நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஸ்டேஷனில் (பெரிய மனுஷர்களைப் போல் இந்த இடத்தில் எனக்கும் ஞாபகம் வர மறுக்கிறது!) பிளாட்பாரத்தின் எதிர்ப் புறமாக இரண்டு சின்னப் பயல்கள் வண்டிக்குள் தாவினார்கள். எட்டு, ஒன்பது வயதுக்குள்தான் இருக்கும்; அரையில் மிக அழுக்கான – ஜலத்தில் நனையாத – வஸ்திரம்தான் உடுத்தியிருந்தார்கள். நாங்கள் இருப்பதையே அவர்கள் லட்சியம் செய்யவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் அவர்களில் ஒரு பயல் “இன்னாடா நாய்! இங்கே எங்கேடா வந்தே?” என்று கேட்டான்.
அதற்கு இன்னொரு பயல், “இன்னாடா நாய்! நீ எங்கேடா இங்கே வந்தே?” என்று பதிலுக்கு அவனைத் திருப்பிக் கேட்டான்.
இந்த அறிமுகம் ஆன அப்புறம் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்தபடி அளவளாவிக் கொண்டு வந்தார்கள். “நாய்!” என்று பரஸ்பரம் கூப்பிட்டுக் கொண்டதில் ஏற்பட்ட ஆனந்தம் அவர்கள் அடுத்த ஸ்டேஷனில், வந்த வழியாகவே வெளியேறும் வரையில் இருந்தது.
இந்த உலகத்தில் ‘நாய்’ என்று அழைக்கப்பட்டுக் கூடச் சிறிதும் கோபம் கொள்ளாமல் வாயைத் திறந்து சிரித்து சந்தோஷத்தைக் காண்பிக்கும் இன்னொரு ஆத்மாவின் ஞாபகம் எனக்கு அப்போது வந்தது. ஒருகால் நாய் என்றால் என்ன என்று தெரிந்த பிறகு, அவ்வாறு அழைக்கப்பட்டதற்காக அந்த ஆத்மாவும் காலால் நம் முகத்தில் உதைக்கலாம். நான் சொல்கிறது பாப்பாக்களைப் பற்றி!
முன்னெல்லாம். எங்கள் சின்னக் கண்ணனுக்கு வயது மாசக் கணக்கில் இருந்தபோது, அவனை நான் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு, “சீ நாயே… சின்ன நாயே… போக்கிரி நாயே… அச்ச நாயே!… என்று நாய் – அஷ்டோத்தரங்கள் சொல்லுவதுண்டு. நான் சொல்லும் ஒவ்வொரு ‘நாய்’க்கும் சின்னக் கண்ணன் தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் காட்டுவது வழக்கம். அதைக் கண்டு நாங்கள் அலமாந்து போயிருக்கிறோம்.
சின்னக் கண்ணனுக்கு ஒரு வயதாகி. அவனுக்கு கிண்ணத்தில் சாதம் ஊட்டுவதற்கு ஆரம்பித்த பொழுது, நாய் வந்து நின்றால்தான் அவன் சாப்பிடுவான். ஒரு கவளம் அவன் வாய்க்குள் போக வேண்டுமென்றால் நாய்க்கும் ஒரு கவளம் விழுந்தாக வேண்டும். இதை அறிந்து கொண்ட ஒரு சிவப்பு நாய் வாலை ஆட்டிக் கொண்டு கழுத்தை உயர்த்திக் கொண்டு, வெகு அக்கறையுடன் வேளை அறிந்து எங்கள் வீட்டு வாசலை வட்டமிடும். பருப்பு ரஸமும், பசுவின் நெய்யும் மணக்கும் சாதத்தை உத்தேசித்து, அந்தத் ‘தோத்தோ’ எங்கள் சின்னக் கண்ணன் சிரஞ்சீவியாகச் சின்னக் குழந்தையாக இருக்க வேண்டுமென்று மனமார விரும்பியிருந்தால்கூட ஆச்சரியமில்லை!
இதைச் சொல்லும்போது நாயின் நுண்ணறிவைத் தெரிந்து கொண்டே நான் சொல்லுகிறேன். நாய்களுக்குத்தான் எத்தனை யோசனை இருக்கிறது! முன்பு நான் டவுனில் குடியிருந்தேன். அங்கே இரவில் சரியாக எட்டு மணிக்கு நாங்கள் சாப்பிட்டான பிறகு புழக்கடைப் பக்கமாக ஒரு நாய் வந்து நிற்கும். அது விருந்தாளிகளைப் போலவே உரிமை கொண்டாடிக் கொண்டு, நேரே விளக்கடியில் வந்து நில்லாது. நிழலோரமாக நின்று வாலை ஆட்டும். சிறு குரைப்பால், ‘நான் வந்திருக்கிறேன்’ என்று ஜாடை சொல்லும். ஒரொரு நாள், “போ! போ! இன்றைக்கு இல்லை!” என்று சொல்லுவோம்; அடுத்த நிமிஷம் – சில பிச்சைக்காரர்களைப் போல்
அல்லாமல் – திரும்பி ஓடிப்போய் விடும்! “ஐயோ, பாவம்! இதற்கு அடுத்த ஜன்மம் உண்டானால் பில் – கலெக்டராக மட்டும் பிறந்து விடக்கூடாது. போகுமிடமெல்லாம் ‘இன்றைக்கு இல்லை, போ’ என்று சொல்லிக் கொண்டிருப்பார்களே!” என்று நான் அங்கலாய்த்துக் கொள்வேன்.
ஒரு ஆசாமியைப் பற்றி மிகவும் துச்சமாகக் குறிப்பிட விரும்பும்போது, “அவன் கிடக்கிறான் நாய்!” என்று நுனி நாக்கினால் சொல்லி விடுகிறோம். ஆனால் நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் பாட புத்தகங்கள் கற்பித்தது, நாயின் நன்றியறிவையும் எஜமான் விசுவாசத்தையும் பற்றி அல்லவா? பெரியவர்களான உடனே பழம் பாடங்களை மறந்து விட வேண்டும் – பொய் சொல்லாதே, வஞ்சகம் செய்யாதே, கோள் சொல்லாதே, பிறரைக் கெடுக்காதே, துரோகம் செய்யாதே, பேராசைப் படாதே, உப்பிட்டவரை மறக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததை – மறந்து விட வேண்டும் என்ற மனித – நியதியின்படி நாயைப் பற்றி நாம் படித்த நல்ல விஷயங்களையும் மறந்து போய்த்தான் அப்படிச் சொல்லுகிறோமே? அல்லது, வேண்டும்போது உயர்த்திப் பேசுவது, வேண்டாத காலத்தில் குதிகாலின் கீழ் வைத்துத் தேய்ப்பது என்ற மனித சுபாவப்படி, நாய் வேண்டியபோது அதன் விசுவாசத்தைக் கதை கதையாகச் சொல்லி விட்டு, அது தேவைப் படாதபோது, அதைக் கரித்துக் கொட்டுகிறோமோ?
ஆனால், நாய் எதை லட்சியம் செய்கிறது? எஜமான் ஏழையா பணக்காரனா யோக்கியனா, அயாக்கியனா, திருடனா தர்மிஷ்டனா, பக்திமானா பிளாக் மார்க்கெட்காரனா என்றெல்லாம் பாகுபாடு செய்து விசுவாசம் காட்டுகிறதா? இல்லையே! உயர்ந்த உடை உடுத்தினதற்காக அது அதிகம் வாலாட்டுவதுமில்லை. மோட்டாரில் வந்ததற்காக அதிகம் சுற்றிச் சுற்றி வருவதுமில்லை. அதன் விசுவாசத்திற்கு ஒரு நிதானம் உண்டு; அதற்கு உணவு கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அந்த அளவை மறக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறது.
“ஏ நாயே! நீ ஒருகாலும் எத்தனை முயன்றாலும் மனிதனைப் போல் ஆக முடியாது” என்று நான் நாயைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன். நாங்கள் டெலிபோனில் ‘பேசுவ’தையும், சொன்ன சாமானைக் கடைக்குச் சென்று காசு கொடுத்து வாங்கிக் கொண்டு வருவதையும், மோப்பம் பிடித்துத் திருடனைக் கண்டு பிடிப்பதையும், இன்னும் எத்தனையோ வகைகளில் மனிதனைப் ‘காப்பி’ அடிப்பதையும் பற்றிப் பத்திரிகையில் அடிக்கடி படிக்கிறோம். சமீபத்தில் நியூயார்க்கிலிருந்து வந்த செய்தி ஒன்று எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாக இருந்தது; ஒரு நாய் பாங்கில் கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறதாம்! அதற்காகப் பாங்கிக்காரர்கள் அதனிடம் ஒரு ‘செக்’ புஸ்தகமே கொடுத்திருக்கிறார்களாம். அந்த நாய் அந்தப் புஸ்தகத்தின் அடியில் கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில் முன்னங்காலினால் கீறல் ஒன்று போட்டுப் பணம் வாங்கிக் கொள்கிறதாம்.
இந்தச் செய்தியைப் படித்தவுடன் நான் ராஜத்தை அவசரமாகக் கூப்பிட்டு, “இதைப் பார்த்தாயா, ஒரு நாய் செய்து வருகிற காரியத்தை! உன் பெயரில் நான் போஸ்ட் ஆபீஸ் ‘ஸேவிங்ஸ் பாங்கி’யில் கணக்கு வைத்திருந்தபோது ஒரு முறை இரண்டு ரூபாய் வாங்க ஆறு முறைகள் நீ கையெழுத்துப் போட வேண்டியிருந்ததே, நினைவு வருகிறதா?” என்று ஞாபகப் படுத்தினேன்.
“ஆமாம்… நான் நாய்க்கும் கேவலம்தான்! உங்களிடம் சந்தன சோப் வேண்டுமென்று இதோடு நூறு தரம் சொல்லி விட்டேன்; கொஞ்சமாவது அன்பிருந்தால் வாங்கி வந்திருக்க மாட்டீர்களா!” என்று படபடத்துக் கொண்டு உள்ளே போனாள்.
இந்த ஹாஸ்யம் செய்ததற்காகவும், அவளைச் சாந்தம் செய்வதற்காகவும், நான் தண்டனையாக அன்று மாலை மூன்று சோப்புகள் வாங்கிக் கொடுத்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன். இது நிற்க.
பாங்கில் பணம் போட்டு வைப்பது புத்திசாலி மனிதர்கள் செய்யும் காரியம் என்பதை நான் ஒப்புக் கொண்டாலும் கூட, நாய் இதே காரியத்தைச் செய்து மனிதனுக்குச் சமமாகப் புத்திசாலிப் பட்டத்தை என்னிடம் வாங்கிக் கொண்டுவிட முடியாது.
நாய்களுக்கு ஆகாரம் போட்டவுடன் வால்களை ஆட்டுகின்றனவே! மனத்தில் விசுவாசம் வைத்திருக்கின்றனவே! ஒரு மனிதனைப் பிடிக்கவில்லை என்றால் கண்ணெதிரே உறுமித் தெரிவிக்கின்றனவே! அப்படியா இருக்கிறான் மனிதன்? அவன் குணமே வேறு ஆயிற்றே; மனிதன் எஜமானனிடம் சாப்பிட்டுக்கொண்டே துரோகம் செய்கிறானே; உண்ட இடத்தை அதி விரைவில் மறந்து போகிறானே; தனக்கு அடுத்தபடி உயரே இருப்பவனைக் காலைப் பறித்துக் கீழே தள்ளிவிட்டுத் தான் அவன் இடத்தில் உட்கார்ந்து கொள்ள ஈனமான வழிகளைத் தேடுகிறானே; கேவலமான காரியத்துக்கு எந்த ஆளைப் பிடித்துச் சேர்த்துக் கொண்டால் தன் கட்சி ஜெயிக்கும் என்று சூழ்ச்சி செய்கிறானே! எந்த சுவானத்துக்கு இப்படிச் செய்ய யோசனைதான் தோன்றும்? ஆகையால், ஏ நாயே! உன்னால் ஒரு நாளும் மானிடனை எட்டிப் பிடிக்க முடியாது. நீ முட்டாள், முழு முட்டாள்! சர்வ முட்டாள், போ! வேதாந்தம் பேசவும் உனக்கு வராது; அந்தச் சூட்டோடு சூடாக ஈனமான காரியங்கள் செய்யவும் வராது. ஆகையினால், உனக்கு மோட்டார் சவாரி கிடைத்தாலும், பங்களாக்களினுள்ளே சோபாக்களில் உட்கார அதிர்ஷ்டம் இருந்தாலும், நீ நாய்தான்! சில ‘கெட்டிக்கார’ மனிதர்களை நீ கிட்டக்கூட நெருங்க முடியாது.
நாயைவிடப் பூனை புத்திசாலி என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தமே இல்லை. கணவனைவிட மனைவி புத்திசாலி என்று சொல்வதில் எத்தனை பொருள் இருக்கிறதோ அத்தனைதான் இதிலும் இருக்கிறது. கணவனும் மனைவியும் பல இடங்களில் ‘நாயும் பூனையுமாக’ இருப்பதை இங்கே எடுத்து வைத்துக் கொண்டு விஸ்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே ஒரே ஒரு முறை பூனையொன்று வெகு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதை மட்டும் இங்கே கூறிவிடுகிறேன்.
நானும் இரண்டு எழுத்தாளர்களுமாக ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போயிருந்தோம். அந்த மனிதர் அதிகம் பேசமாட்டார்; ஆனால் சத்தம் போடாமல் சுயகாரியத்தை நடத்திக் கொண்டு விடுவார் என்று பெயர்போனவர். நாங்கள் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு அவருக்கு நாலாவது நாற்காலியைக் காலியாக விட்டு, அவர் வருகைக்குக் காத்திருந்தோம். அந்தச் சமயம் ஒரு பூனை உள்ளேயிருந்து வந்தது. எங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, காலி நாற்காலியின் மீது தாவி, மனிதர்கள் உட்காருவது போல் உட்கார்ந்து கொண்டது. மறுநிமிஷம் எங்களைப் பார்த்து ‘மியாவ், மியாவ்’ என்று சம்பாஷணையைத் தொடங்கியது.
சில காலமாக வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமென்றதொரு ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எங்கள் சின்னக் கண்ணனுக்கும் அதே ஆசை உண்டு; ஆனால், அது நாய் குட்டியாக இருக்க வேண்டுமென்று அவன் நினைக்கிறான். “நானும் வரேன்!” என்று அவன் என் கூடப் புறப்படும் போது, “வாடா, அப்பா! வா! உன்கூட ஒரு நாய்க்குட்டியையும் அழைத்துக் கொண்டு வா!” என்று அடிக்கடி நான் கேலியாகச் சொல்கிறேன். அதை ஞாபகம் வைத்துக் கொண்டுதான் கேட்கிறானோ என்னவோ! ஆனால் ராஜம் இதற்கு முற்றிலும் எதிரான அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எங்கள் இருவர் மெஜாரிட்டியையும் இதுவரை தகர்த்தெறிந்துகொண்டே வருகிறாள்.
“ஐய! நாயா! சமையற்கட்டுக்குள்ளே வந்துவிடும்! அப்புறம் பூஜை அலமாரி, அது இது எல்லாம் என்ன கதியாகிறது… வேண்டாம்! இந்த வீட்டில் நாய் வேறு குரைக்க வேண்டாம்” என்று முடிவாகச் சொல்லி விட்டாள்.
சற்று சாந்தமான வேளையில், “எனக்குத் தெரியும்! உங்களுக்கே நாய் வளர்க்கும் யோசனை பக்கத்து வீடுகளைப் பார்த்துத் தானே வந்திருக்கிறது!” என்றாள் அவள். அது வாஸ்தவம்தான்!
என் வலது பக்கத்து வீட்டு நண்பர் ஒரு சின்ன நாய்களை வைத்து வளர்க்கிறார். கால்களின் நீளம் நான்கே அங்குலம் தான்; ஆனால் வயிற்றின் நீளம் சுமார் இரண்டடி. இந்த இரு நாய்களும் சுற்றுப்புறத்தில் ஒரு மாட்டையும் அண்ட விடாது. ‘வாள் வாள்’ என்று குரைத்து, மாட்டின் கால்களுக்கடியில் புகுந்து கும்மாளம் அடித்து அவைகளை ஒரு பர்லாங் வரை விரட்டி விட்டே திரும்புகின்றன.
இடது பக்கத்து நண்பர் வீட்டின் நாய் பெரியது. அதனுடன் சிநேகம் பண்ணிக் கொள்ள நான் செய்த முயற்சிகள் எல்லாம் இதுவரை வீணாகி விட்டன. என்னைக் கண்டால் ‘உர்ர்ர்ர்…’ என்கிறது. என் மோட்டார் சைக்கிளைக் கண்டால் ‘லொள்’ என்று பாய்கிறது! அதைக் காணும்போதெல்லாம் “கடவுளே! நீ ஏன் அப்பா நாயைப் படைத்தாய்!” என்று நான் நினைப்பதுண்டு. நாயைப் பற்றிய மதிப்பு அது போன்ற சமயங்களில் எனக்கு அடியோடு விழுந்துவிடும்.
எனக்குத் தெரிந்த ஒரு பணக்காரர் இருக்கிறார். (தெரியும் என்றால் எனக்கு அவரைத் தெரியும்: என்னைஅவருக்கு தெரியாது!) அவரிடம் எனக்குத் தெரிந்து ஒன்பது நாய்களும் ஒரு பெரிய மோட்டாரும் இருக்கின்றன. எங்கே வெளியே கிளம்பினாலும் காரின் கதவை டிரைவர் திறந்தவுடன் ஒன்பது நாய்களும் அவருக்கு முன்னால் போய் அதில் ஏறி ஸீட்டுகளை அடைத்துக் கொள்ளும். எங்கே இறங்கினாலும், அவரை முந்திக் கொண்டு அத்தனை நாய்களும் இறங்கி விடும்!
நான் கேள்விப் பட்டவரையில் இவரிடம் ஏதேனும் காரியம் ஆக வேண்டுமானால் முன்னாடி இவருடைய நாய்களையும், அவற்றின் அழகையும் அறிவையும் பற்றி அரை மணியாவது சிலாகித்து ஆக வேண்டுமாம். இந்த ‘டிப்லொமஸி’ தெரியாமல் நேரே வந்து காரியத்தைச் சொன்னவர் மீது அந்த மனிதர் நாய் மாதிரி விழுவார் என்று அறிகிறேன்!
இந்தச் சந்தர்ப்பத்தில் சொந்த அனுபவம் ஒன்றையும் சொல்லாவிட்டால் எனக்குச் சாப்பாடு செல்லாது. கேட்டு வையுங்கள். நான் ஒரு நாவல் எழுதினேன். அதில் செந்தில் ஆண்டவன் உத்ஸவத்தைப்பற்றி அத்தியாயம் அத்தியாயமாக எழுதினேன்! அந்தச் சில குமாரன் திருமூர்த்திகளின் கோலத்தில் தெருவில் பவனி வரும் சிறப்பையும், பன்னீரையும் சந்தனத்தையும் விபூதியையும் கொண்டு அந்த ஊரில் அபிஷேகம் செய்யும் விதரணையையும், நேரே நின்று பேசுவதுபோல் அந்த முருகன் அளித்த காட்சியையும் என் திறமைகளையெல்லாம் உபயோகித்து எழுதியிருந்தேன். எழுதும்போது என் கண்கள் நீர்த் திரையிட்டன; நெஞ்சை அடைத்துக் கொண்டது; உடம்பெல்லாம் மயிர்க்கூச் செறிந்தது, படிக்கிற அவ்வளவு பேருக்கும் எனக்கு உண்டான பக்திப் பரவசம் கட்டாயம் ஏற்படப் போகிறதென்று நான் நினைத்து, உடலும் உள்ளமும் பூரித்துப் போனேன்.
நாவல் தீர்ந்தது; நண்பரொருவர் பார்க்க வந்தார். நான் எதிர்பார்த்தது போல் நாவலைப் புகழத் தொடங்கினார். “அது மாதிரி உங்கள் ஒருவரால்தான் ஸார் எழுத முடியும்!” என்றார்.
நான் மார்பைப் பார்த்துக்கொண்டு ஒரு புன்சிரிப்புச் செய்தேன். “மேலே சொல்லுங்கள்; கேட்கிறேன்!” என்கிற பாவனையில் சமிக்ஞை கூடச் செய்து விட்டேன்.
“அதில் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது எது தெரியுமா?” என்று நண்பர் கேட்டுவிட்டு என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்புறம்தான் கல்லைத் தூக்கி என் தலையில் போட்டார்.
“அதில் ஒரு நாய் அடிக்கடி குரைத்துக்கொண்டு வருகிறதாக எழுதி இருக்கிறீர்கள், பாருங்கள்…அதுதான் பிரமாதம், பிரமாதம், பிரமாதம்!” என்றார்.
நாயின் வரலாற்றை ஆதியோடு அந்தமாக விவரித்து கதையினை வழங்கியமைக்கு எழுத்தாளருக்கு பாராட்டுகள் உரித்தாகுக