வளவளா வைரஸ்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 10,799 
 

“டைனிங் டேபிள் மேலே காப்பி வைச்சேன். குடிக்கிறதுக்கென்ன?” என்றாள் சீதாப்பாட்டி.

“சீதே! காப்பி என்கிறது ஒரு குடும்பத்துக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கிறது. அதைக் குடிக்கிறப்போ உடம்பும், உள்ளமும் தெம்பாயிருக்கு. எப்போ நம்ம உடம்பும் மனசும் தெம்பா இருக்குதோ அப்போது நாம செய்யற காரியமும் நல்ல விதமாக இருக்கும்கிற உண்மையை யார் மறுக்க முடியும்? ஓட்டலிலே கட்டைவிரல் உயரத்துக்கு ஒரு டம்ளர்லே காப்பி தர்ரான். ஆறு ரூபா விலை. வீட்டுக் காப்பின்னா விலை மலிவு. அளவும் அதிகம். வீட்டுக் காப்பிலேயும் மனைவி கையாலே போட்டுத் தர்ர காப்பி ரொம்ப விசேஷம். அதிலே தண்ணிப் பால் இருக்கு, நீத்துப்போன செகண்ட் டிகாக்ஷன் இருக்கு, ஜில்லிப்பு இருக்கு. அளவும் அதிகமா இருக்கு” என்றார் அப்புசாமி.

“சரி, சரி. காப்பியைக் குடிச்சிட்டு கிச்சன் தொட்டியிலே ரெண்டொரு பாத்திரம் இருக்கு. அதையும் க்ளீன் பண்ணிடுங்கோ ஸர்வண்ட் மெய்ட் ஆப்ஸண்ட்.” சீதாப்பாட்டி கடுகடுத்தாள்.

“சீதே, வேலைக்காரிகள் கட் அடிக்கிறதென்பது சகஜம். ஆனால் அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. ரேஷன் வாங்கப் போயிருக்கலாம். இல்லாட்டா தலையை காலை வலித்திருக்கலாம். அவளுக்கும் குடும்பம்னு ஒண்ணு இருக்கு இல்லையா? நம்ம வீட்டுக்கு வேலைக்கு வர்ரதுக்கு முன்னேயே அவள் அவளோட குடும்பத்துலே ஒருத்தி. ஓரொருத்தரும் ஊருக்கு உழைத்தாலும் தன் குடும்பத்துக்குச் செய்யவேண்டிய அடிப்படைக் கடமைகள் சிலதைச் செய்துதானே ஆகணுமாயிருக்கு. பொதுவாக வேலைக்காரிகள் லீவ் போடறதை எல்லாருமே குத்தமாப் பேசறாங்க. அது தப்பு. ஞாயிற்றுக்கிழமையிலே கூட அவளை வரச்சொல்றாங்க. வருஷத்துக்கு இத்தனை நாள் லீவுன்னு அவளுக்கு யாரும் லீவ் தராதபோது அவளாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.” அப்புசாமி பேசிக்கொண்டே போனார்.

“மை குட்னஸ்… ஏன் இப்படி வளவளன்னு பேசறீங்க?” சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டாள்.

“வளவளன்னு பேசறேனா சீதே… மன்னிச்சுக்கோம்மா. ஒரு குடும்பம்னு நாலு பேரு இருந்தா. நாலு பேரு நாலு விதமாத்தான் இருப்பாங்க… சீதே, வேதத்தைப் பத்தி நாம பெருமைப்படறோம். நம்ம நாராயணன் பொண்ணு வேதம்னு நீ மண்டையைப் போட்டுக் குழப்பிக்காதே. நான் சொல்றது விதவிதமாத் தாடி வெச்சிட்டு ரிஷிகள் இருந்தார்களே அந்த வேதம். அந்த வேதம்கூட பாரு. நாலு வேதம்னு சொல்லுவாங்க. அது மாதிரி பேச்சிலே கூட நாலு விதம் இருக்கலாம். தப்பில்லே. வளவளன்னு நான் பேசறதாக நீ சொல்லறது எனக்குப் புரியாமலில்லை. ஆனால் விஷயத்தை நல்லா எடுத்துச் சொல்லணும்னா கொஞ்சம் வளவளன்னு பேசறதிலே தப்பில்லேன்னு தோணுது சீதே… வளவளப் பேச்சு எனக்கு ஏன் பிடிக்குது தெரியுமா? அது என் வருமானத்துக்கு ஏத்த தரமான பேச்சு.”

அப்புசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சீதாப்பாட்டி குளியலறைக்குள் சென்ற பிறகும் தனது டயலாக்கை அவர் முடித்த பாடில்லை.

குளித்து முடித்து கமகம சந்தன வாசனையுடனும் அங்கங்கே சிந்தும் ஈரத்துளிகளுடனும் சீதாப்பாட்டி வெளியே வந்தபோதும் அவர் பேசிக் கொண்டிருந்தார்:

“அதனாலே சீதே, வளவளன்னு பேசறதானே நன்மையும் இருக்கு. கெடுதலும் இருக்கும்மா… எந்த விஷயமானாலும், அது நல்லதோ பொல்லாததோ சட்டுனு அதன் மேலே வெறுப்பு வந்துடக்கூடாது. வெறுப்புன்னு இல்லே, விருப்பும் வந்துடக்கூடாது. எந்த விஷயத்துலேயும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். தங்கம்கூட மண்ணுலே கலந்துதான் இருக்குது. அப்புறம் அதை உருக்கிக் கிருக்கி வெளியிலே கொண்டு வர்றாங்க.” 
 
“ப்ளீஸ்!” சீதாப்பாட்டி கூவினாள்: “கான்ட் யூ ஷட் அப் யுவர் மெளத் அண்ட் கீப் கொய்ட் ·பர் ஸம் டைம்…”

“சீதேம்மா.. நான் இப்போ கீரை வாங்கிட்டு வர மார்க்கெட் போகலாம்னு இருக்கேன். மார்க்கெட் போகலாமா, இல்லே, வாசலிலே கீரை வண்டிக்காரன் வருவான்னு காத்திருக்கிறதா? வாசல்லே ரெண்டு கட்டு அஞ்சு ரூபா. மார்க்கெட்டுல மூணு கட்டு அஞ்சுரூபா. ஆனால் இதுக்கும் அதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டும்மா. கீரை வண்டிக்காரன், கீரையை மட்டும் கவனம் செலுத்தி கட்டு கட்டறதாலே சுத்தமாச் செய்யறான். கட்டுக்குள்ளே புல்லு, புதரு, கண்ட தழைகள் அவ்வளவா இருக்காது. மார்க்கெட் கீரைக் கட்டுன்னா, அவன் பலவகைக் காய் விற்கிறவன். கீரை என்கிறது அவனுக்குப் பத்தோடு பதினொண்ணு. பிரிச்சு சுத்தம் பண்ணிக் கட்டி வெச்சிருக்க மாட்டான்.”

“இன·ப்! இன·ப்!” என்று சீதாப்பாட்டி தன் அறைக்கதவைப் படீரென்று அடித்துச் சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.

அவள் மனசு நிம்மதியை இழந்து ஒரு வாரமாயிற்று.

கொஞ்ச நாளாக அப்புசாமி எதைப் பேசினாலும் நீள நீளமாகப் பேசத் தொடங்கியிருந்தார்.

‘இப்படி நீள நீளமாகப் பேசறது என்ன வகை ·போபியா? இதை எங்கிருந்து பிடித்தார்?’ என்று மன உளைச்சல் பட்டுக் கொண்டாள்.

சீதாப்பாட்டி பெங்களூர் இந்திரா நகரில் பா.மு.கழகத்தின் கிளை ஒன்று துவக்கும் விஷயமாக திருமதி வசந்தா பாத்ருடு என்பளோடு தங்கியிருக்க நேர்ந்தது.

வசந்தா பாத்ருடு பெரிய பணக்காரி. அவள் கணவர் பாத்ருடு கர்நாடக அரசில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். சென்னையில் நடைபெறும் கன்னட மொழிப் பள்ளிக்குத் தாளாளர், தோளாளர், வேளாளர் எல்லாம் அவர்தான்.

“சென்னை லேடீஸைவிட, உங்க பெங்களூர் லேடீஸ் மோர் ஸொ·பஸ்டிகேடட் ஆஸ் வெல் எஜுகேடட்… அப்புறம் மச் மோர் லிபரேடட்.. என்று நினைக்கிறேன்…” என்று சீதாப்பாட்டி ஒரு கடிதத்தில் அவளைப் புகழ்ந்து தள்ளியிருந்தாள்.

திருமதி பாத்ருடு மகிழ்ந்துபோய் உடனே பாட்டியை கழகக் கிளை விஷயம் பேச நேரில் வரச்சொல்லி ஈமெயிலில் செய்தி அனுப்பிவிட்டாள். சுடச்சுட மறு ரயிலில் சீதாப்பாட்டி பெங்களூர் பயணமாகி திருமதி பாத்ருடுவின் சிறப்பு விருந்தாளியாக பெங்களூர் இந்திரா நகரில் தங்கி ஜெய் நகர், ராஜாஜி நகர். சிவாஜி நகர் என்று எல்லா நகர்களையும் ஆராய்ந்துவிட்டு ஒரு வழியாக நகர்ந்து சென்னை திரும்பினாள்.

டாக்ஸியில் வந்து இறங்கியவுடன் அப்புசாமியிடம், “ஒரு டிரைவரைப் பிடித்து ஸ்டேஷனுக்கு வந்து என்னை ரிஸீவ் பண்ணத் துப்பில்லை உங்களுக்கு..” என்று சீறினாள். அப்புசாமி சாதாரணமாக இந்த மாதிரி சீறல் சமயங்களில் உடனே பதில் சொல்வது சுருக்கமாகக்த்தானிருக்கும்.

“ஆமாம். வரலை. தலையை சீவிடுவியா” என்பதுபோல ஏதாவது பதில் சொல்வார்.

ஆனால் அன்றைய தினம் பெரீய பிரசங்கமே பண்ணிவிட்டார்:

“சீதேம்மா… உன் கோபம் நியாயமானதுதான். சென்ட்ரல் ஸ்டேஷனிலே என்னதான் நிர்வாகம் வசதி பண்ணிக் குடுத்திருந்தாலும் டாக்ஸிக்காரரோ ஆட்டோக்காரரோ, மேற்கொண்டு துட்டு கேட்கத்தான் கேட்கிறார்கள். ரொம்ப கரீட்டா நீ அவுங்ககிட்டே இருக்க முடியாது. லக்கேஜோடு நீ வர்ரே. டாக்ஸிக்காரன், “நுங்கம்பாக்கம்னு பேசினீங்க. இறங்குங்க, நுங்கம்பாக்கம் வந்தாச்சு”ன்னு ஈகா பாலம் இறங்கினதுமே இறங்கச் சொன்னாலும் சொல்லலாம். அங்கிருந்து நம்ம வீட்டுக்கு வர நீ இன்னொரு ஆட்டோ பிடிக்கறாப்பலே ஆயிடும்.. உன் கட்சியைப் பொறுத்தவரை நீ நினைக்கிறது சரி. ஆனால் சீதேம்மா. எந்த விஷயத்துக்கும் ரெண்டு பக்கங்கள் உண்டு. டாக்ஸிக்காரனின் கட்சியை எடுத்துக்கிட்டு ஆராய்ந்து பார். ஏறுகிறப்போ நுங்கம்பாக்கம்னு மொட்டையா துட்டு பேசிகிட்டு, நுங்கம்பாக்கத்துலே இருக்கிற எல்லாச் சந்து பொந்துக்குள்ளேயும் சுத்தறவங்க எவ்வளவு பேர் இருக்ககாங்க. அதையும் பார்க்கணும். மீட்டருக்கு மேலே துட்டு கேட்டாலும் தப்புங்கறோம்… அதனாலே சொந்தமாக கார் வசதி இருக்கறவங்க கார்லே வர்ரதைத்தான் விரும்புவாங்க. ஆனால் உன் மாதிரி சில கஞ்சப் பெசாசுங்க கார் வெச்சிக்கிட்டாலும் சொந்த டிரைவர் வெச்சிக்க

கணக்குப் பார்க்கிறாங்க!”

“என்னாச்சு ஒங்களுக்கு? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு… யு ஆர் கோயிங் ஆன். லெக்சரிங்… டிகாக்ஷன் போட்டு வெச்சிருக்கீங்களா?” என்றாள் சீதாப்பாட்டி. “தலைவலி மண்டையைப் பிளக்குது…”

“சீதேம்மா, டிகாக்ஷன் போடறது ஒரு பெரிய காரியமில்லேம்மா… ஆனால் உனக்கு நான் காப்பி போட்டுத் தரக்கூடாது, ஏன்னா நான் போடற காப்பி நல்லாயிருக்காது. நீயோ பரதேவதை. சாட்சாத் அந்த காளி. நல்லா இல்லாத ஒண்ணை தெய்வத்துக்கு சமர்ப்பணம் பண்ணக்கூடாது. வெறும் பணம் வேணும்னா பண்ணிக்கலாம்… ஹி ஹி…” பஞ்சபாண்டவர்களிலே தர்மராஜா யுதிஷ்டிரன் தனது பாவங்களையெல்லாம் கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் பண்ண நினைச்சானாம். அப்போ பீமன், ‘உங்கள் பாவங்களை கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் பண்ணாதீங்க. ஏன்னா கிருஷ்ணன் மனுஷன் இல்லே. சாமி, தெய்வம். எதைச் சாமிக்கு அர்ப்பணம் பண்ணினாலும் பண்ணினவங்ககிட்டேயே வந்து சேரும். அதனாலே பாவத்தை பகவானுக்குப் படைக்கவேணாம். அந்தப் பாவமும் பல மடங்கு பெருகி உங்ககிட்டே வந்து சேர்ந்துடும்”னானாம். நான் உனக்கு மோசமான காப்பியைக் கொடுத்தால் அது பல மடங்கு மோசமாக எனக்கு வந்து சேரும்டியம்மா… அதுவுமில்லாமல்…” அப்புசாமி தொடர்ந்தார்.

சீதாப்பாட்டி காதைப் பொத்திக் கொண்டாள்.

“மை குட்னஸ்! இந்த ஒரு வாரத்துலே உங்களுக்கு என்னவோ பெரிசா ஆயிட்டுது. நான் ஊரிலே இல்லாதப்போ டிட் யு அடெண்ட் எனி காலட்சேபம்?”

அப்புசாமி சுவாரசியமாக ஆரம்பித்தார்: “சீதே நம்ம மண்ணுலே பொறந்த ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு ராமாயணமும் ஒரு பாரதமும் இருக்குது. அதைச் சிலபேர் மேடை ஏறிச் சொல்லறாங்க. ஆனால் பலபேருக்குக் குடும்பம்தான் மேடை. அவுங்க குடும்பத்துலே வாழ்ந்துகிட்டே நல்ல நல்ல நீதிங்களை எடுத்துச் சொல்றாங்க.”

அப்புசாமி வளவளவென்று பேசுவது சீதாப்பாட்டிக்குப் பெரிய கவலையாகிவிட்டது.

மனோதத்துவ டாக்டர் அமிர்தகடேஸ்வரனிடம் சீதாப்பாட்டிஅப்பாயின்ட்மென்ட் வாங்கி விட்டாள்.

டாக்டர் அமிர்தகடேஸ்வரனின் பங்களா. முன்பகுதியில் கிளினிக் பின்பகுதியில் அவரது குடியிருப்பு. கன்ஸல்டேஷன் அறையில் பல துணித் திரைகள் தொங்கும். தடாலென்று எந்த ஒரு திரையையாவது நீக்கிக்கொண்டு தூணிலிருந்து வெளிப்படுகிற திடீர் நரசிம்மம் மாதிரி ரூமுக்குள் பிரவேசிப்பார்.

டல்லான வெளிச்சம். ஜன்னல்களுக்கு நிழல் கண்ணாடி.

“என்னய்யா உங்களுக்கு? நல்லாத்தானே இருக்கீங்க?” என்று அப்புசாமியைப் பார்த்துச் சொல்லி விட்டுத் தொடர்ந்து பேசினார்: “ஒரு கணவனை சட்டுனு நல்லவன்னும் சொல்லிடக் கூடாது. பைத்தியம்னும் முடிவெடுத்துடக் கூடாது. வயசாகும்போது மூளைக்குப் போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கிறதில்லே. வாக்கிங் போறீங்களில்லையா? வயசானவங்களுக்கு வாக்கிங்தான் பெஸ்ட் மருந்து. நீங்க சதா கார் ஓட்டிகிட்டே இருப்பீங்க, அப்படித்தானே மிஸ்டர். நடங்க நடங்க. வாழ்க்கையிலே நல்லா நடந்து வந்திருக்கீங்க. அதெல்லாம் பிறத்தியாருக்காக நீங்க இத்தினி நாளாக நடந்தது. வயசான பிறகு உங்களுக்காக நீங்க நடக்கணும். நிறைய வேலை செய்யணும். சதா படுத்துக்கிட்டிருப்பீங்க. அது கூடாது. கடைக்குப் போங்க… வாங்க. மனைவிக்கு உதவி செய்யுங்க… ஹஹஹ! பாத்திரம் கீத்திரம் கூட ஆத்திரம் வராமல் தேய்க்கலாம். குனிஞ்சு வீடு பெருக்குங்க. சரி! உங்களுக்கு என்ன உடம்பு… நீங்களே உங்க வாயாலே சொல்லுங்க. சில நோயாளிங்களாலே தனக்கு இன்ன கோளாறுன்னே சொல்ல வராது. உங்களைப் பார்த்தால் எனக்கு அப்படித் தோணலை. பர்பெக்ட்லி ஆல்லைரட் ஜென்டில்மேன் மாதிரி எனக்குத் தோணுது.”

டாக்டர் வளவளன்னு பேசப் பேச சீதாப்பாட்டிக்கு நம்பிக்கை தளர்ந்து கொண்டிருந்தது.

‘வளவள பேச்சைக் குறைக்கச் சொல்லி வைத்தியத்துக்கு வந்தால் டாக்டரே பெரிய வளவளவா இருக்கிறார். ரைட் பர்சன்கிட்டே வரலையோ?’

“டாக்டர்!” என்றாள்: “கொஞ்ச நாளா இவர் வளவளன்னு பேசறார். ஏன்னு தெரியலை. நான் லாஸ்ட் வீக் பெங்களூர் போயிட்டு வந்தேன். வந்ததிலிருந்துதான் இவர்கிட்டே இந்த சேஞ்ச்!”

“என்ன மாமா பண்ணினீங்க… தனியா இருந்தப்போ…” என்றார் டாக்டர் சிரித்தவாறு.

“வந்து…வந்து” என்று தயங்கினார் அப்புசாமி”. அப்புறம் ஒரே கடகட: “என் பெண்சாதி சீதேப் பேயி இருக்காளே ஊரிலே இருந்தான்னா, ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம்… அதாவது அறுபது வினாடி கூட என்னை டி.வி. பார்க்க வுடமாட்டாள். நான் எனக்குப் புடிச்ச சானல் எதையாவது போட்டால் உடனே ரிமோட்டைப் பிடிங்கிக்கிட்டு பட்டுனு வேற சானல் மாத்திடுவா.

அதனாலே இவள் ஊருக்குப் போன ஒரு வாரமும் ஆசை தீர எனக்குப் புடிச்ச எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்துத் தீர்த்தேன். காத்தாலேயும் மத்தியான நேரத்துலேயும் ராத்திரியிலும் எத்தனை எத்தனை சானலில் எத்தனை எத்தனை தினுசா நாடகங்கள் இருக்கோ எல்லாம் தொடர் நாடகஙகள், குடும்ப நாடகங்கள், ஒரு நாளைக்குச் சுமார் முப்பது நாடகம் நடக்குது. நான் ஆசை தீர அத்தனையையும் பார்த்து அனுபவிச்சேன். டாக்டர்… எல்லா நாடகமும் படா சுவாரசியமா இருந்தது. அட அட! ஓரொரு பாத்திரமும் பேசுவாங்க பாருங்க. என்ன தத்துவம்… என்ன சுவாரசியம். என்ன விளக்கம். என்னா ஒரு சுவாரசியம். ஒரு குழந்தை பேசினாக்கூட என்ன தெளிவு. எவ்வளவு நீளப் பேச்சு. கருத்தோடு கூடின பேச்சு. நாள் பூராக் கேட்டுகிட்டே இருக்கலாம்.

எனக்கும் அப்படியே பேச வந்துட்டுது! தப்பா டாக்டர்! நல்ல விஷயம்னா நீட்டி நீட்டித்தான் பேசணும்.

ஹ¥ம்… அந்த சுகமெல்லாம் டாக்டர், அவள் வந்ததும் பொய்யாய்க் கதையாய்ப் பழங்கனவாப் போயிட்டுது டாக்டர். நான் ஒண்ணு உங்களைக் கேட்கறேன் டாக்டர். ஒரு வீட்டிலே ஒரு டி.வி.க்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல்தான் தர்ராங்க. குறைஞ்சது ரெண்டு தரணும் டாக்டர். பெண்டாட்டிக்கு ஒண்ணு, புருஷனுக்கு ஒண்ணு. இவன் ரிமோட்டை அழுத்தினால் அவள் வேற சானல் அழுத்தாதபடி ஸ்விட்ச் இருக்கணும். ரெண்டு பேரும் சேர்ந்து ஒத்துமையா ஒரு நம்பரை அழுத்தினால்தான் டி.வி. வேலை செய்யணும்… ஐயோவோட ஐடியா நல்லாருக்குதா டாக்டர்.”

“பெரீவரே!” அப்புசாமியை டாக்டர் அமிர்தகடேஸ்வரன் எழுந்து கட்டிக்கொண்டார்: “நான் அதிர்ஷ்டசாலி! யாரை இத்தனை நாள் தேடிக் கொண்டிருந்தேனோ அந்த ஆசாமி கிடைச்சாச்சு! அந்த ஆசாமி நீங்கதான் மிஸ்டர். பெரீயவர்… நான் ஒரு தனியார் டி.வி.க்காக நாடகம் தயாரிச்சிகிட்டு இருக்கேன். நானும் நடிக்கறேன். எவ்வளவோ விஷயம் வெச்சிருக்கேன். நிறைய டயலாக் இருக்கு. அதை வாங்கிப் பேசற திறமைசாலியைத் தேடிகிட்டிருந்தேன். இப்ப டி.வி. நாடகங்களிலே டயலாக் பேசறவங்களெல்லாம் சேர்ந்தாப்பலே பத்து நிமிஷம்தான் பேசறாங்க… அது போதாது… பதினைஞ்சு நிமிஷமாவது சேர்ந்தாப்பலே பேசறவங்கதான் எனக்கு வேணும்… மேடம், உங்க புருஷரை என்கிட்ட நீங்க கொண்டு வந்த சேர்க்கலை, அந்தத் தெய்வம்தான் கொண்டு வந்து சேர்த்தது. இப்பவே காண்ட்ராக்ட் போட்டுடலாம். நான் முன்னூற்று அறுபத்தைந்து எபிஸோடு தயாரிக்கிறதா இருக்கேன். ஒரு எபிஸோடுக்கு எவ்வளவு தொகை வேணும்னு சார் தீர்மானிச்சு சொல்லட்டும்!”

டாக்டர் அமிர்தகடேஸ்வரர் பேனாவை எடுத்தார். பிரிஸ்கிரிப்ஷன் எழுத அல்ல; அப்புசாமியை ஒப்பந்தம் செய்ய.

சீதாப்பாட்டியிடம் அப்புசாமி, “ஏமே! இன்னா துட்டு கேட்கலாம். ஒரு எபிஸோடுக்கு நூறு ரூபாயாவது தந்தாத் தேவலை. அப்புறம் படம் முடியறவரை நாஷ்டா காப்பி கீப்பி அவரோட செலவுதான்… கண்டிஷனாச் சொல்லிடு. ஒரொரு வெற்றிகரமான ஆம்பிளைக்குப் பின்னாலும் பொம்பிளை இருக்காங்கறாங்க. நான் சொல்றேன். பெண்சாதி எப்பவும் கூடவே ஒட்டிகினு இல்லாமல் அப்பப்ப புருஷன்காரனுக்கு லீவ் கொடுத்துட்டு அவள் எங்கனாத் தொலைஞ்சிடணும். அந்த மாதிரி புருஷன்தான் விதை மாதிரி செழுமையா வளருவான்… ஒருத்தனுக்கு எப்பப் பார்த்தாலும் பெண்சாதி நிழலாட்டம் கூடவே இருந்தால் சொதந்திரமா அவன் உலகத்தை எப்படிப் பார்க்க முடியும்… நான் என்ன சொல்றேன்னா… தம்பதிங்க என்கிறவங்க ஒற்றுமையா இருக்கிறது அவசியம்தான். ஒற்றுமைங்கிறது வேற, ஒட்டிக்கிட்டே பிசினாட்டம் இருக்கிறது வேற. வேற்றுமையிலே ஒற்றுமைன்னு சொல்லுவாங்களில்லே… அதுமாதிரி கணவனும் மனைவியுமாகப்பட்டவங்க…” 
 சீதாப்பாட்டி கணவனைச் சுட்டெரிப்பது போல் பார்த்தாள். ‘திஸ் ஜென்டில்மேன்’ டி.வி. ஸ்டார்? கடவுள்தான் இவர் வருகிற சானலைக் காப்பாற்றணும்’ என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் டாக்டர் அமிர்தகடேஸ்வரனோ… ஒரு புதுமுக ஹீரோவின் நடவடிக்கைகளைப் புதுத் தயாரிப்பாளர் பார்த்துப் பார்த்து மகிழ்வது போல் அப்புசாமி பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *