உடல் ஆரோக்கியத்திற்கு நடைப் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள் அதிகாலை நேரத்தில் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம், ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் நடைப் பயிற்சி தான்!
ஐம்பது வயசானவர்கள் நடைப் பயிற்சி செய்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது!
ஆனால் எங்கள் காலனியில் இருக்கும் பிரகாஷுக்கு என்ன வந்தது?…..அவன் கூட தினசரி வாங்கிங் போகிறான். போன வருடம் தான் படிப்பை முடித்தான். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இன்னும் கல்யாண வயசு வர வில்லை! நல்ல ஆரோக்கியத்துடன், கச்சிதமான உடம்போடு ஒரு ஹீரோ போல் இருப்பான்.
நாங்கள் இருவரும் திருச்சியில் ஒரே காலேஜில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தவர்கள். அவன் ரொம்ப வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். சுத்த சோம்பேறி. காலையில் ஒன்பது மணிக்கு எழுந்து தான் பல் துலக்குவான்.
இங்கு என்னடாவென்றால் காலை ஆறு மணிக்கெல்லாம் வாக்கிங் போகிறான். கூடவே ஒரு நல்ல நாய். ஒரு கையில் நாய் சங்கிலி. மறு கையில் செல்போன்.நவீன டிசைன் போட்ட ‘டி.சர்ட்’ கறுப்பு நிறத்தில் சிவந்த தொடைகளைப் பிடித்தவாறு டிராயர்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினசரி என் வீட்டைக் கடந்து அவன் போவதைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருக்கும்!
ஒரு நாள் வாசலில் நிறுத்தி கேட்டே விட்டேன்!
மர்மமாகச் சிரித்து விட்டு, அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னான்.
“ அட…நீ வேறு….திருச்சியிலே அக்கம் பக்கம் லேடீஸ் காலேஜூகள் இருந்தது…எந்த நேரம் பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்!…..இப்ப வீட்டோட அடைஞ்சு கிடப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு!… நம்ம காலனியிலே நாலைந்து நல்ல பிகர்கள் இருக்கு!….அவைகளை சைட் அடிக்க வேறு வழி தெரியலே!…..அதனாலே தான் நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போகிறேன்….பிகர் உள்ள வீட்டின் முன்னால் எதிரே நின்று கொண்டு சங்கிலியைப் பிடித்து இழுப்பேன்….நாய் நின்று விடும். மல ஜலம் கழிக்க முயற்சி செய்யும்! நான் வீட்டு மொட்டை மாடியில் உடற் பயிற்சி செய்யும் பிகரைப் பார்த்துக் கொண்டே செல்போனில் பேசுவது போல் நின்று விடுவேன்….வீட்டிலிருந்து யாராவது வெளியில் வந்து பார்த்தால், நான் செல்போனில் பேசிக் கொண்டிருப்பேன். நாய் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும். தப்பா நினைக்க முடியாது!…இதே போல் நான்கு ஐந்து சைட்களையும் பார்த்த பிறகு தான் வீடு திரும்புவேன்…..அப்பத்தான் கொஞ்சம் தெம்பா இருக்கும்!……”
“அட…பாவி….‘வாக்கிங்’கை இதற்கு கூடப் பயன் படுத்த முடியுமா?….”
“ சும்மா!…….ஒரு ஜாலிக்குத் தான் பிரதர்! …” என்று சிரித்துக் கொண்டே தன் பயணத்தை அவன் தொடங்கினான்.