கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 .
பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம் அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது.
‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாரே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய துணைக் கண்டத்தின் தென் மூலையில் உயிருக்கு ஊசல் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருந்த தமிழகத்திலிருந்து வருவதையறிந்து அவர் முகம் கோனிற்று.
“இன்னுமா இந்த உலகம் நம்பள நம்பிக்கிட்டு இருக்கு ” என்றவாரே தன் மடிக்கணினியை திறந்து ஜி.பி.எஸ் மோடை கிளிக் செய்து தமிழகம் செல்லும் வழியை தேடினார். அவர் தமிழகம் வந்து பல நூறு வருடம் ஆனதால் வழி மறந்திருக்கும். அதற்காக அவரை மன்னித்து விடலாம்.
ஒருவாறு பாதையை கண்டுணர்ந்து தமிழகம் நோக்கி குதித்தார். ‘ஆண்டவா ஆண்டவா’ என்ற பேரொலிக்கு மத்தியில் வந்து குதித்தவரை யாரும் சட்டை செய்யவில்லை. அங்கு பெரிய வரவேற்ப்பை எதிர்பார்த்த ஆண்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ‘ஆண்டவா’ என்ற பேரொலி மட்டும் குறையாதது கடவுளை குழப்பத்தில் ஆழ்த்தியது.
“மானிட பதர்களே! இன்னும் எதை தேடுகிறீர் ? எதையாவாது ஒன்றை தேடுவதே உங்கள் பிழைப்பா ? நான் தான் வந்துவிட்டேனே !” என்று உரக்க கத்தினார் கடவுள் . ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றை சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. திடிரென பால் அபிஷேகம் நடக்கும் இடம் நோக்கி ஓடிய கூட்டத்தோடு ஆண்டவரும் சேர்ந்துக் கொண்டார். உண்மையை சொல்ல வேண்டுமெனில், மெய் மறந்து நின்ற ஆண்டவர் கூட்டத்தோடு அடித்து செல்லப்பட்டார்.
அங்கே ஆண்டவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.தன்னுடைய முப்பத்திரண்டடி சிலையை எதிர்ப்பார்த்து சென்ற இடத்தில்,வேறொரு ஜாம்பவானின் உருவம் வரையப்பெற்ற முப்பத்திரண்டடி கட்டவுட் இருந்ததால் ஆண்டவர் திடிக்கிற்று நின்றார். அதில் எழுதி இருந்த வாசகங்கள் அவரை இன்னும் கிலி அடைய செய்தது.
‘ஆண்டவர்’ அருமை ராசன் பதினைந்து அவதாரங்களில் நடிக்கும், ‘அண்டமாமுனி’.
“ஐயகோ! என்ன இது. ஒன்பது ஆவதாரம் எடுப்பதற்கே எனக்கு பல யுகமாயிற்றே! பத்தாம் அவதாரத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டது தவறோ! யார் இந்த அருமைராசன்? என்னை மிஞ்சிவிட்டானே! ” ஆண்டவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.பின்னிருந்து ஒரு குரல் கேட்டு திரும்பினார்.
“என்ன தலைவா, அழுவுற ?”, கேட்டவாரே அங்கே நின்றுகொண்டிருந்தான் ஆண்டவரின் தீவிர பக்தனொருவன். ஆண்டவனெனில் அது அருமைராசன். இது பூலோகம்.
“சொல்லு தலைவா. ஏன் அழுவுற ? டிக்கெட் கிடைக்கிலையா ! உன்ன யாரு முத காட்சிக்கு வர சொன்ன ? ஆண்டவர் படம்னா ஒரு வாரம் ஹவுஸ்புள்னு தெரியாதா ! கிளம்பு அடுத்த வாரம் வா”
” பூலோகத்தில் யாரைக் கேட்டாலும் ஆண்டவன் என்கிறார்களே. யாரப்பா அந்த ஆண்டவன் ?”
“ஓய் என்னா ! ஆண்டவர தெரியாதா ? எந்த ஊர் நீ. எங்க தலைவர் சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் பேமஸ் ஆச்சே !”
“அவரை தெரிந்துக் கொள்ளும் அவசியம் ஏற்படவில்லையப்பா.
இதுநாள் வரை நான் மட்டும்தான் ஆண்டவன் என நினைத்திருந்தேன். ஒருவன் போட்டியாக வருவான் என நான் கனவிலும் எண்ணியதில்லை”
“என்னது, எங்க ஆண்டவர் உனக்கு போட்டியா ? ஒன் சன். ஒன் மூன். ஒன் ஆண்டவர். அதான் எங்க அருமைராசன்”
“நான் நினைத்தால் ஆயிரம் சூரியன் படைத்திடுவேன். உன் தலைவன் போல் ஓராயிரம் தலைவர்கள் செய்திடுவேன். நான் தானடா உண்மையான கடவுள்.”
“என்ன தலைவா உளர்ற? காலையிலே மப்பா? “
“மப்பா? இல்லையப்பா. உண்மையாகவே நான் தான் அண்டங்களை அடக்கி ஆளும் ஆண்டவன்.வைகுண்டத்திலிருந்து வந்துள்ளேன்”
“உன் கெட்டப்ப பார்த்த அப்படி தெரியலயே. தாடி, மீசை ஜடாமுடிலாம் வச்சிருக்க ! நான் தான் சவரம் பண்ண வக்கத்துப்போய் உக்காந்திருக்கேன். உனக்கின்னா ?”
“இது தானப்பா என் உண்மையான உருவம். இதிலென்ன உனக்கு சந்தேகம்?”
“பொதுவா கடவுள்ன வழிச்சு சவரம் பண்ணி மூஞ்சிலாம் டால் அடிக்கிற மாதிரி இருப்பாங்களே. கிருஷ்ணரு,ராமரு,முருகருனு எல்லாரும் அப்படித்தான இருக்குறாங்க. ஏதோ கருப்பு, சுடலை மாதிரி சாமிலாந்தான் மீசையோட இருக்காங்க,என்ன மாதிரி. நீ வைகுண்ட கோஸ்டினா மீச இருக்க கூடாதே !”
“வெறும் மீசைதானே.அதிலென்ன உனக்கு பிரச்சனை !”
“என்ன சார் அப்படி மீசைய சாதரணமா நினைச்சுபுட்ட . நம்ம ஆண்டவர் ஒரு படத்துல டபுள் அக்டிங் கொடுத்திருப்பாரு பாரு. மீசை வச்சு ஒரு வேசம். மீசை இல்லாம ஒரு வேசம். படம் 175 நாள். அந்த படத்துல மீசைதான முக்கியமான கேரக்டரு”
“யாது சொல்கிறாய் மகனே! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே “
“செம்மொழி மானாட்டில பேசுறமாதிரியே பேசிக்கிட்டு இருக்க . நீ கடவுள்னு நான் எப்படி நம்புறது ?”
“நீ என்ன வேண்டுமென்றாலும் கேள் .தருகிறேன் “
“நீயெல்லாம் ஒன்னும் தர வேணாம். இப்பலாம் அரசாங்கமே ஓசிலயே எல்லாத்தையும் கொடுக்குது. அரிசியில இருந்து லேப்டாப் வரைக்கும்.நீ என்னத்த கொடுத்துற போற பெருசா ?”
“உன்னை பார்த்தால் சாப்பிட்டு பலநாள் இருக்கும் போல் தோன்றுகிறது . என்ன சாப்பிடுகிறாய் கேள் “
“தோடா. என்ன நக்கலா . உன்ன போட்டுதள்ளிட்டு உள்ள போன, ஜெயில்லயே சிக்கன் போடுவாங்க. என்ன சொல்ற.,உன்ன போட்டுடவா ?”
கடவுளின் கண்கள் சிவந்தன. தான் கடவுள் என்பதை நிலை நிறுத்த ஏதாவது செய்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். வெகுண்டு எழுந்த அவர், “அர்ப்பப் பதரே! மூவடியில் உலகை அளந்த என்னையா நீ அவமதிக்கிறாய்? இப்போதே நரசிம்ம அவதாரமெடுத்து இவ்வுலகை அழித்துக் காட்டவா ?” என சூளுரைத்தார்.
“என்ன தலைவா டபாய்க்கிற,நீனவாது நரசிம்ம அவதாரம் எடுக்கனும். எங்க ஆண்டவர் எதுமே இல்லாம ஓரு ரெட் சிப் வச்சே உலகத்த அழிச்சிருவார். போன படத்துல ஒரு ரோபோ செஞ்சு, அதுக்கு ரெட் சிப்ப பொருத்துவார். அந்த ரோபா உலகையே அழிக்க புறப்படும். பின்னாடியே போய் ரெட்சிப்ப அழிச்சு உலகத்த காப்பாத்துவார். படைத்தல் , காத்தல், அழித்தல்-எல்லாமே எங்க அருமைராசன்தான். அதுனாலதான் அவரு ஆண்டவரு…நீ …………..?”
கடவுள் கதி கலங்கிப்போனார். அருமைராசனை எண்ணும் போது அவர் உடல் சிலிர்த்தது .அருமைராசன் நூறு அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றுமில்லையென எண்ணிக் கொண்டார்.
“மகனே! நிச்சயம் உன் அருமை ராசன் மகான்தான் .ஆனால் நான்தான் உண்மையான சிருஷ்டிகர்த்தா. அதை நீ நம்பியே ஆகவேண்டும் .நிச்சயம் உனக்கு ஏதாவது வரம் அளிக்கிறேன். யாது வேண்டும் கேள் “
“என்னப்பா உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு. சரி விடு. நம்ம அஞ்சலா இல்ல. அதான் பா .என் செட்டப்பு. அவளுக்கும் ஆண்டவர் படம்னா உசுரு . இந்தப் படத்த இன்னைக்கே பாக்கனுமா… ஆனா பாரேன்! டிக்கெட் கிடைக்கில.ஹவுஸ்புல் . நீ ஒரு ரெண்டு டிக்கெட்டு,ப்ளாக்ல,இன்னக்கு ராத்திரி ஆட்டதுக்கு வாங்கிக் கொடு. அப்புறம் நீ கடவுள்னு ஒத்துக்கிறது என்ன, ஊட்டுக்கு இட்டுப் போய் நல்ல கோழி அடிச்சு சோறு போடுறேன். நீ கவுச்ச சாப்பிடுவயில்ல ?”
கடவுளால் ஒன்றும் பேச இயலவில்லை. கடந்த காலம் அவர் கண் முன் ஓட தொடங்கிற்று. எத்தனை அரக்கர்களை கொன்று குவித்துள்ளார், எத்தனை சத்ரிய இரத்தங்களில் புனித நீராடியுள்ளார். ஆனால் இன்று தன்னால் ஒரு ப்ளாக் டிக்கெட் வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வெட்கி தலை குனித்து நின்றார். ஒருபுறம் சராசரி மனிதனின் ஏளனச் சொற்கள் அவரை முள்ளாய் குத்திற்று. இன்னொருபுறம்
அருமைராசனின்பிரமாண்ட கட் அவுட் உருவம் அவரை மிரட்டிற்று.
தன்னிலை மறந்து கடவுள்
புலம்பத் தொடங்கினார்,”நான்தான் கடவுள்.
நான் தான் உண்மையான ஆண்டவன் “.
“இது வேலைக்கு ஆகாது “என்றபடி தீவிர பக்தன் அந்த இடத்தை விட்டு நழுவினான் .
தனக்கு தானே கடவுள் புலம்பிக்கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றை சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது.