எஃப்.எம். ரேடியோவும் செல்போனும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 9,156 
 

”என்னங்க…”

”என்ன, சொல்லு?”

டி.வியில் மூழ்கியிருந்த வாசுவின் குரலில் தெரிந்த எரிச்சல், மாலதியைச் சுட்டது. இருந்தாலும், ஆக வேண்டிய காரியத்தை மனதில்கொண்டு, மிகவும் குழைவாகப் பேசினாள் மாலதி.

”என்னங்க, எனக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுங்களேன்… ப்ளீஸ்!”

”உனக்கு எதுக்கு செல்போன்? வீட்லதான் லேண்ட்லைன் இருக்கில்ல… அப்புறம் எதுக்கு வெட்டியா செலவு பண்ணிக்கிட்டு?”

”என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் இருக்குங்க. எதுத்த வீட்டு பானுகிட்டகூட இருக்கு. இத்தனைக்கும் அவ புருஷன் சாதாரண பியூன்தானே?”

”ஏய்… எதையும் எதையும் முடிச்சுப் போடறே நீ? எதுத்த வீட்டுல லேண்ட்லைன் கிடையாது. வீட்டு போனையே செல்போனா வெச்சிருக்கான் அவன். உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வேலைக் குப் போறவங்க. அவங்க செல் போன் வெச்சிருக்கறதுல அர்த்தம் இருக்கு. உனக்கு எதுக்கு அந்த வெட்டி பந்தா?”

மாலதிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ‘நானும்தானே வேலைக்குப் போறேன்’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.

ஆமாம், மாலதியும் வேலைக்குப் போகிறாள்… வாசுவுக்குத் தெரியாமல்!

வாசு மாலதிக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்தின்போது மாலதி சென்னையில் ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். வாசு மதுரையில் ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் இருந்தான். திருமணத்துக்குப் பின்பு மாலதி வேலைக்குப் போகக் கூடாது என்பதை, ஒரு நிபந்தனையாகவே சொல்லிவிட்டான் வாசு. மால திக்கு வேலையை விட இஷ்டம் இல்லை.

”வேலை எப்ப வேணாலும் பாத்துக்கலாம்மா! இன்னிக்கு இவரை மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, நல்லா சம்பாதிக்கிற மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்மா! அதுவும் வரதட்சணையே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சீர்செனத்தியும் பெரிசா ஒண்ணும் கேக்கலே..!” என்ற அப்பாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, அரை மனதுடன் வேலையை விடச் சம்மதித்தாள் மாலதி.

வாசுவுக்கு சிகரெட், தண்ணி, பொம்பளை சகவாசம் என்று எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. தினமும் சாயந்திரம் ஆறரை மணிக்கு அலுவலகத்திலிருந்து நேரே வீடு திரும்பிவிடுவான். ஊதாரிச் செலவு செய்ய மாட்டான். வீட்டுக்குத் தேவையான பொருள்களைத் தாராளமாக வாங்கிக் கொடுப்பான். எல்லாம் இருந்தும், மாலதிக்கு போரடித்தது. டி.வி. பார்த்துக்கொண்டும், கதைப் புத்தகம் படித்துக்கொண்டும் ஒரு நாள் முழுதும் வீட்டில் கழிப்பது கஷ்டமாக இருந்தது.

”இப்படியே இருந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடுங்க. ஏதாவது சின்ன கம்பெனியில வேலைக்குப் போறேனே, ப்ளீஸ்..? வடக்கு வெளி வீதியில பெரிய ஆட்டோமொபைல்ஸ் கடையில அக்கவுன்டன்ட் வேலை ஒண்ணு காலியா இருக்காம். மாசம் ஐயாயிரம் ரூபா தராங்களாம். போகட்டுமா?” மாலதி கெஞ்சினாள்.

”வேணாம் மாலதி! வேலைக்குப் போற பொண்ணுங்களுக்கு இங்கே எந்தப் பாதுகாப்பும் கிடையாது. அந்த எண்ணத்தையே மறந்துடு!” தீர்மானமாகச் சொன்னான் வாசு.

ஒரு நாள் முழுவதும் அவர்களிடையே பேச்சுவார்த்தை இல்லை. மறுநாள், வாசு தானாகவே முன் வந்து சமாதானம் ஆனதோடு, போரடிக்காமல் இருக்க சில மாற்று வழிகளையும் சொன்னான்.

”உனக்குக் காலைலதானே போரடிக்குது? நான் ஆபீசுக்குப் போனப்பறம் பத்து, பத்தரை மணிக்குக் கிளம்பு. சென்ட்ரல் மார்க்கெட், புது மண்டபம், விளக்குத்தூணுன்னு தினம் ஒரு ஏரியாவா போய் ஷாப்பிங் பண்ணிட்டு வா! நான் காசு தரேன். ஆபீஸ்ல லோன் போட்டு, ஸ்கூட்டி வாங்கித் தரேன். அதுல நாலு தரம் வெளியே சுத்திட்டு வந்தா, போரடிக்காது!”

மாலதி சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள். புத்தம் புது ஸ்கூட்டி ப்ளஸ்ஸில் மதுரையின் நெரிசல் மிகுந்த வீதிகளைச் சுற்றி வருவது அவளுக்குச் சுகமாக இருந்தது. வேலை பார்க்கும் ஆசை சுத்தமாகப் போய்விட்டது. அந்த நிலையில்தான் அவளுக்கு அடுத்த கட்ட சோதனை தொடங்கியது.

அன்று மதியம், ஒரு மணி வாக்கில் புது மண்டபத்தில் ஒரு கடையில் காதணிகள் வாங்கிக்கொண்டு இருந்தாள் மாலதி.

”நீ… நீங்க… மாலதிதானே..?”

”ஹாய்… வெங்கட்! எப்படிடா இருக்கே? யப்பா..! பார்த்து எத்தனை வருஷமாச்சு? ஆமா, இங்கே என்னடா பண்ணிட்டுஇருக்கே?”

வெங்கட் அவளோடு சென்னையில் பல வருடம் ஒன்றாக வேலை பார்த்தவன். நண்பனாக இருந்தவன். வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், தன்னை அவன் உள்ளூரக் காதலித்தான் என்பதை மாலதி அறிந்திருந்தாள்.

”ஆல் இண்டியா ரேடியோ வேலையை விட்டுட்டேன், மாலதி! இப்போ மதுரைல ஃபைவ் ஸ்டார் எஃப்.எம்ல அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கேன்.”

”வாவ்..! நான் தினமும் அந்த சேனலைக் கேக்கறேனே! ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. பதினோரு மணிக்கு வர்ற ‘தோழிகளே’ புரொகிராம்தான் கொஞ்சம் சொதப்பல்!”

”இத… இத… இதத்தான் நான் எதிர்பார்த்தேன். நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லு. அந்தப் புரொகிராம் பண்ணிட்டிருக்கிற தேவியைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிட்டு, உங்கிட்ட அந்த புரொகிராமைக் கொடுத்துடறேன். பத்தரை மணிக்கு நீ ஸ்டேஷனுக்கு வந்தாப் போதும். மத்தியானம் ரெண்டு, ரெண்டரைக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம். பத்தாயிரம் ரூபாய் சம்பளம். என்ன சொல்றே?”

”ப்ச்… என்னால முடியாதுடா! அதுல நெறைய சிக்கல் இருக்கு.”

”என்ன… என்ன சிக்கல்?”

மாலதி தன் கணவரின் கடுமையான நிபந்தனை பற்றிச் சொன்னாள்.

பொறுமையாகக் கேட்டவன், ”இதுல சிக்கலே இல்லியே! அதான் உன் ஹஸ்பெண்ட், காலைல பத்து மணியிலேர்ந்து ரெண்டரை மணி வரைக்கும் ஊர் சுத்தலாம்னு உனக்கு பர்மிஷன் கொடுத்திருக்கார்ல? நீ பேசாம பத்தரை மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்துடு. உன் புரொகிராம் முடிஞ்சு ரெண்டரை மணிக்குள்ள வீட்டுக்குப் போயி டலாம்!”

”அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகுறது?”

”கண்டிப்பா தெரியாது, கவலைப்படாதே! இந்த புரொகிராமுக்காக உன் பேரை மாத்திடுவோம். ம்… உன் பேரு மாலதி இல்லே; ப்ரியா! அந்த லேடீஸ் புரொகிராம் பேரு ‘ப்ரியமுடன் ப்ரியா’. எப்படி?”

”எனக்கு என்னவோ பயமா இருக்கு!”

”ஒரு பயமும் இல்லே! முதல்ல சொல்ல வேணாம். சமயம் பார்த்து, அவர் நல்ல மூடுல இருக்கும்போது சொல்லிடு. அதுவரைக்கும் நீ சம்பாதிச்ச காசை செலவழிக்காம சேர்த்துவெச்சு, அவர் கையில கொடுத்தேன்னு வையி, அப்படியே உன்னைத் தூக்கித் தட்டாமாலை ஆடுவாரு, நீ வேணா பாரு!”

மறுநாள் நடந்த ஆடிஷனில் தேர்வாகி, மறு வாரமே ஃபைவ் ஸ்டார் எஃப்.எம்மின் ‘ப்ரியமுடன் ப்ரியா’ நிகழ்ச்சியில் வெளுத்துக்கட்டத் தொடங்கிவிட்டாள் மாலதி. வாசு யதேச்சையாக ரேடியோவைக் கேட்டால், அவள் குரலை அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகக் குரலைக் கொஞ்சம் கடுமையாக்கிக்கொண்டு, ஆம்பிளைக் குரலில் பேசினாள். அது இன்னும் கவர்ச்சியாக இருப்பதாக டைரக்டர் உள்பட அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

சில மாதம் ஓடியது. கணவனிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை நாள் மறைப்பது நியாயமில்லை என்று மாலதியின் மனசாட்சி ஒரு நாள் உறுத்தத் தொடங்கியது. கம்ப்யூட்டர் ஆபரேட்டரான சுகந்தி தன்னிடம் அசடு வழிவதைக்கூட வெள்ளந்தியாக வந்து தன்னிடம் சொல்லும் கணவனை ஏமாற்றுவது கடவுளுக்கேபொறுக் காது என்று தோன்றியது.

ஒரு நாள், இரவு உணவுக்குப் பின் வாசுவின் கையைப் பற்றிக்கொண்டு மென்மையாக, தான் வேலை பார்க்கும் விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள் மாலதி. கூடவே, தனது வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தாள். அந்தச் சமயம் பார்த்து வாசுவை வற்புறுத்தி ஓவர் டைம் வேலை செய்ய வைத்துவிட்டார்கள். தினமும் அவன் வேலை முடிந்து வீட்டுக்கு வர பத்து மணியாகிவிடுகிறது. ஞாயிற்றுக்கிழமைகூட இரவு ஏழு மணி வரை வேலை இருந்தது. பத்து மணிக்கு அலுத்துச் சலித்து வரும் கணவனிடம் உண்மையைச் சொல்ல, மாலதிக்குப் பயமாக இருந்தது. நிலைமை சீரானதும் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

அந்தச் சமயத்தில்தான் மாலதிக்கு அடுத்த சோதனை வந்தது. அவள் வேலை பார்த்த எஃப்.எம். ரேடியோவில், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அனைவரும் கண்டிப் பாக செல்போன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். செல்போன் வாங்க எட்டாயிரம் ரூபாய் சம்பள அட்வான்ஸாகத் தந்தார்கள். அது போக, மாதம் எண்ணூறு ரூபாய் அலவன்ஸ் வேறு கொடுப்பதாகச் சொன்னார்கள். சென்னையில் இருக்கும் கம்பெனியின் ஆலோசகர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடம் அடிக்கடி பேசி ஐடியா கொடுக்கப் போகிறார்களாம். அதற்காகத்தான் அந்த ஏற்பாடு! ஆனால்…

வாசு எப்போதும் மாலதியின் ஹேண்ட் பேக், அவளுடைய பீரோ, சூட்கேஸ் போன்றவற்றை எதற்காகவாவது நோண்டிக்கொண்டே இருப்பான். மாலதியிடம் செல்போன் இருப்பதைப் பார்த்துவிட்டால் தொலைந்தது… என்ன, எதற்கு என்று கேட்டுத் துளைத்தெடுத்துவிடுவான்.

”உன் ஹஸ்பெண்ட் வீட்டுல இருக்கிற நேரம் செல்போனை சைலன்ட்ல போட்டுக்கோ. அப்புறம் மிஸ்டு காலைப் பார்த்து, வெளியே போகும்போது பேசிடு!” என்றான் வெங்கட்.

”இல்ல, வெங்கட்! அது அவ்வளவு சுலபமில்லே! அவருக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்னை ஆயிடும்..!”

”அப்ப, உன் ஹஸ்பெண்ட்கிட்டயே உனக்கு ஒரு செல்போன் வேணும்னு கேட்டு வாங்கிக்கோ!”

அந்த ஐடியா அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால், என்ன கெஞ்சியும் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டான் வாசு.

மறுநாள் காலை, பத்து நிமிடங் கள் முன்னாலேயே ரேடியோ நிலையத்துக்குப் போனவள், வெங்கட்டைத் தேடிச் சென்றாள்.

”ஹாய் மால்ஸ்! என்ன, செல்போன் வாங்கியாச்சா..?”

”ப்ச்… உனக்கெதுக்கு செல்போன்னு கேட்கிறாருடா! நீதான் எப்படியாவது சமாளிக்கணும்” என்றாள்.

”சரி, நீ முதல்ல சேலரி அட்வான்ஸ் வவுச்சர்ல கையெழுத்துப் போட்டு, அந்தப் பணம் எட்டாயிரத்தை வாங்கிடு. நான் இப்பவே போய் நல்ல செல்போனும் ப்ரீபெய்டு கார்டும் வாங்கிட்டு வந்துடறேன்.”

”சரி, அதை எப்படி நான் வீட்டுக்குக் கொண்டுபோறது..?”

”அதுக்கு ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன். உன் புரொகிராம் முடிஞ்சவுடனே நீ என் ரூமுக்கு வந்துடு. உன் ஹஸ்பெண்டை அவரோட செல்லுல கூப்பிடறேன். ‘ஹலோ, மிஸ்டர் வாசுங்களா? நாங்க ஃபைவ் ஸ்டார் எஃப்.எம்லேர்ந்து பேசறோம். நாங்க வாரா வாரம் ஒரு செல்போன் நம்பரைத் தேர்ந்தெடுத்துப் பரிசு தரோம். இந்த வாரம் உங்க நம்பருக்குப் பரிசு விழுந்திருக்கு. நாங்க கேக்கற கேள்விக்கு நீங்க கரெக்டா பதில் சொல்லிட்டீங்கன்னா, ஒரு செல்போன் உங்களுக்குக் கிஃப்ட்னு சொல்லுவேன். அப்புறம், ரஜினி கடைசியா நடிச்ச படத்தின் பேரைச் சொல்லுங்கன்ற ரேஞ்சுல ஈஸியா ஒரு கேள்வி கேட்டு, அதுக்கு அவர் பதில் சொன்னதும், அவர்கிட்டேயே உங்க வீட்டு அட்ரஸை வாங்கிக்கிட்டு, அங்கே வந்து எஃப்.எம்லேர்ந்து கிஃப்ட் கொடுத்த மாதிரி சொல்லிக் கொடுத்துடறேன். அவர் குஷியா இருக்கிற நேரத்துல, ‘அங்கேயே நல்ல சம்பளத்துல ஒரு வேலையிருக்காம். போகலாமா?’னு கேளு; ஓ.கேன்னு சொல்லிடுவாரு. எப்படி ஐடியா?”

”சூப்பர்டா!” என்றாள் மாலதி.

அதன்படி, பகல் 12 மணிக்கு வாசுவை மொபைல் போனில் தொடர்புகொண்டார்கள். விஷயத்தைச் சொன்னதும் குஷியாகிவிட்டான் வாசு.

”ஏன் சார், இந்த புரொகிராம் ரேடியோவுல ரிலே ஆகுமா?” என்று கேட்டான்.

”ஆகாது சார், இது செல்போன் கம்பெனி ஸ்பான்சர் பண்ற புரொகிராம்!”

”அப்ப சரி, நீங்க கேள்வியைக் கேளுங்க!”

போனில் தன் கணவன் உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருந்ததை ஸ்பீக்கர் போனில் கேட்டுக்கொண்டு இருந்தாள் வெங்கட்டின் அருகில் இருந்த மாலதி.

”பகவான் கிருஷ்ணனின் சிநேகிதர் பெயரில், ரஜினியை வெச்சு ஒரு படம் தயாராகிட்டு இருக்கு. அந்தப் படத்தின் பேரைச் சொல்ல முடியுமா?”

”குசேலன்” என்றான் வாசு உடனே.

”சரியான பதில். கங்கிராஜுலேஷன்ஸ் சார், நீங்க புத்தம் புது செல்போன் வின் பண்ணியிருக்கீங்க. அவங்க ப்ரீபெய்ட் கார்டு ஒண்ணும் இலவசமா தராங்க. அதை எங்கே டெலிவரி கொடுக்கணும்னு சொன்னீங்கன்னா…”

மாலதி ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு இருக்க, ”அட்ரஸ் எழுதிக்குங்க சார்… மிஸ்.சுகந்தி, 10 கட்டபொம்மன் தெரு, நரிமேடு, மதுரை2” என்றான் வாசு.

– 28th மே 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *