ஸ்வீட் சர்வாதிகாரி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 4,540 
 

மூணாந்தேதி.

“டாளிங், பேப்பர்லாம் கொண்டு வந்து போடு.”

“எதுக்கு ?”

“பழைய பேப்பர்க்காரன் வந்திருக்கான்.”

“பழைய பேப்பர்க்காரன யார் கூப்ட்டா ?”

“நாந்தான்.”

“பேப்பர் இப்பப் போட வேண்டாம். பேப்பர்காரனப் போகச் சொல்லுங்க.”

“பேப்பர் நெறைய சேந்துருச்சேம்மா?”

“இப்ப வேண்டாம்னா வேண்டாம்தான். அவனத் திருப்பியனுப்புங்க.”

முறைப்பும் முனகலுமாய்ப் பேப்பர்க்காரன் திரும்பிப் போனான்.

‘அடி சர்வாதிகாரீ’ என்று சபித்து, அவளுக்கு டூ விட்டு விட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பிப் போனேன்.

முப்பதாந் தேதி. பாக்கெட்டும் காலி, வாலட்டும் காலி.

“இன்னிக்கி சீக்கிரமா ஆஃபீஸ்க்குக் கிளம்பணும்.”

“எதுக்கு?”

“ஆஃபீஸ்க்கு நடந்துதான் போகணும். பைக்ல பெட்ரோல் இல்ல, பெட்ரோல் போடப் பைசா இல்ல.”

“அட, இவ்வளவுதானா, நீங்க எப்பவும் போல பைக்லயே போகலாம்.”

ஜாக்கெட்டின் அந்தரங்கத்திலிருந்து ஒரு நூற்றியிருபது ரூபாயை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

மாசக்கடைசியில் நூற்றியிருபது ரூபாயா என்று வாயைப் பிளந்து கொண்டு நின்றவனுக்கு விஷயத்தை விளக்கினாள்.

“பழைய பேப்பர்க்காரன்ட்ட நேத்து பேப்பரெல்லாம் எடுத்துப் போட்டேங்க. அதே பேப்பர்க்காரன்தான்.”

“நா போடும்போது வேண்டாம்ன?”

“அது மூணாந்தேதி. மாச ஆரம்பம். கை நிறைய காசு புழங்கற நேரம். இந்தப் பேப்பர்க் காசு அன்னிக்கி வந்திருந்தா, கடல்ல கரச்ச பெருங்காயம் மாதிரி காணாமப் போயிருக்கும். இப்ப மாசக் கடேசில இந்தக் காசு எவ்வளவு விசேஷமாத் தெரியுது பாருங்க. எப்படி நமக்குக் கை குடுக்குது பாருங்க! நூறு ரூபாய்க்கிப் பெட்ரோல் போட்டுக்கிட்டு, சாயங்காலம் வரும்போது இருபது ரூபாய்க்கிக் காய்கறி வாங்கிட்டு வாங்க.”

‘என் டார்லிங், எப்பவும் நீ சர்வாதிகாரியாவே இருடீ’ என்று அவளுக்கு ஓர் அடல்ஸ் ஒன்லி கொடுத்து விட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பிப் போனேன்.

(ஆனந்த விகடன், 12.09.2004)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *