கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 24,395 
 
 

பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக்கொண்டே இருக்கிறாள். காதுகள் என்று ஒன்று இருப்பதையும், அந்த காதுகளை ஒவ்வொரு மனித உயிரும் கேட்பதற்காகவும் பயன்படுத்துகின்றன என்பதையும் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ளாத அடம்பிடித்த ஜென்மம் அவள். செயற்கையாக தயாரிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும், உதாரணமாக ஒரு ஸ்விட்சை எடுத்துக் கொள்ளலாம். அந்த ஸ்விட்சை பத்தாயிரம் முறை உபயோகித்தால் அதன் ஆயட்காலம் முடிந்துவிடும் என்கிற ஒரு அளவுகோள் உள்ளது. அதன் தாங்கும் சக்தி அவ்வளவுதான். ஆனால் இந்த பெண்களின் வாய் மட்டும் வலிக்கவே வலிக்காதா? பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக் கொண்டே போகிறாள். நான் பேசுவதை காது கொடுத்து கேட்கவே மாட்டேன் என்கிறாள். இவ்வாறு தொடர்ச்சியாக பேசுவதன் மூலம் தான் பேசுவதுதான் சரி என்று நிரூபிக்க முயற்சி செய்கிறாள். எவ்வளவு முட்டாள்தனமாக வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் ஒரே விதிதான் பேசி வெற்றி பெறுவதற்கு. அது என்னவென்றால் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பேச வேண்டும். கேட்பவனைப் பற்றிக் கவலையில்லை. அது எந்த நாயாக இருந்தால் என்ன? பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற விதியை மட்டும் கடைபிடித்தால் போதும் இந்த பெண்களுக்கு. அப்படியே ஒவ்வொரு வார்த்தையிலும் விஷத்தை கக்குகிறாள். போன ஜென்மத்தில் பாம்பாக பிறந்திருப்பாள் போல.

பொதுவாக எதற்காக நாம் உணவு உண்கிறோம். வெறுமனே வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக மட்டுமா? எதற்காக நாக்கு என்கிற ஒரு உடற்பாகமும், அதில் சுவை என்கிற அற்புதமான ஒரு விஷயமும் மனிதறுக்கு இயற்கை உருவாக்கி கொடுத்திருக்கிறது. கொஞ்சமாவது சுவையான உணவை கட்டிய மனைவியின் கையால் சமைத்து சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. சுiவாயாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை அதை உருப்படியாக வேகவைத்தாவது கொடுக்கலாம் அல்லவா?

சிலநாட்களுக்கு முன்னாள் அதிகாலை வேளையில் இட்லி என்கிற பெயரில் ஒன்றை கொண்டு வந்து வைத்தாள். அதைச் சாப்பிடுபவர்களுக்கு நூறு பொற்காசுகள் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டுச் சொன்னால் கூட ஒருவனும் முன் வரமாட்டான். துப்பாக்கி முனையில் மிரட்டி மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர் சாப்பிட வற்புறுத்தினால் கூட ஒருவனுக்கு அத்தகைய துணிச்சல் ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான செயலைதாலிகட்டிய ஒரே பாவத்திற்காக காலை உணவாக என்னைச் சாப்பிடச் சொல்கிறாள் என்றால் எத்தனை ஜென்மங்களாக என்னைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறியுடன் அவள் சுற்றித் திரிந்திருப்பாள்.

புத்தர், வள்ளலார், ஏசுபிரான், மஹாவீரர், அன்பே உருவான் அல்லா, மற்றும் உயர்வான் ஜென் கருத்துக்களையெல்லாம் மனதில் சிந்தித்து கோபத்தை அடக்கி, சாந்தத்தை இதயத்தில் பரவச்செய்து, அவளிடம் கூறினேன்,
‘கவிதா நீ இட்லி தட்டில் மாவை ஊற்றி வைத்ததெல்லாம் சரிதான். ஆனால்அடுப்பை பற்ற வைக்க மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். அதனால்தான் இட்லி ஒரே மாவாக இருக்கிறது. கோபம் கொள்ளாமல் சற்று வேக வைத்து கொடுத்தால் உயிரைக் கொடுத்தாவது சாப்பிட்டு விடுவேன், நான் உன் கணவன் என்பதால் என்மீது கருணை கொண்டு அதை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன், இதோ என் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் சிவப்பாக ஏதோ ஒன்றை வதை;திருக்கிறாய். சரி………… அதை மிளகாய் சட்னி என்று வேறு சொல்கிறாய். அதுவும் சரி…………உன்னுடைய இந்தக் கூற்றையெல்லாம் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் வெறும் மாவை இட்லியாக கற்பனை செய்துகொண்டு என்னால் சாப்பிட முடியாது. கண்ணை மூடிக் கொண்டு அது இட்லிதான் என்று எத்தனை மறை தியானம் செய்தாலும் அதை இட்லியாக என்னால் நினைக்க முடியவில்லை. அதுவெறும் மாவு தான் என்பது நூறு சதவீதம் உண்மை என்று எந்த கோவிலில் வேண்டுமானாலும் சூடம் பொருத்தி அதை அனைத்து சத்தியம்செய்ய நான ;தயாராக இருக்கிறேன். நான் சொல்வது மட்டும் பொய்யாக இருந்தால் அந்த ஆத்தா என் கண்ணை பிடுங்கி விடுவாள். ஆனால் நீ சொல்வது பொய்யாக இருந்தால், சற்று சநித்தித்து பார்……….. நான் உன் அன்புக் கணவன் அல்லவா”

இவ்வாறு சிரித்த முகத்துடன் கூறியதற்கு 2 மணி நேரம் மூச்சுவிடாமல் பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக் கொண்டே இருக்கிறாள். என்பாட்டி, கொள்ளுப்பாட்டியை எல்லாம் வம்புக்கு இழுக்கிறாள். தினமும் மூச்சுப்பயிற்சி செய்வாள் போல. இடையில் என்னைப் பேசவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாள். எங்கே நான் பேசினால் அவள் தோற்றுவிடுவாளோ என்கிற பயம். ஈகோ. பேசி பேசியே ஒரு வேகாத இட்லியை, வெறும் மாவை, சுவையான மல்லிகைப்பூ இட்லி என்று நிரூபிக்க முயற்சி செய்கிறாள். அவள் சொல்கிறாள்,
‘திருமணமான புதிதில் பழைய சாதத்தை சாப்பிட்டு விட்டு தேவாமிர்தமாக இருந்தது என்று கூறினாயே, இன்றைக்கு சுiவாய குஷ்பு இட்லி சமைத்து போட்டால் கசக்கிறதோ, ஆம் எல்லாம் கசந்துதான் விட்டது. நானும் கசந்து விட்டேன், உனக்கு எல்லாமே இனி கசக்கத்தான் செய்யும். உனக்கு உன் அலுவலகத்தில் வேலை செய்யும், ஆஷாவைத்தான் இப்பொழுதெல்லாம் பிடித்திருக்கிறது. அதனால்தான், ஆஷா 200 நோக்கியா மொபைல் போனை புதிதாக வாங்கிக் கொண்டு, ‘நான் ஆஷா வாங்கியிருக்கிறேன், நான் ஆஷா வாங்கிவிட்டேன்” என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறாய்”

ஐயோ எப்படியெல்லாம் ரூட் போடுகிறாள். அந்த ஆஷா என் சகோதரி மாதிரி, அவளுக்கு திருமணமாகி 2ம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் இருக்கிறான். ஒரு இட்லிக்காக இப்படி வாய் கூசாமல் பேசுகிறாளே, இவளை நொந்து கொள்வதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்.

பெண்ணுக்கு ஆண் சரிநிகர் சமானம் என்பது உண்மையானால் அவளைப் போலவே நானும் ஏன் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவளை பேசக்கூடாது. எனக்குத் தெரியும் அவளது குடும்பத்தைப் பற்றி பேசினால் அவள் கோபப்படுவாள் என்று. நான் கூறினேன்.

‘பிரியாணி என்று சொல்லி வெறும் அரிசியை வைத்தால் கூட ஆஹா பிரியாணி சூப்பர் என்று வாய் கூசாமல் பொய் சொல்லி சப்பு கொட்டி சாப்பிட நான் என்ன அந்த மங்கூஸ் மண்டையன் மிஸ்டர் பாண்டியனா ( என் மனைவியின் மதிப்பிற்குரிய தந்தையின் பெயர் மிஸ்டர் பாண்டியன்) அந்த ஆள் வெகு நாளாக தின்று கொண்டிருப்பது வெறும் மசாலா தடவிய புழுங்கல்அரிசியைத் தானே. உங்கள் குடும்பத்தில் சமையல் செய்கிறேன் என்கிற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்ஜரியைப் பற்றி நியாயமாக சி.பி.சி.ஐ.டி.க்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தைரியம் என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாத மிஸ்டர் பாண்டியன், தான் தினசரி சாப்பிட்டுக் கொண்டிருப்பது சோறு அல்ல, வாய்க்கரிசி என்பதை கண்டுபிடிக்க முடியாத மிஸ்டர் பாண்டியன், தன் மனைவி, அதாவது உன ;அம்மாவை எதிர்த்து பேசி சப்பாத்திக் கட்டைத் தாக்குதலில் ஒரு பல்லை இழந்து அந்த இடத்தில் பெருமையாக ஒரு தங்கப்பல்லை கட்டியிருக்கின்ற மிஸ்டர் பாண்டியன். வெகு நாட்களாக தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள மடியாமல் வாழ்நாளெல்லாம் ஒரு புள்ளைப் பூச்சியாக வாழ்ந்திருக்கிறார் என்றால்அதை மிகையான சொல் இல்லை. பாவம் அவரும் என்றாவது ஒருநாள் நல்ல சாப்பாடு சாப்பிட்டால்தானே, ‘ஓ ………. இதுதான் சாப்பாடா……… அப்படியென்றால் இவ்வளவு நாள் நான் சாப்பிட்டதற்கு பெயர் என்ன” என்று ஆச்சரியப்பட்டிருப்பார். அவருக்குத்தான் கடந்த 30 வருடங்களாக உன ;அம்மா அந்த வாய்ப்பை வழங்கவே இல்லையே. பின் என்ன செய்வார் அந்தப் பாவப்பட்ட மனிதர். அவரும் ஒப்பிட்டுப் பார்க்க ஏதாவது ஓரிடத்தில் நல்ல உணவு கிடைத்தால் தானே மனிதர் புரிந்து கொள்வார்.

இப்படிப்பட்ட உன் அம்மாவிடம் பயிற்சி பெற்ற நீ இந்த மாவை இட்லி என்று நிரூபிக்க மனசாட்சியே இல்லாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். ஆனால்;, நான் ஏமாறத் தயாராக இல்லை. நான் ஏற்கனவே இட்லி என்ற ஒன்றை பார்த்திருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன், கடவுள் மேல் ஆணையாக சொல்கிறேன் இது இட்லியே கிடையாது. இட்லிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இட்லி மாவுக்கும், இதற்கும் 6 வித்தியாசங்கள் கண்டு பிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்தாலும ஆனந்தவிகடன் வாசகர்கள் எல்லாம் தோற்றுப் போவார்கள். அந்த ஆயிரம் ரூபாயை ஒருவனால் கூட வாங்க முடியாது. மனதில் வைத்துக் கொள். மிஸ்டர் பாண்டியனைப் போல் நான் ஒன்றும் ஏமாந்தவன் அல்ல.”

அவள் கண்ணில்கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அனைத்துப் பொருள்களையும் தூக்கிப் போட ஆரம்பித்தாள், இடைவிடாமல்p என்னைத் திட்டிக் கொண்டே இருந்தாள். உச்ச கட்டமாக எனக்கு உணவில் விஷம் வைத்து கொள்ளப் போவதாக மிரட்டினாள்.

நான் பதிலுக்கு உன் சமையலை விட விஷத்திற்கு அவ்வளவு சக்தி உண்டா என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

3 வருட கியாரண்டி கொடுக்கப்பட்ட குக்கர் மூடியை தூக்கி 135 கிலோ மீட்டர் வேகத்தில் என்னை நோக்கி எறிந்தாள். மயிரிழையில் உயிர் தப்பினேன் என்பது வெறும் பேச்சுக்கில்லை.

இவ்வளவு ரணகளங்களுக்கும் நடுவே என் 6 வயது மகள் வாசல் படியில் 2 அணில் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று, ஒரு முத்தமிட்டு அவளைப் பார்த்தேன். அவளிடம் எந்தவித பாதிப்பும் இல்லை. அவள் மனதிற்குள் நினைத்திருக்கலாம். ஒரு இட்லிக்கு இவ்வளவு பெரிய போரா, இவர்கள் எல்லாம் மனிதர்களா, இல்லை மிருகங்களா என்று. இனிவரும் காலங்களில் நல்ல பல விஷயங்களை எல்லாம் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போல.

Print Friendly, PDF & Email

2 thoughts on “இட்லி

  1. உங்களது “பதிவை” தவறுதலாக நகைச்சுவை பிரிவின் கீழ் போட்டுவிட்டார்கள் நண்பரே!! 😀
    பதிவிற்கும், அதை பகிர்ந்ததற்க்கும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *