கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 1,564 
 

(2012 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையிலிருந்து மனம் படும் பாட்டை என்னவென்று விவரிக்க முடியவில்லை. துயரமா? பெருமிதமா? என்ன இது? என்னவென்றே இனங்காணமுடியாமல் நெஞ்சை பிசைந்துகொண்டிருக்கின்றது. தான் எங்கிருந்தாலும் வாரம் ஒருமுறையாவது ஓடிவந்து எங்களை பார்க்கும் இசைச்செல்வி வழக்கம்போல பகிடிக்கதைகளை மட்டும் சொல்லாமல், இன்று ஏன் இதைச் சொன்னாள்? சாதாரணமானவர்களுக்கு வேண்டுமானால் அவள் சொன்னது சாதாரண செய்தியாயிருக்கலாம் எனக்கு..?

என்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடிய முற்பட, சிரமப்பட்டு அதை அடக்க முயற்சித்தேன். பக்கத்துக் கட்டிலில் படுத்தவாறு ‘வந்தார்கள் வென்றார்கள்’ வாசித்துக்கொண்டிருக்கும் கயல்விழி நிமிர்ந்து பார்த்தால் என்னவென்று கேட்பாள். ஏன் அழுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இவளுக்கு என்ன சொல்ல முடியும்?

வெளியில் போய் கொஞ்ச நேரம் நித்தியகல்யாணி மரத்தடியில் தனியே இருப்பது நல்லதுபோலப் பட்டது. வதனியைக் கூப்பிட்டு சக்கர நாற்காலியைக் கொண்டுவரச் சொன்னேன். வதனி வந்ததும், சக்கர நாற்காலிக்கு மாறிக்கொண்டேன். முன்பெல்லாம் இது எனக்கு மிகவும் கடினமான விடயம். உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும்தான். இடுப்புக்குக் கீழே உடம்பே இல்லாததுபோல் மனம் இடையிடையே திடுக்கிட, இரவில் எழும்பி கால்களிரண்டையும் கைகளால் தொட்டுப் பார்த்துக்கொள்வேன். கழுத்துக்குக் கீழே உணர்வில்லாத நிலையிலும் உற்சாகமாகப் பாடல்களை பாடிக்கொண்டிருக்கும் தாரணியை மிகமிக ஆச்சரியமாகப் பார்ப்பேன். இப்போது எனக்கும் பழகிவிட்டது.

எனது சக்கர நாற்காலி உருண்ட சத்தத்துக்கும் கயல்விழி அசையவில்லை. கடைசியாகத் தலைவர் அவர்கள் எங்களைச் சந்தித்தபோது அவர் வாசிக்கச் சொன்ன புத்தகம் அது. அவர் போன கையோடு, வந்தவர்கள் போனவர்கள் எல்லோரிடமும் சொல்லிப் புத்தகத்தை எடுப்பித்துவிட்டாள். இன்னமும்தான் புத்தகத்தை விட்டுத் தலையை உயர்த்தினாளில்லை. நிமிர்ந்து பார்த்தாலாவது அவளையும் நித்தியகல்யாணியடிக்கு வரச் சொல்லலாம். என்ன பிரச்சினையென்றாலும் அவளோடு கதைத்தால் மனம் ஆறும்…

வதனி என்னை படிகளில் இறக்கிய போது எழுந்த சத்தத்துக்கும் நிமிர்ந்தாளில்லை. அவளைக் குழப்பவேண்டாம், படிகளால் இறங்கியதும் வதனியைப் போகச் சொல்லிவிட்டு, நானே நாற்காலியை உருட்டியவாறு நித்திய கல்யாணியடிக்குப் போனேன்.

மரம் நிறையப் பூக்கள். காற்றோடு சேர்ந்து அசைந்து ஒன்றுடன் ஒன்று உரசி ஏதோ இரகசியம் பேசிச் சிரித்துக்கொண்டன எங்களைப்போல. சிரிப்பதைத்தவிர வேறென்ன வேலை அவைக்கு? கிளிநொச்சிச் சண்டைக்கு ஆயத்தம் நடத்துகொண்டிருந்தபோதும் இப்படித்தான். அணிகளைப் பிரிப்பதும் நகர்த்துவதுமாக அவசர வேலைகள் நடந்த நேரம்கூட எங்களின் சிரிப்பு ஓயவில்லை. ஆமறிக்காரர் ஆயுத விபரங்களை எடுப்பதும், ஆயுத வெடிபொருட்களைக் கொடுப்பதுமாக ஓடுப்பட, அணிகளின் விபரங்கள் சரிதானா என்று அறிக்கைக்காரர்கள் திருப்பித் திருப்பிச் சரிபார்க்க, சாக்குத் தொப்பி எடுத்தாயா, தண்ணீர்க்கான் எடுத்தாயா என்பதுமாக எல்லோரும் அல்லோலகல்லோலப்பட, நாங்கள் இரகசியங்கள் பேசிச் சிரித்துக்கொண்டோம். கதைத்துச் சிரிக்க ஆயிரம் விடயங்களிருந்தன எங்களிடம். அணிகளை அமைதியாக இருக்கும்படி அதட்டிய பொறுப்பாளர்களின் குரலையும் மீறி, ஏதோ இனி இப்படிச் சிரிக்க நேரம் வராது என்பது போலவும், இதுதான் கடைசிச் சிரிப்பு என்பது போலவும் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தோம்.

அது கடைசிச் சிரிப்பில்லைத்தான். ஆனால் அவர்களுடன் இருந்து சிரித்த கடைசிச் சிரிப்பு அதுதான். அன்று கும்மாளமடித்தவர்களில் இசைச்செல்வி, கயல்விழி, நான் என்று மிகச் சிலரே அந்தச் சண்டையின் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கின்றோம். காலையில் வந்து கதைத்துக்கொண்டிருந்த இசைச்செல்வி புறப்படும்போதுதான் திடீரென்று கேட்டாள்.

“ஏய் மயூரி, சத்ஜெய நேரம் நீ கரடிப்போக்கடியில் நின்ட பொசிசன் நினைவிருக்கோ?”

எப்பிடி எனக்கு மறக்கும்? நான் நிலை அமைத்திருந்த பூவரசு வேலியடியும், அந்த வயல் காணிக்குள்ளிருந்த ஒரேயொரு கட்டுக் கிணறும்… குளிக்க, குடிநீர் எடுக்க வருகின்ற எல்லோருமே என்னுடைய நிலையில் பத்து நிமிடம் நின்று பம்பலடிப்பது போதாதென்று தேநீர் தரும்படி அடம்பிடித்து வாங்கிக் குடித்து, எனது ஒரு மாதச் சீனியைப் பத்து நாட்களிலேயே முடித்துவிட்டு போவதுமாக, மயூரி ரீ கபே என்று அழைக்கப்பட்ட எனது காப்பரணை எப்பிடி நான் மறப்பேன்? புன்னகைத்தவாறு நான் தலையாட்ட, இசைச்செல்வி சொன்னாள்.

“உன்ர கட்டுக் கிணத்துக் காணி, போன கிழமை ஆறு லட்சத்துக்கு விலை போட்டுதாம்”

என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். என்னால் அந்த நினைவுகளிலிருந்து மீள முடியவில்லை. இப்போதும் நல்ல நினைவிருக்கிறது. யாழ் வீதியை அண்டி சுருதியின் RPG நிலை. அவளுக்கு வலப்பக்கம் கட்டுக்கிணற்றுக்கு நேர் முன்னே என்னுடைய நிலை. அன்று விடிந்ததிலிருந்து கடும் ஷெல் மழை. அண்ணாச்சி

புறப்படப்போகிறார் என்று புரிந்துகொண்டு நாங்களும் ஆயத்தமானோம். வண்டின் தொடர் இரைச்சல் காதுகளில் விழத் தொடங்க,

“இண்டைக்கு அந்த மாதிரி ஒரு சண்டை நடக்கும். வரட்டும். எல்லாற்றை மண்டையையும் உடைக்கிறன்” என்று சுருதி என்னைப் பார்த்து கத்தினாள்.

ஷெல்மழை எங்களைக் கடந்து பின்னுக்கு நகர்ந்தது. அப்படியென்றால் அண்ணாச்சி எங்களை நெருங்கப்போகிறார் என்று பொருள். ராங்கிகளின் இரைச்சல் யாழ் சாலையில் மட்டுமல்லாமல், வயற் காணிகளூடாகவும் கேட்கத் தொடங்க, பரந்த சண்டை ஒன்றுக்குத் தயாரானோம். சுருதி ஷெல்லை லோட் பண்ணியவாறு, ராங்க் சத்தத்துக்குத் காதைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். எங்களின் துப்பாக்கிகளுக்கு வேலையே இருக்கவில்லை. எவனாவது இறங்கி வந்தால் அல்லவா சுடுவதற்கு? சுருதி ஒரு ராங்கைக் கண்டுவிட்டாள் போலிருக்கிறது. எனக்கு கையைக் காட்டிவிட்டு அடிப்பதற்கு வசதியாகப் பூவரசு வேலியோடு வலப்புறமாக நகர்ந்து தன்னை நிலைப்படுத்தினாள். ஆங்… இப்போது எனக்கும் ஒரு ராங்க் தெரிகிறது. ஒரு தரம் இமை வெட்டித் திறப்பதற்கிடையில் ராங்கின் சுழல் மேடை பறந்தது. சுருதி என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்கிடையில் அடுத்த ஷெல்லை அவளின் சுறிபு உதவியாளர் லோட் பண்ணிவிட்டிருந்தாள். இரண்டாவது அடியோடு ராங்க் சிதறியது. ஒரே புகை மண்டலம். சுருதி என்னை எட்டிப் பார்த்துவிட்டு, லோஞ்சரை உயர்த்தியவாறு ஒரு முறை துள்ளினாள். அவளின் கால்கள் நிலத்தில் படமுன்னரே கூவல் ஒலி ஒன்று எங்களை நெருங்க, நான் சடாரென்று குப்புறப் படுத்துக்கொண்டேன். செவிப்பறையைக் கிழிக்காத குறையாக இரண்டு ஷெல்கள் தலைக்கு மேலேயே விழுந்தனபோல் வெடிக்க, மண்கட்டிகள், மரக்கொப்புகள் எல்லாம் அளவு கணக்கில்லாமல் என்மேல் கொட்டின.

தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தேன். சுருதி சாய்ந்து நின்ற பூவரசு மரத்தையே காணவில்லை. புழுதிதான் பறந்து கொண்டிருந்தது.

“சுருதீ……” என்று கத்தினேன். என் குரல் வெளியே வந்ததோ தெரியவில்லை எனக்குப் பதில் கிடைக்கவில்லை. அவளருகே நின்ற உதவியாளரையும் காணவில்லை. அவளுடைய சுறிபு காப்பாளர் மட்டும் நிலத்தில் குப்புறப்படுத்தவாறு நிமிர்ந்து திகைப்போடு என்னைப் பார்த்தாள். அதற்குமேல் தாமதம் செய்ய நேரமும் இருக்கவில்லை. நான் என்னென்ன செய்தேன் என்பதுகூட என் நினைவில் இல்லை. என்னோடு நின்றவர்களில் ஒருத்தியை சுருதியின் காப்பாளருக்கு உதவியாக அவளின் காப்பரணுக்கு அனுப்பிவிட்டு, மற்றவளும் நானுமாக எங்கள் காப்பரணில் நின்று சண்டை பிடித்ததைத்தவிர, வேறொன்றும் நினைவில்லை.

இதெல்லாம் நடந்து இரண்டு, மூன்று நாட்களின் பின் கிணற்றடிப் புற்களிடையே ஒரு ஒற்றைக்கால் செருப்பு S என்று எழுதியிருந்தது. சுருதியின் பெயரை வெள்ளை மையால் நான் எழுதிக்கொடுத்த செருப்பு. கரடிப்போக்கு எதிரியிடம் விடுபடும்வரை அந்த ஒற்றைக்கால் செருப்பு என் காப்பரணில் இருந்தது.

அன்றைக்கு நான் அழவில்லை. மனம் இறுகிப்போய்க் கிடந்ததோ, என்னவோ. கொஞ்ச நேரம் முதல் வந்த கண்ணீரும் இப்போது உலர்ந்துவிட்டது. மனதைத்தான் எதுவோ உலுப்பிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தொடர்ந்தும் சண்டைகளிலேயே நின்றதனால் நினைவுகள் மனதுள் புதைந்து போயிருக்கலாம். இப்போது மூன்று வருடங்களாகக் கட்டிலும் சக்கர நாற்காலியுமாக ஓய்வாக இருப்பதனால் எல்லாம் பீரிட்டெழுகின்றதோ? எல்லாவற்றையும் எப்படி மறக்க முடியும்? எதை மறக்க முடியும்? சுருதி எங்களோடு இருந்த நாட்களை மறக்க முடியுமா? அந்த சண்டை நடப்பதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் வந்த ஐயா ஒருவர் வீதியில் நின்றவாறே, அந்தக் காணியை பார்த்து அழுதாரே ஒரு அழுகை, வாழ்வைத் தொலைத்த துயர் தாங்கமாட்டாமல். அதை மறக்க முடியுமா?

அன்று ஒரு கறி வைப்போம் என்று எங்கேயோ போய் முருங்கைக்காய் பிடுங்கி வந்த சுருதிதான் அவரை முதலில் கண்டவள். ஏதோ வேலையாக என்னுடைய காப்பரணில் நின்ற நான், இவள் யாருடனோ கதைக்கும் குரல் கேட்டு எட்டிப் பாத்துவிட்டுத்தான் ஓடிப்போய் என்னவென்று கேட்டேன்.

“சண்ட நடக்கிற இடத்துக்கு கிட்ட ஏன் ஐயா வந்தனீழுங்கள்? அவன் ஷெல் அடிப்பான் எண்டு கேக்க அழுகிறாரடி” என்றாள் இவள். எனக்கு பார்க்கப் பெரிய சங்கடமாக இருந்தது. அப்பாக்கள் அழுததை நான் ஒருபோதும் பார்க்கவில்லை. எங்களுடைய அப்பா சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில்தான் வீட்டுக்கு வருவார் வீட்டில் எல்லா வேலையும் செய்வார். அம்மாவுக்குச் சமைத்தும் கொடுப்பார்.

எங்களுக்கு குளிக்கத் தண்ணீர் அள்ளித் தருவார். பின்னேரமென்றால் மடமடப்பான சறமும் சேட்டும் போட்டு குறுநில மன்னர் போல வெளிக்கிட்டுப் போய் கடற்கரையில் காலாற நடந்து வருவார். இரவு எங்களோடு சாப்பிடுவார். நிறையக் கதைப்பார். அப்பாவாவது அழுவதாவது?

அந்த ஐயா அழ, எனக்கு அப்பாவின் நினைவும் வர, வயிற்றைப் பிசைந்தது. அவர் துவாயால் வாயைப் பொத்தியவாறு விம்மிக் கொண்டிருந்தார். கண்ணீர் ஓடிக்கொண்டேயிருந்தது. என்னுடைய அப்பாவை விடவும், இவருக்கு வயது கூட. இவருடைய பிள்ளைகள் எங்களை விடவும் பெரிய அக்காக்கள், அண்ணாக்களாகத்தான் இருப்பார்கள். காணியைப் பார்த்து அழுவதால், இது இவருடையதாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் காணி போனாலும் இவ்வளவு பெரிய அக்காக்களும், அண்ணாக்களும் இவரை வைத்துப் பார்க்க மாட்டார்களோ? நான் மனதிற்குள் இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கிடையில் என்னுடன் நிற்கும் ஒருத்தி தேநீரோடு வந்து,

“குடியுங்கோ ஐயா, தூரத்திலிருந்து வந்திருப்பீங்கள்” என்றாள். இரண்டு கைகளாலும் தேநீர் கோப்பையை வாங்கியவர் குடித்து முடித்து, முகத்தை துடைத்த பின், அவரின் மனம் சற்றுத் தெளிந்திருப்பது போல் எனக்குப் பட்டது. பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு தானாகவே அவர் கதைத்தார்.

“எனக்கு ஏழு பொம்பிளைப் பிள்ளையளம்மா. ஆறு பேர் குடும்பமாயிட்டுதுகள். மூத்தவள் மட்டும் வீட்டோடை இருக்கிறாள் முப்பத்தி மூண்டு வயசு பிள்ளைக்கு செவ்வாய் குற்றம். இவ்வளவு காலமும் ஒண்டும் சரிவரேல்ல. நான் பெரிய கமக்காரனம்மா. பரந்தனில, கரடிப்போக்கில எனக்கு வயல் காணியள் இருக்கு ஏழு பேரையுமே கஸ்ரம் தெரியாமத்தான் வளத்தனான். பிள்ளையளுக்கே எல்லாத்தையும் பிரிச்சுக் குடுத்திட்டன். இந்தக்காணியும், மில்லும் மூத்தவளுக்கு. இப்பத்தான் பிள்ளைக்கு ஒரு இடம் பொருந்தி வந்திருக்குது. மாப்பிள்ளை பகுதி கொஞ்சம் கஸ்ரம். காணியையும் மில்லையும் பார்த்திட்டுத்தான் ஓமெண்டு சொன்னது” மூச்சை ஆழமாக இழுத்துவிட்டுச் சொன்னார்.

“இப்ப காணியும் போய், மில்லும் போய், என்ரை குஞ்சின்ரை வாழ்க்கையும் போயிட்டுது. ம். ஏதோ எனக்கொருக்கா காணியையும் மில்லையும் பார்க்கோணும்போல இருந்தது. உங்களிட்டையோ, ஆமியிட்டையோ எண்டுகூடத் தெரியாமத்தான் வந்தனான். கண்டிட்டு அவன் சுட்டாலும் பரவாயில்லை எண்டு வந்தனான். இனி நான் இருந்தும் என்ரை பிள்ளைக்கு என்னத்தை செய்யப்போறன்?”

துவாயை உதறிக்கொண்டு எழுந்தவரிடம், மில் இருக்கும் இடத்தை கேட்டாள் சுருதி. இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதியை நோக்கிக் கையைக் காட்டினார்.

“நான் வாறன் மக்கள். நல்லாயிருங்கோ” என்றவாறு மிதிவண்டியை உருட்டிக்கொண்டு தளர்வாக நடந்து போனவரின் பின்னே ஓடிப்போன சுருதி,

“செல்லடிப்பான். கெதியிலை போகவேணும் ஐயா” என்று சொல்ல அவர் மிதிவண்டியிலேறிப் போனார். சுருதி திரும்பியும் ஓட்டத்தில் வந்தாள்.

“ஏன்ரி, காணியும் மில்லும் இல்லாத பொம்பிளையைக் கலியாணம் செய்ய ஊருலகத்தில் ஒரு ஆம்பிளையளும் இல்லையோ?” என்றாள்.

“இல்லாதபடியாத்தான் ஐயா அழுகிறார்” என்றேன் நான். சுருதி தலையை ஆட்டியவாறு சொன்னாள். “எனக்கும் இரண்டு அண்ணாமார் இருக்கினம். சீதனம் வாங்கித்தான் கலியாணம் கட்டிறதென்டா, உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்குதென்டதை மறந்திடுங்கோ எண்டு கடிதம் எழுதப்போறன்” என்றவளின் முகத்தில் தெரிந்தது கோபமா? அல்லது வேதனையா? அல்லது இரண்டும் கலந்த ஒன்றா ?

அன்றைக்கு முருங்கைக்காய் சமைக்கவில்லை. அன்று முழுவதும் நாங்கள் அந்த ஐயாவை, முகம் தெரியாத அக்காவை, அவர்கள் வாழ்ந்திருக்கக்கூடிய வாழ்வைப்பற்றியே கதைத்துக் கொண்டிருந்தோம். இதற்கிடையில் சுருதி தன் தமையன்மாருக்குக் கடிதம் எழுதி, வெளி வேலைக்கு போனவர்களிடம் அஞ்சல் செய்யுமாறு கொடுத்துவிட்டாள்.

“இண்டையிலையிருந்து இது எங்கடை காணி. இந்தக் காணியை அக்காவின்ரை கையிலை குடுக்கிறவரைக்கும் இதைப் பாதுகாக்கிறது எங்கடை பொறுப்பு. இதை அவனிட்டை விடக்கூடாது விடுபட்டாலும் அடிச்சுப் பிடிப்பம்” என்றாள் சுருதி திடீரென்று.

இந்தக் கதை அந்த நேரம் சண்டையில் நின்ற அநேகம் போருக்கு தெரியும். எல்லோருமாகச் சேர்ந்து எங்களைக் “கட்டுக்கிணத்துக் காணிக்காரர்” ஆக்கிவிட்டார்கள். இப்போதுதான் அந்தக் காணி விலைபோகின்றதா?

1998 இல் கிளிநொச்சியை நாங்கள் மீட்டபோது அக்காவின் காணியும், மில்லும் மீண்டுவிட்டன. கண்ணிவெடிகள் முடிந்தவரை அகற்றப்பட்டு, போன வருடம்தான் காணிகள், வீடுகளெல்லாம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 1996 இல் முப்பத்து மூன்று வயதென்றால், இப்போது அக்காவுக்கு முப்பத்தெட்டு வயதாகியிருக்கும். இப்போதுதான் காணி விலை போகின்றது என்றால். இனித்தான் கலியாணமோ? அல்லது காணியில்லாவிட்டாலும் பரவாயில்லை என்று அக்காவை அப்போதே திருமணம் செய்த அண்ணாதான் இப்போது ஏதும் தேவைக்காக காணியை விற்கிறாரோ? யோசனைகள் பல மாதிரி ஓடின.

“விடக்கூடாது….. விட்டாலும் பிடிச்சு குடுக்கவேணும்” என்று 14 மலைமகள் கதைகள்

சொன்ன சுருதி எதிரியிடம் எம் நிலம் பறி போகாமல் நாம் தடுத்த ஒரு சண்டையில் நிலத்தின் விலையாக உயிரைக் கொடுத்தாள். பறிபோன நிலத்தை மீட்ட சண்டையில் கயல்விழி, நானெல்லாம் எமது உடலின் பாதி இயக்கத்தை, கொஞ்சப் பேர் உறுப்புக்களை, இன்னும் கொஞ்சப் பேர் உயிர்களை. நிறையக் கொடுத்துவிட்டோம்.

எனக்கு தெரிந்த, அறிந்த, பழகிய முகங்கள் பலரை அதன் பின்னர் நான் சந்திக்கவுமில்லை. யார் யார் இருக்கிறார்களோ? எந்தத் துறையில் என்ன பணியைச் செய்கிறார்களோ? எல்லோரையும் திடீரென்று ஒரு நாள் சந்தித்தால்?

எனக்கு எல்லாவற்றையும் கயல்விழியுடன் கதைக்க வேண்டும் போலிருக்கின்றது. உடனேயே கதைக்கவேண்டும். எல்லாவற்றையும் ஒரு முறை அவளோடு சேர்ந்து மீட்கவேண்டும். வதனியை கூப்பிட்டவாறே வீட்டுவாசலை நோக்கி நாற்காலியை உருட்டத்தொடங்கினேன்.

– புலிகளின் குரல், வானோசை 11, கலை இலக்கியப் போட்டியில் முதற் பரிசு 2001, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *