“சாமீய்! சாமீய்!” என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது.
குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது.
அப்புசாமியை எழுப்பினாள், “எழுந்திருங்கள். அவர் வந்திருக்கிறார்…குட் காட்! ஒன் ஆப்டர் ஒன்னாக எத்தனை போர்வை? சீக்கீரம் எழுந்து முகம் கழுவிக்கொண்டு போய் உட்காருங்கள்,” என்றாள் சீதாப்பாட்டி.
அப்புசாமியின் தூக்கமும் துப்பட்டியும் உயிரும் உடம்பும் போல. ஒன்று இல்லையேல், மற்றொன்று இயங்க முடியாது.
ஆகவே முனகலுடன் துப்பட்டியை மீண்டும் தேடினார்.
“ஹி இஸ் வெய்ட்டிங் ஐ ஸே!” என்று பரக்கென்று துப்பட்டியைப் பறித்தாள்.
“வந்தவர் என்னையே பார்க்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? நீதான் உன் தலையைக் கொஞ்சம் காட்டேன்! என் கண்ணோ இல்லையோ?” என்று ஹாஸ்யமாகக் கொஞ்சம் காக்கா பிடித்தார் அப்புசாமி.
சீதாப்பாட்டி, “ஹே ராம்!” என்று தலையில் அடித்துக் கொண்டாள். “உங்கள் நாக்கை எலக்ட்ரிக் அயர்னாலே சுட! உங்கள் பார்பர் வந்திருக்கிறான் பார்பர்! என்னைத் தலையைக் காட்டச் சொல்கிறீர்களா யூ…யூ…யூ…” சீதாப்பாட்டி தலையணையை எறிந்தாள். துப்பட்டியைப் பறித்துக் கடாசினாள். ஜமுக்காளத்தை, மெத்தையை, கட்டிலை, சுருக்கமாக அப்புசாமியைப் பறித்து வீசினாள்.
கட்டிலிலிருந்து விழுந்த அப்புசாமி தன் இமாலயத் தவறு தெரிந்து, “ஹிஹி! தெரியாமல் சொல்லி விட்டேன். சீக்கிரம் ஒரு நமஸ்காரம் செய். கல்ப கோடி காலம் கட்டுக் கழுத்தியாக இரு. தீர்க்க சுமங்கலி பவ!’ என்று வாழ்த்தி விடுகிறேன்,” என்று பரிகாரம் சொன்னார்.
சீதாப்பாட்டி அவசர அவசரமாகக் கண்ணாடிமுன் சென்று, அரை அங்குல டயாமீட்டரில் குங்குமம் இட்டுக் கொண்டு திரும்பினாள். பல் தேய்க்காவிட்டாலும் பரவாயில்லை என்று தலையில் ஒரு முழச் சாமந்திப் பூவைச் சுற்றிக் கொண்டு ஒரு வழியாக ‘எமர்ஜன்ஸி’ நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு பற்பசையும் பிரஷ்ஷ¤மாகப் புறக்கடைக்குப் புறப்பட்டாள்.
நடமாடும் முடி திருத்தக வித்தகர் முனுசாமி. சீதாப்பாட்டியின் தலையைக் கண்டதும் கத்தியைத் தீட்டிக் கொண்டே, “வணக்கம்மா. ஐயா எழுந்திருக்கலீங்களா இன்னும்?….” என்று வினவினான்.
சீதாப்பாட்டி அவன் கத்தி தீட்டுவதைப் பார்க்க அச்சப்பட்டவளாக ஓடியே விட்டாள் புறக்கடைக்கு.
அப்புசாமி வேண்டுமென்றே, ஒரு ஆர்டினரி தந்தியைக் காட்டிலும் குறைவான வேகத்தோடு சாவகாசமாய் வந்தார்.
முனுசாமி தயாராக நாற்காலி போட்டு வைத்திருந்தான். கிண்ணத்தில் தண்ணீர் ரெடி. சீப்பு, சோப்பு, பிரஷ், கத்தி, கண்ணாடி அனைத்தும் ‘ரெடி.’
அப்புசாமி ஓர் அனைத்துக் கருவிப் பார்வை பார்த்தார்.
அதோ! அந்த யந்திரம்!
அதைக் கண்டதும் அவரது கிராப் மயிர்க்கூச்செறிந்தது. பல்லுப்போன பாடாவதி டிராக்டர் மாதிரி அவர் தலையை அந்த யந்திரம் உழுகிற ஹிம்சையை அவரால் தாளவே முடியாது. ஒரு தடவையாவது முனுசாமி தன் யந்திரம் கோளாறானது என்று ஒப்புக் கொண்டதில்லை.
அப்புசாமி மனம் பொறாமல் ஒரு தரம் முனுசாமியின் கையிலிருந்து அந்த யந்திரத்தைப் பறித்துக்கொண்டு அவனைப் பார்த்து, “நீ என் இடத்தில் உட்கார். கொஞ்ச நேரம் நான் உனக்குச் செய்கிறேன். அப்போதுதான் வலிக்கிறதா, இல்லையா என்று தெரியும் உனக்கு!” என்று போராட்டம் செய்து விட்டார்.
சீதாப்பாட்டி “சரி. நான் ஒருவிதமாக மீடியேட் செய்து வைக்கிறேன்,” என்று தானாக முன்வந்து இனி அவன் அந்த யந்திரத்தை உபயோகப்படுத்தாமல் கத்திரியாலேயே கிராப் செய்து விட வேண்டியது என்று மத்தியஸ்தம் செய்து வைத்தாள்.
மீண்டும் அந்த யந்திரத்தை அப்புசாமி பார்த்ததும் அவரது மண்டையோடு ஜுரம் வந்தமாதிரி உள்ளுக்குள் நடுங்கியது.
“எங்கேப்பா கத்திரி?” என்றார். நடமாடும் முடிதிருத்தக வித்தகர் முனுசாமி, “கூர் பிடிப்பவன் ஊர்போய் விட்டான். சார் காத்திருக்க மாட்டாரே என்று கத்தியின்றியே கடிது வந்து வந்தேன்,” என்றான்.
முனுசாமிக்கு நல்ல வாய்வீச்சு உண்டு. கத்தி வீச்சு இல்லாத நேரத்தில் பொதுக்கூட்டங்களுக்குப் போவான்.
“நான் ஜன்னி கண்டு இறக்க வேண்டுமென்று எண்ணமா உனக்கு? முதலில் இடத்தைக் காலி செய்,” என்றார் அப்புசாமி.
“என்ன சாமி. நான் போனால் போகுது வாடிக்கையாச்சே என்று காலையில் நாஷ்டாகூடப் பண்ணாமல் ஓடி வந்திருக்கிறேன். ரொம்ப ராங்காப் பேசறியே? சும்மா உட்காரு!” என்றான்.
அப்புசாமி, அவனாவது தன்னை வலுவந்தமாக உட்காரச் செய்வதாவது என்ற கோபத்தில், “உட்காரவும் முடியாது. நிற்கவும் முடியாது. கிராப் பண்ணிக் கொள்கிறவன் நான். கிராப் செய்து கொள்ளக் காசு தருகிறவனும் நான். எல்லாவற்றுக்கும் மேலாகக் கிராப்பும் என்னுடையது. செய்து கொள்வதும், கொள்ளாததும் என் இஷ்டம். ஓகோ, அதிகாரம் செய்து பார்க்கிறாயோ?” என்று எதிர்வாதம் செய்தார்.
கத்தியைச் சரக்கென்று மடித்துப் பையில் போட்டுக் கொண்டான் முனுசாமி. கிண்ணத்திலிருந்து தண்ணீரை சரேலெனக் கொட்டினான். அவன் மீசை படபடத்தது.
“என்னைப் பற்றி பேசு. என் மிஷினைப் பத்தி மட்டும் வாய் விடாதே. பெரிய பெரிய சினிமா ஸ்டார்களும், சீமான் துரைகளும் கூட வாயை மூடிக்கிட்டுச் செய்துகிட்டிருக்காங்களாம், நீ ஒண்டிதான் என்னவோ தங்கமயிர் மாதிரி அலட்டிக்கிறே? நீ கொடுக்கிற எட்டணாவுக்கு எவன் சாமி உன்னைச் சீந்துவான்? பெரிய மன்ஸாளாயிருக்கிறே? இப்படி பேச்சு பேசிட்டியே! இன்னொரு ஆளா இருக்கணும்…”
“என்ன, தலையைச் சீவி இருப்பாயோ?”
“அடக்கிப் பேசு சாமி நாக்கை. சும்மா அலட்டாதே.”
“அட போடா! உன் மாதிரி ஆயிரம் கிருதாவைப் பார்த்திருப்பேன்!” என்று அப்புசாமி அவனது கிருதாவின் அழகைத் தாக்கினார்.
சிங்கத்தின் பிடரியில் கை வைப்பதும், முனுசாமியின் கிருதாவைப் பற்றி விமரிசிப்பதும் ஒன்றே…
“சாமி…” என்று சாமிக்குப் பிறகு நீண்ட மெளனம் கொடுத்தான், நடமாடும் முடிதிருத்தக வித்தகர் முனுசாமி. “அம்மா மூஞ்சிக்காக உன்னை விடறேன். அவுங்க என்னை, ‘வா, போ’ என்று கூடச் சொல்லமாட்டாங்க. ‘அவரு, இவரு’ என்று மரியாதை கொடுக்கிற கொணம் அவுங்களுக்கு. நீ வெறும் ஜடம்.”
சீதாப்பாட்டி காப்பி தயாரிப்பைத் தற்காலிமாக நிறுத்திவிட்டு உள்ளிருந்து விரைந்து வந்தாள். “என்ன ‘டஸ¤ல்’ இரண்டு பேருக்கும்?” என்றவள், “ஆமாம். டுடே இஸ் மஹாளய அமாவாஸ்யை இல்லையோ? ஒய் தி ஹெல் இவரை இன்றைக்கு வரச் சொன்னீர்கள்?” என்றாள்.
அப்புசாமி, “இன்றைக்கு அம்மாவாசையுமில்லை அப்பா வெறுப்பும் இல்லை. நாளைதானே அது?” என்றார்.
சீதாப்பாட்டி, “விச் பஞ்சாங்கம் யு ரெ·பர்ட்? திருக் கணிதம் ஆர் ஆனந்த போதினி?” என்றாள்.
அப்புசாமி, “நான் ஒன்றையும் பார்க்கவில்லை. இந்த வீட்டிலே நீ பார்த்து என்றைக்கு அமாவாசை என்கிறாயோ அன்றைக்கு அமாவாசை. என்றைக்குப் பெளர்ணமி என்கிறாயோ அன்றைக்குப் பெளர்ணமி. ஒரே நாளில் இரண்டும் இருக்கிறது என்று ஒருநாள் சொன்னால் அன்றைக்கு இரண்டு இருக்கிறதாக அர்த்தம். எல்லாம் உன் ராஜ்யமாகப் போச்சு …” என்றார். சீதாப்பாட்டி வாயெடுக்கு முன் முனுசாமி கரகரத்த குரலில் பேசினான்.
“சாமி…ரொம்ப ர·பாத்தான் பேசறே? அம்மா, என்ன தன்மையாப் பேசறாங்க. ஒனக்கு நாளு தெரியுமா, நட்சத்திரம் தெரியும்? ஒரு இழவு தெரியுமா, இன்னிக்கு அம்மாஷையா இருந்தாலும் இருக்கும்.”
“டேய்! நீ சொல்லி நான் தெரிந்து கொள்ள வேண்டியதில். புறப்படு மூட்டையைக் கட்டிக்கிட்டு.”
ஒருவாறு முனுசாமி தன் கருவிகளுடன் போனதும் சீதாப்பாட்டி, “கொஞ்சம் கூட டிப்ளமஸியோ, டாக்டிக்ஸோ தெரியாதவராக இருக்கிறீர்களே! இது ட்வன்டியத் செஞ்ச்ரி. மூனைப் பிடிக்கலாமா, மார்ஸைப் பிடிக்கலாமா என்று ஸயன்ஸ் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உங்களை சாதாரணத் தலை இருக்கிறீர்கள்? வந்தவன் வந்து விட்டான். அவனிடம் ஒரு இதமாகப் பேசிக் கட்டிங்கை முடித்துக் கொண்டிருக்கக் கூடாது? ‘போலர் பேர்’ மாதிரி தலை வெள்ளை வெளுக்க வளர்ந்து கிடக்கிறது.”
“நிறுத்தித் கொள்!” என்றார் அப்புசாமி. “இவனை விட்டால் இந்தப் பட்டணத்தில் கிராப் வெட்டுகிறவனே இல்லை என்று நினைத்து விட்டாயா? இடறி விழுந்தால் சலூனில்தான் விழவேண்டும். மலபார் சலூனென்ன, சிங்கப்பூர் சலூன் என்ன, எங்கே பார்த்தாலும் சலூன்தான். அதுவும் இவன் மாதிரி பேல் தகட்டைக் கூராக்கி வைத்துக் கொண்டு, ‘வரக் வரக்’ என்று கிடைத்தாண்டா ஒரு ஏமாளிக் கிழவன் என்று சீவித் தள்ளுகிறானே அப்படியா? மோகினி அப்ரஹ¤கள் தொடுகிற மாதிரி மோவாயைத் தொடுவான்கள். அந்த நாசூக்குக்கு மட்டும் ஒரு ரூபாய் தரலாம். இவன், ஏதோ கூஜா மூடி திருகிற மாதிரித் தலையைத் திருகிக் தள்ளுகிறானே, அப்படியா?”
“ஐயோ பாவம்!” என்றாள் சீதாப்பாட்டி. “பை காட்ஸ் கிரேஸ் நான் ஆணாகப் பிறக்கவில்லை,” என்று மகிழ்ச்சி அடைந்தாள். “சரி. நல்ல பெஸ்ட் சலூனாகப் பார்த்துக் கட்டிங்கை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள். நிறையக் கிராப் வளர்ந்தால் உங்களுக்கு ஜலதோஷம் பிடித்துவிடும். புறப்படுங்கள்,” என்று கணவனைக் கிளப்பி விட்டாள்.
அப்புசாமி மனைவியின் நல்லாசியுடன் அப்போதே கிளம்பினார்.
நுழைவது நுழைகிறோம், டவுனில் போய்ப் பெரிய சலூனாகப் பார்த்து நுழைந்துவிடுவது என்று அப்புசாமி தீர்மானித்து டவுனுக்குப் புறப்பட்டார்.
டவுனிலிருக்கும் விதவிதமான ஹேர் ட்ரஸ்ஸிங் சலூன்களில் அவரை மிகவும் கவர்ந்தது ‘லேட்டஸ்ட்’ என்னும் சலூன்.
ஆங்கிலோ இந்தியர்கள்தான் அந்த சலூனில் பெரும்பாலும் செய்து கொள்வது வழக்கம்.
மிலிடிரி ஓட்டலில் மெனு போட்ட மாதிரி விதவிதமான தலையலங்காரங்களின் பெயர்களும் அது அதற்கு நேரே அதன் வெட்டுக் கூலியும் போட்டிருந்தது.
அப்புசாமி கடை வாசலில் உலவினார். கண்ணாடி ஸ்பிரிங் கதவைத் திறக்கலாமா, கூடாதா என்று யோசித்தவாறு நெருங்கினார்.
‘கிணிங்!’ என்ற மணி அடித்தது. அலறியவாறு பின்னடைந்தார். ஆனால் அதற்குள் அழகான ஓர் ஆங்கிலோ இந்திய மாது, “எஸ் ப்ளீஸ்…” என்று அவரை வரவேற்றாள். கை கொடுக்க நீட்டினாள்.
அப்புசாமி வசியம் செய்யப்பட்டவர் போல் அந்தப் பெண் பின்னால் நடந்தார்.
மொத்த கட்டிடமும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது. ஆண்கள்தான் கத்தி தீட்டக் கூடியவர்கள் என்று அப்புசாமி இத்தனை நாள் நினைத்திருந்தார். அழகான பெண்மணிகள் சலூனில் கத்தியும் கையுமாகக் காட்சி தந்தது அவருக்குப் பேராச்சரியமாக இருந்தது.
கட்டிங் செய்கிறவர்கள் அழகா, கட்டிங் செய்து கொள்ள வந்தவர்கள் அழகா என்று அப்புசாமி நிர்ணயிக்க முடியாமல் திணறினார்.
மனத்துக்குள், ‘முனுசாமியும் இருக்கிறானே, அவன் முகமும் முகரைக்கட்டையும் வெட்டும்’ என்ற எண்ணிக் கொண்டார். இதுவன்றோ சொர்க்கம்! ‘இத்தனை வயதில் இப்படிப்பட்ட சொர்க்க சுகங்களை அனுபவிக்காமல் வீணாக மயிரை உதிர்த்து விட்டோமே’ என்று வருந்தினார்.
அவரை உபசரித்து ஒரு சோபாவில் உட்கார வைத்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி ஒரு சிகரெட் பாக்கெட்டை நீட்டினாள்.
அப்புசாமி, “ஹி! நான்…நான்…கிடையாது” என்று ஒரு வழியாக மறுத்ததும் நீண்ட பட்டியல் ஒன்றையும் சிவப்புப் பென்ஸில் ஒன்றையும் தந்தாள்.
அப்புசாமி பென்ஸிலை என்ன செய்வது, பட்டியலை என்ன செய்வது என்று திணறினார்.
“ப்ளீஸ் மார்க் யுவர் சாய்ஸ்,” என்று குயில் குரலில் அந்தப் பெண் பேசினாள்.
அப்புசாமி பட்டியலைப் படிக்க முயன்றார். அதெல்லாம் ஏதோ கிராப் தினுசுகள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாள் இறைவா இறைவா!’ என்ற பாட அவருக்குத் தோன்றியது.
கிருதா முனுசாமிக்கு இரண்டே இரண்டு வகைக் கிராப்புகள்தான் தெரியும்.
ஒன்று சம்மர். இன்னொன்று மொட்டை.
“எஸ்…” என்று சட்டைக்காரி மறுபடி ஊக்கினாள்.
அப்புசாமி சட்டென்று ஒரு கிராப் தினுசை மார்க் செய்தார்.
“தட் இஸ் பைன். லெளலி சாய்ஸ்” என்று அவள் பாராட்டிவிட்டு இரண்டு பத்திரிகையை அவர்முன் போட்டுவிட்டுப் போய்விட்டாள். அவர் மார்க் செய்த கிராப் தினுசின் பெயர் ‘பெர்மனென்ட் வேவிங்’
கால்மணி கழிந்தததும் ஒரு பஸ்ஸர் வீரிட்டது. பளிச் பளிச்சென்று ஒரு விளக்கு எரிந்தது.
அப்புசாமியை, “எஸ் ஸார். கம் இன்” என்று ஒரு பெண் அழைத்துப் போனாள். பின்னல் போட்டுக் கொள்ளாத ரம்பை மாதிரித் தோற்றமளித்த ஒரு சட்டைக்காரப் பெண்மணி அப்புசாமிக்குக் கட்டிங் செய்யத் தொடங்கினாள்.
குஷன் நாற்காலி மிகச் சுகமாக இருந்தது. எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அப்புசாமியின் தோற்றம் பதினாறு கோணங்களிலும் தெரிந்தது. மகா பாரதத்தில் அர்ஜுனன் சாட்சாத் கிருஷ்ணனது விராட் சொரூபத்தைப் பார்த்து மகிழ்ந்ததற்கொப்ப அப்புசாமி இறும்பூது எய்தார்.
இனிய நறுமணம் அவரைப் புளகாங்கிதமடையச் செய்தது. கட்டிங் செய்து கொள்ளும் உணர்வே இல்லை. கத்திரிக்கோலென்ன, மிஷின் என்ன எல்லாம்தான் உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால், ஒரே ஒரு மயிர்க்கால் கூட அவருக்கு வலிக்கவில்லை.
ஆனால் அவரது மனச்சாட்சிதான் மிகவும் உறுத்திற்று.
‘ஒரு பெண் பிள்ளையிடம் தான் கிராப் செய்து கொள்கிறோமே, இது நியாயமா? சீதாவுக்குச் செய்யும் துரோகமா?’
அந்தப் பெண்மணி பேசாமல் வாய் மூடியவளாகக் கிராப் செய்தது அப்புசாமிக்கு நிம்மதியாக இருந்தது. ஏதாவது இங்கிலீஷில் பேசித் தொலைத்தால் பதில் கூறியாக வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது.
அதைச் தவிர்க்கச் சட்டென்று யோசனையும் தோன்றியது.
தூங்குவதுபோலச் சுகமாகக் கண்ணை மூடிக்கொண்டு விட்டார். போலியாக மூடிக்கொண்டவர், அங்கிருந்த சுகச் சூழ்நிலையில் நிஜமாகவே தூங்கி விட்டார்.
அரை மணி கழித்துக் கண் விழித்தால், அவரது உருவத்தைக் கண்ணாடியில் காணோம். யாரோ கண்ணாடியில் இருந்தார்கள்.
ஒரு தட்டில் பில் ஒன்று அவரிடம் நீட்டப்பட்டது. ரெண்டு ரூபாய் பத்துபைசா என்று அதில் போட்டிருந்தது. மேடும் பள்ளமுமாக கிராமத்து ரஸ்தா மாதிரி இருந்தது தலை. “அவ்வளவுதானா” என்றார் சந்தேகத்துடன்.
“எஸ் வெரி·பைன்!” என்று அந்தப் பெண்மணி சொன்ன மறுகணம் பளிச் பளிச்சென்று விளக்கு எரிந்தது.
அப்புசாமி தலையைத் தடவிக் கொண்டார்.
அவர் வெளியில் போகலாம் என்று அர்த்தம். மரியாதையுடன் வழிகூட்டி வந்து, வாசல் வரை உபசாரம் செய்து அனுப்பி வைத்தாள் ஒரு பெண்மணி.
அப்புசாமி தெருவுக்கு வந்ததும், செய்த முதல் காரியம் டபக்கென்று அங்கவஸ்திரத்தால் தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டதுதான்.
“சீதே, சீதே,” என்ற ஈனஸ்வரம் எங்கோ முணு முணுத்தது. சீதாப்பாட்டி கடைசியில் அது புறக்கடையிலிருந்து வருகிறது என்று அறிந்து எட்டிப் பார்த்தாள்.
அப்புசாமி தலையைப் போர்த்துக் கொண்டு பெண் வேடம் போட்ட ஆண், வில்லன்காரனைச் சினிமாவில் ஏமாற்றுவானே, அந்த மாதிரி மோசடி செய்தார்.
“ரிமூவ் யுவர் பர்தா! எனக்கு விளையாட நேரமில்லை. தலையில் தண்ணீரைக் கொட்டிவிட்டுப் போகிறேன்.” என்றதும் அப்புசாமி, மெதுவே, மெதுவே, மெதுவே தன் தலைத் திரையை அகற்றினார்.
சீதாப்பாட்டி, “ஹா ஹா! ஹா! ஹாரிபிள்! இதென்ன கோலம்? செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ் மாதிரி அந்த ‘விக்’ எதற்கு? அந்த விக்கைக் கழற்றி எறியுங்கள்!” என்றாள்.
“விக்காவது கிக்காவது? என் தலையேதான் அது! சீதே…சீதே…சீதே.” என்ற அப்புசாமிக்குக் குரல் தழ தழத்தது. ‘இந்தத் தலையோடு எப்படி சீதே நான் தெருவில் நடப்பேன்?”
சீதாப்பாட்டி இடிந்துபோய் உட்கார்ந்து விட்டாள். “மண்வெட்டியாலே யாரோ கிராப் செய்த மாதிரி இருக்கிறதே? இது என்ன மாடர்ன் ஆர்ட்? அதற்கு உங்கள் தலைதானா அகப்பட்டது?” என்றாள். அவளுக்கும் கவலை வந்து விட்டது. “பெருச்சாளி பிராண்டிய மாதிரி இப்படியா ஒரு கட்டிங்! எந்த சலூன்?” என்றாள்.
“பெரிய சலூன்தான். இங்கிலீஷ்காரன்களெல்லாம் செய்துக்கிறான்கள்,” என்றார் அப்புசாமி.
“நாசமாய்ப் போக! தலை மறுபடி நன்றாக வளர்கிற வரை மாடி ரூமிலேயே கிடங்கள்! நோ அதர் கோ,” என்றாள்.
அப்புசாமி, “சீதே! சீதே! கொஞ்சம் தயவு செய்… வேறு வழி இருக்கிறது” என்று கெஞ்சினார். “இந்த மயிர் வளருகிறதோ, இல்லை, ஏதாவது வளரவே வளராதபடி செய்திருக்கிறார்களோ? அதுவரை நான் எப்படி ரூமில் அடைந்து கிடப்பேன். தயவு செய்து நம்ம பழைய முனுசாமியையே எப்படியாவது வரச் சொல்லி…”
“வரச் சொல்லி?…”
சீதாப்பாட்டியை அடுத்த சில நாள் பார்த்தவர்கள், “உங்கள் கணவருக்கு எந்த ஊர் பிரார்த்தனை? பழனியா, திருப்பதியா? சொல்லவே இல்லையே?” என்று கேட்டார்கள்.
“சும்மா. ஒரு ‘சடனா’த் தோன்றியது. பழனிக்குப் போய்விட்டு வந்தார்.” என்று சீதாப்பாட்டி பர்த்தாவுக்காகப் பொய் சொல்ல வேண்டியிருந்தது.
அபாரமான நகைசுவை கதை அட்டகாசம். அடக்கமுடியாத சிரிப்பு