அன்பின் பெருக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2021
பார்வையிட்டோர்: 1,665 
 

‘இனிது, இனிது, ஏகாந்தம் இனிது’ என்பார்கள். ஆனால், என்னை வந்து ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி கண்டு, இது விஷயமாக அபிப்பிராயம் கேட்டால், நான் இதை முழுமனதுடன் மறுப்பேன்!

பாருங்களேன். சினிமா, பீச், கடைவீதி எந்த இடத்துக்குச் செல்லவேண்டுமானாலும் துணைவேண்டிய திருக்கிறது. அடுத்த வீடு, எதிர் வீடு செல்வதாய் இருந்தாற்கூடத் துணையில்லாமல் முடியவில்லை. இப்படி யிருக்கும் போது, எப்படியையா, ‘இனிது, இனிது, ஏகாந்தம் இனிது,’ என்று நான் சொல்லமுடியும்? அப்படியே நான் ஏற்றுக்கொண்டாலும் அது, ‘சிந்தை யில் கள் விரும்பிச் சிவ, சிவா’ என்பது போலல்லவா ஆகிவிடும்? ஏகாந்தம் என்பதெல்லாம் மூக்கைப் பிடிக்கும் முனிபுங்கவர்களுக்கே ஏற்றது.

ஒருநாள் சாயங்காலம் , கற்பக விநாயகர் கோயிலில் சுந்தர சாஸ்திரிகள் ராமாயணம் படிப்பதாக யாரோ கூறியது ஞாபகத்திற்கு வந்தது. செல்வது என்று தீர் மானித்தேன். ஆனால் துணை வேண்டுமே? அடுத்த வீட்டு நாராயணனிடம் சொல்லி, அழைத்துச் செல்லலா மென்று புறப்பட்டேன். ஆனால் நாராயணனோ, எனக்கு நேர் விரோதம். ராமாயண விஷயத்தில்தான். புராணங்கள் என்றால் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது.

“என்னடா பாட்டிகளோடு போட்டி போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாயே, ராமாயணம் கேட்கிறதற்கு?” என்று கேலி செய்தான்.

“அப்படியல்லடா, சுந்தர சாஸ்திரிகள் ராமாய ணம் சொல்லி நீ கேட்டதே யில்லை. வந்து பாரேன், எவ்வளவு நன்றாயிருக்கிறதென்று. ஒரு தடவை அவர் கதைப் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டால் அப்புறம் நீ அவரை விடவே மாட்டாய்” என்றேன்.

“சரியப்பா, நல்லதாய்ப் போய்விட்டது. அவர் கதைப் பிரசங்கத்தைக் கேட்டால், அப்புறம் அவரை நான் விடமாட்டேன் என்கிறாயே! அப்படியே அவரை நான் விடாது பின்தொடர ஆரம்பித்துவிட்டால் அப்புறம் உனக்குத் திரும்பிவரத் துணை இருக்காதே! வேண்டாமப்பா வேண்டாம், இந்தத் தொந்தரவு” என்றான் நாராயணன்.

ஒரு வழியாக, நான் அவனைச் சமாதானப்படுத்தி எனக்காகவாவது வரும்படி அழைத்துச் சென்றேன். கோயிலை அடைந்ததும் இருவரும் ஓர் ஓரமாக உட்கார்ந்தோம்.

சாஸ்திரிகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாராயணன் விபரீத வியாக்யானம் செய்துகொண்டே வந்தான். பக்கத்தில் சுவாரஸ்யமாக ராமாயணம் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர், ‘உஸ், உஸ்’ என்று, எங்கள் பேச்சை நிறுத்தப் பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தார். நாராயணன் விட்டபாடில்லை. குற்றாலம் நீர்வீழ்ச்சி போலச் ‘சள, சள’ என்று பேசிக் கொட்டிக்கொண்டிருந் தான்.

அன்று, ராமர் காட்டுக்குப் போகும் கட்டம். காட் டிற்கு ராமர் வந்துவிட்டார். பரதன் அவரைத் திரும்ப அழைக்கிறான். ராமர் வரமாட்டேன் என்கிறார். பரதன் எவ்வளவோ மன்றாடியும் பயனில்லாததால், “சரி அண்ணா, தங்களின் பாதுகைகளையாவது என்னிடம் கொடுங்கள். நான் அவைகளை வைத்துப் பூஜை செய்கிறேன்” என்கிறான்.

அந்த இடம் மிகவும் சுவையாக இருந்தது. நாராயணன் , என்னிடம், “பாரடா ராமாயண தர்மத்தை! இதனால்தான், புராணக் கதைகளை நான் நம்ப கிறதேயில்லை. தாயார் இராமனைக் காட்டுக்கு விரட்டிவிட்டாள். மகனோ (பரதன்) காட்டில் கிடக்கும் முள்ளெல்லாம் காலில் ஏறட்டும் என்று பாதுகைகளையும் பறித்துக் கொண்டுவிட்டான். நன்றாயிருக்கிறது” என்று ஆரம்பித்துவிட்டான்.

நான் அவனிடம், “அப்படி யல்லடா. இதுதான் அன்பின் பெருக்கு. காலில் அணிகின்ற செருப்பைக் கூடத் தலைமேல் வைத்துப் பூசிக்கிற தென்றால், எவ்வளவு அன்பும் பக்தியும் கலந்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டுக் கேலி செய்கிறாயே!” என்று சமா தானப்படுத்த முயன்றேன்.

ஆனால், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. பேச்சு வளர ஆரம்பித்தது. அதற்குள் பக்கத்திலிருந்தவர், “எதுக்காக இப்படிச் சப்தம் போடுகிறீர்கள்? ராமாயணம் கேட்க வந்தீர்களா, பொம்மனாட்டிகள் போலச் சளசள என்று பேசிக்கொண்டிருக்க வந்தீர்களா? ராமாயணம் கேட்பதாய் இருந்தால் கேளுங்கள், இல்லாவிட்டால்…” என்று இழுத்தார்.

“இதேதடா கட்டுச் சோற்றில் வெருகு வைத்துக் கட்டிய கதையாய்ப் போய்விட்டதே!” என்று மரியாதையாய் நாராயணனை அழைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டேன்.

கொஞ்ச தூரம் சென்றோம். அப்பொழுதுதான், கோயில் வாசலில் எனது செருப்பை விட்டுவிட்டு வந்தது, ஞாபகத்திற்கு வந்தது. இருவரும் திரும்பினோம். ஆனால் கோயில் வாசலில் எனது மிதியடியைக் காணவில்லை!

நாராயணனைப் பார்த்து, “எங்கேயடா போயிருக்கும் என் செருப்பு?” என்று கேட்டேன்.

“எங்கே போயிருக்கும்? உன் மேலுள்ள அன்பின் பெருக்கால், யாராவது ஒரு பரதன் அடித்துக்கொண்டு போயிருப்பான்!” என்று சாவதானமாகக் கூறினான்.

– வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)