கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 8,057 
 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மலாகி- கார்ன்வால் மாவட்டத்தின் கடற்கரைஒரே பாறை மயமானது. பாறைகள் செங்குத்தாகவும் அடிக் கடி கடற்கரை நெடுகப் பலகல் தொலைவுவரை தொடுப் பாகவும் கிடந்தன. அத்துடன் அவை சுவர்போல் அலை கள் வந்து மோதும் இடத்திலேயே திடுமென இறங்கி முடிவுற்றதனால், கடற்கரைப் பக்கம் எவரும் எளிதில் வரமுடியாமல் இருந்தது. பாறைகளில் ஒருசில இடுக்குப் பிளவுகள் இருந்தன. இவற்றின் வழியாகக்கூட மக்கள் மிக அரும்பாடுபட்டே ஏறி இறங்கிக் கடலின் அலை வாய்க்குச் செல்லமுடியும். அப்படிச் செல்வதும் பேரிடர் தருவதாகவே இருந்தது. ஏனென்றால், பாறைக்கும் அலைக்கும் இடையே மண்திடலோ மணலோ எதுவும் கிடையாது. எப்போதேனும் சிறிது மணல் திரண்டால் கூட, அஃது ஒரு வேலி ஏற்றத்தில் காணப்பட்டு , அடிக் கடி அதே வேலி இறக்கத்திற்குள் காணாமல் மறைந்து விடும். வேல் ஏற்றத்தில் அலைகள் பொங்கிவரும் வேகத் தில் எவரும் பாறை ஏறு முன் அலைகளுக்கு இரையாக வேண்டி வரும்.

கார்ன்வால் நிலப்பகுதி வேளாண்மைக்குப் பேர் வசதியை மக்கள் அங்கே தேடிக்கொண்டிருந்தனர். கடற்கரையில் அலைகள் பாறையருகே பேரளவாகக் கடற்பாசிகளைக் கொண்டு ஒதுக்கிவந்தன. அக் கடற் பாசி நிலத்துக்கு நல்ல ஊட்டம் தருவது என்று கண்ட மக்கள், ஆண்டுதோறும் அதைப் புதிய புதிய உரமாகப் பயன்படுத்தி நிலவளங்கண்டனர். இதனால் வேளாண்மைக்கு உறுதுணையான முக்கிய தொழில்களாகக் கடற் பாசி திரட்டும் தொழிலும், அதைத் தொலை உள்நாட்டுப் பகுதிவரை கொண்டுசென்று விற்கும் தொழிலும் வளர்ச்சியடைந்தன.

கடற்பாசி இயற்கை தரும் வளமானாலும், அதைத் திரட்டும் தொழில் உண்மையில் அவ்வளவு எளிதா யில்லை. கடலின் பாசிவளத்தில் மிகச் சிறு பகுதியே கரையில் ஒதுக்கப்பட்டது. பெரும்பகுதி திறந்த கடலி லேயே மிதந்து சென்று விடும். அத்துடன் வேலி ஏற்றத் தில் கரையில் ஒதுக்கப்பட்ட பாசியிலும், பெரும்பகுதி மீண்டும் அடித்துக்கொண்டு செல்லப்பட்டுவிடும். பாசி சேகரம் செய்பவர் வேலி ஏறி இறங்குமுன் விரைந்து தொழில் செய்து அதைத் திரட்டிவிட வேண்டும்.

பாசி சேகரிப்பவர் கையில் நீண்டு வளைந்த கழைக் கோல் இருக்கும். கரடுமுரடான, வழுக்கலான பாறை களில் நின்று கொண்டு, கழைக்கோலை நீட்டி நீர்ப்பரப்பில் மிதக்கும் பாசிகளையும் அரிப்பர். இவ்வேலையில் இடை யூறு மிகுதி. ஏனென்றால் பாறைகள் வழுக்கும். குண்டு குழிகள் நிறைந்த பாறைகளினிடையே ஆழ்கசங்கள் இருந்தன. கடல் அடிக்கடி அவற்றினிடையே குமுறிக் கொந்தளிக்கும். ஆரிடர் மிக்க சுழிகளும் மிகுதி. இவற் றிடையே சிறிது தவறினாலும் கடலின் குமுறலுக்கும் குமிழிகளுக்கும் சுழிகளுக்கும் இரையாகவேண்டியது தான்

கடற்பாசித் தொழிலில் ஈடுபட்ட எல்லாருக்கும் மலாகி டிரெங்க்ளாஸ் என்றால் தெரியும். வேளாளர் நிலங் களில் பயன்படுத்தும் பாசியில் பெரும்பகுதியும் கடலகத்திலிருந்து அவன் மீட்டுக்கொண்டு வந்ததாகவே இருக்கும் – அத்தொழிலில் அவன் அவ்வளவு இரண்டற முழுநேரமும் ஈடுபட்டிருந்தான். மக்களிடையே மிகவும் வயது சென்றவர்களுக்குக் கூட எப்போதிருந்து அவன் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தான் என்று தெரியாது. அவனை மக்கள் பாறையுடன் பாறையாக வளர்ந்தவன்; கடலலையுடன் அலையாக விளையாடியவன்,’ என்றுதான் எண்ணினார்கள் – அலைகளிடையே அவன் கைகளும் பாறைகளியிடையே அவன் கால்களும் அவ்வளவு இயல்பாக ஈடுபட்டுத் தொழிலாற்றி வந்தன!

மலாகியின் குடிசை செங்குத்தான பாறையின் இடையில், பாறையின் உச்சிக்கும் கடலலைக்கும் கிட்டத் தட்ட நடு உயரத்தில் தான் இருந்தது. கடலிலிருந்து வைத்திருப்பது போலத் தோன்றும். ஆனால், உண்மை யில் அது பாறையின் சரிவில் ஒரு குறுகிய பிளவின் நடுவேயுள்ள சிறிதளவு அகன்ற ஒரு திட்டில் தான் இருந் தது. மலாகியின் முன்னோர்கள் அந்தத் திட்டைக் கண்டுபிடித்து, அதில் வீடு கட்டி வாழ்ந்து, பிளவையும் அதன் வழியாகக் கடலுக்கு இறங்கும் பாதையையும் தம் தனி உரிமையாக்கிக்கொண்டிருந்தனர். நீண்ட கால மாக எவரும் இவ்வுரிமையில் போட்டியிட எண்ண வில்லை. ஏனென்றால் பாறைகளிடையே புயற்காற்றுடன் தோழமை கொள்ளப் பலர் விரும்ப முடியாது. பிளவில் ஏறுவதும் இறங்குவதும் எளிதான காரியமும் அல்ல.

மலாகி பாசி சேகரம் பண்ணி விற்பதுடன் தன் தொழிலை நிறுத்திவிடவில்லை. அவன் தன் உட லுழைப்பால் அப்பாசிக்கும் அதைச் சேகரம் பண்ணிக் கொண்டு செல்லும் வழிக்கும் உள்ள தன் காப்புரிமை யைப் பெருக்கிக் கொண்டான். கடும் பாறைகளிடையே அவன் முன்னோர்கள் காலடிபட்டு ஏற்பட்ட முரட்டுத் தடத்தை அவன் அருமுயற்சியால் படிப்படியாய் ஏறும் ஏணிப்படிகளாக்கினான். பாசிகளை மிகுதியாகக் கொண்டு செல்ல ஒரு கழுதையை வாங்கி, அந்தப் படிகளில் ஏறி யிறங்கும்படி அதைப் பழக்கினான். மலாகியைப் போலவே அவன் கழுதையும் அக் கடுமையான வேலையில் பழக்கப் பட்டு உடலுரம் பெற்றிருந்தது.

கிழவனான பின்பு கூட மலாகியின் உடல் இரும்பு உடலாகத்தான் இருந்தது. ஆனால், இரும்பு உடல் கூட இரும்பாய் இருக்க முடியாதன்றோ ! அவன் கைகள் சிறிது சிறிதாகத் தளர்ந்தன. அவன் கால்கள் படிப்படி யாகச் சற்றே தள்ளாடத்தொடங்கின. தன் கிழப்பருவம் பிறர் இளமைக்கு ஈடானாலும், அக் கிழப்பருவத்துக்கும் கிழப்பருவம் வரத் தொடங்கிவிட்டது என்று அவன் அறிந்தான். எனவே, அவன் தன் வேலையின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொள்ள வேண்டி வந்தது.

அவன் கடலுக்குப் போவதையே நிறுத்தும் கால மும் வந்துவிட்டது ! பன்னிரண்டு மாதமாக அவன் கடலுக்கு இறங்கிச் சென்றதேயில்லை. ஆறுமாதமாக அவன் கடற்பாசி வீற்றுப் பணத்தை எண்ணிப் பைகளி லிட்டுப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது தவிர வேறு எவ்வகையிலும் தொழிலில் ஈடுபடமுடியாதவன் ஆனான்.

ஆனால் அவன் தொழில் மட்டும் நிற்கவேயில்லை.

மாலி – அவனுடன் அவன் சின்னஞ்சிறு பேர்த்தி மாலி பாறையில் ஏறி இறங்கிப் பழக்கப்பட்டிருந்தாள். வாழ்நாளின் பெரும்பகுதியிலும் இயற்கை அவனுக்குத் தந்த வளம் இப்போதும் மாலியின் உருவில் அவனுக்குக் கிட்டிற்று என்னலாம். அவள் அவன் தளர்ந்த நரம்பு களின் தளர்ச்சி தோன்றாமல் உடனிருந்து உழைத்துப் படிப்படியாக அவன் வேலையை ஒவ்வொன்றாக அவனிட மாக நின்று தானே மேற்கொண்டு விட்டாள்.

மலாகி பாறையுடன் பாறையாக வளர்ந்ததாக மக்கள் கருதினார்களென்றால், மாலியைப் பாறை, கடல் ஆகியவற்றின் பிள்ளையாகவே கருத இடமிருந்தது. அவள் தன் தாய் தந்தையரை அறியமாட்டாள். அவள் தாய் மலாகியின் மகள். அவள் தந்தை கப்பலுடைந்து மலாகியின் பாறைவீட்டின் பக்கம் நீந்தி வந்த ஒரு கப்பலோட்டி. மாலி பிறக்கும் முன்பே தந்தையும், பிறந்த சில மாதங்களில் தாயும் இறந்ததனால், மலாகியே அவளுக்குத் தாயும் தந்தையுமாய் அவளை வளர்க்க வேண்டி வந்தது. ஆயினும் தன் தொழிலில் இரண்டற ஈடுபட்ட அவனை விட, மலையின் செல்வியாகிய அவன் தாய் மரபும் கடலின் செல்வனாகிய அவன் தந்தை மரபுமே உள்ளூர நின்று அவளை வளர்த்தன என்னலாம். நிலத்தின் செல்வியர்களுக்கு இருக்கும் அழகு அவளிடம் இல்லை. ஆனால் மலையின் பலமும் கடலின் தங்குதடை யற்ற போக்கும் அவள் உடலில் இடங்கொண்டு வளர்ந் தன். மலை மீது மலையாடுகளின் தடம்பிறழ்ந்தாலும் பிறழலாம், அவள் தடம் பிறழ்வதில்லை. கடலின் மீன் குஞ்சுகளுக்குத் தெரிந்த அளவு நீச்சல் அவளுக்கும் தெரிந்திருந்தது.

பாட்டன் கடற் பாசியிடையே பழகியிருந்தான். அவளோ கடற் பாசியாகவே காணப்பட்டாள். பெண் கள் அணியும் ஆடையணிகளை அவள் அறியமாட்டாள். தாய் அணிந்திருந்த ஆடைகளே கந்தையுருவில் அவள் ஆடையாயின. வெளியே போகும் போது மட்டும் அவற்றை உடுத்துப் பாசியுடன் பாசியாய் அவள் இருப் பாள். அலைகளைத் தவிர வேறு விளையாட்டுத் தோழர் தோழியர் அவளுக்குத் தெரியாது . சங்கு சோழிகள் அவள் விளையாட்டுப் பொருள்களாகவும் சிற்சில சமயம் அணிமணியாகவும் பயன்பட்டன. ஊரில் பாசிக்கட்டு களைக் கொண்டு விற்பது தவிர , ஆண் பெண்கள் எவ ருடனும் அவள் பழகவில்லை. ஆடவரிடம் பழகும் முறை வேறு, பெண்களிடம் பழகும் முறை வேறு என் பதையோ சிறியவரிடமும், பெரியவர்களிடமும் பழகும் முறைகள் வேறு என்பதையோ அவள் அறியாள். நாணம், அச்சம் முதலிய பெண்கள் இயல்புகளை மலை யாடுகள் எவ்வளவு அறியுமோ , மகர மீன்கள் எவ்வளவு அறியுமோ அவ்வளவுதான் அவளும் அறிந்திருந்தாள்.

மலாகியிடம் மக்கள் பழகிய அளவுகூட எவரும் அவளுடன் பழகவில்லை. அவள் நடமாட்டத்தில் அத்தனை விரைவு இருந்தது. அவள் பேச்சில் அத்தனை கண்டிப்பு அவள் பாசி விற்பனைப் பேரத்தின் போது எப்போதாவது பாசியைப் பிறரிடமிருந்து கைப்பற்ற நேர்ந்தால், அவள் கையின் வலு புயலின் வலுவாயிருந்தது. அவள் பாசிக் காக அவளை நாடிய மக்கள் பாசிகடந்து அவளுடன் பழக அஞ்சினர்.

மலாகியின் உழைப்பைவிட மாலியின் உழைப்புக் கடுமையாயிருந்தது. மலாகி ஒரு வாரத்தில் திரட்டும் பாசியை அவள் ஒரு நாளில் திரட்டினாள். அதுமட்டு மன்று. மலாகி பாசிக்கு ஊரார் கொடுத்த விலையை ஏற்றுக்கொண்டான். மாலியோ பாசியின் விலைக்கள நிலையறிந்து, உச்சவிலைக்கே அதை விற்றாள். வேளாண் மக்களுக்கு உயிராயிருந்த அந்தப் பாசிக்கு அவள் வைத்த விலை உயர்விலையாகவேயிருந்தது. மற்ற மாந்தர் கடலி னருகே போகவே அஞ்சும் கோரப் புயலிலும் அவள் புயலுடன் விளையாடிப் பாசியை மலைபோலக் குவித்து வந்ததால், அவள் கேட்ட விலைகொடுத்து மக்கள் அதை வாங்க வேண்டியிருந்தது. மக்கள் அவள் கடுமையை வெறுத்தனர். ஆனால், மலையையும் கடலையும் எந்த அளவு மனிதர் மாற்றமுடியுமோ அந்த அளவுதான் அவள் கடுமையையும் மாற்ற முடிந்தது.

மாலிக்கு வயது இருபதாயிற்று. ஆயினும் அவளைப் பற்றி நல்லெண்ணமோ நல்மொழியோ உடைய எந்த இளைஞனும் நங்கையும் கிடையாது. அவளைப் போற்றிப் புகழ விரும்பியவர் கிழவர் கிழவியர் மட்டுமே. வயது சென்ற பாட்டனை அவள் குழந்தையை நடத்தும் தாய் போல , அதே சமயம் முழுமதிப்புடன் நடத்தியது தான் அவர்கள் உள்ளங்கவர்ந்த அவளது ஒரே நற்பண்பு.

ஃபார்ட்டி – மாலியின் அகவிலை காரணமாகப் பாசிக்குக் கிராக்கி மிகுந்தது. தொழிலில் போட்டியும் எழுந்தது. மலைப்பிளவில் ஏறி இறங்குவது எவ்வளவு கடு உழைப்பானாலும், அதைச் செய்ய இளைஞர்கள் முன் வந்தனர். மாலி திரட்டும் பாசியின் முன் அவர்கள் திரட்டியது மலையின் பக்கமுள்ள மண்மேடு போலத்தான் இருந்தது. ஆயினும் இம் முயற்சிகள் கண்டு மாலி புகையாமலிருக்க முடியவில்லை.

மலையும் கடலும் எவருக்கும் தனியுரிமைப்பட்டவை யல்லவே என்று இளைஞர் ஒருவரிடம் ஒருவர் முணு முணுத்துக்கொண்டு பேசுவதை அவள் கேட்டிருந்தாள். ஆனால் மலையிடுக்கு / அத்துடன் அப்பாதையும் முற்றிலும் இயற்கையாய் அமைந்த பாதையல்லவே! படிக் கற்கள் ஒவ்வொன்றும் அவள் பாட்டன் மலாகி தொலைவி லிருந்து தூக்கிவந்தவைகள் என்பதை அவள் எப்படி மறக்க முடியும்? அவற்றுக்கு அண்டை கொடுத்து நிலைக்கவைக்கப் பொடிக் கற்களையும் பாசிகலந்த மண் ணையும் சிறுமியாயிருக்கையில் அவள் தானே தன் சின்னஞ்சிறு கைகளில் தூக்கிவந்தாள்! அவர்களுக்கும் அவர்கள் கழுதைக்கும் இருக்கும் உரிமை எப்படி ஊரா ருக்கும் அவர்கள் கழுதைகளுக்கும் இருக்கமுடியும் என்று அவள் கள்ளமில்லா முரட்டு உள்ளம் உள்ளூர வாதாடிற்று.

ஏழைச் சிறுவர் போட்டி மாலியை அவ்வளவாக உறுத்தவில்லை. செல்வர் வீட்டுச் சிறுவரும் இதில் வந்து கலந்து கொள்வதைக் கண்டபோது அவள் பொறுக்க முடியவில்லை. வேளாளன் ஃகன்லிஃவ் பெரும் பண்ணை யாளன். அவன் நிலபுலங்களுக்கு மாலியின் பாசியுரத் தில் ஐந்தில் ஒரு பங்குக்கு மேல் தேவையாயிருந்தது. அவள் கேட்ட விலையையெல்லாம் அவள் கொடுக்க இசைந்தும் தேவையளவுக்கு அருந்தல் காலத்தில் பாசி பெறமுடியவில்லை. அவன் மகன் ஃபார்ட்டி இருபத் திரண்டு வயது இளைஞன். அவன் தானே சென்று சேகரித்து அருந்தல் காலத்துக்கும் சேமித்து வைப்பதென்று துணிந்தான். அதற்காக அவன், ஒரு கழுதையையன்று. ஒரு மட்டக்குதிரையையே வாங்கிவந்தான்.

ஏழையுரிமையில் செல்வர் போட்டி, கழுதை உரிமையில் குதிரை போட்டி என்று மாலி கறுவினாள்.

ஒரு கழுதைக்குமேல் செல்லமுடியாத பாதை இடுக்கில் அடிக்கடி ஃபார்ட்டி குதிரை நின்று மேய்ந்து கொண்டிருந்தது. இது கழுதையும் அவளும் செல்லும் இடத்தை அடைந்தது. அவள் உள்ளம் மேலும் புகைந்தது. ‘குதிரையின் கால்களை முறித்துவிடு கிறேன்’ என்று கூறிக்கொண்டாள் அவள்.

அவனைக் கண்டபோதெல்லாம் அவள் சீறிவிழுந் தாள். “நீ வேளாளன் பிள்ளையாயிருக்க முடியாது; பாசி விற்பவன் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். உன் குதிரையும் குதிரையாயிருக்க முடியாது. அது போன தலைமுறையில் ஒரு கழுதைக்குட்டியாகத்தான் இருந்திருக்கும்,” என்று அவள் ஒருநாள் அவனை இடித்துக் கூறினாள்.

ஃபார்ட்டி அவன் வயதுக்கு முரடனல்லன். அமைதி யுடையவன் தான். ஆண்கள் அவன் செல்வம் கண்டு அவனை மதித்தனர். பெண்களோ அவன் அந்தசந்தகளிலும் ஈடுபட்டு அவனிடம் நய இணக்கத்துடன் தான் நடந்து வந்தனர். ஆகவே, மாலியின் இக் கடுமொழி அவனுக்குச் சுட்டது.

“இதோ பார் மாலி. வழக்காடுவது சரி. நாகரிக மாகப் பேசி வழக்காடினால் என்ன?” என்றான்.

“நாகரிகமாம், நாகரிகம்! பிறர் உரிமையில் தலை யிடுவதுதான் நாகரிகமான. செயல்போலும்?”

“கடல் யாருக்கும் தனி உரிமைப்பட்டதல்லவே!”

“ஓகோ / வானமும் யாருக்கும் தனியுரிமைப்பட்ட தல்லதானே. அதற்காக உன் வீட்டு மோட்டில் ஏறி நின்று வானத்தைப் பார்க்கிறேன் என்று ஒருவன் சொன்னால்”

“இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு?”

“என்ன தொடர்பா / என் வீட்டு வழியாக எங்கள் கடலில் வந்து ஏன் பாசி எடுக்கவேண்டும்? நேர்மை என்பது இன்னதென்று இம்மியளவு தெரிந்திருந்தால் இது புரியுமே!”

“உன் உரிமையில் குறுக்கிடும் எண்ணம் எனக்குச் சிறிதும் கிடையாது, மாலி! நான் விற்பதற்காகப் பாசி எடுக்கவில்லை. சொன்ன விலை கொடுத்தாலும்கூட எங்க ளுக்கு வேண்டிய பாசியை நீ கொடுக்க மறுக்கிறாய். எங்களுக்கு வேண்டிய பாசியைத்தான் நான் எடுக்க வருகிறேன், அதுவும் என் உழைப்பாலேயே / இதில் உன் உரிமை எங்கே குறுக்கிட்டது? கடலில் அலைகள் எவ்வளவோ பாசியை உன் கடலிலிருந்து அடித்துக் கொண்டு செல்கிறதே ! உன் உரிமையையா அடித்துக் கொண்டு போகிறது?”

“கடல் கொண்டு போகட்டும், நீ கொண்டுபோகப் பாடாது”

“என்னை ஒரு நண்பனாகக் கருதிக்கொள். வீண் கோபம் வேண்டாம்,” என்றான் அவன்.

“நண்பன்! உன்னைப்போன்ற கேடுகெட்டவன் நட்பு இங்கே யாருக்கு வேண்டும்?” என்று கூறி அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்துவிட்டுச் சென்றாள் மாலி

மாலியிடமிருந்து செய்தி கேட்டபோது உள்ளூர மலாகிக்குக் கோபம் தான் வந்தது. ஆனால் ஃபார்ட்டி செல்வர் வீட்டு இளைஞன். ஆகவே அவன், “போகட்டும், விட்டுவிடு, மாலி. கடவுள் தான் அவனுக்குத் தண்டனை தரவேண்டும். அவன் அந்தப் பாசியுடன் பாசியாகக் கடலில் அழுந்திச் சாகட்டும்” என்றான்.

“ஆம். அப்படித்தான் நேரவேண்டும், நேரும். குறளிக் கசத்தில் அவன் ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் அகப்படாமல் போவதில்லை. அப்போது அவனைக் காப்பாற்ற நான் ஒரு சுண்டு விரலை உயர்த்தினால், நான் மாலியில்லை” என்று அவள் உறுமிக்கொண்டாள்.

குறளிக்கசம் – பாசிகள் மற்ற இடங்களைவிட மலாக்கி யின் வீட்டை அடுத்தகடலில் மிகுதியாகாதுங்குவதற்குக் காரணமாயிருந்தது குறளிக்கசம்தான். கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைதியாகத் தூங்கும் ஒரு பாறையி னருகே அது அமைதிக் காலங்களில் ஒரு சிறு தெப்பக் குளமாகக் கிடந்தது. ஆனால் புயல் காலத்தில் அதன் சிறிய பரப்புக்குள் ஏழு கடல்கள் கொந்தளித்துக் குமுறிக் கொம்மாளம் அடித்தன. அதன் உள்ளிடம் கடலின் ஆழத்துடனும் பாறையின் அடியிலுள்ள நிலக்குகைகளுடனும் தொடர்புடைய தாயிருந்தது. அதன் ஆழமோ உள்வளைவு குடைவுகளோ சொல்லித் தொலையாது. மக்கள் அதைக் குறளிக்கசம் என்று கூறியதில் வியப்பில்லை. ஏனெனில் புயற்காலத்தில் மீன்கள் கூட அதன் பக்கம் வர அஞ்சும் ஆழ்கடல் நண்டுகள் கூட அதன் அருகே உள்ள பாறைகளில் தங்குவதில்லை!

குறளிக்கசத்தின் அருகிலுள்ள தூங்கும் பாறையில் மலாகி கூடக் கால் வைத்ததே கிடையாது. அதன் மீது அச்சமின்றி நடமாடிய ஒரே உயிரினம் மாலி மட் டுமே ! அமைதிக் காலத்தில் கடலில் நீந்தியும் அந்தக் கசத்தில் முக்குளித்தும் அவள் அதன் சுற்றுப்புறங்களில் வளைவு நெளிவுகளையும் அதன் உட்புறக்குடைவு முடைவு களையும் நன்கறிந்திருந்தாள். அத்துடன் நீர்ச்சுழிகளையும் குமுறல்களையும் அவள் எதிர்த்துப் போராடுவதில்லை. அவற்றைத் தன் தோழர்களாக்கி வேண்டிய திசையில் செல்ல அவற்றைப் பயன்படுத்திக்கொள்வாள்!

கடல் இன்னதென்றறியாத வேளாண் செல்வர் வீட்டுப் பிள்ளையாகிய ஃபார்ட்டி என்றேனும் ஒரு நாள் குறளிக்கசத்தின் எளிமை அழகிலும் தூங்கும்பாறையின் கவர்ச்சியிலும், புயற்காலங்களில் கசத்தில் புரளும் பாசிவளத்தின் அளவிலும் சிக்காது இருக்கமாட்டான் என்று மாலி கருதினாள். அவள் கருதியது தவறாகவும் இல்லை. அவன் அடிக்கடி அக்கசத்தைக் கண்டேங்குவதை யும் தூங்கும் பாறையில் நின்று பாசித்திரளை வாரக்கை ஏந்துவதையும் அவள் அடிக்கடி பார்த்திருந்தாள்.

ஒருநாள் மாலை அமைதியிடையே மெல்லக் காற்று வீசத் தொடங்கிற்று. காற்றுப் புயலாகத் தோற்றவில்லை. கடலில் அலைகளும் எழவில்லை. ஆனால் கடல் மலாக்கியின் கடவை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. கடற்பாசிகள் கடலுக்குள் பாயும் ஆறுகள் போல நாற்புறமிருந்தும் பாய்ந்து வந்து குறளிக் கசத்துக்குள் சுருண்டு தூங்கும் பாறைமீது புரண்டன. கடல், புயல், பாறை ஆகியவற்றின் தூங்கு நாடிகளையும் விழிப்பு நாடிகளையும் நன்கு அறிந்த மாலிக்கு இவ்வடையாளங்களின் பொருள் தெரியும். அது பாசி சேகரிப்பதற்குரிய வேளையல்ல; பாசி வளத்தை வாளா பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நேரம்! அந்தக் கோரப்புயலின் வேகம் அடங்கிய பின் தான் ஒதுங்கிய பாசி களைத் திரட்ட முற்படலாம். ஆகவே அவள் கடலின் கரையிலுள்ள உயர்பாறை ஒன்றிலிருந்து கடலை ஆவ லுடனும் ஆர்வத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஃபார்ட்டிக்கு மாலியின் செய்தி தெரியாது. அவள் பெண்தானே, கடலுக்குள் செல்ல அஞ்சி, தொங்கும் பாசியை நம்பியிருக்கிறாள்’ என்று நினைத்து அவன் முன்னேறிச் சென்றான். செல்லட்டும் என்று முதலில் இருந்தவள், அவனுக்குத் தான் பின்னடைவானேன் என்று எண்ணித் தானும் சென்று பாசியை வாரினாள்.

போட்டியுணர்ச்சியால் ஃபார்ட்டி மேலும் மேலும் முன்னேறிச் சென்றான். தூங்கும் பாறையருகே அவன் நாட்டமும் சென்றது. காலடியும் மெல்ல அதை நோக்கி நகர்ந்த ன.

அவள் மனித உள்ளம், உள்ளூரப் பெண்மை நலந் தோய்ந்த பெண்மையுள்ளம் , அவளையறியாமல் எச்சரிக்க முன் வந்தது.

“ஃபார்ட்டி! நீ அறியாச் சிறுபிள்ளை. அந்தத் தூங்கும் பாறையில் கால் வைக்காதே. அஃது ஆபத்து. அதிலும் இன்றைய புயல்..”

அவள் எச்சரிக்கையை அவன் எச்சரிக்கையாகக் கருதவில்லை. ஏளனமாக எண்ணினான். அவன் வேண்டு மென்றே துணிவுடன் தூங்கும் பாறையின் மறுகோடி வரை சென்று, அதில் நின்று பாசிகளை மலைமலையாக வாரிப் பாறையில் குவித்தான்.

இந்த நிலை வரவேண்டுமென்றுதான் அவள் விரும்பி இருந்தாள். ஆனால் வரும்போது அவள் மகிழ வில்லை. அவன் அறியாத் துணிச்சல் கண்டு முதலில் கோபப்பட்டாள். பின் இரக்கப்பட்டாள். அவள் நெஞ்சு அவளையுமறியாமல் படபடத்தது.

ஆனால் நெஞ்சு படபடக்க நேரமில்லை. அதற்குள் புளித்த தோசைமாவைப் போலப் பொங்கித் தூங்கும் பாறையின் கழுத்தளவு உயர்ந்துவிட்டது.

“வந்துவிடு, ஃபார்ட்டி, வந்துவிடு,” என்று கூவினாள் மாலி.

அவன் வரத்தான் முயன்றான். ஆனால் அவன் கை யின் பேராசை வளைகோலில் சிக்கிய பாசியுடன் வர முயன்றது. குறளிக்கசம் பாசியைச் சுழற்றி உள்ளிழுத் தது. பாசி கையை வளைத்திழுத்தது. அவன் கால் சறுக்கிற்று. அவன் குறளிக்கசத்தின் குமுறலுடன் குமுறி அதன் நீரில் கவிழ்ந்து சென்றும் மேல் வந்தும் அலறினான்.

மாலியின் அகமும் ஆகமும் பற்றி எரிந்தன. ஆனால் அவள் அமைதிநிலையை விடவில்லை. அவன் நீரில் மேலெழும் சமயம் பார்த்துத் தன் வளைகோலை அருகில் நீட்டி “இதைப் பிடித்துக்கொள், ஃபார்ட்டி” என்றாள்.

கிலியும் கலக்கமும் அதிர்ச்சியும் ஃபார்ட்டியை அப் போதே அரையுயிர் ஆக்கியிருந்தன. ஆனால் அவன் கை கள் மட்டும் அந்த வளைகோலைச் சாப்பிடியாய்ப் பிடித் துக் கொண்டன. அத்துடன் அவன் உணர்வு முற்றி லும் இழந்தான். ஆயினும் நீருடன் அவன் போராடிய போராட்டம் முடிந்தது. நல்ல காலமாக அவனைக் காட்டி லும் நீரின் உணர்ச்சியறிந்து பழகிய மாலியே அப் போராட்டத்தை இப்போது மேற்கொண்டாள். அவ ளிடம் தோழமை பூண்ட குறளிக்கசம் மெள்ள மெள்ளத் தான் விழுங்க எண்ணிய இரையை அவளிடம் ஒப்படைத்தது.

ஆண்டியின் புதையல் உடலைக் கரைக்குக் கொண்டுவருவது அவளுக்கு எளிதாயிருந்தது. ஏறிவரும் கடலின் பிடிக்கு எட்டாமல்

அதை உயரத்தில் ஏற்றுவது அவளுக்குக் கடினமாயிருந் தது. அவள் பலம் மிகுதியானாலும், பாறையின் வழுக்க லிடையே அவள் அரும்பாடுபடத்தான் வேண்டி வந்தது. ஓரளவு அலையின் பிடிக்கு அப்பால் கொண்டுவந்தபின் அவனை அவள் உணர்வு நிலைக்குக் கொண்டுவர முயன் றாள். அவனுக்கு எத்தகைய பேரிடையூறும் வரவில்லை. ஆனால் தலையடிப்பட்டுக் குருதி கொட்டிற்று. அதை ஓரளவு அவள் தன் ஈரத்துணி கிழித்துக் கட்டினாள். ஆனால் குருதிப் போக்கை விடக் கிலி அவன் நாடித்துடிப் பைத் தாக்கிவிட்டது. அவன் கண்களைச் சற்றுத் திறந்த பின் மீண்டும் மூடிச் செயலற்றவனாய்விட்டான்.

அவளுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஓடோடிச் சென்று பாட்டனை அழைத்து வந்தாள். செங்குத்தான மலைப்பாறை மீது அவனைக் கொண்டு செல்ல அவனாலும் உதவமுடியவில்லை. அவன் கட லருகே இறங்கிவந்ததே பெருமுயற்சியாய்விட்டது.

ஃபார்ட்டியையும் அவளையும் கிழவன் ஏற இறங்கப் பார்த்தான்.

“மாலி, நீ செய்த செயல் நன்றாயில்லை. நீ அவனைக் காப்பாற்றினாய் என்று யார் சொல்வார்கள்? அவனைச் சாகவிட்டிருந்தால் கூட நமக்குக் கேடில்லை. இப்போது நீதான் கொன்றுவிட்டாய் என்றல்லவா கூறுவார்கள்?” என்றான் அவன்.

ஆனால் அவள் உள்ளமோ இப்போது வேறு எது பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் உயிருக்காக மட்டுந்தான் அது கவலைப்பட்டுத் துடித்தது. “தாத்தா யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும்; அவனை நானாகக் கொன்றாலும் என்னால் கொல்ல முடி யும். இப்படித் தெரியாத்தனத்தால் சாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. நான் போய் அவர் வீட்டில் சொல்லி உதவிக்கு ஆளனுப்பச் சொல்லி வரு கிறேன்,” என்று கூறி விரைந்தாள்.

அடாப்பழி – மாலி பாறை உச்சிவரை ஓடிச்சென்று, அங்கிருந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். இருபுறத்திலும் ஒரு காகத்தைக்கூடக் காணவில்லை. மறுபுறம் இறங்கி நகருக்குள் சென்றாள். தெருக்களெல்லாம் வெறிச்சென் றிருந்தது. புயலும் மழையும் கலந்து வீசிய அந்த நேரத் தில் எல்லாரும் கதவையும் பலகணிகளையும் சார்த்தி வீட்டில் அடைபட்டுக் கிடந்தனர். ஆனால் மாலி மட்டும் உடலுக்கோ காலுக்கோ தலைக்கோ எத்தகைய பாதுகாப்புமற்ற நிலையிலேயே தன்னை மறந்து ஓடினாள்!

ஃகன்லிஃவ் குடும்பமாளிகையின் பக்கம் அவள் அது வரை சென்றதில்லை. ஆனால் இன்று அவள் பரபர வென்று சென்று அதன் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த பணியாள் ஏன் கதவை வந்து தட்டுகிறாய், போ வெளியே’ என்று கடுகடுத்தான் ‘திருவாட்டி ஃகன்லிஃவ் வைக் காணவேண்டும்’ என்று அவள் கூறியதற்கும் இதைவிட மோசமான மறுமொழிதான் வந்தது. ஆகவே அவள் ஃபார்ட்டியின் நிலைபற்றிப் பணியாளிடமே கூற வேண்டியதாயிற்று. அது கேட்டதும் நிலைமை மாறிற்று. திருவாட்டி ஃகன்லிஃவ்வும் திரு. ஃகன்லிஃவ்வும் ஓடோடி வந்தனர். ஒரே அமளிகுமளிப்பட்டது. விரைந்து உதவி யாளுடன் போக வேண்டும் என்று மாலி துடித்தாள். ‘இந் நேரம் எப்படி யிருப்பாரோ , உடன் ஆளனுப்பிப் பாருங்கள்’ என்றாள்.

செய்தி கொண்டுவந்தவளைப் பற்றிக் கவலைப்படு பவரேர் கவனிப்பவரோ அங்கே யாரும் இல்லை. அவ ளுக்கு நன்றியாக ஒரு சொல் தெரிவிக்கக்கூட யாரும் கனவு காணவில்லை. ஏழையின் மனிதப்பண்பை யார் மதிப்பர் ! அதுமட்டுமன்று. அந்த உயிராபத்தான வேளையிலும் அவர்களுக்கு மாலியைக் குறுக்குக் கேள்விமிருந்தது.

திருமதி ஃகன்லிஃவ் “ஐயோ, அந்தக் கீழ்மக்களு டன் போட்டிக்குப் போக வேண்டா மென்றேனே, கேட்க வில்லையே ஐயோ! கொன்றுவிட்டார்களே உன்னை!” என்று கதறினாள்.

யாரோ திரு. ஃகன்லிஃவ்வின் காதில் ஏதோ சொன் னார்கள். உடனே அவன் மாலியின் பக்கம் திரும்பி “கொன்றது நீயானால், பழிக்குப்பழி வாங்குவேன்: நினை விருக்கட்டும்,” என்றான்.

எந்த உயிரைக் காக்க அவள் தன் பழம் பகையை விடுத்துத் தன் உயிரையும் இடருக்குள்ளாக்கினாளோ, அந்த உயிரைத் தானே கொன்றதாக அவர்கள் முடிவு காணாமலே ஐயுறுவதை அவள் உணர்ந்தாள். பாட்டன் எண்ணியது தவறல்ல என்று கண்டாள்.

செல்வத்தின் நன்றி கெட்ட தனத்தையும், உணர்ச்சி யற்ற அன்பற்ற தன்மையையும் கண்டு அவள் மனம் கசந்தது. “அதையெல்லாம் சிந்திக்கலாம், பின்னால்! இப்போது மருத்துவரை அழைத்துக் கொண்டுபோய், உயிர் மீட்க வழியுண்டா என்று பாருங்கள்,” என்று கூறி வெறுப்புடன் தன் வழியே திரும்பி விரைந்தாள்.

எப்படியும் அவர்கள் இனி வருவார்கள் என்ற எண்ணத்துடன் மாலி வழி நடந்தாள். அவள் உள்ளத் தில் சீற்றமில்லை. வெறுப்பும் கசப்புமே இருந்தன. “என் மீதும் என் பாட்டன் மீதுமே அவர்கள் ஐயமுறு கிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை. அவன் பிழைக்காவிட்டால் இந்த நன்றி நலங் கெட்ட சமூகத்தில் இருந்தாலென்ன…”

ஃபார்ட்டியுடலின் அருகில் பாட்டன் இருந்த காட்சி எண்ணத் தொடரை அறுத்தது. “தாத்தா! அவர் கண் விழித்தாரா,” என்றாள்.

“இல்லையம்மா!. நீ போகும் போது இருந்த நிலையி லேயேதான் அவன் இருக்கிறான்,” என்றான் மலாகி.

திரு ஃகன்லிஃவ் வருமுன் ஃபார்ட்டி ஒரு தடவை இலேசாகக் கண் திறந்தான். அவன் கண் மாலியை அரையுணர்வுடன் வியப்புடன் பார்த்தது. ஆனால் அடுத்த காணவில்லை. மாலி கலவரப்பட்டாள்.

தாய்தந்தையர் வந்து அவன் நிலையைக் கண்டதும் மீண்டும் அமளிகுமளியாயிற்று. ஃபார்ட்டியை எழுப்ப முயன்றதில் பயன் ஏற்படவில்லை. இறந்துவிட்டதாகவே எண்ணினார். மீண்டும் ஐயமும் குறுக்குக் கேள்விகளும் எழுந்தன. மாலியும் கிழப்பாட்டனும் கூறிய செய்தியை அவர்கள் நம்பவில்லை. தலையிலுள்ள காயம் கண்டு அவர்கள் மாலியும் அவள் பாட்டனும் அவனைக் கல்லா லடித்துக் கடலில் தள்ளிப் பின் கதை கட்டுவதாகச் சாட்டிப் பேசி அச்சுறுத்தினர்.

உணர்வற்ற நிலையிலேயே அவர்கள் ஃபார்ட்டியின் உடலைத் தூக்கிக்கொண்டு சென்றனர். போகும் போது ஃகன்லிஃவ் மாலி யிருந்த திசை நோக்கி, “குருதிக்குக் குருதி வாங்குகிறேனா இல்லையா பார்,” என்று கறுவிக் கொண்டு சென்றான்.

மலாகி தன் பேர்த்தியின் செயலுக்கு முதல் தடவை யாக அவளை நொந்து கொண்டான். அவளும் பித்துப் பிடித்தவள் போலானாள். ஆனால் அவள் தான் செய்த தற்காக வருந்தவில்லை. அங்கும் மனச்சான்று அவள் பக்கம் நின்றது. அதோடு ஃபார்ட்டி ஒரு தடவை கண் திறந்தபோது நன்றியும் ஆர்வமும் கலந்த அவன் பார்வை……… அது அவள் மனக்கண் முன் நின்று எல்லா மனக்கசப்புக்கும் மாற்றளித்தது. அவன் மட்டும் பிழைக்கட்டும்! அஃது ஒன்றே அவள் ஓயாக் கவலையா யிருந்தது.

அன்பின் வெற்றி – காலையில் யார் என்ன சொன்னா லும் சொல்லட்டும் என்று அவள் ஃபார்ட்டியின் நலம் உசாவச் சென்றாள். இரவு முழுவதும் அவன் அப்படியே தான் கிடந்திருந்தான். இறந்துவிட்டதாக முடிவுகட்டிய தாய்தந்தையரும் பிறரும் அழுதரற்றிக்கொண்டிருந்த னார். ஆனால் அவன் இறந்திருக்க முடியாது என்று மாலி எண்ணிக்கொண்டு அருகே சென்றாள். அவன் கை சற்றே ஆடியது. உடனே அவள், “ஃபார்ட்டி இறந்து போகவில்லை, ஃபார்ட்டி இறந்து போகவில்லை. உயிருடன் இருக்கிறார்,” என்று கூவினாள்.

தாய் ஓடோடி வந்து, “ஃபார்ட்டி என் கண்ணே! நீ பிழைத்து விட்டாயா?’ என்று கேட்டாள்.

ஃபார்ட்டி மெள்ளக் கண் திறந்தான். தாயின் முகம் அவன் கண்ணில் பட்டது. ஆனால், அவனால் பேசமுடிய வில்லை. கண்களும் விரைவில் மூடிக்கொண்டன. ஆனால் அந்த நிலையிலும் அவன் “மாலி… மாலி எங்கே?” என்று முணகினான்.

மாலி அவனைக் கொன்றிருக்க முடியாது என்பதற்கு இந்த ஒரு சொல்லே அண்டையிலுள்ளவர்களுக்குச் சான்றாயிற்று. அவன் பிழைத்துக் கொண்டான் என்ற மகிழ்ச்சியைத் தன் பாட்டனிடம் சொல்ல அவள் ஓடோடிச் சென்றாள்.

அன்று மாலையெல்லாம் மாலிஃபார்ட்டி பிழைத்தது பற்றிய மகிழ்ச்சியுடன் வழக்கம் போலத் தன் வேலையில் ஈடுபட்டாள். இருள் கவிந்துவிட்டது. கழைக் கோலி னால் கடைசிப் பாசிச் சுருளைக் கரைமீது கொட்டிக் கழுதையுடன் திரும்ப எண்ணினாள். அச்சமயம் ஒரு விளக்கொளி பாறை உச்சியிலிருந்து அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது.

வந்தது திரு ஃகன்லிஃவ். அரையிருளிலிருந்தே அவன் “யாரது! மாலியா?” என்றான்.

“ஆம்! ஃபார்ட்டிக்கு எப்படி இருக்கிறது?” என்று அவள் உசாவினாள்.

“நீயேதான் வந்து பார்க்கவேண்டும், மாலி ! அவன் உன்னிடம் பேசிய பின் தான் எதுவும் அருந்துவேன் என்று பிடிவாதம் செய்கிறான்,” என்றான்.

ஃபார்ட்டியின் உயிர் தன் மீது ஏற்பட்ட ஐயப் பேயையும் அடாப்பழியையும் முற்றிலும் மாற்றி விட்டது என்பதை மாலி ஒரு நொடியில் ஊகித்துக் கொண்டாள். ‘ஃபார்ட்டி விரும்பினால் நான் வருகி றேன்’ என்று கூறிப் பாட்டனிடம் சென்றாள். கிழவன் மலாகிக்குக் கொஞ்சநஞ்சம் காலையில் மீந்திருந்த அச்சமும் அகன்றது. “போய்ப் பார்த்துவிட்டு விரைவில் வா அம்மா!” என்று கூறி மாலியை அனுப்பினான்.

பணியாட்களின் ஐயப்பார்வைகளின் தடையில்லா மல் ஃகன்லிஃவ் மாளிகையில் அன்று தான் அவள் இயல் பாகச் சென்றாள். ஆனால் இம் மாறு தலை அவள் கவனிக்க வில்லை. ஃபார்ட்டி இன்னும் உடல் நலிவுடன் எழுந் திருக்க முடியாமல் தான் இருந்தான். மாலி அருகே செல்லும்போதே அவன் ‘மாலி வந்துவிட்டாளா?’ என்று கேட்டது அவள் செவிப்பட்டது. தாய் ‘இதோ மாலி வந்திருக்கிறாள்’ என்றாள்.

“மாலி! என் உயிரை நீ காப்பாற்றியதற்கு நானே உன்னிடத்தில் நேரில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டி அதே சமயம் திருமதி ஃகன்லிஃவ் , “நாங்களும் உன்னை ஐயுற்றுக் கடுமொழிகள் கூறியதற்கு மன்னிப்புக் கோருகிறோம். நாங்களும் நன்றி தெரிவிக்கிறோம்,” என்றாள்.

“நான் செய்த செயலுக்கு நான் என்றும் வருந்தி யிருக்கமாட்டேன். ஆனால் அது பயனடைந்து நீங்கள் பிழைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்,” என்றாள் மாலி.

ஃபாரிட்டி “இனி நீ என்னை நண்பனாகக் கருதலா மல்லவா?” என்றான்.

“தாராளமாக! ஏன்?” என்று கேட்டாள் வியப் புடன்.

“இல்லை! நான் இனியும் பாசி சேகரிக்க வரத்தான் எண்ணுகிறேன். ஆனால் எனக்காக அல்ல. உனக்காக,” என்றான்.

அவளுக்கு அவன் கூறியதன் பொருள் விளங்க வில்லை. ஆனால் அவன் இன்னும் முற்றிலும் நலமடை யாத நிலையில், அவனுடன் நீடித்து உரையாட அவள் விரும்பவில்லை. அத்துடன் பாட்டன் தனியே இருப்ப தையும் நினைத்துக்கொண்டு அவள் விடைபெற்றுத் திரும்பினாள்.

ஃகன்லிஃவ் குடும்பத்தினர் இத்தடவை விளக்கு களுடன் இரண்டு பணியாட்களையும் உடன் அனுப்பி னர். அவள் “எனக்கு ஏன் இத்தகைய துணை” என்று மறுத்தும் அவர்கள் அவளுடன் பாறைவீடுவரை வந்து சென்றனர்.

அவள் உள்ளம் இரவெல்லாம் உறங்காமல் ஃபார்ட்டியின் சொற்களையே நினைந்து வட்டமிட்டது.

ஆனால் அவள் மகிழ்ச்சியைவிடக் கிழவன் மகிழ்ச்சி பெரி தாயிருந்தது. அவன் தன் அரைத்தூக்கத்திடையே “ஆ, நான் என்றும் மறக்கமாட்டேன், என்றும் மறக்க மாட்டேன்,” என்றான்.

மாலி அவனை எழுப்பி, “என்ன தாத்தா! மறக்க மாட்டேன்,” என்கிறீர்கள்? என்றாள்.

அவன் சிரித்துக்கொண்டு மீண்டும் படுத்து உறங் கினான். ஆனால் ‘ஆ, நான் என்றும் மறக்கமாட்டேன்’ என்ற பல்லவி அவள் கண்ணயரும்வரை கேட்டது

பிளவு தீர்ந்தது – ஃபார்ட்டி உடல் நலம்பெற நலம் பெற, அவனை ஃகன்லிஃவ் மாளிகையில் தங்கவைப்பது கடினமாயிற்று. அவன் மாலியின் நினைவைத் தவிர வேறெதிலும் கருத்தற்றவனானான். தாய் தந்தையரும் இப்போது அவனைத் தடுக்கவில்லை. மாலிக்கே அவன் உயிர் உரியது என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் திருவாட்டி ஃகன்லிஃவ் மகனை நோக்கி, “ஃபார்ட்டி ! மாலியை நான் இங்கே கொண்டுவந்துவிட எண்ணுகிறேன்” என்றாள்.

“ஏனம்மா?”

“உன்னை இங்கே தங்கவைக்கத்தான். அத்துடன் மாலியிடம் எனக்கும் இப்போது பாசம் ஏற்பட் டிருக்கிறது.”

“அவள் பாட்டன் மலாகி….”

“பாட்டனும் இங்கேயே இருக்கட்டும். தள்ளாத வயதில் அந்தக் காட்டுவீட்டி லிருப்பானேன்?”

“பாசி சேகரிக்கும் வேலை ….”

திருவாட்டி ஃகன்லிஃவ் சிரித்தாள்.

“நீ வேண்டுமானால் செய். மாலிக்கு அது வேண்டாம்.”

“மாலி என்ன சொல்லுவாள்!”

“அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம்”

திரு. ஃகன்லிஃவ் ஏற்கனவே மலாகியிடம் பேசி எல்லாம் ஒழுங்குபடுத்தியிருந்தாள். காட்டு வீட்டில் ஃகன்லிஃவ் குடும்பத்தினர் ஒரு சிறு கோடைகாலக் குடிசை கட்டினர். மாலியும் மலாகியும் ஃகன்லிஃவ் மாளிகைக்கு வந்துவிட்டனர்.

மாலி ஃகன்லிஃவ் குடியின் மருமகளானாள். அவ் வப்போது மாலியும் ஃபார்ட்டியும் தங்கள் பாறைக் குடிசையில் தங்கிக் கடலில் மலாகி கடவை நோக்கித் தம் முற்காலச் சந்திப்புக்கனவுகளில் கருத்துச் செலுத்தி மகிழ்வார்கள்.

– ஆண்டியின் புதையல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1953, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *