விக்கிரமாதித்தனும் இந்திரனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,730 
 
 

ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.

இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான்.

இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர்.

http://img173.imageshack.us/img173/5…1f17913aw4.png

“”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன்.

“”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள்.

“”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி.

இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை.
இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.

“”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர்.

“”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன்.

“”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர்.

மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர்.

நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர்.

இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார்.

உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான்.

மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான்.

இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார்.

மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான்.

விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான்.

இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான்.

இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை.

உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது.

இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.

“”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன்.

போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை.

போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன்.

மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான்.

இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.

ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.

ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.

இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான்.

விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான்.

அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன.
ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.

இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான்.

ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *