தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,776 
 

தயங்கித் தயங்கித் தனது பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பாவிடம் காட்டினான் எட்டாவது படிக்கும் குமார். இதுவரை வகுப்பில் முதல் ராங்க் பெற்று வந்த குமாருக்கு கடந்த இரண்டு தேர்வுகளில் மதிப்பெண்கள் மிகவும் குறைந்து போயிருந்தன.

கடந்த இருமுறைகளும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத குமாரின் தந்தை முத்துவேலுவுக்கு இப்போது சற்று குழப்பமாக இருந்தது.

“”குமார், என்னாச்சு கண்ணா… முதல் ராங்க் என்னாச்சுது? மார்க்கும் ரொம்பவும் குறைஞ்சு போயிருக்குது. முதல் ராங்க் யாருக்குக் கிடைச்சுது?” பிராக்ரஸ் ரிப்போர்ட்டைப் பார்த்தபடியே கேட்டார்.

“”வினோத்துக்கு…” கூச்சத்தோடு சொன்னான் குமார்.

“”வினோத்தா, அது யாருப்பா?”

வெற்றி ரகசியம்“”எங்க கிளாஸ்ல புதுசா சேர்ந்திருக்கிறான். வங்கி மானேஜராக வேலை பார்க்கிற வினோத்தோட அப்பா, நம்ம ஊருக்கு வேலை மாற்றல் ஆகி வந்திருக்கிறார். இரண்டு மாதம் முன்புதான் அவன் எங்க வகுப்பிலே சேர்ந்தான்…” என்றான் குமார்.

“”நிறைய மதிப்பெண் பெறுகிறவங்க முதல் ராங்க் பெறுவாங்க. சரி, ஆனா உனக்கு முன்னைவிட மதிப்பெண் குறைஞ்சிருக்கே, அது ஏன்?”

“”எங்க வகுப்பிலே எனக்குப் போட்டியா வினோத் வந்தபிறகு முன்ன மாதிரி என்னால கவனமா படிக்க முடியலைப்பா. வினோத் இதுவரைக்கும் நகரத்துல பெரிய பள்ளிக்கூடத்துல படிச்சவன். என்னை விட அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்குது. மறுபடி வினோத்தோட அப்பா வேற ஊருக்கு மாற்றல் ஆகி, அவன் எங்க பள்ளிக்கூடத்தை விட்டுப் போனாத்தான் என்னால நிறைய மதிப்பெண்கள் பெறமுடியும்னு தோணுது…” ஆதங்கத்தோடு குமார் சொன்னதைக் கேட்டதும் அவனது பிரச்னை என்னவென்று புரிந்தது, தந்தை முத்துவேலுவுக்கு.

“”சரி, இப்போ ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வருவார். அவர் வந்துட்டுப் போனபிறகு உன் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்….” என்றவர், தன் செல்ஃபோனை எடுத்து யாரோ ஒருவரிடம் பேசினார்.

அரை மணி நேரத்தில் குமாரின் வீட்டுக்கு வந்த அந்த மனிதரின் கையில் ஏதேதோ பொம்மைகள் மற்றும் சிறிய சிறிய வீட்டு உபயோகப் பொருள்கள் இருந்தன. வீட்டுக்கு வந்த அந்த மனிதர், குமாரின் அப்பாவிடம் தான் கொண்டுவந்த பொருட்களைக் கொடுத்தார்.

“”இதோ, இவைதான் நீங்க கேட்ட பொருட்களோட மாதிரிப் பொருட்கள். எவ்வளவு வேணும்னு சொன்னீங்கன்னா, நாளைக்கே உங்க கடையில கொண்டு வந்து போடச் சொல்றேன்” என்றார் அந்த மனிதர்.

“”சரி, நாளைக்குக் காலைல கடைக்கு வந்திடுங்க… மற்றவை எல்லாம் அங்கே பேசிக்கலாம்” என்ற முத்துவேலு அந்த மனிதரை அனுப்பி வைத்தார்.

அப்பாவிடம் அந்த மனிதர் கொடுத்துவிட்டுப் போன பொருட்களைப் பார்த்த குமாரின் ஆர்வம் அதிகரித்தது. அந்தப் பொருட்களையெல்லாம் கையில் எடுத்துப் பார்த்தான்.

“”இதெல்லாம் யாருக்குப்பா?” ஆர்வம் தாங்காமல் கேட்டான்.

“”நம்ம கடைக்குத்தான்… இனிமேல் நம்ம கடையில பொம்மைகளும் விற்பனை செய்யப் பேறேன்பா”

“”நம்ம கடையில பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் மட்டும்தானே விற்பனை செய்து வந்தீங்க! இனிமேல் பொம்மை எல்லாம் விக்கப் போறீங்களா? ஏம்ப்பா… புதுசா இதெல்லாம்?”

“”உன்னோட கிளாஸ் வினோத்தை மாதிரி எனக்கும் சிலரால பிரச்னைகள் வந்திருக்குப்பா. அதுக்காகத்தான் இதெல்லாம்….” குறும்பாகச் சிரித்தபடியே சொன்னார் முத்துவேலு.

“”என்ன சொல்றீங்

கப்பா?” அப்பா சொன்னதன் அர்த்தம் புரியாமல் கேட்டான் குமார்.

“”நம்ம கடை பக்கத்துல எத்தனையோ கடைகள் வந்துட்டுது. நாம, நம்ம வியாபாரத்தைத் தக்க வெச்சுக்கணும்னா எல்லாப் பொருள்களும் வாங்கி விக்கணும். நம்ம கடைக்கு வர்றவங்க விரும்புற பொருட்கள் எல்லாமே நம்ம கடையில கிடைக்கிற மாதிரி செஞ்சுக்கணும் இல்லியா? அது சரி… இவரை கடைக்கு வரச் சொல்லாம எதுக்காக நம்ம வீட்டுக்கே வரச் சொன்னேன் தெரியுமா?”

“”தெரியலை… ஏம்ப்பா..?”

“”குமார், பத்து வருடங்களுக்கு முன்னால நான் கடை தொடங்கும்போது அந்தப் பகுதியில நம்ம கடை மட்டும்தான் இருந்தது. நம்ம கடையில வியாபாரம் நல்லா நடந்தது. ஆனா, இப்போ நிறையக் கடைகள் வந்துவிட்டன. “எனக்குப் போட்டியா திறந்த கடைகளை மூடிவிட்டால்தான் நம்ம கடையில வியாபாரம் நல்லா நடக்கும்’னு நான் சோர்ந்து போய்ட்டா என்ன ஆகும்? நமக்குத்தான் நஷ்டம் வரும். நம்ம வியாபாரத்தைத் தக்கவைக்க புதுப் புதுப் பொருட்கள் வாங்கி வச்சாகணும். இப்போ வந்துட்டுப் போனவர் பொம்மைகள், ஃபேன்சி பொருட்களை மொத்த வியாபாரம் செய்கிறார். அவர்கிட்டேதான் நம்ம கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கப் போகிறேன். அதை நீயும் தெரிஞ்சுக்கிடணும்தான் அவரை நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன். நான் எதுக்காக உங்கிட்டே இதைச் சொல்றேன்னு உனக்குப் புரியுதா?” புன்சிரிப்போடு கேட்டார் குமாரின் அப்பா.

“”புரியுதுப்பா… வினோத் மாதிரி நானும் நல்லாப் படிக்கணும், அவனை மாதிரியே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளணும்னு சொல்றீங்க… அதுதானே?” தெளிவு பெற்றவனாகக் கேட்டான் குமார்.

“”சரியாப் புரிஞ்சுக்கிட்டே குமார்… நம்மோடு போட்டியிட யாருமே இல்லாமல் நாம் பெறுகின்ற வெற்றி, சாதனையே இல்லை. படிப்பு மட்டுமல்ல, விளையாட்டு, தொழில் போன்ற அனைத்திலும் ஆரோக்கியமான போட்டி இருக்கணும். இந்தப் போட்டி மிகுந்த உலகத்தில் ஒவ்வொரு துறையிலும் நமக்குப் போட்டியா யாராவது வந்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க தோல்வி அடையணும்னோ அல்லது விலகிப் போயிடணும்னோ நினைக்கிறது ஆரோக்கியமான சிந்தனை இல்லை… அவர்களை நாம் தூண்டுகோலாகக் கருதி, நம் திறமையை வளர்த்துக்கிட்டு முன்னேறிச் செல்லணும்… அதுதான் ஆரோக்கியமான சிந்தனை” அப்பா, முத்துவேலு சொல்லி முடித்தார்.

“”அப்பா, உங்க வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். வினோத் எனக்கு எதிரியில்லை. நண்பன்தான் என்பதைப் புரிஞ்சுக்கிட்டேன். இனி வினோத்தை நினைச்சு மனம் சோர்ந்து போகமாட்டேன். முன்பைவிட இன்னும் நல்லாப் படிச்சு அடுத்த தேர்வுகளில் அதிக மார்க் வாங்குவேன்…” உறுதியாகச் சொன்ன குமாரிடம் –

“”அப்போ, உன்னோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டையும் பேனாவையும் எடுத்துக்கிட்டு ஓடி வா… கையெழுத்துப் போட்டுத் தர்றேன்…” மகிழ்ச்சியோடு சொன்னார் முத்துவேலு.

– கீர்த்தி (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

3 thoughts on “வெற்றி ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *