காதல் போயின்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 12,685 
 
 

மல்லா ராவ் மூக்குப் பொடியை உறிஞ்சும் சப்தம் கேட்டவுடனேயே, ரசமான ஒரு விஷயமும் செவிக்கு எட்டும் என்று விரைவில் ஊகித்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து அவர் பின் கையைக் கட்டிக் கொண்டு உலாவவே, பேர்வழி பலமாக எதற்கோ அஸ்திவாரம் போடுகிறார் என்று கவனமாகப் பார்க்கலானேன். கடைசியாக ஒரு கைக் கட்டை விரல் மட்டும் ஆடத் தொடங்கவும், நிச்சயம் ஒரு கதை கிடைத்து விட்டதென்று முடிவு செய்துகொண்டு அவர் முகத்தைப் பார்த்தேன்.

“”தம்பி, உன்னிடம் செங்கல்ராவும் பலராம் ராவும் கத்திச்சண்டை போட்ட சமாசாரம் சொன்னேன் அல்லவா?” என்று கேட்டார்.

“”நான் கட்டப்போகும் வீட்டுக்குச் செங்கல் எத்தனை வேண்டியிருக்கும் என்று ஒரு நாள் கணக்குப் போட்டோமே தவிர, செங்கல் சம்பந்தமான வேறு பேச்சு கிடையாது” என்றேன்.

காதல் போயின்“”உனக்கு மறதி அதிகமாகிவிட்டது. ஜூமாவின் காதலைப்பற்றி எல்லாம் விவரமாகச் சொல்லி இருக்கிறேன். நீ தூங்கிவிட்டாய் போலிருக்கிறது” என்றார்.

“”மிஸ்டர் ராவ், நான் தூங்கவில்லை ஆனால் நீங்கள்தான் சொப்பனம் கண்டிருக்கிறீர்கள்” என்றேன். ஆனால் மல்லா ராவ் ஒவ்வொரு தடவையும் கதை சொல்ல ஆரம்பிக்கு முன் இப்படி ஒரு பிகு பண்ணிக்கொள்வது வழக்கம்தான். நான் அதைத் தொந்து கொள்ளவில்லை போல் பாசாங்கு செய்ததும், மல்லா ராவ் கதையை ஆரம்பித்துவிட்டார்:

மகாராஷ்டிர சிம்மம் என்று தேசமெங்கும் புகழ் பெற்றவரும், மலை எலி என்று மொகலாயர்களால் பீதி கொள்ளப்பட்டவருமான சாம்ராட் சத்ரபதி சிவாஜியின் சந்ததிகள் ஒரு காலத்திலும் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை. அந்த சாம்ராஜ்யம் குலைந்ததென்றால் விதி செய்த சதியே தவிர மனிதனையோ, மன்னனையோ குற்றம் சொல்லிப் பயனில்லை.

பழம்பெரும் ஜாகிர்தாரான நரசிம்ம ராவ் தோன்றிய வீட்டில் பிறந்தவன்தான் செங்கல்ராவ். நரசிம்மராவ் காலத்திலேயே குடும்ப நிலை சீர்கெட்டுப் போயிருந்தது. ஆகையால் செங்கல் ராவிடம் மிகுதி இருந்தது அவன் வீர நடையும், தலைப்பாகையும்தான். அவன் பேச்சில் இருந்த அழுத்தமும், செயலில் கண்ட நேர்மையும் எல்லாரையும் வசீகரம் செய்தது. செங்கல் ராவிடம் தனம் இல்லை. அவன் மூதாதையர்கள் அதைக் கரைத்து விட்டார்கள். அதற்காக மானத்தைவிடவோ அல்லது ஓர் ஈனச் செயல் செய்யவோ அவன் ஒரு காலத்திலும் எண்ணியதில்லை. ஆகவே, பூனாவில் வெள்ளைக்கார அரசாங்கத்து அதிகாரியாக வந்திருந்த ராவ் பகதூர் ரகோத்தம ராவின் மகளைக் கண்டு அவன் காதலித்த காரணம் மிக ஒழுங்கானது.

அவள் சௌந்தர்யத்துக்கும், மனப்பண்புக்கும் தனது உள்ளத்தைப் பறிகொடுத்தான் அவன். ஜூமா ஒரு தங்கப்பதுமை. அவளது உருளும் நயனங்கள் இந்த மாபெரும் உலகத்தையே உருட்டுவிக்கும் சக்தி பெற்றவையோவென தோற்றம் அளிக்கும்.

ரகோத்தம ராவுக்குக் காலஞ்சென்ற நரசிம்ம ராவ் பரிச்சயமானவர். அவர் பெருந்தன்மையும் உத்தம குணங்களும் பழக்கமானவை. அவரது மகன் இன்று பணமில்லாதவனாக இருந்தான் என்றால், அது அவன் பிசகல்ல என்பதை ஒப்புக்கொண்டு தமது வீட்டில் சர்வ சுதந்தரமும் அளித்தார். இளைஞன் செங்கல் ராவ் அதைப் பயன்படுத்திக்கொண்டு ஜூமாவின் சமூகத்தை நாடினான். பழக்கம் அதிகமாகவே அவளுடன் சதுரங்கமும் விளையாடினான். சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் தன் காதலை ஜாடைமாடையாகத் தொவித்தான். அப்போது அந்த மதிவதனத்தில் தோன்றும் லேசான புன்முறுவலில் அவள் சம்மதத்தைக் கண்டதாக மனம் எக்களித்தான்.

நாட்கள் ஓடின. செங்கல் ராவின் உள்ளக்கிடக்கை வேர்விட்டது. கிளைகள் விட வேண்டிய சமயத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ராவ் பகதூர் ரகோத்தம ராவைப் பார்க்க ஓர் இளைஞன் வந்தான். வெள்ளை அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டு, ஓர் உயர்பதவியைத் தாங்கி அவன் பூனா வந்திருந்தான். பலராம ராவ் என்பது அவன் பெயர். அதற்கேற்ப புஜங்களின் வலிவும், அகத்தில் முண்டி நின்ற வீரியமும் பார்த்ததும் செய்த புன்னகை எல்லாம் செங்கல் ராவ் மனத்தைப் புண் செய்தது. காரணம், ஒரு கால் அவர் மனம் இந்த இளைஞனுக்கும் ஜூமாவுக்கும் முடிபோட அப்போதே ஒரு முடிவு செய்துவிடுமோ என்பதுதான். இந்த எண்ணத்தை உடனே கைவிட்டான் செங்கல் ராவ். ஜூமாவின் சம்மதம் இல்லாமல் அவள் தந்தை ஒரு காரியம் செய்துவிடுவாரா? ஒருக்காலும் மாட்டார்.

ஆனால் அவனுடைய மனச்சமாதானத்தில் ஒரு பெரும் புயல் விரைவிலேயே வீசலாயிற்று. ஜூமா அந்த யுவன் மீது வீசிய பார்வை, பல அர்த்தங்கள் கொண்டதாக பிரமை கொண்டான் செங்கல் ராவ். ஜூமாவை இனி மறந்துவிட வேண்டியதுதானா? என்று பலமுறை எண்ணினான். ஆகவே பலராம் வந்த ஒரு மாதத்துக்குப் பின் செங்கல் ராவ் இதயத்திலேற்பட்ட குழப்பம் ஒன்பது மாதம் ஆகியும் அடங்காமலே விருத்தியடைந்து கொண்டுதான் வந்தது. அவன் நெஞ்சத்தில் எழுந்த புகை, ஜ்வாலை வீசும் எரிமலையை ஒத்திருந்தது. ஆனாலும் பலராம ராவுக்குத் தன் வருகையால் இத்தனை மனக் குழப்பம் ஏற்பட்டது லவலேசமும் தெரியாது. செங்கல் ராவுடன் தமாஷாகப் பேசுவதும், ஒருவரை ஒருவர் முதுகில் தட்டிக் கேலி செய்வதும், இருவரும் மாலை நேரங்களில் உலாவி வருவதும் வழக்கமாக இருந்து வந்தன.

அப்படி ஒரு தினம் அவர்கள் புறப்பட்ட போதுதான் அந்த பயங்கரமான சம்பவம் நடந்தது. வெகு காலம் உள்ளடக்கி வைத்திருந்த ஆத்திரம், சந்தேகம் எல்லாம் இனி புதைந்து கிடக்க மாட்டோம் என்று செங்கல் ராவிடம் கண்டித்துக் கூறி இருக்க வேண்டும். பலராம் வலக்கைப்புறம் நெருங்கி நடந்து வர, செங்கல் ராவ் எதிரே நோக்கினான். சந்திரன் பெரிய தோசையைப் போல உதயமாகிக் கொண்டிருந்தான். கடைக்கண்ணால் பலராமைப் பார்த்தான். இடையில் வாள் ஊசலாடிக்கொண்டிருந்தது. அந்தச் சமயம், சொல்லி வைத்தாற்போல் பலராம் கடைக் கண்ணால் நோக்கவே இருவர் முகத்திலும் அசடு வழிந்தது. ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிந்துகொண்டு விட்டார்களா? இருவர் எண்ணமும் ஒன்றுதானா?

“”அற்புதமான இரவு” என்றான் செங்கல்ராவ். அவன் குரலில் விவரிக்க முடியாத ஒரு ஸ்வரம் பேசியது.

எதற்கு அற்புதம்? அளவளாவவா? தவம் செய்யவா? இல்லாளுடன் இனித்திருக்கவா அல்லது கொன்று குவிப்பதற்கா – செங்கல் ராவ் என்ன அர்த்தத்தில் பேசுகிறான் என்று புரிந்துகொள்ளாமல், பலராமன் மௌனமாக நடந்து வந்தான். ஆனால் அவன் சிந்தனைகள் தீவிரமாக இருந்தன.

“”என்ன, பதிலைக் காணோம்?” என்று கேட்டான் செங்கல் ராவ். அவன் தலைப்பாகையின் குஞ்சலம் அழகுடன் ஆடியது.

“”நானே சந்திரிகையை அனுபவித்துக்கொண்டுதானே வருகிறேன்” என்றான் பலராம்.

“”உம்…அனுபவிக்க வேண்டியதுதான்…அதுவும் எப்படி? அன்பானவள் அருகே அமர்ந்திருக்க வேண்டும். நானும் ஜூமாவும் எத்தனையோ முறை உலாவ வந்திருக்கிறோம் இங்கே”

“”ஓகோ”

“”உனக்குத் தெரியாது போல் இருக்கிறது. ஜூமா சொல்லி இருப்பாள் என்றல்லவோ நினைத்தேன்? பின் என்னதான் பேசிக்கொண்டிருப்பீர்கள்?”

பளிச்சென்று திரும்பினான் பலராம். ஒரு வேங்கையின் சீற்றம் கண நேரம் தோன்றியது. செங்கல் ராவ் முகத்தில் பரவி இருந்த கல்மிஷமற்ற சாந்தத்தைக் கண்டதும் அடங்கியது. “”ஜூமாவிற்குப் போதிய அவகாசமிருந்ததால் உங்களைப் பற்றிச் சொல்லி இருக்கலாம்” என்றான்.

“”அதனால் என்ன நானே சொல்லுகிறேனே” என்றான் செங்கல் ராவ். அவர்கள் முன் இப்போது சந்திரன் ஒரு முழு உயரத்துக்கு மேல் எழும்பி விட்டான். அந்த நிலவொளியிலே ஒரு காலத்தில் கோட்டையாக இருந்ததன் மதில்களும், சிற்சில தூண்களும் புலனாயின.

“”இதோ, இந்த இடத்திலேதான் என் தகப்பனார் பிறந்தார். என் தாயாரை மணந்துகொண்டார். அவர் ஆயுளுக்குள்ளேயே இந்தக் கோட்டையை அவர் விட்டு வர, கவனிப்பாரின்றிப் பாழாகிவிட்டது. இன்று இதில் இருப்பவர் யாரும் இல்லை”

“”ஏன், பிசாசுகள் கூடவா இராது” என்றான் பலராம். வாய்தவறிச் சொல்லிவிட்டோமோ? என்று பயந்துவிட்டான்.

செங்கல் ராவ் முகத்தில் அரும்பிக்கொண்டிருந்தது லேசான ஒரு சிரிப்பு. “”இதுவரை இருக்குமோ இல்லையோ இனி மேல் இருக்கும்” என்றான். அவன் சிரிப்பு இப்போது கவலையற்றுத் தெரிந்தது. அதன் அர்த்தம் என்ன என்று பலராம் கேட்குமுன், “”இப்படி வா, ஒரு விஷயம்” என்று அழைத்தான் செங்கல் ராவ்.

பலராம் சொன்னபடி செய்தான். கோட்டையின் வெளி மைதானம். சிறு சிறு புல் பூண்டுகள், பசேலென்றிருந்தது தரை. அதன் நடுவே போய் நின்றதும், பளிச்சென்று தன் கத்தியை உருவி உயரப் பிடித்தான் செங்கல் ராவ்.

“”பார், சந்திகையில் இது மின்னுவதை என் பாட்டனார் ரங்கராவ் வைத்துக் கொண்டிருந்த கத்தியாக்கும் இது” என்றான்.

“”நன்றாகத்தான் இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டான் பலராம்.

“”நன்றாயிருப்பது மட்டுமல்ல. சரியான ஆள் கையில் இது இருந்தால், இந்திர ஜாலங்கள் செய்யும். என் பாட்டனார் இதே இடத்தில் ஒரு சண்டை போட்டிருக்கிறார், அறுபது வருஷத்துக்கு முந்தி”

“”எதற்காகவோ?”

“”கேள், அப்படி ஒரு பெண்ணின் நிமித்தம் தான் சண்டை போட்டார். அவர் காதல் கொண்டிருந்த ஒரு யுவதியின் மீது ஒரு கயவன் கண் போட்டு விட்டான். பார்த்திருப்பாரா வீரர் ரங்கராவ்? சண்டை நடத்தி, தம் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டார். பலராம், பார்த்தாயா ஒரு குடும்பத்தில் சம்பவங்கள் ஒரே மாதி திரும்பத் திரும்ப நடப்பதை”

“”எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லையே?”

“”அது புரிவதில் என்ன சிரமம்? ஒருவன் ஒரு சௌந்தரிய யுவதியை மனதில் வரித்து, அவள் சம்மதத்தையும் பெற்றுவிட்ட பின், மற்றொருவன் குறுக்கே வருவது பெருந்தன்மையா? வீரத்துக்கு அழகா? அப்படி ஒருவன் செய்யும்போது பார்த்திருப்பது பராக்கிரமமா?”

“”செங்கல் ராவ் நீங்கள் எதையோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள். இன்று என்னை இங்கே அழைத்து வந்தபோதே நான் சந்தேகப்பட்டேன்”

“”இரண்டுமே சரியான ஊகங்கள்தாம்”

“”இன்னும் விவரமாகச் சொல்லலாமா?”

“”என் காதலி ஜூமா நீ வருவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே அவள் மீது வாஞ்சை வைத்து என் நெஞ்சில் நம்பிக்கையை ஊட்டிவிட்டாள். நீ குறுக்கே வந்து அதைப் பாழ் செய்கிறாய். இன்னும் விவரமாகச் சொல்ல வேண்டுமா?”

பலராம் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை எதிர்பார்த்தவன்தான். எனினும் இவ்வளவு அப்பட்டமாக அதைக் கேட்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, “”செங்கல்ராவ் ஒரு சுந்தரி வந்து பேசினால் முடியாது என்று சொல்லிவிட முடியுமா? ஆசை காட்டினால் நான் துறவி என்று நகர்ந்துகொள்ள முடியுமா?” என்று கேட்டான்.

“”சரியான கேள்விதான். ஆனால் ஒரு பெண்ணை ஒருவன் நம்பி இருக்கிறான் என்ற பின் வேறு விதமாக இருப்பது கௌரவமா?”

“”உங்கள் வார்த்தையில் உண்மை இருக்கிறது. ஆனால்…..”

“”நிறுத்து. உண்மை இருக்கிறதல்லவா? மற்றபடி உனது சமாதானங்கள், ஆட்சேபங்கள் எல்லாம் தேவையில்லை. எனக்கு அவற்றைப் பற்றி லட்சியமும் இல்லை. நான் சொல்வது ஒன்றுதான். ஜூமாவை நான் நம்பி இருந்தேன். எங்கள் இருவர் வாழ்வும் இன்பமாக இருக்கும் என்று கனாக் கண்டேன். இன்றைக்கும் அதே நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன்”

“”நியாயம்தானே?” என்று ஒப்புக்கொண்டான் பலராம்.

“”நான் பேசிவிடுகிறேன் முன்னால். நீ நடுவில் வந்தாய். என்னுடன் காதலில் போட்டி போட்டு ஜெயித்தாய் என்பது என் வாழ் நாளில் நடக்க முடியாது என்று நான் முடிவு செய்துவிட்டேன். இருவரில் ஒருவர் உயிருடன் போய் அவளை மணக்க வேண்டும்”

“”ஏன், அவளையே கேட்கலாமே?”

“”கேட்டு, அவள் நம்மிருவரையும் நிராகரித்தால் உயிர் வாழ்வது வெட்கக் கேடல்லவா? அதனால் நம் இருவரில் யார் உயிருடன் திரும்புவது என்பதை இப்போதே இங்கே முடிவு செய்து கொண்டுவிட வேண்டும். வெகு காலமாக இந்தக் காரியத்தை எப்படி நடத்துவது என்று நான் செய்திருக்கிறேன். இந்த இடத்தில் சந்திரன் சாட்சியாக நாம் கத்திச் சண்டை செய்வோம். எனக்கு இந்தப் போரில் சிறிது பழக்கம் உண்டு. உனக்கும் நிறைய உண்டு என்பது வெள்ளைக்கார சர்க்கார் உன்னைப் பாராட்டிக் கொடுத்திருக்கும் பதக்கங்களிலிருந்து தெரிகிறது. ஆகவே, உருவிக் கொள் உன் கத்தியை” என்றான் செங்கல்ராவ்.

திகைத்துப் போனான் பலராம். செங்கல்ராவ் கேலியாகப் பேசுகிறானா அல்லது வாஸ்தவமாகவே அம்மாதிரியான எண்ணம் அவனுக்கு இருக்கிறதா? கத்தியை உருவுவதா? சண்டை போடுவதா? தலைகுனிந்து ஸ்தம்பித்து நின்றான்.

“”என்ன யோசனை இன்னும்? நாம் இங்கே வந்திருக்கிறோம் என்று யாருக்காவது தெரிந்துவிடப் போகிறதே என்ற கவலையா? நான் வெகு சாமர்த்தியமாக அருவிப் பக்கம் போவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். கோட்டைப் பக்கம் யாரும் வரமாட்டார்கள். இந்தச் சண்டையிலே நான் வீழ்ந்தால், என் உடலை அதோ அந்தப் பள்ளத்தில் உருட்டி விடு. யாரும் அண்டமுடியாத அகாதம் அது. நீ இறந்தால் அதே காரியத்தை நான் செய்கிறேன். இதனால் நாம் இருவரும் காதலிக்கும் ஒரு பெண்ணுக்கு, நம்மில் ஒருவரைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளும் சங்கடம் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்” என்றான். பலராம் பதில் சொல்லுமுன் நாலடி பின்னால் சென்று, கத்தியைக் கழட்டிக்கொண்டு, “”தயார்” என்றான்.

இனி பலராமுக்குத் தன் கத்தியையும் உருவிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஏதோ சொல்ல வாயெடுத்த பலராம், சட்டென்று நிறுத்திக்கொண்டான். செங்கல் ராவின் கத்தி இருமுறை ஆகாயத்தைக் கிழித்து “ஸ்விஷ்’ என்று சப்தித்து விட்டது. ஆகவே அவன் செய்யக்கூடியது ஒன்றுதான். அசட்டுப் பிடிவாதம் கொண்ட செங்கல் ராவைக் கொல்லாமலேயே சாமர்த்தியமாகச் சண்டை போட்டு, இனி எதிர்க்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். அவனால் அது முடியும் என்று நம்பினான்.

“”உம்..நான் ஆரம்பித்துவிட்டேன்” என்று எச்சரித்தான் செங்கல் ராவ். இரண்டு பேரில் ஒருவர் இன்று மடிந்தாக வேண்டும், அவன் குரலில் இருந்த அழுத்தமும், பாய்ச்சலில் இருந்த வேகமும் பலராமை ஸ்தம்பிக்க வைத்தன. செங்கல் ராவின் கண்களில் அசூயையும் ஆத்திரமும் நர்த்தனமாடின. அவன் கத்தி “பளீர்’ என்று நிலவொளியை பிரதிபலித்துக்கொண்டு முன்னோக்கி வந்தது.

பலராம் பின்வாங்கினான். செங்கல்ராவ் முகத்தில் தென்பட்ட வெறி அவனுக்குப் பைத்தியமே பிடித்திருக்குமோ என்று சந்தேகிக்கும்படி செய்தது. விரும்பி இருந்தால் பலராம் தன் எதிரியின் மார்பில் கத்தியைப் பாய்ச்சி இருக்கலாம். ஆனால் தனது பழைய உறுதியை மனதில் கொண்டு, அந்தச் சந்தர்ப்பத்தைக் கைவிட்டான். அது பிசகு என்பதையும் உடனே உணர்ந்துகொண்டான். செங்கல்ராவின் கத்தி சும்மா இருந்துவிடவில்லை. பலராமின் கத்தியை உருவி அப்பால் வீசிவிட்டது. எகத்தாளச் சிரிப்பு ஒன்று சிரித்து, “”ஹம், பல்ராம் நான் உன் திறமையைப் பற்றி அதிகப்படியாகவே அல்லவோ நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சின்ன வேலையில் ஏமாந்துவிட்டாயே?” என்றான்.

பலராம் உதட்டைக் கடித்துக் கொண்டான். செங்கல் ராவ் என்ன, கோபமூட்டுகிறானா? அவன் பளிச்சென்று ஓடித் தனது கத்தியைப் பொறுக்கி வந்து மீண்டும் சண்டையைத் தொடங்கினான். இப்போது வாள் உக்கிரமாகிவிட்டது. ஒருவரை ஒருவர் தீவிரமாகத் தாக்கிக்கொண்டனர். சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்போருக்கு இரு நீண்ட அக்னிப் பிழம்புகள் அதி வேகமாக மோதிக்கொள்வது போலவே தோன்றியிருக்கும்.

பலராமுக்குச் செங்கல்ராவின் திறமையைத் தான் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை என்ற சந்தேகம் தோன்றியது. பொறாமையும், கோபமும் அலட்சிய பாவமும் மாறி மாறி அவன் முகத்தில் வந்தன. இதைக் கவனித்த பலராம் மிக அசந்து போனான். “சுர்’ என்று கத்தி முனை அவன் தோள்பட்டையை ஸ்பரிசிக்கவே, மறுபடி விழித்துக் கொண்டான். செங்கல் ராவின் உதடுகளில் ஏளனச் சிப்பு ஒன்று தவழ்ந்து கொண்டிருந்தது. கத்திக் காயத்தைவிட இது பலராமை அதிகப் புண்படுத்தியது.

சண்டை மேலும் பலமாகத் தொடர்ந்தது. இருவரும் சமர்த்தர்கள். சமமான சமர்த்தர்கள். சுழன்று சுழன்று வந்தார்கள். ஆகவே பலப்பல முறைகள் சண்டையின் முடிவு வந்துவிட்டது போன்ற பிரமை தோன்றியது. எனினும் இருவரும் சமாளித்துக்கொண்டனர்.

ஏனோ திடீரென்று செங்கல் ராவின் கண்களில் ஓர் அசாதாரண ஒளி கிளம்பியது. அதன் காரணம் அறிய மாட்டாமல் திகைத்தான் பலராம். இவன் பாராத எதையோ அவன் பார்க்கிறான் போலும். இந்த நினைப்பில் எதிரிக்குப் பிடிகொடுத்துவிடவே, அவன் கத்தி முனை மார்புக்கு நேரே வந்துவிட்டது. தீர்ந்தோம் என்று முடிவு செய்த பலராமுக்கு மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.

குத்துவதற்கு வந்துவிட்ட கத்தியைத் தளர்த்தி, சோர்ந்தாற்போல் கண நேரம் காணப்பட்டான் செங்கல்ராவ். சற்றும் எதிர்பாராத இந்தத் தருணத்தைப்பயன்படுத்திக்கொண்டான் பலராம். அவன் கத்தி செங்கல் ராவின் மார்பில் பாய்ந்துவிட்டது. ரத்தக்கறை அவன் அங்கியில் தோன்றி விழுந்துகொண்டே வந்தது. காயம் அடைந்தவன், நிற்க மாட்டாமல் கீழே உட்கார்ந்துவிட்டான்.

இப்போதுதான் திரும்பிப் பார்த்தான் பலராம். அவன் கண்ட காட்சி திகைக்க வைத்தது. பின்னாலிருந்து ஒரு மரத்தடியில் தேவ லோகத்திலிருந்து அப்சரஸ் வந்து இறங்கியது போல் நின்று கொண்டிருந்தாள் ஜூமா. சந்திரனின் தண்மையான ஒளியில், இவ்வுலகப் பிறவியென அவளை யாரும் சொல்ல முடியாது. கண்களில் பயம் கலந்த பார்வை. ஆனால் சற்றே சந்தோஷமும் தோன்றியது போல இருந்தது.

பலராம் பார்த்த போதே செங்கல் ராவும் பார்த்தான். அவன் பார்வையில் காதலுடன் ஏக்கமும் இருந்தது. “”ஜூமா, உன் காதலுக்காக நாங்கள் சண்டை போட்டோம். எங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சிரமம் உனக்கு வைக்கலாகாதென்று அதற்காகவே ஏகாந்தமான இந்த இடம் தேடி வந்தோம். அப்படியும் முடிவு தெரியாத போது நீயே வந்து, அதற்கு முடிவு சொல்லிவிட்டாய்” என்றான் செங்கல் ராவ்.

பலராம் கடுமையாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“”நான் சொல்வது வாஸ்தவம். பலராம் என்னை உன்னால் இன்று காயப்படுத்தி இருக்கவே முடியாது. என் சாமர்த்தியத்தில் பாதிகூட இன்று நான் உபயோகிக்கவில்லை. ஜூமா வந்தாள். அந்தச் சமயம் அவளுக்கே சோதனையை வைக்கலாமென்று தளர்ந்தாற்போல் காண்பித்தேன். நீ என்னைக் குத்த வந்த போது அவள் முக பாவத்தைக் கவனித்தேன். அதில் பயங்கரம் இருந்தது. பிறகு நான் உன்னைக் குத்த வந்த போதும் பார்த்தேன். அதில் பயங்கரம் மட்டுமல்ல, ஆழ்ந்த துயரமும் இருந்தது. அவள் மனதைத் தெரிந்துகொண்டபின், தோற்றுப் போவதே முறை என்று உன் கத்திக்கு என் மார்பைக் காண்பித்தேன்”

“”அடடா, உங்கள் காயம்….”

“”அது ஒன்றும் இல்லை. நீயும் ஜூமாவும் இப்போது திரும்புங்கள். நாம் வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம். நானும் சேர்ந்து திரும்ப வேண்டாம். ஒன்று மட்டும் கேட்டுக்கொள். இனி உங்கள் காதலுக்குக் குறுக்கே நான் வர மாட்டேன் சந்தோஷமாக இருங்கள்”

காதலர்கள் கண்ணுக்கு மறைந்ததும் செங்கல் ராவ் மெல்ல எழுந்து நடந்தான். பல முறைகள் தள்ளாடிக்கொண்டே சென்றான். கத்திக் காயம் பலமாகப் பட்டிருந்தது.

பாறையின் முனை வந்தது. குனிந்து பார்த்தால், அகாத பள்ளம். கடும் இருள். மனிதன் ஆழம் கண்டிராத இடம் அது. அங்கே செங்கல் ராவ் செய்த காரியத்துக்கு சந்திரன் ஒருவனே சாட்சி.

ராவ்பகதூர் ரகோத்தம ராவ், செங்கல் ராவை நாலைந்து நாள்வரை காணாது அவன் வீட்டில் போய்த் தேடச் சொன்னார். அங்கே கிடந்த கடிதம் அவன் யாத்திரை போக நினைத்திருப்பதையும், திரும்ப வரும் உத்தேசம் இல்லை என்பதையும் அறிவித்தது.

“”பைத்தியக்காரன்” என்றார் ரகோத்தமராவ்.

“ஹஹ்ஹஹ்ஹா’ என்று யாரும் கேளாதபடி சிரித்தது செங்கல் ராவின் ஆவி. யாரும் வாழாத தமது மூதாதையர் கோட்டையில் செங்கல் ராவின் ஆவி நாளைக்கும் வாழ்கிறது

“”மிஸ்டர் மல்லா ராவ், இந்தக் கதையை ஒரு மாசம் கழித்து மறுபடி கேட்பேன். சொல்வீர்களா?” என்று விசாரித்தேன் நான்.

“”ஏன்?” என்றார் அவர்.

“”ஒருகால் ஞாபக மறதியினால் வேறு மாதிரியாக இதை முடிக்கலாம் அல்லவா?”

“”ஓய், நான் சொன்னது பொய் என்கிறீரா?” என்று சீறினார்.

“”இல்லை, நான்தான் பொய் சொல்கிறேன்” என்று நகர்ந்துகொண்டேன்.

பெரிய சிமிட்டா மூக்குப் பொடியைச் சின்முத்திரையில் வைத்துக்கொண்டு கையை ஆட்டி ஆட்டிப் பேசும் மனிதரிடம் கண்ணை மூடிக்கொண்டு சரணாகதி அடையாமல் வேறென்னதான் செய்வது? சொல்லுங்கள்

– மல்லா ராவ் கதைகள் தொகுதி: அல்லயன்ஸ் வெளியீடு. நன்றி: தேவன் அறக்கொடை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *