூட்டிட்டு போய் அவங்க கிட்ட அறிமுகப்படுத்தறேன்.தயவு செய்து உன் அம்மாகிட்டே இதை பத்தி பேசிடாதே.ஏன்னா அதுக்கப்புறம் அவ என் மேல வச்சிருக்கற நம்பிக்கை காணாம போயிடும்.

ஆனால் அப்படி சொல்லி ஒரு மாத்த்திற்குள் அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த ஒரு லாரி அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. அப்பொழுது கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாள் கழித்து கண் விழித்தவர், தேவசகாயத்தை அழைத்து அந்த பெண்ணின் பெயரையும், ஊரையும் சொல்லிவிட்டு ஆயாசமாய் கண்ணை மூடியவர்தான். அதற்குப்பின் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்கவில்லை.

எல்லாம் முடிந்து, வீடு வந்தவர், அம்மாவை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்த களேபரத்தில் அப்பா சொன்ன அந்த பெயரையும் ஊரையும் மறந்து விட்டார்.ஒரு வருடம் கழித்து அவரின் திருமண பேச்சை எடுக்கும்போது அவருக்கு சுரீர் என்று ஞாபகம் வந்தது. சே..அப்பாவை விட நான் எவ்வளவு மோசமானவன், அப்பா அவ்வளவு நம்பிக்கையாய் சொல்லியும் அதை இவ்வளவு நாள் மறந்திருக்கிறேனே.

முதல் திருமண பத்திரிக்கையை கொண்டு சென்று அவர்களிடம் அறிமுகம் செய்தபின் தான் கொண்டு வந்த பத்திரிக்கையை கையில் கொடுத்தார் “ கடவுள் உன்னை வாழ்த்தட்டும்” என்று தலையை தொட்டு ஆசிர்வாதம் செய்தார். அதன் பின்னே அப்பா தவறிப்போனதை மெல்ல சொன்னார். “கடவுளே” என்று ஒரு நிமிடம் கண்ணை மூடினார்.

இவர் தன் தந்தை உங்களைப்பற்றி அனைத்தையும் சொன்னார், என்று சொல்லவும் தன் கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவர், பின் கண்களை திறந்து உன் அம்மாவுக்கு ஆறுதல் கூறு என்று சொல்லிவிட்டு “சென்று வா” என்று அனுப்பினார்.

“உக்கடம்” கண்டக்டரின் குரல் கேட்டு தன் ஞாபகத்திலிருந்து விழித்துக்கொண்டவர் கீழே இறங்கி நகர பேருந்தை நோக்கி சென்றார். நல்ல வேளை மழை இல்லை.

“முதியோர் இல்லம்” என்ற காப்பகத்தில் “கொஞ்சம் காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற பெண் சற்று நேரம் கழித்து அவரை உள்ளே அனுப்பினாள்.அந்த அறையின் உள் வெளிச்சம் அவருக்கு புரிபட சிறிது நேரம் ஆனது. அப்பொழுதுதான் கட்டிலில் உட்கார்ந்திருந்த அந்த உருவம் கண்களில் தென்பட்டது. உடல் கூன் விழுந்திருந்தது, உடல் முழுவதும் சுருக்கங்கள், இவர் போய் எதிரில் நின்ற பொழுது கூட முகத்தில் எந்த சலனமுமில்லாமல் இருந்தது.

இவர் மெல்ல அந்த சுருக்கம் விழுந்த, மெலிந்த கைகளை தொட்டு சித்தி என்று அன்புடன் கூப்பிட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *