நிற்பதுவே நடப்பதுவே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 26,420 
 
 

மாடிப்படி இருளில் மூழ்கியிருந்தது. தட்டுத் தடுமாறி குத்துமதிப்பாக நடந்து விக்ரம் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றேன். பின்பு தான் மொபைல் ஞாபகம் வந்தது. அதை எடுத்து, அதன் சின்னப் புன்னகையில் காலிங் பெல்லை தேடி அடித்தேன். மணி இரண்டே முக்கால். அதிகாலை.

எதிர் ஃப்ளாட்டை திரும்பி பார்த்துக் கொண்டேன். சத்தம் கேட்டு வந்துவிடக் கூடாது. அதிகாலையில் அநாவசியமாக தூக்கம் கலைப்பது மகா பாவம். மொபைல் எடுத்து விக்ரமின் நம்பரை அழைத்தேன். பதிலே காணோம். படுபாவி, இப்படி படுத்துகிறான். காலிங் பெல்லையும் மொபைலை சேர்த்து அழுத்தினேன். பலமுறை.

பத்து நிமிடங்கள் கழிந்து பலன் கிடைத்தது. விக்ரம் மொபைலை எடுத்து பேசினான். ‘ஹழோ’. அந்த கடைசி ‘ழோ’ முடிவே இல்லாமல், நாராசமாக நீண்டது. மொபைல் வழியாகவே விஸ்கி நாற்றம் அடிப்பது போல எனக்குப் பட்டது.

‘டேய், விக்ரம். நான் தான் கண்ணன். கதவ திற’.

முழுத்தொண்டையில் கத்தியும், அடித்தொண்டையில் கெஞ்சியும் பிரம்மப்பிரயத்தனப் பட்டு அவனுக்கு புரியவைக்க வேண்டியிருந்தது. கதவை திறந்த விக்ரம், ரத்த சிவப்பான கண்களோடு தள்ளாடிக் கொண்டிருந்தான். பயங்கர விஸ்கி நாற்றம். அவனை உள்ளே மெதுவாய் தள்ளியபடி நுழைந்து வேகமாக இயங்கினேன். அவனின் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு, டிவி லைட்டு கேஸ் எல்லாம் அணைத்து சரிபார்த்து விட்டு, அவனை இழுத்துக் கொண்டு புறப்பட்டேன். என் மேல் முழுதுமாக சரிந்திருந்தான். ஜிம் உடம்பு. அவன் காதலிக்காக பார்த்து பார்த்து ஏற்றிய உடம்பு. இப்போது மில்லி மில்லியாக ஏற்றுகிறான். காதல் தோல்வியாம். இழுத்துக் கொண்டு காருக்கு திரும்ப வருவதற்குள் மூச்சு பலமாக வாங்க ஆரம்பித்து விட்டது. சிவப்பு நிற ஸிவிஃப்ட். மிடில் க்ளாஸ் குடும்பத்தின் முதல் ஐ.டி. பாய்ச்சல் சாத்தியப் படுத்தியிருந்த வளம்.

விக்ரமும் என்னைப் போல தான் – குணம், நிறம், வேலை எல்லாம். ஆத்ம நண்பன். இந்த திடீர் காதல் தோல்வி, குடிப்பழக்கம் எல்லாம் அவனை என்னிடமிருந்து கொஞ்சம் பிரித்திருந்தது, ஹைவேயிலிருந்து சட்டெனப் பிரியும் சின்ன சாலை போல.

காரை கிளப்பியதும் ஒரு விதமான சாகச உணர்வு ஏற்பட்டது. நடு இரவு ஒரு மணிக்கு அழைத்து சாகப் போவதாக முழு போதையில் விக்ரம் அழுத போது, அவனை மறுபடி பார்ப்பேன் என்றே நினைக்கவில்லை. நேற்று மாலை முதல் வட சென்னை முழுக்க முடங்கி கிடக்கிறது. ரவுடிகள் மோதல், அரசியல்வாதிகளின் பின்பலத்தோடு களைகட்டியிருந்தது. நடு ரோட்டில் கொலை நடந்து நிலைமை மோசமாகி, நாளை ஆளும் கட்சியே பந்த் அறிவித்திருக்கிறது. நாளை மாலை வரை ரோட்டில் ஒரு ஈ காக்காய் கொசு எதுவும் இருக்காது. அப்பாவும் அம்மாவும் ஒரு நாள் வேலையாக விழுப்புரம் போனவர்கள், கலவரம் காரணமாக அங்கேயே தங்கி விட, நினைத்ததை உடனே செய்ய முடிந்தது. இதோ, மனசு நிம்மதியாக, தாம்பரத்தில் இருந்து கிளம்பியாயிற்று. விக்ரமை ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டேன். வானத்தை அண்ணாந்து பார்த்து தலையை கிடத்தியிருந்தான். ஏதோ அர்த்தமுள்ள உளறல் வேறு.

அவனைப் பார்த்து விட்டு தலையை திருப்புகையில் தான் அவரைப் பார்த்தேன். லிஃப்ட் கேட்பது போல கை காட்டினார். மந்திரத்துக்கு கட்டுப்பட்டாற் போல அவரருகே நிறுத்தி விட்டேன். மிகச்சில நொடிகளில் நடந்துவிட்டது.

இடுப்பு வரை தான் தெரிந்தார். தலையை குனிந்து உள்ளே பார்த்து ‘கிண்டி வரை’ என்றார். சாம்பல் நிற சட்டை. கோட்டு போல இருந்தது. ‘சரி’ என்று தலையசைத்தேன். பின்னால் ஏறிக்கொண்டார்.

‘சரியான முட்டாள்த்தனம் கண்ணா’ என்று என் குரல் எனக்கே கேட்டது. விக்ரம், ‘கழெக்டுடா’ என்றான்.

மேல் கண்ணாடியில் அவர் தெரியவில்லை. கொஞ்சம் நகர்த்தலாமா என்று நினைத்தேன். வேண்டாம், ரொம்ப அநாகரிகமாக இருக்கும்.

என்ன கேள்வி கேட்கலாம்? என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா? எங்கே போகிறார்? கேள்விகள் மூளையிலிருந்து தொண்டைக்கு பிங் பாங் பால் போல போய் போய் வந்தது. சத்தம் மட்டும் எழவேயில்லை.

இந்த அகால நேரத்தில், அசந்தப்பர்பமான சூழ்நிலையில், பொடிநடையாக போவது சாத்தியமே இல்லை. சரி, சாத்தியம். ஆனால், சரியான முட்டாள்தனம். அப்படி என்ன தலை போகிற வேலை. ஐயோ, யார் இவர்? சரேலென திருப்பத்தில் திரும்பி ஜெர்க்காகி நின்றது வண்டி. முன்னே நாலு சாலைத் தடுப்புகள் மிக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டு, வழியை முழுதாக அடைத்துக் கொண்டு நின்றது. வரும்போது இல்லையே?

காரிலிருந்து இறங்கி நடந்தேன். கிட்டே வந்து பார்த்தேன். காரின் பின் கதவு திறக்கும் ஓசை. அதிலிருந்து ஒரு ஷூவின் ஓசை பிரிந்து, என்னை நோக்கி வந்தது.

அவரை திரும்பிப் பார்த்தேன். சாம்பல் நிற சட்டை, முழங்கால் வரை சுடிதார் போல நீண்டு இருந்தது. கோட்டு போல நல்ல கணம். வெள்ளை பேண்ட். இது என்ன உடையோ? அவர் என்னிடம் வந்ததும் கீழே பார்த்தார். நல்ல கூரான மூக்கு. கைகளை பின்னால் கட்டியிருந்தார். ஐம்பது வயதிருக்கும்.

நான் ஒன்றை அகற்ற முயன்ற போது கொஞ்சம் தடுமாறி விட்டேன். எதிர்பார்த்ததை விட நல்ல கணம். சமாளித்து அகற்றி முடிக்கும் போது, அவர் என்னை விட்டு சாலையோரமாக நடந்து சென்றிருந்தார்.

ஆவிகளால் திடப்பொருட்களை கைகளால் தொடவோ எடுக்கவோ முடியாது என்ற தமிழ் சினிமா உண்மை முக்கியச் செய்தியாக மனசுக்கடியில் ஓடியது. ராம்கியோ யாரோ, ஆவேசமாக உற்சாகப்படுத்த படுத்த, வெள்ளையுடை ஊர்வசி ஒரு டைம்பாமை எடுக்க முயற்சிப்பது நினனவுக்கு வந்தது.

நான் மூச்சைப் பிடித்து மிச்சம் மூன்றையும் அகற்றி முடித்து விட்டு, அவரைப் பார்க்காமல், காருக்கு வந்து கதவை திறந்து அமர்ந்து கொண்டேன். கார் கதவை நன்கு அறைந்து சாத்தினேன்.

அவர் திரும்பாமல், அங்கிருந்த ஒரு காந்தி சிலையை பார்த்துக்கொண்டிருந்தார். கைகளை பின்னாலேயே கட்டியிருந்தார். பெரிய மகாராஜா.

‘போகலாமா’ – சத்தமாக கேட்டேன். குரல் கேவலமாக நடுங்கியது.

திரும்பிப் பார்த்த அவர், சிலையை மீண்டும் ஒரு தடவை பார்த்துக் கொண்டார். கடிகாரத்தைப் பார்த்தார். விறு விறுவென நடந்து வந்தார். மிதமான ஷூ ஓசை.

கார் கிளம்பியது. ஏதேதோ எண்ணங்கள் கவனம் கலைத்தன. அவரிடம் பேச வேண்டாம் போல இருந்தது. வேர்வையும் சின்ன வியப்புமாக நிமிடங்கள் கழிந்தன.

‘நான் இறங்கிக்கிறேன்’. ஆ, கிண்டி வந்துவிட்டதா? வண்டியை மிதப்படுத்தி நிறுத்தினேன்.

இறங்கி முன்பக்கம் வந்து, குனிந்து ‘நன்றி’ என்றார். ‘தட்ஸ் ஓகே’ என்றேன். விக்ரம் வானத்தை பார்த்து, ‘எங்கழா, காணோம்’ என்றான். அவர் சின்னதாய் புன்னகைத்தார். நல்ல வசீகரமான புன்னகை. ஒரு மாதிரி ‘போங்கள்’ என்று தலையசைத்தார்.

அழுத்தத்திலிருந்து க்ளட்ச்சும் மனசும் மீண்டது. கார் வெண்ணையாக வழுக்கிக் கொண்டு சென்றது.

எதுவும் விபிரீதமாக நடக்கவில்லை. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்றெல்லாம் அபத்தமாக நினைத்தேன். என்னை நானே ஆசுவாசபடுத்திக் கொள்வதும், பாராட்டிக் கொள்வதுமாக கலைந்திருந்த எண்ணங்கள், வேகமாக ஒரு ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறியதும் ஒன்றாக குவிந்தன. விக்ரம் என் பக்கமாக திரும்பி, ‘நேரு சிலை எங்கழா காணோம்?’ என்றான்.

கார் க்ரீச்சென நின்றது. எனக்கே தெரியாமல்.

அவர் நேரு சிலை அருகே தான் இறங்கிக்கொண்டார். சிலை அங்கிருந்ததா இல்லையா? அவநம்பிக்கையோடு விக்ரமை பார்த்தேன். கையை என் பக்கம் நீட்டி, ‘வேர் ஈஷ் இட்?’ என்று கேட்டான்.

எனக்கு மீண்டும் வேர்த்தது. ஸ்டியரிங்கையே உற்றுப் பார்த்தேன். நொடிப்பொழுதில் அரைவட்டம் போட்டு திரும்பியது கார்.

அவரின் உடை, புன்னகை எல்லாம் திரும்ப திரும்ப ஞாபகம் வந்தது. காந்தி சிலையை பார்க்கிறார். ஹூ சத்தம் கேட்கிறது. புன்னகைக்கிறார். அவர் தமிழில் தானே பேசினார்?

சிலைக்கருகே வந்ததும் மேலே எவ்வளவு கண்களை உயர்த்திப் பார்க்க முடியுமோ பார்த்தேன். சிலை தெரிந்தது. காரை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தேன். சிலை அங்கேயே இருந்தது, பத்திரமாக. மூக்கின் நுனியில் நிலா நின்றிருந்தது.

ஒரு மாதிரி படப்படப்பாக இருந்தது. நேருவின் தலை இப்போது திரும்பும, அலறியடித்துக் கொண்டு ஓடப்போகிறோம் என்று நினைத்தேன். விக்ரமின் உளறல் காரில் இருந்து கேட்டது.

சிலையை மீண்டும் பார்த்துக் கொண்டு திரும்பினேன். கார் பறந்தது. நூறுக்கும் மேலே.

இன்னும் ஐந்தே நிமிடம், வீட்டுக்கு போய்விடலாம். எங்கும் நிறுத்த வேண்டாம். ஒன்றும் பிரச்சினையில்லை. பயமெல்லாம் வேண்டாம்.

அஷோக் நகர் திரும்பி கவனமேயில்லாமல் ஓட்டினேன். கோடம்பாக்க ரோட்டில் திரும்புகையில் அங்கு இருக்கும் அம்பேத்கர் சிலை மைக்ரோ செகண்ட்டில் ஞாபகத்தில் வந்தது. என்னையுமறியாமல் வண்டியை மிதப்படுத்தி விட்டு குனிந்துப் பார்த்தபடி இருந்தேன். கார் நகர்ந்து கொண்டே இருந்தது. சிலையின் பீடத்தில் சோடியம் வேப்பர் வெளிச்சம் குவிந்து பளிச்சென இருந்தது, இப்போது தான் துடைக்கப்பட்டது போல. வண்டி திரும்பிவிட்டது.

பிரமை, பிரமை, எல்லாம் பிரமை. ஒன்றுமில்லை.

சாலை காலியாக இருந்தது. தொண்டையில் ஏதோ பிரச்சினை பட்டது. உடம்பு சரியில்லை போல் இருந்தது. வீட்டுக்கு போய் சேர வேண்டுமடா சாமி.

கொஞ்சம் நகர்ந்ததும் சாலையோரமாக யாரோ நடந்து செல்வது போல இருந்தது. ஓரக்கண்ணில் தான் பார்த்தேன். கோட்டு சூட்டு அணிந்திருந்தது போல இருந்தது. தலை வழுக்கையில் சோடியம் வேப்பர் பிரகாசித்தது. கையில் புத்தகம் போல ஏதோ ஒன்று.

கார் பெரும் உறுமலுடன் பறந்தது.

– அலுவலகத்தில் நடக்கும் Mystery Short Story Contestக்காக எழுதியது.(டிசம்பர் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *