மூக்கு உடைந்த குருவி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 13,063 
 
 

ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய மரத்துக்குக் கீழே சேவலும் கோழியும் வசித்து வந்தன. இரண்டும் அதிகாலை உணவு தேடிப் புறப்படும். மாலையில்தான் வீடு திரும்பும்.

அந்த மரக் கிளையில் ஒரு குருவியும் கூடி கட்டி இருந்தது. ஒருமுறை குருவி கூட்டில் சேர்த்து வைத்த தானியங்கள் கீழே விழுந்துவிட்டன. அவற்றைக் கோழியும் சேவலும் சாப்பிட்டுவிட்டன. தன்னுடைய தானியங்களைத் தன் அனுமதியின்றி எப்படிச் சாப்பிடலாம் என்று சண்டையிட்டது குருவி. கீழே விழுந்த தானியங்களை எடுக்க யார் அனுமதியும் தேவை இல்லை என்றது கோழி. அதிலிருந்து குருவிக்குக் கோழியைக் கண்டாலே பிடிக்காது.

நாட்கள் சென்றன. கோழி மீது தேவையின்றி வெறுப்பை வளர்த்துக்கொண்ட குருவி, பழி வாங்குவதற்குத் தகுந்த நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.

“முட்டைகள் சேர்ந்துவிட்டன. நாளை முதல் அடை காக்கப் போகிறேன்” என்றது கோழி.

“சரி, உனக்கு நானே உணவு கொண்டு வந்துவிடுகிறேன்?” என்றது சேவல்.

இரண்டும் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்த குருவியின் மனதில் ஒரு திட்டம் உருவானது.

சட்டென்று கோழியின் கூட்டுக்குள் நுழைந்தது. முட்டைகளைத் தன் அலகால் கொத்தியது. மீண்டும் தன் கூட்டுக்குள் வந்து அமர்ந்துகொண்டது.

மாலை வீடு திரும்பிய கோழி, உடைந்திருந்த முட்டைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது. அழுதுகொண்டே சேவலிடம் முறையிட்டது.

“நாம் இல்லாத நேரத்தில் யாரோ வந்து முட்டைகளை உடைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இப்படி ஒரு குணம் படைத்தவர்கள் யாரும் இல்லையே…”

“இது பாம்புகளின் வேலையாக இருக்குமோ?”

“இல்லை. பாம்புகள் முட்டைகளை முழுவதுமாக விழுங்கக்கூடியவை. இது வேற யாரோ. சரி, நாளை பார்க்கலாம்” என்று சமாதானம் சொன்னது சேவல்.

மறுநாள் காலை முட்டையிட்டு, வைக்கோலைப் போட்டு மூடி வைத்தது கோழி. பிறகு உணவு தேடி இரண்டும் புறப்பட்டன.

கோழியும் சேவலும் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட குருவி, கீழே வந்தது. கூட்டுக்குள் நுழைந்து, முட்டையை உடைத்துவிட்டுக் கிளம்பியது.

அன்று மாலை பதற்றத்துடன் கூட்டுக்குத் திரும்பியது கோழி. முட்டை உடைந்திருந்ததைக் கண்டு அதிரிச்சியடைந்தது. இதுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்றது கோழி. சேவல் நீண்ட நேரம் யோசித்து, ஒரு திட்டம் தீட்டியது.

“கவலைப்படாதே. இரண்டே நாட்களில் இந்தப் பொல்லாத வேலையைச் செய்பவரைப் பிடித்துவிடலாம்” என்றது.

“எப்படி?”

கோழியின் காதில் தன் திட்டத்தைச் சொன்னது சேவல். மகிழ்ச்சி அடைந்தது கோழி.

மறுநாள் உடைந்த முட்டை ஓடுகளைச் சேகரித்தது கோழி. களிமண்ணையும் கற்களையும் கொண்டு வந்தது சேவல்.

முட்டை ஓட்டுக்குள் கற்களையும் களிமண்ணையும் வைத்து இரண்டும் நிரப்பின. இரண்டு நாட்களில் களிமண் கெட்டியானது.

“முட்டைகள் தயார். இன்று இரை தேடிச் செல்வோம்” என்றது சேவல்.

இரண்டும் நிம்மதியாகக் கிளம்பின.

“கிளம்பிட்டாங்க… ரெண்டு நாளா முட்டை உடைக்காமல் தூக்கமே வரலை” என்று சொல்லிக்கொண்டே கோழி கூட்டுக்குள் சென்றது குருவி.

முட்டையைக் கண்டது. ஒரு கொத்துக் கொத்தியது. ஆனால், முட்டை விரிசல்கூட விடவில்லை. கொஞ்சம் வேகமாகக் கொத்தியது. அப்போதும் உடையவில்லை. தன் பலம் அனைத்தையும் சேர்த்துக் கொத்தியது.

இப்போது உடைந்தது முட்டையல்ல… குருவியின் மூக்கு.

வலியால் துடித்துக்கொண்டே வெளியேறிய குருவியை, சேவல் மடக்கியது.

“முட்டையிடுவதும் அவற்றை அடைகாப்பதும் எவ்வளவு கஷ்டம் என்று உனக்கே தெரியும். ஒரு பறவையாக இருந்துகொண்டு இப்படி ஒரு காரியத்தை எப்படிச் செய்யத் துணிந்தாய்?” என்று கோபமாகக் கேட்டது கோழி.

“ஐயையோ என்னை மன்னித்துவிடுங்கள். என் மூக்கு உடைந்துவிட்டது இனி நான் தவறு செய்ய மாட்டேன்” என்று அலறிக்கொண்டே வேறு இடம் நோக்கிப் பறந்தது குருவி.

– 26 Jul 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *