இன்று இரவு 8 மணி இருக்கும் என நினைக்கிறேன். அப்போதுதான் கொலை செய்யப்பட்டாள் செலீனா.
கடந்த 2 வருடங்களாக வீட்டில் தனியாக இருந்து வந்தாள். பாதுகாப்புக்கு யாரும் இல்லை. பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். என்னை அவர்கள்தான் இங்கு அனுப்பி வைத்தார்கள்.
வருடத்திற்கு ஓரிரு முறைதான் நாங்கள் எல்லோரும் சந்திப்போம். அப்படி ஒரு சந்திப்பின்போதுதான் செலீனாவின் தந்தையின் நெருங்கிய நண்பரான போலீஸ் கமிஷனர் விக்ரமை முதன்முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகு அவரைப் பார்த்ததில்லை.
இவ்வளவு பெரிய பங்களாவிற்கு வாட்ச்மேன் ஒருவன்தான். சம்பத் அவன் பெயர். இரண்டு வருடங்களாக, அதாவது செலீனாவின் தந்தை இங்கு இருந்த காலத்திலிருந்தே வேலை பார்த்து வருகிறான், நம்பிக்கைக்குரியவன்.
செலீனாவின் நண்பர்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஆட்டம், பாட்டம், அரட்டை இருக்குமே தவிர மது, சிகரெட் போன்றவையெல்லாம் இருக்காது. என்னதான் பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் செலீனாவும் அவளின் நண்பர்களும் விசித்திரமானவர்கள் என நினைக்கிறேன்.
இன்று பகல், சுமார் 3 மணிஎன நினைக்கிறேன். செலீனாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்திருந்தது அவள் தந்தை. அவசரமாகப் பேசிவிட்டு வெளியே சென்றாள். நான் இங்கேயேதான் இருந்தேன்.
தனியாக இருக்க எனக்கு மிகவும் போர் அடித்தது. ஆனாலும் செலீனா திரும்பி வரும்வரை காத்திருக்கலாம் என நினைத்து, ஜன்னல் வழியாக வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இரண்டு மணி நேரத்தில் வீட்டின் வெளிப்புற கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. செலீனாதான் தன் காரில் திரும்பி வந்திருந்தாள். சம்பத் கதவைத் திறந்து, காரில் இருந்த செலீனாவைப் பார்த்து சல்யூட் அடித்தான்.
காரை வீட்டுக் கூடத்திற்கு நேர் எதிரே பார்க் செய்துவிட்டு, முன் இருக்கையில் இருந்த பெட்டியை தன் இடது கையில் எடுத்துக் கொண்டு காரின் கதவைத் திறந்தாள். காரைவிட்டு இறங்கியதும் கதவை மூடி, ரிமோட் சாவியால் காரை பூட்டும் போது பெட்டி கீழே விழுந்தது.
பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டு கட்டுகள் கத்தை கத்தையாக கீழே விழுந்தன. அவற்றுக்கு பெட்டியிலிருந்து வெளியே வர அப்படி என்னதான் அவசரமோ, தெரியவில்லை. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ச்சே..” என்று சொல்லி, பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, ரூபாய் கட்டுகளை எடுக்கத் தொடங்கினாள் செலீனா. அப்போது சம்பத் அங்கே வந்து அவளுக்கு உதவினான்.
ரூபாய் கட்டுகளை எடுத்து பொறுமையாக அடுக்கிக் கொண்டிருந்த செலீனாவிடம் கீழே விழுந்திருந்த சில கட்டுகளை எடுத்து, “இந்தாங்க மேடம். பாத்து பத்திரமா வெச்சுக்கோங்க” என்று கொடுத்தான்.
“தேங்க்ஸ்ங்க” என்று சொல்லிவிட்டு, பெட்டியை பூட்டி உள்ளே எடுத்துக் கொண்டு வந்தாள்.
இப்படி ஒரு நேர்மையான வாட்ச்மேன் நமக்குக் கிடைத்திருக்கிறாரே, அவருடைய சம்பளத்தை அடுத்த மாதம் முதல் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என செலீனா நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. சம்பத்திடம் நன்றி சொல்லும்போது அவள் முகம் இதைச் சொன்னது போல் இருந்தது.
தன் அறைக்குச் சென்று பெட்டியை வைத்துவிட்டு கைப்பேசியில் தன் தந்தையை அழைத்தாள்.
“டாடி, அங்கிள் கிட்டயிருந்து நீங்க சொன்ன மாதிரி சூட்கேஸ் வாங்கிட்டேன்”
மறுமுனையில் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.
“ஓ, அப்படியா? எப்போ வர்றீங்க?”
….
“ஐ யாம் வெரி ஹாப்பி டாடி. மம்மியும் வர்றாங்களா?”
….
“ச்சே, அவங்களும் வரலாமில்ல. ஒரு நாள் வந்துட்டு போறதுல என்ன ஆகிடப்போகுது?”
….
“தெரியும்தான். இருந்தாலும்…”
….
“சரி டாடி. சீ யூ நெக்ஸ்ட் வீக்”
….
அழைப்பைத் துண்டித்து, கூடத்தில் எனக்கு நேர் எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். தன் தலைக்குப் பின்னால் இருந்த ஜன்னலை மூடி, என்னை இயக்க ஆரம்பித்தாள்.
எனக்குள் வெப்பம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்திலேயே என்னுள் மூழ்கினாள். பல விஷயங்கள் கற்றுக் கொண்டோம். நேரம் கடந்ததே தெரியவில்லை.
அவளுக்கு அயர்ச்சியாய் இருந்தது போலும். என்னை அணைத்த பின், அப்படியே தூங்க ஆரம்பித்தாள். நான் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.
இரவு 8 மணி ஆகியிருந்தது. எழுந்து தன் அறைக்குச் சென்றாள். என்ன பார்த்தாளோ தெரியவில்லை, அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து கூடத்தில் இருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
“வாட்ச்மேன் இங்கே வாங்க” என்று சத்தமாகக் கூப்பிட்டுவிட்டு உள்ளே வந்தாள். எல்லாவற்றையும் நான் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
“இதோ வர்றேன் மேடம்” சம்பத்தின் பதில்.
உள்ளே வந்த சம்பத்தை கோபமாக முறைத்தாள் செலீனா.
“என்னாச்சு மேடம்?”
“எதுக்கு திருடறீங்க வாட்ச்மேன்?”
திடுக்கிட்டது சம்பத் மட்டுமல்ல, நானும்தான். சம்பது இப்படி செய்யக்கூடியவன் இல்லை என்றே நானும் நினைத்திருந்தேன்.
“நான் எதையும் திருடலையே மேடம்”
“பொய் சொல்லாதீங்க” செலீனாவின் குரல், அவளின் கோபம் அதிகரித்திருந்ததை அப்பட்டமாக சொல்லியது.
“என்ன மேடம், என்னையே சந்தேகப்படறீங்களே! நான் உங்க அப்பா இங்க இருந்த காலத்துல இருந்து இருக்கேன்” சமாளிக்கப் பார்த்தான் சம்பத்.
“நடிக்காதீங்க. நான் இன்னிக்கு எடுத்துட்டு வரும்போது, இந்த பெட்டியில அஞ்சு கோடி ரூபாய் இருந்தது. இப்போ பத்து லட்சம் குறையுது, ஒரு முழு கட்டையே காணோம். எங்கே போயிருக்க முடியும்?”
“நீங்க எடுத்துட்டு வரும்போது சரியா எண்ணினீங்களா மேடம்?” ஒப்புக் கொள்வது போல் தெரியவில்லை.
“திருடறதையும் திருடிட்டு, இப்போ எங்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா? போலீஸுக்குப் போன் பண்ணட்டுமா?” உச்ச ஸ்தாயியில் கத்தினாள் செலீனா.
உண்மையைக் கண்டுபிடித்துவிட்டாள், இனி பொய் சொல்லி ஏதும் ஆகப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் சம்பத் என நினைக்கிறேன்.
விருட்டென்று செலீனாவை நெருங்கி, அவள் சுதாரிப்பதற்கு முன், அவளின் கழுத்தை நெறித்தான். துடித்தாள் அவள். சம்பத்தை தடுக்க நினைத்தேன், ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. ஏதும் செய்ய முடியாதவனாய் அப்படியே இருந்தேன்.
சில நிமிடங்களில் செலீனாவின் உயிர் பிரிந்தது என நினைக்கிறேன். எனக்கு எதிரே தரையில் சரிந்து விழுந்தாள். பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தான் சம்பத்.
இப்போது மணி பனிரெண்டு. இது வரை வீட்டுக்கு யாருமே வரவில்லை. தரையில் பாவமாய் உயிரற்று கிடக்கிறாள் செலீனா. அவள் கண்கள் இன்னமும் என்னை நோக்கியே இருந்தன.
பத்து, பதினைந்து முறை செலீனாவின் செல்போன் ஒலித்தது. ஆனால் அவள் பதில் பேசும் நிலையில் இல்லை என்பது அழைத்தவருக்குத் தெரியுமா?
தன் மகளைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அவளுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க, கூடிய விரைவில் தன் நெருங்கிய நண்பர் விக்ரமையோ, அல்லது வேறு யாரையோ அனுப்பி வைப்பார் அவளின் தந்தை என கணிக்கிறேன்.
எல்லா உண்மையும் தெரிந்த நானும் அப்படியே இருக்கிறேன். நடந்த சம்பவத்தை மறக்காமல், ஒரு வசனம்கூட மாறாமல் என்னால் சொல்ல முடியும். ஆனால் ……….
காவல்துறை அதிகாரிகள் ஒரு வெளி நாட்டு ப்ளாஸ்மா டி.வியான என் சாட்சியை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
– ஜூன் 2014 ‘சிறகு’ இணைய இதழில் வெளிவந்தது.