ஐயனுக்கே ஆதார் !

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 21,441 
 
 

“சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார்“

“தம்பூரா இசையோடு “நாராயணா, நாராயணா, நாராயண” நாரதரின் குரல் ஒலிக்கிறது

சிவபெருமான் தியானத்திலிருந்து எழவில்லை

“விடாமல் தம்பூராவை மீட்டிக் கொண்டிருக்கிறார்..கடைசியில் கண் விழிக்கிறார் சிவபெருமான்.

“என்ன நாரதரே சேதி எதுவும் உண்டோ?“

“ஐயனே! நீங்கள் இந்த இடத்தில் தொடர்ந்து தியானத்தில் இருக்க வேண்டுமென்றால், இருப்பிட சான்று வேண்டுமாம். இது அரசாங்கத்தின் கட்டளை

அரசாங்கமா? யாம்தானே அரசாங்கம், என்னுடைய ராஜ்யம்தானே நடந்து கொண்டிருக்கிறது.

“ஐயனே, நீங்கள் தியானத்தில் மூழ்கி விட்டால்…. விழிப்பதற்கு பல யுகங்கள் ஆகிறது“ இப்போது கலியுகத்தில் விழித்திருக்கிறீர்கள்.

ஆதலால் இராஜ்யம் இப்போது “மக்களாட்சி” தத்துவமாக மாறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சி நடத்தப்படுகிறது. இது தங்களின் ”ஞான திருஷ்டிக்கு” புலப்படவில்லையா?

“ நாராதா ! சிவனின் கோபக்குரலில் நாரதர் பயந்து நடுங்கினார்

இருக்கட்டும்…இருக்கட்டும் என்னையே சோதிக்கிறாயா நீ என்றார்.

இல்லை ஐயனே, நீங்கள் தொடர்ந்து இங்கு தியானத்தில் அமரவேண்டுமென்றால் நிச்சயம் அடையாள அட்டை வேண்டுமாம். இதோ பாருங்கள் நான்கூட அடையாள அட்டை வாங்கி விட்டேன்.

அடையாள அட்டையை சிவனிடம் காண்பித்தார்.

”நாரதா ! இந்த அட்டையில் இருப்பது உன் போலில்லையே” வேறு ஆள் போல் இருக்கிறதே.

இல்லை ஐயனே! நான்தான்“ “உங்கள் தலையில் வேண்டுமானால் அடித்து சொல்கிறேன்“ கையை ஓங்குகிறார்.

“வேண்டாம்..வேண்டாம். ஒனக்கு ஏன் கோபம் இந்த சாக்கில் ”கங்கையை குட்டி விடலாம் என்ற நினைப்போ” என்றார்.

ஐயோ. ”கங்கா மாதாவை நான் குட்டுவேனோ” பம்மினார்.

சரி..சரி. விஷயத்துக்கு வாரும்.. நேரத்தை வீணடிக்காதே

ஐயனே.. மலையடிவாரத்தில்…. அடையாள அட்டை வழங்குவதற்கு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் போங்கள், தாமதமாக போனால், ”புகைப்படம் எடுப்பவர்கள் வீட்டிற்கு சென்று விடுவார்கள்” என்று துரிதப்படுத்தினார்.

“நாரதா !… குடும்பத்தோடு போக வேண்டுமா ? இல்லை நான் மட்டும் போக வேண்டுமா ?

இல்லை ஐயனே, ”நீங்கள் குடும்பமாய் சேர்ந்து போவதற்குள்….. முகாமே இழுத்து மூடிவிடுவார்கள்.

”முதலில் நீங்கள் அம்மை உமாவை தேட வேண்டும். அவர் உங்களை நினைத்து எந்த மரத்தடியில் தவம் செய்து கொண்டிருக்கிறாரோ ?

பிறகு விநாயகர் எந்த ஊர் அரசமரத்தடியில் இருக்கிறாரோ. தங்கள் கடைக்குட்டி ”முருகனைக் கேட்கவும் வேண்டுமா ? “ அறுபடை வீடுகளில் எந்த வீட்டில் இருக்கிறாரோ” முதலில் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் “ என்று எடுத்துரைத்தார்.

“ சரி நான் முதலில் போகிறேன். நீயும் வாயேன் துணைக்கு… என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்த வேண்டாமா ”

அறிமுகமா…அதெல்லாம் ஒண்ணும் கிடையாது…அரசன் என்றாலும்…ஆண்டி என்றாலும் வரிசையில் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும்“

“என்னை அரசன் என்கிறீரா? ஆண்டி என்கிறீரா?

”ஏன் தங்களுக்கு முருகனைப் போல முணுக்குமுணுக்கென்று கோபம் வருகிறது. நீங்கள் அரசருக்கெல்லாம் அரசன்…ஆண்டிக்கெல்லாமும் அரசன்“ ஒருவாறு சமாளித்தார்.

”நானா! வரிசையில் நிற்பதா? என்ன கொடுமை நாரதா”

ஆம், ஐயனே, நீங்கள் இருப்பது கலிகாலம் அதுமட்டுமல்ல விஞ்ஞான யுகம். நீங்கள் கண் திறந்து மற்றவரை எரிப்பது போல்… கண்ணிமை திறந்து மூடுவதற்குள்ளாகவே… அடுத்த நாட்டை அழிக்கும் ஆற்றல் படைத்த ஆயுதங்களை கண்டுபிடித்து விட்டான் மனிதன்.

“அப்படியா, என் நெற்றிக்கண்ணை விடவும் ஆற்றல் வாய்ந்த தா?

ஆம் ஐயனே“ சிவபெருமானுக்கு அப்போதே அடிவயிறு கலங்கி போயிற்று

ஒரு வழியாய் அடையாள அட்டை முகாமிற்கு சென்றார்.

”வரிசையாய் மக்கள் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

“நாரதர் முன்னே போய்“ ஐயன் சிவன் ”வந்திருக்கிறார் அடையாள அட்டை அவருக்கு எடுத்து விடுங்கள் சிபாரிசுக்கு போனார்

“யாராயிருந்தாலும் வரிசையிலதான் வந்தாகணும்” இது எங்க ஆபிசர் உத்தரவு என்றார் புகைப்பட எடுப்பவர்.

“சிறப்பு அனுமதியின் பேரில் எடுத்து தரமுடியுமா” கிசுகிசுத்தார்.

“எடுக்கலாமே! அதற்கு ”தனியாக கவனிக்க வேண்டும்”

”தனியாக கவனிக்க வேண்டும் என்றால்.புரியவில்லை எனக்கு. புரியலை !

”ஏதாவது அண்பளிப்பு வழங்கினால் உடனே புகைப்படம் எடுத்து அடையாள அட்டையும் வழங்கலாம், நீங்கள் அவரிடம் கேட்டு சொல்லுங்கள்.

”ஐயனே, நீங்கள் வேறு சீக்கிரமாய் மேலே போக வேண்டுமென்கிறீர், ஆதலால் சீக்கிரமாய் முடிய வேண்டுமென்றால், ஏதேனும்.. ”பொருள் அண்பளிப்பாக தரவேண்டுமாம்”

“என்னது ? என்னிடமிருந்து அண்பளிப்பா?

“என்னிடம் இருப்பதெல்லாம், புலித்தோல், பிட்சை பாத்திரம், விபூதி சாம்பல்” இவற்றில் எது வேண்டுமென கேட்டு சொல்” என்றார்.

அடையாள அட்டை எடுப்பவரிடம்…அவரிடம் இந்த இந்த பொருட்கள்தான் இருக்கிறது உமக்கு எது வேண்டும் என்கிறார் நாரதர்.

“அதெல்லாம் யாருக்கு வேண்டும்” மிகவும் விலை மதிப்பான பொருள் ஏதாவது வேண்டுமே…யோசித்து…“ அட, அவருக்காக. தங்கள் கையிலிருக்கும் ”தம்பூரா”வை வேண்டுமானால் கொடுங்கள்.

ஐயோ, தம்பூராவையா அலறினார் நாரதர்.

“நாரதா ஏன் அலறுகிறாய், கொடுத்து விடு உன் தம்பூராவை“ என்று சிவபெருமான்சொல்ல ”தம்பூரா புகைப்பட காரரிடம் அடைக்கலமாகிறது.

“ஐயா, வர்றார், வழி விடுங்க… ஐயா வர்றார் வழி விடுங்க, ஐயா வர்றார் வழி விடுங்க” டவாலி குரல் கொடுக்க உள்ளே போன சிவபெருமான் புகைப்பட கேமிராவின் முன் அமர்கிறார்.

”கேமிராவில் சிவபெருமானின் கருவிழிகள் பதியப்படுகின்றன. “கேமிராமேன் பதறுகிறார். என்ன ஒங்களுக்கு மூன்று கண்கள் தெரிகிறதே” என்கிறார்.

”ஆம், யாம் முக்கண்ணன்தான்” என்கிறார்.

உடனே பதிவேட்டில்” முக்கண்ணன்” என்று குறித்து கொள்ளப்படுகிறது. அது தெரியாமல் ”சீக்கிரமாய் வேலை முடிந்ததென மகிழ்ச்சியோடு ”அங்கேயே ஆனந்த கூத்தாடுகிறார்”

”உடனே அங்கிருந்த டவாலி, ஆபிசர் வர்ற நேரத்தில டான்ஸ் ஆடக்கூடாது என்கிறார். முறைத்து விட்டு வெளியேறுகிறார் சிவபெருமான்..

“ஆனந்த கூத்தோடு அடையாள அட்டையை சரியாக பார்க்காமல்… மலைக்கு மேலே சென்று விடுகிறார்.

சிறிது நாளில் ஆபிசர் குழு மலைக்கு மேலே உள்ளவர்களின் விவரங்கள் ஆய்வு செய்தனர்.

“சிவபெருமானின் அடையாள அட்டையை வாங்கி சரி பார்த்தனர்.

தங்கள் பெயரென்ன ?

”யாம் சிவபெருமான், அழிக்கும் ஆற்றல் பெற்றவன் என்றார்.

“ இது உங்கள் உருவமாக தெரியவில்லையே, பெயரிலும்…. மாற்றம் உள்ளதே

“பெயரில் மாற்றமா ? என்ன பெயர் உள்ளது.

”முக்கண்ணன் ” என்று உள்ளது. ஆம் அதுவும் என் பெயர்தான். மக்கள் என்னை அப்படியும் அழைப்பர்.

”செல்லப் பெயரெல்லாம் அடையாள அட்டையில் செல்லுபடியாகாது, ஆதலால் நீங்கள் மீண்டும் பெயர் திருத்தத்திற்கு இமயமலை அடிவாரத்தில் இயங்கும் முகாமிற்கு சென்று திருத்தம் செய்து கொள்ளுங்கள்“ அப்போதுதான் நீங்கள் இந்த இடத்தில் இருக்க முடியும் என்கின்றனர்.

”என்னை யாரென்று நினைத்தீர்” என்னை உற்றுப் பாரும்” கோபத்தோடு மூன்றாவது கண்ணைத் திறந்தார்.

“மூன்றாவது கண்ணைத் திறந்த போதும்…. அவர்கள் முழுதாக இருந்தனர்.“ அவர்கள் ”புல்லட் புருப் ” கோட்டு போல ” தீப்பிடிக்காத ஆடையணிந்திருந்தனர்.

“நான் முக்கண்ணன்தான், நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் பராவாயில்லை, இமயமலையின் உச்சியிலேயே அருபமாக மறையும்போது ”நீங்களும், ஒங்க அடையாள அட்டையும்” தூக்கி வீசினார்

அடையாள அட்டை ஐஸ் தண்ணீரில் வீழ்ந்து உடனே உறைந்து சிவபெருமான் போல மறைந்து விட்டது.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ““ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கையில் கிடைக்கிறது…. முற்காலத்தில் அடையாள அட்டைகள் வைத்திருந்தார்கள் போலிருக்கிறதே. நாமும் அதை கடைப்பிடிக்கலாமோ” என்று யோசித்தார்கள் வேற்றுகிரக வாசிகளான ஏலியன்கள்..

Print Friendly, PDF & Email

1 thought on “ஐயனுக்கே ஆதார் !

  1. ஐயனுக்கே ஆதார் கதையினை பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, வளரும் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இத்தளம், மென்மேலும் மெருகேற்றி கொள்வதற்கு உறுதுணையாய் உள்ளது. மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *