கலெக்டர் வருகிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 7,398 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊராட்சி ஒன்றியம் என்ற போர்டு ஒன்று மட்டும் இல்லையானால் அந்தக் கட்டிடத்தை மண்டிக்கடை என்று சொல்லுவார்கள். கட்டிடத்தின் தனி அறை ஒன்றில், ஆணையர், கமிஷனர். பி.டி.ஓ. அப்பாவி, எமகாதகன், பொறுக்கி என்று பல்வேறு தரப்பினரால் பல்வேறு விதமாக அழைக்கப்படும் மனிதர் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்.

“குட் மார்னிங் சார்”, என்று சொல்லிக் கொண்டே யூனியன் மானேஜர் அவர் எதிரே உட்கார்ந்தார்.

“புது கலெக்டர் வரார் சீக்கிரமாய் வரக் கூடாது?”

மானேஜர் ஒரு பெருச்சாளி. சிறிய குற்றம் சாட்டப் பட்டாலும் உடனடியாக இன்னொரு நபர் மீது பெரிய குற்றத்தைச் சாட்டி விடுவார்.

“சார், நம்ம விவசாய வளர்ச்சி அதிகாரி இன்று லீவ்.”

“ஏனாம்?”

“அவங்க நிலத்தில் அறுவடையாம்.”

“பெர்டிலைஸர் டிஸ்ட்ரிபியூஷன், கிணறு வெட்டுவோன், விவசாயக் கருவிங்க விற்பனை இதையெல்லாம் கலெக்டர் கேட்டாருன்னா யாரய்யா சொல்றது?”

“நம்ம யூனியன் இன்ஜினியரும் லீவ்.”

“அவருமா?”

“ஊர்ல வீடு கட்றாரு அதைப் பார்க்கப் போயிருக்காரு.

“என்னய்யா இது அநியாயம்? கலெக்டர் என் தாலியை அறுத்தால் யாருய்யா திருப்பிக் கட்டுறது? பைனான்ஸியல் இயர் எண்டு, எந்த ஊருக்கு ரோடு வேணும், பாலம் வேணும் என்கிறதைக் கலெக்டர் கேட்டா எவன் பதில் சொல்லுறது?”

“ஸார், இன்னுமொரு முக்கியமான விஷயமுங்க. நம்ம சேர்மென் ஒரு கல்யாணத்துக்குப் போறாராம்.”

“போவட்டுமே!”

“அதில்லீங்க, நம்ம ஜீப்பை கேக்கிறாரு.”

“அதெப்படி? கலெக்டருக்கு வேணுமே?”

“நான் சொல்லிப் பார்த்துட்டேனுங்க, அவரு கேக்கல.”

“இதென்ன பெரிய ரோதனையால் போச்சே.”

“சேர்மன் சுத்த மோசம் சார், இன்னைக்குப் பார்த்துக் கேக்கறாரு.”

“உம், சேர்மனுக்கு ஜீப்பைக் கொடுத்துக் கல்யாணத்துக்குப் போகச் சொல்லு. அவங்க அவங்க தலை விதிப்படி நடக்கட்டும்.”

“கலெக்டர் வரும்போது எப்படி சார் ஜீப்பைக் கொடுக்கிறது?”

“இந்தாய்யா மானேஜரு கலெக்டரைப் பகைச்சா அவன் ஜில்லாவுக்குள்ளே தான் மாத்துவான். சேர்மனைப் பகைச்சா, அவரு ஜில்லாவுக்கு வெளியே மாத்திடுவாரு பேசாம ஜீப்பைக் கொடுத்திடும்.”

அரசாங்க ஒய்வு விடுதி ஒய்வின்றிக் கலகலத்தது. தாசில்தார், அவருடைய ‘கான்ஃபிடண்ட் குமாஸ்தா பண்டாரம், கமிஷனர், பஞ்சாயத்துத் தலைவர்கள், சில கிராம சேவகிகள் ஆகிய பல நபர்கள், கலெக்டர் தங்கி இருந்த அறையின் திரைச் சீலையை லேசாக விலக்கி விலக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே ஒரு பெண் பிரசவ வேதனையில் துடிக்கிறாள் என்றும் இவர்கள் வெளியே நிற்க முடியாமலும் உள்ளே போக முடியாமலும் தத்தளிக்கிறார்கள் என்றும் விஷயம் தெரியாதவர்கள் நினைத்துக் கொண்டால் அதில் தப்பில்லை.

டவாலி பியூன் திரைச் சீலைக்கு வெளியே தர்பார் நடத்திக் கொண்டிருந்தான்.

“ஏம்ப்பா, ஆர்.டி.ஓ. பிரமோஷன் பைலில் ஐயா கையெழுத்துப் போட்டுட்டாரா?” என்றார் தாசில்தார், பியூனைப் பார்த்து.

“இந்த ஊரிலே நல்ல அரிசி கிடைக்குமாமே?” என்று அவன் பதில் சொன்னான்.

“என் பைல் எந்த நிலையில் இருக்குதுப்பா?”

“ஏன் சார், இந்த ஊர்ல அல்வா கூட ரொம்ப விசேஷமாமே?”

“பண்டாரம், இவரு சொல்றதை நோட் பண்ணிக்கோ. ஏம்ப்பா, பைல் எப்படி இருக்கு சொல்லு”

“ஐயா ‘நல்ல மூட்ல’ இருக்கும்போது மேலே எடுத்து வச்சிடறேன். டோண்ட் ஒர்ரி சார். இந்த ஊர் அரிசியைச் சும்மா சொல்லக் கூடாது சார், மல்லிப்பூ.”

இப்போது பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் நெளிந்து கொண்டும், கொஞ்சம் உரிமையோடும், “இந்தாப்பா முனுசாமி, என்னை மாத்தப் போறாங்களாமே உண்மையா?” என்றார். அவன் அவருக்கு உடனே பதிலளிக்கவில்லை. ஒரு காலத்தில் வேறு ஓர் ஊரில் இவரிடம் பியூனாக வேலை பார்த்த போது என்ன பாடு படுத்தினார் என்பதை நினைத்துக் கொண்டான்.

கமிஷனர் பழையதை மறந்து புதிய முறையில் குழைந்தார்.

“டோன்ட் ஒர்ரி ஸ்ார். உங்களை மாத்துறதா நாங்க இன்னும் தீர்மானம் எடுக்கல,” என்றான் பியூன்.

திடீரென்று எல்லோரும் உஷாரானார்கள். திரைச்சீலை அசைந்தது. கலெக்டர் – வடநாட்டுக்காரர் – வெளியே வந்தார். வயது முப்பது மதிக்கலாம்.

“ஐ ஆம் தாசில்தார், ஹி இஸ் கமிஷனர்,” என்றார் தாசில்தார்.

“ஐ ஆம் கமிஷனர். ஹி இஸ் தாசில்தார்,” என்றார் ஆணையாளர்.

“ஐ ஸீ” என்றார் கலெக்டர். பிறகு “ரெடியா?” என்றார்.

“ரெடி ஸார். எல்லா பைல்களையும் கொண்டு வந்திருக்கேன்.” கமிஷனர் அனலிலிட்ட மெழுகானார்.

டவாலி இடைமறித்தான். “ஐயா பைலுங்களைக் கேட்கவில்லை. சாப்பாடு ரெடியான்னு கேக்குறாரு.

அறிமுகத்திற்கு அந்தஸ்தில்லை என்பதுபோல ஒதுக்கப் பட்ட குமாஸ்தா பண்டாரம் குறுக்கே புகுந்தான்.

“ஐயாவுக்கு மட்டன் வேனுமா? சிக்கன் இஷ்டமா? ஒரே நிமிஷத்துல கொண்டாந்துடுறேன்.”

கலெக்டர் கண்களை மூடித் திறந்தார். “ரெண்டும் வேணும்” என்றார்.

“எல்லா பைல்ஸும் ரெடி” என்றார் கமிஷனர் மறுபடி அரைக் கண்களாலேயே கலெக்டர் அவரை எரித்தார்.

“ஜீப் கொடு. ஊரைச் சுத்திப் பார்த்துட்டு வர்றேன்” என்றார்.

கமிஷனர் தவித்தார். “ஜீப் சேர்மன்.ரிப்பேர்…”

“ஜீப் ரிப்பேர், ஆர் சேர்மன் ரிப்பேர்?”

“ஸார். வந்து. ஜீப்பை நோ நோ. சேர்மனை யெஸ் யெஸ் சேர்மனை.ஜீப்பை…”

“நீ என்னா சொல்றே? ஜீப் எங்கே?” தமிழைக் கற்று வரும் கலெக்டர் இன்னும் ஒருமையைத் தாண்டவில்லை.

இருதலைக் கொள்ளி எறும்பானார் கமிஷனர்

“என்னா மேன்? ஜீப் எங்கு?” என்றார் கலெக்டர்.

“அங்கு, அதாவது சேர்மன் கோ” என்று கமிஷனர் இந்தியில் புகுந்தார்.

“நீ யூஸ்லெஸ் ஃபெல்லோ, ஜீப்பைக் கொடுத்திட்டே வெறி பாட். நான் ஊர் சுத்தணும்.”

தாசில்தார், ஆர்.டி.ஓ. ஆகப் பிரமோஷன் ஆகப் போகிறவர் சமயம் பார்த்துச் சொன்னார்.

“என்ன கமிஷனர் சார், ஜீப் இல்லைன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நான் கார் ஏற்பாடு செய்திருப்பேனே.”

கலெக்டர் தாசில்தாரைக் கனிவாகப் பார்த்துவிட்டுக் கமிஷனரிடம் கத்தினார். “யூ.யூ.நோ. யூஸ்” கத்திவிட்டு அறைக்குள் போய்விட்டார்.

ஆத்திரத்தைக் கொட்டினார் கமிஷனர்.

“என்ன லார் நீங்க, கார் ஏற்பாடு பண்ணியிருப்பேனேன்னு கலெக்டர் முன்னாலே சொல்லுறீங்க, அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்?”

“சரித்தான் சார், உங்களால் எனக்கும் கெட்ட பேரு வரணுமா? கலெக்டருக்குக் கார் ஏற்பாடு செய்யமுடியாத தாசில்தாரும் ஒரு தாசில் தாரான்னு என் தலையில் அவன் கை வச்சா?”

சில நிமிஷங்களுக்குள் சாப்பாட்டுத் தட்டுகளையும் உணவு வகைகளையும், கர்ணங்களும் முன்சிபுகளும் சுமக்க, பண்டாரம் முன்னே வந்தான்.

ஊர்வலம் கலெக்டர் அறைக்குள் புகுந்த உடனேயே பாத்திரங்களின் ஒலி பலமாய்க் கேட்கத் தொடங்கிவிட்டது.

பசியாறிய கலெக்டர் புன்முறுவலோடு வெளியே வந்தார்.

குச்சியால் பல்லைக் குத்திக் கொண்டே, “சாப்பாடு ஏ ஒன், கோலிக் கறி ஏ ஒன். ஒன்டர்புல்!” என்றார்.

தாசில்தார் குமாஸ்தா பண்டாரத்தின் காதைக் கடித்தார் கர்ணம் ஒருவரை இழுத்துக் கொண்டு பண்டாரம் வெளியே ஓடினான். சிறிது நேரத்தில் வியர்க்க விறுவிறுக்கத் திரும்பி வந்த பண்டாரம், கர்ணத்தின் கையிலிருந்த கோழி ஒன்றைப் பிடுங்கி, பியூனிடம் கொடுத்தான்.

“என்னா மேன், கரப்ட் பண்ணுறே? கோலி கொடுத்து இன்புளுயன்ஸ் செப்யறேன்னு சஸ்பெண்டு செய்துடுவேன் சஸ்பெண்டு!”

பண்டாரம் பதறிப் போப், “சார், சார், கோழி சீப்பு லார், ஒரு ரூபாய் தான் சார். அதனால்தான் வாங்கினேன்” என்றான்.

கலெக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

“வாட் ? ஒரு கோலி ஒரு ரூபாயா? ஒண்டர்புல் அங்கே எல்லாம் ஒரு கோலி டென் ருபீஸ்”

“ஆமாம் ஸார். ஒரு கோழி ஒரு ரூபாய். அதனால்தான் வாங்கினேன்” என்றான் பண்டாரம் மறுபடியும்.

“அதனால்தான் நான் அவனை வாங்கச் சொன்னேன்.” என்று தாசில் தாரும் சேர்ந்து கொண்டார்.

கலெக்டரின் கண்கள் பிரகாசத்தைக் கொட்டின. “ஏக் கோலி ஏக் ரூப்யா? நீ ஒண்னு பண்ணு. டெய்லி ஒரு ரூபாய்க்கு ஒரு கோலி வாங்கி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ்ல அனுப்பு”

“யெஸ் சார். ஒரு கோழி ஒரு ரூபாய் வாங்கி அனுப்புறேன் லார் பண்டாரம் கிணற்றடியிலிருந்து பேசினான்.

“ஒன்டர்புல், ஏக் கோலி ஏக் ரூப்யா. இந்தா முப்பது ரூபாய். நாளைல இருந்து அனுப்பு. அடுத்த மாசத்துக்கு அப்புறம் பணம் தரேன். ஒண்டர் புல் டபில் நாட்,” என்று கலெக்டர் பரவசமானார்.

கெஸ்ட் ஹவுஸிலிருந்து திரும்பி வரும்போது பண்டாரம் எகிறிக் குதித்தான்.

“என்ன சார் அநியாயம்? உருப்படுமா? ஒரு கோழி ஒரு ரூபாய்னா நம்பிட்டானே?”

“உனக்கு என்ன கொழுப்பு? நீ ஏன் ஒரு கோழி ஒரு ரூபாய்னு சொன்னே? வேணுமய்யா உனக்கு”

இப்போதெல்லாம் குமாஸ்தா பண்டாரத்தை யாரும் “காக்காய் பிடிப்பவன்” என்று சொல்லுவதில்லை. “கோழி பிடிப்பவன்” என்கிறார்கள்!

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *