ஒரு சந்தர்ப்பத்தில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 2,910 
 

சாய்வு நாற்காலியில் முதுகு படியாமல் உட்கார்ந்து ஷண்முகம் நேர் எதிர் ஜன்னலுக்கு வெளியே விறைத்துப் பார்த்துக்கொண் டிருந்தான். அதன் முதுகுப் பிடியில் ஒரு கை வைத்து மற்றொரு கையால் புடைவைத் தலைப்பை வாய் நுனியில் பொத்தினபடி சௌந்தரம் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்.

இருவரும் வாய் கொடுத்துப் பதில் வாங்கி வெகு நேரம் ஆகிவிட்டது. அந்தப் பொழுது எப்படிக் கழிந்து கொண்டிருந்தது என்பது அவர்களுக்கே நினைவில்லை. சௌந்தரம் மட்டும் நடுநடுவே கண்ணீரை அடக்கி மீண்டும் ஏதோ பேச விரும்பினவளைப்போல வாயை அசைக்கப் போவாள். சப்தம் ஒன்றும் கிளம்பாத வெறும் மௌன அசைவாகவே அது இருந்து விடும். ஆனால் நெஞ்சுக்குள்ளே போட்ட வேதனை வித்து வெடிப்பது போலக் கண்ணீர் குப்பென்று துளித்துத் துளித்துக் கிளப்பும்.

“தொலைந்து போ தள்ளி!” என்ற கடைசி வார்த் தைகளோடு அவர்களுடைய சம்பாஷணையை ஷண்முகம் மடக்கி இருந்தான். அந்த மடக்கலை நெகிழ்த்துக் கொடுக்கச் சௌந்தரத்துக்குத் துணிவு வரவில்லை. அவன் குணம் அவளுக்குத் தெரியும். எதற்காக இன்னும் நெருக்கிக்கொள்ள வேண்டும்? தனக்குள் நெளிந்து பொருமிக்கொண் டிருந்தாள் அவள். அதை அலக்ஷியமாக நினைத்துப் போகவும் அவளால் முடியவில்லை.

சாதாரணப்போக்கில் நித்தியப்படி வேலை முறையில் ஒன்றாகப் போய்விடக்கூடிய அந்தக் காரியம் ஒரு சந்தர்ப் பத்தில் இவ்வளவு தப்பாகிவிடும் என்று யார் எதிர் பார்க்க முடியும் ? யதார்த்தமாகச் செய்த காரியம் அது. ஏன்? இப்போது கூட அது எப்படித் தப்பாகும் என்று எவ்வளவோ நினைத்துப் பார்த்தும் தெளிவாகவில்லை அவளுக்கு.

அவன் உதடுகளிலிருந்து சீறிவந்த அந்த வார்த் தைகள் அவளை அப்படியே கொன்றுவிட்டன. “ஐயோ! இதென்ன வார்த்தை! நானா…” என்று பதறிக் கேட்டவள் வாக்கியத்தை முடிக்கவில்லை.

“சீ, மிருகம்!” என்று தான் அவன் நாக்கு விசும்பி அவள் வாயில் போட்டது.

அவளுடைய குரலில் உள்ள பரிதாபங் கூட, அவன் கிளப்பின வார்த்தைகளின் தப்பை அவனுக்கு உணர்த்திக் காட்ட முடியவில்லை.

அப்போது வாயை மூடிக்கொண்டவள் தான். இன்னும் வாயைத் திறக்கவில்லை. ஒரே வார்த்தையில் அவள் பொட்டில் விழுந்த அடிக்கு எப்படிப் பதில் சொல்வது? அவளுக்குத் தெரியவில்லை; அவளால் மறக்க முடியவில்லை; அவனாலுந்தான். அறையின் உட்புறத்துக்கு அவன் கண்கள் மூடிக்கிடந்தபோதும் அவன் சுவாசம்!

அவனுக்குப் பின்புறம் மாட்டியிருந்த லக்ஷ்மி படத்தடியில் சிறு ஸ்டாண்டில் செருகியிருந்த ஊதுவர்த்தி களிலிருந்து படர்ந்த மெல்லிய புகை ரேகைகள் அவன் சுவாசத்தில் கலக்கும் போது அவனால் எப்படி மறக்க முடியும்? போதாததற்கு அறையின் மற்றொரு மூலையில், கட்டியும் கட்டாததுமாகக் கிடந்த மல்லிகையின் மணமும் வேறு சேர்ந்தது.

சாதாரணமாக மனமயக்கம் கொடுக்கும் அவை களின் போதைச் சக்தி அப்போது அவனிடம் வலி யிழந்து மோதியது. சுவாசம் சுவாசமாகக் கலந்து சென்று ஒரு பிரயோஜனமும் காணாமல் வெறுமனே திரும்பி வெளிக்காற்றிலே சிதறியது.

அந்த நிலையை ஏற்கும் சுமுகம் அவன் மனத்துக்கு அப்போது இல்லை. முழுதும் மாறுபட்ட இரண்டு நிலை களில், திடீரென ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறிய நிலையோடு, புதியதை க்ஷணத்தில் சகஜப்படுத்திக் கொள்வது எவ்வளவு கஷ்டமானது! முன் நிலையின் நிகழ்ச்சியத்தனையும் அவன் மனத்திலே உளைந்து கொண்டிருந்தது. அதிலே ஏற்பட்ட கோளாறு அந்தச் சிறு சம்பவம். பிளாட்பாரத்திலிருந்து வீடு திரும்பின வரையில் ஒரே நினைப்பு; அதே உள்ளக் கிளர்ச்சி.

***

பிளாட்பாரத்திலிருந்து ரெயில் மறைந்துவிட்டது. ஸ்டேஷனுக்கு வெளியே வந்து விட்டான்.

அவனை நிறுத்தி வைப்பதற்குத் தன்னால் ஆன மட்டும் முயன்று பார்த்துவிட்டான்; பயனில்லை.

ரெயில் புறப்பட அந்தக் கடைசி ஊதல் கிளம்பு வதற்கு முன்பு கூட ஷண்முகம், “தம்பி, பேசாமல் நீ இங்கேயே…” என்று இழுத்தான்.

அதை முடிப்பதற்குள் தம்பி இடைமறித்து, “அண்ணா, புறப்பட்டாயிற்று ; இன்னும் அதைப் பற்றிப் பேசிப் பிரயோஜனம் என்ன? சரி, வண்டி புறப்பட்டு விட்டது. நான் வரட்டுமா?” என்றான்.

“சரி, போய் உடனே கடிதம் போடு. மறந்து விடாதே” என்று சமாளித்துக்கொண்டு ஷண்முகம் பதில் சொன்னான்.

வேகமாகப் புறப்பட்ட வண்டியின் ஜன்னலிலிருந்து கையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக்கொண்டே ஷண்முகம் நகர்ந்து பிளாட்பாரத்தில் நின்றான். ஜன்ன லும் தள்ளித் தள்ளிப்போய், அதில் இடுப்புக்குமேல் வெளியே எழும்பி நின்ற அந்த உருவத்தோடு ஷண் முகத்தின் பார்வைக்கு மங்கலாகி விட்டது. கார்டு வண்டிக்குப் பின் தோன்றின சிவப்பு விளக்கும், போகும் ரெயிலின் கடைசிச் சின்னமாக ஷண்முகத்தின் கண் களில் பட்டுக் குறைந்து கொண்டிருந்தது.

அவன் சட்டென்று திரும்பி வெளியே பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றான். பஸ் ஒன்று வந்து நின்றது. முன்னால் மாட்டியிருந்த பலகையைப் பார்த்துக் கொண்டே சரேலென்று பஸ்ஸிற்குள் ஏறி உட்கார்ந்து விட்டான். இரண்டு தடவைக்குப் பிறகு மூன்றாந் தடவையாகக் கிளம்பின கண்டக்டரின் சப்தம் பலமாகக் காதில் விழுந்தது. பஸ்ஸிலிருந்து வேகமாகக் கீழே இறங்கி முன் எட்டுக்கள் போட்டு, புறப்பட்டு விட்ட பஸ்ஸின் பலகையைக் கூர்மையாகப் பார்த்தான். உதட்டுக்கு உள்ளூற அவனுக்கே சிரிப்பு வந்தது. கண்டக்டர் கூவினது சரிதான்.

காத்திருந்து, தான் போக வேண்டிய பஸ் வந்ததும் ஞாபகம் குறையாமல் ஏறிக்கொண்டான். பஸ் புறப் பட்டது. ரெயிலும் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று அனுமானித்துப் பார்த்துக்கொண்டான். கொஞ்ச நிமிஷங்களுக்கு முன் இருவருடைய குரல்களும் ஒன்றோடு ஒன்று கலந்து சப்தித்துக்கொண் டிருந்தன. இப்போது? தூரம் அவர்களை நேர் எதிர்த் திசைகளில் கொண்டு போய்க்கொண்டிருந்தது.

அவன் நினைப்புச் சுழன்றது. அரை வயிற்றுக்குத் தான் சம்பாதிப்பதில் ஆளுக்கொரு பிடி சாப்பிட்டாவது தம்பியை அங்கேயே இருக்கும்படி செய்யவேண்டும் என்று தான் அவன் விரும்பினான். தான் படித்து, ஒரு வேலை சம்பாதிக்கிற வரைக்குமுள்ள இடைக் காலத்தில் தான் பொறுத்துக்கொள்ள நேர்ந்த வார்த்தைகள் தம்பிக்கு வேண்டாமே என்ற எண்ணம் அவனுக்கு.

ஆனால் தம்பி தன்னோடு இருந்த அந்தச் சிறிய காலத்திற்குள் இரு மனசுகளுக்கும் எவ்வளவு வித்தி யாசம் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. ஒரு நாள் திடீரெனத் தம்பி, “அண்ணா , ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன்” என்று சொன்னபோது அவனுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. “இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் போ’ என்று ஒரு மாதம் நிறுத்தி வைக்க முடிந்தது. அதற்குமேல் முடியவில்லை.

வாழ்க்கை அனுபவம் இன்னும் உடலில் ஏறப் பெறாத தம்பியின் குஷால் உள்ளத்துக்கு அந்த இடம் கொஞ்சமும் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதை ஷண் முகம் உணர்ந்திருந்தான். உணர்ந்தும் என்ன? தக்கபடி அவனால் ஈடு கட்ட முடிந்தால் தானே!

***

பஸ்விலிருந்து இறங்கித் தன் தெரு வீடுகளைத் தாண்டிப் போய்க்கொண் டிருந்தான். அவன் வீட்டுப்படி ஏறுவதற்கு இன்னும் ஏழெட்டு வாசல்கள் பாக்கி இருந்தன . “அண்ணா!” – எங்கிருந்தோ ஓர் ஓசை ஓங்கி அவன் காதோடு நெருங்கிக் கூவினது. உதறிக்கொண்டு ஷண்முகம் தன் உணர்வைச் சுற்றித் திருப்பினான். அது தன் தம்பியின் அழைப்பல்ல. அதே மாதிரி குரல் ; அழைத்த தோரணையும் அவனுடையது போன்றதே. தெருவிலே ஷண்முகத்துக்கு முன்னால் போய்க்கொண் டிருந்த ஓர் உருவத்தை அக்குரல் பின் திண்ணையிலிருந்து கூப்பிட்டது.

“சீ! நல்ல பிரமை! ஓர் இமைப்பில் என்ன பிரமிப்பு ஊட்டி விட்டது! வைகுண்டம் இங்கே எப்படி இருப்பான்? எவ்வளவோ தூரம் போயிருப்பானே” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ஷண்முகம். பனிப் பாதுகாப்பாகத் தலையில் ‘கிரக்கிக் கட்டுக் கட்டிக் கொண்டு தன் பெஞ்சியில் சாய்ந்து ‘ஹிந்து வை விரித்துப் பிடித்துக்கொண்டு பிரயாணம் செய்யும் வைகுண்டத்தின் சாயல் அவன் அகக் கண்முன் வந்து நின்றது.

பழகின முகங்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது. மனம் விட்டுப் பேசும் சம்பாஷணைகளுக்குச் சந்தர்ப்பம் இல்லாத, ஒரு தொலை தூர நகரின் ஒதுக்குப் புறத்திலே இளம் மனைவியுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்த அவனுக்கு வைகுண்டம் வந்தது புதையல் கிடைத்தது போல இருந்தது. அந்தச் சிறு அறையிலே நேருக்கு நேர் உட்கார்ந்து பொழுதுபோவது தெரியாமல் இருவரும் வம்பளந்து கொண் டிருப்பார்கள். கிராமத் தைப்பற்றிப் பேச்சு எடுத்து விட்டால் தலைகால் புரியாத உத்ஸாகம். இவற்றை யெல்லாம் மௌனமாகக் கேட்டுச் சௌந்தரம் இவற்றில் பங்கெடுத்துக் கொள்வாள். தனியே இலையில் உட்கார்ந்து சாப்பிடாமல், நேர மானாலும் வைகுண்டத்தின் கூட உட்கார்ந்து சாப்பிட் டால் தான் அவனுக்குத் திருப்தி. வைகுண்டத்தோடு ஈடுபட்டிருக்கும் பேச்சுஸ்வாரஸ்யத்தில் சைகை, லேசான வாயசைப்பு இவற்றுடன் தன்னைச் சௌந்தரம் கூப்பிடுவது கூட அவன் கவனத்திற்கு வரவே வராது.

ஆனால் இன்று?

ஒட்டி இருந்த தூசிகளைப் போக்கும் முறையிலும், தன் வரவை அறிவிக்கும் ரீதியிலும் பாதங்களை ஒருதரம் படிகளில் தட்டிக்கொடுத்து ஷண்முகம் வாசல் ஏறித் தன் அறை நிலையையும் தாண்டிப் புகுந்தான். அப்பொழுது தான் அந்த வாசனை அவன் சுவாசத்திலே வந்து கலந்தது. சரேலென்று தலை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் பார்வை விழவும், குந்தி உட்கார்ந்திருந்த சௌந்தரம் எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது. இடது கையிலே அடக்கி இருந்த மல்லிகைச் சரம் நெகிழ்ந்து சாண் உயரத்துக்குமேல் ஊசலாடியது. இடது கை விரல் நுனிகள் இன்னும் இரு புஷ்பங்களைப் பிடிக்க வலதுகை விரல்கள் சுருக்கேற்றிக்கொண் டிருந்தன. அந்தப் பாவனையிலே அவள் தன் முகத்தை அவனுக்கு நேராகத் திருப்பினாள். சுவரிலே மாட்டியிருந்த சுவரொட்டியின் வெளிச்சம் அவளது முழுமுகத்தில் நிழலை விரட்டி நின்றது.

அந்த முகத்தைப் பார்த்து அப்படியே விறைத்து நின்றான் ஷண்முகம்.

வெகு அழகாகக் கூந்தலைச் சுருள நெற்றியில் படிய வாரி நடுமத்திக்குக் கொஞ்சம் ஒதுங்கினது போல வகிடு எடுத்துப் பின்னிச் சுழற்றிப் பிச்சோடா போட்டிருந் தாள். கையில் வளைந்து வரும் மல்லிகைச் சரம் அந்த வளைவிலே போய்ப் படிந்துவிட்டால் அந்த அழகு அம்சம் பூரணமாகிவிடும். முகத்திற்கு அழகூட்டும் நவீன ஸாதனங்களோடு சிரத்தையும் கலந்ததால் ஓர் அலாதியான சோபை முகச்சதைகளிலே ஏறி யிருந்தது. நெற்றி நடுவிலே எடுப்பாகக் கண்ணைப் பறித்த, அகன்ற ஊதாப் பொட்டிலே ஜிகினாப்பொடிகள் மின் வெட்டின. ஊசிக் கூர்மைக்குத் தீட்டியிருந்த மை கலந்த இமைக்கோடுகளுக்கு உட்புறத்திலே விழிகள் இமையசைப்புக்கு அசைப்பு அபிநயம் பிடித்தன. தாம்பூலரசம் படிந்த உதடுகளில் ஏறியிருந்த செவ் வொளியின் பிரதிபலிப்புக் கன்னங்களுக்குக்கூட ஏறியிருந்தது.

“அம்பி ஊருக்குப் போயாயிற்றா?” என்று தகவல் அறிய வினவும் ஓர் ஆத்திரத்தோடு அவன் முகம் பார்த்து அவள் கேட்டாள்.

அந்தக் கேள்வியே அவன் செவியில் தாக்காதது போன்ற பாவனை தான் அப்போது அந்த முகத்திலே தோன்றியது.

பளிச்சிடும் வைரக் கம்மல்களுக்கு அடியிலே ஊசலாடும் டோலக்குகளிலே அவன் கண்கள் ஒரு கணம் பறிபோய் நின்றன; மறுகணம் தலைப்புப் பின் புறமாக விசிறிதொங்கும் புது மோஸ்தர்ப் புடைவைக் கட்டிலே பட்டு நின்றன. ஒரு வெறித்த பார்வை தான் அந்தக் கண்களில்!

சௌந்தரம் கீழே குனிந்து இன்னும் இரண்டு மல்லிகைகளைக் கைகளில் சரிப்படுத்திக்கொண்டே “ஒஹோ, அம்பி ஊருக்குப் போன திலே நான் கேட்டது காதிலே விழவில்லையா?” என்று கேட்டவள் சிரித்துக் கொண்டே நிமிர்ந்தாள்.

தன் தொனியை அவள் மாற்றிக்கொள்ள வேண் டியதாயிற்று. அவளது உறுத்தின பார்வை சுருக் கென்றது. ஆனாலும் பெண்களுக்கு உண்டான இயல்பில் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஏன், என்ன யோசனை பண்ணுகிறீர்கள்?” என்று விவரம் புரியாமல் கேட்டாள். அவள் பார்த்துக்கொண் டிருக்கும் போதே ஷண்முகம் முன்னிலும் கடுப்பாவது, அவன் கண்களின் உறுத்தல் வலுத்த நிலையாக நிற்பது, உதடுகள் அமிழ்த்திக் கீழ்ப் பாகம் இறுகுவது முதலிய மாறுதல்களைக் கண்டு விட்டாள். அவள் மனம் பரபரப் படைந்தது. வாயசைக்காமல் தீவிர முகக் குறியுடன் விழிகளைக் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். கைப்புஷ்பம் தொடுபடாமல் நின்றது.

ஷண்முகம் சட்டென்று திரும்பித் தோள் மீதிருந்த துண்டைச் சாய்வு நாற்காலியின் முதுகில் போட்டுக் கொண்டே அதில் உட்கார்ந்தான்.

“அம்பி ஊருக்குப் போயாகி விட்டதா என்று கேட்டேனே ; பதில் சொல்லக்கூடாதா?” என்று ஈனஸ்வரத்திலே அவன் முதுகுப்புறமிருந்து சௌந் தரத்தின் குரல் கேட்டது. அவ்வளவு தான். அதற்கு மேல் தன் ஆத்திரத்தை அவனால் அடக்க முடியவில்லை. மௌனத்தைக் காப்பாற்றச் சக்தி இல்லை. “ஏன்? அவன் இங்கிருக்க உனக்குப் பிடிக்கவில்லை யாக்கும்? 2 என்று சீறி விழுந்தான்.

அதைக் கேட்டதும் சௌந்தரம் வெலவெலத்துப் போனாள் : “என்ன! என்றைக்காவது நான் அப்படிச் சொன்னேனா?” என்று பதறிப் பேசினாள்.”

ஷண்முகம் ஏளனமாக ஒரு சின்னச் சிரிப்புச் சிரித்து, “நீ சொல்லவேண்டுமா! உன் கோரம் காட்டு கிறதே, போதாதா?” என்று சிடுத்துச் சொன்னான்.

“என் கோரம் காட்டுகிறதா? என்னது? எனக்குப் புரியவில்லையே! எதற்கு இப்படி என்னை ………?” சௌந்தரத்தின் குரல் தழுதழுத்து வந்தது.

“இல்லை, உன் அழகு காட்டுகிறது! இந்த அலங்காரத்துக்கு அவன் தொலையக் காத்திருந்தாயாக்கும்!” என்று அவன் சொல்லும்போதே சௌந் தரம், “ஹா என்று கூவிவிட்டாள். தேகம் முழுதும் ஒரே திரியாகச் சிலிர்த்துக்கொடுத்தது. அழுகை கொதித்து வந்தது. “ஐயோ ! இதென்ன வார்த்தை! நானா…” என்று துடிதுடித்துக் கேட்டவள்

வாக்கியத்தை முடிக்கவில்லை.

“சீ! மிருகம், போ தள்ளி!” என்று தான் அவன் நாக்கு விசும்பியது. தன்னை அறியாமல் அவனைத் தொடப்போன கைகளைப் பின்னரித்துக்கொண்டாள். அப்போது நின்ற நிலை தான் ; அசைவற்ற சித்திரமாக இன்னும் நின்று கொண்டிருந்தாள்.

***

யௌவனமும் உத்ஸாகமும் கலந்து கொப்புளித்துக் கொண் டிருக்கும் வனப்பு உருவம் சௌந்தரம். கிராமத்தில் புருஷன் வீட்டிலே சமையலறையோடு மட்டும் உறவு கொண்டு புழுங்கிக்கொண் டிருந்த அவள் உள்ளத்துக்கு, நகர வாழ்க்கை சுதந்திரம் கலந்த ஒரு களிப் புணர்ச்சியைக் கொடுத்திருந்தது. மனத்தை விட்டுப் பிடித்துத் தன் ஆசைக்கு இணங்க இன்ப வாழ்க்கை நடத்தி வந்தாள். நகரமோஸ்தரிலே கண் வைத்துப் புதுப்புது விதமாக, தினுசு தினுசானபடி யெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். கர்நாடக மான கிராமத்து நடையுடை பாவனைக்கு நேர் எதிரிடை யாக, அந்திப் பொழுது வரவும் தலைப்புப் பின்னால் முதுகுப்புறம் விசிறி தொங்க , முன்புறம் புடைவை நுனி கட்டைவிரல்களிலே பட்டு விசிறும்படியாகத் தழையைத் தழையக் கட்டிக் காதுகளிலே, சென்ற வருஷம் நிகழ்ந்த பொருட் காட்சியில் கணவன் வலிய வாங்கிக்கொடுத்த டோலக் அசைவுக்கு அசைவு பலவிதமாக ஆடி ஒளியேற்ற, பிச்சோடாவுக்கு மேலாகக் கனகாம்பரம் வளைவாய்ப் பின் தலையை அழகாக அணைந்து நிற்க, உத்ஸாகத்தோடு அவனது சிறு நடைக்குச் சமமாக எட்டு வைத்துக் கடற்கரைக்குப் போகும்போது அவளுக்கு எத்தனை கர்வம்!

ஆனால் வைகுண்டம் நாளை ரெயிலில் வந்து தங்க ளோடு தங்கப் போகிறான் என்றதும், விட்டுப் பிடித்த மனத்திற்குக் கட்டுப்பாடு இயற்கையாகவே வந்து விட்டது. ஓடவிட்டிருந்த ஆசையை இறுக்கிப் பிடித்து விட்டாள். தன்னை இந்த மோஸ்தரில் தன் மைத்துனன் பார்த்துவிட்டால் எப்படி நினைத்துக் கொள்வானோ என்ற கூச்சம், வணக்கம் எல்லாம் சேரவே தன் ஜோடனையிலே சாதாரணமாகிவிட்டாள்.

அதைப்பற்றி ஷண் முகம் பரிகசித்துப் பேசினதற்கு, உங்களுக்கு என்ன? ஊரில் போய் அவர் சொல்லி விட்டால் அப்புறம் எனக்கு வெட்கமாக இருக்கும்.

பெரியவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்? என்றாள்.

“நானே அவர்களிடம் சொன்னால்?” என்றான் ஷண்முகம்.

“நீங்கள் சொல்ல மாட்டீர்கள்; தெரியும்” என்றாள் சௌந்தரம்.

அதன் பிறகு ஷண்முகத்திற்குச் சௌந்தரத்தின் ஜோடனையில் கவனம் செலுத்த அவகாசம் இருந்தால் தானே? ஆபீஸ்நேரம் போக மீதியெல்லாம் தம்பியோடு குஷால் பேச்சுக்குத்தானே இடம்?

வழக்கமாக இளந் தம்பதிகள் கடற்கரைக்குப் போய்க்கொண்டிருப்பதும் நின்று விட்டது. நடுவே ஒரு நாள் சௌந்தரம் ஆரம்பித்தாள் : “இன்று நானும் பீச்சுக்கு ……………..”

“இல்லை. தம்பியும் நானும் காங்கிரஸ் மாளிகைக் கூட்டத்திற்குப் போகப் போகிறோம் .. ஆ என்ன பீச்சு வேண்டியிருக்கிறது, குளிர்காற்றிலே?” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டு விட்டான் ஷண்முகம்.

“ஆமாம், நான் கேட்டால் அப்படித்தான்…” என்ற படியே சௌந்தரம் திரும்பி உள்ளே போய்விட்டாள்; “அங்கிருந்து வரும்போது தையல் இலை வாங்கி வாருங்கள்” என்றாள். குரல் சற்றுக் கடுகடுப்பாகவே தான் இருந்தது.

இந்த ரீதியில் ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஏற்பட்டுச் சௌந்தரத்தை மறுபடியும் கிராமச் சமையலறைப் பெண்ணாகவே செய்துவிட்டது. சந்தர்ப்பத்தோடு அவள் குணமும் சேரவே பூரணமாக ஆகிவிட்டது

“மைத்துனன் வந்தது முதல் சௌந்தரத்தின் நடமாட்டமே தெரியவில்லையே! என்ன மாறுதலடி யம்மா?” என்று கூடக் குடியிருப்பவர்கள் எல்லாம்

அவளைப் பரிகசிப்பார்கள். ”பெரியவர்களுக்குப் பயப்பட வேண்டித்தானே இருக்கிறது?” என்பாள் சௌந்தரம்.

“அது யதார்த்தமடி சௌந்தரம்”, “அதுதான் குணம்” என்று அவள் நடத்தையை எல்லோரும் பாராட்டுவார்கள். அவை அவளுக்குப் பெருமை தரும்.

அந்தப் பெருமையிலும் ஆசையிலுந்தான், தன் மைத்துனன் ஊருக்குப் போக அபிப்பிராயப்பட்டதாகக் கணவன் சொன்னபோது, “இங்கேயே இருக்கச் சொல்லுங்களேன் அவரை. ஊருக்குப் போவானேன்?” என்று அவளாகவே சொன்னாள்.

ஆனால் வைகுண்டம் தீர்மானமாகப் புறப்பட்டு விடவும், சரி , நாம் என்ன பண்ணுவது? சாதிக்கிறாரே” என்று இருந்துவிட்டாள்.

கணவனும் வைகுண்டமும் ஸ்டேஷனுக்குப் புறப் பட்டுப் போய்ச் சிறிது நேரம் ஆகியிருக்கும். மைத்துனன் பிரயாணத்துக்குச் செய்து கொண் டிருந்த ஏற்பாட்டு அவசரத்தில், தன் சாதாரண ஜோடனையைச் செய்து கொள்ளக்கூட அவளுக்கு அவகாசம் இல்லை. இருட்டு வதற்குள் முகம் பார்த்துக்கொண்டு விட வேண்டும் என்று பின்னிக்கொள்ள உட்கார்ந்து கொண்டாள். கண்ணாடி பார்த்து வகிடு வாரிக்கொள்ளும் போது கைப்போக்குச் சரியாக விழவில்லை. இப்போது எடுத்துக் கொள்ளும் நேர் வகிடுக்குச் சற்றுத் தள்ளிப் பழைய கோணல் வகிட்டின் ஆரம்ப இடம் இப்போது கண்ணில் விழுந்தது தான் தாமதம் : உடனே கூந்தலை நேராக வாரி வகிட்டைக் கலைத்தாள். பழைய கோணல் வகிட்டை எடுத்தாள். வெகு லாவகமாக , நேர்த்தியாக, அவள் இதுவரை அலக்ஷியமாக விட்டிருந்த அந்த வகிடு பாதைவிட்டது.

“மாமி, மல்லிகைப் புஷ்பம் வந்திருக்கு” என்று குடியிருக்கும் வீட்டுச் சிறுமி அப்போது கத்திக் கொண்டு வந்தாள். ஓர் இமையசைப்பு நேரம் சௌந்தரம் தயங்கினாள். உடனே அவசரக் குரலில், “போய்க் காலணாவுக்குக் கால்படி வாங்கிவா” என்று அந்தச் சிறுமியை விரட்டி விட்டுத் தொங்கவிடத் திட்டம் போட்டிருந்த பின்னலைப் பிச்சோடா போட்டுக்கொள்ள மாற்றி விட்டாள்.

பிச்சோடா போட்டுக் கொண்டாள். தன்னை அறியாத உத்ஸாகம் அவள் மனத்திலே குபீரென வளர்ந்தது. நன்றாக அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற வெறி நினைப்பு க்ஷணத்திலே ஜனித்தது. பழைய ரிப்பன்களை உதறி எறிந்து விட்டுப் புதியவற்றை முடிந்து கொண்டாள். குழாயடியிற் சென்று சில கால மாக இல்லாத சிரத்தையோடு முகம் கழுவி ‘மேக் அப்’ செய்து கொண்டாள். மிளகு அளவில் இருந்த சாந்துப் பொட்டுக்குப் பதில் பவுன் அளவுக்கு வர்ணக் குங்குமப் பொட்டு இட்டாள். தன் முகம் க்ஷணத்துக்கு க்ஷணம் அழகாகிக்கொண்டு வருவதைக் கண்ணாடியில் பார்க்கப் பார்க்க அவள் உத்ஸாகம் அதிகமானது. தாவியோடிப் பெட்டியைத் திறந்து டோலக் அணிந்து கொண்டாள். அதோடு இரண்டு ஊதுவர்த்திகளும் வந்தன. மறு படியும் கண்ணாடியில் பார்த்துக் காதுகளுக்கு அசைவு கொடுத்து டோலக்குகளைச் சரி பார்த்துக்கொண்டாள்.

அவள் இன்ப நினைவு விசாலமடைந்தது. உடுத்திருந்த சாதாரணப் புடைவைக்குப் பதில் பகட்டானதை எடுத்து அணிந்து கொண்டாள். சந்தேகத்துக்கு மறுபடியும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அவளுக்குத் திருப்தி தரும் ஒரு பூரணம் ஏற்பட்டு விட்டது. புஷ்பம் தொடுக்க உட்கார்ந்தாள். பரபரப்பாக மல்லிகைத் தொடர் நீண்டுகொண்டு வந்தது.

***

அந்த நிலையிலே தான் ஷண்முகத்தின் கண்கள் அவளைப் படம் பிடித்தன.

ஆனால் அவன் மனத்திலே எதிர்த்து விழுந்த படம் வேறு விதமாக இருந்தது.

அடுத்து, அவன் வாயிலிருந்து கிளம்பின முறிவு வார்த்தை அவள் இன்பநிலைப் பொறியைத் தட்டி அவித்துவிட்டது.

இருவரும் வாய் கொடுத்துப் பதில் வாங்க வெகு நேரம் ஆகிவிட்டது. அந்தப் பொழுது எப்படிப் போன தென்ற நினைவே இருவருக்கும் இல்லை.

‘இன்பப்பொறி அவிந்து போனது போகட்டும். வேதனைக் கனிவாவது இல்லாமல் இருந்தால் போதுமே’ என்ற ஏக்கம் சௌந்தரத்தின் கண்களில் இருந்தது.

‘வேதனை நினைவுக்குத் தூபம் போட்டு விட்ட சந்தர்ப்பத்தை நிவர்த்திக்கவேண்டுமே’ என்ற அங்க லாய்ப்பு ஷண்முகத்தின் மனத்தில்.

கணவன் தன்னைக் குத்திச் சொன்ன திலே உண்மை இருக்குமா என்று சௌந்தரம் ஆராய இடங் கொடுத் தாள். ‘இல்லை’ என்றது முதல் தீர்ப்பு . உடனே, ‘அப்படி யானால் ஏன் இத்தனை நாளும் இல்லாதபடி இன்று சந்தர்ப்பமாறுதலை உபயோகித்துக் கொண்டேன்! மனத்திலே கல்மஷம் …’ என்ற நினைவு தொடர்ந்தபோது தேகம் குலுங்கினது. அடுத்து, ‘ஆமாம், என் மனத்தில் கல்மஷம் இல்லை. ஆனால் நான் செய்திருக்கக்கூடாது, கூடாது’ என்று முடிவு செய்துகொண்டாள். ‘சௌந்தரத்தின் தோற்றத்தால் தனக்கு உண்டான நினைப்பின் தன்மையை அலச ஷண்முகத்தின் மனம் ஆழ்ந்தது. ‘ஆமாம்’ என்றது. முதல் தீர்ப்பு. உடனே, ஆனால் இதுவரை இவள் காட்டாத, ஆமாம், நான் கண்டிராத இந்த மனப்பான்மை இன்று மட்டும் திடீரென எப்படி ஏற்பட்டது?’ என்று தொடர்ந்தபோது அன்று, அவரை இங்கேயே இருக்கச் சொல்லுங்களேன். ஊருக்குப் போவானேன்?’ என்று அவள் பேசினது நினைவில் ஏறியது. மனம் சங்கடப்பட்டது. சிறிது நேரம் தொடர்ந்து, ‘சீசீ! அவள் தான் ஏதோ செய்து விட்டாள், என்னவோ நினைப்பில்! இதைப் போய்ப் பிரமாதப் படுத்தினேனே, முட்டாள்!’ என்று நினைத் தான். இருவர் நினைவுகளும் இந்த நிலையிலே வந்து நின்றன. ஊதுவர்த்தியின் கடைசிப் புகைச் சுழலும் தன் வாசனையைக் காற்றிலே கொட்டிக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே போய்விட்டது.

சௌந்தரம் ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு வாயசைத்து ஏதோ கேட்கப் போனாள். ஆண்குரல் முந்திக்கொண்டு விட்டது.

“ஹும். பாலைக் கொண்டு வா” என்றான் ஷண்முகம் திரும்பாமலே; தொனி நெகிழ்ந்து வந்தது. முந்தின இறுக்கம் அதில் இல்லை.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *