நியூயார்க்கில் சங்கர்லால்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 2,827 
 
 

(1983ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19

அத்தியாயம்-13

முன்னால் சென்ற போலீஸ் காரைத் தொடர்ந்து சென்றார் சங்கர்லால். போலீஸ் தலைமைத் தலைவரின் அலுவலகத்தின் முன் இரண்டு கார்களும் வந்தன. நின்றன. சார்ஜெண்டுகள் இருவரும் வழிகாட்டினார்கள். சங்கர்லால், அவர்களைத் தொடர்ந்தார். போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ் அறைக்குள் நுழைந்தார்.

வில்லியம்ஸ், புகை பிடித்துக் கொண்டிருந்தார். சங்கர்லாலைப் பார்த்ததும் சிகரெட்டை மேசை மீதிருந்த ஆஷ்ட்ரேயின் மீது வைத்தார். வைத்துவிட்டு, “ஓ! சங்கர்லாலா? வாருங்கள். நீங்கள் நியூயார்க்குக்கு வந்ததே எனக்கு தெரியாதே! உட்காருங்கள்” என்று சொன்னார்.

சங்கர்லால், தலைமைப் போலீஸ் தலைவரின் கையைக் குலுக்கினார். குலுக்கிவிட்டு உட்கார்ந்தார். வில்லியம்ஸும் உட்கார்ந்தார். அவர் சார்ஜெண்டுகளுக்குச் சாடை காட்டினார். சாடை காட்டியதும் சார்ஜண்டுகள் இருவரும் சல்யூட் அடித்துவிட்டுப் போய் விட்டார்கள்.

“நான் வந்தது தெரியாமலா என்னை அழைத்து வரும்படி உங்கள் சார்ஜெண்டுகளுக்குக் கட்டளை போட்டீர்கள்?” என்றார் சங்கர்லால்.

“இரயில்வே ஸ்டேஷனில் நடந்த கொலையைப் பற்றி எனக்குச் செய்தி வந்தது. இங்கே என்ன குற்றங்கள் நடந்தாலும் உடனுக்குடன் எனக்கு ரேடியோ தொலைபேசியில் செய்தி வந்துவிடும். எவனோ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அங்கே நீங்கள் இருந்ததாகவும் செய்தி கிடைத்தது. அப்போதுதான் நீங்கள் இங்கு வந்திருப்பது எனக்குத் தெரிந்தது!”

“அப்படியா? இரயில்வே ஸ்டேஷனில் கொலையுண்ட மனிதன் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனைப் பற்றித் தெரிந்து விடும். நீங்கள் புறப்படுவதற்குள் சொல்லி விடுகிறேன்!” என்றார் வில்லியம்ஸ். பிறகு,

“சங்கர்லால், என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்றார்.

“தேநீர்”

“ஆ. பார்த்தீர்களா? உங்களிடம் போய் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டிருக்கிறேனே. நீங்கள் எப்போதும் தேநீர்தான் சாப்பிடுவீர்கள் என்பது உலகம் முழுவதற்கும் தெரியுமே!” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை எடுத்தார். உதவியாளரை அழைத்து, இரண்டு கோப்பைத் தேநீர் அனுப்பி வைக்கும் படி சொன்னார்.

சங்கர்லால் வரும்போது கையில் ஒரு பெட்டியைக் கொண்டு வருவதைப் பார்த்தார் வில்லியம்ஸ். அதைப்பற்றி அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“உங்கள் கையிலிருக்கும் பெட்டியில் என்ன இருக்கிறது சங்கர்லால்? தெரிந்து கொள்ளலாமா?”

“வழியில் ஒரு சாவி கிடைத்தது. அது இரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் லாக்கர்களின் சாவிகளிலே ஒன்று. லாக்கரில் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போனேன். இந்தப் பெட்டி கிடைத்தது. நான் இன்னும் இதைத் திறந்து பார்ஙக்கவில்லை. திறக்கட்டுமா?”

“திறந்து பாருங்களேன்” என்றார் வில்லியம்ஸ்.

சங்கர்லால், பெட்டியைத் திறந்தார். உள்ளே –

கற்றை கற்றையாக டாலர் நோட்டுகள் இருந்தன.

“சங்கர்லால், நீங்கள் வந்ததும் வராததுமாகப் பெரும் பணத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்! கொஞ்சம் இருங்கள். பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, பெட்டியைத் தன் பக்கமாக இழுத்துப் பணக்கட்டுகளை எண்ணிப் பார்த்தார்.

இருபதாயிரம் டாலர்!

பெட்டியை அவர் சங்கர்லால் பக்கம் தள்ளினார். சங்கர்லால் பெட்டியை மூடினார். தேநீர் வந்தது. இருவரும் தேநீர் பருகிக் கொண்டே பேசினார்கள்.

“சங்கர்லால், உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கேட்கலாமா?”

“கேளுங்கள்”

“இந்தப் பெட்டியில் பணம் இருக்கிறது என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?”

“தெரியாது.”

“சாவியைத் தெருவில் கண்டெடுத்ததும், பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சாவியை ஒப்படைக்காமல் நீங்களே ஏன் போய் லாக்கரைத் திறந்து பார்த்தீர்கள்? சாவியைத் தொலைத்து விட்டவர்கள். பொதுவாகப் போலீஸ் ஸ்டேஷனிலும் இரயில்வே ஸ்டேஷனிலும் தங்களது சாவி தொலைந்து விட்டதைச் சொல்லுவார்கள் அல்லது விவரம் தெரிந்தால் சாவிக்கு உரியவர்களிடம் சாவியைக் கொடுத்து விடுவார்கள். ஆனால் நீங்கள் லாக்கரைத் திறந்து பார்த்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் ஒருவன் உங்களைச் சுட்டிருக்கிறான். உங்களைச் சுட்டவனை மற்றொருவன் சுட்டுவிட்டு ஓடியிருக்கிறான். உங்களைச் சுட்டவனும் ஒரு பெட்டியை வைத்திருந்ததாகத் தெரிகிறது. அந்தப் பெட்டியில் என்ன இருந்தது?”

“எனக்கு எப்படித் தெரியும்? லாக்கர் சாவி ஒன்று கிடைத்ததும் ஸ்டேஷனுக்குப் போய் அதைத் திறந்து பார்க்கப், போனதற்கு ஒரு காரணம் இருந்தது.”

“சொல்லுங்கள்”.

“இந்தச் சாவி தெருவில் கிடைக்கவில்லை?”

“அப்படியானால்?”

“ஓர் அழகிய பெண் தன் விக்கில் இதை மறைத்து வைத்திருந்தாள்.”

“யார் அந்தப் பெண் சங்கர்லால்?”

“அவள் உயிருடன் இல்லை. அவள் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்குமே” என்று சொல்லிவிட்டு, அவர் அஸ்டோரியா ஓட்டலில் வந்து இறங்கியதிலிருந்து, ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஒரு பெண் பிணத்தைக் கண்டது வரை, எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார்!

வில்லியம்ஸ் வியந்தார். வியப்புடன் பார்த்தார்.

“சங்கர்லால், நியூயார்க் நகரத்தைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. உண்மை வெளியில் தெரிந்தால் பத்திரிகைக்காரர்கள் சும்மாவிட மாட்டார்கள். உடனே போலீசுக்கு நீங்கள் செய்தி கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?”

“சுற்றுப்புறம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. பணக்காரக் கிழவி பமேலா, ஒரு பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறாள். அவள் வழக்குத் தொடர்பாக நான் இங்கே வந்திருக்கிறேன். பமேலாவின் ரோல்ஸ்ராய்ஸ் காரிலே ஒரு பிணம் கிடந்தது என்ற செய்தி பமேலாவுக்குத் தெரிந்தால் பமேலா தாக்குதலினால் உயிர் விட்டுவிடக் கூடும்! ஆகையால் அதன் காரணமாக நான் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்திருக்க முடிவு செய்தேன். இது தொடர்பாக நீங்கள் மர்லினுக்கோ பமேலாவுக்கோ தொல்லை கொடுக்க வேண்டாம்.”

வில்லியம்ஸ் தயங்கினார்.

பிறகு, “பமேலாவுக்கு என்ன ஆபத்து?” என்று கேட்டார். “பொறுத்துக் கொள்ளுங்கள். இப்போது நான் எதையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்”

“போலீஸ் உதவி உங்களுக்கு வேண்டாமா?”

“தேவைப்படும் போது தொடர்பு கொள்கிறேன்.”

“இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”

“எதைப் பற்றிக் கேட்கிறீர்கள்?”

“உங்களைக் கொல்ல இரயில்வே ஸ்டேஷனில் ஒருவன் முயன்றிருக்கிறான். மறுபடியும் அவன் அந்த முயற்சியைச் செய்யலாம் அல்லவா. உங்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா?”

“வேண்டாம்.”

“ஷர்லி கொலையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சொல்லுங்கள்.”

“அதுதான் சொன்னேனே, அவள் பெயர் கூட எனக்குத் தெரியாது. நீங்கள் இப்போது ஷர்லி என்று சொன்னதும் தான் எனக்கு அவள் பெயர் ஷர்லி என்பது தெரிந்தது!”

இந்த நேரத்தில், தொலைபேசி அலறியது. வில்லியம்ஸ் தொலைபேசியை எடுத்தார். கொஞ்ச நேரம் தொலைபேசியில் உற்றுக் கேட்டார்.

பிறகு தொலைபேசியை வைத்துவிட்டு, “சங்கர்லால். இரயில்வே ஸ்டேஷனில் சுடப்பட்டவன் பெயர் அந்தோணி. அவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்றார்.

“ஒன்றும் தெரியாது”

வில்லியம்ஸ் மிகவும் வியப்புடன் பார்த்தார்.

“அந்தோணியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்” என்றார் சங்கர்லால்.

“அந்தோணி கொடியவன். ஐயம் இல்லை. அவன் இது வரையில் போலீசாரிடம் பிடிபடவில்லை. சான்றுகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தான். அவன் ஏன் உங்களைக் கொல்ல முயற்சி செய்ய வேண்டும்!”

“எனக்கு எப்படித் தெரியும்?” என்று சொல்லிவிட்டுச் சங்கர்லால் எழுந்து கொண்டார்.

“நான் வருகிறேன் மிஸ்டர் வில்லியம்ஸ். இந்த வழக்கைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி கொடுப்பதால் குற்றம் இல்லை. இரயில்வே ஸ்டேஷன் கொலையைப் பற்றி நீங்கள் செய்தி கொடுக்கவில்லை என்றாலும் பத்திரிகையில் அந்தச் செய்தி வந்தே தீரும். இல்லையா?”

“ஆமாம்”

“பமேலாவின் ரோல்ஸ்ராய்ஸ் காரில் பிணம் கிடந்த செய்தியை மட்டும் பத்திரிகைகளுக்குக் கொடுக்காதீர்கள். மற்றச் செய்திகளில் எது வந்தாலும் குற்றம் இல்லை. இந்தப் பணப்பெட்டி உங்களிடம் இருக்கட்டும். இதைப் பற்றிப் பிறகு விவாதிப்போம்.”

இப்படிச் சொல்லிவிட்டு சங்கர்லால் எழுந்தார். நடந்தார். விரைந்து சென்றார்.

போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ், சங்கர்லால் மறையும் வரையில் பார்த்தார். பார்த்திருந்து விட்டு, மீண்டும் சிகரெட்டை எடுத்தார். புகைக்கத் தொடங்கினார்.

பிறகு தொலைபேசியை எடுத்துத் தன் உதவியாளருடன் தொடர்பு கொண்டார். “சார்ஜெண்ட் சண்டானாவை உடனே உள்ளே அனுப்பு” என்றார்.

அத்தியாயம்-14

அஸ்டோரியா ஓட்டலில் கண்டவர்களெல்லாம் நுழைய முடியாது. பெரும்பணம் படைத்தவர்களும், பெரிய அரசியல் தலைவர்களும் மட்டுமே அங்கு வந்து தங்க முடியும். தங்குகிறார்கள். இதனால் ஓட்டலில் இரவு பகலாக துப்பறியும் நிபுணர்கள் இரண்டு பேர், போகிறவர்கள் வருகிறவர்களைக் கண்காணித்து வந்தார்கள். அவர்களைத் தாண்டி, அவர்களுக்குத் தெரியாமல் எவரும் உள்ளே போய்விட முடியாது!

நியூயார்க் நகர இரயில்வே ஸ்டேஷனில் அந்தோணி, சங்கர்லாலைச் சுட முயன்றதும் அதே நேரத்தில் எவனோ ஒருவனால் அவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும், காட்டுத் தீயைப் போல் நியூயார்க் முழுவதும் பரவிவிட்டது. சங்கர்லாலைப் பேட்டிக் காணப் பத்திரிகை நிருபர்களும், சங்கர்லாலைக் காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பலரும் அஸ்டோரியா ஓட்டலை நோக்கி வந்தார்கள். படை எடுத்தார்கள்!

ஓட்டல் வரவேற்பாளர், தொலைபேசியில் சங்கர்லாலுடன் தொடர்பு கொண்டு, “பத்திரிகைக்காரர்களையாவது மேலே அனுப்பலாமா?” என்று கேட்டபோது சங்கர்லால், “இப்போது எவரையும் பார்க்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

இதனால், துப்பறியும் நிபுணர்கள், சங்கர்லாலைப் பார்க்க வருகிறவர்களையெல்லாம் விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்!

வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி தேநீர் வரவழைத்துப் பருகிக் கொண்டிருந்தார் சங்கர்லால். ஓசையின்றிப் பமேலாவின் வழக்கை முடித்துக் கொண்டு திரும்பவும் டோக்கியோவுக்குப் போய்விட வேண்டும் என்று எண்ணினார் சங்கர்லால். ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் பரபரப்புடன் வந்துவிட்டன!

சங்கர்லால் நியூயார்க்கில் இருப்பதும், அந்தோணி என்பவன் அவரைக் கொல்ல முயன்றதும், டோக்கியோவில் இருக்கும் இந்திராவுக்குக் கூட தெரிந்து விடுமே என்று சங்கர்லால் துன்பம் மிகக் கொண்டார். நியூயார்க்கில் நடக்கும் பரபரப்பான செய்திகளை டோக்கியோ பத்திரிகைகளும் உடனுக்குடன், வெளியிடுவது வழக்கம். இது சங்கர்லாலுக்குத் தெரியும்.

எந்த ஊருக்குச் சென்றாலும் சங்கர்லாலுக்குப் போலீசாரின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இது முறை, இது வழக்கம்.

ஆனால் நியூயார்க் நகரம் அப்படி இல்லை. போலீஸ் தலைமைத் தலைவர் வில்லியம்ஸ், சங்கர்லாலைக் கூடக் கைது செய்திருக்கலாம்! தெருவில் கிடந்த சாவியை எடுத்து லாக்கரில் இருந்த பணத்தைத் திருட முயன்றதாகக் குற்றம் சாட்டிக் சங்கர்லாலைக் கைது செய்திருக்கலாமே!

ஆனால், சங்கர்லால் இந்த உலகத்திலே எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போகலாம். போய் எந்த நிலையிலும், ஒருவருடைய அனுமதியும் இன்றி எதைப்பற்றி வேண்டுமானாலும் துப்பறியலாம். அப்படிப்பட்ட ஓர் அனுமதியை அகில உலகத் துப்பறியும் நிபுணர் சபை அவருக்கு வழங்கி இருந்தது. இதனால்தான், சங்கர்லாலை நியூயார்க் நகரப் போலீஸ் தலைமைத் தலைவர் கைது செய்யவில்லை. என்றாலும் அவர், மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். வழக்கு முடியும் வரையில் சங்கர்லால் எவருக்கும் எந்த உண்மையையும் சொல்லத் தேவை இல்லை. பெட்டியைக் கூட அவர் கொடுத்திருக்க வேண்டியதில்லை. என்றாலும் சங்கர்லால், உண்மைகளைப் போலீஸ் தலைமைத் தலைவரிடம் சொல்லிவிட விரும்பினார். அதனால் தான் இறந்து கிடந்த ஷர்லியின் விக்கில் சாவி இருந்த உண்மையைச் சொன்னார்! ஆனால், வில்லியம்ஸ் மட்டும் எல்லா உண்மைகளையும் சங்கர்லாலிடம் சொல்லவில்லை! வில்லியம்ஸ் சில உண்மைகளை மறைக்கிறார், மறைத்ததோடு நில்லாது, சங்கர்லாலை மறைமுகமாகத் தொடர்ந்து கவனிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது சங்கர்லாலுக்குத் தெரிந்தது. புரிந்தது!

‘தன்னையே கவனித்த போலீஸ் நிழல்கள், அந்தோணியைச் சுட்டுவிட்டு அவன் கையிலிருந்த பெட்டியைத் தூக்கிச் சென்ற அந்த மனிதனை மட்டும் ஏன் விட்டுவிட்டன? அவனை அவர்கள் பார்க்கவில்லையா?’ என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்தார் சங்கர்லால்.

சங்கர்லால் நீண்ட நேரம் சிந்தனை செய்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். கைக் கெடிகாரத்தைப் பார்த்தார். ஐந்து மணி. மாலை உடைகளை மாற்றினார். வெளியில் புறப்பட்டார். முஷ்டாங் காரில் அவர் புறப்பட்டார். காரில், பூனையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இவர் விரைந்து சென்றார்.

இன்று இரவு பதினோரு மணிக்குப் பூனையின் ஆள் ஒருவன் வருவான். பமேலா கொடுக்கும் பெட்டியை எடுத்துச் செல்லுவான். அதில் பணம் இல்லை என்பது தெரிந்ததும் உடனே அவன் பமேலாவைக் கொல்ல முயற்சி செய்வான். அப்படி அவன் பமேலாவைக் கொல்லா விட்டால், அடுத்தபடியாக அவன் எவரை அச்சுறுத்தி எவரிடம் பணம் கேட்டாலும் பணம் கிடைக்காது. அதோடு சங்கர்லாலுக்கு அஞ்சிப் பமேலாவைக் கொல்லவில்லை என்று வேறு பேசிக் கொள்வார்கள்.

இப்படிச் சிந்தனை செய்து கொண்டே சென்ற சங்கர்லால், திடீரென்று காரை நிறுத்தினார்.

சங்கர்லால் பமேலாவின் பாதுகாப்புக்காக வந்திருப்பதால், பமேலா பணத்தைக் கொடுக்க மாட்டாள் என்பது பூனைக்குத் தெரியும்! பமேலா, ஓசையின்றிப் பூனைக்குப் பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவள் சங்கர்லாலையே வரவழைத்து விட்டதால், பமேலா, பணத்தைக் கொடுக்க முடிவு செய்திருந்தாலும், சங்கர்லால் அதைத் தடுத்துவிடுவார் அல்லவா! உடனே பூனை என்ன செய்வான்? எப்படியாவது பமேலாவைக் கொன்று விடுவான்!

எந்த நேரத்திலும் பமேலாவுக்கு ஆபத்து என்பதைச் சங்கர்லால் உணர்ந்திருந்தார்.

சங்கர்லால், காரில் ஒரு தொலைபேசி இருந்தது. மேலாவின் கார்கள் எல்லாவற்றிலுமே தொலைபேசி பொருத்தப்பட்டிருந்தது.

சங்கர்லால், தொலைபேசியை எடுத்தார். எடுத்துப் பமேலாவின் ரோல்ஸ்ராய்ஸ் காரில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்தார்.

மணியடிக்கும் ஓசை கேட்டது. மர்லின் தொலைபேசியை எடுத்தாள். எடுத்து, “அலோ” என்று குரல் கொடுத்தார். “மர்லின், சங்கர்லால் பேசுகிறேன்.”

“குட் ஈவினிங்”

“குட் ஈவினிங் மர்லின். பக்கத்தில் எவராவது இருக்கிறார்களா?”

“எவரும் இலர், ஏன்?”

“பமேலா திரைப்படத்திற்குக் கிளம்பவில்லையா?”

“கிளம்புகிறாள். விரைவில் புறப்பட்டு விடுவாள். ஏன்? என்ன சொல்ல வேண்டும்?”

“ஒன்றும் சொல்ல வேண்டாம். அவளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். விழிப்புடன் இரு!”

இதைக் கேட்டு மர்லின் திகைத்தாள். செயலற்றாள்.

“மர்லின்”

‘உம்”

“நீ பாதுகாப்புடன் இருக்கிறாயா?’

“இருக்கிறேன்.”

“அஞ்சாதே. பமேலாவிடம் ஒன்றும் சொல்லாதே. எதுவும் சொல்லாதே. பமேலா எந்தத் திரைப்படத்திற்குப் போகிறாள்? சொல்லு?”

“திறந்தவெளித் திரைப்பட அரங்கு ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ஈராஸ். அங்கே காரில் உட்கார்ந்தபடியே திரைப்படம் பார்க்கலாம். பெரும்பாலும் பமேலா அந்தத் திறந்தவெளி அரங்குக்குத்தான் போவது வழக்கும்.”

“நீ துன்பம் கொள்ளாதே. அஞ்சாதே வழக்கப்படி ஈராஸ். திரைப்பட அரங்குக்குப் போ. போய் வா. காரிலுள்ள ஏர்கண்டிஷனைப் போட்டுவிடு.”

“திரைப்படம் பார்க்கும்போது காரில் கண்ணாடிகளை இறக்கிவிடுவாள் பமேலா. பெரும்பாலும் இரவில் ஏர்கண்டிஷன் வேண்டாம் என்பாளே!”

“சரி. அவள் விருப்பப்படியே விட்டுவிடு. உன் காரை வேறு கார் ஏதாவது தொடர்ந்து வந்தால் மட்டும் விழிப்புடன் இரு”.

“ஆகட்டும்.”

சங்கர்லால் தொலைபேசியை வைத்துவிட்டார். அவர் காரில் கையுடன் கொண்டுவந்த தினசரிப் பத்திரிகைகளில் ஒன்றை எடுத்துப் புரட்டினார். ஈராஸ் திறந்தவெளி அரங்கில் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ‘கொலை’ என்கிற மர்மக் கதைப் படம் ஓடிக் கொண்டிருந்தது.

ஹிட்ச்காக்கின் படத்தைச் சங்கர்லாலும் பார்க்க விரும்பினார். ஆகையால், அவர் ஈராஸ் திரைப்பட அரங்குக்குப் புறப்பட்டார். அது எங்கே இருக்கிறது என்று வழியில் கேட்டார். கேட்டுக் கொண்டு காரை விட்டார்.

அத்தியாயம்-15

ஆல்பர்ட், ஜாக்ஸனின் வீட்டின்முன் வந்துநின்று மணியடிக்கும் பொத்தானை அமுக்கினான். நீக்ரோப் பெண் கதவைத் திறந்தாள். உள்ளே வந்து அவன் உட்காரும்படி சொல்லிவிட்டு, அவள், ஜாக்ஸனிடம் சொல்லப் போனாள்.

ஆல்பர்ட், தன் கையில் பெட்டியுடன் ஜாக்ஸனுக்காகக் காத்திருந்தான். உள்ளே சயாம் நாட்டுப் பூனை மெல்லக் கத்தும் ஓசை கேட்டது. ஜாக்ஸன் சுருட்டும் கையுமாக வந்தான். அவன் வந்ததும் ஆல்பர்ட் எழுந்து கொண்டான்.

ஜாக்ஸன் உட்கார்ந்தான். சயாம் நாட்டுப் பூனை அவன் காலடியில் வந்து உட்கார்ந்தது. உட்கார்ந்து ஆல்பர்டையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆல்பர்ட் மெல்ல உட்கார்ந்தான்.

“அந்தோணி நர்சிங்ஹோமிலிருந்து தப்பி ஓட முயன்றான். அவன் பணத்தையெல்லாம் நியூயார்க் இரயில்வே ஸ்டேஷனில் ஒரு லாக்கரில் மறைத்து வைத்திருக்கிறான். அவனைத் தொடர்ந்து செல்ல ராபர்ட்ஸ் என்பவனை அனுப்பியிருந்தேன். ராபர்ட்ஸ், அந்தோணியைக் கொன்றுவிட்டுப் பணப் பெட்டியைக் கொண்டு வந்து விட்டான். ஆனால்…”

“அதே இரயில்வே ஸ்டேஷனில், அதே இடத்தில் சங்கர்லால் இருந்திருக்கிறார். அவரை அந்தோணி சுட முயன்றிருக்கிறான். ஆனால் அதற்குள் ராபர்ட்ஸ், அந்தோணியைக் கொன்றுவிட்டான். இதுதான் பத்திரிகையில் வந்து விட்டதே! இல்லையா?”

“ஆமாம். ஆனால் சங்கர்லால் அங்கு ஏன் வந்தார் என்பது மர்மமாக இருக்கிறதே!”

“உண்மைதான். சங்கர்லால் ஏதோ ஒரு லாக்கரைத் திறக்க வந்திருக்கிறார். அவர் திறக்க வந்தது அந்தோணியின் லாக்கரை அல்ல. வேறு ஒரு லாக்கரை! இதிலிருந்து, என்ன தெரிகிறது?”

“ஒன்றும் எனக்கு விளங்கவில்லை.”

“நான் சொல்லுகிறேன். கேள். ஷர்லி நமது கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தாள் அல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பணக்காரரைப் பூனையை அனுப்பி நான் அச்சுறுத்தினேன். இருபதாயிரம் டாலர் பணத்தை ஒரு பெட்டியில் போட்டு நான் அனுப்பும் ஆளிடம் கொடுக்க வேண்டும் என்றும், அப்படித் தவறினால் அன்றே அவர் கொலை செய்யப்படுவார் என்றும் அச்சுறுத்தி இருந்தேன். பணத்தைக் கொண்டுவர ஷர்லியை அனுப்பியிருந்தேன். அவள் லாஸ் ஏஞ்சலுக்குப் போய், உள்ளூர் ஆ ள் ஒருவனைப் பிடித்துப் பணக்காரரிடம் அனுப்பினாள். அவர் கொடுக்கும் பெட்டியை வாங்கி வந்து கொடுக்கும்படியும், அப்படிக் கொடுத்தால் பத்து டாலர் கொடுப்பதாகவும் சொல்லி அனுப்பினாள். பணக்காரர் ஏற்கெனவே பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். இருபதாயிரம் டாலரை ஒரு பெட்டியில் போட்டு அந்தப் பெட்டியை கொடுத்து விட்டார். அந்த ஆள் ஷர்லியிடம் கொண்டு வந்து பெட்டியைக் கொடுத்து விட்டுப் பத்து டாலரை வாங்கிக் கொண்டு போய்விட்டான். ஷர்லி பணத்துடன் நியூயார்க் வந்திருக்கிறாள். நேராக என்னிடம் வராமல், அவள் நியூயார்க்கிலிருந்து இலண்டனுக்கு ஓடிவிட முடிவு செய்துவிட்டாள். அவள் நியூயார்க்கை விட்டுப் போவதற்கு முன் நமது ஆட்கள் அவளைப் பிடித்து விட்டார்கள். அவள், பணப்பெட்டியை எங்கேயோ தவற விட்டுவிட்டதாகப் பொய் சொல்லியிருக்கிறாள். உண்மை என்னவென்றால் அவள் பணத்துடன் ஓடிவிட விரும்பினாள். நமது கூட்டத்தில் தொடர்ந்து வேலை செய்து வருவதை அவள் விரும்பவில்லை. பணத்தை மறைத்திருக்கும் இடத்தை அவள் சொல்லவில்லை. சித்திரவதை செய்த போது அவள் இறந்து விட்டாள். நமது கூட்டத்தினர் அஞ்சி, அவள் பிணத்தை எங்கே போடுவது என்று விழித்துக் கொண்டிருந்தபோது, வழியில் பமேலாவின் ரோல்ஸ்ராய்ஸ் கார் நின்று கொண்டிருந்தது. அதில் டிக்கியைத் திறந்து போட்டு விட்டு ஓடி வந்துவிட்டார்கள். பமேலாவின் காரோட்டி மர்லின், சங்கர்லாலை உதவிக்கு அழைத்திருக்கிறாள். காருக்குள் பிணம் கிடந்ததை அவள் கண்டுபிடித்து விட்டாள். சங்கர்லால், ஷர்லியின் பிணத்தை வேறு ஓர் இடத்தில் கொண்டு போய் போட்டிருக்கிறார். அப்போது அவளுடைய விக்கின் உள்ளே ஒரு சாவி இருந்திருக்கிறது. அதுதான் லாக்கரின் சாவியாக இருக்க வேண்டும். அதை அவர் எடுத்து வைத்துக் கொண்டார். சங்கர்லாலையும் மர்லினையும் தொடர்ந்து கவனித்த நமது ஆட்களில் ஒருவனுக்கு அது என்ன சாவி என்பது தெரியவில்லை. இப்போது புரிகிறது. ஷர்லி, பணத்தை இரயில்வே ஸ்டேஷன் லாக்கரில் ஒளித்து வைத்திருக்கிறாள். அந்தப் பணத்தைத்தான் சங்கர்லால் கிளப்பியிருக்கிறார்!”

“சங்கர்லால், ஷர்லியின் பிணத்தைக் கண்டுபிடித்ததைப் பற்றியோ, இரயில்வே ஸ்டேஷன் லாக்கரின் சாவியைக் கண்டெடுத்துப் பெட்டியை எடுத்ததைப் பற்றியோ பத்திரிகையில் ஒன்றும் செய்தி வரவில்லையே!”

“எல்லாம் இரகசியமாக இருந்து வருகிறது. ஜங்கிள் ஜான் கொலை செய்யப்பட்டதைக் கூடப் பத்திரிகைகளில் வெளியிடவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? சங்கர்லாலும் போலீசாரும் நமக்கு எதிராக அமைதியுடன் இரகசியமாக வேலை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. தெளிவாகிறது. இந்த நிலையை நான் கொஞ்சமும் விரும்பவில்லை!”

ஆல்பர்ட் ஒன்றும் பேசாமல் இருந்தான்.

ஆல்பர்ட் ஒன்றும் பேசாமல் மௌனமாக ஜாக்ஸனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பமேலாவைப் பற்றி எனக்கு மிகுந்த விவரங்கள் தெரியும். அவள் கிழவிதான். என்றாலும், சூழ்ச்சி மிகக் கொண்டவள். அதனால்தான் அவள் சங்கர்லாலை வரவழைத்திருக்கிறாள். அவள் பணத்தைக் கொடுப்பதாக முடிவு செய்திருந்தால் பாங்கிலிருந்து பணத்தை இதற்குள் வாங்கியிருப்பாள். அவள் கணக்கு வைத்திருக்கும் பாங்குகள் இரண்டு. இரண்டிலும் எனக்கு ஒற்றர்கள் இருக்கிறார்கள். அவள் பாங்கிலிருந்து பணம் வாங்கவில்லை. நாம் கேட்ட கோடி டாலரை அவள் வாங்கியிருந்தால் எனக்குச் செய்தி கிடைத்திருக்கும். ஆகையால், அவளும் சங்கர்லாலும் வேறு ஏதோ திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!”

“என்ன திட்டம்?”

“என்ன திட்டம் என்பது தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். இரவு பதினோரு மணிக்கு எவரையாவது அனுப்பிப் பமேலாவிடம் போய்ப் பெட்டியைப் பெற்றால் அதில் பணம் இருக்காது. ஆகையால் நமது திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்யப் போகிறேன்.”

“சொல்லுங்கள்.”

“ஆபத்து மிகுந்த செயல் இது. ஆகையால் இந்தச் செயலைச் உன்னிடம் ஒப்படைகிறேன். நீயே இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும்.’

ஆல்பர்ட் ஒன்றும் பேசவில்லை. ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனால் பேச முடியவில்லை!

“நீ என்ன சொல்ல முயற்சி செய்கிறாய் என்பது எனக்குத் தெரியும். உனக்குப் பதில் நான் சொல்லும் வேலையைச் செய்து முடிக்க வேறு ஓர் ஆளை நீ அனுப்பப் போவதாகச் சொல்லப் போகிறாய். இல்லையா? வேண்டாம். நீயே போ. பெட்டியில் இருக்கும் பணத்தை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். இந்த வேலையை ஒழுங்காகச் செய். தவறு செய்யக்கூடாது”.

“சொல்லுங்கள்.”

“பமேலா ஒவ்வொரு சனிக்கிழமையும் திரைப்படத்துக்குப் போவது வழக்கம். அவள் இன்று வழக்கப்படி திரைப்படத்துக்குப் போவாள். திறந்த வெளி அரங்கு ஒன்றில் அவள் திரைப்படம் பார்க்கப் போவாள். நீயும் அங்கே போ. அவள் எந்தத் திரைப்படத்திற்குப் போகிறாள் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். பங்களாவிலிருந்து அவள் காரில் புறப்பட்டதும் அவள் காரைத் தொடர்ந்து செல்ல ஒருவனைப் போட்டிருக்கிறேன். அவன் எனக்குத் தொலைபேசியில் செய்தி சொல்லுவான். உன்னிடம் நான் சொல்லுகிறேன். உடனே நீ அங்கே போ.”

“ஆகட்டும்”

அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தொலைபேசி அலறியது. ஜாக்ஸன், தொலைபேசியை எடுத்துப் பேசினான். பிறகு, தொலைபேசியை வைத்துவிட்டுத் திரும்பி ஆல்பர்ட்டைப் பார்த்தான்.

“ஈராஸ் திறந்த வெளித் திரைப்பட அரங்குக்குப் போயிருக்கிறாள். படம் முடிய ஒன்பது மணி ஆகும். அவள் திரும்பி வரும்பொழுது எப்படியாவது அவளைத் தீர்த்துக் கட்ட வேண்டும். என்ன சொல்லுகிறாய்?” என்றான்.

“பமேலாவின் கார். ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கார். காரின் கண்ணாடிகளை இறக்கிவிடாமல் இருந்தால் அவளைச் சுடுவது கடினம்!”

“அவளைச் சுடவேண்டாம். அவளையே துப்பாக்கியால் குறிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னாலும் பின்னாலும் கார்கள் வரும். அந்தோணி, சங்கர்லாலைக் கோட்டை விட்டதைப் போல், நீயும் கோட்டை விட்டு விடுவாய். அல்லது எவராவது உன்னைப் பிடித்து விடுவார்கள். எந்தவிதத் தவறும் செய்யக்கூடாது!”

“எப்படிக் கொல்ல வேண்டும்?”

“படம் முடிந்ததும் பமேலாவின் காரைத் தொடர்ந்து போ. போக்குவரத்து மிகுதி இல்லாத பகுதியில் அவள் காரை ஓவர்டேக் செய்வதைப் போல் வந்து, நான் இப்போது உன்னிடம் தரப்போகிற வெடிகுண்டை அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரின் மேல் போட்டுவிட்டு உன் காரை மிக வேகமாகச் செலுத்த வேண்டும். பிடிபடாமல் தப்பிவிட வேண்டும்!”

ஜாக்ஸன் எழுந்து சென்று இரண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு வந்து ஆல்பர்ட்டிடம் கொடுத்தான்.

“பிளாஸ்டிக் வெடிகுண்டுகள் இவை. ஆற்றல் மிகுந்தவை. இதில் தொங்கும் திரியை வாயால் கடித்து இழுத்துவிட்டு உடனே தூக்கி ஏறி போதும். ரோல்ஸ்ராய்ஸ் தூள் தூளாகி விடும்!”

“அப்படியானால், காரோட்டிப் பெண்ணும் கொல்லப்படுவாளே! இல்லையா?”

“ஆமாம். இரட்டைக் கொலை! வேறு வழி இல்லை! புறப்படு”

ஆல்பர்ட், கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் மறையும் வரையில் பூனை அவனையே பார்த்துக் கொண்டிருந்தது!

– தொடரும்…

– நியூயார்க்கில் சங்கர்லால் (நாவல்), முதல் பதிப்பு: 1983, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *