திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது.
மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர்.
அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார். எல்லாரும், ‘என்னங்க’ யாருக்கு மாலையைப் போட்டிங்க’ என்று கேட்க.
அவர் ‘மதுரை பொன்னுசாமிக்கு’ தான் என்றார்.
அவர்கள், ‘அவரல்ல, இவர்தான் பொன்னுசாமி’ என்று சுட்டிக்காட்டிச் சொன்னதும் –
வந்தவர். ‘இவரைவிட அவர் நல்லா வாசித்தாரே’– என்றார்.
‘எப்படி ஐயா கண்டீர்கள்’ – என வியந்து கேட்க மாலை போட்டவர்,
‘இவர் விட்டுவிட்டு ஊதுகிறார்?
‘அவர் விடாமல் ஊதுகிறாரே’
– என்று சொன்னார்.
அறுபது ஆண்டுகட்கு முன்பே –
நம்மில் சிலர் இசையைச் சுவைத்த அழகு இது –
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை