அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது.
யோவ்! பெரிசு! வூட்டிலே சொல்லிகிணு வந்திட்டியாய்யா. சாவு கிராக்கி!’ என்று மாமூல் வாசகங்களைச் சொல்லி ஆட்டோக்காரன் முறைத்தான். இன்ன எண்ணுக்கு இன்ன வாழ்த்துத் தந்தி என்பது போல வாகன ஓட்டிகளுக்குச் சில திட்டுக்கள் உண்டு.
அப்புசாமி இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்குத் தானே காத்திருந்தார். என்னென்ன எதிர் வசனம் பேச வேண்டும் என்பதை எல்லாம் முன்கூட்டியே அவரும் செட்டப் செய்து வைத்திருந்தார். அரசியல் பிரமுகர்கள் அறிக்கைகள் தயாரித்து வைத்துக் கொள்வார்களே அந்த மாதிரி.
‘ஆட்டோக்காரன்னா பெரிய கிங்கா? நம்மகிட்டே எகிர்ரியாடா கஸ்மாலம்’ என்றார் ஆவேசமாக.
ஆட்டோக்காரனுக்கு அதிர்ச்சி. ஒரு ஆட்டோக்காரனை எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு இந்த நாடு இன்னும் வீரப் புதல்வர்களைப் பெற்றெடுக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே.
எத்தனையோ பேர் மீது இடிப்பது போலப் போயிருக்கிறான். பலபேர் மீது இடித்து இருக்கிறான். ஆனால் ஒருத்தராவது அவனைத் திட்டியதில்லை. கிளிண்டன் எத்தனையோ லீலைகள் செய்திருந்தும் திட்டமிட்டு சதி செய்த ஒரு லிவின்ஸ்கியிடம் மாட்டிக்கொண்டு விடவில்லையா?
அப்புசாமியிடம் அந்த ஆட்டோக்காரன் அப்படித்தான் மாட்டிக் கொண்டான்.
‘யோவ் கெயவா’ கஸ்மாலம், கிஸ்மாலம்னே ஒதை படுவே’ ஆட்டோக்காரன் அப்புசாமியின் ஜிப்பாவைக் கொத்தாகப் பிடித்து உயரக் கொண்டு போனான். கல்யாண வீட்டுக்குச் சிலர் வேண்டும் என்றே பழைய செருப்பு போட்டுப் போவதைப் போல, சுலபமாகத் தோற்கவேண்டும் என்பதற்காகவே சில தொகுதிகளில் தலைவர் சில வேட்பாளரை நிறுத்துவது போல, சுலபமாக கிழிபடக் கூடிய நைந்த ஜிப்பாவாக அப்புசாமி தேர்ந்தெடுத்துப் போட்டுக் கொண்டு வந்திருந்தார்.
‘சொக்கா மேலே மட்டும் கை வைக்காதே. த பார். சொல்லிட்டேன். கிழிஞ்சிச்சி மவனே கீ சி டு § வ ன் ‘ என்றார்.
இன்னடா சொல்றே நாயி?” என்று அவரது ஜிப்பாவை ஓர் இழுப்பு இழுத்தான் ஆட்டோக்காரன். ஜிப்பா கிழிந்தது. போனஸாக அவரை ஒரு குத்து விட்டுக் கீழே மல்லாத்தினான். ஆறின ஆர்டினரி தோசை மாதிரி அப்புசாமி தொளதொளவென்று தரையில் விழுந்தார்.
ஆனால் உடனே எழுந்தார். ‘டாய்’ என்று இரண்டழுத்தால் ஒரு போர்ப்பரணி பாடியவாறு அக்கம்பக்கம், கீழ்மேல், வலது இடது என்று எல்லாப் பக்கங்களிலும் பரபரப்பாகத் தேடத் தொடங்கினார்.
என்னதான் நகர சபையில் சாலைப் பராமரிப்பு சுமாராக இருந்தாலும் நட்ட நடு ரோட்டில் தேடிய இடம் எல்லாம் கற்கள் கிடைக்குமா?
அப்புசாமிக்கும் இது தெரியும். ஆனால் இதெல்லாம் போரில் சில விதிமுறைகள். சட்டையை ஒருத்தன் கி ழி த் த து ம் மற்றவன் ஜகா வாங்கி ரோட்டில் கல் பீறாயப் பார்ப்பதும், பீடாக் கடைக்கு ஓடி ஒரு சோடா பாட்டில் தூக்கி வருவதும் போரின் சில செயல்பாடுகள்.
ஒரு வழியாக உலகிலேயே சிறிய கல் ஒன்றை தேர்ந்தெடுத்து வீசினார். (ஆட்டோக்காரன் மீதல்ல. ஆட்டோ மீது)
‘டங்’ என்று ஆட்டோ மீது கல்பட்டதும் ஆட்டோக்காரன் அப்புசாமியை கண்ணால் தற்காலிகமாக எரித்துவிட்டு புதுவண்டி எவ்வளவு தூரம் சேதாரமடைந்திருக்கிறது என்பதைக் கணிப்பீடு செய்ய வண்டி அருகே ஓடினான்.
கடுகை விடச் சிறிய ஒரு புள்ளி அளவுதான் ஆட்டோவின் மஞ்சள் மேற்பரப்பில் காயம் ஏற்படுத்தி இருந்தது. இதற்குள் டிராபிக் ஜாம் ஏற்பட்டு வாகனங்கள் அலறின. ‘நமக்கும் மேலே இருவரடா’ என்பது போல உயரமான டிராபிக் கூண்டிலிருந்த இரண்டு டிராபிக் போலீசார் சம்பவத்தை மேலேயிருந்து கண்காணித்தவாறு இருந்தனர்.
இதைத் கேஸாக்குவதா, காசாக்குவதா?’ என்று இருவரும் கலந்தாலோசித்து எந்த முடிவுக்கும் வர முடியாத கூட்டணிக் கட்சித் தலைவர் போல் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் டிராபிக் கூண்டிலிருந்து மெதுவாக இறங்கி வந்து அப்புசாமியையும் ஆட்டோக்காரனையும் நெருங்கினார்.
‘அடே அப்பு! உன் லட்சியம் நிறைவேறப் போகிறதடா!’ என்று அப்புசாமியின் உள்ளம் குதூகலமாக ‘ஹைரா ஹைரா ஹைரப்பா’ பாடியது.
‘இன்னா பெரீவரு கல்ட்டா’ என்றார் கான்ஸ்டபிள். ‘வண்டியைக் கல்லாலே அடிச்சு டேமேஜ் பண்ணிட்டானா? எங்கே, எங்கே’ என்று ஸ்தலத்துக்கு விரைந்தார். தான் ஆடா விட்டாலும் சதை ஆடும் என்பார்களல்லவா? அது மாதிரி அந்த ஆட்டோ ரிக்ஷாவின் ஓனரே அந்த கான்ஸ்டபிள்தான்.
‘ஓடிச் சென்று ஆட்டோவின் மஞ்சள் மேனியைப் பரிசீலித்தபோது ஒரே ஒரு புள்ளியைத் தவிர எந்த இடிபாடும் இல்லை என்பது ஆறுதலாக இருந்தது.
‘சரி சரி போங்க,’ என்று இரு பார்ட்டியையும் சமாதானப்படுத்தினார். ‘யோவ்!’ என்றார் அப்புசாமி ஆத்திரமாக ‘என் ஜிப்பாவைப் பார்த்தியா? உங்க பாட்டனா வந்து தைத்துத் தருவான்?’
டிராபிக் கான்ஸ்டபிள் கோபப்படவில்லை. ‘நான் வரவா?’ என்று கூண்டிலிருந்த டிராபிக் குரல் கொடுத்தார்.வாகனங்கள் ஜாமாகிக் கூவின. ஸ்கூல், ஆபீஸ் நேரம். அவைகளை ஒழுங்குபடுத்துவதைவிட சக கான்ஸ்டபிள் அங்கே ஏதாவது பேரம் பண்ணுகிறாரா என்பதை அறிந்து கொள்ளவே அவருக்கு அதிக அக்கறை.
அப்புசாமி மீது கான்ஸ்டபிள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிழிந்த ஜிப்பாவுடன் கிழிந்த மனத்துடன் கிழிந்த லட்சியத்துடன் கிழிந்த அதிர்ஷ்டத்துடன் அப்புசாமி சோர்வாக வீடு
திரும்பினார். எனக்கு ஜெயிலே கிடைக்காதா? அதற்கான தகுதி இல்லாத பாவியா நான்?’
அப்புசாமி சில தினங்களுக்கு முன் கடற்கரையில் அந்தமான் சிறை செட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது நெடுநாளைய நண்பரான ‘ஜெய்ஹிந்த் ஜெய்ராஜ்’ என்பவரைப் பார்க்க நேர்ந்தது.
‘என்னப்பா, பாக்கெட் மணிக்கு – கைச் செலவுக்கு என்ன பண்ணறே? என் மாதிரி நீயும் லாட்டரிதானா என்று அப்புசாமி அவரை வினவினார். ‘தாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெற்றுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில்.
ஜெய்ஹிந்த் ஜெய்ராஜ் பெரிதாகச் சிரித்தார். ‘காந்தி மகான் புண்ணியத்தில சவுக்கியமாக இருக்கேன்… தியாகி பென்ஷன் ஐயாயிரம் ரூபாய் மாசம் ஒண்ணாம் தேதி டாண்ணு வந்துடுது. எந்த இடத்துக்கு வேணும்னாலும் ரயில்வே பர்ஸ்ட் கிளாஸ்லே துணைக்கு ஒருத்தன அழைச்சிகிட்டு எத்தனை தடவை வேணும்னாலும் போய் வரலாம்… எனக்கென்ன கவலை… சொல்லு…’ என்று சொன்னார்.
அப்புசாமிக்கு ‘ஐயோ’ என்று அந்த இடத்திலேயே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவேண்டும் போலிருந்தது.
அந்தக் காலத்தில் ‘ஜெய்ஹிந்த் ஜெய்ராஜ் தந்திக் கம்பத்தில் ஏறி செல்வதற்கு ஏணி வைத்தவரே அப்புசாமி தான்.ஆனால் போலீஸ் வேன் வந்த சத்தம் கேட்டு ஏணியை விட்டு விட்டு ஓடிப் போய் விட்டார். ஜெயராஜ் கம்பியை அறுத்தார்.கைதானார். மூணு வருஷ ஜெயில் தண்டனை. தியாகியானார் கைநிறைய பென்ஷன் வாங்குகிறார் இப்போது.
அப்புசாமி விட்ட பெருமூச்சுகளினால் அவர் மார்பு மேலே ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
‘ஏதாவது வீஸீ¢ங்கா?’ என்றாள் சீதா பாட்டி. “ஐஸ் கிரீம் உங்களுக்கு அலர்ஜின்னு தெரியும் இல்லை? நேற்று கல்யாண வீட்டிலே ஒய் த ஹெல், டீசன்சி இல்லாமல் இன்னொண்ணு கொண்டான்னு வாங்கிச் சாப்பிட்டீங்க அவஸ்தைப்படுங்க.”
‘சீதே!’ என்றார் அப்புசாமி கோபப்படாமல் “தாகம் சீதே, தாகம். நான் எவ்வளவு தாகத்திலே இருக்கேன்னு உனக்குத் தெரியாது. தொண்டை, நாக்கு எல்லாம் உலர்ந்து போய்க்கிட்டிருக்கு.”
“ராத்திரி பி.பி.க்கு சாப்பிட்ட ‘ப்ராஸோ ப்ரஸ்’ மாத்திரையை நிறுத்தித் தொலையுங்க. அதன் எ·பக்ட் அப்படி இருக்குமோ” என்றாள் சீதா பாட்டி. அலமாரியிலிருந்து பட்டுப்புடவைகளை வெளியே எடுத்துப்போட்டவாறு, தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து தலைவி பேசுகிறாளே என்று அப்புசாமிக்கும் பெருமையாக இருந்தது. ‘சீதே என் தாகம், தண்ணித் தாகம் அல்ல. சுதந்திர தாகம், இந்த நாட்டுக்கு நான் ஒண்ணும் செய்யாமல் ஏமாந்து போயிட்டேனேடி! நானே என் வாயிலே மண்ணைப் போட்டுக் கொண்டேனே, ‘அப்புசாமி பிலாக்கணம் வைப்பது போல குந்தி உட்காந்து கொண்டு புலம்பினார்.
‘ஐ.. ஸே… வாட் ஹாப்பண்ட் யு யா? எதுக்கு புலம்பல்? யார் கிட்டே ஏமாந்தீங்க? என்று” பாய்ந்தாள் சீதா பாட்டி.
“எங்கவீட்டு ஏணி, எங்க வீட்டு கொறடு. ஆள்தாண்டி ஜெய் ஹிந்த் ஜெய்ராஜ் அடிச்சான் பிரைஸ் அஞ்சாயிரம். நான் மாசம் பூரா உன்கிட்ட தோப்புக் கரணம் போட்டாக் கூட நீ பித்ஸாக்காசு ஐந்நூறு ரூபாய்க்கு மேலே தர மாட்டே.” தான் தியாகி ஆக முடியாமல் போனதை எண்ணி வருந்துவதை அப்புசாமி உரிய அழுகையோடும் வருத்தத்தோடும் ஆங்காங்கே பொறாமையோடும் சொல்லி முடித்தார்.
சீதா பாட்டி அவர் தோளை லேசாக ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள். “பெட்டர் லேட் தேன் நெவர். நீங்கள் தியாகி ஆக வேண்டும். நாட்டுக்குச் சேவை செய்து ஜெயிலுக்குப் போக வேண்டும். டோன்ட் வொரி, வி ஷல் ஸிட்டெளன் அண்ட் டிஸ்கஸ் பிளான்ஸ் அண்ட் பிராஜக்ட்ஸ். எந்த ஒருநாடு தியாகிகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறதோ அந்த நாடுதான் உண்மையில் டெவலப்டு கண்ட்ரி என்பது என் ஒபினியன். உங்க மாதிரி தியாக உள்ளங்கள் இருக்கும் வரை நம்ம நாட்டுக்குக் கவலை இல்லை.”
“சீதே சீதே” என்றார் அப்புசாமி தழுதழுத்த குரலில். “நீ கூட என்னைப் பாராட்டிட்டியே.”
“எ த்யாகி இஸ் ஆல்வேஸ் எ த்யாகி’ அவன் எந்த பார்ட்டியில் எந்த பீரியடில் இருக்கிறான் என்பதெல்லாம் இம்மெடீரியல்… பை த வே நான் கொஞ்சம் அவசரமாக பா.மு. கழகம் போய்க்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் என் காட்டன் ஸாரீஸ்! இ·ப் யு டோண்ட் மைண்ட் முடிந்த அளவு அயர்ன் பண்ணி வெச்சிடுங்க நான் கிளப்பில் இருந்து வர்ரப்போ லாட்ஸ் ஆ·ப் ஐடியாஸ் கொண்டு வரேன் ஓகே” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
“சீதே, எத்தன புடவை வேணும்னாலும் இந்த அப்புசாமி அயர்ன் பண்ணித் தரத்தயார். நீ மட்டும் எப்படியாவது நான் தியாகியாறதுக்கான நல்ல ஐடியா கொண்டு வா…., ‘ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்’, ‘பாரத் மாதாகி ஜெய். ‘ஸாரே ஜஹாங்கி அச்சா… இந்துஸ்தான்கி ஹமாரா ஹமாரா!” என்று புது தெம்புடன் மனைவியை அனுப்பி வைத்தார்.
“நீங்களும் யோசனை பண்ணுங்க.. ஜெயிலுக்கு போகிறது என்கிறதில் பெருமையில்லை. ஒரு நோபிள் காஸ¤க்காகப் போகணும். அப்லிப்ட் அ·ப் த நேஷனுக்காக போகணும். உங்கள் எபிலிடி அந்த நொபிலிடியில் தெரியணும்” என்று சீதாப்பாட்டி அவருக்குப் பொன்விழாப் புத்திமதி வழங்கி விட்டுப் புறப்பட்டு விட்டாள்.
தினசரிக் காலண்டரின் தாள்கள் பறந்தன. மெல்லிசான தாள்களாக இருந்ததால் ஒரு தேதிக்கு இரண்டு மூன்று தேதிகளாகக்கூட ஒட்டிக்கொண்டு கொத்துக் கொத்தாக பறந்தன. அப்புசாமி இப்போது ஒரு தீவிரமானத் தொண்டர். எந்த லட்சியத்துக்காகப் போராடுவது என்பதைத் தீர்மானித்துவிட்டார். அவரே அவரது சொந்த மூளையைக் கொண்டு அந்தத் திட்டத்தைக் கண்டுபிடித்து விட்டார்.
மனிதனுடைய நாகரிகம் எதை ஒட்டி இருக்கிறது என்று தீவிரமாகச் சிந்தித்தார். உடை! உடை! உடை!
உடையில்தான் இருக்கிறது நாகரிகம். நம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் எதைக் காட்டி நம்மை வசப்படுத்தினான். கால் சட்டையையும். கைச் சட்டையையும், தொப்பியையும் காட்டி மயக்கி விட்டான். ஆகவே, உடையை உடைக்க வேண்டும். கை ராட்டினம் ஏன் காணாமல் போயிற்று? கை ராட்டினம் என்ன என்று தெரியுமா என்று கேட்தற்கு ஒரு ஐ.ஏ.எஸ். மாணவன் கிணற்றிலிருந்து கையால் தண்ணீர் இழுக்கப் பயன்படும் சாதனம் என்று எழுதினானாம். ஐயகோ வெள்ளைக்கார நாகரிகத்தால் எவ்வளவு தூரம் நாம் நலிந்து விட்டோம். சோதர, சோதரர்களே கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரை எடுக்கும் சுயநலமக்களே! காந்தியை மறந்தீர்கள்! கதரை மறந்தீர்கள்! கலவரம்
பெருகிக் கஷ்டப்படுகிறீர்கள்.
கதர் நூல் நூற்கும்போது பொறுமை கிடைக்கிறது. நாட்டு மக்களுக்கு பொறுமை இல்லாததால்தான் மதக் கலவரங்களும், கொலை, கொள்ளைகளும் நடக்கின்றன.
அப்புசாமி கடற்கரையின் மாபெரும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஜெய்ஹிந்த் ஜெய்ராஜ் நடுவே வந்து “அண்ணன் தியாகி அப்புசாமி அவர்களுக்கு சூளைமேடு மூன்றாவது வட்டம் சார்பாக இந்த கதர்ப் பொன்னாடையை அணிவிக்கிறேன்…”
அவர் போர்த்தியதும் இன்னும் க்யூ வரிசையில் பலர் கதர்த்துண்டுகளை அப்புசாமிக்குப் போர்த்தினர். உதவியாளர் அப்புசாமியின் மேல் பொன்னாடை விழ விழ உடனுக்குடன் அகற்றி ஒரு கூடையில் போட்டார்.
அப்புசாமி அவரை முறைத்து “இருக்கட்டுமே அது என் மேலேதான், சரியான பொறாமை பிடிச்சவனாயிருக்கியே எவ்வளவையும் தாங்கும் சக்தி என் தோளுக்கு உண்டு” என்று கண்டித்து கதர்ப் பொன்னாடைகளை மகிழ்ச்சியோடு (பூம் பூம் மாட்டுக்காரன் மாதிரி) சுமந்தார்.
மைக்கை அப்புசாமியின் வாய்க்கு அட்ஜெஸ்ட் செய்து வைத்தார் ஒலி அமைப்பாளர்.
அப்புசாமி ஏற்புரை தந்தார் அற்புதமாக பேச்சு.
“நான் கேட்க ஆசைப்படுகிறேன் அயல்நாட்டுத் துணிகளின் மேலுள்ள மோகம் இன்னும் நமக்குப் போகவில்லை.துணியாக வருவதற்குப் பதில் அயல் நாட்டிலிருந்து தைத்து உடைகளாக வருகின்றன. அந்த உடைகளை இனம் கண்டு கொள்வோம். நிராகரிப்போம். அவற்றைச் சுட்டுக் பொசுக்குவோம்.
அன்புத் தொண்டர்களே, ஒவ்வொரு லாண்டரியாக ஏறி இறங்குங்கள் அயல்நாட்டுச் சட்டைகள் உடைகள் எதுவாயிருந்தாலும் அள்ளிக் கொண்டு வாருங்கள். காவலர்கள் தடுப்பார்கள், அடிப்பார்கள் கவலைப்படாதீர்கள் கதறுங்கள் கதர் கதர் என்று கதறுங்கள்.
கதர் அல்லாத மற்றத் துணிகளை ஈவிரக்கமின்றிக் கொளுத்துங்கள். என்னை அரசு கைது செய்து விட்டால், கவலைப்படாதீர். ஜெய்ஹிந்த் ஜெய்ராஜ் எனது சிறைவாச காலத்தில் பொறுப்பேற்பார்.
அப்புசாமி தயாராக இருந்த எரியும் தீப்பந்தத்துடன் மேடையை விட்டு இறங்கினார். தொண்டர்கள் சேகரித்துக் குவித்து வைத்திருந்த அன்னிய நாட்டு உடைகள் மீது ஒரு டப்பா கிரோஸின் ஊற்றினார்.
பட்டினத்தார் தாயாரின் சிதைக்குத் தீ மூட்டியது போல முள்க முள்கவே என்று தீப்பந்தத்தைத் துணிகள் மீது வைத்தார்.குப்பென்று பற்றி எரியத் தொடங்கி வாடையும், புகையும் கடற்கரை பூராவும் பரவியது.
“மை குட்னஸ்! வாட் ஹாப்பண்ட்!” என்றவாறு சீதாப்பாட்டி ஓடி வந்தாள்.
அப்புசாமி கையில் அயர்ன் பாக்ஸ். அவர் அயன் செய்வதாக நினைத்துக் கொண்டிருந்த புடவை வெந்து கருகி பக்கத்திலிருந்த புடவைகளுக்கும் பரவி, எல்லாம் கனிந்து குப்பென்று எரியத் தயாராயிருந்தன.
ஓடிச்சென்று பிளக்கைப் பிடுங்கி எறிந்து, ஒரு வாளித் தண்ணீரை மேஜை மீது வீசினாள் சீதாப்பாட்டி. பாதி வாளித் தண்ணீர் அப்புசாமியின் மீது விழுந்தது.
“கொளுத்துங்கள்! கொளுத்துங்கள் வெள்ளையன் துணியை வெளியேற்றுவோம். கலாச்சாரத்தைக் கெடுக்க வந்த கண்ணராவித் துணிகளே! கரியாகப் போங்கள்! ஜெய் ஹிந்த்! பாரத் மாதாகீ ஜெய்! போலீஸே! என்னை அரெஸ்ட் செய்துகொள்” அப்புசாமியின் பிடரி மீது மற்றொரு வாளித் தண்ணீரைச் சீதாப்பாட்டி வீசினாள்.
“சீதே! நீ வந்துட்டியா? ஜெயிலுக்கு நான் போய்விட்டு வந்துடறேன். எனக்கு வீடு முக்கியமல்ல” நாடுதான் முக்கியம். மேலும் சில வாளித் தண்ணீரை சீதாப்பாட்டி செலவழிக்க வேண்டியதாயிற்று.
சுயநினைவுக்கு வந்த அப்புசாமி, “ஐயையோ! யார் இத்தனை புடவையையும் எரிச்சது என்ன நடந்தது இங்கே? கடற்கரையில் நான் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ஹிந்த் ஜெய்ராஜ் எனக்கு மாலை போட்டாரே”.
“யூ ஸ்டுப்பிட்? மூன்று புடவை வீண்! உங்கள் பகல் கனவும் நீங்களும். தியாகீஸ் ஆர் பார்ன்.. நாட் ப்ரொட்யூஸ்ட்.. இன்னும் மூணு மாசத்துக்கு நீங்க பாக்கெட் மணி ஒரு பைசாகூட இல்லாத தியாகியாக இருக்கப் போறீங்க. அண்டர்ஸ்டாண்ட்!” அப்புசாமி தனது கிழிந்த ஜிப்பாவைத் தைக்க ஊசி நூல் தேடலானார்.
அடே ஜெய் ஹிந்த் ஜெய்ராஜ்!” உன் பென்ஷனைப் பார்த்துப் பொறாமைப்பட்ட எனக்கு மாமூலான பெண்டாட்டி பென்ஷனும் போச்சேடா என்று அவரது மனம் ரகசியமாகப் புலம்பிக் கொண்டிருந்தது.
ஹாஹாஹாஹா அருமை அற்புதம்.