நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 15,893 
 
 

என் பெயர் அனுபிரபா. நான் படிக்கிறது பெண்கள் கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு. படபடக்கிற வயசு, வித்தியாசமா கலர் கலர் கனவுகளோடு, எந்தக் கவலையும் இல்லாம சிறகடிச்சுப் பறக்கிற மனசு. எல்லாருக்கும் கல்லூரி வாழ்க்கை இனிமையா இருக்கும். எனக்கும் அப்படித்தான். பள்ளி வாழ்க்கை ஒரு தவம், கல்லூரி வாழ்க்கை ஒரு வரம். பிற்காலத்தில் கல்லூரியைப் பற்றி நினைத்துப் பார்க்க, பசுமையான நினைவுகளை எண்ணி அசை போட எனக்கு நிறைய அனுபவங்கள் இந்தக் கல்லூரி மூலம் கிடைச்சிருக்கு.

எனக்கு என்னோட கல்லூரியை ரொம்…….பப் பிடிக்கும். காலையில வீட்டை விட்டுக் கல்லூரிக்குக் கிளம்பினா நான் வீட்டுக்குத் திரும்ப நைட் ஆகிடும். அவ்வளவு கோ கரிகுலர்,எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்லே பங்கேற்கிறேன். என்னமோ தெரியலே. என்ன மாயமோ தெரியலே. சின்னக் குழந்தையா இருக்கும் போதே எனக்குப் படிப்பு தவிர பிற கலைகள்லேயும் ரொம்ப ஆர்வம் உண்டு. எந்தப் போட்டினாலும் நான் தான் பர்ஸ்ட். இது வரை நான் வாங்கின சான்றிதழ்கள் 200 இருக்கும். என்னோட பரிசுப் பொருட்கள் வைக்க 2 ரூம் ஆகியிருக்கு. எங்கே போனாலும் பெருமை பெருமை தான்.பார்க்கவும் பழகவும் இனிமையான பொண்ணு நான். ரொம்ப அழகியும் கூட. எனக்கு என்கிட்டே ரொம்ப ரொம்ப பிடிச்சதே தற்பெருமை இல்லாத என்னோட இந்த குணம் தான்(ஹி ஹி ஹி). ஆங் எங்கே விட்டேன்? எங்கே போனாலும் பெருமை தான். கராத்தே, பாட்டு, டான்ஸ், தனி நடிப்பு, பேச்சுப்போட்டி, கவிதை, கதை, கட்டுரை எழுதறது,பட்டி மன்றம். ஹ¤..மூச்சு விட்டுக்கிறேன். ஒன்றா? ரெண்டா? எல்லாத்துலேயும் பரிசுகளை அள்ளிக் குவிச்சு கல்லூரிக்குப் பேரும் புகழும் சேர்த்துருக்கேன்.

இந்தக் கல்லூரியும் எனக்கு நிறைய சந்தோஷத்தை அள்ளி வழங்கியிருக்கு. படிப்பு, பிற கலைகள்லே தேர்ச்சி, நல்ல ஆசிரியர்கள், நல்ல தோழிகள் வட்டம்னு அன்பால அமைஞ்சது தான் என்னோட கல்லூரி உலகம். இன்று முக்கியமான நாள். எங்க கல்லூரி சார்பா கண் தானம் செய்வதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்னு நடக்கப் போகுது. ஊர்வலைத்தைக் கல்லூரியிலிருந்து தொடங்கி நகரின் குறிப்பிட்ட இடங்களுக்குச் சுற்றி விட்டு எங்கள் கல்லூரிக்கே திரும்புவது போல் அமைத்திருந்தார்கள். நான் ஆங்கிலத்திலும் தமிழ்லேயும் நல்லா சரளமாப் பேசுவேங்கிறதால எனக்கும் இன்னொரு பொண்ணு பார்வதிக்கும் மட்டும் வண்டியில் உட்கார்ந்து கண் தான மகிமையைப் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு. மற்றவர்கள் ஊர்வலத்தில் நடந்து வருவார்கள். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தாரும் எங்களின் இந்த ஊர்வலத்தை ஒலி-ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.சூரிய ஒளி தலையில் படாமல் இருக்க எல்லாருக்கும் பிரபலத் துணிக்கடைநிறுவனம் தன் கடை பெயரிட்ட தொப்பி வழங்கியிருந்தது. இப்போ எல்லா இடமும் விளம்பரம்னு ஆகிப் போச்சு. ஆனா சத்தியமா எனக்கு என் பெருமைகளை விளம்பரப்படுத்தறது பிடிக்காது. அதான் சொல்றேனே என்னை மாதிரி ஒரு பொண்ணை நீங்க எங்க தேடினாலும் பார்க்க முடியாது.

சீருடை அணிந்திருந்த கல்லூரி மாணவியர் கண்தானம் செய்ய வேண்டிய அவசியம் குறித்த வாசகங்களும் கருத்துக்களும் அடங்கிய கொடிகளை ஆங்காங்கே ஏந்தியிருந்தார்கள். ஊர்வலம் தொடங்கியது.

பார்வதியிடம்,”பாரு, மைக் வொர்க் பண்ணுதா, செக் பண்ணிக்கோ” என்றேன்.

“ஹலோ, 1, 2,3 மைக் டெஸ்டிங்(அப்போது மைக் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்க) என் செல்லங்களே! சூடான நற்செய்தி,சூர்யாவும் ஆர்யாவும் பொங்கலுக்குத் திரைக்கு வரப் போவதில்லை. காதல் நாயகன் அஜீத்தும்,இளைய தளபதி விஜய்யும் தான் தைத்திருநாளிற்குத் திரைக்கு வந்து நம்மை மகிழ்விக்க இருக்கிறார்கள். என்னென்ன படங்கள் என்று கேட்க விரும்புகிறீர்களா? பரரரர(ரகரத்தில் பயங்கர அழுத்தம் கொடுத்து)மசிவன்,ஆதி, ஆதி, ஆதி (ஆதியில் மைக் வேலை செய்ய மாணவியர் பக்கத்தில் இருந்து ஓஹோ என்ற சத்தம்)”

AAdhi Vijay”ஆதியா, நீ பாதிடி,மேடம்ஸ் கேட்டா உன்னைக் காலி பண்ணப்போறாங்க” மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். என்னைப் பற்றி நானே சொல்லக் கூடாது. நான் மனதிற்குள் நினைத்து முடிக்கவும் கற்பகம் மேடம் எங்களிடம் வந்து, “என்னது கேர்ள்ஸ் கத்தறாங்க? ஆதினு ஏதோ சொன்ன மாதிரி இருந்ததே” என்று கேட்கவும் சரியாக இருந்தது. அனுவா கொக்கா? பதிலும் ரெடி.

“மேம், இவளைப் பேச ஆரம்பிக்கிறதுக்கு முந்தி அகர முதலனு வள்ளுவர் குறள் சொல்லச் சொன்னேன், அதுலே ஆதிபகவன்னு ஒரு வேர்டு வந்தவுடனே மைக் வொர்க் பண்ணுச்சு மேம்”

“என் கண்ணுகளா? தங்கத்துலே குறை இருக்கலாம். உங்க வார்த்தையில் குறை இருக்குமா? கேரி ஆன்” என்று சொல்லி விட்டு,மாணவியரை வழி நடத்த மேடம் செல்ல, நான் பாருவைக் காப்பாற்றிய பெருமையில் அவளைப் பார்த்தேன்.

“(மைக்கை அணைத்து விட்டு) அப்படி பார்க்கிறதுன்னா வேணாம்,கண்ணாலத் தாக்குறது வேணாம்(பாடியபடியே) மைக் வொர்க் பண்ணுது. ஆரம்பிப்போமா?” பாரு அசடு வழிந்தாள். பார்வதியையே பேச அனுமதித்தேன்.

“கண்தானம் செய்வீர். கண் தானம் செய்வீர்.
(கோஷம்) தானத்தில் சிறந்தது கண் தானம்
(கோஷம்) கண் தானம் செய்வீர்”

பார்வதி மைக்கில் சொல்ல சொல்ல அணிவகுத்து வந்த என் கல்லூரி மாணவிகள் கோஷம் எழுப்பினர். எங்கள் வண்டியும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் செல்வது போல் ஊர்ந்தது. மாணவியரும் மெதுவாக நடந்து, ம்ஹ¤ம் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

பார்வதி என்னிடம் மைக்கைக் கொடுத்து விட்டுத் தண்ணீர் அருந்தினாள்.

“என் இனிய தமிழ் மக்களே! என் தேன்குரல் உங்கள் காதுகளில் பாய்கிறதா?”

சாலையில் போவர்களும் வருபவர்களும் ஒரு நிமிடம் நின்றுத் திரும்பிப் பார்த்ததில் எனக்குப் பயங்கரப் பெருமை. எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைப்பது தானே என் தனிச்சிறப்பே. என் துறைத்தலைவரும், தலையாட்டிக் கொண்டே “அனு கலக்கறே. ஆரம்பமே அசத்தல், பிச்சு உதறுறே, எல்லாரும் பார்க்கிறாங்க. என்ன மனசுலே நினைக்கிறியோ பேசு” என்று ஜீப்பின் அருகே வந்து ஊக்கப்படுத்தினார்.

என்னைத் தூண்டி விட்ட துறைத் தலைவருக்குப் பார்வையாலேயே நன்றி கூறினேன்.

“செல்லத் தோழியரே, அலுவலகம் செல்லும் கன்னியரே, பேரன்,பேத்திகள் எடுத்த பேரிளம்பெண்களே,நிமிர்ந்த நடையுடன் வீறு நடை பயிலும் கட்டிளம் காளையரே(இந்த வார்த்தை சொன்னவுடன் எனக்கு முன் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை வார்த்தையை யோசித்துப் பேசும்படி கண்களாலேயே அன்புக் கட்டளையிட) கோலூன்றிய பெரியோரே,ஆன்றோரே,ஈன்றோரே,சான்றோரே! திரைப்படம் காணத் திரையரங்கு(அப்போது தான் ஒரு இளைஞர் கூட்டம் திரையரங்கு நோக்கி நடந்து கொண்டிருந்தது)செல்லும் என் நண்பர்களே,என் ஒரு சொல் கேளீர், கண் தானம் செய்வீர். தானத்தில் சிறந்தது கண் தானம். நீங்கள் இறந்த பிறகு உங்கள் உடலையும் கண்களையும் இந்த மண் தின்னப் போகிறது,உங்கள் கண்களைத் தானம் செய்தால் நீங்கள் இறந்த பிறகும் உங்கள் கண்களால் இன்னொருவர் இந்த உலகைக் காண முடியும். இறந்த பிறகும் உங்கள் விழி மொழி பேசும்”

“அதுக்கு என்ன செய்யணும்?” ஆர்வமிகுதியால் சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி கேள்வியைத் தொடுக்க(எங்கள் கல்லூரி மாணவி தான் அன்யூனிபார்மில் பொது மக்களின் சார்பில் கேட்டது)

“என் கண்ணம்மா, கண்தானம் செய்வதற்கென்று இருக்கும் விண்ணப்பப் பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தானம் செய்தவர்கள் யாரேனும் இறக்கும் போது அவர்களின் குடும்பத்தினர் ரத்ததான முகாமைத் தொடர்பு கொண்டாலே போதும். இறந்தவரின் விழிகளை அவர்கள் எடுத்துக் கொண்டு பார்வை இழந்த வேறொருவருக்குப் பொருத்தி விடுவார்கள்” என்றேன்.

கல்லூரியில் மாணவியருக்குத் திரைப்பட நடிகையையோ, மெகாசீரியல் கதானாயகியையோ கூட்டி வந்து கண்தானப்பிரச்சாரத்தில் பங்கு பெற வைக்க வேண்டுமென்ற ஆசை. அவர்களுக்குக் கிடைக்கும் புகழ்,வரவேற்பு அவ்வளவு சீக்கிரத்தில் வேறு யாருக்கு கிடைக்கிறது? என் துறையும் பாருவின் இயற்பியல் துறையும் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மாணவியர் சார்பான எங்கள் கோரிக்கையை நாங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியை கீதா அவர்கள் முன் வைத்தோம். முதல்வரின் நெருங்கிய உறவினர் என்பதாலும் மாணவியரிடம் பாசமாகப் பழகுபவர் என்பதாலும் கீதா மேடமிடம் எங்களுக்குத் தனிமரியாதை. அவர்களிடம் நிறைவேறாத கோரிக்கைகள் கொண்டு செல்வது எங்கள் வழக்கம். அவர்களும் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயம் அனுமதி வாங்கித் தருவார்கள். அப்படி நியாயமற்ற கோரிக்கை என்றாலும் மாணவியர் மனம் கோணாமல் அதே சமயம் தன் கருத்தையும் ஏற்றுக் கொள்ள ¨வைப்பார்கள்.எனக்கும் அந்த மேடம் மேல் தனிப்பிரியம்.

எங்கள் ஆசைக்குக் கீதா மேடம் சொன்ன விளக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது. “இப்போ ஊடகங்கள், செய்தித்தாள், ஏன் பள்ளி,கல்லூரிகள்லே கூடத் திரைப்பட மோகம் நிறைய இருக்கு. சுதந்திரதினத்துக்குக் கூட ஒப்புக்குச் சிலத் தியாகிகள் பேட்டியைப் போட்டு விட்டு வியாபார நோக்கில திரைப்பட நடிக, நடிகையர் பேட்டி, திரைப்படம், பாடல்கள்னு ஒளிபரப்புறாங்க. அதைத் தான் மக்களும் விரும்பிப் பார்க்கிறாங்க. எத்தனையோ கல்லூரிகள்லே கூட ஒத்தையா? ரெட்டையா? இடுப்பு மடிப்பு, இப்படி ஆபாசமான பாடல்களுக்கு ஆட விடறாங்க. எங்க வீட்டுப் பக்கத்துலே இருக்கிற ஒரு பள்ளியிலே சின்னக் குழந்தைகளைத் தொப்புள் காட்டி ஆட வைக்கவும் பேஷன் ஷோ என்பது போன்ற போட்டிகளும் வைக்கிறாங்க. பிஞ்சு மனசில நஞ்சைத் தூவறாங்க. அப்படிலாம் இருக்கிற கல்லூரி, பள்ளிகள் மத்தியிலே நம்ம கல்லூரியில் போட்டிகள் வைக்கும் போது கூட ரொம்ப நாகரிகமா இலக்கியப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்களுக்குத் தான் ஆட விடுறாங்க. என்.சி.சி, என்.எஸ்.எஸ்,சமூக விழிப்புணர்வு கூட்டங்கள்,வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடிய பகுதி நேரப் பாடங்கள்னு நிறைய உங்களுக்காகத் தான் பண்ணறாங்க. நீங்க நிறைய சாதிக்கணும், பேரும் புகழும் வாங்கணும்ங்கிறது தான் இந்தக் கல்லூரியோட குறிக்கோளே. அப்படிப்பட்ட கல்லூரியில் நீங்க படிக்கிறதை நினைச்சுப் பெருமைப்படணும்.மெகாசீரியல் நடிகையைக் கூப்பிடலாம்னாலும் இதே கதை தான். மெகா சீரியல் தலைவிகள் குடும்பத் தலைவிகளோட நேரத்தை அழுது அழுது பாழ் பண்ணறாங்க. இப்போ நீங்க உங்க ஸ்டாப்ஸ் சொன்னதை மீறி டைரக்டா பிரின்ஸிபாலை அப்ரோச் பண்ணினா உங்க பேர்லே இருக்கிற நல்ல பேரும் கெட்டுடும். ஸோ விட்டுடுங்கம்மா”

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

மனதில் சுழன்ற நினைவலைகளுக்கும் பிளாஷ்பேக்கிற்கும் இப்போதைக்கு ஒரு சிறிய இடைவேளை விட்டேன்.

மீண்டும் கோஷம்

“கண் தானம் செய்வீர், கண் தானம் செய்வீர்”

எனக்கு லேசாகத் தலை சுற்றியது. கல்லூரி வரும் சந்தோஷத்தில் காலை சிற்றுண்டி உண்ண மறந்ததன் விளைவு, தலை சுற்றல், பசி.

“பாரு, எப்போடி இந்த ஊர்வலம் முடியும்? தலை சுத்துது,பசிக்குது”

“ஏய் உனக்கு விஷயம் தெரியாதா? இன்னிக்கு ஈவனிங் வரைக்கும் இந்த ராலி நடக்கும். காலையில நீ சாப்பிடலையா?”

“ஆமா, காலையிலே காலேஜ் வர்ற அவசரத்துலே சாப்பிடலே. வீட்டுலே மெனு என்ன தெரியுமா? இட்லியும், வெங்காயச் சட்னியும். வீடு கூடப் பக்கத்துலே வந்துகிட்டுருக்கு. நீ பேசிக்கிட்டிருந்தேன்னா, நான் போய் நைஸா சாப்பிட்டுட்டு வண்டியிலே அம்மாவைக் கொண்டு விடச் சொல்லுவேன், நீ என்ன சொல்லறே?”

“உனக்கு விஷயம் தெரியாதா? வீட்டுலே சாப்பிடலேனா கூடப் பரவால்லே, இங்க காலேஜ்லே எல்லாருக்கும் காலையில் பொங்கல், தேங்காய் சட்னி தந்தாங்க. நீ அதைச் சாப்பிடலையா? அப்போ நீ எங்கே போனே? நான்லாம் கரெக்டா சாப்பிட்டேம்பா”

“காலையிலேர்ந்து உங்கூட தானே இருக்கேன், நீ மட்டும் எப்படி சாப்பிட்டே?”

“ஹி ஹி ஹி”(ஓரக்கண்ணால் திருட்டு முழி முழிக்க)

“பல்லைக் காட்டாதே, நடந்த உண்மைய மறைக்காம சொல்லு”

“அது வந்து நீ உன் அசைன்மெண்ட் டிபார்ட்மெண்ட்லே வைக்கப் போனேலே, அப்போ உனக்கும் எனக்கும் சேர்த்துப் பொங்கல், சட்னி ரெண்டு பார்சல் வந்தது. உன் மம்மி தான் சூப்பரா குக் பண்ணுவாங்களே, நீ வீட்டுலே சாப்பிட்டுருப்பேனு நினைச்சு ரெண்டு பார்சலையும் நானே (ஏப்பம் விட) எனக்கும் பசி, ஸாரி”

“துரோகி, என்கிட்டே கேட்டுருக்கலாமே,சரி, விடு, இப்போ பசிக்கிற நேரத்திலே பொங்கல், சட்னிங்கிறே? நீ மேனேஜ் பண்ணுவியா மாட்டியா?”

“பிரின்ஸி மேமுக்குத் தெரிஞ்சுது, பிச்சுட்டாங்க, இந்த ஊர்வலத்துலே நீயும் நானும் தான் பேச்சாளர்கள். எனக்குப் பயமா இருக்குப்பா. நான் மாட்டேன்”

நல்ல நேரத்தில் கல்லூரிக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாள் என் உயிர்த்தோழி(பசி வயிற்றைக் கிள்ளும் போது உயிரை எடுப்பவள் உயிர்த்தோழி தானே).

எங்கள் குரல் கேட்டு டிரைவர்,”என்னம்மா பசிக்குதா? மேடம்கிட்டே சொல்லவா?” என்று கேட்க, ஒன்றுமில்லையே என்று சமாளித்து வைத்தோம். ஏனென்றால் முதல்வர் என்றால் எங்களுக்கு சிம்ம சொப்பனம். நான் அவங்களுக்குப் பெட் தான். ஆனா பார்வதியை விட என்னை நம்பி தான் இந்த முழுப் பொறுப்பும் ஒப்படைச்சிருக்காங்க. இப்போ பசி, அது,இதுனா காலேஜ் மானம் என்னாறது? பாரு சொதப்பிட்டான்னா?

“தானத்தில் சிறந்தது எது, அது அது
அது எது?
கண் தானம்”

பாட்டு பாடி, பிரச்சாரம் செய்வது என் பசியை அதிகமாக்கியது. கண்ணும் மயக்க நிலையை அடைய, “இன்னும் பத்து நிமிடத்தில் ஊர்வலம் முடிஞ்சுடும், ஜூஸ் குடிக்கலாம்” என்று கிசுகிசுக்கும் தொனியில் பாரு என் வயிற்றில் பாலை வார்த்தாள். பாருவையே தொடர்ந்து பேசும்படி சொன்னேன்.

“அனு, ஊர்வலம் முடியப் போகுது,பாருவே ரொம்ப நேரம் பேசறா, நீ வாங்கி நச்சுனு ஒரு கமெண்ட் அடி பார்க்கலாம்” மேடம் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை. பசியால் தலை சுற்றினாலும் நான் தெளிவாக இருப்பதாகத் தான் தோன்றியது. மைக்கில் குரலைச் சரி செய்து கொண்டே, பேசத் தொடங்கினேன்.

“என் நண்பர்களே!

பட்டை போடப் போடத் தான் வைரம் பளபளக்கும்.
மெருகு கொடுக்கக் கொடுக்கத் தான் தங்கம் பளபளக்கும்.
அரும்பு விரிய விரியத் தான் மலரும் மணத்தைக் கொடுக்கும்
அன்பு பெருக பெருகத் தான் இவ்வுலகம் அமைதி நிலையை அடையும்.
அது போல உங்கள் கண்கள் தானம் செய்யப்படும் போது தான் இன்னொருவருக்கு உலகத்தைக் காண வைத்தப் பெருமை உங்களைச் சேரும்.

செத்தும் கொடுத்தது சீதக்காதி மட்டுமா? ஏன் நீங்களாக இருக்கக் கூடாது? நாளைய சரித்திரம் உங்கள் பெயரைக் கல்வெட்டில் பதிக்கட்டும். மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறோம், அறிவுறுத்துகிறோம். கண் தானம் செய்ய மறவாதீர். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்,நீங்கள் இறந்த பிறகு அருகிலுள்ள கண்தான முகாமை அணுகவோ, தொலைபேசி மூலம் தெரிவிக்கவோ செய்தாலே போதும், அவர்கள் உங்கள் கண்களை எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும்,இறந்தும் மறவாதீர்”

நான் பேசி முடிக்கவும் பாரு என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கவும் முதல்வரும், சிலப் பேராசிரியைகள் வரவும் சரியாக இருந்தது. என்னைப் புகழ்வதற்கு இத்தனை பேரா? புளகாங்கிதப்படும் முன்பு முதல்வரிடம் இருந்து சரியான அர்ச்சனை. ஊர்வலத்தின் முடிவில் ஜூஸ¤டன் செம டோஸ்(ஏன் திட்டு வாங்கினேன் என்று புரியாதவர்கள் இந்தப் பத்தியை மீண்டும் படித்துப் பார்க்கவும்)என் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளவும் பின்னாளிலே கல்லூரியைப் பற்றி அசை போடவும் பசுமையான நினைவுகளில் மூழ்கி ரசித்துச் சிரிக்கவும் சுவையான அனுபவம் தயார்.

– காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com] – ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *