கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 2,567 
 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 5 | அத்தியாயம் 6 – 10 | அத்தியாயம் 11 – 15

6. அகப்பட்டுக்கொண்டான்! 

மறுநாள் பதினொரு மணி இருக்கும். முதலாளி யின் பக்கத்திலே இருந்த டெலிபோன் ‘ட்ரிங், ட்ரிங்’ என்று ஒலித்தது. உடனே முதலாளி டெலிபோன் ‘ரிஸீவ’ரைக் கையில் எடுத்தார். 

“ஹலோ, யார் பேசுகிறது?” என்று முதலாளி கேட்டார். 

போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுவதாகவும், மானேஜர் மதுரநாயகத்திடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டு மென்றும் பதில் வந்தது. 

உடனே முதலாளிமோகனரங்கம் ரிஸீவரை மேஜை மேல் வைத்துவிட்டு மானேஜர் அறைக்குள் ஓடினார். “மதுரநாயகம்! மதுரநாயகம்! உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ‘போன்’ வந்திருக்கிறது. சப்.இன்ஸ்பெக்டர் உங்களோடு பேசவேண்டுமாம். சீக்கிரம் வாருங்கள்” என்றார். 

உடனே மதுரநாயகம் முதலாளி அறைக்குள்ளே வேகமாக வந்தார் முதலாளியும் கூடவே வந்து அருகில் நின்றுகொண்டு அவர் பேசுவதைக் கவனித்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் மதுநாயகத்திடம் சொன்னது இதுதான். 

“திருட்டுப் போன உங்களுடைய தங்கமுடி போட்ட எவர்-ஷார்ப் பேனா கிடைத்துவிட்டது. திருடின பையன் பேனாவைக் கடையில் விற்கப் போகும்போது அகப்பட்டுக் கொண்டான். அவனுடைய வயது, உயரம், நிறம் எல்லாம் உங்கள் ரிப்போாட்டில் உள்ளபடியே இருக்கின்றன. பேனாவிலும், ‘சேகர் அன்பளிப்பு’ என்று எழுதியிருக்கிறது” என்று கூறினார். 

இதைக் கேட்டதும் மதுரநாயகம் “அட, நன்றி கேட்டவனே!” என்று பல்லைக் கடித்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் முன்பு கூறியதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு எதிர்பாராத தகவலையும் கூறினார்! “அந்தப் பையனிடம் ஒரு கைக் கடிகாரமும் இருக்கிறது. கேட்டால், ‘என் அப்பா வாங்கிக் கொடுத்தது’ என்று புளுகுகிறான். நீங்கள் உடனே வந்தால் எல்லாம் தெரிந்து விடும். பையன் ‘லாக்-அப்’பிலே இருக்கிறான்” என்று கூறினார். 

மதுரநாயகம் ஆச்சரியத்தோடு ரிஸீவரைக் கீழே வைத்துவிட்டு முதலாளி மோகனரங்கத்திடம் சப்-இன்ஸ்பெக்டர் கூறியதை அப்படியே அறிவித்தார். அதைக் கேட்டதும், “அடடே! நாலைந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதே என் கைக் கடிகாரம், அதுவாகத்தான் இருக்கவேண்டும். தூங்கும்போது யாரோ எடுத்துவிட்டார்களென்று ஒவ் வொருவராக நாம் சோதனை செய்யவில்லையா? அப்போது எங்கேயோ பத்திரமாக ஒளித்து வைத்திருந்து இப்போது எடுத்துப் போயிருக்கிறான். திருட்டுப் பயல்! இவனைச் சும்மா விடக்கூடாது. உடனே புறப்படுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்!” என்றார். 

“இப்படி அவன் மோசம் செய்வான் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை” என்று மிகுந்த வருத்தத்தோடு கூறினார் மதுரநாயகம். 

மானேஜர் மதுரநாயகத்தை அழைத்துக்கொண்டு. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டும். என்று துடிதுடித்தார் முதலாளி மோகனரங்கம். உடனே அவர் மேஜை மேலிருந்த மணியை அடித்தார். சத்தம் கேட்டதும் மற்றொரு ஆபீஸ் பையனான அழகிரி உள்ளே ஓடிவந்தான். 

“டேய் அழகிரி, உடனே போய் டிரைவரிடம் காரை எடுத்து வரச்சொல்” என்று முதலாளி மோகனரங்கம் உத்தரவு போட்டார். 

கார் வந்ததும், முதலாளி மோகனரங்கமும், மானேஜர் மதுரநாயகமும் ஏறிக்கொண்டனர். கார் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் புறப்பட்டது. போகும் போது ரமணியைப் பற்றி ஆத்திரம் ஆத்திரமாகப் பேசினார் முதலாளி. ஆனால், மதுரநாயகம் அவரைப் போல் ஆத்திரப்படவில்லை. மிகவும் வருத்தப்பட்டார் வேதனைப்பட்டார். 

“ஆறு மாதமாக மிகவும் அருமையாக இந்த ரமணியை வளர்த்தோமே! அவன் இப்படித் திருடனாக மாறிவிட்டானே! நான் செய்த உதவியெல்லாம் வீணாகி விட்டதே! நமது பேனாவை மட்டும் அவன் எடுத்திருந்தால்கூடப் பரவாயில்லை! முதலாளியின் கைக்கடிகாரத்தையும் அல்லவா எடுத்துவிட்டான்!” என்றுதான் அவர் வருத்தப்பட்டார்; வேதனைப் பட்டார்! 

போலீஸ் ஸ்டேஷனின் முன்னால் கார் வந்து நின்றது. உள்ளேயிருந்த முதலாளி மோகனரங்கமும், மானேஜர் மதுரநாயகமும் கீழே இறங்கினார்கள். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அறையை நோக்கி மிகவும் வேகமாகச் சென்றார் மதுரநாயகம். மோகனரங்கமும் வேகமாகத்தான் சென்றார். ஆனாலும், கனத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டியிருந்ததால், அவரால் மதுரநாயகத்தை ஒட்டிச் செல்ல முடியவில்லை. அவருக்குப் பின்னால்தான் போக முடிந்தது. 

வேகமாகச் சென்ற மதுரநாயகம் முன் பக்கமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் அறைக்குள்ளே நுழைந்தார். வழக்கம்போல் ‘வணக்கம்’ என்று சொல்லவில்லை. “எங்கே சார் அந்தப் பையன்!” என்றுதான் கேட்டார். 

ஏதோ எழுதிக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து பார்த்தார். 

மானேஜர் மதுரநாயகத்தைக் கண்டதும், “அட்டா நீங்களா! இப்படி உட்காருங்கள்” என்று கூறி எதிரே இருந்த நாற்காலியைச் சுட்டிக் காட்டினார், சப்-இன்ஸ் பெக்டர். 

“பரவாயில்லை. எங்கே அந்தப் பையன்? அவன் எங்கே இருக்கிறான்?” என்று மிகுந்த படபடப்போடு கேட்டார் மதுரநாயகம். 

“அவசரப் படுகிறீர்களே! அவன் எங்கே ஓடிப் போகிறான் ? இங்கேதான் பத்திரமாக அடைத்து வைத்திருக்கிறோம். இதோ கொண்டு வரச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பார்த்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். முதலாளி மோகனரங்கம் அப்போதுதான் உள்ளே வந்துகொண்டிருந்தார். 

“யாரது உள்ளே வருவது?” என்று சப்-இன்ஸ் பெக்டர் கேட்டார். இதற்கு முன்பு மோகனரங்கத்தை அவர் பார்த்ததில்லை. 

“மதுரநாயகம் வாசல் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். முதலாளி மோகனரங்கத்தைக் கண்டதும், ”அடடே, உள்ளே வாருங்கள். அவசரத்தில் நீங்களும் கூட வருகிறீர்கள் என்பதை மறந்தே போய்விட் டேன்” என்று கூறிப் பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார் மதுரநாயகம். 

மோகனரங்கம் நாற்காலியில் உட்கார்ந்ததும், “இவர்தான் எங்கள் சபா முதலாளி. கடிகாரம் இவருடையதுதான். நாலைந்து மாதங்களுக்கு முன்பு தொலைந்துவிட்டது” என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் கூறினார் மதுரநாயகம். 

“நாலைந்து மாதங்களாகி விட்டதா? ஆமாம், எப்படி அது தொலைந்தது?” என்று கேட்டார் சப்- இன்ஸ்பெக்டர். 

உடனே மோகனரங்கம், “நாங்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கணக்கு முடிப்பது வழக்கம். அன்றைக்குக் கணக்கு முடிக்கும் நாள். ஆதலால், இரவு நாடகக் கொட்டகையிலே நானும், மதுரநாயகமும் தங்க வேண்டியதாகிவிட்டது. இந்த ரமணிப் பயலை வீட்டுக்கு அனுப்பிச் சாப்பாடு எடுத்துவரச் சொன்னோம். சாப்பிட்டுவிட்டுக் கணக்குகளை யெல்லாம் பார்த்து முடிக்கும்போது நடு இரவாகிவிட்டது. பிறகு, என் கைக் கடிகாரத்தைக் கழற்றி மேஜை மேல் வைத்துவிட்டுத் தூங்கினேன். இந்தப் பயலும் அன்றைக்கு அங்குதான் படுத்திருந்தான். விடிந்து எழுந்து பார்த்தால், கடிகாரத்தைக் காணோம்! உடனே, எல்லோரையும் கேட்டுப் பார்த்தோம். எவருமே எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். கால் சட்டை, மேல் சட்டைப் பைகளை யெல்லாம் சோதனை செய்தோம். எடுத்தவுடனே எங்கேயோ கொண்டுபோய் இவன் ஒளித்து வைத்துவிட்டான் போலிருக்கிறது. இப போது அதை விற்றுப் பணமாக்கப் பார்த்திருக்கிறான். அன்றைக்கு எவ்வளவு யோக்கியன்போல் நடித்தான்! சுத்தத் திருட்டுப் பயல்!” என்று மிகுந்த ஆத்திரத் தோடு கூறினார். 

இதைக் கேட்டதும் சப்-இன்ஸ்பெக்டர், “அடேயப்பா, அவன் பலே எமகாதகப் பயலாக இருக்கிறானே! என்ன புளுகுப் புளுகுகிறான்! பேனாவும், கடிகாரமும் அவனுக்குச் சொந்தமாம்! அவன் திருடவே இல்லையாம். நாங்கள்தான் ஆளைத் தெரியாமல் பிடித் துக்கொண்டு வந்து விட்டோமாம்! அவன் உண்மையிலே பெரிய ஆள்தான். நீங்கள் கொடுத்த வயது, நிறம், உயரம் எல்லாம் சரியாயிருக்கின்றன. அவற்றை யெல்லாம் அவன் மறைக்கப் பார்த்தாலும் முடிகிற காரியமா? ஆனால், பெயரை மட்டும் சரியாகச் சொல்ல மாட்டேன் என்கிறான். அதனால் என்ன? இந்த ஏமாற்று வேலையெல்லாம் எங்களிடமா பலிக்கும்? திருட்டுப் பயல்களே இப்படித்தான்” என்றார். 

“ஆமாம் சார். அதிலும் இந்த மாதிரிக் கெட்டிக்காரத் திருடனுக்குப் புளுகக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? ஆனாலும், அவன் புளுகு எத்தனை நாளைக்கு நிலைக்கும் ? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’ என்பார்கள். இந்தப் பயல் புளுகு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியப் போகிறதே! கொண்டுவரச் எங்கே அந்த மோசக்காரப் பயல்? சொல்லுங்கள்; பார்ப்போம்” என்றார் முதலாளி மோகனரங்கம். 

“இதோ கொண்டுவரச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, “யாரது? 753, இங்கே வா” என்று கூப்பிட்டார் சப்-இன்ஸ்பெக்டர். 

உடனே ஒரு போலீஸ்காரர் அங்கே வந்து கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரு ‘சல்யூட்’ செய்தார். “உள்ளே போய் ‘லாக்-அப்’பில் இருக்கிறானே ஒரு பொடியன், அவனைக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர். 

போலீஸ்காரர் உள்ளே சென்றதும், சப்-இன்ஸ் பெக்டர் மேஜை அறையிலிருந்த ‘எவர்-ஷார்ப்’ பேனாவை வெளியே எடுத்தார். “இதுதானே உங்கள் பேனா?” என்று மதுரநாயகத்தைப் பார்த்துக் கேட்டார். 

மதுரநாயகம் அதைக் கையில் வாங்கிப்பார்த்தார். பார்த்ததும், “சந்தேகமில்லை. இது என்னுடையதேதான். மேலே தங்க மூடி, கீழ்ப் பாகம் கறுப்பு. ‘சேகர் அன்பளிப்பு’ என்றுகூட இதில் இருக்கிறதே! ஆறு மாதமாக என் வீட்டிலே தின்றுவிட்டு, எனக்கே வேட்டு வைக்கப் பார்த்திருக்கிறானே! அப்பப்பா! நினைத்தாலே வயிறு எரிகிறதே! பட்டுத் துணியைத் திருடினான்; பேனாவைத் திருடினான்; கடிகாரத்தையும் திருடி வைத்திருக்கிறான்! நாலைந்து மாதத்துக்கு முன்பிருந்தே அவனிடம் இந்தத் திருட்டுத் தன் ம் இருந்திருக்கிறதே! இன்னும் என்ன என்ன சாமான்களைத் திருடி வைத்திருக்கிறானோ! ஏன் சார், அவனிடம் இந்த இரண்டையும் தவிர வேறு ஏதாவது பொருள் இருந்ததா?” என்று சந்தேகத்தோடு கேட்டார். 

அதற்கு சப்- இன்ஸ்பெக்டர், ‘வேறு எதுவும் அவனிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளைச் எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பானோ? எதற்கும் அடித்து உதைத்துக் கேட்டால், உள்ளதைக் கக்கி விடுகிறான்” என்றார். 

“அந்தப் பயல் உங்களிடம் எப்படி அகப்பட்டான்?” என்று கேட்டார் மோகனரங்கம். 

“ஒரு மார்வாரி கடையில் அவன் அந்தப் பேனாவை விற்கப் பார்த்திருக்கிறான். அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் ‘லபக்’கென்று அவனைப் பிடித்துக் கொண்டான். பாவம், யாரிடத்திலே தப்பினாலும், போலீஸ்காரரிடமிருந்து தப்பமுடியாது என்பது அவனுக்குத் தெரியுமா! அகப்பட்டுக் கொண்டதும், அவன் ஏதேதோ சொல்லித் தப்பிக்கப் பார்த்திருக்கிறான். விட்டால்தானே போவதற்கு! உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவந்துவிட்டார்கள்!” என்று உற்சாகமாகக் கூறினார் சப்-இன்ஸ்பெக்டர். 

அப்போது மோகனரங்கம், “ஏன் சார், என் கடிகாரம் எங்கே? அதைக் காட்டவில்லையே!” என்று கேட்டார். 

“இதோ அதையும் தருகிறேன். சொந்தக் கடிகாரம் போல் அதை ஜம்பமாகக் கையிலே கட்டிக்கொண்டிருந்தான் அந்தப் பயல்!” என்று கூறிவிட்டு மேஜை அறைக்குள்ளே கையை விட்டார் சப்-இன்ஸ்பெக்டர். 

அதே சமயம்-உள்ளே சென்ற போலீஸ்காரர் அடைபட்டிருந்த பையனைப் பிடித்து வந்தார். அவனைப் பார்த்ததும், முதலாளி மோகனரங்கம், “ஆ! யார் இவன்? ரமணி இல்லையே!” என்று கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் உற்றுப் பார்த்தார். மதுரநாயகமும், “அடே, இவன் யார்?” என்று சந்தேகத்துடன் அவனைக் கூர்ந்து பார்த்தார். அதற்குள் அந்தப் பையன், “ஓ!’ என்று அலறிக் கொண்டே மதுரநாயகத்தின் அருகே ஓடினான்; அவரது கால்களை பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்! 

உடனே மதுரநாயகம், “ஆ! எப்படி இங்கே வந்தாய்?” என்ற திகிலுடன் கேட்டார். 


7. யார் அவன்? 

அந்தப் பையன் பதில் எதுவும் கூறவில்லை; தேம்பித் தேம்பி அழுதான். கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. அவனுடைய கண்ணீர் மதுரநாயகத்தின் கால்களை நனைத்துக் கொண்டிருந்தது. 

அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மதுரநாயக மும் கலங்கிப் போய்விட்டார். முதலாளி மோகனரங்கம், சப்-இன்ஸ்பெக்டர், 753-இவர்கள் எல்லோருக்கும் ஒன்றும் புரியவே இல்லை. சிறிது நேரம் அப்படியே அசை யாமல் திகைத்துப்போய் இருந்தார்கள். 

பிறகுதான் அந்தப் பையன் பேச ஆரம்பித்தான். மதுரநாயகத்தின் காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டே, “ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே ! என்னைத் திருடன் என்கிறார்களே!” என்று கண்ணீர் விட் டுக் கதறியபடி கூறினான். 

உடனே முதலாளி மோகனரங்கம், “டேய், நீ திருடன் இல்லாமலிருக்கலாம். ஆனால், கடிகாரமும் பேனாவும் உனக்கு எப்படிக் கிடைத்தன? அந்த ரமணிப் பயல்தானே உன்னிடம் தந்து விற்கச் சொன்னான்?” என்று கேட்டுவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “சார், அந்த ரமணிப் பயல் நீங்கள் சொன்ன மாதிரி பெரிய ஆளேதான். எங்கள் கடிகாரத்தையும் பேனா வையும் விற்பதற்கு ஒரு கூட்டாளி சேர்த்துவிட்டான். பார்த்தீர்களா?” என்றார். 

உடனே சப்-இன்ஸ்பெக்டர், “அப்படியானால் இவன் ரமணி இல்லையா! அவன் கூட்டாளிதானா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். 

“ஐயையோ! ரமணியா! அவன் யார்? சத்தியமாகச் சொல்லுகிறேன். அவனை எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று தேம்பிக் கொண்டே கூறினான் அந்தப் பையன். அவன் கண்கள் பொலபொலவென்று கண்ணீரைச் சொரிந்தன. 

இவ்வளவு நேரம் மௌனமாயிருந்த மதுரநாயகம் கீழே குனிந்து அவன் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். ‘ஆனந்தா, அழாதே! நீ திருச்சியிலிருந்து எப்படி வந்தாய்? பேனாவும் கடிகாரமும் உனக்கு எப்படிக் கிடைத்தன? ஒன்றும் புரியவே இல்லையே!’ என்று கேட்டார். 

இதைக் கேட்டதும் இந்நேரமாக ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், “என்ன மிஸ்டர் மதுரநாயகம், உங்களுக்கு இந்தப் பையனை முன்பே தெரியுமா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். 

“தெரியாமல் என்ன? இவன் என் சொந்த அக்காளுடைய பிள்ளையே தான்!” என்றார் மதுரநாயகம். 

“அடடே, உங்கள் அக்காள் மகனா?… ஆமாம். திருட்டுப் போன பேனாவும், கடிகாரமும் இவனிடம் எப்படி வந்து சேர்ந்தன?” என்று வியப்புடன் கேட்டார் மோகனரங்கம். 

”அதுதானே தெரியவில்லை!” என்று கூறிவிட்டு அந்தப் பையனைப் பார்த்து, “ஏண்டா ஆனந்தா! பேனா வையும் கடிகாரத்தையும் உனக்கு யார் கொடுத்தது? உண்மையை ஒளிக்காமல் சொல்” என்றார் மதுரநாயகம். 

“சொல்லுகிறேன், மாமா! கேளுங்கள். ஒரு வருஷத்துக்கு முன்பு நீங்கள் திருச்சிக்கு – எங்கள் வீட்டுக்கு வந்தபோது, தங்க மூடி போட்ட ‘எவர்-ஷார்ப்’ பேனா ஒன்றைக் கொண்டு வந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அதைப் பார்த்ததும், ‘எனக்கும் இதே போல் ஒரு பேனா வேண்டும்’ என்று நான் உங்களைக் கேட்டேன். அதற்கு நீங்கள், ‘இது நம் நாட்டில் கிடைக்காது. கிடைத்தாலும், யானை விலை, குதிரை விலையாக இருக்கும். இது சிங்கப்பூரில் இருந்தல்லவா வந்திருக்கிறது? என் பெரியப்பா பிள்ளை சேகர் வாங்கி எனக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னீர்கள். இதுவும் உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். நீங்கள் திருச்சியை விட்டுப் போனது முதல், எனக்கும் அந்த மாதிரி ஒரு பேனா வேண்டு மென்று தினமும் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். என் தொந்தரவு பொறுக்கமுடியாமல், அம்மா உடனே சேகர் மாமாவுக்கு ஒரு கடிதம் போட்டாள். கடிதம் போட்ட ஒரு மாதத்தில், அங்கிருந்து கப்பலில் வந்த ஒருவர் மூலம் சேகர் மாமா பேனாவை அனுப்பி வைத்தார். அது நீங்கள் வைத்திருந்தது போலவே இருந்தது. உங்கள் பேனாவின் மேல் எழுதி யிருந்தது போலவே அந்தப் பேனாவிலும் ‘சேகர் அன்பளிப்பு’ என்று எழுதியிருந்தது.”

ஆனந்தன் இதைக் கூறிக் கொண்டிருக்கும் போதே, முதலாளி மோகனரங்கம் குறுக்கிட்டு, “அப்படியானால் அந்தக் கடிகாரம் எப்படி வந்தது?” என்று கேட்டார். 

உடனே ஆனந்தன், “அதையும் சொல்லிவிடுகிறேன். நான் எட்டாம் வகுப்புப் பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சையில் தேறினால், ஒரு கைக்கடிகாரம் வாங்கித் தருவதாக என் அப்பா சொல்லியிருந்தார். கைக் கடிகாரத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டு மென்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையில் ஒரு குற்றம் செய்து விட்டேன். அன்று பரீட்சை முடிவை அறிவித்தார்கள். அந்த முடிவுப்படி நான் தேறவில்லை; தோல்வியே அடைந்தேன்! ஆனாலும் வீடு சென்றதும், அப்பாவிடம் உண்மையைக் கூறவில்லை. சிரித்துக்கொண்டே, ‘அப்பா! நான் ‘பாஸ்’ ஆகிவிட் டேன்’ என்று புளுகினேன். அப்பா அதை நம்பி விட்டார். உடனே என்னைக் கடைக்கு அழைத்துப் போய் எனக்குப் பிடித்த ஒரு கைக்கடிகாரத்தை வாங்கித் தந்தார். வீடு வந்ததும், என்னைப் பார்த்து ‘ஆனந்தா ! நீ தேர்ச்சி பெற்றதை ஆனந்தமாகக் கொண்டாட வேண்டுமல்லவா? அதற்காக இன்று இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ இப்போதே போய் உனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களிடம் சொல்லி வைத்துவிடு. இரவு அவர்களுடன் குதூகலமாகச் சாப்பிடலாம்’ என்றார். அதைக் கேட்டதும், எனக்குப் ‘பகீர்!’ என்றது. நண்பர்களை அழைத்து வந்தால், என் ‘குட்டு’ வெளிப் பட்டுவிடுமே!’ என்று பயந்தேன். அழைத்து வராவிட்டாலும், அப்பா விடமாட்டார். என்ன செய்வது? தர்ம சங்கடமான நிலையில் நான் சேர்த்து வைத்திருந்த ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டு அன்று இரவே ரயில் ஏறி இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்…” 

ஆனந்தன் முழுவதையும் கூறிமுடிக்கவில்லை. அதற்குள், முதலாளி மோகனரங்கம், “அப்படியானால், நீ வைத்திருந்தது என் கடிகாரம் இல்லையா!” என்று மிகுந்த ஏமாற்றத்தோடு கேட்டார். 

உடனே சப்- இன்ஸ்பெக்டர் மேஜை அறைக்குள்ளிருந்த கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தார். அதை எடுத்துப் பார்த்துவிட்டு, “ஊஹும், இது இல்லை. இது சைமன் வாட்ச் என்னுடையது ஹோமர் வாட்ச். இதைவிட விலை அதிகம். அது அந்த ரமணியிடம்தான் இருக்கும்” என்று சொன்னார் மோகனரங்கம். 

“சரி ஆனந்தா,இங்கே வந்ததும், நீ என்ன செய்தாய்? ஏன் என் வீட்டுக்கு வரவில்லை? விலாசம் தெரியாதா?” என்று கேட்டார் மதுரநாயகம். 

“வீட்டு விலாசம் தெரியாதபோனால் என்ன? நாடக சபா பெயர்தான் தெரியுமே! விசாரித்துக். கொண்டு வந்துவிட மாட்டேனா, மாமா? ஆனாலும் ரயிலை விட்டு இறங்கியதும், உங்களிடம் வர தயக்கமாகவே இருந்தது. நான் ஏன் வந்தேன் என்று நீங்கள் கேட்பீர்கள். நடந்ததைச் சொன்னால், நான் செய்தது உங்களுக்குப் பிடிக்காது. கோபித்துக்கொள்வீர்கள். ஏதேனும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றினாலும், ஒன்றிரண்டு நாட்களில் உண்மை தெரிந்து போகும். என்னைக் காணோ மென்று அப்பா உங்களுக் குத் தந்தி கொடுத்துவிட்டால், என் ஏமாற்று வேலை தெரிந்து போகும்! அப்போது நீங்கள் கோபித்துக் கொள்வதுடன் மறு ரயிலிலே என்னை ஊருக்குத். திருப்பி அனுப்பிவிடுவீர்கள். குஷியாக ஊரைச் சுற்றிப் பார்க்க முடியாது என்றுதான் வீட்டுக்கு வரவில்லை. ரயில் கட்டணம் போக மீதமிருந்த சில்லறை யும் இரண்டு நாளில் கரைந்துவிட்டது. மூன்றாவது நாள் – அதுதான் இன்றைக்குக் காலையிலே ‘பணத்துக்கு என்ன செய்வது?’ என்று யோசித்தேன். உடனே, என் கையிலிருந்த கடிகாரமும், பையிலிருந்த பேனாவும் நினைவுக்கு வந்தன. கடிகாரத்தை விற்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது அப்பா காசு கொடுத்து வாங்கித் தந்தது. அதனாலே அதை விற்று விட்டால், அப்பாவுக்கு விஷயம் தெரியும்போது அதிக மாக ஆத்திரப்படுவார். ஆனால், பேனா இலவசமாக வந்ததுதானே! அதனாலேதான் அதைக் கொண்டு போய் ஒரு மார்வாரி கடையிலே விற்கப் போனேன். அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரர் வந்து என்னைத் திருடன் என்று நினைத்துப் பிடித்துக் கொண்டார். நான் எவ்வளவோ சொல்லிப் சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்க வில்லை. நல்ல வேளை ; மாமா, நீங்களா வது இப்பொழுது வந்தீர்களே ! இல்லாதபோனால், ஜெயிலிலே கிடந்து செத்தே போயிருப்பேன்” என்று கண்கலங்கக் கூறினான் ஆனந்தன். 

“ஆனந்தா, அழாதே! கண்ணைத் துடை, உன் அப்பா எவ்வளவு நல்லவர்! அவரையே நீ ஏமாற்றப் பார்த்தாய். அதனால்தான் இந்தத் துன்பமெல்லாம். இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்று எச்சரித்தார் மதுரநாயகம். 

“மாமா, சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இனி இப்படிச் செய்யவே மாட்டேன்; செய்ய நினைக்கவும். மாட்டேன்” என்று உணர்ச்சியுடன் கூறினான் ஆனந்தன். 

பிறகு மதுரநாயகம் சப் – இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “சார், இவன் கூறியதெல்லாம் உண்மை தான். இவனைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். எல்லாம் அந்த ரமணியால் வந்த தொல்லைதான்!” என்று அலுத்துக்கொண்டார். 

போலீஸார் பிடித்துவந்த பையன் ரமணி இல்லை என்று தெரிந்ததும், முதலாளி மோகனரங்கம், “நல்ல வேடிக்கை! புலியைப் பிடிக்கப் புறப்பட்டுப் போனவன், எலியைப் பிடித்துக்கொண்டு இறுமாப் போடு வந்தானாம்! அந்தக் கதையாகத்தான் இருக்கிறது” என்று கூறிவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “சார், அந்த ரமணிப் பயலை விடக்கூடாது. அவன் மகா அயோக்கியன்! சுலபமாய்க் கிடைக்க மாட்டான்” என்றார். 

“உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் கூடிய சீக்கிரம் கொண்டுவந்து விடுவோம்” என்று தைரியம் சொன்னார் சப்-இன்ஸ் பெக்டர் 

பிறகு மதுரநாயகம் சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்த ஆனந்தனின் கைக்கடிகாரத்தையும், பேனாவையும் வாங்கிக் கொண்டு, “நாங்கள் வருகிறோம், சார். கொஞ்சம் கவனம் இருக்கட்டும்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். முதலாளி மோகனரங்கமும், ஆனந்தனும் பின்தொடர்ந்தனர். 

மூவரும் காரில் ஏறி நாடகக் கொட்டகைக்குச் சென்றார்கள். 

அங்கே சென்றதும் முதல் வேலையாகத் திருச்சியிலுள்ள அத்தானுக்கு மதுரநாயகம் ஒரு தந்தி கொடுத்தார். அதில், ‘ஆனந்தன் சென்னைக்கு வந்திருக்கிறான். இன்று இரவே திருப்பி அனுப்புகிறேன்’ என்று அறிவித்தார். அறிவித்தபடி, அன்று இரவு வண்டியிலேயே ஆனந்தனை ரயில் ஏற்றி அனுப்பிவைத்தார். 


8. கண்ணாடி அறை 

இரண்டு நாட்கள் எப்படியோ ஓடிவிட்டன. இன்னும் ரமணியைப் பற்றிய தகவலே இல்ன. மூன்றாவது நாள் காலை மணி பன்னிரண்டு இருக்கும். மானேஜர் மதுரநாயகம் நாடகசபாவை விட்டுப் புறப்பட்டார். நேராக எழும்பூரிலுள்ள போலீஸ் கமிஷனர் ஆபீஸிற்குச் சென்றார். 

என்ன விஷயம்? ரமணியைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா? அதெல்லாம் இல்லை. சபா விஷயமாகத்தான் அங்கு சென்றார். நாடக சபாவுக்கு ஒரு வருஷத்துக்குத்தான் முதலிலே ‘லைசென்ஸ்’ கொடுத்திருந்தார்கள். அதை இன்னொரு வருஷத்துக்குப் புதுப்பிக்க வேண்டுமென்று பத்து நாட்களுக்கு முன்பு மனுக் கொடுத்திருந்தார் மதுரநாயகம். போலீஸ், கமிஷனர் அநுமதி கொடுத்து விட்டாராம். ஆனாலும்- லைசென்ஸ் கைக்கு வரவில்லை அதை வாங்கிக் கொண்டு வரவே நேராகப் புறப்பட்டார் மதுரநாயகம். 

போலீஸ்- கமிஷனர் ஆபீஸின் வெளிவாயிலைத் தாண்டி உள்ளே சென்றார். சிறிது தூரம் சென்றதும், இடது பக்கமாக இருந்த அறை அவரது கவனத்தைக் கவர்ந்தது அது ஒரு கண்ணாடி அறை. அதன் உள்ளே சைக்கிள், கடிகாரம், குல்லாய், பூட்டு, புத்த கம் இப்படிப் பல சாமான்கள் இருந்தன. அறையின் வெளிப் பக்கத்தில் ஒரு போர்டு தொங்கிக் கொண்டி ருந்தது. அதில் காணாமல் போன சாமான்கள் அறை’ என்று எழுதப்பட்டிருந்தது. 

ஒருவர் வழியிலே ஒரு சாமானைத் தவறுதலாகப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது வேறெருவர் கைக்குக் கிடைக் கிறது. அவர் யோக்கியமானவர். சாமானுக்குச் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட நினைக்கிறார். ஆனால், சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை. 

உடனே பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து அதன் சொந்தக்காரரிடம் சேர்க்கச் சொல்லு கிறார். அங்கிருந்து அந்தச் சாமான் போலீஸ் கமிஷனர் ஆபீஸிற்கு வருகிறது. அதைக் கண்ணாடி அறையில் வைக்கிறார்கள்; சாமானுக்குச் சொந்தக்காரர் கண்ணில் படவேண்டு மென்றுதான் அப்படி வைக்கிறார்கள். இதே போல், திருடர்களிடமிருந்து பறி முதல் செய்த சாமான்களில் சில இங்கே வருவதும் உண்டு. திருட னுக்கு யாரிடமிருந்து எடுத்தோம் என்பது சரியாகத் தெரியாது. சாமானைப் பறிகொடுத்தவரும் போலீஸில் ‘ரிப்போர்ட்’ கொடுத்திருக்க மாட்டார். யாரிடம் சாமா னைக் கொடுப்பது? கொடுப்பதற்கு வழி இல்லாததால், அதையும் கண்ணாடி அறையில் வைத்துவிடுகிறார்கள். 

இப்படிப் பல சாமான்கள் வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடி அறையின் அருகே சென்று ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தார் மதுர நாயகம். இருந்தாற் போலிருந்து, “ஆ! அதோ இருக்கிறதே என் பேனா!” என்று அவர் வாய் விட்டுக் கூறிக்கொண்டே ஆவலோடு உற்றுப்பார்த்தார். 

ஆம், அது அவருடைய பேனாவேதான்! தங்க மூடி போட்டிருக்கிறது. அடிப்பாகம் கறுப்பாயிருக்கிறது. மேலே ‘சேகர் அன்பளிப்பு’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லை. அவருடையதேதான்! அனால், அது எப்படி அங்கே வந்தது? அதுதான் ம துரநாயகத்துக்குச் சிறிதும் புரியவே இல்லை. 

கண்ணாடி அறைக்குள் பேனாவைக் கண்டதும் முதலாளியின் கைக்கடிகாரமும் அங்கே இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார் மதுரநாயகம். அது அங்கே இல்லை. ‘நமது பேனா எப்படி இங்கு வந்தது? ஒரு வேளை ரமணியிடமிருந்து பிடுங்கியிருப்பார்களோ! அப்படியானால், அது ஏன் இங்கு வரவேண்டும்?’ என்றெல்லாம் யோசனை செய்தார். சரியாக விளங்க வில்லை. 

‘சரி, எதற்கும் உடனே போய் விசாரித்துப் பார்க்கலாம் என்று எண்ணித் திரும்பினார். அப்போது அங்கே ஒரு போலீஸ்காரர் வந்தார். ‘ஒரு விஷயம்’ என்று தமது ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டே அந்தப் போலீஸ்காரரின் அருகே சென்றார். 

“என்ன விஷயம்?” என்று கேட்டார் போலீஸ்காரர். 

“காணாமற்போன என்னுடைய பேனா ஒன்று இந்தக் கண்ணாடி அறையில் இருக்கிறது. இது சம்பந்தமாக நான் யாரைப் பார்க்கவேண்டும்?” என்று கேட்டார் மதுரநாயகம். 

உடனே அந்தப் போலீஸ்காரர் மதுரநாயகத்தை அழைத்துக்கொண்டு ஓர் அறைக்குள்ளே சென்றார். அங்கிருந்த அதிகாரியைக் காட்டி, “இவரிடம்தான் கேட்கவேண்டும்” என்றார். 

மதுரநாயகம் அந்த அதிகாரியின் முன்னால் போய் ”வணக்கம்’ என்றார். உடனே அவர் எதிரிலே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். மதுரநாயகம் உட்கார்ந்ததும், “என்ன விஷயமாக வந்தீர்கள்?” என்று அதிகாரி கேட்டார். 

“போன செவ்வாய்க்கிழமை சாயங்காலம் என் னுடைய “எவர்-ஷார்ப்’ பேனா காணாமல்போய்விட்டது. அது இப்போது இங்குள்ள கண்ணாடி அறையில், காணாமல்போன சாமான்களுடன் இருக்கிறது. அது எப்படி இங்கே வந்தது என்பது தெரியவில்லை. அதை நான் திரும்பப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?தயவு செய்து சொல்ல முடியுமா?” என்று கேட்டார் மதுரநாயகம். 

“எப்போது காணாமல் போனது, எங்கிருந்து காணாமல் போனது, அது உங்களுடையதுதான் என்பதற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா என்பதை யெல்லாம் விவரமாக எழுதிக் கொடுங்கள். நான் உடனே எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அந்தப் பேனா வந்ததோ, அங்கு உங்கள் மனுவை அனுப்புகிறேன். அவர்கள் விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்துத் தகவல் அனுப்புவார்கள். பிறகு உங்களுக்குக் கடிதம் அனுப்புவோம். நீங்கள் வந்து பேனாவைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார் அதிகாரி. 

“இப்போதே மனு எழுதித் தரலாமா?” என்றார். மதுரநாயகம். 

“எழுதிக் கொடுங்களேன். வெள்ளைக் காகிதம் வேண்டுமா?”

“வேண்டாம் சார், என்னிடம் லெட்டர் பேப்பர் இருக்கிறது. அதில் எழுதித் தருகிறேன்” என்று கூறி விட்டு, கையிலிருந்த தோல் பையைத் திறந்தார் மதுரநாயகம். உள்ளேயிருந்து அவருடைய பெயர், விலாசம் அச்சிட்ட கடிதக் காகிதத்தை எடுத்தார். அதில் பேனாவின் அடையாளம், அது எங்கிருந்து எப்போது காணாமல் போனது என்ற விவரம், திருடிப் போன ரமணியின் அங்க அடையாளங்கள் முதலிய வற்றைக் குறிப்பிட்டார். அத்துடன் அந்தப் பேனா சிங்கப்பூரிலிருந்து பார்சலில் வந்தது என்றும், சேகர் என்பவர் பேனாவைப் பற்றி எழுதிய கடிதம் தம்மிடம் இருக்கிறது என்றும் எழுதிக் கொடுத்தார். 

மதுரநாயகம் கொடுத்த மனுவை அதிகாரி ஒரு முறை படித்துப் பார்த்தார். பிறகு அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அதில் பேனா எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்தது என்ற விவரம் இருந்தது. உடனே அவர், “சரி, இதை நான் இன்றைக்கே அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறேன். நாளைக் காலையில் இது அங்கே போய்ச் சேரும். நாளை சாயங்காலம் நீங்கள் அங்கே போய்ப் பாருங்களேன். அந்தப் போலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? உங்கள் நாடகக் கொட்டகைக்குச் சிறிது தூரத்தில் ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கிறதே அதன் பக்கத்தில்தான் இருக்கிறது. நீங்கள் நேரில் போனால் இன்னும் ஏதாவது விவரம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்” என்றார். 

“சரி, சரி ! நான் வருகிரேன்” என்று கூறி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ‘லைசென்ஸ்’ விஷயத்தையும் முடித்துக்கொண்டு நேராக நாடக சபாவுக்கு வந்தார் மதுரநாயகம். 

சபாவுக்கு வந்ததும், கமிஷனர் ஆபீஸில் பேனாவைக் கண்டது, மனு எழுதிக் கொடுத்தது முதலிய விவரங்களை முதலாளியிடம் கூறினார். உடனே முதலாளி, “புரிந்து விட்டது, புரிந்துவிட்டது?” என்றார். “என்ன புரிந்துவிட்டது?” என்று வியப்புடன் கேட்டார் மதுரநாயகம். 

“நீங்கள் உங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ‘ரிப்போர்ட்’ கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ரமணிப் பயல் நம் நாடகக் கொட்டகைக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். இந்தப் பட்டணத்தில்தான் B, B-1, B-2, B-3, B-4, என்று ஆரம்பித்து K, K-1, K-2, K-3, K-4, வரை கிட்டத்தட்ட ஐம்பது போலீஸ் ஸ்டேஷன்கள் இருப்பதாகத் தெரிகிறதே! ரமணியை இந்தப் போலீஸ் ஸ்டேஷ்னுக்குப் பிடித்து வந்தபோது அவன் கையில் பேனா மட்டுமே இருந்திருக்க வேண்டும். கடிகாரத்தை அவன் எங்கோ ஒளித்து வைத்திருக்கவேண்டும் அல்லது விற்றிருக்க வேண்டும். இந்தப் பேனா யாருடையது?” என்று கேட்டிருப்பார்கள். அவன் உள்ளதைச் சொல்லியிருக்க மாட்டான். சொன்னால்தான் உடனே இங்கு கூட்டிக் கொண்டு வந்திருப்பார்களே! அப்போது அவனுக்கு எப்படி இருக்கும்? அவமானமாயிருக்குமல்லவா? அது மட்டுமா? நானும் என் கடிகாரத்தைப் பற்றிக் கேட்காமல் விடுவேனா? அதற்கும் பதில் சொல்லி ஆக வேண்டுமே? அதனால், பேனா எங்கோ வழியில் கிடந்தாக அவன் சரடு விட்டிருப்பான்”. 

முதலாளி மோகனரங்கம் இப்படிக் கூறிக்கொண் டிருக்கும் போதே, “அப்படியானால்…..கீழே கிடந்தாகக் கூறி என் பேனாவைப் போலீஸில் கொடுத்து விட்டு ரமணி தப்பித்துக்கொண்டிருப்பானோ!” என்றார் மதுரநாயகம். 

“யார் கண்டது? ஒருவேளை அவன்மீது சந்தேகப்பட்டு அடைத்துவைத்திருந்தாலும் இருக்கலாம். எதற்கும் நாளை சாயங்காலம் கட்டாயம் போய்ப் பார்த்து விடுங்கள். அந்த ரமணிப் பயல் அங்கே இருந்தால் என் கடிகாரத்தைப் பற்றியும் கேளுங்கள். மறந்து விடாதீர்கள்!” என்றார் மோகனரங்கம். 

மறுநாள் மாலை மணி நாலு இருக்கும். மானேஜர் மதுரநாயகம் புறப்பட்டுத் தபாலாபீஸ் அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கே சென்றதும், சப்-இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைக் கூறினார். 

“ஓஹோ! அது நீங்கள்தானா? ஆமாம், நீங்கள் சொல்வதற்கும், பேனாவைக் கொடுத்த ஆசாமி சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே!” என்று கூறினார் சப்- இன்ஸ்பெக்டர். 

“அது எப்படி சார் இருக்கும்? திருடிக்கொண்டு வந்தவன் உண்மையையா சொல்லுவான்?” 

“ஆத்திரப்படாதீர்கள்! இப்போது பேசாமல் வீட்டுக்குப் போங்கள். நாளைக் காலையில் நான் ஆள் அனுப்புகிறேன். அப்போது வந்தால் விவரமாகப் பேசி முடிவு செய்யலாம்” என்று கூறினார் சப்-இன்ஸ் பெக்டர். 

“ஏன் சார்,பேனாவைக் கொடுத்தது யார்? அவன் எங்கே இருக்கிறான்?” 

“அதெல்லாம் இப்போது சொல்லக்கூடாது. சொன்னால், உடனே நீங்கள் போய் அந்த ஆசாமியைப் பார்த்து, உங்களுக்குச் சாதகமாகப் பேசச் சொல்லி விட்டால் என்ன செய்வது?” என்று சற்றுக் கடுமையாகக் கூறினார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். 

“சரி சார், உங்கள் ஆள் வந்ததும் நாளைக்கு வருகிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு வந்தார் மதுரநாயகம். 

நாடக சபா முதலாளியும், கமலாதேவியும் விஷயத்தைக் கேட்டதும், “சரி, நாளை எப்படியும் அந்தப் பயல் அகப்பட்டுக்கொள்வான். சந்தேகமே இல்லை!” என்று முடிவு கட்டிவிட்டார்கள். 


9. நல்ல மறதி! 

மறுநாள் காலை மானேஜர் மதுரநாயகம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல் வருமா, வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தார். 

பிற்பகல் மணி ஒன்று இருக்கும். அப்போது சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவரைக் கண்டதும், “யார் வேண்டும்?” என்று கேட்டார் மதுரநாயகம். 

“நாடக சபா மானேஜரை சப்-இன்ஸ்பெக்டர் கையோடு அழைத்துவரச் சொன்னார்” என்றார் போலீஸ்காரர். 

“நான்தான் மானேஜர். காலையிலிருந்து எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். இதோ நேராக வருகிறேன்” என்றார் மதுரநாயகம். 

“சீக்கிரம் வாருங்கள். நான் முன்னாள் போய்ச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு சைக்கிளில் திரும்பிவிட்டார் போலீஸ்காரர். 

மதுரநாயகம் சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள்ளே நுழைந்ததும் அங்கே ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் உயரமாக, நல்ல சிவப்பாக இருந்தார். கதர் ஜிப்பா அணிந்திருந்தார். அவர் ஏதேனும் வேறு வேலையாக வந்திருப்பார் என்று நினைத்தார் மதுரநாயகம். ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் அவரைச் சுட்டிக் காட்டி, “என்ன மிஸ்டர் மதுரநாயகம், இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

மதுரநாயகம் அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பார்த்துவிட்டு, “அடிக்கடி பார்த்ததில்லை. சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது…” என்று இழுத்தார். 

உடனே சப்-இன்ஸ்பெக்டர் அந்த மனிதரிடம், மதுரநாயகத்தைக் காட்டி, “இவரை உங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார். 

“சந்தேகமில்லை சார்! அந்த மனிதர் இவரேதான்! கண்ணாடி அணிந்திருக்கிறார். சுருட்டை மயிர், அரை மீசை. சிவப்பு நிறம், வலது கையில் கிருஷ்ணன் பொம்மை போட்ட மோதிரம்-எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. நான் அன்றைக்கு எழுதிக் கொடுத்ததில்கூட இதை யெல்லாம் குறிப்பிட்டிருக்கிறேனே !” என்றார் கதர் ஜிப்பாக்காரர். 

உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜிப்பாக்காரரைப் பார்த்து, “ஏனய்யா! நீர் எழுதிக்கொடுத்திருப்பதெல்லாம் பொய்யாம்! உம்மைத் திருடன் என்றும், திருடன் சொல்லுவது உண்மையாக இருக்க முடியாதென்றும் இவர் சொல்லுகிறாரே!” என்றார் சிரித்துக்கொண்டே. 

உடனே அவர், “நானாவது, திருடவாவது! யார் திருடன்? இது நல்லதுக்கே காலமில்லை” என்று ஆத்திரத்தோடு கூறினார். 

“ஐயையோ! நான் உங்களைத் திருடன் என்று சொல்லவே இல்லையே!'” என்று கதறினார் மதுரநாயகம் 

அதைக் கேட்டதும், சப்-இன்ஸ்பெக்டர், “சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் போஸ்டாபீஸிற்கு அடிக்கடி போவதுண்டா?” என்று கேட்டார். 

“இல்லை. அவசரமான வேலை இருந்தால்தான போவேன்” என்று பதிலளித்தார் மதுரநாயகம். 

“சமீபத்தில் எப்போதாவது நீங்கள் போனது உண்டா?” 

“சென்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் என் அம்மாவுக்கு மணியார்டர் செய்யப் போனேன். ” 

“உடனே மணியார்டர் செய்துவிட்டுத் திரும்பி விட்டீர்களா? அல்லது காத்திருந்தீர்களா?’ 

“க்யூ வரிசையில் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தேன்”. 

“காத்திருந்து உங்கள் முறை வந்ததும் மணியார்டர் செய்தீர்கள். அப்படித்தானே ?” 

“இல்லை. மணியார்டர் செய்யப்போன சமயம் எங்கள் சபா முதலாளி அவசரமாக என்னை அழைத்து வரச் சொன்னதாக ஒரு பையன் ஓடிவந்து சொன்னான். உடனே நான் மணியார்டர் செய்யாமலே திரும்பி விட்டேன்.” 

“க்யூவில் நிற்கும்போது யாராவது உங்களிடம் பேனாக் கேட்டதுண்டா?” 

இதைக் கேட்டதும், மதுரநாயகம் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, “அடே! இப்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது, சார்! அப்போது ஒருவர் மணியார்டர் பாரம் பூர்த்தி செய்ய வேண்டுமென்று பேனாக் கேட்டார். கொடுத்தேன். திரும்பி வாங்குவதற்குள் அந்தப் பையன் வந்து கூப்பிட்டுவிட்டான்… !” என்று சொல்லிவிட்டு, மேலும் ஏதோ சொல்லப் போனார். 

அதற்குள் அந்த சப்-இன்ஸ்பெக்டர்,”யாரிடம் பேனாவைக் கொடுத்தீர்கள்? அந்த ஆள் பத்துப் பேருக்கு நடுவிலே வந்து நின்றால், அவரைக் கண்டு பிடிக்க முடியுமா?” என்று கேட்டார். 

உடனே மதுரநாயகம். “அவர் இவர்தானோ…” என்று சந்தேகத்துடன் பக்கத்திலிருந்த ஜிப்பாக்காரரை உற்றுப் பார்த்தார். பார்த்துவிட்டு, “சார் சார், இவராகத்தான் சார் இருக்கவேண்டும் !” என்றார் உறுதியான குரலில். 

“இவராகத்தான் இருக்க வேண்டுமா! நல்ல மனிதரய்யா நீங்கள்! பேனாவை இவரிடம் கொடுத்துவிட்டு எவனோ ஒரு சிறுவன் மீது பழி போட்டுவிட்டீர்களே! பாவம்!” என்று அனுதாபப்பட்டார் சப்-இன்ஸ்பெக்டர். 

”பாவம், சார்! அந்த ரமணி மிகமிக நல்லவன் என்று தெரிகிறது. எல்லாம் இந்த மறதியால் வந்த வினைதான்!” என்று வருத்தப்பட்டார், மதுரநாயகம். 

“ஆமாம். நான் பாரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். உங்களைக் காணோம்! தபாலாபீஸ் முழுவதும் தேடுதேடு என்று தேடினேன். பேனாவோ விலை உயர்ந்தது. சாதாரணப் பேனாவைக்கூடச் சிலர் தரமாட்டார்கள். நீங்கள் முன்பின் அறியாத என்னை நம்பி அந்த உயர்ந்த பேனாவைத் தந்தீர்கள். நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? பேனாவின் மேலே பெயர் இருக்கிறதா என்று பார்த்தேன். “சேகர் அன்பளிப்பு ” என்று மட்டுமே இருந்தது ‘யார் அந்த சேகர்?’ என்பது எனக்குத் தெரியுமா? யோசித்துப் பார்த்தேன். கடைசியில், இந்தப் போலீஸ் ஸ்டேஷ னில் கொண்டுவந்து கொடுத்து சொந்தக்காரரிடம் சேர்த்துவிடச் சொன்னேன். அப்போது, பேனா என் கைக்கு எப்படி வந்தது என்பதை விவரமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன்” என்றார் ஜிப்பாக்காரர். 

இதைக் கேட்டதும், “நீங்கள் மிகவும் தங்கமானவர்,சார். இல்லாத போனால், தங்கமூடி போட்ட என் பேனாவை இப்படிக் கொண்டு வந்து கொடுப்பீர்களா? வேறொருவராயிருந்தால், பேனா திரும்பியே வராது! ரமணிதான் திருடிவிட்டான் என்று சொல்லிக் கொண்டே இருப்போம். நல்ல காலம். உங்கள் பெயர் என்ன சார்?” என்று கேட்டார் மதுரநாயகம் 

அந்தக் கேள்விக்கு சப்.இன்ஸ்பெக்டரே பதில் சொன்னார். 

”இவர் பெயரா? தங்க மூடி போட்ட உங்கள் பேனாவைக் கொண்டுவந்து தந்த இவர் பெயரே தங்கவேலு தான்…! சரி, இப்போது உங்கள் சந்தேகமெல்லாம் தெளிவாகி விட்டதல்லவா ? அது மதுரநாயகத்தின் பேனாதான். ‘போஸ்டாபீஸில் தங்கவேலுவிடம் கொடுத்ததைத் திருப்பி வாங்காமல் அவசர வேலையாகப் போய் விட்டார். யாரிடம் கொடுப்பது என்று தெரியாததால், தங்கவேலு இங்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டார். மதுரநாயம், மறதியால் தமது வீட்டில் இருந்த ரமணி தான் திருடிவிட்டான் என்று நினைத்துப் போலீஸில் தகவல் கொடுத்தார். இப்போது, அவர் தவறை உணருகிறார். பேனா அவருடையதுதான். அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம்’-இதே போல் போலீஸ். கமிஷனர் ஆபீஸிற்கு எழுதி அனுப்பிவிடுகிறேன். மிஸ்டர் மதுரநாயகம், இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் உங்களுக்குக் கமிஷனர் ஆபீஸிலிருந்து கடிதம் வரும். அதை நேராக எடுத்துக் கொண்டு போய்க் காட்டினால் பேனாவைத் தருவார்கள். என்ன, சரிதானா?” என்று கேட்டார். 

“சரி சார், உங்களுக்கு அதிக சிரமம், மிஸ்டர் தங்கவேலுவுக்கும் அதிக சிரமம் கொடுத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்” என்று கூறிவிட்டு, அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார் மதுரநாயகம். 

அப்போது சரியாக மணி இரண்டரை. மதுரநாயகத்துக்கு நல்ல பசி. ஆனாலும், அவர் பசியைத் தீர்த்துக்கொள்ள நேராக வீடு செல்லவில்லை. வீட்டுக்குச் சிறிது தூரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை நோக்கியே வேகமாகச் சென்றார். ரமணி பேனாவைத் திருடிக் கொண்டு ஓடிப்போய்விட்டதாக பாஸ்கரனும் மதுரநாயகமும் அங்குதான் ‘ரிப்போர்ட்’ கொடுத்திருந்தார்கள். 

அந்தப் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், நேராக சப்.இன்ஸ்பெக்டரின் அறைக்குள்ளே, வேகமாகச் சென்றார். செல்லும்போதே,”சார்,சார் ! பேனா சம்பந்தமாக ஒரு ‘ரிப்போர்ட்’ கொடுத்திருந்தோமே…” என்று தமது பேச்சை ஆரம்பித்தார். 

உடனே அந்த சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, “ஆமாம், கவலையே வேண்டாம். சீக்கிரத்திலே அவன் சிண்டைப் பிடித்துக் கொண்டுவந்துவிடுவார்கள். நாலா பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார். 

“இல்லை சார், அந்த ‘ரிப்போர்ட்’டை வாபஸ் வாங்கத்தான் நான் ஓடோடி வருகிறேன்” என்றார், மதுரநாயகம். 

“ஏன் ? அந்தப் பையனே நேராக உங்களிடம் பேனாவைக் கொண்டுவந்து கொடுத்து சரணாகதி அடைந்து விட்டானோ!” என்று வியப்புடன் கேட்டார், சப்-இன்ஸ் பெக்டர். 

‘இல்லை சார்’ என்று ஆரம்பித்து நடந்ததைக் கூறினார், மதுரநாயகம். அதைக் கேட்ட சப். இன்ஸ் பெக்டர், “நல்ல வேடிக்கைதான்! உங்கள் பேச்சை நம்பி நாலு பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன். இப்போது நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே! ஒருவருக்கு மறதி இருக்கலாம். ஆனாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாமா மறதி!” என்று கொஞ்சம் கடிந்து கொண்டார். பிறகு “நல்ல காலம். உடனேயே நீங்கள் வந்து சொன்னீர்களே! இல்லாதபோனால் என் ஆட்கள் தேடு தேடன்று தேடிக்கொண்டே யிருப்பார்கள். வீண் அலைச்சலாகப் போயிருக்கும். சரி, இது சம்பந்தமாக இனி எந்தவித முயற்சியும் எடுக்க வேண்டாமென்று சொல்லிவிடுகிறேன்” என்றார். 

மதுரநாயகம் அங்கிருந்து புறப்படும் போது மணி மூன்று. வழக்கமாக இரண்டு மணிக்குச் சபாவுக்கு அவர் வந்துவிடுவார். அதனால், “சரி, இனிமேல் வீட்டுக்குப் போனால் நேரமாகிவிடும். பேசாமல் இப்படியே சபாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்” என்று அங்கிருந்தபடியே நாடக சபாவுக்கு வந்துவிட்டார். 

முதலாளியிடம் நடந்ததைச் சொன்னதும் அவர், “மனுஷனுக்கு மறதி இருக்கிறதுதான். ஆனாலும், இந்த மாதிரியா? நாலைந்து நாட்களாக உங்கள் வேலையைக் கெடுத்து, என் வேலையையும் கெடுத்து, போலீஸ் காரர் வேலையையும் நீங்கள் கெடுத்துவிட்டீர்களே!” என்று சிறிது கோபமாகப் பேசினார். 

“பாவம்,ரமணியைத் திருடன் என்று சந்தேகப் பட்டுவிட்டோமே!” என்று வருத்தத்தோடு கூறினார் மதுரநாயகம். 

“உங்கள் பேனாவைத் திருடாததால், அவன் பரம யோக்கியனாக்கும்! அன்றைக்குப் பட்டுத் துணியை எடுத்து ஒளித்து வைத்தானே. அது என்னவாம்?” 

மதுரநாயகம் பதில் எதுவும் கூற விரும்பவில்லை. பேசாமல் தமது அறைக்குச் சென்றுவிட்டார். 


10. ரகசியம் 

இரவு வீடு சென்றதும், “நாலு மணி வரை காத்திருந்தேன். ஏன் மத்தியானம் சாப்பிட வரவில்லை ?” என்று கேட்டாள் கமலாதேவி. நடந்ததை விவரமாகக் கூறினார் மதுரநாயகம். 

“என்ன, இது நிஜமா! ஒரு வேளை-நாம் போலீஸில் தகவல் கொடுத்தது ரமணிக்குத் தெரிந்து, அவனே அந்தத் தங்கவேலு என்கிறவரிடம் பேனாவைக் கொடுத்து இதுமாதிரி செய்யச் சொல்லி இருப்பானோ!…” என்றாள், கமலாதேவி.

“கமலா ஏன் இப்படி அர்த்தமில்லாமல் பேசுகிறாய்? நானே போஸ்டாபீஸில் தங்கவேலுவிடம் பேனாவைக் கொடுத்திருக்கும்போது, ரமணி எப்படி அதை எடுத்துக் கொண்டிருப்பான்?” 

“நீங்கள் இல்லாதபோது ரமணி இங்கே வந்ததால்தான் நான் சந்தேகப்பட்டேன். இங்கே வந்தவன் உங்களையும் பார்க்கவில்லை; என்னையும் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை; உடனே திரும்பிவிட்டான். ஏன் திரும்பினான் என்று யோசித்துப் பார்த்தேன். பேனாவைக் காணோம் என்றதும், அவன்தான் எடுத்திருப்பான் என்று நினைத்தேன். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் யாருக்கும் அப்படித்தானே நினைக்கத் தோன்றும் கிணற்றிலே போட்ட சாமானைக் குளத்திலே தேடுவது போல் போஸ்டாபீஸில் இரவல் கொடுத்த பேனாவை அறையிலிருந்து தொலைந்து போய்விட்டதாகச் சொன்னீர்களே! அது மட்டும் குற்றமில்லையா? சரி, இது தான் இப்படியாகிவிட்டது. அந்தப் பட்டுத் துணி விஷயம் என்னவாம்? எனக்கு என்னவோ அவன் நல்லவனாகத் தெரியவே இல்லை” என்று கூறினாள். 

“ஆமாம்! உனக்கு எப்பொழுதும் சந்தேகம்தான். உன்னைப் பார்த்துப் பார்த்து எனக்கும் சந்தேகப் பேய் பிடித்துவிட்டது. அதனால் வீண் அலைச்சலும், மனக் கஷ்டமும்தான் ஏற்பட்டுவிட்டன” என்றார் அவர். 

“ஆமாம்! இப்பொழுது அப்படித்தான் சொல்லு வீர்கள்! முதலில் நீங்களும் சேர்ந்துதானே திருட்டுப் பட்டம் அவனுக்குக் கட்டினீர்கள்? அப்பொழுதே உங்க ளுக்கு இந்த விவேகம் இருந்திருக்க வேண்டும்.” என்று கோபத்துடன் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டாள், கமலாதேவி. அவளுக்கு அதற்கு மேல் பேச விருப்பமில்லை. 

இரவு மணி பத்து இருக்கும். சாப்பிட்டுவிட்டுப் படுத்த மதுரநாயகத்துக்குத் தூக்கமே வரவில்லை.ரமணி யைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். “ரமணி எவ்வளவு நல்லவன்! அவன் என்னிடத்தில் எவ்வளவு அன்பாக, பிரியமாக இருந்தான்! எப்படிக் கண்யமாகப் பழகினான்! சொந்தத் தம்பிகூட அவ்வளவு மதிப்பும் மரியாதையும், பாசமும் வைத்திருக்க மாட்டானே! வீணாக அவனைத் திருடன் என்று கூறி முதலாளி விரட்டி விட்டாரே! இப்பொழுது அவன் எங்கே இருக்கிறானோ! வழக்கம் போல் இந்த மாதமும் சம்பளம் வாங்கியதும் என்னிடம் தந்து விட்டானே! இப்போது அவன் கையிலே தம்படி கூட இருக்காதே! என்ன பண்ணுவான்? எப்படிக் காலம் தள்ளுவான்?” என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தார். 

அவர் படும் அவதியைக் கண்டு கமலாதேவி, “மணி பத்துக்கு மேலாகிறது. இன்னும் தூங்காமல் இருக்கிறீர்களே; சொந்த மகனைப் பிரிந்தவர்கள் கூட இப்படி வேதனைப் படமாட்டார்களே!” என்று அங்கலாய்த்தாள், ஆனால், அவள் வார்த்தைகள் மதுரநாயகத்தின் காதில் ஏறினால்தானே? 

சிறிது நேரம் சென்றது. படுத்திருந்த அவர் திடீரென்று எழுந்து உட்கார்ந்தார். “ஐயோ ! ரமணி மிகவும் ரோஷக்காரனாயிற்றே ! இப்படி வீண் பழி சுமத்தியதை நினைத்து விபரீதமாக அவன் ஏதாவது செய்து கொண்டால்….?” என்று நினைத்துக் கலங்கினார் உடனே அவருடைய இரண்டு கைகளும் ஒன்று சேர்ந்தன.கூப்பிய கைகளுடன், “கடவுளே, ரமணி உயிரோடு இருக்க வேண்டும். விபரீதமாக எதுவும் நடந்துவிடக் கூடாது” என்று கண்களை மூடிப் பிரார்த்தித்தார். 

அதே சமயம்: யாரோ கதவு தட்டும் சத்தம் கேட் டது. “சார்! சார்!” என்ற குரலும் அதைத் தொடர்ந்து வந்தது. 

உடனே மதுரநாயகம் படுக்கையை விட்டு எழுந்தார். வேகமாகச் சென்று வெளிக் கதவைத் திறந்தார். அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. 

அவன் யார் என்பது இருட்டிலே சரியாகத் தெரியவில்லை. 

உடனே, “யாரது? ரமணியா!” என்று ஆவலாகக் கேட்டார், மதுரநாயகம். 

உடனே. “இல்லை, சார்! நான் கோவிந்தன். நாடகக் கொட்டகையில் வெற்றிலை பாக்குக்கடை வைத்திருக்கிறாரே பரமசிவம், அவருடைய பிள்ளை” என்றான். அந்தச் சிறுவன். 

இந்தப் பதிலைக் கேட்டதும், மதுரநாயகத்துக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனாலும், சமாளித்துக் கொண்டு, “அடடே, கோவிந்தனா! என்னப்பா விஷயம்? இந்த நேரத்தில் எங்கு வந்தாய் ?” என்று கேட்டார் 

“உங்களிடம்தான் சார் ரமணியைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்..” 

“என்ன ! ரமணியைப் பற்றியா? என்ன சொல்ல வேண்டும்? சீக்கிரம் சொல்லு, தம்பி!” 

“ரகசியமான விஷயம், சார்! யாருக்கும் தெரியக்கூடாது!” 

“அப்படியானால், உள்ளே வா. அறைக்குள்ளிருந்து பேசுவோம்” என்று கூறி, கோவிந்தனைத் தம்முடைய அறைக்குள்ளே அழைத்துச் சென்றார், மதுர நாயகம். 

உள்ளே சென்றதும், அந்த ரகசியம் என்ன? உடனே சொல்; கேட்கலாம்” என்று மதுரநாயகம் மிகவும் ஆவலோடு கேட்டார். 

“சொல்கிறேன். ஆனால், நான் சொன்னதாக மட்டும் வெளியிலே சொல்லி விடாதீர்கள்!” என்று பீடிகை போட்டுக்கொண்டு கோவிந்தன் சொல்ல ஆரம்பித்தான்: 

இன்று நாடகம் முடிந்த பிறகு மேக் – அப் மேன்’ ஸ்ரீகண்டன் இருக்கிறாரே அவரும், திரை இழுக்கிற துரைசாமியும் எங்கள் கடைக்கு வந்தார்கள். ஸ்ரீகண்டன் ஒரு சீப்பு வாழைப் பழத்தை வாங்கித் துரைசாமியிடம் கொடுத்து, ‘துரைசாமி, இப்போது இதை வைத்துக் கொள். வேறொரு சந்தர்ப்பத்திலே நிறையத் தருகிறேன்’ என்றார். உடனே துரைசாமி ‘எனக்கு இது எதற்கு? ஐந்து ரூபாய் தருவதாகச் சொல்லி, ஒரு சீப்பு வாழைப் பழத்தோடே சரிக்கட்டப் பார்க்கிறாய!’ என்று சிறிது கோபமாகக் கூறிவிட்டு ஸ்ரீகண்டனிடமே வாழைப் பழச் சீப்பைத் திருப்பிக் கொடுத்தார். ஸ்ரீகண்டன் விடவில்லை. ஏதேதோ சமாதானம் சொன்னார். அவர்கள் பேச்சு சுவராஸ்யத்தில் நான் இருந்ததைக்கூடக் கவனிக்கவில்லை. ஆனால், நான் மட்டும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாதபடி கவனித்துக்கொண்டு தான் இருந்தேன். அவர்கள் பேசியதிலிருந்து நான் என்ன தெரிந்து கொண்டேன் என்பதைச் சொல்லி விட்டாலே, உங்களுக்கு எல்லாம் புரிந்து விடும் ! 

மேக்-அப் மேன் ஸ்ரீகண்டனுக்கு ஒரு மைத்துனன் இருக்கிறானாம். பத்தாவது வரை படித்திருக்கிறானாம். அவன் ரமணி வேலைக்கு வருவதற்கு ஸ்ரீகண்டன் முதலாளியைப் பார்த்து மைத்துனனுக்கு ஒரு வேலை வேண்டுமென்று சொன் னாராம். முதலாளி, ‘ஆபீஸ் பையன் ஞானமுத்து ஒரு வார லீவில் ஊருக்குப் போனவன் இரண்டு வாரமாகியும் இன்னும் வரவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்க்கிறேன். அவன் வராமல் போனால், உன் மைத்துனனுக்கு அந்த வேலையைக் கொடுத்து விடலாம்’ என்று சொன்னாராம். அவர் அப்படிச் சொன்ன மறு நாளே நீங்கள் ரமணியைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்துவிட்டீர்களாம். இது ஸ்ரீகண்டனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதாம். இப்போது, பத்துப் பதினைந்து நாட் களுக்கு முன்பு, திரும்பவும் மைத்துனனுக்கு வேலை வேண்டுமென்று ஸ்ரீகண்டன் கேட்டாராம். ‘இப்போது வேலை காலி இல்லை. காலி ஏற்பட்டால் கட்டாயம் வேலை தருகிறேன்’ என்று முதலாளி சொன்னா ராம். ‘காலி ஏற்பட என்ன வழி?’ என்று ஸ்ரீகண்டன் யோசித்திருக்கிறார். ஒரு குருட்டு வழி தோன்றியிருக்கிறது. அதைத் துரைசாமியிடம் சொல்லி, ‘உனக்கு ஐந்து ரூபாய் தருகிறேன். வேலையை ரகசியமாக முடித்துவிடு’ என்று ஆசை காட்டியிருக்கிறார். துரைசாமி அவர் சொன்னபடி அறைக்குள்ளிருந்த பட்டுத் துணியைச் சாப்பாட்டு நேரம் பார்த்து ஜன்னல் வழியாக எடுத்திருக்கிறார்; அதை ‘டிக்கெட்’ அறைக்குள் ஒளித்து வைத்துவிட்டு, நீங்கள் தபாலாபீஸ் போன சமயம் பார்த்து, ‘ரமணிதான் எடுத்து ஒளித்து வைத்திருக்கிறான்!’ என்று கதை கட்டி விட்டிருக்கிறார். உடனே முதலாளி அவர் பேச்சை நம்பிவிடுவார்; ரமணியைப் பிடித்து வெளியே அனுப்பிவிடுவார் என்று நினைத்தே அப்படிச் செய்தார்கள். அவர்கள் நினைத்தபடிதான் நடந்தது. ஆனாலும், முக்கியமானது எதுவோ அது மட்டும் நடக்கவில்லை!’- இப்படிக் கூறிச் சிறிது நேரம் நிறுத்தினான் கோவிந்தன். இதுவரை மூச்சுவிடாமல் பேசினானே, கொஞ்சம் ஓய்வு வேண்டாமா அவனுக்கு? 

உடனே மதுரநாயகம், “அடடே, விஷயம் இப்படியா! இதிலும் ரமணிக்கு அநியாயம் செய்து விட்டோமே!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, “ஆமாம், முக்கியமான ஒரு காரியம் மட்டும் நடக்கவில்லை என்றாயே, அது என்ன?” என்று கேட்டார். 

“அதையும் சொல்லாமல் விடுவேனா? ரமணியை எந்த நேரத்தில் முதலாளி வெளியே பிடித்துத் தள்ளினாரோ, அதே நேரத்தில் ஸ்ரீகண்டனின் மைத்துனன் மாமரத்திலிருந்து கீழே விழுந்து வலது கை முறிந்துவிட்டதாம். அதனால் அவனுக்கு வேலை கொடுக்க முடியவில்லை!” என்றான் கோவந்தன். 

“கோவிந்தா, நீ சிறு பையனாக இருந்தாலும், பலே கெட்டிக்காரனாக இருக்கிறாயே! நீ இதை உடனே வந்து சொன்னது மிகவும் நல்லதாகப் போய்விட்டது” என்றார் மதுரநாயகம். 

“சொல்லாமல் படுத்திருந்தால் எனக்குத் தூக்கமே வந்திருக்காது சார்! ரமணி தங்கமானவன் சார்! அவன் இல்லாதது என்னவோபோல் இருக்கிறது.”

“சரி கோவிந்தா, உனக்கு நேரமாகிறது. வீட்டுக்குப் போ.” 

“இதோ போகிறேன் சார்! நான் சொன்னதாக மட்டும் ஸ்ரீகண்டனுக்கும் துரைசாமிக்கும் தெரிய வேண்டாம்!” என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான் கோவிந்தன். 

மறுநாள் பொழுது விடிந்தது. மதுரநாயகம் விரைந்து எழுந்தார். முகத்தைக் கழுவிக்கொண்டு நேராக முதலாளி மோகனரங்கத்தின் வீட்டுக்குச் சென்றார். அவரைப் பார்த்துக் கோவிந்தன் சொன்னதை அப்படியே சொன்னார். சொன்னவுடனே முதலாளி யோசனையில் இறங்கிவிட்டார். 

“என்ன, யோசிக்கிறீர்களே! ரமணியைச் சேர்ப்பதற்கு முன்னால் ஸ்ரீகண்டன் தன் மைத்துனனைப் பற்றிச் சொன்னது உண்மைதானா?” என்று மதுர நாயகம் கேட்டார். 

“உண்மைதான்.” 

“திரும்பவும் பத்துப் பதினைந்து தினங்களுக்கு முன்பு, மைத்துனன் வேலை விஷயமாக அவன் உங்களைக் கேட்டானா?” என்று வினவினார். 

“ஆமாம். அதுவும் உண்மைதான்”. 

“அப்படியானால் கோவிந்தன் சொன்னது எல்லாமே உண்மையாகத்தான் இருக்கும்” என்றார். 

“மதுரநாயகம்! இப்போது நீங்கள் வீட்டுக்குப் போங்கள். சபாவுக்கு வந்ததும் இதை விசாரிக்கிறேன்” என்றார் முதலாளி. 

“சரி சார்! ஆனால் பக்குவமாக விசாரிக்க வேண்டும். கோவிந்தன் பெயரை மட்டும் நீங்கள் வெளிப்படுத்திவிடக் கூடாது” என்று கூறிவிட்டு மதுர நாயகம் வீடு திரும்பினார். 

சபாவுக்கு வந்ததும், முதல் வேலையாக ஸ்ரீகண்டனை அழைத்து வரச் சொன்னார் முதலாளி. ஸ்ரீகண்டனுக்கு உள்ளூர நடுக்கம் ! ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முதலாளியின் எதிரே வந்து நின்றான். முதலாளி சிரித்துக்கொண்டே கேட்டார்: “என்ன ஸ்ரீகண்டன், உன் வீட்டில் யாரோ ஒரு பையன் இருப்பதாகச் சொன்னாயே. ” 

“ஆமாம், சார்! அவன் என் மைத்துனன்தான்!”

“ஓஹோ! அந்தப்புரத்துச் சொந்தம்! அப்படித் தானே?” 

“ஆமாம், சார்!” 

“ரமணிக்குப் பதில் இப்போது ஒரு பையன் தேவை. உடனே போய் அவனை அழைத்து வருகிறாயா” 

“இன்றைக்கே அழைத்து வரவேண்டுமா? அல்லது….”

“ஏன், அவன் ஊரில் இல்லையா?” 

“இருக்கிறான்; ஆனாலும், அவன் வலது கை முறிந்து போயிருக்கிறது. மாமரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான். குணமாகக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகுமாம்!” 

“அடடே! எப்போது அவன் கை முறிந்தது?”

“போன செவ்வாய்க்கிழமை சார்!” 

“பாவம், அவனுக்கு வேலை கொடுக்கலாமென்று நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே!’ 

“எல்லாம் என் துர் அதிர்ஷ்டம் சார்! இப்போது அவன் கை முறியாதிருந்தால், அவனுக்கு வேலை கிடைத்திருக்கும்!” 

“ஆமாம். அவனுக்கும் வேலை கிடைத்திருக்கும். துரைசாமிக்கும் சுளையாக ஐந்து ரூபாய் கிடைத்திருக்கும். ஒரு சீப்பு வாழைப்பழத்தோடு போயிருக்காது!” 

இதைக் கேட்டதும், ஸ்ரீகண்டனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன சார் இது! ஏதோ ஐந்து ரூபாய் என்கிறீர்கள்; வாழைப் பழம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே!” 

“புரியவே இல்லையா! டேய், யாரிடம் கதை அளக்கிறாய்? எல்லாம் எனக்குத் தெரியும். ரமணியைத் துரத்திவிட்டு, அவனுக்குப் பதில் உன் மைத்துனனைச் சேர்த்துவிட நீயும் துரைசாமியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி எனக்கா தெரியாது? ஸ்ரீகண்டா, உண்மையை ஒளிக்காதே! நடந்தது முழுவதையும் அப்படி அப்படியே துரைசாமி கூறிவிட்டான்!” 

“என்ன! துரைசாமி கூறிவிட்டான ! அட பாவிப் பயலே, சொன்னபடி ஐந்து ரூபாய் தரவில்லையே என்ற ஆத்திரமா உனக்கு?” என்று அலறினான் ஸ்ரீகண்டன். 

துரைசாமி உண்மையைச் சொல்லிவிட்டதாக முதலாளி சொன்னாரே, அது உண்மையல்ல! அப்படிச் சொன்னால்தான் ஸ்ரீகண்டன் வழிக்கு வருவான் என்று நினைத்தே அவ்விதம் சொன்னார். அவர் நினைத்தபடியே நடந்தது. ஸ்ரீகண்டன் சொல்லி முடித்ததும்; துரைசாமியை அழைத்து வரச் சொன்னார் முதலாளி. அவன் வந்ததும், “என்ன துரைசாமி, நீயும் ஸ்ரீகண்டனும் போட்ட திட்டம் எப்படி இருக்கிறது?” என்று 
கேட்டார். 

“என்ன முதலாளி சொல்லுகிறீர்கள் ?” என்று ஒன்றுமே தெரியாதவன் போல் கேட்டான் துரைசாமி. 

“ஏன், நான் சொன்னது புரியவில்லையா? ஜெர்மன் யாஷையிலோ, லத்தீன் பாஷையிலோ நான் சொல்ல வில்லையே! தமிழில்தானே சொன்னேன் ?… ஓஹோ! சும்மா கேட்டால் நீ சொல்வாயா? ஒரு சீப்பு வாழைப் பழம் வாங்கிக் கொடுத்தால்கூடச் சொல்லமாட்டாயே! ஐந்து ரூபாய் தந்தால், உடனே சொல்லிவிடுவாய், இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டார் முதலாளி. 

துரைசாமி விழித்தான். 

“பட்டுத் துணியை எடுத்து ஒளித்து வைக்க ஐந்து ரூபாய் லஞ்சம்! அப்படித்தானேடா அயோக்கியப் பயலே ! நீயும் இந்த ஸ்ரீகண்டனும் சேர்ந்து ரமணிக்குத் திருட்டுப் பட்டம் வாங்கிக் கொடுத்துவிட்டீர்களே! நீங்கள் உருப்படுவீர்களா? ஐயோ! ரமணியின் மனம் என்ன பாடுபடும்? உங்கள் சூழ்ச்சியை அறியாமல் நான் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விட்டேனே!” என்று கண் கலங்கக் கூறினார் முதலாளி. அருகிலே நின்று. நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த மதுரநாயகத்தின் கண்களிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக வழிந்தது. ‘இப்போதாவது ரமணி திருடனல்ல என்பதை முதலாளி உணர்ந்தாரே’ என்று நினைத்து அவர் ஆறுதல் அடைந்தார். 

”மதுரநாயகம், உடனே இவர்கள் இருவருக்கும் சம்பளத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள். இனி ஒரு நிமிஷங்கூட இவர்கள் இங்கே இருக்கக்கூடாது. இருந்தால், நம் சபாவுக்கே அவமானம்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் முதலாளி. அன்றே ஸ்ரீகண்டனும், துரைசாமியும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

– தொடரும்

– பர்மா ரமணி (நாவல்),1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *