இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன பாதாளக் கதை
இரண்டாம் நாள் காலை போஜனாகப்பட்டவர் பல்லைத் தேய்க்காமலே காபி குடித்துவிட்டு, காலைப் பத்திரிகையை எடுத்து ஒரு புரட்டுப் புரட்டிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் குளித்து, ‘அடுத்த வீட்டுக்காரன் பூஜை செய்கிறானே!’ என்பதற்காகத் தானும் தன் மனைவியையும், அவள் செய்து கொண்டிருக்கும் சமையலையும் நினைத்துக் கொண்டே பூஜை செய்து, முப்பத்திரண்டு தருமங்களில் ஒரு தருமத்தைக்கூடச் செய்யாமல், சம்பிரமமாகச் சாப்பிட்டு, தாம்பூலம் தரித்து, மிஸ்டர் விக்கிரமாதித்தரின் சந்நிதானத்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலையில், அவருடைய நண்பரான நீதிதேவனாகப்பட்டவர் அங்கே வர, இருவரும் சேர்ந்து ‘மலையில்லா மலைச்சாலை’க்குச் செல்வாராயினர்.
அங்கே அவர்கள் ஏறிச் சென்ற ‘லிப்ட்’ இரண்டாவது மாடியை நெருங்கியதுதான் தாமதம். அந்த மாடியின் ரிஸ்ப்ஷனிஸ்டான மதனா விரைந்து வந்து, ‘நில்லுங்கள், நில்லுங்கள்’ என்று சொல்ல, ‘’சொல்லுங்கள், சொல்லுங்கள்?” என்று இருவரும் லிப்டை விட்டு இறங்கி, அவளை நோக்கிச் செல்வாராயினர்.
“எங்கள் விக்கிரமாதித்தருக்கு உள்ளது போல உங்களுக்குத் தயை உண்டா?”
“உண்டு.”
“தாட்சண்யம் உண்டா?”
“உண்டு.”
“இரக்கம் உண்டா?”
“உண்டு.”
“ஈகை உண்டா”
“உண்டு.”
“தவம் உண்டா?”
“உண்டு.”
“தருமம் உண்டா?”
“உண்டு.”
“பொறுமை உண்டா?”
“உண்டு.”
“பெருமை உண்டா?”
“உண்டு.”
இப்படியாகத்தானே அவள் ஒவ்வொரு குணத்தையும் குறிப்பிட்டு,”உண்டா, உண்டா?” என்று கேட்டுக் கொண்டே வர,”உண்டு, உண்டு” என்று சொல்லி அலுத்துப் போன போஜனும் நீதிதேவனும்,”உறுதி உண்டா, உண்டு; ஒழுக்கம் உண்டா, உண்டு; நெறி உண்டா, உண்டு; நீதி உண்டா, உண்டு; வீரம் உண்டா, உண்டு; விசுவாசம் உண்டா, உண்டு; சக்தி உண்டா, உண்டு; பக்தி உண்டா, உண்டு” என்று பாக்கியிருந்த அத்தனையையும் தாங்களாகவே ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, அசந்து போன வனிதாமணி மதனா,”எல்லாவற்றுக்கும்”உண்டு, உண்டு” என்று சொல்லி விட்டால் மட்டும் உங்களை நான் விட்டுவிடுவேனா? விட்டால் நான் ரிஸப்ஷனிஸ்ட் ஆவேனோ? உட்காருங்கள், கதையைக் கேளுங்கள்” என்று கதை சொல்ல ஆரம்பிக்க, போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக் கொண்டே கதை கேட்கலாயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு….
“கேளாய், போஜனே இந்த மலையில்லா மலைச் சாலைக்குத் தெற்கே ‘பரங்கிமலை, பரங்கிமலை’ என்று ஒரு பதி உண்டு. அந்தப் பதியிலே ‘முருக்கமரம், முருக்கமரம்’ என்று ஒரு முருக்கமரம் இல்லாவிட்டாலும் ‘முருங்கை மரம், முருங்கை மரம்’ என்று ஒரு முருங்கை மரம் உண்டு. அந்த முருங்கை மரத்தடியிலே “‘காளி கோயில்” என்று ஒன்று இல்லாவிட்டாலும், ‘பிள்ளையார் கோயில்’ என்று ஒன்று உண்டு. அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு ஒரு நாள் மாலை ஒரு பிள்ளையாண்டான் வந்து, முறைப்படி மூன்று முறை சுற்றி, மூன்று தோப்புக்கரணங்கள் போட்டு, மூன்று முறை கன்னத்தில் போட்டுக் கொண்டு, மூன்று குட்டுக்கள் குட்டிக்கொண்டு, கை குவித்து, சிரம் தாழ்த்தி, ‘ஐயா, விநாயகரே! அம்மாவைப்போல் பெண் கிடைக்காத வரை நான் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நீர்தான் அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் உட்கார்ந்து அடம் பிடித்ததெல்லாம் போதாதென்று, இப்பொழுது முருங்கை மரத்தடியிலும் வந்து உட்கார்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்! எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; என் பாட்டியைப் போல ஒரு பெண் கிடைத்தால் கூடப் போதும், பரம சந்தோஷமாகக் கலியாணம் செய்து கொண்டு விடுவேன். அதற்காக உமக்கு ஏதாவது வேண்டுமானால் தயங்காமல் கேளும், தாரளமாகக் கொடுக்கிறேன்! என்ன இருந்தாலும் நான் மனிதன்; பிறருக்காக ஒரு பைசா செலவழிக்கத் தயாராயில்லா விட்டாலும் எனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருப்பேன்!’ என்று ‘வேண்டு வேண்டு’ என வேண்ட, அப்போது முருங்கை மரத்தின் உச்சாணிக் கிளையொன்றில் தலை கீழாகத் தொங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாதாளசாமி என்னும் ஒர் அரைப் பைத்தியம், ‘ஆயிரம் தேங்காய்களைக் கொண்டு வந்து சூறை விடு, அப்பனே! அடுத்த நாளே உனக்குக் கலியாணமாகும்!’ என்று சொல்ல, அதை ‘அசரீரி வாக்கு’ என எண்ணி, அவனும் ஒரு வெள்ளிக்கிழமையன்று மாலை ஆயிரம் தேங்காய்களுடன் வந்து, ஒவ்வொரு தேங்காயாகச் சூறை விட்டுக் கொண்டே போய், தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது தேங்காய்களைச் சூறை விட்டுவிட்டு, ஆயிரத்தாவது காயை எடுத்துச் சூறை விடுவதற்காக ஓங்க, முருங்கை மரத்தின் மேல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாதாளம் அதை ‘லபக்’கென்று பிடுங்கிக் கொண்டு மறைய, ‘நம்முடைய பிரார்த்தனைக்கு இப்படி ஒர் இடையூறா?’ என்று பிள்ளையாண்டான் அண்ணாந்து பார்க்க, மேலே யாரும் இல்லாததைக் கண்டு, ‘இது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லையே? தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்பது காய்களைச் சூறை விடும் வரை என்னுடைய பிரார்த்தனைக்கு எந்த விதமான விக்கினமும் நேராமல் இருந்து விட்டு, ஆயிரத்தாவது காயைச் சூறை விடும் போதுதானா இந்த அக்கிரமம் நடக்க வேண்டும்? ஏ, அப்பமுப்பழும் அமுது செய்தருளும் தொப்பையப்பனே! இதனால் அடுத்த நாளே நடக்க வேண்டிய என்னுடைய கலியாணம் இப்போது தள்ளியல்லவா போய் விடும் போலிருக்கிறது? என்ன செய்வேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் ஒட்டலில் சாப்பிடுவேன்? ஊர் வம்பு கேட்காமல் இருப்பேன்? அவ்வப்போது அவள் செய்து வைக்கும் சாம்பார் ஸ்நானத்துக்கும், ரசம் ஸ்நானத்துக்கும் என் தலையைக் காட்டாமல் இருப்பேன்?’ என்று பலவாறாகப் புலம்பிய பின் ஒருவாறு தெளிந்து, அருகிலிருந்த கடைக்கு அவசர அவசரமாக ஒடி, இன்னொரு தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அதையும் அவனுக்குத் தெரியாமல் பாதாளம் பிடுங்கிக் கொள்ள, ‘விடா முயற்சி வெற்றி தரும்’ என்று யாரோ ஒரு ‘போணி’ ஆகாத தேங்காய்க் கடைக்காரன் எப்போதோ சொல்லி வைத்ததை நம்பி, அவன் ஒன்றன்பின் ஒன்றாகத் தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அத்தனையையும் அந்த பாதாளம் ‘லபக், லபக்’கென்று பிடுங்கிக் கொள்ள, அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டு நின்ற போது, அங்கே வந்த ஒரு பெரியவர், ‘என்ன தம்பி, ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்?’ என்று கேட்க, அவன் நடந்ததைச் சொல்ல, ‘இந்த முருங்கை மரத்தின் மேல் பாதாளசாமி, பாதாளசாமி என்று ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். அவன் இங்கே வருபவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது இடையூறு செய்து கொண்டே இருக்கிறான்’ என்று பெரியவர் விளக்க, ‘இவ்வளவு பெரிய உலகத்தில் அவனைப் பிடித்து அடக்குவார் யாரும் இல்லையா?’ என்று பிள்ளையாண்டான் புலம்ப, ‘அவனைப் பிடித்து அடக்க இந்த உலகத்தில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி!’ என்று பெரியவர் சொல்ல, பிள்ளையாண்டான் எங்கள் விக்கிரமாதித்தரைத் தேடி வந்து முறையிடலாயினன், முறையிடலாயினன், முறையிடலாயினன்….
அவன் குறை கேட்டார் எங்கள் விக்கிரமாதித்தர்; ‘நிவர்த்திப்போம்” என்றார். உடனே புறப்பட்டார் சிட்டியுடன். முருங்கை மரத்தை நெருங்கினார்; ஏறினார். பாய்ந்து பிடித்தார் பாதாளத்தை; இறங்கினார்.
அப்போது, ‘உம்மைப் பார்க்க வரும் போஜனிடமும், நீதிதேவனிடமும் உம்முடைய ரிஸப்ஷனிஸ்ட்டுகள் கதை சொல்லும்போது, என்னைப் பிடிக்க வந்த உம்மிடம் மட்டும் நான் ஏன் கதை சொல்லக்கூடாது?’ என்று சாட்சாத் விக்கிரமாதித்தரிடமே அந்த பாதாளம் கேட்க, ‘சொல் அப்பனே, சொல்?’ என்றார் விக்கிரமாதித்தர்.
பாதாளம் சொன்னதாவது:
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பத்மாவதி கதை
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! இந்தப் பரங்கிமலைப் பதியிலே ‘பத்மாவதி, பத்மாவதி” என்று ஒரு பாவை உண்டு. அந்தப் பாவையாகப்பட்டவள் பட்டணத்திலே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததால், தினந்தோறும் பஸ் ஸ்டாண்டிலே வந்து நிற்பதுண்டு. அவள் அவ்வாறு வந்து நிற்கும் போதெல்லாம் இரண்டு ‘அரும்பு மீசைகள்’ அங்கே வந்து அவளை ‘டா’வடிப்பதுண்டு. அப்படி ஒரு நாள் ‘டா’ வடித்துக் கொண்டிருங் காலையில், அவள் ‘தூ’ என்று கீழே துப்ப, ‘ஆஹா! அந்தக் கனி ரஸத்தைக் கீழே துப்புவதற்குப் பதிலாக என் மேலே துப்பியிருக்கக் கூடாதா? அந்த அளவுக்குக் கூடவா நான் பாக்கியம் செய்யவில்லை?” என்று எம். ஜி. ஆர். மீசை வருந்த, ‘வருந்தாதே தம்பி, வருந்தாதே! வருந்தி வருந்தி உள்ளம் உருகாதே! வருந்தாதே தம்பி, வருந்தாதே!’ என்று ‘தூங்காதே தம்பி, தூங்காதே’ மெட்டில் சிவாஜி மீசை பாட, ‘வேறு என்னடா வழி, தாங்க முடியவில்லையே என்னால்!’ என்று அது துடியாய்த் துடிக்க, ‘இதோ வழி என்று இது சொல்லலுற்றது:
‘அந்த ஆரணங்கு பஸ்ஸில் ஏறியதும் நீயும் ஏறு: அவளுக்குப் பக்கத்தில் நில். கண்டக்டர் வந்து ‘டிக்கெட்’ என்றதும் அவளுக்கும் சேர்த்து ‘இரண்டு டிக்கெட்’ என்று கேள்; அவள் முறைப்பாள். கலங்காதே; ‘வீட்டில் போட்ட சண்டை வீட்டோடு இருக்கட்டும்; வெளியே வேண்டாம்’ என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ‘நீ கொடப்பா, இரண்டு டிக்கெட்’ என்று கண்டக்டரைப் பார்த்துச் சொல். அவன் ‘கணவன்-மனைவி சண்டையாக்கும்’ என்று நினைத்து டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய் விடுவான். அதற்கு மேல் அவள் ஏதாவது முணுமுணுத்தாலும் அதை நீ காதில் போட்டுக் கொள்ளாதே! ‘ஒவ’ராகப் போனால் அங்கேயே ஐந்து பேரைக் கூட்டி, ‘கேளுங்கள் ஸார், இந்த அக்கிரமத்தை?’ என்று அஞ்சாமல் பஞ்சாயத்து வை; அவள் அசந்து விடுவாள். பஸ்ஸை விட்டு இறங்கியதும் மெல்ல அவளை நெருங்கி, ‘எப்படி என் ஐடியா?’ என்று கேட்டு இளி; ‘பிரமாதம்’ என்று அவளும் இளிப்பாள். அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது, நீ கேட்கத்தான் என்ன இருக்கிறது? ‘புகையிலை பிரித்தால் போச்சு, பெண் பிள்ளை சிரித்தால் போச்சு!” என்றுதான் ஒரு பழமொழியே இருக்கிறதே!’
இப்படியாகத்தானே சிவாஜி மீசை ஒர் அபூர்வமான யோசனையைச் சொல்ல, அதை அப்படியே ஏற்று எம்.ஜி.ஆர். மீசை செய்ய, பத்மாவதியாகப்பட்டவள் வெகுண்டு, ‘பிய்த்துவிடுவேன், பிய்த்து!’ என்பது போல் தன் கையிலிருந்த குடையைத் தூக்கிக் காட்டி விட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போவாளாயினள்.
எம்.ஜி.ஆர். மீசை திரும்பி வந்து, நடந்ததை அப்படியே சிவாஜி மீசையிடம் சொல்ல, அது சிரித்து, ‘பைத்தியக்காரா, ஒரு பெண் குடையைத் தூக்கிக் காட்டினால் என்ன அர்த்தம் என்று தெரியாதா, உனக்கு? இப்போது மழைக் காலம்; குளிருக்குப் போர்த்திக் கொண்டு தூங்கத்தான் தோன்றுமே தவிர, கலியாணம் பண்ணிக் கொண்டு சல்லாபமாக இருக்கத் தோன்றாது. ஆகவே, இந்த மழைக் காலம் போகட்டும்; வேனிற் காலத்தில் கலியாணம் பண்ணிக் கொள்ளலாம் என அர்த்தம்’ என்று விளக்க, ‘காத்திருப்பேன், காத்திருப்பேன்; வேனிற்காலம் வரும்வரை என் வெண்ணிலா எனை மணக்கக் காத்திருப்பேன்!’ என்று இது உற்சாகமாகச் சீட்டியடித்துப் பாடிக் கொண்டே சென்றது. வேனிற் காலம் வந்ததும், ‘இப்போது என்ன செய்ய? அவளைப் பஸ் ஸ்டாண்டிலும் காணோம், பள்ளிக்கூடத்திலும் காணோமே? கோடை விடுமுறை போல் இருக்கிறதே!’ என்று எம்.ஜி.ஆர். மீசை ஏங்க, ‘அஞ்சற்க, அவள் வீடு எனக்குத் தெரியும். அந்த வீட்டை நான் உனக்குக் காட்டுகிறேன். ஒரு நாள் காலை நீ அந்த வீட்டுக்குப் போ. அவள் தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதற்காக வெளியே வருவாள். அப்போது நீ மெல்ல அவளை நெருங்கு; ‘மாரி போய்க் கோடை வந்துவிட்டது; என் மனத்தை நீ அறியாயோ?’ என்று புலம்பு. உடனே அவள் நினைவுக்கு அந்தக் குடைச் சம்பவம் வந்துவிடும்; கலியாணத்துக்குச் சம்மதித்து விடுவாள். அப்புறம் என்ன? வேண்டியவை ஒரு கரிநாள்; நல்ல ராகுகாலம்; ஒலிபெருக்கி; ‘’டும் டும் டும் மாட்டுக்காரன் தெருவில் வாராண்டி!’ என்பது போன்ற ‘டம் டம் டம் பாட்டு ரிகார்டுகள்; இரண்டு ரோஜாப்பூ மாலைகள்; ‘தான் மட்டுமே புத்திசாலி’ என்று சாதிக்கக் கூடிய ஒரு சீர்திருத்தவாதி-இவ்வளவுதானே?’ என்று சிவாஜி மீசை சொல்ல, இன்னொரு மாலை வேண்டாமா, பிரசங்கிக்கு?’ என்று அது கேட்க, ‘மறந்துவிட்டேன், மொத்தம் மூன்றாக வாங்கிக் கொண்டால் போச்சு!’ என்று இது சொல்லி, அதை அழைத்துக்கொண்டு போய் அவள் வீட்டைக் காட்ட, ‘ஒரு நாள் என்ன, நாளைக் காலையிலேயே நீ என்னை இங்கே பார்க்கலாம்!’ என்று எம். ஜி. ஆர். மீசை ஒரு துள்ளுத் துள்ளிவிட்டுத் தன் வீட்டில் ‘பெற்ற தோஷ’த்துக்காகப் போட்டு வந்த ‘தண்ட சோற்’றை நாடிச் செல்லலாயிற்று.
அடுத்த நாள் காலை பத்மாவதியாகப்பட்டவள் வழக்கம் போல் தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதற்காகத் தெருவுக்கு வர, எம். ஜி. ஆர். மீசை ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்ற பாட்டை அதற்கேற்ற நடையுடன் சீட்டியடித்துப் பாடிக்கொண்டே அவளுக்கு எதிரே போய் நின்று, ‘மாரி போய்க் கோடை வந்துவிட்டது; என் மனத்தை நீ அறியாயோ?’ என, ‘அறிந்தேன், அறிந்தேன்!’ என்று அவள் தன் கையிலிருந்த ஒரு வாளி நீரையும் அதன் தலையிலே கொட்ட, ‘இதற்கு என்ன அர்த்தம்? என்று அதை உடனே தெரிந்து கொள்ளும் துடிப்பில் அது அவளையே கேட்க, ‘போய் உம்முடைய நண்பரைக் கேளும்!’ என்று அவள் சொல்லி அனுப்புவாளாயினள்.
தலையிலிருந்து தண்ணிர் சொட்டச் சொட்ட வந்து நின்ற எம். ஜி. ஆர். மீசையை நோக்கி, ‘என்ன விஷயம், என்ன நடந்தது.’ என்று சிவாஜி மீசை கேட்க, அது நடந்ததைச் சொல்ல, இது வழக்கம்போல் சிரித்து, ‘நடப்பது கோடைக் காலம்; இந்தக் காலத்தில் அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்கவும், காற்றோட்டமாக வெளியே செல்லவுந்தானே தோன்றும்? கலியாணம் பண்ணிக்கொண்டு ‘புழுக்கமாவது, புழுக்கம்!’ என்று உள்ளே தவித்துக் கொண்டிருக்கத் தோன்றுமா என்பதல்லவா இதற்கு அர்த்தம்?’ என்று விளக்க, ‘போடா, போ! வேறு எந்தக் காலத்தில்தான் அவளை நான் கலியாணம் செய்து கொள்வது?” என்று எம். ஜி. ஆர். மீசை ஏமாற்றத்துடன் கேட்க, ‘ஒன்று வேண்டுமானால் செய்; நீ துணிந்து அவள் வீட்டுக்கு ஒரு மடல் தீட்டு!’ என்றது சிவாஜி மீசை.
‘எப்படித் தீட்டுவது?”
‘கண்ணே, மணியே, என் கற்பூரப் பெட்டகமே என ஆரம்பித்து, ‘பாழும் விடுமுறை ஏன்தான் வந்ததோ, அது நம்மைப் பிரித்து வைத்து ஏன்தான் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறதோ?’ என்று ஒரு பாரா ஒப்பாரி வைத்து, அடுத்த பாராவில், ‘ஆஹா! ஒட்டலில் அறை எடுத்துக் கொண்டு நாம் இன்பமாகக் கழித்த அந்த நாட்கள்!-பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன் என்று நீ அந்த ஒட்டலுக்கு வந்து விடுவாய்; வேலைக்குப் போகிறேன் என்று நானும் அந்த ஒட்டலுக்கு வந்துவிடுவேன்?-ஜாலி, ஒரே ஜாலி! ஆஹாஹா! அந்த மாதிரி இந்த விடுமுறையில் ஒரு நாளாவது நாம் இருக்க முடியாதா? இன்பம் துய்க்க முடியாதா? அதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க உன்னால் முடியாதா? கோயில், குளம் என்று ஏதாவது, டைப்ரைட்டிங், தையல் கிளாஸ் என்று ஏதாவது-கொஞ்சம் யோசித்துப் பாரேன்?’ என்று பரவசப்பட்டு, கடைசிப் பாராவில், ‘எழுது கண்ணே, எழுது! உன் பிரிவால் என் உயிர் உடலை விட்டுப் போவதற்கு முன்னால் எழுது!’ என்று தீட்டி, அந்தக் கடிதத்தின் மேலேயே ஒரு சொட்டுக் கண்ணீரை விட்டு, கண்ணீர் வராவிட்டால் தண்ணீரையாவது விட்டு மசியைக் கலங்கவை. உனக்கு நல்ல காலம் இருந்து, அந்தக் கடிதம் அவள் கைக்குப் போய்ச் சேராமல், அவளை வீட்டை விட்டுத் துரத்த ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கும் அவளுடைய சித்தியின் கைக்குப் போய்ச் சேர்ந்தால் போதும்; அந்தப் புண்ணியவதி, ‘பள்ளிக் கூடத்துக்குப் போகிறேன், போகிறேன் என்று ஒட்டலுக்குப் போய் யாரோ ஒரு தடியனுடன் கூத்தடித்துவிட்டா வருகிறாய்?’ என்று அவளை உடனே வீட்டை விட்டுத் துரத்திவிடுவாள். அதற்குப் பின் உன்னைத் தேடி வந்து சரண் அடைவதைத் தவிர அவளுக்கு வேறு வழியே இல்லை!’
இப்படியாகத்தானே சிவாஜி மீசை தன் கடைசி யோசனையைச் சொல்ல, அதை அப்படியே ஏற்று எம். ஜி. ஆர். மீசை செய்ய, அதனால் வீட்டை விட்டு வெளியே விரட்டப்பட்ட பத்மாவதியாகப்பட்டவள் கண்ணீரும் கம்பலையுமாகத் தெருவிலே வந்து நிற்க, அதற்காகவே காத்திருந்ததுபோல் சிவாஜி மீசை அவளை நெருங்கி, ‘எனக்கு அப்போதே தெரியும், அந்தப் பயல் இப்படிச் செய்வானென்று! கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உன் கண்ணீரை என் செந்நீரால் துடைக்க!’ என்று ‘சினிமா வசனம்’ பேச, அதை அவள் வேறு வழியின்றி நம்பி, கொட்டு மேளத்துக்குப் பதிலாகக் கூட்டத்தினரின் கையொலி முழங்க, அந்த அரும்பு மீசைக்கு மாலை சூட்டி ஒருவாறு மனம் தேறுவாளாயினள்.’
இந்த விதமாகத்தானே பாதாளம் தன் முதல் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இப்போது சொல்லும்? இதில் எம். ஜி. ஆர். மீசை செய்தது சரியா, சிவாஜி மீசை செய்தது சரியா? என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘இரண்டு மீசைகள் செய்ததும் சரியல்ல!’ என்று அவர் பதில் சொல்ல, அதுதான் சமயமென்று பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க…காண்க…காண்க….
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.