தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,655 
 
 

பூஞ்சோலை கிராமம். மலை மீது அமைந்திருந்தது. பழங்குடியினர் வசித்த அந்த கிராமத்தின் அருகிலேயே மிகப் பெரிய காடு ஒன்றும் இருந்தது.

அந்தக் காடுதான் பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது. காட்டில் கிடைக்கும் காய், கனி மற்றும் மூலிகைப் பொருள்களைத் தங்களது தேவைக்கு மட்டும் பயன்படுத்தி வந்தனர். எஞ்சிய பொருள்களை அருகிலிருந்த நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வர். அவர்களிடையே வணிக நோக்கம் இல்லாததால் காடு வளம் குன்றாமல் இருந்து வந்தது.

மனமாற்றம்பூஞ்சோலை கிராமவாசியான வீராசாமி நேர்மை தவறாதவர். காட்டில் கிடைத்த பல்வேறு மரங்களின் விதைகளைச் சேகரிப்பார். அவற்றைப் பயன்படுத்தி மரக் கன்றுகளை உற்பத்தி செய்வார். பின்னர் அக் கன்றுகளைத் தன் மிதிவண்டியில் வைத்து எடுத்துச் சென்று குறைந்த விலைக்கு விற்றுவிட்டுத் திரும்புவார்.

தனது வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் நகரத்தில் பெரும் செல்வந்தர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு வீராசாமிக்குக் கிடைத்தது. அந்தச் செல்வந்தரோ பேராசை மிக்கவர். வீராசாமி வைத்திருந்த மரக் கன்றுகளின் விலையை விசாரித்தார். பின்பு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்.

வீராசாமிக்கு மனதிலே மகிழ்ச்சி கூத்தாடியது. “எல்லா மரக்கன்றுகளையும் இவர் வாங்கிக் கொள்வார். இன்று நமக்கு அரிசிச் சாப்பாடு கிடைப்பது உறுதி, வரகு, சாமை என்று சாப்பிட்டு நாக்கு செத்துக் கிடக்கிறது’ என்று எண்ணியபடி காத்திருந்தார்.

செல்வந்தர், அவரை தலை முதல் பாதம் வரை பார்த்தார். அவரது கிழிந்த, வெளுத்துப் போன ஆடைகள் அவரது முகத்தைச் சுளிக்க வைத்தன.

“”தம்பி, ஒரு நாளைக்கு என்ன வருமானம் கிடைக்கும் உனக்கு?” என்று கேட்டார்.

“”நூறு ரூபாகிடைத்தால் அது எனக்குப் பெரிய வருமானம் அய்யா. ஆனால் பெரும்பாலும் அறுபதோ எழுபதோ கிடைத்துவிடும்” என்றார் வீராசாமி.

செல்வந்தர் மனதில் கணக்குப் போடத் தொடங்கினார். பிறகு, “”நான் சொல்வதை நீ கேட்டால் என்னைப் போல நீயும் பணக்காரனாகலாம். கார், பங்களா என்று அமோகமாக வாழலாம்” என்று ஆசை காட்டி வார்த்தைகளால் வலை விரித்தார்.

அவரது எண்ணம் புரியாததால் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார் வீராசாமி.

“”தம்பி, உன் உழைப்பை ஏன் இப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்? குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெற நான் உனக்கு ஒரு அருமையான யோசனை சொல்கிறேன்” என்றவாறு அவரது திட்டத்தைக் கூறத் தொடங்கினார்.

“”உனது கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டில் இருக்கக்கூடிய மரங்கள் விலைமதிப்பு மிக்கவை. அம் மரங்களில் சிலவற்றை நீ வெட்டி ரகசியமாக என்னிடம் கொண்டு வந்து சேர்த்தால், நான் உனக்கு கைநிறையப் பணம் தருவேன். அதைக் கொண்டு நீயும் என்னைப் போல உல்லாசமாக வாழலாம்!”

அவரது திட்டத்தைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் வீராசாமி.

“”அய்யா, மரத்தை வெட்டுவதா? என்ன வார்த்தை சொன்னீர்கள்? மனிதனைக் காக்கும் மரங்களை வெட்டுவதா?”

“”ஆமாம், மரத்தைத் தானே வெட்டச் சொன்னேன். இதிலென்ன தவறு கண்டுபிடித்து விட்டாய்?”

“”அய்யா, காட்டிலுள்ள மரங்கள் மிகவும் பழமையானவை. அவைதான் எங்களுக்கு உயிர். ஆமாம், அய்யா நீங்கள் கேட்பது மரங்களை மட்டுமல்ல எங்களது உயிரையும்தான்!”

“”எல்லா மரங்களையும் நான் கேட்கவில்லையே, சில மரங்களை வெட்டுவதால் என்ன ஆகிவிடப் போகிறது?”

“”மரங்களை வெட்டுவதால் எற்படும் விளைவுகளை நாம் சந்தித்துவிட்டோமே அய்யா! பருவ மழை பொய்த்துப் போகிறது. மக்கள் குடிநீருக்கே தவிக்கும் நிலை அல்லவா வந்துவிட்டது!”

“”நாம் வெட்டும் சில மரங்களால் பெரிய பாதிப்பு வந்து மழையே இல்லாமல் போய்விடுமா?”

“”இப்படியே அனைவரும் நினைத்துக் கொண்டு செயல்பட்டால் காடே அழிந்துவிடுமே!”

“”என்ன பெரிய காடு? எல்லா ஊர்களிலுமே இப்போது மரம் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டுக்கு வீடு மரம் இருக்கும்போது காடு எதற்கு?”

“”அய்யா நீங்கள் அறியாதது இல்லை. காட்டில் உள்ள சில மரங்கள் பறவைகளின் எச்சம் மூலம் மட்டுமே பெருக்கமடையும். ஆகையால் அவற்றையெல்லாம் நகரங்களில் வளர்க்க எண்ணுவது வீணான முயற்சி.”

பார்ப்பதற்குப் பாமரன் போல இருக்கும் இவன் பலவற்றையும் அறிந்து வைத்திருக்கிறானே என்று மனசுக்குள் எண்ணி வியந்தார் செல்வந்தர்.

வீராசாமி தொடர்ந்தார்-

“”20 ஆண்டுகள் வயதுள்ள ஒரு மரம், ஒரு வருடத்துக்கு 33 லட்ச ரூபாமதிப்புள்ள பயனை நமக்குத் தரும். ஆனால் சில ஆயிரங்களுக்காக ஒரு மரத்தை வெட்டுவது மதியுடைய செயலா?”

“”அப்படியானால் காலம் முழுவதும் நீ இப்படியே அல்லல் படப் போகிறாயா? சொகுசு வாழ்க்கை உனக்கு வேண்டாமா?” என்று மீண்டும் தூண்டில் போட்டார், செல்வந்தர்.

“”என் உழைப்பு உங்களுக்கு நான் படும் துன்பமாகத் தெரிகிறது. கடுமையாக நான் உழைப்பதால் மட்டுமே என்னால் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. நீங்கள் கூறும் சொகுசு வாழ்க்கை நோயையே தரும்.”

தமது வார்த்தைகள் வீராசாமியிடம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்து கொண்ட செல்வந்தருக்குக் கோபம் தலைக்கேறியது. அதனால் ரத்த அழுத்தம் உயர்ந்தது.

திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி அவரை நிலைகுலையச் செய்தது. நெஞ்சைப் பிடித்தபடி சாய்ந்தார். உடனே அவரைத் தாங்கிப் பிடித்தார் வீராசாமி.

பணியாளர்கள் ஓடிவந்து செல்வந்தருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். உயிர்காக்கும் மருந்து அருந்தியபிறகு பழைய நிலைக்குத் திரும்ப அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

மெல்ல மெல்ல தமது கண்களைத் திறந்து வீராசாமியைப் பார்த்தார். இப்பொழுதுதான் வீராசாமியின் திடகாத்திரமான உடல் அவரது கண்களுக்குப் புலப்பட்டது. இந்த ஆரோக்கியத்தைத் தந்தது அந்தக் காடு அல்லவா?

“”தம்பி, இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. உனது எளிய ஆடைகளைப் பார்த்து உன்னைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். பணமே பெரிதென்று இத்தனை காலம் வாழ்ந்துவிட்டேன். அதனால் கிடைத்த சொகுசு வாழ்க்கை தந்த பரிசுதான் இந்த நோய்.”

“”அய்யா, கவலைப்படாதீர்கள். எங்கள் கிராமத்துக்கு வந்து சில நாட்கள் தங்கியிருங்கள். இயற்கை சூழல் உங்கள் நோயின் தீவிரத்தைக் குறைக்கும்…”

“”கண்டிப்பாக வருகிறேன். காடுகளின் பயன்களை நானும் அறிந்திருக்கிறேன். அலையாத்திக் காடுகள் ஆழிப் பேரலைகளையே தடுத்திடும் என்பதை அறிவேன். அதுமட்டுமல்ல, நான் தெரிந்து கொண்ட செய்திகளை ஊர் ஊராகச் சென்று கூறப்போகிறேன். உன்னையும் என்னோடு அழைத்துச் சென்று வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரக் கன்றுகளை என் செலவில் நடப் போகிறேன்.”

வீராசாமியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. எதிர்கால சந்ததியினர் வீராசாமியின் பெயரை மறந்துவிடாமல் இருக்க அவர் நடப் போகும் மரக்கன்றுகள் உதவப் போகின்றன அல்லவா?

– குடந்தை ஜினா (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *