சலவைத் தொழிலாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2021
பார்வையிட்டோர்: 2,160 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னடா, இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒரு இடத்துக்கும் போகல்லியா?”

“போகத்தான் வேணும். ஆனால்…”

“என்ன, ஆனால் என்று இழுக்கிறாய்?”

“இன்றோடு 25 நாட்களாச்சு. இன்னும் வண்ணான் சலவை கொண்டுவந்த பாடில்லை.”

“வண்ணான் வரவில்லையென்றால் சும்மா இருந்தால் வந்துவிடுவானா? நீ உரக்கப் பாட ஆரம்பியேன். வண்ணான் வந்துவிடுகிறான்!”

இந்த மாதிரி என்னைக் கழுதை என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் தியாகராஜன். இதைச் சொன்னதுமே எனக்கு ரொம்ப ஆத்திரம் வந்துவிட்டது. இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவைத்தேன். காரணம், வண்ணான் வராவிட்டால், அவனிடம் சட்டை வேஷ்டி ஓசி வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்ததுதான்.

என்னுடைய சலவைத் தொழிலாளி சண்முகம் இருக்கிறானே, அவன் வேஷ்டிகளையெல்லாம் ஒரு வாரத்தில் கொண்டு வருவதாகத்தான் சொல்லுவான். ஆனால் அவனுடைய காலண்டரில் ஒரு வாரம் என்பது 20 நாட்கள் கொண்டதா, 30 நாட்கள் கொண்டதா என்பதை இன்னும் யாராலுமே நிச்சயமாகக் கூற முடியவில்லை.

மூன்று வருஷ காலமாகவே எனக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு தடவையாவது, 20 நாட்களுக்குக் குறைந்து, சலவை கொண்டு வந்தது இல்லை. ஆனாலும் நண்பர்களில் யாராவது புதிதாக அவனிடம் சலவைக்குப் போட நினைப்பவர்கள், “ஏனப்பா, எவ்வளவு நாளில் கொண்டு வருவாய்?” என்று கேட்டால், “ஒரு வாரம் ஆகும்” என்று என்னையும் வைத்துக்கொண்டே தைரியமாகப் பதில் சொல்லுவான்.

சலவையோ ரொம்பப் பிரமாதம்! யாரோ ஒரு புலவர், வண்ணான் ஒருவன் வெளுத்து வந்த வெள்ளையைப் பற்றிப் பாடினாராம். அதிலே, அந்த வெள்ளையைப் பார்த்தவுடனேயே, விண்ணுலகத்திலுள்ள விஷ்ணு, தன் கையில் உள்ள சங்குதான் பூலோகம் சென்று இப்படி வெள்ளையாகத் தெரிகிறதோ என்று பிரமித்துவிட்டு, சங்கு கையில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டாராம்.

ஆனால், சண்முகத்தினுடைய சலவையைப் பார்த் தால் தன் உடம்பே பூலோகம் புகுந்துவிட்டதோ என்று மிரண்டு, திருமேனியைத் தொட்டுப் பார்க்க ஆரம்பித்துவிடுவார் விஷ்ணு. வேஷ்டிகள் எல்லாம் வெள்ளையா யிருந்தால், சங்கோ என்று நினைத்துச் சந்தேகப்படலாம். ஆனால் இவைகளெல்லாம் தாம் ஒரே நீலமயமாக இருக்கின்றனவே! விஷ்ணு இப்படி மிரளாது என்ன செய்வார்?

“என்னய்யா, நீலம் கிடைக்காத இந்தக் காலத்தில், எந்த வண்ணானாவது நீலத்தை அதிகம் உபயோகப் படுத்துவானா? அவனுக்கென்ன பைத்தியமா?” என்றா கேட்கிறீர்கள்.

“உண்மை . வெறும் இகழ்ச்சியில்லை. உயர்ந்த ரகமான நீலம் வாங்கினாலல்லவா, அவனுக்குக் கஷ்டம்? உபயோகப்படுத்துவதெல்லாம் ‘கட்டி நீலம்’ என்னும் மட்டச் சரக்குத்தானே! அதனால் தான், அது வேட்டி சட்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, போகவே மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறது.

போன தடவை கொண்டுவந்த சலவையில் ஒரு வேட்டி, சில இடங்களில் இரும்புக்கறை படிந்து மிகவும் மோசமாக இருந்தது.

“என்னப்பா , இந்த வேட்டியிலே இது என்ன கறை?” என்றேன்.

“இல்லீங்களே, நான் ஒண்ணும் மாத்திக்கொண்டா ரல்லியே. நீங்க போட்ட வேட்டிதானுங்க. போடயிலேயே நாலு பக்கமும் கறையிருந்திச்சுங்களே” என்று என்னையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டான்.

இதைக் கேட்டு நான் கோபிப்பதா? சிரிப்பதா?

வேட்டிகளில் இந்த மாதிரி இரும்புக்கறை, நீல வர்ணம் இவைகள் இருப்பதோடு, இன்னொரு அழகும் உண்டாக்கிவிடுவான். அதுதான் அவன் விலாசம் போடும் அழகு.

கிராமாந்தரங்களில், ஏதாவது கோடு அல்லது புள்ளி வைத்துக் குறிபோடுவார்கள். ஆனால் இது பட்டணமல்லவா? அம்மாதிரி குறி போடலாமா?

இங்கிலீஷில் விலாசம் போட்டிருப்பான். ஒரு எழுத்து இரண்டு எழுத்துக்களல்ல. (ஐந்து எழுத்துக்கள்) G.S.A L. V- இவைதாம் அந்தப் பஞ்சாட்சரங்கள்.

இந்தக் கொட்டை எழுத்துக்களுக்கு அவனுடைய வியாக்யானம் என்ன தெரியுமா?

G என்பது ஜார்ஜ்டவுன். S என்பது அவனுடைய கடைப்பெயர். AL. V. என்பது எனது விலாசம்.

இவ்வளவையும் தெளிவாகப் போட்டால் தான், உருப்படிகள் மாறாது இருக்குமாம். ஆனால், இந்த எழுத்துக்களை ஒரு மூலையில் மட்டும் போடமாட்டான். சலவைக்கு ஒரு மூலையாகப் போட்டுவிடுவான். நாலா வது சலவைக்குப் பிறகுதான் விலாசம் போடுவதை நிறுத்துவான். ஏனென்றால், நாலுக்கு மேலாகத்தான் மூலைகள் இல்லையே!

காரணம் கேட்டால், ஒரு சமயம், உருப்படிகள் மாறா திருப்பதற்காகத்தான் என்கிறான். இன்னொரு சமயம் அதுதான் தங்கள் வழக்கம் என்கிறான். ஆனால் எனக் குத் தோன்றுவது, ஒரே ஒரு காரணம்தான். இது பேப்பர், பென்சில் கிடைக்காத காலமாதலால், அவ னுடைய பையன், வேஷ்டிகளில், ஏ. பி. ஸி. டி. எழுதப் பழகுகிறானோ என்னவோ என்றுதான் எண்ண வேண்டியதிருக்கிறது.

ஆனால் போட்ட உருப்படிகளில், ஒன்றுகூடக்குறை யாமல் கொண்டுவந்துவிடுவான். அந்த உருப்படிகள் எல்லாம் நம்முடைய சொந்தம்தானா என்று மட்டும் ஆராயப் புகுந்துவிடக்கூடாது. ஒன்றிரண்டு நம்முடைய வைகளில் காணாமற்போய், அந்த உருப்படிகளுக்குப் பதி லாக மற்றொருவருடையவை வந்திருக்கலாம். அவருக்கு இன்னொருவருடையவை, அந்த இன்னொருவருக்கு நாலாவது ஒருவருடையவை, இப்படியாக அவனது கெட்டிக்காரத்தனத்தால், காலச் சக்கரத்தை உருட்டிப் பெயரைக் காப்பாற்றி வருகிறான்.

சில சமயம், நம்முடைய உருப்படிகளில் சிலவற் றைக் கிழித்துக்கொண்டு வந்துவிடுவான்.

அப்பொழுது, “இந்த உருப்படிகளைத் தொலைத்து விட்டுக்கூட வந்திருக்கலாமே, இந்த மாதிரி சித்திர வதை செய்வதற்கு?” என்று தோன்றும்.

காலர், கை முதலியவைகளெல்லாம், சட்டையிலிருந்து விடைபெற்றுக்கொள்ளும் பரிதாபகரமான காட்சியைக் காண நேர்ந்தால், யாருக்குத்தாம் வயிற்றெரிச்சல் வராது? இந்த மாதிரிச் சட்டைகளையெல்லாம் கோட்டுப் போடும் போதுதான் உபயோகப்படுத்தலாமேயன்றி, வேறு சாதாரணமாக உபயோகப்படுத்த முடிகிறதா?

என்ன செய்வது? இப்படியெல்லாம் அவன் செய் தாலும், அவனுடைய தொடர்பை அறுத்துவிட முடிகிறதா? அதுதானே முடியவில்லை. காரணம் வேறொருவன் வந்தால் அவன் உருப்படிகளை, எண்ணிக்கையாவது குறையாமல் கொண்டுவருவானோ என்னவோ? அப்படியே கொண்டு வருவதாயிருந்தாலும், இனிமேல் அவன் விலாசம் போட வேண்டாமா!

– வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *