வலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,374 
 

வலக் கரத்தால் ஆசிசுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அப்பய்ய தீட்சிதர். தீட்சிதரின் குல தெய்வம், வேலூரை அடுத்த விரிஞ்சை திருப்பதியில் உறையும் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீமார்க்கசகாயர். தீட்சிதர் சம்ஸ் கிருத மொழியில் தேர்ந்த மாமேதை.

இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட வேலூர் சிற்றரசன் சின்ன பொம்மராஜன், இவரைத் தனது சபையில் வித்வானாக நியமித்து, கௌரவித்தான். அந்த அரசவையில் தாதாசாரியார் என்ற தீவிர வைணவப் பண்டிதர் ஒருவரும் இருந்தார். சைவ சமயத்தின் மீது அவருக்கு ஏனோ அப்படியரு வெறுப்பு. அதனால் சிவபக்தரான அப்பய்ய தீட்சிதரை அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை எப்படியாவது அரசவையிலிருந்து விரட்டிவிட வேண்டும் என்று தாதாசாரியார் திட்டமிட்டார். அதனால் அவர், அரசனிடம் அடிக்கடி தீட்சிதரைப் பற்றி அவதூறு கூறுவார்.

தன்னை வணங்குபவரை இடக் கையால் ஆசி கூறி வாழ்த்துவது அப்பய்ய தீட்சிதரின் வழக்கம். இதன் மூலம் அரசனிடம், தீட்சிதர் மீது வெறுப்பு ஏற்படச் செய்யலாம் என்று தாதாசாரியார் திட்டமிட்டார்.

ஒரு நாள் மன்னன் தனிமையில் இருக்கும்போது, ‘‘மன்னா! சகலமும் அறிந்த மாமேதை என்ற கர்வம் அப்பய்ய தீட்சிதரிடம் நிறைய உள்ளது. அதனால் அவர் உங்களிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறார் என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்!’’ என்றார் தாதாசாரியார்.

‘‘என்ன சொல்கிறீர் ஆசாரியாரே? தீட்சிதர் என்னிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறாரா?’’

‘‘ஆமாம் மன்னா! ராஜ சபையிலுள்ள எல்லோரும் உங்களை வலக் கரத்தினால் தானே வாழ்த்துகிறோம். ஆனால், தீட்சிதர் இடக் கையால் அல்லவா ஆசீர்வதிக்கிறார்? இது அவரது வித்யா கர்வத்தையே குறிக்கிறது!’’

மன்னனிடம் அது வேலை செய்யத் தொடங்கியது.

மறுநாள் சபை கூடிற்று. மன்னன் சின்ன பொம்மு சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

அவையில் இருந்தோருடன் தீட்சிதரும் மன்னனைப் பலவாறு புகழ்ந்து, துதித்து வழக்கம் போல் இடக் கையால் ஆசி வழங்கி அமர்ந்தார்.

மன்னன் உடனே தீட்சிதரைப் பார்த்து, ‘‘பண்டிதரே! எனக்கொரு சந்தேகம். பொதுவாக, பெரியோர்களும் கற்றறிந்தவர்களும் பிறருக்கு வலக் கரத்தால் ஆசி வழங்குவதுதானே மரபு! ஆனால், தாங்கள் இடக் கரத்தை உபயோகிப்பது ஏன்?’’ என்று கேட்டான்.

தீட்சிதர் சற்று நேரம் தியானத்தில் இருந்த பின்னர் எழுந்து, ‘‘அரசே! சாஸ்திரப்படி உண்மையான அந்தணனின் வலக் கரத்தில் அக்னி வாசம் புரிகிறது. அவன் வலக்கை எதை வாழ்த்துகிறதோ, அந்தப் பொருள் எரிந்து சாம்பலாகி விடும். எனவே, ஓர் அந்தணனின் கடமைகளைத் தவறாமல் கடைப் பிடிக்கும் நான், வலக் கரத்தால் எவரையுமே வாழ்த்துவதில்லை!’’ என்றார் பணிவாக.

அரசனும் ஏனையோரும், ‘என்ன இது? இவர் ஏதேதோ கூறுகிறாரே… நம்பும்படி இல்லையே!’ என்று குழம்பினர்.

அவர்களது குழப்பத்தை உணர்ந்த தீட்சிதர், மன்னனின் ஓவியம் ஒன்றைக் கொண்டு வருமாறு கோரினார். உடனே கொண்டு வரப்பட்டது. தீட்சிதர் அதைப் பார்த்து, மன்னருக்கு எப்போதும் செய்வது போல வாழ்த்துக் கூறி, தன் வலக் கையால் ஆசீர்வதித்தார். அவ்வளவுதான்… மறு கணமே அந்த வண்ண ஓவியம் ‘திகுதிகு’வென தீப்பற்றி எரியத் தொடங்கியது!

மன்னன் சின்னபொம்மு, தாதாசாரியார் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். ‘‘ஆ! என்ன அதிசயம் இது? இந்த உத்தமரின் வலக் கரத்தில் அக்னி இருப்பது உண்மைதான். இவர் ஓர் அருளாளரேதான். அதில் சந்தேகமே இல்லை!’’ என்று தீட்சிதரைப் போற்றினர் அவையில் இருந்தோர்.

உடனே சின்னபொம்மு அரியாசனத்திலிருந்து இறங்கி, தீட்சிதரின் இரு கரங்களையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

பிறகு, ‘‘ஐயனே! கேட்பார் பேச்சைக் கேட்டு அடியேன் உங்களைச் சந்தேகித்தது, பெரும் பிழை. உண்மையிலேயே தாங்கள் மகான்தான். இந்த அடி யேனை ரட்சிக்க வேண்டும்!’’ என்று தழுதழுத்த குரலில் வேண்டினான்.

தீட்சிதர், சின்னபொம்முவை ஆரத் தழுவி, ‘‘அரசே! தாங்கள் பிழையேதும் புரியவில்லை. உண்மை நிலையைத் தங்களுக்கும் சபையோருக்கும் தெரியப்படுத்த எனக்கொரு வாய்ப் பளித்ததற்கு நானல்லவா நன்றி கூற வேண்டும்? யாவும் நன்மைக்கே! மன்னா, தாங்கள் நீடூழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள். இறைவன் உமக்குத் திருவருள் புரியட்டும்!’’ என்று வாழ்த்தினார்.

இதன் பிறகு தீட்சிதர் மீது சின்னபொம்மராஜனின் பாசமும் பற்றும் பன்மடங்கு அதிகரித்தன என்றே சொல்ல வேண்டும். இடைக் காலத்தில் சோர்வுற்றிருந்த சைவ சமயம், தீட்சிதருடைய வாக்கு வன்மையாலும், அத்வைத சித்தாந்த விளக்கங்களாலும், சீரிய சிவத் தொண்டினாலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது.

தீட்சிதர் சைவராக இருந்தாலும், இதர சமயங் களின் மீது அவருக்கு வெறுப்போ துவேஷமோ என்றைக்குமே இருந்ததில்லை. காஞ்சி வரதராஜப் பெருமாளைக் கண் குளிர சேவித்து, உள்ளமுருகப் பிரார்த்திப்பது அவர் வழக்கம். பரமன் மீது கொண்டிருந்த பக்தியால் ‘வரதராஜ ஸ்தவம்’ (வரதராஜர் துதி) எனும் பாமாலை பாடினார் அப்பய்ய தீட்சிதர்!
– ம.கி.ச., சென்னை-49 – ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *