பேழைக்குள் ஒரு பூதம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 18,897 
 
 

பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள் யாராவது அவற்றைப் பிடித்து எதிலாவது அடைத்து விடுகிறார்கள்!

அப்படித்தான் இந்தக் கதையில் வரும் பூதத்தையும் எவரோ பிடித்து ஒரு பேழைக்குள் அடைத்துவிட்டிருந்தார்கள்… அது யாரென்பதுதான் தெரியவில்லை!

பேழைக்குள் ஒரு பூதம்

அடைத்து வைத்தவர் யார் என்று பூதத்திற்கே நினைவில் இல்லாதபோது நாம் என்ன செய்யமுடியும்?

ஆனால், பூதத்தைப் பேழையிலிருந்து திறந்து வெளியே விட்டவர் யார் என்பதுதான் நமக்குத் தெரியுமே, அது போதாதா?

அவர் ஒரு கடும் உழைப்பாளி. பெயர் மல்லன். எந்த வேலைக்கும் அஞ்ச மாட்டார். யாரையும் நம்பிக் கொண்டிராமல் அவரே நேரடியாகக் களத்தில் இறங்கி உழைப்பார்.

அப்படி இரவு பகல் பாராது உழைத்து ஈட்டிய பணத்தில் மல்லன் ஒரு பழங்கால வீட்டை வாங்கினார்.

அந்த வீட்டின் பரணில்தான் இருந்து அந்தப் பெட்டி. களிம்பு ஏறிக் கரும் பச்சை நிறத்தில் இருந்த அந்த வெண்கலப் பெட்டியின் இரும்புப் பூட்டு துருப்பிடித்துப் போய், திறக்க முடியாதவாறு இறுகிப் போயிருந்தது.
பூட்டை உடைத்தார் மல்லன். பெட்டியைத் திறந்தார். உள்ளே ஏதேதோ இலைச் சருகுகள் கிடந்தன. மூலிகை மணம் மூக்கைத் துளைத்தது. சருகுகளுக்குள்ளே மூழ்கிக் கிடந்தது அந்த மரப் பேழை. மூலிகை மருந்துகள்தாம் அந்த மரப்பேழையைப் பூச்சிகள் அரிக்காமல் இத்தனைக் காலமாய்க் காப்பாற்றியிருக்க வேண்டும்…

காட்டு மரத்தில் செய்யப்பட்டிருந்த அந்தப் பேழையிலே சிற்றுளியால் அழகான வேலைப்பாடுகளும் செதுக்கப்பட்டிருந்தன.

ஆப்பு அடித்து, இறுக மூடியிருந்த அந்தப் பேழையை ஆவல் மேலிட மல்லன் திறந்தபோது-

வழக்கம் போலவே – பல கதைகளில் படித்தது போல குபுகுபுவென்று வெண்புகை கிளம்பியது. வீடே அதிரும்படி அட்டகாசமாய்ச் சிரித்தபடி வெளியே வந்தது பூதம்!

கொட்டாவி விட்டுச் சோம்பல் முறித்த பூதம், வழக்கம் போல, “”ஐயா, நான் உங்கள் அடிமை! கட்டளையிடுங்கள்… நொடியில் நிறைவேற்றுகிறேன்…” என்று கூறி மல்லனை வணங்கி நின்றது.
மல்லன் மகிழ்ந்து போனார். தாம் இத்தனை நாள்களாய்ச் செய்துவந்த அத்தனை வேலைகளையும் பூதத்திடம் ஒப்படைத்தார். சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு நன்றாக ஓய்வெடுத்தார். மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டார்….நெடுநேரம் தூங்கி மகிழ்ந்தார்.

எல்லாம் முதலில் நன்றாகத்தான் இருந்தன. ஆனால் பாருங்கள், அவருக்கு விரைவிலேயே பசி எடுப்பது நின்று போனது. மந்தமாக உணர்ந்தார்… தொப்பை விழுந்து, இரண்டடி எடுத்து வைப்பதற்குள் மூச்சு முட்டியது. பேரே கேள்விப்பட்டிராத புதுமையான நோய்களெல்லாம் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தன. தளர்ந்து போய்விட்டார். தலைகூட நரைக்கத் தொடங்கியது.

பார்த்தார் மல்லன். காரணம்… அவருக்குப் புரிந்துபோய்விட்டது. பூதம் அயர்ந்த நேரமாகப் பார்த்துக் குபீரென்று பாய்ந்து, அமுக்கி, மறுபடியும் அதை அந்தப் பேழைக்குள்ளேயே அடைத்துவிட்டார்.

பேழையை இறுக மூடித் தலையைச் சுற்றிக் கடலிலே தூக்கி எறிந்தும் விட்டார்.

மறுபடியும் பழையபடியே வியர்வை சிந்தி, உழைக்கத் தொடங்கினார். விரைவிலேயே எல்லா நோய்களும் நீங்கிப் பழைய மல்லனும் ஆகிவிட்டார்.

அந்தப் பேழை, கடற்கரையோரமாக, எங்கேயாவது ஒதுங்கிக் கிடந்தால் அதை எடுத்து விடாதீர்கள்… அப்படியே எடுத்தாலும் திறந்து விடாதீர்கள்…

என்ன சரியா..?

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *