மூன்று ரூபாய்ப் பாடம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,861 
 

‘‘அம்மா, போயிட்டு வரேன்…’’ ஸ்கூல் பையை முதுகில் மாட்டிக்கொண்டு தயாரானான் ரவி.

‘‘பஸ் பாஸ் வாங்கிக்கச் சொன்னால், கேட்காமல் தினமும் காசு கொடுத்தே டிக்கெட் வாங்கறியே” என்று புலம்பினார் அம்மா.

‘‘பாஸ் வாங்கினா குறிப்பிட்ட பஸ்ஸ§க்குக் காத்து நிக்கணும். இப்போ கிடைக்கிற பஸ்ஸிலே ஏறிப் போயிடலாம். சமயத்துல யார்கிட்டேயாவது லிஃப்ட் கேட்டுப் போனால் காசும் மிச்சம்’’ என்று தன் சாமர்த்தியத்தை சொன்னான் ரவி.

‘‘என்னமோ நீ ஒழுங்கா படிக்கணும். ஆமாம், ஏதோ நோட்டு வாங்கணும்னு சொன்னியே மறக்காம வாங்கிக்கோ’’ என்று பத்து ரூபாய் கொடுத்தார் அம்மா.

ரவி பஸ் ஸடாண்டுக்குள் நுழையவும் பள்ளிக்குச் செல்லும் பஸ் அங்கு வரவும் சரியாக இருந்தது. ‘ஸ்கூலுக்குப் பக்கத்து கடையில் நோட்டு வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்து பஸ்ஸில் ஏறினான். பஸ்ஸில் ஒரே கூட்டம். படியிலேயே நின்றான்.

கூட்டத்தில் முண்டியடித்து ரவியால் டிக்கெட் வாங்க முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் சரியான சில்லரையை மற்ற பயணிகளிடம் கொடுத்து டிக்கெட் வாங்குவான் ரவி. இதற்காகவே சில்லரையாக கொண்டு வருவான்.

அவன் யாரிடம் கொடுத்து டிக்கெட் வாங்க சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதற்குள் அவன் ஸ்கூல் அருகிலிருக்கும் பஸ் ஸ்டாப் வந்து விட்டது. ரவி இறங்கி விட்டான். யாரும் டிக்கெட் கேட்காததில் ரவிக்கு ரொம்ப சந்தோஷம்.

‘ஆஹா… இன்று பஸ் காசு மூணு ரூபாய் லாபம்’ என்று நடக்கத் தொடங்கினான்.

பள்ளியில் நுழைய முயன்றவன், ‘அடடா நோட்டு வாங்க வேண்டுமே…’ என்று நினைத்து, பக்கத் திலிருக்கும் கடையை நெருங்கினான்.

கடையிலும் ஒரே கூட்டம். கூட்டத்தின் நடுவே புகுந்து, ‘ரூல்டு நோட்டு அரை குயர்’ என்று சொல்லி பத்து ரூபாயை நீட்டினான். கடைக்காரர் நோட்டைக் கொடுக்க, அதற்குள் பள்ளி மணி அடித்தது. ரவி பள்ளியை நோக்கி ஓடினான்.

பிரேயர் முடிந்து வகுப்பு தொடங்கியவுடன்தான் ‘ஐயையோ… ஏழு ரூபாய் போக மீதி வாங்காமல் வந்துவிட்டோமே… சரி, சாப்பாட்டு நேரத்தில் கடைக்குப் போய் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டான்.

மதியம் சாப்பாட்டைக்கூட மறந்து கடையை நோக்கி ஓடினான்.

‘‘அண்ணா, காலையிலே அரை குயர் நோட்டு வாங்கும்போது, பத்து ரூபாய் குடுத்தேன். மீதி வாங்காமப் போய்ட்டேன்’’ என்றான்.

‘‘தம்பி, யாரை ஏமாத்தப் பார்க்கறே. நீ இங்கதான் நோட்டு வாங்கினேங்கிறது எனக்கு எப்படி தெரியும்?’’ என்றார் கடைக்காரர்.

‘இல்லைங்க. என் மீதி ரூபாயைக் கொடுங்க’ என்றான்.

‘‘படிக்கிற பையன் நீ, பாக்கி பணம் வாங்காமப் போவியா? இந்த வயசிலேயே இப்படிப் பொய் சொன்னா எப்படி உருப்படுவே’ என்று அறிவுரை களோடு டோஸ§ம் விட்டார் கடைக்காரர்.

ரவி எவ்வளவு சொல்லியும் கடைக்காரர் காசு தரவே இல்லை. ரவிக்கு அழுகையே வந்துவிட்டது.

அப்போதுதான் ரவிக்கு ஓர் எண்ணம் மின்னலடித்தது. ‘காலையில் நாம் பஸ்சில் டிக்கெட் வாங்காமல், கண்டக்டரை ஏமாற்றி விட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டோமே. இப்போ ஏமாந்தது நாம்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று எப்போதோ படித்தது நினைவில் வந்தது.

இனி ஒருபோதும் பொய் பேசுவதோ, பிறரை ஏமாற்றுவதோ கூடாது என்று நினைத்துக் கொண்டான் ரவி.

வெளியான தேதி: 16 ஆகஸ்ட் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *