கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 3,572 
 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16 – 20 | அத்தியாயம் 21 – 26

21. இருண்ட குகையில் 

மூன்று நிமிஷமாகியும் காமாட்சி அம்மாளுக்கு மயக்கம் தெளியாதலால், ரமணிக்குப் பயம் அதிகமாகி விட்டது. சரி, சரி ! இனியும் இங்கு இருப்பதில் பயனில்லை. உடனே ஓடிப்போய் நமது டாக்டரை அழைத்து வருவதே நல்லது ” என்று தீர்மானித்தான், மறு நிமிஷம், சிற்சபேசனிடம்கூடக் கூறாமல், தலை தெறிக்க அவர்களது குடும்ப டாக்டர் வீட்டை நோக்கி வேகமாக ஓடினான். 

டாக்டர் வீட்டுக்கு இன்னும் ஒரு பர்லாங் தூரம் கூட இல்லை. ஒரு சந்திலே ரமணி வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். அப்போது, யாரோ இருவர் திடீ ரென்று அவன் மேல் பாய்ந்தார்கள். அதர்களில் ஒருவன் தன் கைகளால் ரமணியின் வாயைப் பலமாகப் பொத்தினான். மற்றொருவன் ஒரு முரட்டுத்துணியால் ரமணியின் முகத்தை நன்றாக மூடிவிட்டான். ரமணிக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படியாவது அவர்களிட மிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று கையை யும், காலையும் ஆட்டிப்பார்த்தான். அசைக்க முடியாத படி அந்த முரடர்கள் இரும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். வாய்திறந்து கத்தவும் முடியாதபடி செய்துவிட்டார்கள். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சி யால் ரமணி மூர்ச்சையடைந்து விட்டான். 

ரமணி கண் விழித்துப் பார்த்தபோது, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எழுந்து உட்கார்ந்துகொண்டு, ‘நாம் எங்கே இருக்கிறோம் ?’ என்ற கலவரத்தோடே பார்த்தான். அவன் இருந்த இடத்தில் மின்சார விளக்குகள் இல்லை ; ஒரே ஒரு பழங்காலத்து லாந்தர் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் வழவழப் பான சுவர்கள் இல்லை ; கரடுமுரடான பாறைகளே இருந்தன. சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி இவர்களில் யாராவது அங்கே இருக்கிறார்களா என்று பார்த்தான்; யாரையும் காணோம்! 

ஐயோ! இது என்ன குகை மாதிரி யல்லவா இருக்கிறது! ! நம்மை ஏன் இங்கு கொண்டு வந் தார்கள்?” என்று அவன் புரியாமல் விழித்தான். மறுநிமிஷம், காமாட்சியம்மாளின் உடம்பு இப்போது எப்படி இருக்குமோ!’ என்ற கவலை வந்துவிட்டது. உடனே தன்னையும் அறியாமல், “ அம்மா!’ என்று வாய்விட்டுக் கதறிவிட்டான். 

அவன் அப்படிக் கத்தியதுதான் தாமதம்.மற் றொரு பக்கத்திலிருந்து நாலு முரடர்கள் அவன் இருந்த இடத்துக்கு ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ரமணிக்குப் பயமாக இருந்தது. ஒரு முறை அவர்களை ஏற இறங்கப் பார்த்தான். அந்தநாலுபேரில், மூன்று பேர் பர்மாக்காரர்கள். ஒரே ஒருவன் மட்டும் இந்தியன்…அவனும் தமிழன் என்று ரமணிக்குத் தெரிந்தது. 

“தம்பி,பயப்படாதே! உன்னை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்” என்றான், அவர்களில் மிகவும் பருமனாக இருந்த ஒரு பர்மாக்காரன். அவன்தான் அவர்களுக்குத் தலைவன். 

“நீங்கள் யார்? எதற்காக என்னை இங்கே கொண்டு வந்தீர்கள்? அம்மாவுக்கு ஆபத்து என்று டாக்டரைக் கூப்பிடப் போன என்னை இங்கே கொண்டு வந்து விட்டீர்களே! ஐயோ! அம்மாவுக்கு என்ன ஆனதோ !” என்று கூறி அழுதான் ரமணி. 

உடனே அந்தத் தலைவன், “ஏன் தம்பி அழுகிறாய்? உன் அம்மாவுக்கு உடம்பு சரியாகிவிடும். கவலைப் படாதே! உனக்கு இப்போது ஆகாரம் தரச் சொல்லு கிறேன். சாப்பிட்டுவிட்டுச் சுகமாகத் தூங்கு, காலையில் பேசிக்கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, “சுப்பையா, தம்பிக்கு ஆகாரம் கொண்டு வா” என்று அங்கிருந்த தமிழனைப் பார்த்து உத்தரவிட்டான். 

உடனே ரமணி, வேண்டாம், வேண்டாம், எனக் குப் பசியே இல்லை. என்னை எப்படியாவது டாக்டர் ஆனந்தராவ் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று மிகவும் கெஞ்சிக் கேட்டான். 

“தம்பி, வீணாக அலட்டிக் கொள்ளாதே ! உன் அப்பா மனசு வைத்தால், நீ வெகு சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றான் தலைவன். 

“என்ன ! என் அப்பா மனசு வைக்க வேண்டுமா? அவர்தான் எப்போதோ இறந்து போய்விட்டாரே!’ 

ரமணி இப்படிச் சொன்னதும் தலைவன் பலமாக ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு, “ஓஹோ! அப்பா இறந்து போய்விட்டார் என்றால், நாங்கள் உன்னை விட்டுவிடுவோம் என்றுதானே நினைக்கிறாய்? அது தான் நடக்காது. உன் அப்பா சிற்சபேசனை எங்களுக் குத் தெரியாதென்று நினைத்துவிடாதே ! அவர்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி இன்னும் உயிரோடு இருக்கிறாரே ”! என்றான். 

“ஐயோ! நான் ஓர் அனாதை. சிற்சபேசன் என் அப்பா இல்லை” என்று ரமணி சொல்லும்போதே, “சரி,சரி. இப்போது அதைப் பற்றி என்ன கவலை ? பேசாமல் படுத்துத் தூங்கு. காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டுத் தலைவன் அங் கிருந்த ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டான். மற்ற வர்களும் அங்கேயே படுத்துக் கொண்டார்கள். ரமணிக்குத் தூக்கம் வரவில்லை. ” அப்பா மனசு வைத்தால் சீக்கிரம் போய்விடலாம் என்றான் இந்த முரடன். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாகச் சொல்ல மாட்டேன் என்கி றானே! அது என்னவாக இருக்கும்?” என்று யோசித்துப் பார்த்தான். அதற்குள் காமாட்சி அம் மாள், சிற்சபேசன், மாலதி முதலியோரது நினைவு வந்துவிட்டது. அத்துடன், நாளை கதை கேட்கக் குழந்தைகளெல்லாம் வருவார்களே ! அவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்!” என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. இவற்றை யெல்லாம் நினைத்து நினைத்துக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தான். 

வெகு நேரம் ஆயிற்று. தூங்கிக்கொண்டிருந்த தலைவன் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்தான். உடனே ஒரு பெரிய கொட்டாவி விட்டான். பிறகு, க டேய், டேய், எல்லோரும் எழுந்திருங்கள். பொழுது விடிந்து விட்டது ” என்று கத்தினான். சத்தம் கேட்டு மற்ற மூவரும் எழுந்தார்கள். அப்போதுதான் ரமணிக் குப் பொழுது விடிந்துவிட்டது என்பது தெரிந்தது. அந்தக்குகை இரவிலும் பகலிலும் ஒரே இருட்டாகத் தான் இருந்தது. சூரிய வெளிச்சம்தான் அங்கே நுழைய முடியாதே! 

எழுந்தவுடனே அந்த முரடர்கள் அங்குள்ள விளக்குகளை யெல்லாம் ஏற்றினார்கள். எல்லாம் அகல் விளக்குகள்! விளக்குகளை யெல்லாம் ஏற்றியதும், குகையில் வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது. ரமணி அந்த வெளிச்சத்தில் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான். 

குகையில் ஒரு மூலையைப் பார்த்ததும், ரமணிக்கு ஆச்சரியமாயிருந்தது. “யாரது! நம்மைப் போல் அங்கே ஒரு பையன் உட்கார்ந்திருக்கிறானே !” என்று கூர்ந்து பார்த்தான். ஆம், ஒரு பையன் மூலையிலுள்ள ஒரு பாறை மேல் உட்கார்ந்திருந்தான். அவன் ரமணியைவிடக் கொஞ்சம் சின்னவன். அவனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தான். 

‘இவன் யார்? எப்படி இங்கே வந்தான்? ஒரு வேளை இவர்கள் பிள்ளை பிடிக்கிறவர்களோ…!’ என்று நினைத் துக்கொண்டே அந்தப் பையனையே ரமணி உற்றுப் பார்த்தான். அந்தப் பையனும் ரமணியைப் பார்த்து விட்டான். உடனே அவன் ஒரு புன் சிரிப்புச் சிரித்தான வேறு ஒன்றும் செய்யவில்லை. ரமணியும் அந்தப் பைய னும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்! 

சிறிது நேரம் சென்றது. சுப்பையா என்பவன் ஒரு தட்டிலே ஆகாரம் கொண்டு வந்து ரமணியின் முன்னால் வைத்தான். உடனே ரமணி, “ எனக்கு எது வும் வேண்டாம். எடுத்துப் போ” என்று கோபமாகக் கூறினான். 

“தம்பி, இது மாமியார் வீடு இல்லை. பிகு பண்ணா மல் சும்மா சாப்பிடு” என்று கேலியாகக் கூறிவிட்டு, சுப்பையா அந்த இடத்தைவிட்டுப் பாறைமேல் இருந்த பையனிடம் சென்றான். இன்னொரு தட்டிலிருந்த ஆகா ரத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அந்தப் பையன் ஐந்து நிமிஷத்தில் தட்டைக் காலி செய்துவிட்டு ரமணியைப் பார்த்தான். “நீயும் சாப்பிடு” என்று சைகை மூலம் கூறினான். ஆனாலும், ரமணி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே யிருந்தான். 

சிறிது நேரம் சென்றதும், நாலு முரடர்களும்ரமணி யிருந்த இடத்துக்கு வந்தார்கள். “தம்பி, இன்னும் சாப் பிடவில்லையா? சரி, அதோ அந்த சுந்தரம் உனக்குத் துணையாக இருப்பான். பயப்படாமல் இரு. நாங்கள் #* என்று வெளியில் ஒரு வேலையாகப் போகிறோம்” என்று சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள், 

அவர்கள் போனதும் அந்தப் பையன் – சுந்தரம்- ரமணியின் அருகிலே வந்தான். உடனே ரமணி கண் ணீரைத் துடைத்துக்கொண்டு, “தம்பி, நீ யார் ? இங்கு எப்படி வந்தாய் ?” என்று கேட்டான். 

“என் அப்பா பெயர் தாமோதரம். ஐராவதி நதிக்கு அந்தப் பக்கம் இருக்கிறதே அமரபுரா, அங்குதான் என் வீடு இருக்கிறது. என் அப்பா ஒரு பெரிய மர வியாபாரி. அன்று ஒரு நாள் நானும் என் அப்பாவும் யானைமேல் ஏறிக்கொண்டுதேக்குமரக் காட்டுக்குப் போயிருந்தோம். இரவு நேரத்தில் அங்கிருந்த கூடாரத்தில் படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தோம். பிறகு, என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் கண்களை விழித்துப் பார்த்தபோது இங்கே இருந்தேன் ! எதற் காக என்னை இங்கே கொண்டுவந்தார்கள் என்பதே தெரியவில்லை!” 

“அப்படியா ! உனக்கும் தெரியாதா?” 

“ஆமாம், என் அப்பா மனசு வைத்தால், நான் சீக்கிரம் போய்விடலாமாம்! இதைத்தான் கேட்கிற போதெல்லாம் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்லு கிறார்கள். விவரமாகச் சொன்னால்தானே தெரியும் ?” என்றான் 

“என்னிடம்கூட அப்படித்தான் அவர்கள் சொன் னார்கள். நம்மை அவர்கள் என்ன செய்யப் போகிறார்ளோ, தெரியவில்லையே !” 

“போகப் போகத்தான் தெரியும். நாளையோடு நான் இங்கு வந்து சரியாக ஒரு வாரம் ஆகிறது. இது வரை என்னை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. வேளா வேளைக்குச் சாப்பாடு தருகிறார்கள். அடிக்கடி என்னைமட்டும் இங்கே வைத்துவிட்டு எல்லோரும் வெளியில் போய்விடுகிறார்கள் ” 

“எல்லோரும்தான் இப்போது வெளியில் போய் விட்டார்களே, நாம் மெதுவாக இங்கிருந்து தப்பி ஓடி விட்டால் என்ன?” என்றுகேட்டான் ரமணி 

“அதுதான் முடியாது. நான் இங்கு வந்த மறு நாளே தப்பிச் செல்ல வழியுண்டா என்று பார்த்தேன். அதோ அந்தப் பக்கம் திரும்பி ஒரு சந்து வழியாகத் தான் வெளியே போக வேண்டும். ஆனால், அந்தச் சந்திலே ஒரு இரும்புக் கதவு இருக்கிறது. அதை உள்ளே யிருந்தும் திறக்கலாம்; வெளியே இருந்தும் திறக்கலாம்.பூட்டுவதும் அப்படித்தான். சாவி அவர்க ளிடமல்லவா இருக்கிறது! வா, அந்தக் கதவைச் காட்டுகிறேன்!’ என்று கூறி ரமணியை அழைத்துச் சென்றான் சுந்தரம்.பூட்டப்பட்டிருந்த இரும்புக் கத வைக் கண்டதும், ‘தொப்’பென்று அங்கேயே உட் கார்ந்துவிட்டான் ரமணி.


“ரமணியைக் காணோம்!’ என்ற செய்தி மாந்தலே யில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. குழந்தைகள்,பெரியவர்கள் எல்லோரும் அதிர்ச்சி யடைந்தார்கள். தினமும் கதை கேட்க வரும் குழந்தைகள், “ரமணி அண்ணாவைக் காணோமே! எங்கே போயிருப்பார்?” என்று கவலைப்பட்டார்கள். 

சிற்சபேசன் போலீசுக்கு இதைப் பற்றி உடனே அறிவித்திருந்தார். அவர்கள் அலசு அலசென்று அலசினார்கள். சிற்சபேசனும் அவரது ஆட்களும் சில பெரிய குழந்தை தேடாத இடம் பாக்கியில்லை. களும் அவர்களுடன் சேர்ந்து கவலையோடு தேட ஆரம் பித்தார்கள். மூன்று நாட்களாகத் தேடியும் ரமணி அகப்படவில்லை! 

நாலாவது நாள் சிற்சபேசன் தமக்கு வந்த கடிதங் களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு கடி தத்தை அவர் பிரித்துச் சாவதானமாகப் படிக்க ஆரம் பித்தார். இரண்டு வரிகளைப் படித்ததும், அவர் முகம் மாறியது. 

பரபரப்புடன் முழுவதையும் படித்தார். படித்து முடித்ததும், “ஆ, ரமணி! உனக்கு ஆபத்தா! ஐயோ!!” என்று அலறினார். 

சத்தத்தைக் கேட்டுக் காமாட்சி அம்மாள், மாலதி, இன்னும் அங்கு வந்திருந்த நாலைந்து குழந்தைகள் எல்லோரும், “என்ன, என்ன !” என்று திகிலுடன் கேட்டுக்கொண்டே அருகில் ஓடி வந்தார்கள். 

“ஐயோ, ரமணியைக் கொண்டு போய்விட்டார் களே !” என்று கதறி அழுதார் சிற்சபேசன். 

“என்ன! கொண்டுபோய் விட்டார்களா? யார் கொண்டு போனது ?” என்று அங்கே இருந்த எல் லோரும் ஒரே சமயத்தில் பரபரப்போடு கேட்டார்கள். 

“பண ஆசை பிடித்த சில அயோக்கியர்கள் தான் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ரூபாய் பத்தா யிரம் கொடுத்தால்தான் ரமணியைத் திருப்பித் தருவார்களாம்!……” 

“அப்படியா! ஐயோ! ரமணியை அவர்கள் இந் நேரம் என்ன பாடு படுத்துகிறார்களோ!… பத்தாயிரத் தைக் கொடுத்தால் உடனே திருப்பித் தந்து விடு வார்களா? நிஜமாகவா!” என்று கேட்டாள் காமாட்சி அம்மாள். 

‘அப்பா,அப்பா,எப்படியாவது ரமணி அண்ணா வைக் கூட்டி வந்துவிடு. அப்பா, அண்ணா இல் லாமல் எனக்கு ஒரே கஷ்டமா யிருக்கிறது!” என்றாள் மாலதி. 

அப்போது அங்கிருந்த அடுத்த வீட்டுப் பர்மியப் பையன் – அவன் பெயர் மவுங் லா அவுங், “ஆமாம், இப்போது ரமணியை எங்கே வைத்திருக்கிறார்களாம்? நாம் யாரிடத்திலே பணத்தைக் கொடுக்க வேண்டு மாம்?’ என்று அவர்களிடம் கேட்டான். 

எந்த இடத்தில் ரமணியை வைத்திருக்கிறார்கள் என்பதை எழுதவில்லை. ஆனால், எந்த இடத்தில் பணத்தைக் கொண்டுபோய் வைக்க வேண்டும் என் பதை மட்டும் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பங்களா வுக்குத் தெற்கே ஐந்து மைல் தூரத்தில் ஒரு மலை இருக்கிறதே, அந்த மலையின் வடக்கு ஓரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறதாம். அந்த ஆலமரத்தின் பின்புறத்திலே ஒரு பொந்து இருக்கிறதாம். ஒரு சிறிய பெட்டியில் ரூபாய் பத்தாயிரத்தை வைத்து அந் தப் பெட்டியை நானாவது அல்லது நம் ஆளாவது கொண்டுபோய் அந்தப் பொந்திலே யாருக்கும் தெரி யாமல் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே வந்து விட வேண்டுமாம். நாம் வைக்கும் பெட்டியை அந்த அயோக்கியர்கள் எப்படியாவது எடுத்துக் கொள்வார்களாம். எடுத்துக் கொண்டதும் ரமணியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டுவிடுவார்களாம்.” 

“அப்படியானால், நாம் ஒரு வேலை செய்யலாம். அந்தப் பொந்துக்குள் நாம் பணத்தை வைத்திருக்கி றோமா என்று பார்ப்பதற்கு அவர்கள் அடிக்கடி வரு வார்கள் போல் தெரிகிறது. ஆகையால், நாம் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்து, ஆலமரத்துக்கு வரும்போது அவர்களைப் பிடிப்பதற்கு ஏற்பாடு செய் தால் என்ன ?” என்று கேட்டான் மவுங் லா அவுங். 

அதற்குச் சிற்சபேசன், “தம்பி, அதெல்லாம் ஆபத்து! அவர்களுடைய ஆட்கள் உளவு பார்த்துக் கொண்டே யிருக்கிறார்களாம். போலீஸில் தகவல் கொடுத்தால், அவர்கள் எப்படியாவது தெரிந்து கொண்டு விடுவார்களாம். அப்புறம் ரமணியை நாம் உயிரோடு பார்க்க முடியாதாம்! நமக்கும் ஆபத்துத் தானாம்! இதையெல்லாம் இதோ இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்களே !” என்றார் கவலையுடன். 

சிறிதுநேரம் எல்லோரும் பேசாமல் இருந்தார்கள் பிறகு காமாட்சி அம்மாள் “பாவம், ரமணி இப்போது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறானோ ! ரூபாயைப் பார்த் தால் முடியுமா? உடனே பணத்தை அனுப்பி ரமணி யைத் திரும்பப் பெறுவதற்கு வழி செய்யுங்கள்” என்றாள். 

“ஆமாப்பா,ரமணி அண்ணாவைச் சீக்கிரம் கூட்டி வாப்பா” என்று கூறினாள் மாலதி. 

சிற்சபேசன் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, “பத்தாயிரத்தைப் பற்றிக் கவலையில்லை ! ரமணி கிடைத்தால் போதும். ஆனால், ரமணி அவர்களிடம் தான் இருக்கிறான் என்பது என்ன நிச்சயம்? ரமணி யைக் காணோம் என்று நாமெல்லோரும் வருத்தப்படு கிறோமே, இதைத் தெரிந்துகொண்டு நம்மை ஏமாற்றிப் பணம் பிடுங்க எவனாவது இப்படி எழுதியிருந்தால்…?” என்று எண்ணினார். அதன் பிறகு, ஆமாம், அப்படி யும் இருக்கலாம். எதற்கும் நாமும் ஒரு பதில் கடிதம் எழுதி ஆலமரப் பொந்திலே வைத்துவிட்டு வர ஏற்பாடு செய்வோம்” என்று ஒரு முடிவுக்கு வந்தார். 

உடனே ஒரு காகிதத்தை எடுத்து, அதில் அவசரம் அவசரமாக எழுத ஆரம்பித்தார். 

“நான் பணம் தரத் தயார். ஆனால்,ரமணி உங் ளிடம்தான் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டாமா? ஆகையால், ரமணி கைப்பட ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்பி வைத்தால், மறு நிமிஷமே ரூபாய் பத்தாயிரம் கிடைக்கும்’ என்று எழுதி,ஒரு சிறு பெட்டியில் அந்தக் கடிதத்தை வைத்தார். பிறகு ஒரு வேலைக்காரனிட பெட்டியைக் கொடுத்து ஆலமரப் பொந்தில் வைத்து விட்டு வரச்சொன்னார்.


22. சுந்தரத்தின் உதவி 

குகைக்கு ரமணி வந்து அன்றுடன் நான்கு நாட் களாகி விட்டன. அன்று ரமணியும் சுந்தரமும் தங் களுக்கு நேர்ந்த கஷ்டங்களைப் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். அப்போது, குகையிலுள்ள இரும்புக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்ட தும், இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நின்று எதிரே பார்த்தார்கள். முரடர்கள் நால்வரும் ஒருவன் பின் ஒருவனாக உள்ளே வந்தார்கள். உள்ளே வந்ததும், தலைவன் ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு ரமணியின் அருகிலே சென்றான். 

தம்பி, உன் அப்பா பலே ஆளாக இருக்கிறாரே! நீ இங்கு இருப்பதாக அவருக்கு எழுதி யிருந்தேன். ஆனால், அவர் நம்பவில்லை. உன் கைப்பட அவருக்கு ஒரு கடிதம் வேண்டுமாம் அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகுதான், அவர் உன்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வாராம்…” 

“என்ன ! அப்படியா சொன்னார் அவர்?” என்றான் ரமணி வியப்புடன். 

“ஆமாம் தம்பி, ஆமாம். அவர் எழுதிய பதில் கூட இதோ இருக்கிறது. நீயே படித்துப் பார்” என்று கூறி ஆலமரப் பொந்தில் சிற்சபேசன் எழுதி வைத்த கடிதத்தை ரமணியிடம் காட்டினான் தலைவன். 

ரமணி அதைப் படித்துப் பார்த்ததும்,” ஆ! பத்தாயிரமா? அவ்வளவு பெரிய தொகை கொடுத் தால்தான் என்னைத் திருப்பிக் கொண்டுபோய் விடுவீர் களா? இது அக்கிரமம் ! அநியாயம்!” என்று பலமாகக் கத்தினான். 

“அடேயப்பா! அப்பா தருவதாயிருந்தால்கூடப் பிள்ளையாண்டான் வேண்டாம் என்பான் போலிருக்கிறதே !” என்று கேலியாகக் கூறினான் அந்த முரட்டுத் தலைவன். 

“அவர் என் அப்பாவுமில்லை; நான் அவருடைய மகனும் இல்லை. நான் ஓர் அனாதை. அனாதையான என்னை இவ்வளவு நாட்களாக அவா காப்பற்றி வந்ததே பெரிய காரியம். இனிமேலும் அவர் எனக்காகப் பத்தா யிரம் கொடுப்பதா? வேண்டாம். வேண்டவே வேண் டாம். நான் கடிதம் எழுதித் தரமாட்டேன். தர முடியாது” என்று உறுதியாகச் சொன்னான் ரமணி. 

இதைக் கேட்டதும் தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது. “டேய் பையா ! நீ யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? நீயா அனாதை? எல்லாம் எனக்குத் தெரியும். வீணாக ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே! இதோ, இதில நான் சொல்லுவதுபோல் எழுதிக் கொடு” என்று கூறிக் காகிதத்தையும் பேனாவையும் ரமணயின் முன்னால் நீட்டினான் தலைவன். 

ரமணி அதை வாங்கவில்லை. “என் உயிருக் கே ஆபத்து வந்தாலும் சரி; கடிதம் எழுதித் தரமாட்டேன். எனக்காக இன்னொருவர் எதற்காகப் பணம்—அதுவும் பத்தாயிரம் தரவேண்டும்? முடியாது; எழுத முடியாது” என்று திரும்பவும் ஆணித்தரமாகப் பதில் சொன்னான். 

“முடியாதா ? சரிதான் ! காரியம் அவ்வளவு தூரத்துக்கு முற்றிவிட்டதா? பார் உன்னை இப்போதே கடிதம் எழுத வைக்கிறேன்” என்று மிகவும் கோபமாகக் கூறிக்கொண்டே அங்கிருந்த ஒரு நீண்ட பிரம்பைக் கையில் எடுத்தான். “இப்போது என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே பிரம்பை ஓங்கினான். பிரம்பைக் கண்டு ரமணி பயப்பட்டு விடவில்லை. அசையாமல் அங்கேயே நின்றான்! 

பிரம்பை ஓங்கிய போதும், ரமணி அசையாமல் நிற்பதைக் கண்ட தலைவனுக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. “என்ன ஆணவம் இந்தப் பயலுக்கு!” என்று கூறிக்கொண்டே பிரம்பால் ரமணியின் காலிலே இரண்டு அடி கொடுத்தான். அடி விழுந்த இடம் வலிக்கத்தான் செய்தது. ஆனாலும், ரமணி பல்லைக் கடித்துக் கொண்டு அப்படியே நின்றான். தலைவனின் ஆத்திரம் அதிகமாயிற்று. “எழுதப் போகிறாயா, இல்லையா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே ரமணியின் வலது காலிலும் இடது காலிலும் மாறி மாறி அடித்தான். வலி தாங்கமுடியாமல் ரமணி எழுதிக் கொடுத்துவிடுவான் என்றே தலைவன் எதிர்பார்த்தான். ஆனால், ரமணி அடிக்குப் பயந்து சரணாகதி அடைந்து விடவில்லை. ‘முடியாது, முடியாது’ என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். 

ரமணியின் பிடிவாதம் அதிகமாக ஆகத் தலைவ னின் ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அந்த ஆத்திரத்தில் அவன் ரமணியினுடைய கை, கால், முதுகு எல்லா இடங்களிலும் மாறி மாறி அடித்தான். ரமணியும் கண்ணீர் சொரிந்தபடி அடிகளை வாங்கிக் கொண்டு அந்த இடத்திலேயே நின்றான். எவ்வளவு நேரத்துக்குத்தான் அவனால் அப்படி நிற்க முடியும்? தலைவன் முதுகிலே பலமாக ஓர் அடிகொடுத்தபோது, ரமணி “ஐயோ!” என்று அலறிக்கொண்டே கீழே சாய்ந்துவிட்டான். 

அதே சமயம், இவ்வளவு நேரமாக நடந்ததை யெல்லாம் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் ‘குப்’பென்றுபாய்ந்து தலைவனின் எதரே வந்து நின்றான். “ஐயா! ரமணி மிகவும் நல்லவன். அவனை இப்படி மாட்டை அடிப்பதுபோல் அடிக்கிறீர்களே! தயவு செய்து நிறுத்துங்கள்” என்று தடுத்துச் சொன்னான். 

“அடேயப்பா! அந்த நல்ல பையனுக்கு இந்த நல்ல பையன் சிபார்சா?” என்று கேலியாகக் கேட்டான் தலைவன். 

“ஐயா! அவனை இதற்குமேல் அடித்தால், அவன் உயிரே போனாலும் போய்விடும். உயிர்போய் விட்டால், உங்களுக்குப் பணம் எப்படி வரும்? தயவு செய்து இப்போது அவனைச் சும்மா விட்டுவிடுங்கள். காலையில் நான் எப்படியாவது சமாதானப்படுத்திக் கடிதம் வாங்கித் தருகிறேன் ” என்றான் சுந்தரம். 

“நிச்சயமாகவா? சரி, நாளைக் காலையிலும் அவன் இதேபோல் தகராறு செய்தானோ, அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” என்று கூறி, பிரம்பை ஒரு மூலையில் எறிந்துவிட்டுச் சாப்பிடச் சென்றான் தலைவன். 

அன்று இரவு குகையில் எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ரமணிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அடி விழுந்த இடங்களைத் தன் கைகளால் நன்றாகத் தடவி விட்டுக் கொண்டிருந் தான். 

மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கும். அப்போது ரமணியின் பக்கத்தில் படுத்திருந்த சுந்தரம், மெதுவா கக் கண்களை விழித்தான். சுற்றிலும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் ரமணியைத் தவிர மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரமணியின் முகத்திற்குப் பக்கத்தில் தனது முகத்தைக் கொண்டு போனான். தாழ்வான குரலில், “ரமணி!” என்றான். ரமணி திரும்பிப் பார்த்தான் “என்ன சுந்தரம் ?” என்று மெதுவான குரலில் கேட்டான். 

“ஒன்றுமில்லை. கை கால்களெல்லாம் வலிக்குமே!” என்று கேட்டுக்கொண்டே சுந்தரம் ரமணியின் கை களைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான். 

“சுந்தரம், வேண்டாம். பேசாமல் படுத்துக்கொள்” என்றான் ரமணி. சுந்தரம் விடவில்லை. தடவிக்கொடுத் துக்கொண்டே திரும்பவும் சுற்றுமுற்றும் பார்த்தான். அப்போது அவர்களின் தலைப் பக்கமாகப் படுத்திருந்த சுப்பையா என்பவன் கொஞ்சம் அசைவதுபோல் அவ னுக்குத் தெரிந்தது. ‘இவன் விழித்துக் கொண்டிருக் கிறானோ !” என்று சந்தேகப்பட்டு, சுந்தரம் அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் மறுபடி அசையவில்லை. ஆகையால், அவன் மிகவும் நன்றாகத் தூங்குகிறான் என்று சுந்தரம் நினைத்தான். பிறகு ரமணியின் உடம்பில் அடி விழுந்த இடங்களைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, “ரமணி! நீ ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறாய்? பேசாமல் அவர்கள் சொன்னபடியே நீ எழுதிக் கொடுத்துவிடு!” என்றான். 

“சுந்தரம், சிற்சபேசன் என் சொந்த அப்பா என் பதை நீயும் நம்புகிறாயா? அவர் எனக்கு அப்பாவு மில்லை; நான் அவருக்கு மகனும் இல்லை. அவர் என் தூரத்து உறவினர்கூட இல்லை” 

“நிஜமாகவா மணி!” 

“சுந்தரம், இவர்கள்தான் என் பேச்சை நம்ப வில்லை. நீயாவது நம்புவாய் என்றே நினைக்கிறேன். நான் பிறந்தது வேலங்குறிச்சி என்ற ஊரில். மதுரைக் குப் பக்கத்திலே அது இருக்கிறது. நான் பிறந்ததும் என் அம்மா முத்துலட்சுமி ஜன்னி கண்டு இறந்து விட்டாள். என் அப்பா வேலாயுதமும் கொஞ்ச காலத்துக்கு முன்னால் நாய் கடித்து இறந்து போனார்” என் று ஆரம்பித்துத் தன் கதையைச் சுருக்கமாகக் கூறி முடித்தான் ரமணி. 

“அப்படியா! ரமணி, நீ சொல்லுவதெல்லாம் உண்மை என்று நான் நம்புகிறேன் ஆனாலும்,இவர்கள் நம்பமாட்டார்களே ! இவர்களுக்குப் பணம்தான் குறி என்று தெரிகிறது. நீ பேசாமல கடிதம் எழுதிக் கொடுத்துவிடு. சிற்சபேசனே பணம் தருவதாக எழுதி யிருக்கிறாரே ! நீ இங்கு இருப்பதைத் தெரிந்து கொள் வதற்குத்தான் அவர் உன் கைப்படக் கடிதம் வேண்டும் என்கிறார். உன் கடிதம் போனால், சீக்கிரம் பணம் வரும். உனக்கும் சீக்கிரம் விடுதலை கிடைத்துவிடும்” என்றான் சுந்தரம் 

“விடுதலை கிடைத்தால் எனக்கும் சந்தோஷம் தான். ஆனாலும்,எனக்கு ஒரு சந்தேகம். இவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு என்னைத் திருப்பி அனுப்பாமலே வைத்துக் கொண்டால்…?” 

“ரமணி, அது மாதிரி நடக்காது. இங்கேயே உன்னை வைத்துக்கொண்டால் உனக்குச் சாப்பாடு போட வேண்டாமா? கட்டாயம் பணம் வந்ததும் கொண்டுபோய் விட்டு விடுவார்கள். தயவு செய்து எனக்காகவாவது நீ நாளைக்குக் கடிதம் எழுதிக் கொடுத்துவிடு”. 

“சரி, காலையில் பார்த்துக் கொள்ளலாம். பேசாமல் படுத்துக்கொள்” என்று கூறினான் ரமணி. சுந்தரம் படுத்துக் கொண்டான். ரமணியும் இரவு வெகுநேரம் விழித்திருந்ததால், அயர்ந்து தூங்கலானான். 


23. ரமணி கிடைத்தான்! 

மறு நாள் காலை. பொழுது விடிந்தது. வழக்கம் போல் காமாட்சி அம்மாள் கோலப் பொடியைக் கையில் எடுத்துக்கொண்டு பங்களா வாசலை நோக்கி வந்தாள். வாசல் கதவைத் திறந்ததும் வராந்தாவில் யாரோ படுத்திருப்பதைக் கண்டாள். உடனே, “யாரது?” என்று று பார்த்தாள். மறுநிமிஷம்,”ஆ! ரமணி! என் ரமணியா!” என்று கூவிக்கொண்டே அருகிலே ஓடினாள்; உற்றுப் பார்த்தாள்; நன்றாக உற்றுப் பார்த்தாள். 

சந்தேகமில்லை; அவன் ரமணிதான் ! காணாமற் போன ரமணியேதான் அங்கே படுத்துக் கொண்டிருந் தான்! உடனே, ரமணி ! ரமணி ! ‘ என்று குதூகலத் துடன் தட்டி எழுப்பினாள் காமாட்சி அம்மாள். ரமணி மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். காமாட்சி அம்மாளைக் கண்டதும், ” அம்மா !” என்று அவளைப் பாசத்தோடு கட்டிப் பிடித்துக்கொண்டான். 

மறு நிமிஷம், “என்ன இது? கனவா ! நனவா ! எப்படி நான் இங்கு வந்தேன் ! பக்கத்தில் படுத்திருந்த சுந்தரம் எங்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ரமணி. 

“என்ன ரமணி, உனக்கே தெரியாதா! நடப்பதெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது…சரி வா, உள்ளே போகலாம் ” என்று கூறி அவனை அப்படியே அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள் காமாட்சி அம்மாள். 

உள்ளே செல்லும்போதே, “இதோ ரமணி! ரமணி வந்துவிட்டான்!” என்று இரைந்துகொண்டே சென்றாள். சத்தத்தைக் கேட்டதும், படுக்கையில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சிற்சபேசன் திரும்பிப் பார்த்தார். ரமணியைக் கண்டதும், ‘சட்’டென்று எழுந் தார். ஒரே தாவாகத் தாவி அவனிடம் ஓடிவந்தார். “ஆ, ரமணி !” என்று கட்டித் தழுவிக் கொண்டார். அதற்குள் காமாட்சி அம்மாள் தூங்கிக் கொண்டிருந்த மாலதியைத் தட்டி எழுப்பி, “மாலதி! மாலதி! ரமணி அண்ணா வந்துவிட்டான்! ரமணி அண்ணா வந்து விட்டான்! எழுந்திரு, எழுந்திரு” என்று ஆனந்தமாகக் கூறினாள். உடனே மாலதி பரபரப்போடு எழுந்தாள்; நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் ரமணி மாலதி யின் எதிரே ஓடி வந்து, அவளது இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு, “மாலதி!” என்றான், 

“அண்ணா! எங்களை யெல்லாம் விட்டுவிட்டு நீ எங்கே அண்ணா போயிருந்தாய்? நீ இல்லாது எங் களுக்கெல்லாம் எவ்வளவு கவலையாக இருந்தது? விளையாட முடியவில்லை ; கதை கேட்க முடியவில்லை; எதுவுமே செய்ய முடியவில்லை” என்றாள் மாலதி. 

சற்று நேரத்துக்குள் ரமணி திரும்பி வந்த விஷயம் அந்த வட்டாரம் முழுவதும் தெரிந்துவிட்டது. குழந்தைகளெல்லாரும் குதூகலத்தோடு, “ரமணி அண்ணா’வைப் பார்க்க ஓடோடி வந்தார்கள். பெரிய வர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் அவனைச் சூழ்ந்துகொண்டு, அவன் எங்கே போனான்? எப்படிப் போனான், என்னென்ன செய்தான் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். 

அப்போது சிற்சபேசன், “ரமணி, அன்று இரவு நீ காணாமற் போனதிலிருந்து நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொல்லு. குழந்தைகளெல்லாம் கேட்கட்டும். எங்களுக்கும்தான் நீ இன்னும் சரியாகச் சொல்லவில்லையே!” என்று கூறினார். 

உடனே ரமணி, “இவ்வளவு நாளும் நீங்களெல்லோரும் எந்த எந்தக் கதைகளையோ கேட்டீர்கள். இப்போது என் சொந்தக் கதையையே கேட்க விரும்புகிறீர்கள். சொல்லுகிறேன், கேளுங்கள்” என்று ஆரம்பித்தான். தன்னை முரடர்கள் தூக்கிச் சென்றது, குகையில் கொண்டு போய் வைத்தது, கடிதத்துக்குப் பதில் எழுதச் சொல்லிப் பிரம்பால் அடித்தது, பிறகு எதிர்பாராமல் எப்படியோ வீட்டு வராந்தாவில் தான் படுத்திருந்தது- எல்லாவற்றையும் கூறினான். அப் போது அவனுக்குச் சுந்தரம் நினைவு வந்துவிட்டது. உடனே சுந்தரத்தைப் பற்றியும், அவனுடைய தங்க மான குணத்தைப் பற்றியும் எல்லோருக்கும் எடுத்துக் கூறிவிட்டு, “பாவம், அவனை அவர்கள் என்ன பாடு படுத்துகிறார்களோ! நான் ஒருவன்தான் அவனுக்குத் துணையாக இருந்தேன். இப்போது நானும் வந்துவிட் டேன்!!” என்று வருத்தப்பட்டான். 

அப்போது சிற்சபேசன். “ரமணி, நீ குகையில் இருந்தது உண்மைதானா? அவர்கள் தான் பணம் கேட்டு எழுதினார்களா? அப்படியானால் பணம் வாங்காமல் எப்படி உன்னைக் கொண்டு வந்து விட்டார்கள்!” என்று கேட்டார் வியப்புடன். 

“நடந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், எப்படி நான் இங்கு வந்தேன் என்பதுதான் எனக்கும் புரியவில்லை! ஒரு வேளை, அவர்களே என்னை இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டார்களோ !… அப்படியானால், சுந்தரமும் வீட்டுக்கு வந்திருக்க வேண்டுமே!” என்றான் ரமணி திகைப்புடன். 

“இருக்கலாம்; அவன் வீடு எங்கே இருக்கிறது? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் சிற்சபேசன். 

“அமரபுராவில் இருக்கிறதாம். அவன் அப்பா ஒரு பெரிய மர வியாபாரியாம். பெயர் தாமோதரம்.” 

“அப்படியா ! சரி, இப்போதே ஓர் ஆள் அனுப்பி விசாரித்து வரச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு உடனே ஒரு வேலைக்காரனை அமரபுராவுக்கு அனுப்பி வைத்தார் சிற்சபேசன். அமரபுரா ஐராவதி நதியின் அக்கரையில் உள்ளது. மாந்தலே இக்கரையில் உள்ளது. 

‘ஆவா பிரிட்ஜ்’ என்ற பாலத்தைக் கடந்து அமரபுராவுக்குப் போக வேண்டும். 

அன்று முழுவதும் ஓயாமல் குழந்தைகளும் பெரிய வர்களும் ரமணியைப் பார்க்க வந்து கொண்டே யிருந் தார்கள். எல்லோரும் ரமணி திரும்பி வந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தார்கள். அத்துடன் அவன் எப்படித் திரும்பி வந்தான் என்பது தெரியாததால் ஆச்சரியமும் அடைந்தார்கள். 

வந்தவர்கள் எல்லோரிடமும், “வழக்கம்போல் நாளைச் சாயங்காலம் கதை உண்டு. எல்லோரும் வந்து விடுங்கள் ” என்று சொல்லி அனுப்பினான் ரமணி. எல்லோரும் அளவு கடந்த உற்சாகத்தோடு வீடு திரும்பினார்கள். 

விளக்கு வைக்கும் நேரம். அமரபுராவுக்குச் சென்ற வேலைக்காரன் திரும்பி வந்தான். அவன் மட்டும் வர வில்லை; கூடவே, சுந்தரத்தின் அப்பா தாமோதரமும் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும், வராததுமாக ரமணியைப் பார்த்து, “தம்பி, தம்பி, என் மகன் இன்னும் திரும்பி வரவில்லையே ! அவனை நீ பார்த் திருப்பாயே! அவனுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே! அந்தப் பாவிகள் இப்படி ஏமாற்றுகிறார்களே!” என்று அழாக் குறையாகச் சொன்னார். 

“சுந்தரம் இன்னும் வரவில்லையா! அப்படியானால் குகையில்தான் இருக்கவேண்டும். நான் வரும் வரை யில் அவர்கள் அவனைத் தொந்தரவு எதுவும் செய்ய வில்லை. பணம் அனுப்பச் சொல்லி அந்த முரடர்கள் உங்களுக்கு எழுதியிருந்தார்களா?” 

“ஆமாம் தம்பி. கடிதம் வந்த அன்றைக்கே அவர்கள் சொன்ன இடத்தில் பத்தாயிரம் ரூபாயையும் கொண்டுபோய் வைத்துவிட்டோமே !” 

”என்ன! அவர்கள் கேட்டபடி பணம் கொடுத்து விட்டீர்களா ?”” 

“ஆமாம் தம்பி என்னுடைய தேக்கு மரக் காட்டிலே மேஸ்திரி வேலை பார்க்கும் கந்தசாமியிடம் தான் கொடுத்து அனுப்பினேன். ” 

“அப்படியா! அவர்கள் பணம் வந்ததாகவே சொல்லவில்லையே!” 

“வந்ததாகவே சொல்லவில்லையா! ஒரு வேளை… நான் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு, சுந்தரத்தைக் கொண்டு வந்து விடுவதற்குப் பதில் உன்னைக் கொண்டுவந்து விட்டுவிட்டார்களோ…இருக்கும். எதற்கும், நான் அன்றைக்கே பணம் அனுப்பிவிட்டதாக ஒரு கடிதம் எழுதி, முன்பு பணத்தை வைத்த இடத்திலே அதையும் வைத்து விட்டு வரச் சொல்லுகிறேன் ” என்று கூறிப் புறப்பட்டு விட்டார் தாமோதரம். 

சுந்தரத்தின் அப்பா, மேஸ்திரி கந்தசாமியிடம் பணம் கொடுத்தனுப்பியது உண்மைதான். ஆனால், அந்தப் பணம் எங்கே போனது, எப்படிப் போனது என்பது அவருக்குத் தெரியுமா? பாவம்! முரடர்கள் தான் எடுத்துக் கொண்டு ஏமாற்றுவதாக அவர் நினைக்கிறார். 

அன்று இரவு ரமணிக்குச் சரியாகத் தூக்கம் வர வில்லை. முதல் நாள் அடிவிழுந்த இடங்களிலெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. காமாட்சி அம்மாள் அந்த இடங்களில் எண்ணெய் போட்டு மெதுவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது ரமணிக்குச் சுந்தரத்தின் நினைவு வந்து விட்டது. 

“அம்மா, இதுபோல்தான் நேற்று இரவு வெகு நேரம் வரையில் சுந்தரம் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பாவம், மிகவும் நல்லவன் ” என்றான். 

மறுநாள் மாலை வழக்கம்போல் ஏராளமான குழந் தைகளும், சில பெரியவர்களும் கதை கேட்க வந்து சேர்ந்தார்கள். அந்தக் கும்பலில் வயதான ஒரு கிழவரும் இருந்தார். அவர் கறுப்பாக இருந்தாலும் அவரது தாடி வெளுப்பாக இருந்தது. நெற்றியில் பட்டையாக விபூதியும், நடுவில் பெரிய சந்தனப் பொட்டும் அணிந்திருந்தார். மேலே சரிகை அங்கவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டிருந்தார். 

ரமணி கதை சொல்லும்போது, அந்தக் கிழவர் பேஷ், பேஷ். சபாஷ்!’ என்று அடிக்கடி தலையை ஆட்டினார். அப்படி அவர் சொல்லச் சொல்ல ரமணிக்கு மிகவும் உற்சாகமாயிருந்தது.

சின்னச் சின்னக்கதைகளாக இரண்டு கதை களைக் கூறிவிட்டு, மூன்றாவதாக ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான் ரமணி. அந்தக் கதை, யில் இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் உயிரையும் கொடுக் கத் தயாராயிருக்கிறார்கள். இந்தக் கதையைக் கூறிக் கொண்டிருந்த ரமணி, திடீரென்று நடுவிலே நிறுத்தி விட்டான். அவன் இதுபோல ஒரு நாள்கூட நிறுத்தியதில்லை. அப்போது, அவன் முகத்தில் ஏதோ கலவரம் தெரிந்தது. 

உடனே சிற்சபேசன் திடுக்கிட்டார். காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலதி, “என்ன அண்ணா, கதையை நிறுத்திவிட்டாய் ?” என் று கேட்டாள். மற்றவர்களும் விஷயம் புரியாமல் விழித்தார்கள். 

ரமணியின் முகத்தில் கலவரத்தைக் கண்டதும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பெரியவர், என்ன தம்பி. கதையை நிறுத்தி விட்டாய்?” என்று கவலை யோடு கேட்டார். 

“ஒன்றுமில்லை! நான் குகையில் இருந்தபோது என்னோடு சுந்தரம் என்று ஒரு பையன் இருந்தான். அவனோடு நான் பழகியதெல்லாம் சில நாட்கள் தான். ஆனாலும், அவன் என்னிடத்திலே எவ்வளவு பிரியமா யிருந்தான் ! முரடர் தலைவன் என்னை அடித்த அவன் குறுக்கே வந்து நின்றுகொண்டு தைரியமாகத் தடுத்தான். இரவில்கூட அடி விழுந்த இடங்களையெல்லாம் வெகு நேரம் வரை தடவிக் கொடுத்துக்கொண்டே யிருந்தான். அவன் எவ்வளவு நல்லவன் ! நல்ல நண்பர்களைப் பற்றி நான் கதை சொல்லும் போது அருமை நண்பன் சுந்தரத்தின் நினைவு வந்துவிட்டது. ஐயோ! அவனுக்கு, என்னென்ன தொந்தரவுகள் கொடுக்கிறார்களோ! பாவம்” என்று கூறினான். அப்போது அவன் கண்கள் கலங்கின. மேலே பேசவும் வாய் வரவில்லை. 

உடனே சிற்சபேசன், “சரி ரமணி, இன்று கதை சொன்னது போதும். பேசாமல் போய் மாடியில் படுத்துக்கொள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களிடம் “ரமணிக்கு அந்தப் பையனைப் பற்றியே கவலை. இரவெல்லாம் இதே நினைவுதான். காலையில்கூடச் சொல்லிக்கொண்டிருந்தான். இன்று கதை கேட்டது போதும். நாளை வாருங்கள். கட்டாயம் கேட்கலாம்” என்று சொன்னார். 

அந்த இடத்தை விட்டுப் போக யாருக்குமே மனம் வரவில்லை.ஆனாலும், என்ன செய்வது? சந்தர்ப்பம் சரி யில்லையே! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள். ஆனால், அந்தக் கிழவர் மட்டும் போகவில்லை 

அவர் சிற்சபேசனைப் பார்த்து, “ஆஹா! பிள்ளை யென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? மிகவும் அற்புதமாகக் கதை சொல்லுகிறான். கொஞ்ச நாட்கள் தான் பழகினாலும், நல்ல சிநேகிதனை மறக்காமல் இருக்கிறான்! இவன் உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்ததே முன் ஜன்மத்தில் நீங்கள் செய்த புண்ணியம் தான். இவனுடைய தங்கமான குணத்துக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். கவலைப்படாதீர்கள். ஆண்டவன் அருள் புரிவார்” என்றார். 

உடனே சிற்சபேசன், “தாங்கள் யார்? தெரியவில்லையே?” என்றார். 

“என் ஊர் தஞ்சாவூர். பர்மாவைச் சுற்றிப் பார்க்க வந்தேன். இந்த ஊருக்கு வந்ததும், தம்பி அபாரமாகக் கதை சொல்லுவதாகக் கேள்விப்பட்டேன். எனக்குக் கதை கேட்பதென்றால், சிறு வயதிலிருந்தே பிரியம் அதிகம். தம்பியின் கதையைக் கேட்கத்தான் தேன்” என்று கூறிவிட்டு, ரமணியைப் பார்த்து “தம்பி,உன் சிநேகிதன் பெயர் என்ன என்று சொன்னாய்?” என்று கேட்டார். 

“சுந்தரம்” என்றான் ரமணி. 

“சுந்தரம். அப்படியானால், ஐந்து எழுத்துப் பெயர். நல்ல பெயர்தான். சரி, ஒரு பூவின் பெயர் சொல்.” 

“ஏன் தாத்தா, உங்களுக்கு ஜோஸ்யம்கூடத் தெரி யுமா!” 

“தெரியுமா என்றா கேட்கிறாய்? அதுதானே என் பரம்பரைத் தொழில்? பூவராக ஜோஸ்யர் என்றால் தஞ் சாவூர் ஜில்லாவிலே கைக் குழந்தைக்குக்கூடத் தெரி யுமே?” 

”ஓஹோ, அப்படியா ! சரி, இதோ ஒரு பூவின் பெயரைச் சொல்லட்டுமா? தாமரை!” என்றான் ரமணி.  

“தாமரையா! சரி, இது மூன்றெழுத்துப் பெயர்” என்று கூறிவிட்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தார். பிறகு “தம்பி, கவலைப்படாதே! நீ கருதிய காரியம் சீக்கிரத்தில் கைகூடும். நீ என்ன நினைக்கிறாய்? உன் சிநேகிதன் சுந்தரம் எப்போது திரும்பி வருவானோ என்று தானே நினைக்கிறாய்? நாளைக் காலையில் தாமரை மலர்வதற்குள் வந்து சேர்ந்துவிடுவான்.” 

“என்ன! உண்மையாகவா, தாத்தா? அவன் எப்படி வருவான்?” 

“அதெல்லாம் இப்போது சொல்லக்கூடாது. என் ஜோஸ்யம் பலிக்கிறதா இல்லையா என்பது நாளைக் காலை யிலே தெரிந்துவிடும். நான் வருகிறேன். கவலைப் படாதே!” என்று கூறிவிட்டுப் போய்விட்டார் கிழவர். 


24. இரவிலே பரபரப்பு 

‘ரமணி கிடைத்துவிட்டான்’ என்று காமாட்சி அம் மாள், சிற்சபேசன், மாலதி எல்லோரும் ஆனந்தப் பட் டுக் கொண்டிருந்தார்களே, அதே சமயம், ‘ரமணியைக் காணோமே!’ என்று குகை முழுதும் தேடிக் கொண்டி ருந்தார்கள் முரடர்கள். 

ஆம், அன்று காலையில் எழுந்ததும், தலைவன் மற் றவர்களையெல்லாம் சத்தம் போட்டு எழுப்பினான். எல் லோரும் எழுந்து விளக்குகளை ஏற்றினார்கள். இரவிலே அடிபட்ட ரமணி அப்போது எப்படியிருக்கிறான் என்று பார்ப்பதற்காக, அவன் படுத்திருந்த பக்கம் பார்த்தான் தலைவன். அங்கு ரமணி இல்லை. “எங்கே ரமணி? காணோமே !” என்று கேட்டுக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தான். ரமணி தென்படவில்லை. உடனே, மற்றவர் களையும் அழைத்துக்கொண்டு குகையின் மூலை முடுக்கி லெல்லாம் தேடிப்பார்த்தான். ரமணி குகைக்குள் இருந்தால்தானே அகப்படுவான் ? 

ரமணியைக் காணோம் என்றதும் தலைவன் இரும் புக் கதவை நோக்கி ஓடினான். அது பூட்டியபடியே இருந்தது! உடனே, அவனுடைய ஆச்சரியம் அதிகமா கியது. “என்ன இது! அவன் எங்கே போயிருப்பான்? எப்படிப் போயிருப்பான்? மாயமாய் இருக்கிறதே !” என்று யோசித்தான். 

சுந்தரத்துக்கும் ரமணியைக் காணாதது ஆச்சரியமா கவே இருந்தது. ஆனாலும், “நல்ல வேளை ! ரமணி எப் படியோ தப்பிவிட்டான் !” என்று நினைத்துக் கொண்டு உள்ளூர ஆனந்தமடைந்தான். 

அப்போது தலைவன் சுந்தரத்தைப் பார்த்து, “ஏ, சுந்தரம்! உன் சிநேகிதன் எங்கே?” என்று மிரட்டினான், 

“எனக்கு எப்படித் தெரியும்? நானும் உங்களைப் போல் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். அவன் எங்கு போனானோ!” என்றான் சுந்தரம். 

“எமன் அறியாமல் உயிர் போகாது. நிச்சயம் உனக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். உள்ளதைச் சொல். இல்லாவிட்டால், என் கோபம் உனக்குத் தெரியும்” என்றான் தலைவன். 

“தெரிந்தால்தானே சொல்லலாம்? கோபத்துக்குப் பயந்து எதையாவது உளறச்சொல்லுகிறீர்களா? அவன் போன வழி எனக்குத் தெரிந்திருந்தால், அவன் கூடவே நானும் ஓடிப்போயிருப்பேனே !” என்றான் சுந்தரம். 

தலைவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு, “சரி, ஏதோ சூது நடந்திருக்கிறது” என்று கூறிக் கொண் டான். பிறகு சுப்பையாவைப் பார்த்து, “சுப்பையா! இப்போதே நீ கிளம்ப வேண்டும். செருப்புத் தைப்பவன் போல் வேஷம் போட்டுக் கொண்டு அந்த ரமணிப்பயல் வீட்டுக்கு எதிரே போய் உட்கார்ந்து கொள். செருப்புத் தைத்துக்கொண்டே ரமணி அவன் வீட்டில் இருக்கிறானா, அங்கு என்னென்ன நடக்கிறது என் பதைத் தெரிந்து வா. சீக்கிரம் கிளம்பு. அவன் அங்கே இருந்தால், நமக்கு ஆபத்து! நாம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுவான் ” என்று கொஞ்சம் அச்சத்தோடு கூறினான். 

“அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். இதோ நான் செருப்புத் தைப்பவனைப் போல் கிளம்பு கிறேன். ரமணி அங்கிருந்தால், இரவோடு இரவாக அவனைத் தூக்கி வந்துவிடுகிறேன். ஆனால், நான் திரும்பி வரும்வரையில் நீங்கள் வெளியே தலைகாட்டா தீர்கள். ஆபத்து ! பேசாமல் இங்கேயே இருங்கள் ‘என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான் சுப்பையா. 

அன்று முழுவதும் சுப்பையா திரும்பி வரவில்லை. மறுநாளும் வரவில்லை. தலைவன் ஒவ்வொரு நிமிஷமும் சுப்பையாவை எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தான்; அவன் வராததால், அவனுக்குப் பலபல சந்தேகங்கள் தோன்றின. “ஒருவேளை சுப்பையா அகப்பட்டுக்கொண் டிருப்பானோ?இருக்காது. அவன் தந்திரசாலி சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது. எதற் கும் நாளைக் காலை வரையில் பார்க்கலாம். இல்லாத போனால், யாரையாவது அனுப்பலாம் ” என்று நினைத் தான். 

இரவு மணி சுமார் பத்து இருக்கும். குகைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், உடனே தலைவனும், மற்றவர்களும் ஓடிப்போய்ப் பார்த்தார்கள். சுப்பையா தான் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என்ன சுப்பையா, வெறும் கையோடு திரும்பி வரு கிறாயே! அந்தப் பையனைப் பார்க்கவில்லையா ?” என்று ஏமாற்றத்தோடு கேட்டான் தலைவன். 

“பார்த்தேன். அந்த பங்களாவில்தான் அவன் இருக்கிறான். ஆனால், எப்படி அங்கே போய்ச்சேர்ந்தான் என்பது யாருக்குமே தெரியவில்லை. நம்மைப் போலவே எல்லோரும் ஆச்சரியப் படுகிறார்கள். அவனை நேற்று இரவே கொண்டுவந்து விடவேண்டும் என்று நினைத் தேன். ஆனால், அவன் அப்பா மிகவும் உஷாராக இருக்கிறார். இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டே யிருந்தார். இன்றைக்கும் அப்படித்தான் இருப்பார். ஆகையால், அவனை நாளை இரவே அந்த பங்களாவை விட்டுக் கிளப்புவதற்கு வேண்டிய ஏற் பாட்டை நாம் செய்யவேண்டும்” என்றான் சுப்பையா. 

“என்ன ஏற்பாடு செய்வது?” 

“அதெல்லாம் காலையில் யோசித்துச் சொல்லு கிறேன். இரண்டு நாட்களாகப் பட்டினி. தூக்கமும் இல்லை. ஒரே களைப்பாக இருக்கிறது. சாப்பாடு இருந் தால் கொடுங்கள்.சாப்பிட்டுவிட்டுத் தூங்கவேண்டும்.” 

உடனே சுப்பையாவுக்குச் சாப்பாடு கொண்டு வரப் பட்டது.சுப்பையா சாப்பிட்டுக் கொண்டிருக்குபோது, தலைவன் அவனைப் பார்த்து, “சுப்பையா, அந்தப் பையன் நாம் இருக்கும் இடத்தைப் போலீஸாரிடம் சொல்லி, நம்மைப் பிடித்துக் கொடுத்து விடுவானோ !” என்று மிகுந்த கலவரத்தோடு கேட்டான் 

“சேச்சே, அந்த வம்புக்கெல்லாம் அவர்கள் போக மாட்டார்கள். போலீஸில் சொன்னால்,நம்மால் எதாவது தொந்தரவு ஏற்படும் என்று அவர்கள் பயந்துபோயிருக் கிறார்கள். அவர்களாவது, போலீஸில் சொல்வதாவது!” 

“அப்படியா! நல்ல காலம், சரி, சாப்பிட்டுவிட்டுத் தூங்கு. காலையில் யோசிப்போம்” என்றான் தலைவன். 

அன்று இரவு குகையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.சுந்தரமும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். இரவு மணி இரண்டு இருக்கும். அப் போது ஓர் உருவம் மெதுவாக சுந்தரத்தின் அருகே வந்தது. சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் கீழே குனிந் தது. மெதுவாக சுந்தரத்தைத் தூக்கித் தோள்மேல் போட்டுக்கொண்டு அடிமேல் அடிவைத்து நடந்தது. பத்தடி தூரம்கூடப் போகவில்லை. அதற்குள் சுந்தரம் விழித்துக்கொண்டு விட்டான். 

“யாரது என்னைத் தூக்குவது?” என்று உரத்த குரலில் கேட்டான். 

சத்தத்தைக் கேட்டதும், தலைவன் திடுக்கிட்டு எழுந்தான். சத்தம் வந்த திசையைப் பார்த்தான். அதற்குள் தடதட வென்று யாரோ ஓடுவது தெரிந்தது. உடனே சுந்தரம் படுத்திருந்த இடத்தைத் தலைவன் பார்த்தான். சுந்தரத்தைக் காணோம்! 

“ஆ! சுந்தரத்தையும் பறிகொடுத்து விட்டோம்!” என்று கூறிவிட்டு, “டேய், டேய். எழுந்திருங்கள். ஆபத்து !” என்று கத்தினான். உடனே எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். எவனோ சுந்தரத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். வாருங்கள். விடக் கூடாது அவனை ” என்று கூறிக்கொண்டே தலைவன் முன்னால் வேகமாக ஓடினான். மற்றவர்களும் பின் தொடர்ந்து ஓடினார்கள். 

குகைக் கதவு ‘ஆ’ வென்று திறந்து கிடந்தது. அதைக் கடந்து எல்லோரும் வெளியில் வந்து பார்த் தார்கள். சுந்தரத்தைத் தூக்கிக்கொண்டு யாரோ ஓடுவது தெரிந்தது. மங்கலான நிலா வெளிச்சத்தில் அவன் யாரென்பது சரியாகத் தெரியவில்லை. தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த அவனைக் கண்டதும், “அயோக்கியன் ! இவன்தான் ரமணியையும் தூக்கிச் சென்றிருப்பான். இவனைச் சும்மா விடக்கூடாது. உம், வாருங்கள், வாருங்கள் ” என்று கூறிக்கொண்டே தலைவன் அவனைத் துரத்தினான்; மற்றவர்களும் துரத்தினார்கள். 

சுந்தரத்தைத் தூக்கிச் சென்றவன் ஓட்டத்திலே பெரிய புலியாயிருக்க வேண்டும். இல்லாத போனால் சுந்தரத்தையும் தூக்கிக்கொண்டு அவ்வளவு வேகமாக ஓடமுடியுமா? கரடு முரடான காட்டுப் பாதையிலும் அவன் காற்றாய்ப் பறந்து சென்றான். முரடர்களும் விடவில்லை. துரத்திக் கொண்டே ஓடினார்கள். 

சுமார் ஒரு மணி நேரம் அப்படி ஓடியிருப்பார்கள். போகப்போக, சுந்தரத்தைத் தூக்கிச் சென்றவனுடைய வேகம் குறைய ஆரம்பித்தது! ஆரம்பத்தில் அவனுக் கும், மற்றவர்களுக்கும் இடையே இரண்டு பர்லாங்கு தூரம் வித்தியாசமிருந்தது. ஆனால், அந்த வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. ‘இன்னும் சிறிது நேரத்தில் அவன் பிடிபட்டுவிடுவான்’ என்றே முரடர்கள் நினைத்தார்கள். நினைத்ததோடு விடவில்லை; வழியிலே கிடந்த கற்களை எடுத்து அவனைக் குறிபார்த்து எறியவும் ஆரம்பித்தார்கள். அவனுடைய முதுகிலும், பின் கால்களிலும், கற்களைப் பலமாக எறிந்து அவனுக்குக் காயம் உண்டாக்கினார்கள். கல்லடி விழும்போதெல்லாம் அவன் பல்லை இறுகக் கடித்துக் கொள்வான். சில சமயங்களில், ‘உஸ்’, ‘அப்பா’ என்று முணுமுணுப்பான். ஆனாலும், ஓட்டத்தை நிறுத்த வில்லை.சுந்தரத்தின் மீது அடிபட்டுவிடக் கூடாதே என்று அவனை மார்போடு அணைத்துக்கொண்டு இரைக்க இரைக்க வேகமாக ஓடினான். அப்போது சுந்தரம்,”இந்த மனிதர் நம்மைக் காப்பாற்றத்தான் குகைக்குள் வந்திருக்கிறார். சந்தர்ப்பம் தெரியாமல் ‘யார் தூக்குவது?’ என்று கேட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டேனே ! ஐயோ! என்னால் இவருக்கு எவ்வளவு சிரமங்கள்! பாவம், அந்த முரடர்கள் கல்லால் அடிக்கிறார்கள். ஆனாலும், இவர் நிற்கவில்லை! என்னை எவ்வளவு பத்திரமாகத் தூக்கிச் செல்கிறார் ! ரமணி யையும் இவர்தான் காப்பாற்றி யிருக்கவேண்டும். இவ்வளவு நல்ல மனிதர் யாரா யிருக்கும் ? உற்றுப் பார்த்தால், தாடியும் மீசையும்தான் தெரிகின்றன. ஆள் அடையாளம் தெரியவில்லையே !” என்றெல்லாம் நினைத்தான். 

அதே சமயம், ‘ஐயோ! முரடர்கள் நெருங்கி விட் டார்கள் போலிருக்கிறதே ! என்ன ஆகுமோ ! எப்படி ஆகுமோ !” என்று நடுநடுங்கினான். 

ஒருவழியாகக் காட்டைக் கடந்து மாந்தலேக்குச் செல்லும் பெரிய சாலைக்கு வந்துவிட்டான் அந்த மனி தன். அப்போது அவனுக்கும் முரடர் தலைவனுக்கும் இடையில் நூறடி தூரம்கூட இல்லை. ” இதோ ஒரு நொடியில் அவர்களைப் பிடித்து விடுகிறேன் ” என்று கூறிக்கொண்டே தலைவன் வெகு வேகமாக நெருங்கி னான். அதே சமயம் ‘பாம் பாம்’ என்ற சப்தத்துடன் சிறிது தூரத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியைக் கண்டதும், சுந்தரமும் அந்த மனிதனும் இனித் தப்பிவிடலாம்’ என்ற நம்பிக்கையைப் பெற் றார்கள். ஆனால் முரடர் தலைவனோ, “நாசமாய்ப் போகிற லாரி இந்த நல்ல சமயத்திலா வரவேண்டும் ?” என்று ஆத்திரப்பட்டான். அந்த ஆத்திரத்தில்  அவன் தன் கையிலிருந்த ஒரு கூரான கல்லை அந்த மனிதனின் தலையைக் குறி பார்த்து எறிந்தான்; எறிந்துவிட்டுத் திரும்பி ஓடிவிட்டான். அவன் எறிந்த கல் குறி தவறாமல் அந்த மனிதனின் தலையைப் பல மாகத் தாக்கியது. மறு நிமிஷம், ‘ஆ!’ என்று கத்திக் கொண்டே சுந்தரத்தைப் போட்டுவிட்டுத் தொப்’ பென்று கீழே விழுந்தான் அவன். 


25. எதிர்பாராதது! 

அந்த மனிதனுடன் கீழே விழுந்த சுந்தரம் சமா ளித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததும், கவலை யோடு அந்த மனிதனின் அருகிலே சென்றான். அவன் முகத்தை உற்றுப் பார்த்தான். தலையிலிருந்து ‘குபு குபு’ என்று இரத்தம் வழிந்து கொண்டிருப்பது தெரிந் தது. அத்துடன் அவன் மயக்கமுற்றுக் கிடந்தான். அந்தக் காட்சியைக் கண்ட சுந்தரம், ‘ஆ!’ என்று அலறித் துடி துடித்துவிட்டான். 

அப்படி அவன் அலறுவதற்கும், லாரி பிரகாச மான வெளிச்சத்துடன் அருகில் வந்து சரக்!’ என்று நிற்பதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் முரடர் தலைவனும், அவனுடன் வந்தவர்களும், ”ஐயோ ! போலீஸ் லாரிபோல் இருக்கிறதே!” என்று கூறிக் கொண்டே காட்டுக்குள் ஓடிப்போய் விட்டார்கள். 

ஆனால், அங்கு வந்தது போலீஸ் லாரியல்ல ; அதுமரம் ஏற்றும் லாரி. லாரி நின்றதும் அதிலிருந்து டிரைவர் கிழே குதித்தார். அவருடன் நான்கு ஐந்து வேலைக்காரர்களும் கீழே குதித்தார்கள். எல்லோரும் சுந்தரத்தின் அருகே வந்தார்கள். சுந்தரத்தைக் கண்டதும், ‘ஆ, சுந்தரம்!’ என்று அலறிவிட்டார் டிரைவர். மற்றவர்களும், தம்பி சுந்தரமா !” என்று ஆச்சரியத்தோடு கூறினார்கள். அவர்கள் எல்லோரும் சுந்தரத்தின் அப்பாவிடம் வேலை பார்ப்பவர்கள்தான். லாரியும் சுந்தரம் வீட்டு லாரிதான். அவர்களைக் கண்டதும் சுந்தரத்துக்கு மிகவும் ஆறுதலாக இருந் தது கீழே மயக்கமாகக் கிடந்த மனிதனை அவர்களுக் குக் காட்டி, நடந்ததைச் சுருக்கமாகக் கூறினான் சுந் தரம். தன்னைக் காப்பாற்றிய அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று துடிதுடிப்போடு கூறினான். 

உடனே, அவர்களில் ஒருவன் பக்கத்தில் இருந்த குளத்துக்கு ஓடிப்போய்த் தண்ணீர் எடுத்து வந்தான். முகத்தில் தண்ணீரைத் தெளித்துப் பார்த்தார்கள். அவன் எழுந்திருக்கவில்லை. அதற்குள் சுந்தரம் தன் சட்டையை இரண்டாகக் கிழித்து அவன் தலையில் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டினான். அந்தக் கட்டையும் மீறி இரத்தம் மேலே வந்து கொண் டிருந்தது. 

அதற்கு மேலும் அந்த மனிதனை அங்கே வைத் திருக்க அவர்கள் விரும்பவில்லை. அவனைத் தூக்கி லாரியில் படுக்க வைத்தார்கள் சுந்தரத்தையும் அழைத் துக்கொண்டு நேராக மாந்தலேக்குச் சென்றார்கள். அங்குள்ள பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். 

டாக்டர் வந்தார். ஏதோ, சிகிச்சை செய்து பார்த் தார். அந்த மனிதனின் மூர்ச்சை தெளியவில்லை. சுந்தரத்துக்குப் பயமாக இருந்தது. “ஏன் டாக்டர், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையே !” என்று அடிக்கடி அவன் கேட்டுக்கொண்டே யிருந்தான். 

“நிச்சயமாகச் சொல்வதற்கில்லை ! தலையில் பல மான அடி. மயக்கம் தெளிய ஊசி போட்டிருக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிய லாம் ” என்றார் டாக்டர். 

சுந்தரம் அந்த மனிதனுடைய கட்டில் ஓரமாக உட் கார்ந்துகொண்டு, அவனையே பார்த்துக்கொண்டிருந் தான். ஆஸ்பத்திரி விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் நன்றாகத் தெரிந்தது. கன்னங் கரேலென்று அவன் இருந்தான். தலை பரட்டையாயிருந்தது. தாடி யும் மீசையும் அடர்த்தியாக இருந்தன. அவை எண் ணெய் கண்டு எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ! 

இதற்குள் சுந்தரத்துக்குத் துணையாக வேலைக்காரர் களை வைத்துவிட்டு, டிரைவர் லாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். நேராக அமரபுராவை நோக்கி அறுபது மைல் வேகத்தில் ஓட்டினார். தனது எஜமா னரை, அதாவது சுந்தரத்தின் அப்பாவை அழைத்து வரத்தான் டிரைவர் அவ்வளவு அவசரப் பட்டார். 

அரை மணி நேரம் சென்றது. மயங்கிக் கிடந்த அந்த மனிதன் மெதுவாகக் கண் விழித்தான். கண் விழிப்பதைக் கண்டதும், சுந்தரம் மிகவும் ஆவலோடு அவனைப் பார்த்தான். 

“சுந்தரம்!” என்று மிகவும் மெல்லிய குரலில் அழைத்தான் அந்த மனிதன். 

 இவருக்கு நம் பெயர்கூடத் தெரிந்திருக்கிறதே ! என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே, “இதோ இருக் கிறேன் ” என்றான் சுந்தரம். 

“தம்பி, உனக்குக் காயம் எதுவும் இல்லையே !” என்றான். 

“எனக்கு ஒரு சிறு காயம்கூட இல்லை. என்மேல் அடி விழாமல், நீங்கள் தான் எல்லா அடிகளையும் வாங் கிக்கொண்டு விட்டீர்களே ! முரடர்கள் இப்படியா அடிப்பது! ஐயோ, என்னால் அல்லவா உங்களுக்கு இந்தக் கஷ்டம்.. இப்போது வலி எப்படி இருக்கிறது?”” 

“இனி எதைப் பற்றியும் கவலையில்லை. நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். சுந்தரம்,நான் போலீஸாரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். உடனே போலீஸார் வருவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?” 

“இதோ டாக்டரிடம் சொல்லி, ‘போன்’ பண்ணச் சொல்லுகிறேன் ” என்று கூறி டாக்டரிடம் விஷயத் தைச் சொன்னான் டாக்டரும் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்களை வரச் சொன்னார். 

இதற்குள் அந்த மனிதன் சுந்தரத்திடம், சுந்த ரம், ரமணியைப் பார்க்க வேண்டுமே ! உடனே அவ னைப் பார்க்க வேண்டும்” என்றான். 

‘ரமணிதானே ! இதோ அழைத்துவரச் சொல்லு கிறேன்” என்று சுந்தரம் கூறிக்கொண்டிருக்கும் போதே, “சுந்தரம்! சுந்தரம்!” என்று கத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்குள் ஓடி வந்தான் ரமணி. அப்படியே சுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, கட்டிலில் கிடந்த மனிதனைப் பார்த்தான். பார்த்ததும், “சுந்தரம், இவர்தான் உன்னைக் காப்பாற்றினாரா ! ஐயோ ! இவர் உடம்பெல்லாம் காயமாயிருக்கிறதே !” என்றான். 

“இவர்தான் என்னைக் காப்பாற்றினார். உன்னைக் கூட இவர்தான் காப்பாற்றியிருக்க வேண்டும்!” என்று கூறினான் சுந்தரம். 

அப்போது சுந்தரத்தின் அப்பா,அம்மா,சிற்சபே சன், காமாட்சி அம்மாள், மாலதி எல்லோரும் அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே லாரி லாரி யில் தான் வந்தார்கள். சுந்தரத்தின் அப்பாவிடம், டிரைவர் விஷயத்தைச் சொன்னதும், அவர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு மாந்தலே ஆஸ்பத் திரிக்கு வந்தார். வரும் வழியிலேதான் சிற்சபேசனின் பங்களா இருந்தது. அதனால், அங்கே அவர் லாரியை நிறுத்தி அவர்களையும் அழைத்துக்கொண்டு வந்தார். ரமணிகூட அதே லாரியில் தான் வந்தான். 

ஆனால் ஆஸ்பத்திரிக்கு முன்னால் லாரி நின்றதும், எல்லோ ருக்கும் முன்பாக அவன்தான் கீழே இறங்கினான். வேகமாக உள்ளே ஓடினான். 

ரமணியும் மற்றவர்களும் கட்டிலில் அடிபட்டுக் கிடந்த அந்த மனிதனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவன் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். அடையா ளம் தெரியவில்லை. “முன்பின் தெரியாத இந்த மனி தர் எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிறார் ! அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் !” என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  

அப்போது அந்த மனிதன், “தம்பி, ரமணி!” என்று மெதுவான குரலில் அழைத்தான். 

உடனே ரமணி, “இதோ இருக்கிறேன்” என்று கூறி அந்த மனிதனின் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றான். 

“ரமணி, நீ சுகமாக இருக்கவேணும். உன் சிநேகி தன் சுந்தரம் சுகமாக இருக்கவேணும்.” என்று கூறிக் கொண்டே ரமணியின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தடவிக் கொடுத்தான் அந்த மனிதன். அப் போது அவன் குரல் கம்மியிருந்தது அரை குறை யாகவே வார்த்தைகளும் வெளி வந்தன. 

உடனே ரமணி, “ஐயா, எங்களுக்காக நீங்கள் இவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் யார் என்பதை நாங்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே !” என்று கலக்கத்தோடு கேட்டான். 

“தம்பி, சொல்லத்தான் போகிறேன். இந்தக் கடைசி காலத்திலாவது சொல்லித்தானே ஆகவேண்டும்! அப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும்” என்றான் அந்த மனிதன். 

அப்போது ‘சரக், சரக்’ என்று ‘பூட்ஸ்’ சத்தத் துடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும், சில போலீஸ் காரர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்டதும் கட்டிலில் படுத்திருந்த மனிதன், “ஐயா, கான் இனிப் பிழைக்க மாட்டேன், செத்துப்போவதற்கு முன்னால் உங்களிடம் சில உண்மைகளைக் கூற வேண் டும். அதற்காகவே அழைத்து வரச் சொன்னேன் என்றான். 

உடனே எல்லோரும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஆவலுடன் கேட்கத் தயா ரானார்கள். 

“ஐயா, நான் யாரென்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமானால், முதலில் இந்தத் தாடியையும் மீசையையும் எடுத்தாக வேண்டும்” என்று கூறிவிட்டு, அவன் தன் தாடியையும் மீசையையும் பிடித்துப் பல மாக இழுத்தான். என்ன ஆச்சரியம் ! அவை கையோடு வந்துவிட்டன! ஆம், பொய்த் தாடி மீசைகளைத்தான் அவன் ஒட்ட வைத்திருந்தான்! 

தாடியையும் மீசையையும் எடுத்தவுடனே ரமணி யும் சுந்தரமும் அவனைப் பார்த்தார்கள். பார்த்ததுமே, “ஆ! சுப்பையாவா! குகையில் இருந்த சுப்பையாவா !” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். 

“ஆம், சுப்பையாதான். அந்த முரடர் கோஷ்டியைச் சேர்ந்த சுப்பையாவேதான்” என்றான் அவன். 

அந்த மனிதன் முரடர் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும், எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமா யிருந்தது. அதே சமயம் அவன் ரமணியைப் பார்த்து, “தம்பி ரமணி! நான் முரடர் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்பதைக் கேட்டதுமே எல்லோரும் ஆச்சரியப்படு கிறீர்கள். அனால், இதைக் காட்டிலும் மிக ஆச்சரிய மான ஓர் உண்மையை நான் இப்போது கூறப் போகி றேன்” என்றான். அவனால் வேகமாகவோ, பலமாகவோ பேச முடியவில்லை. தட்டுத் தடுமாறிச் சொல்ல ஆரம்பித்தான். 

“ரமணி, நீ பிறந்த வேலங்குறிச்சியிலே தான் நானும் பிறந்தேன்”. 

“அப்படியா! நான் பிறந்த ஊரில்தான் நீங்களும் பிறந்தீர்களா?’ 

“ஆம். அதுமட்டுமல்ல; நீ பிறந்த குடும்பத்திலே தான் நானும்பிறந்தேன்” என்றான் சுப்பையா. 

“நிஜமாகவா!” 

“சத்தியமாகச் சொல்லுகிறேன். உன் அப்பாவும் நானும் உடன் பிறந்தவர்கள். நான் உன் சித்தப்பா !” 

“என் சித்தப்பாவா !” ரமணியின் ஆச்சரியம் பல மடங்காயிற்று. மற்றவர்களும் அப்படியே ஆச்சரியப் பட்டார்கள். 

சுப்பையா மேலும் சொல்ல ஆரம்பித்தான் : 

“ரமணி, நீ ஆறு வயசுப் பையனாக இருந்தபோது, நான் இந்த நாட்டுக்குப் புறப்பட்டு வந்தேன். ரங்கூ னிலுள்ள ஒரு செட்டியார் கடையிலே கணக்கப்பிள்ளை யாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டாவது மகா யுத்தம் வந்தது. ஜப்பான்காரன் குண்டு மாரி பொழிந்து கொண்டிருந்தான். ரங்கூன் தலைநகராதலால், எந்த நேரத்திலும் தங்கள் மேல் குண்டு விழுந்து விடும் என்று அங்கிருந்த மக்கள் பயந் தார்கள். ஆகையால் நகரை விட்டுக் கிராமப்புறங்களை நோக்கி ஓடினார்கள். நானும் காட்டுப் புறத்திலுள்ள ஒரு குக்கிராமத்துக்குச் சென்றேன். ” 

சுப்பையா இப்படிக் கூறும்போதே ரமணி குறுக் கிட்டு, “ஆமாம், இப்போது நினைவுக்கு வருகிறது. அப்பா முன்பெல்லாம் அடிக்கடி உங்களைப் பற்றிச் சொல்லுவார். யுத்தத்திலே நீங்கள் குண்டுபட்டு இறந்து விட்டீர்களோ என்றுகூட அவர் சந்தேகப்பட்டார்” என்றான். 

“ரமணி, நான் குண்டுபட்டு இறந்திருந்தால் கூடத் தேவலை. இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யாமல் போயிருப்பேன். குக்கிராமத்தில் நான் தங்கியிருந்த போது சிலர் எனக்குச் சிநேகிதர்களானார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்தப் பாதகமான தொழிலில் ஈடுபடடேன். பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளைத் தூக்கி வந்து ஒளித்து வைத்துப் பணம் பறிப்பதே எங்கள் வேலையாய்ப் போய்விட்டது. இதில் வருமா னம் கிடைத்ததால் ஊரை மறந்தேன்; உறவினரை மறந்தேன்; பர்மாவிலுள்ள தமிழர் வீட்டிலே உளவு தெரிந்து வர என்னைத்தான் அனுப்புவார்கள். நீயும் சுந்தரமும் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்று உளவு சொன்னவன் நான்தான். உங்களைத் தூக்கிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தவனும் நான்தான். உன்னை சிற்சபேசனின் சொந்தப் பிள்ளை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று நள்ளிரவில் சுந்தரத்திடம் நீ உன் வரலாற்றைச் சொன்னாயே, அப்போதுதான் எனக்கு உண்மை தெரிந்தது.” 

சுப்பையா இதைச் சொன்னதும், “அப்படியானால், அன்று இரவு குகையில் நாங்கள் பேசியதை யெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டான் சுந்தரம். 

“ஆம்,தம்பி. தற்செயலாகத் திரும்பிப் படுத்த என் காதில் மெதுவாக ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. உற்றுக் கேட்டேன். உண்மை தெரிந்தது……ரமணி, நீயோ என் சொந்த அண்ணன் மகன். உனக்கு அப்பா இல்லை; அம்மா இல்லை. உயிரோடு இருக்கும் சித்தப்பனும் உதவாமல் போனேன். இந்த நிலையில் அனாதையாகத் திரிந்த உ ன் னை அருமையோடு வளர்த்து வருகிறார். சிற்சபேசன். அவரிடமிருந்து நாங்கள் உன்னைப் பிரித்தோம். மேலும், ரூபாய் பத் தாயிரம் தந்தால் தான் உன்னைத் திருப்பித் தருவோம் என்று அந்த நல்ல மனிதரை மிரட்டினோம். எவ்வளவு பாதகமான செயல் ! இதை நினைக்கவே என் நெஞ்சு கூசுகிறது.” 

இதற்கு மேல் சுப்பையாவால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. உடனே ரமணி ஓடிப்போய்த் தண்ணீர் வாங்கிவந்து அவனிடம் கொடுத்தான். 

சுப்பையா தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்ப வும் பேச ஆரம்பித்தான். ரமணியும் மற்றவர்களும் சுப்பையாவை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், அவன் கேட்கவில்லை. “எப்படியும் நான் சீக் கிரத்திலேயே செத்துப் போய்விடுவேன். சாகும்போதா வது நிம்மதியாகச் சாகவேண்டும் என்பதே என் ஆசை. எல்லாவற்றையும் உங்களிடம் சொன்னால்தான் அந்த நிம்மதி எனக்கு ஏற்படும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தான். 

“ரமணி, குகையிலுள்ள இரும்புக் கதவுக்கு ஒரே மாதிரி நான்கு சாவிகள் உண்டு. நாங்கள் ஆளுக்கு ஒரு சாவி வைத்திருக்கிறோம். நீ என் அண்ணன் மகன் என்பது தெரிந்ததும், அன்று இரவே உன்னைக் காப் பாற்ற நினைத்தேன். நீயும் சுந்தரமும் பேச்சை முடித்து விட்டு எப்போது தூங்குவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தேன். நீங்கள் தூங்க ஆரம்பித்தீர் கள். தக்க சமயம் பார்த்து, குகைக் கதவைத் திறந்து உன்னைத் தூக்கி வந்துவிட்டேன். பங்களா வராந்தா வில் உன்னைப் படுக்க வைத்துவிட்டுத் திரும்பவும் குகைக்கு ஓடினேன். ஒன்றும் தெரியாதவன் போல் படுத்துக்கொண்டேன். மறுநாள் காலையில் உன்னைக் காணாததும் அவர்கள் திடுக்கிட்டார்கள். ஆனாலும், என்மேல் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்படவில்லை.என்னையே விஷயத்தை அறிந்துவர வெளியில் அனுப்பினார்கள். செருப்புத் தைப்பவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு போகும்படி தலைவன் சொன்னான். ஆனால், அந்த வேஷத்தில் நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை.” 

“தாடி நரைத்த கிழவரைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்தேன். உன்னைப் பார்க்கப் பார்க்க என் உள்ளம் பூரித்தது. உன் கதைகளை முன் வரிசையில் உட்கார்ந்து கேட்கக் கேட்க எனக்கு ஒரே ஆனந்தமா யிருந்தது. ஆனால், திடீரென்று நீ கதையை நிறுத்தி விட்டாய். காரணம் தெரிந்தது. உன் அருமை நண் பன் சுந்தரம் குகையில் இருப்பதை நினைத்தே நீ கவலைப் படுகிறாய் என்று அறிந்தேன். அவன் கட்டாயம் மறு நாள் காலைக்குள் வந்துவிடுவான் என்று ஜோஸியம் கூடச் சொன்னேன்! ஆனால், சொல்லிவிட்டு நான் சும்மா இருக்கவில்லை. உன் ஆசையைப் பூர்த்தி செய்ய நேற்று இரவே அங்கு சென்றேன். நள்ளிரவில் ஒரு தாடிப் பரதேசி போல் வேஷம் போட்டுக்கொண்டு சுந் தரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன் ஆனால் எதிர்பாராத விதமாகத் தலைவன் விழித்துக்கொண்டு விட்டான். உடனே, கூச்சல் போட்டு மற்றவர்களோடு என்னைத் துரத்தினான். கல்லால் அடித்தான். காயப் படுத்தினான். ஆனாலும், சுந்தரத்துக்கு ஒரு காயமும் இல்லாமல் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்துவிட் டேன். நான் எத்தனையோ பாதகச் செயல்களை யெல் லாம் செய்திருக்கிறேன். ஆனாலும், கடைசி காலத்தி லாவது ஒரு நல்ல காரியம் செய்தேனே, இதுவே எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.” 

சுப்பையா கூறியதைக் கேட்கக் கேட்க எல்லோரு டைய ஆச்சரியமும் அதிகமாகிக் கொண்டே யிருந்தது. 

சப்-இன்ஸ்பெக்டரும் ஆச்சரியத்துடனே அவன் இது வரை கூறியதை யெல்லாம் குறித்துக் கொண்டார். பிறகு, “சுப்பையா, உன்னிடம் ஒன்று கேட்க வேண் டும். உன் கோஷ்டியார் இதுவரை எத்தனை பிள்ளை களைத் தூக்கிச் சென்றிருப்பார்கள் ?” என்று கேட்டார். 

“சுமார் அறுபது இருக்கலாம். ஆனாலும், நாங்கள் ஒரு பழக்கம் வைத்திருந்தோம். நாங்கள் சொல்லும் இடத்தில் பணத்தை வைத்துவிட்டால், பணத்தை எடுத்துக்கொண்டு, தூக்கி வந்த பிள்ளைகளைத் திருப்பி அனுப்பிவிடுவோம். இப்போது ஒரு குழந்தை கூட அக்குகையில் இல்லை” 

உடனே, “அப்படியா ! கடிதம் கிடைத்த அன் றைக்கே குறிப்பிட்ட மரப் பொந்தில் பத்தாயிரத்தைக் கொண்டு போய் வைத்தோமே! ஏன் சுந்தரத்தைத் திருப்பி அனுப்பவில்லை?” என்றார் சுந்தரத்தின் அப்பா தாமோதரம். 

“நிஜமாகவா? பணம் மரப் பொந்துக்கு வரவில் லையே !” என்றான் சுப்பையா. 

உடனே தாமோதரம், “ஏண்டா, கந்தசாமி ! உன் னிடம்தானே கொடுத்து அனுப்பினேன் ?’ று கேட்டுக் கொண்டே, தன்னுடன் வந்த தேக்கு மரக் காட்டு மேஸ்திரியான கந்தசாமி நின்ற பக்கம் திரும் பினார். அப்போது அவன் மெதுவாக நழுவப் பார்த் தான். உடனே ‘குப்’ பென்று பாய்ந்து அவன் கழுத் தைப் பிடித்துக் கொண்டார். பிறகு போலீஸார் அவனை உதைத்துக் கேட்டதில் உண்மை வெளியாயிற்று. எஜமானை ஏமாற்றிப் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டான், அந்தத் துரோகி ! அங்கேயே அவனுக்கு விலங்கு மாட்டினார்கள் போலீஸ்காரர்கள். 

கந்தசாமியைக் கைது செய்த பிறகு, சப்-இன்ஸ் பெக்டர் சுப்பையாவைப் பார்த்து, “சுப்பையா ! இப் போது உன்னைச் சேர்ந்தவர்கள் எங்கே இருப்பார்கள்? அதை மட்டும் சொல்லு” என்று கேட்டார். 

“இதோ அதையும் சொல்லத்தான் போகிறேன். இனிமேலாவது இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகள் அவதிப் படாமல் இருக்கட்டும். என் கோஷ்டியைச் சேர்ந்தவர் கள் வழக்கமாக இருக்கும் குகையில் இப்போது இருக்க மாட்டார்கள். ஆபத்து வரும்போல் தோன்றினால், ஒளிந்து கொள்வதற்கு வேறொரு குகை இருக்கிறது. அங்கேதான் இப்போது இருப்பார்கள் ” என்று கூறி, அந்தக் குகை இருக்கும் இடத்தையும் விவரமாகத் தெரிவித்தான். 

பிறகு சிற்சபேசனைப் பார்த்து, ” தயவு செய்து என்னை மன்னித் துவிடுங்கள். வீண் சிரமம் கொடுத்து விட்டேன். ரமணியிடம் நீங்கள் அதிகமான அன்பு வைத்திருக்கிறீர்கள். இந்த அன்பு வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று வணக்கத்தோடு கூறினான். அதற்கு மேலும் அவனால் பேச முடியவில்லை. உணர்ச்சி அதிகரித்தது. நெஞ்சு அடைத்துக்கொண்டது. ஆ ஆ மறு நிமிஷம் மூச்சு நின்றுவிட்டது! 


26. வாழ்க, வாழ்க ! 

லாரியைக் கண்டதும் ஓட்டமாகத் திரும்பி ஓடினார் களே முரடர்கள், அவர்கள் வெகுதூரம் சென்றுதான் நின்றார்கள். தாங்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்டோமா என்று சரிபார்த்துக் கொண்டார்கள். அப் போதுதான் சுப்பையாவைக் காணோம் என்பது தெரிந் தது. இது வரையிலும் ஒரே அவசரத்திலும் குழப்பத்தி லும் இருந்ததால், சுப்பையா தங்களோடு இருக்கிறானா இல்லையா என்றுகூட அவர்கள் பார்க்கவில்லை ! பார்க்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட வில்லை. 

சுப்பையாவைக் காணோம் என்று தெரிந்த பிறகும். அவர்கள் அவன் மேல் சந்தேகப்படவில்லை. “சுப்பையா கெட்டிக்காரன். ஒளிந்து ஒளிந்து அவர்கள் பின்னா லேயே போய் விஷயத்தைத் தெரிந்துகொண்டு வந்து விடுவான்” என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத் துக்கொண்டு குகைக்குச் சென்றான் தலைவன். 

ஆனால், அந்தக் குகையில் அவர்கள் சிறிது நேரம் கூட இருக்கவில்லை. இனி நாம் இந்தக் குகையில் இருந்தால் ஆபத்து நிச்சயம் ! சுந்தரத்தையும் ரமணி யையும் தூக்கிச் சென்றவன் நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்!” என்று எண்ணி அவர்கள் வேறொரு குகைக்குப் பணப்பெட்டி, சாமான் கள் முதலிய வற்றுடன் புறப்பட்டுவிட்டார்கள். ஆனால், போலீஸ் காரர்களா விடுவார்கள் ? அவர்கள்தான் அந்தக் குகை யைப் பற்றிச் சுப்பையா மூலமாகத் தெரிந்து வைத் திருந்தார்களே! ஆயுதம் தாங்கிய ஒரு பெரிய படை யுடன் சப்-இன்ஸ்பெக்டர் புறப்பட்டுச் சென்று அந்தக் குகையை முற்றுகையிட்டார். முரடர்கள் மூவரும் தப்ப வழியில்லாது உடனே போலீஸாரிடம் சரண் அடைந்தார்கள். 

முரடர் கோஷ்டி பிடிபட்ட செய்தி மாந்தலே நகரில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது அவர்கள் பிடிபட்டதற்குக் காரணம் ரமணிதான் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அதனால், ரமணியின் புகழ் இன்னும் அதிகமாயிற்று. அவனது கதையைக் கேட்க மாந்தலே நகரத்துக் குழந்தைகள் எல்லோருமே திரண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். 

சித்தப்பா இறந்து போனதை நினைத்துச் சில சம யம் ரமணி வருத்தப்படுவான். ஆனாலும், கூட்டம் கூட்டமாக வரும் குழந்தைகளைக் காணும்போது அந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் ஓடிமறைந்துவிடும். குஷியாக அவர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்துவிடு வான். அவன் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டுக் குழந்தைகள் ஆனந்தப்படுவார்கள். பெரியவர்கள் ஆச்சரியப்படுவார்கள். 

ரமணி சொல்லும் கதைகளையெல்லாம் பத்திரிகை களுக்கு எழுதி அனுப்பினால், நிச்சயம் வெளியிடுவார் கள் என்று அங்கு வரும் சில பெரியவர்கள் அடிக்கடி சொல்லி வந்தார்கள். சுந்தரத்தின் அப்பா தாமோதர மும் ரமணியிடம் இதைச் சொன்னார். சொன்னதோ டல்ல; கட்டாயப்படுத்தி எழுதி அனுப்பவும் செய்தார். பர்மாவிலுள்ள சில தமிழ்ப் பத்திரிகாசிரியர்கள் ரமணி யின் கதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். அவ னுடைய கற்பனைத் திறத்தைப் போற்றினார்கள். தங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கமளித் தார்கள். மூன்று மாதங்களில் சுமார் முப்பது கதை களுக்கு மேல் பத்திரிகைகளில் வெளி வந்துவிட்டன ! எல்லாக் கதைகளுமே அற்புதமான கதைகள். அந்தக் கதைகளைப் பாராட்டித் தினமும் பத்திரிகாசிரியர்களுக் குக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. 

ரமணிக்குப் பெயரும் புகழும் பெருகி வருவதைக் கண்ட சிற்சபேசனும், தாமோதரமும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுப்படி இருவரும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டு ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்தார்கள். அதன் பெயர் ரமணி சுந்தர் பதிப் பகம்’. அதிலிருந்து ரமணியின் கதைகளை யெல் லாம் புத்தகங்களாக வெளியிடுவதென்று தீர்மானித்தார்கள். முதல் புத்தகமாக ரமணியின் புகழ்பெற்ற ‘கோமாளிக் குப்பன்’ வெளிவந்தது. 

ஆனால், ரமணி பர்மாவில் இருக்கிறான் என்பதும் முதலில் கதாசிரியனாக இருந்து, இப்போது புத்தக ஆசிரியனாகி விட்டான் என்பதும் நாடகசபா மானேஜர் மதுரநாயகத்துக்குத் தெரியுமா? அவர் அடிக்கடி ரமணியை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டேயிருந் தார். ‘இப்போது ரமணி எங்கே இருக்கிறானோ ! எப்படி இருக்கிறானோ!’ என்பதே அவரது கவலை. 

அன்று காலையில் நாடக சபாவிலுள்ள தம்முடைய அறையில் மதுரநாயகம் கவலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்னால் சில கடிதங்களைக் கொண்டுவந்து வைத்தான், ஆபீஸ் பையன் சிங்காரம். அந்தக் கடிதங்களுடன் உறை யோடு கூடிய ஒரு புத்தகம் இருந்தது. உறையை அகற்றிவிட்டுப் புத்தகத்தை எடுத்துப் பெயரைப் பார்த் தார். கோமாளிக் குப்பன்’ என்ற பெயரைக் கண்ட தும் அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வேடிக்கை யான பெயரா யிருக்கிறதே !’ என்று கூறிக்கொண்டே உள்ளே பார்த்தார். முதல் பக்கத்தில், ‘எழுதியவர்- பர்மா ரமணி என்று இருந்தது. உடனே அவர், “என்ன! பர்மா ரமணியா ! அது யார் ?” என்று ஆச் சரியத்தோடு அடுத்த பக்கத்தைப் புரட்டினார். அங்கே ஒரு கட்டம் கட்டி, அந்தக் கட்டத்தின் நடுவே “அனாதையாக இருந்த எனக்கு ஆறு மாத காலம் ஆதர வளித்து, அன்போடு வளர்த்துவந்த சென்னை ஸ்ரீ முருகன் பால நாடக சபா மானேஜர் மதுரநாயகம் அவர்களுக்கு – சமர்ப்பணம் ” என்று அச்சிடப்பட்டிருந்தது. 

இதைக் கண்டதும் மதுரநாயகம், “ஆ! என் ரமணி யல்லவா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறான் !” என்று கூறிக்கொண்டே தம் இடத்தைவிட்டு எழுந் தார். துள்ளிக் குதித்துக்கொண்டே முதலாளி மோகனரங்கத்திடம் ஓடினார். அந்தப் புத்தகத்தைக் காட்டி விஷயத்தைக் கூறினார். அவருக்கு ஒரே ஆனந் தம்! உடனே அவர், “மதுரநாயகம்! ரமணியின் விலாசம் இதில் இல்லையே ! ஆனாலும் பரவாயில்லை. இதில் பதிப்பகத்தின் விலாசம் இருக்கிறது. உடனே அந்த விலாசத்துக்கு ஒரு தந்தி கொடுப்போம். ரமணியை விரைவில் இங்கு வரவழைக்க வேண்டும் ” என்றார். 

அன்றே தந்தி கொடுத்தார்கள். ரமணியும் பதில் தந்தி கொடுத்து, ஒரு நீண்ட கடிதமும் எழுதி அனுப் பினான். அந்தக் கடிதத்தில், நடந்தவற்றை யெல்லாம் விவரமாக எழுதிவிட்டு, ‘தந்தியில் கண்டபடி உடனே புறப்பட்டு வரவேண்டும்; உங்களை யெல்லாம் காண வேண்டும் என்றுதான் என் மனம் துடிதுடிக்கிறது. ஆனாலும், இங்குள்ளவர்களுக்கு இப்போது என்னைத் தனியாக அனுப்ப மனமில்லை. அத்துடன், என் கதை யைக் கேட்க வரும் குழந்தைகளும் என்னைக் காணாமல் ஏங்கிப் போவார்கள். ஆனாலும், இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது. பர்மாவில் தமிழ் நாடகம் நடப்பதே அபூர்வம். அதிலும் குழந்தைகளே நடிக்கும் நாடகத் துக்கு அபாரமான வரவேற்பு இருக்கும். ஆகையால் என் வளர்ப்புத் தந்தையும் என் சிநேகிதன் சுந்தரத்தின் தந்தையும் சேர்ந்து நீங்கள் இங்கு வந்து சில நாடகங் களை நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எல்லாச் செலவையும் அவர்கள் இருவருமே ஏற்றுக் கொள்வார்கள். அவசியம் நீங்கள் இங்கு வரவேண்டும். நீங்கள் இங்கு வந்தால் ஒருவரை ஒருவர் சந்திக்க வழி யுண்டு. அத்துடன் இங்குள்ள தமிழ் நாட்டுக் குழந்தை களும், பெரியவர்களும் நம் சபா நாடகங்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களது வேண்டு கோளைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று எழுதினான். 

முதலாளி மோகனரங்கத்துக்கு வெகு நாட்களா கவே ஓர் ஆசை உண்டு. கடல் கடந்து சென்று நாட கங்கள் நடத்திக் காட்டவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ரமணியின் கடிதத்தைக் கண்டதும் மோகன ரங்கத்துக்கு அளவில்லாத ஆனந்தம். உடனேயே பர்மா புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்யும்படி சொன்னார். 

பாஸ்போர்ட் எடுப்பதற்கும் மற்ற ஏற்பாடுகளைச் செய்வதற்கும் சரியாக இரண்டு மாதங்களாயின. மூன் றாவது மாத ஆரம்பத்தில் சபா பர்மாவுக்குப் புறப்பட் டது. சபாவிலுள்ள சிறுவர்களுக்கு ஒரே ஆனந்தம். கடல் கடந்து அந்நிய நாடான பர்மா தேசத்துக்குத் தாங்கள் போகப் போகிறோம் என்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. 

பர்மா வந்ததும் மதுரநாயகம் முதல் காரியமாக ரமணியைப் பார்க்கத்தான் விரும்பினார். ஆம், நெடு நாட்களாகப் பிரிந்திருந்ததால் அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. 

பர்மாவில் ரமணியைக் கண்டதும் மதுரநாயகம் அப்படியே அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார். அப் போது மோகனரங்கமும் மற்றவர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிரிந்தவர் கூடும் போது ஆனந்தத்துக்குக் கேட்க வேண்டுமா? 

மாந்தலே நகரில் முதல் முதலாக அவர்கள் நடத்திய நாடகம் ‘கோமாளிக் குப்பன்’ என்பதுதான்! ஆம், ரமணி எழுதிய கதையைத்தான் அவர்கள் நாடகமாக்கிருந்தார்கள். இடையிலே இருந்த இரண்டு மாத காலத்தில் அந்த நாடகத்தை அவர்கள் தயாரித்து விட்டார்கள். 

முதல் நாள் நடந்த நாடகத்துக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அனுமதிக்கப்பட்டார்கள். மாந்தலே நகரிலுள்ள எல்லாக் குழந்தைகளும் பர்மியக் குழந்தைகள் உள்பட – கும்பல் கும்பலாக வந்து ‘கோமாளிக் குப்பன்’ நாடகத்தைக் குதூகலத்துடன் பார்த்தார்கள். அடிக்கடி கைதட்டி ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள்.” ஆஹா! அற்புதம்! அபாரம்!” என்று வாய்விட்டுப் புகழ்ந்தார்கள். நாடகத்தை எழுதிய ரமணிக்கு மாலை போட்டு மரியாதை செய்யும்போது, ‘பர்மா ரமணி வாழ்க! பர்மா ரமணி வாழ்க!’ என்று அந்தக் கொட்டகையே அதிரும் படி குழந்தைகள் எல்லோரும் கோஷமிட்டார்கள். அவர் களுடன் சேர்ந்து நாமும், “பர்மா ரமணி வாழ்க! நீடூழி வாழ்க !” என்று வாழ்த்துவோமாக !

-முற்றும்-

– பர்மா ரமணி (நாவல்),1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *