கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 18,225 
 
 

”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்”

”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும் தயார். நீங்கள் ஒப்புக் கொள்ள தயங்குவதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது”

“என்ன சொல்கிறீர்கள்.. இன்னும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி. அதுவும் நாளை போட்டியின் கடைசி தினம் ஐந்தாவது நாள். ஒரு நாள் முழுவது இருக்கிறது..”

“ஆனால் உங்கள் ஒரு விக்கெட் தானே கைவசம் இருக்கிறது.. அதனால் தான் சொல்கிறேன்.. மொத்த விஷ்யமும் உங்கள் கையில் இருக்கிறது. தற்செயலாக நடப்பது போலச் செய்யமுடியும். ஒரு ரன் அவுட்.. ஒரு காட்ச் நீங்கள் விரும்பினால் நேரடியாக போல்ட் .. எப்படி வேண்டுமானாலும் .. “

“அது முடியும்.. ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் எங்கள் அணியின் மிக முக்கிய ஆட்டக்காரன்.. தோற்க இருந்த மேட்சை வெற்றிப் பாதையில் திசை திருப்பியிருக்கிறேன்.. இன்று பகலிலேயே ஆட்டத்தை முடித்திருக்கலாம்.. வெளிச்சம் போதவில்லை. ஜஸ்ட் நான்கு ரன்கள்.. நாளை ஆட்டம் தொடங்குவதும் தெரியாது முடிவதும் தெரியாது”

“ அப்படியானால் உங்களால் முடியாது என்று சொல்கிறீர்களா.. உங்களுக்கு காத்திருக்கும் பரிசைப் பாருங்கள் “ கையிலிருந்த லாப் டாப்பை திறந்தான் அந்த பூனக்கண்ணன்.

“இந்த வீட்டைப் பாருங்கள்… முழுவதும் பர்னிஷ்ட்.. இது தவிர ரொக்கமாக டாலர்கள் வேறு.. யோசித்துச் சொல்லுங்கள்”

“நீங்கள் என்னை தாமதமாக அணுகியிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.. இப்போதைய சூழலில் நான் அவுட் ஆனால்.. மொத்த மைதானமும் என்னை அடித்தே கொன்றுவிடுவார்கள்.. அப்படியே தப்பித்து பெவிலியனுக்கு ஓடினாலும் எனது சொந்த ஊரில் என் வீட்டைக் குடும்பத்தோடு கொளுத்தி விடுவார்கள்.. போர்ட் விசாரணை ,போலீஸ் விசாரண என தொடரும்.. இப்போதே என்னை ஹோட்டலில் காணோம் என தேடுவார்க்ள்.. மீடியாக்களின் கண்கள் வேறு எல்லா பக்கமும்.. என்னை மன்னித்து விடுங்கள்”

“ எனக்கு சிரிப்புதான் வருகிறது.. பேட்டி என்ற பெயரில் ஒன்றை ஜோடித்து உங்களை இந்த படகு வீட்டுக்கு வரவழைத்து .. எவ்வளவு முன் ஜாக்கிரதியாக இருக்கிறோம் பார்த்தீர்களா.. இந்த டீலில் ஒரு மீடியா நிறுவனமும் சம்பந்தப்பட்டிருக்கிறது “

“நீங்கள் ஒன்றை மறந்துவிட்டு பேசுகிறீர்கள்.. இன்னொரு பேட்ஸ்மென் வேறு இருக்கிறார்.. அவரை எப்படி சரிகட்டுவது “

“அதையும் யோசித்தாகிவிட்டது.. இன்று மாலை ஆட்டம் முடியும் போது அதே ஒவரில் இன்னும் 4 பந்துகள் போடவேண்டும். நீங்கள் தான் ஸ்டிரைகிங் பேட்ஸ்மேன்.. காலையில் மேட்ச் ஆரம்பித்ததும் நேரத்தை விரயம் செய்யாமல் அவுட் ஆனீர்களானால் போதும்”

“உங்களைப் போன்ற ஆசாமிகள் முன்பெல்லாம் ஒரு நாள் போட்டியில் தான் தலையிட்டீர்கள்..”

“வியாபாரம்.. உங்களை தேடி ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கிறது.. பயன்படுதிக்கொள்ளுங்கள்.. நீங்கள் சரியெனச் சொன்னால் இன்னொரு விருந்து.. நீங்கள் ஒரு பேட்டியில் எனக்கு இந்த நடிகையை பிடிக்கும் என்று சொன்னீர்களல்லவா .. அவர் இதே படகு வீட்டில் இன்னொரு அறையில்…”

பிரம்மாஸ்த்திரம் வேலை செய்தது

“எனக்கு தருவதாக சொன்ன தொகை எனக்கு எப்போது கிடைக்கும்..”

“சபாஷ்.. இப்போதுதான் சரியாகவே பேச ஆரம்பித்திருக்கிறீர்கள்.. இதோ.. பேசியதில் முக்கால் பங்கு உங்களின் ரகசிய வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்கிறேன்”

“எனது ரகசிய கணக்கு உங்களுக்கு எப்படித் தெரியும்”

“ என்ன இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறீர்கள்… ம்ம்ம் .. முடிந்தது.. இப்போது நீங்கள் உங்கள் கணக்கை செக் செய்து கொள்ளலாம்”

மைதானம் நிரம்பிவழிந்தது.. நேற்று வரை ஈ அடித்தது.. ரிசல்ட் நிச்சயம் என்று தெரிந்ததால் கூட்டம் வேறு ஜாஸ்தி ஆகிவிட்டது

“எப்படி அவுட் ஆவது… பேசாமால் பேட்டை சுழற்றும் போது ஸ்டம்பில் இடித்துவிடலாமா.. அய்யோ அவ்வளவுதான்.. பட்டவர்த்தனமாய்த்தெரியும்.. காசை வேறு வாங்கியாகிவிட்டது”

கார்ட் எடுத்து நின்றான்.. எதிரே அந்த பவுலர்.. அவனும் நெர்வசாக இருகிறானோ.. இதோ ஒடி வருகிறானே.. அந்த நடிகை அவ்வளவு ஒன்றும் விஷேஷமில்லை.. “

யோசித்துக் கொண்டிருக்கும் போதே பந்து OFF STUMP க்கு கொஞ்சம் வெளியே நல்ல வேகத்தில் விழுந்து மட்டையை விசிறுவதற்குள் விக்கெட் கீப்பருக்கு பெப்பே காட்டி விட்டு தேர்ட் மேனிலிருந்து மூச்சிறைக்க ஓடி வந்தவனுக்கும் டேக்கா காட்டிவிட்டு பவுண்டிரியைத் தொட்டது.

ஏன் பவுலரும் கீப்பரும் சங்கேதாமாய் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள்.. ஒரு வேளை..

– 11 மே 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *