எல்லா நாட்களையும் போல

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 13,243 
 
 

கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்.

ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது பழனியப்பனின் செல்போன் அடித்தது. அவன் இரைச்சல் சப்தத்தை விட்டு ஒரமாக நின்று பேச துவங்கினான்.

கையில் பணப்பையை வைத்து கொண்டு நான் எப்போதும் போலவே கண்ணாடி கதவை திறந்து வங்கியின் உள்ளே நுழைந்தேன். வாசலையொட்டி நின்றிருந்த நடுத்தர வயது நபர் கையில் இருந்த சிறிய காகிதம் ஒன்றை பலமாக ஊதியது தெரிந்தது. மறுநிமிசம் என் கண்கள் எரிய துவங்கியது. ஒரு நிமிசம் என்னையும் அறியாமல் கைகளால் இரண்டு கண்களையும் தேய்க்க துவங்கினேன். மிளகாய் பொடி பட்டது போல திகுதிகுவென எரிய துவங்கியது.

கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்க்கும் போது நான் கொண்டு வந்திருந்த லெதர் பை காணமல் போயிருந்தது. என்னால் நம்ப முடியவேயில்லை. என் கையிலிருந்த பணம் ஆறுலட்சத்திநாற்பதினாயிரம் பறிபோய்விட்டிருக்கிறது. என்னால் கத்த முடியவில்லை. கைகள் நடுங்க துவங்கின. சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் போலவே காசாளார் கத்திக் கொண்டிருந்தார். பணம் செலுத்துவதற்காக நாலு பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். ஒரு ஆள் நாலைந்து மஞ்சள் நிற ஸ்லீப்புகளை நிரப்பிக் கொண்டிருந்தார்.

என்னிடமிருந்த பணத்தை பறித்தது யாராகயிருக்கும். அந்த ஆள் இவ்வளவு நேரம் இங்கேயே நின்று கொண்டிருப்பானா என்ன? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களில் எரிச்சல் அதிகமாகி நீர்வடிந்து கொண்டிருந்தது. பழனியப்பன் என் தோளில் கைவைத்தபடியே என்ன சார் என்றபோது தான் எனக்கு தன்னிலை உணர துவங்கியது.

பணம் போய்விட்டது. பழனியப்பனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. தொண்டையில் வலி ஏற்பட்டு உடல் நடுங்க துவங்கியது. முகம் வியர்த்து வழிந்திருக்க வேண்டும். பழனியப்பன் என் கையில் பையில்லாததை கண்டுபிடித்தவனை போல என்ன சார் ஆச்சி என்று கத்தினான். யாரோ பணத்தை திருடிட்டாங்க என்று நான் மென்றுவிழுங்கி சொன்ன மறுநிமிசம் வங்கியே ஸ்தம்பித்து போகுமளவு பழனியப்பன் கத்தினான்.

கண்ணாடி கதவுகள் சாத்தப்பட்டன. வங்கியின் மேலாளரும் அலுவலக ஊழியர்களும் என்னை சுற்றிலும் நின்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். வங்கியின் காவலர் சந்தேகத்துக்கு உரியவராக யாரும் வெளியே செல்லவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பழனியப்பன் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தான்.

வங்கியினுள்ளே நின்றிருந்தவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த திருட்டு கொடுத்த பழைய சம்பவங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மேலாளர் தனது அறைக்குள் வரும்படியாக என்னை அழைத்து கொண்டு போனார். . திடீரென அந்த வங்கி இதற்கு முன்னதாக நான் பார்த்து அறியதா ஒரு புதிய இடம் போல தோற்றமளிக்க துவங்கியது. கண்ணாடி தடுப்புகள். கணிப்பொறி. மேஜை மீதுள்ள கண்ணாடி கோளம் யாவும் விசித்திரமான பொருட்கள் போல தெரிந்தன.

மேலாளர் அறை சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் காலண்டரில் இருந்த குழந்தை ஏன் இத்தனை நாட்கள் கண்ணில் படவேயில்லை. அந்த குழந்தை என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. அந்த குழந்தை யாராக இருக்கும். அதற்கு நான் திருட்டு கொடுத்த விபரம் தெரியுமா? நான் அதை உற்று பார்ப்பதை விரும்பாமல் தலையை தொங்கிவிட்டு கொண்டிருந்தேன்.

வங்கிக்கும் எனக்குமான உறவு ஆறாண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அநேகமாக தினமும் ஒருமுறை இங்கே வந்து போயிருக்கிறேன். ஊழியர்களுக்கு என்னை எளிதாக அடையாளம் தெரிந்திருந்தது. ஆனால் இன்றைக்கு அது எதுவும் பலன் அளிக்கவில்லை. வங்கியின் கணக்காளராகயிருந்த பெண்மணி ரொம்ப நாளாக உங்களை கவனிச்சிட்டு இருந்தவங்க தான் யாரோ திருடியிருக்கிறாங்க என்று சொன்னாள். என்னை யார் தினமும் கவனித்து கொண்டிருந்திருப்பார்கள்.

நான் என்ன உடை உடுத்துகிறேன். எப்படி தலைசீவியிருக்கிறேன் என்பதில் என் மனைவிக்கே அக்கறை கிடையாது. அநேகமாக எனக்கே அது தன்னிச்சை செயல்போல தான் நடக்கிறது. என்னை கவனித்து கொண்டேயிருந்த மனிதன் எப்படியிருந்திருப்பான். என்னை பற்றி எந்தவிதமான எண்ணங்கள் கொண்டிருப்பான். அவன் முகம் எவ்வளவு யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.

வங்கியின் காசோலைபிரிவில் உள்ள கண்ணாடி அணிந்த பெண் சார் எப்பவும் எதையோ யோசிச்சிகிட்டு வேற நிப்பாரு.. நானே பாத்திருக்கேன். ஒரு நாள் பேனாவை மூடிகிட்டே கையெழுத்து போட்டாரு.. எனக்கே சிரிப்பா இருந்துச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அது எல்லோருக்கும் ஏற்படகூடிய ஞாபககுறைவு தானில்லையா? ஏன் என்னிடம் இத்தனை நாள் அவள் இதை சொல்லவேயில்லை. ஒருவேளை மற்ற அலுவலர்கள் இதை பற்றி பேசி சிரித்திருப்பார்களா? நான் அவர்களில் எவரையும் நேர் கொண்டு பார்க்கவிரும்பவில்லை

பழனியப்பன் அலுவலகத்திற்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். எனது அலுவலகத்திலிருந்து உயரதிகார் திருட்டு எப்படி நடந்தது என்பதை பற்றி விசாரிக்க துவங்கினார். என்னால் கோர்வையாக பதில் சொல்ல முடியவில்லை. தான் அங்கே வருவதாகவும் அதன் பிறகு காவல் நிலையம் செல்லலாம் என்றும் உறுதியாக சொன்னார்.

இந்த நாற்பத்திரெண்டு வயது வரை நான் பறிகொடுத்தவை எல்லாம் அற்பமான பொருட்கள் மட்டுமே. ஒரு முறை திருப்பதி போகும்போது எனது சூட்கேஸ் ஒன்றை யாரோ ரயிலில் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மற்றவகையில் நான் ஏமாந்தவை யாவும் சில்லறைகாசுகள். தலைவாறும் சீப்பு. குடை. ஒன்றிரண்டு டிபன்பாக்ஸ், வாழைப்பழங்கள் இவ்வளவு மட்டுமே.

வங்கி மேலாளர் என்னை பற்றிய சுயவிபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். ஆறுவருடத்திற்கும் மேலாக தினமும் இதே வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் மேலளாருடன் பேச வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் என் பெயரை கேட்டு கொண்டதேயில்லை. இன்றைக்கு முதல்முறையாக எனது பெயர் வீடு எங்கேயிருக்கிறது. பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்பதை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்.

பழனியப்பன் வெளியில் நின்றபடியே யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கடுமையேறியிருந்தது. எனது உயரதிகாரி வந்து சேர்ந்து வங்கிமேலாளருடன் ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் என்னையும் பழனியப்பனையும் மட்டும் காவல் நிலையம் அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். ஆனால் அலுவலகத்தின் காரை உபயோகபடுத்த வேண்டாம், ஆட்டோ பிடித்து போய் வரவும் என்று உயரதிகாரி கண்டிப்புடன் கூறினார்.

என்னை கைது செய்வார்களா என்று பயமாகயிருந்தது. பழனியப்பனிடம் இதை பற்றி எப்படி கேட்பது என்று கூச்சமாகயிருந்தது. ஒரு வேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வது. உடனே ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்களா? வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன்பாக்சை என்ன செய்வது? அலுவலகத்தில் உள்ள வேறு யாரையாவது சாப்பிட சொல்லிவிட வேண்டும். நேரமாகி விட்டால் அது கெட்டு போய்விடும். யாரை சாப்பிட சொல்லலாம் என்ற யோசனை திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது.

பழனியப்பனுக்கு என்னோடு பேசுவதற்கு பிடிக்கவில்லை போலும். அவன் ஆட்டோவில் இருந்தபடியே சாலையை வெறித்து பார்த்துக் கொண்டு வந்தான். நான் அவனிடம் தயங்கி தயங்கி என்னை கைது செய்தால் வீட்டுக்கு தகவல் தெரியப்படுத்துவார்களா என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. என்னால் அவனுக்கு அதிக சிரமமில்லையா என்று மறுபடியும் கேட்டேன். அவன் ஆத்திரத்துடன் நீ ஒரு மசிரும் பேச வேண்டாம். உன்னாலே நானும் தாலி அறுக்க வேண்டியிருக்கு என்று கோபத்தோடு சொன்னான்.

பழனியப்பன் எனக்கு கீழ் வேலைபார்க்கும் ஊழியன். இதுவரை அவன் இப்படி என்னிடம் பேசியதில்லை. பல நாட்கள் நாங்கள் வங்கியில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து இண்டியானா பேக்கரியில் சாவகாசமாக அமர்ந்து பிளம்கேக்குகள் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு முறை பழனியப்பன் வங்கிக்கு என்னோட துணைக்கு வரவேயில்லை. நானோ அவன் என்னோடு சேர்ந்து வந்ததாக ரிஜிஸ்தரில் பதிவு செய்திருக்கிறேன். இவ்வளவு இருந்தும் இன்றைக்கு அவன் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு அதிருப்தி தருவதாகயிருந்தது.

போலீஸ் ஸ்டேஷனிற்கு இதற்கு முன்பு நான் சென்றதேயில்லை. பேருந்தில் பயணம் செய்யும் போது ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். அதுவே அச்சம் தருவதாகயிருக்கும். எப்போதும் உள்ளே சிலரை லத்தியால் அடித்து கொண்டேயிருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கிருந்தது. சில திரைப்படங்களில் அப்படி காவல்நிலையங்களை காட்டியதும் நினைவிலிருக்கிறது.

நாங்கள் சென்ற காவல்நிலையம் மிக நவீனமாக இருந்தது. உள்ளே யாரையும் அடிக்கும் சப்தம் கேட்கவில்லை. காவலர்கள் அதி நவீன செல்போன்கள் வைத்திருந்தார்கள். கம்ப்யூட்டர் திரை முன்பாக உட்கார்ந்திருந்த ஒரு காவலரிடம் பழனியப்பன் ஏதோ சொன்னதும் எங்களை உள்ளே அழைத்து சென்றார்கள். இளவயதிலிருந்த போலீஸ் அதிகாரி விசாரிக்க துவங்கினார். வங்கி மேலாளர் கேட்ட அதே கேள்விகள். அதேபதில்கள்.

திருட்டை கண்டுபிடித்துவிடலாம் என்று ஆறுதல் சொல்லியபடியே இரண்டு நாட்களுக்கு பிறகு வரும்படியாக அனுப்பி வைத்தார். பழனியப்பன் தனக்கு வேலையிருக்கிறது என்று சொல்லி என்னை மட்டும் தனித்துவிட்டு கிளம்பி சென்றான். பேருந்தில் அலுவலகம் செல்லலாம் என்ற யோசனையோடு காத்திருக்க துவங்கினேன்.

பரபரப்பாக வாகனங்கள் போவதும் வருவதுமாகயிருந்தன. நகரில் எத்தனையோ ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் எவன் என்னிடமிருந்த பணத்தை திருடி சென்றது. ஒரு ஆளாக இருக்குமா அல்லது கும்பலா? என்னை போல பணம் பறி கொடுத்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். அந்த பணத்தை என்ன செய்வார்கள்.? ஒவ்வொரு நாளும் என்னை போல யாரோ சிலர் இப்படி திருட்டு கொடுத்துவிட்டு புலம்பி கொண்டுதானிருப்பார்கள் இல்லையா? உடம்பு முழுவதும் எறும்பு ஊர்வது போல ஏதோ கேள்விகள் என்மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

என்ன யோசனை இது என்று என் மீதே எனக்கு ஆத்திரமாக வந்தது. நடந்தே அலுவலகம் செல்வது என்று முடிவு செய்து நடந்து செல்ல துவங்கினேன். இந்த நேரம் அலுவலகம் முழுவதும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருந்தால் மரகதம் அழுது கொண்டிருப்பாள். அல்லது பள்ளியிலிருந்து பிள்ளைகளை கூட பாதியில் அழைத்து கொண்டு வந்திருப்பாள்.

அவளுக்கு போன் செய்து பேசலாமா என்று தோணியது. ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அலுவலகத்திலிருந்து அவளுக்கு ஒரு முறை கூட போன் பண்ணி பேசியதேயில்லை. பொதுவாக வீட்டிலேயே அவளுடன் பேசுவது குறைந்து போய் தானிருந்தது. இந்த வருடம் அவர்கள் கல்யாண நாளை கூட இருவருமே மறந்து போயிருந்தார்கள். அதைப்பற்றி பிறகு நினைவு வந்த போது அவர் வெளிக்காட்டி கொள்ளவேயில்லை.

நடக்க நடக்க தான் காணாத நகரம் ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருப்பது போலவே இருந்தது. சாலையோரம் உள்ள மரநிழலில் ஒரு ஆள் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். வாகன இரைச்சலோ, ஜனநடமாட்டமோ அவனை எதுவும் செய்யவில்லை. உறக்கத்திலும் அவன் முகத்தில் சிரிப்பு கசிந்து கொண்டிருந்தது. தான் வாழ்நாளில் ஒரு முறை கூட இப்படி சாலையில் உறங்கியதில்லை. ஒரு வேளை உறங்க வேண்டிய சந்தரப்பம் வந்தால் கூட இப்படி தன்னால் உறங்க முடியுமா என்று தெரியவில்லை.

கட்டிடங்கள், விளம்பர பலகைகள், சாலையோர கடைகள் என யாவும் புதிதாக தெரிந்தன. அலுவலகம் வந்து சேர்ந்த போது யாரும் அவனோடு பேசவேயில்லை. உயரதிகாரி மட்டும் அவனை தற்காலிக நீக்கம் செய்திருப்பதகாவும் அவன் திருட்டு கொடுத்த பணத்தை ஒருவாரத்திற்கு திரும்ப செலுத்த வேண்டியது அவனது பொறுப்பு என்றும் அப்படி செலுத்த முடியாவிட்டால் அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.

தனது சம்பளம் முழுவதையும்ம பிடித்து கொண்டால் கூட இந்த பணத்தை கட்டுவதற்கு ஏழுட்டு வருசங்களாகிவிடும். அதுவரை வீட்டிற்கு என்ன செய்வது என்று குழப்பமாகயிருந்தது. தனது மேஜையின் அடியிலிருந்து டிபன்பாக்சையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து கொண்டு கிழே வரும் போது கடைநிலை ஊழியர் ஒருவர் தன்னை பற்றி ஏதோ சொல்லி சிரிப்பது தெரிந்தது.

வீட்டிற்கு போவதற்கு மனதில்லை. வங்கிக்கு திரும்ப சென்று ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா என்று கேட்கலாம் என தோணியது. ஒரு ஆட்டோ பிடித்து வங்கிக்கு போன போது உள்ளே கூட்டமேயில்லை. காலையில் நடந்த சம்பவத்தின் அறிகுறியே அற்றது போல இயங்கி கொண்டிருந்தது.

மேலாளர் அறைக்கதவை தள்ளி உள்ளே போனபோது அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். போலீசில் புகார் கொடுத்து வந்த விபரத்தை சொன்ன போது அவரிடம் எந்த முகமாற்றமும் இல்லை. தேநீர் குடித்து முடித்துவிட்டு எங்களாலே ஒரு உதவியும் பண்ண முடியாது. இது உங்க தப்பு என்றபடியே எழுந்து வங்கியின் உள்ளே செல்ல துவங்கினார். அந்த அறையில் தனித்து இருந்த போது சுழன்று கொண்டிருக்கும் காற்றாடி கூட என்னை திருட்டு கொடுத்தவன் என்று திரும்ப திரும்ப சொல்வது போலவேயிருந்தது.

ஐந்துமணிக்கு வெளியே வந்த போது வங்கியின் முத்திரைபோடுகின்றவன் என்னை தனியே அழைத்து இப்படி திருட்டு போறது இந்த பேங்கில நாலைந்து தடவை நடந்திருக்கு..நீங்க எதுக்கும் வெட்டுவான் கோயில்வரைக்கு போய் காசை வெட்டி போட்டு பாருங்க. திருடிட்டு போன பயலுக யாரா இருந்தாலும் ரத்த கக்கி செத்துபோயிருவாங்க என்றான்.

என்னால் அதை நம்பமுடியவில்லை. அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. வெட்டுவான் கோவில் எங்கேயிருக்கிறது என்ற விபரத்தை கேட்டு கொண்டு பேருந்தை பிடித்து பிராட்வேயில் உள்ள குறுகலான தெருக்களை தாண்டி போனபோது சிறிய கோவிலாக இருந்தது. துண்கள் கருமையேறியிருந்தது. ஆனால் கோவிலுக்குள் நிறைய கூட்டமிருந்தது.

பூசாரி ஒருவர் என்னிடம் திருடு போயிருச்சா என்று கேட்டார். நான் தலையசைத்தவுடன் பைக்கா? பர்சா என்னது என்று மறுபடியும் கேட்டார். அலுவலக பணம் என்று சொன்னதும் அவர் இதுக்கு எலுமிச்சைபழம் வெட்டி போடணும். இருநுறு ரூபாய் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு உள்ளே அழைத்து சென்றார்.

எண்ணெய் விளக்கின் நெடி நாசியில் ஏறியது. உள்ளே பத்திற்கும் அதிகமானவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பூசாரி அவர்களும் திருட்டு கொடுத்தவர்கள் தான் என்று சொன்னார். ஏனோ அவர்களை பார்க்கையில் சற்று ஆறுதலாகயிருந்தது. எல்லோரது கண்களிலும் பயம் ஒளிந்து கொண்டிருந்தது. வயதை மறந்து அவர்களோடு நெருக்கமாக இருப்பது போன்று தோன்றியது.

பூசாரி எலுமிச்சம்பழங்களை குங்குமம் பூசி அறுத்து போட்டுக் கொண்டிருந்தான். ரத்தம் போலவே சொட்டிக் கொண்டிருந்தது. திருட்டு கொடுத்தவர்களுக்காகவே இப்படியொரு கோவில் ஒன்றிருப்பது இன்று தான் எனக்கு முதல்முதலில் தெரிந்திருக்கிறது.

இந்த நகரில் இதுவரை எவ்வளவு திருட்டு நடந்திருக்கும் . ஏன் தினசரி பேப்பர் வாசிக்கையில் திருட்டு நடந்ததுபற்றிய செய்திகள் இதற்கு முன்பாக நமக்கு அதிரச்சியளிக்கவில்லை என்று யோசனையாக இருந்தது.

ஒரு வேளை நாளை காலை என்னைப்பற்றியும் செய்தி வெளியாகும். புகைப்படத்தோடு வெளியிடுவார்களா என்று தெரியாது. நான் சமீபமாக புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை. ஒரு வேளை பழைய புகைப்படம் எதையாவது வெளியிடுவார்களாக இருக்கும். இப்படிதான் இதற்கு முன்னால் வெளிவந்த திருட்டு கொடுத்த மனிதர்களின் புகைப்படங்களுக்கு பழையதாக இருந்திருக்குமா?

மனது ஒரு இடத்தில் நிற்கமறுத்து அலைந்து கொண்டேயிருந்தது. கோவிலில் தீபராதனை காட்டும் மணிச்சப்தம் கேட்டது. பூசாரி என்னிடம் பாதி எலுமிச்சைபழம் ஒன்றை தந்து ஒரு ருபாய் காசை வெளியே உள்ள பீடத்தில் வைத்து வெட்டி போடும்படியாக சொன்னார். ரத்தம் போல வடியும் எலுமிச்சை பழத்தை வாங்கி கொண்டு வெளியே வந்தேன்.

ஒரு முரட்டு ஆள் பலிபீடத்தின் அருகே நின்றபடியே காசை வெட்டி போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தந்தேன். அவன் ஒங்காரத்தோடு வெட்டி துண்டாக்கினான். பலிபீடத்தின் கீழே எண்ணிக்கையற்ற நாணயங்கள் துண்டாகி கிடந்தன.

கோவிலை விட்டு வெளியே வரும்போது இருட்ட துவங்கியிருந்தது. வழக்கமாக இந்த நேரம் வீட்டிற்குபோயிருப்பேன். அதன் பிறகு காலை அலுவலகம் கிளம்பும் வரை வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். ஆனால் இன்றைக்கு இங்கேயே இருட்ட துவங்கியிருந்தது.

நான் திருட்டு கொடுத்தவன். ஜெயிலுக்கு போக இருப்பவன். எனது வாழ்நாள் எண்ணப்பட்டுவிட்டது. இனிமேல் நான் வேறுவிதமான வாழ்க்கைக்கு பழகி கொள்ள வேண்டும். கோவிலை விட்டு நடந்து பேருந்தில் ஏறி கடற்கரையை அடைந்த போது கடற்கரை கொள்ளாமல் மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

வயதான குதிரையொன்று தனியே மணலை மேய்ந்து கொண்டிருந்தது. கடற்கரை மணலில் நடந்து உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன். தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நடைபயிற்சி செய்கின்றவர்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் நடைபயிற்சி செய்கின்றவன் இல்லை. எனது குழந்தைகள் கடற்கரையில் இப்படி விளையாடியதில்லை. இத்தனை மனிதர்களுக்கு நடுவிலும் நான் தனித்து இருப்பது போலவேயிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் மணலை கை நிறைய அள்ளி அள்ளி கொட்டிக் கொண்டேயிருந்தது.

மணலில் புதைந்து கிடந்த ஒரு சாவியொன்று கையில் அகப்பட்டது. வீட்டு சாவிபோலயிருந்தது. யாருடைய வீட்டு சாவியது. யார் தொலைத்திருப்பார்கள்.தொலைந்த மனிதன் அன்று கடற்கரையெங்கும் தேடியிருப்பான் இல்லையா? அந்த சாவியை என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்தபடியே இருந்தேன்.

எவ்வளவு நேரம் கடற்கரையில் இருந்தேன் என்று தெரியாது. நியான் வெளிச்சம் கடல் மணலில்ஒளிர்ந்து கொண்டிருந்தது. காற்று மெல்ல என் உடலை தழுவி ஆடையை நெகிழ செய்து கொண்டிருந்தது. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் என்னருகே தழுவிக் கொண்டிருந்தார்கள். கடலின் சப்தம் மனதை சாந்தம் கொள்ள செய்திருந்தது. கடற்கரையில் கிடக்கும் கோடான கோடி மணல்துகள்களில் ஒன்று தான் தானும் என்று தோணியது.

ஆகாசம் நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நெடுநேரம் வெளியே இருந்துவிட்டேன் என்று தோணியது. காலையில் இருந்து மனது கொண்டிருந்த பரபரப்பு அடங்கியிருந்தது. வீடு வந்து சேர்ந்த போது குழந்தைகள் உறங்கியிருந்தார்கள். என்னை பார்த்த மாத்திரத்தில் மனைவி கதறி அழத்துவங்கினாள். அவள் சப்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருப்பவர்கள் சிலர் வந்து சேர்ந்தார்கள். என்னிடம் மாறி மாறி எப்படி பணத்தை தொலைத்தீர்கள் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் கூட எழுந்து வந்து அழத் துவங்கின. என் வீட்டில் இவ்வளவு அழுகையை நான் கேட்டதேயில்லை. யாருக்கும் பதில் பேசாமல் நின்று கொண்டேயிருந்தேன். அருகாமை வீட்டு பெண் தனக்கு நினைவுள்ள பழைய திருட்டு சம்பவம் ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் என் மனைவி அழுது கொண்டிருந்தாள் என்று தெரியாது.

எனக்கு பசிக்க துவங்கியிருந்தது. காலையிலிருந்து நான் எதுவும் சாப்பிடவில்லை என்று உணர துவங்கியது. அவளிடம் பசிக்கிறது என்றேன். அவள் அதான் எங்களை விழுங்கிட்டு வந்துட்டீங்களே .. இனிமே நாங்க பிச்சை எடுத்து தான் சாப்பிடணும் என்று கத்தினாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எதை நம்புவது என்று தெரியவில்லை.

தெரியாமல் நடந்துவிட்டது என்று நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தேன். அதை யாரும் கேட்டு கொண்டது போல தெரியவேயில்லை. வீடும் பிள்ளைகளும் மனைவியும் கூட யாரோ போல தெரிந்தார்கள். எனக்கு என் மீதே ஆத்திரமாக வந்தது.

அப்போது கூட என்னிடமிருந்த பணத்தை திருடிய மனிதன் விழித்து கொண்டிருப்பானா? துங்கியருப்பானா ? அவன் மனைவிக்கு திருடிய விஷயம் தெரிந்திருக்குமா? அவனது பிள்ளைகள் பணத்தை எண்ணியெண்ணி பார்த்து சிரிப்பார்களா என்ற எண்ணம் வந்து கொண்டே தானிருந்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு துக்கமும் வலியும் தாளமுடியாமல் நான் தனியே அழத்துவங்கினேன். அப்போது யாவும் மறந்து வீடே உறங்கி கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “எல்லா நாட்களையும் போல

  1. Good story! This story kindled my feelings, as I too experienced the same. But I lost my personal jewels and cash. Though one and half decades have passed, I couldn’t forget and I still have the same feelings of this story hero.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *