தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,049 
 
 

ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நல்லமுத்து. பெயருக்கேற்றபடி பாடம் நடத்துவதிலும் தன்னிடம் பயிலும் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணமும் கொண்டவர்.

நன்கு படிக்காத மாணவர்கள்கூட அவர் வகுப்பில் படிக்கும்போது நன்கு படிக்கும் ஒழுங்கு உள்ள மாணவர்களாக மாறிவிடுவார்கள். காரணம், நாட்டின் வருங்காலம் மாணவர்கள் கையில்தான். அந்த மாணவர்களை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்களே என்ற மேலான எண்ணம் அவரிடம் எப்போதும் இருந்ததுதான்.

அவரிடம் செல்வன் என்ற மாணவன் படித்து வந்தான். ஒவ்வொரு பாடத்திலும் எப்போதும் குறைவான மதிப்பெண்களே பெற்று வந்தான். தினமும் வீட்டுப் பாடங்களையும் ஒழுங்காக எழுதி வருவதில்லை. நல்லமுத்து யோசித்தார்.

அவன் மிகவும் சாதுவான மாணவன். யாரிடமும் அவ்வளவாகப் பேசுவதோ, வகுப்பு நடத்தும்போது பிற மாணவர்களுடன் சேர்ந்து அரட்டையடிக்கும் பையனோ இல்லை. ஆனால் ஏன் சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான். நல்லமுத்து யோசித்தார்…

அன்று வீட்டுப் பாடம் எதுவும் அவன் செய்து வரவில்லை. அவனை அழைத்தார். பயந்துகொண்டே வந்த அவன் அவரைப் பார்த்ததும் ஓவென அழுதுவிட்டான். அவர் அவனைத் தட்டிக் கொடுத்தார். அவன் குடும்பப் பின்னணியை விசாரித்துக் கேட்டார்…

“”ஏம்ப்பா செல்வா, உனக்கு என்னைப் பிடிக்கலியா?”

அவன் வாய் பேசாது தலையை ஆட்டினான்.

“”ஏன் அச்சம்? என்னிடம் உனக்குப் பிடிக்காத செயல்கள் எதுவும் இருக்கின்றதா?”

இப்போது சற்றே அச்சம் நீங்கப் பெற்றவனாக, “”அப்படி எதுவும் இல்லீங்க சார்…” என்றான்.

“”நான் நடத்தும் பாடங்கள் உனக்குப் புரிகின்றனவா?”

“”இல்லை…” என்று பதில் அளித்தான் செல்வன்.

“”ஏன், மற்ற மாணவர்கள் நன்கு புரிந்து கொள்கிறார்களே? உனக்கு மட்டும் ஏன் புரியவில்லை? தினமும் வீட்டுப் பாடங்களையும் நீ செய்து வருவதில்லை. நீ என்னிடம் உன் கஷ்டங்களைக் கூறினால் நான் அவற்றைச் சரிசெய்து உன்னையும் மற்ற மாணவர்களைப் போல ஆக்கி இருப்பேன் அல்லவா?”

இப்போது அவன் பதில் பேசவில்லை. ஆனால் அழுதான். பயத்தால் அவன் உடலில் ஒரு நடுக்கம் இருந்ததை ஆசிரியர் உணர்ந்தார்.

“”தம்பி செல்வா, உனக்கு இறைநம்பிக்கை உண்டா?”

“”உண்டு…” என்று தலையை ஆட்டினான் செல்வன்.

“”நீ கிராமத்துப் பையன். உன் தாய் தந்தையர்கள் விவசாயிகள். அவர்களால் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் சொல்லிக் கொடுப்பதுபோல உனக்குக் கற்றுத்தர முடியாது. இல்லையா?”

“”ஆமாம் சார்…”

“”கவலை வேண்டாம். நான் உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். நீ அதன்படி நடந்தால், நீயும் மற்ற மாணவர்கள் போல நன்கு படித்து வாழ்வில் முன்னுக்கு வரலாம். உனக்காக நான் கல்வி தேவதையிடம் வேண்டுவேன். அது உனக்கு ஐந்து நாள்களுக்கு உதவி செய்யும். பிறகு நீ முயற்சி எடுத்து உழைத்துப் படித்தால், நீயும் அந்த தேவதையின் ஆசியினால் நன்கு தேர்ச்சி பெற்று மிகப் பெரியவனாக வருவாய்.. ஆனால் ஐந்து நாட்கள்தான் தேவதையின் உதவி கிடைக்கும். அதன் பிறகு நீ முயற்சி செய்யாவிடில் நல்ல வாய்ப்பை இழந்தவனாகிவிடுவாய். சரியா? இப்போது நீ எனக்கு ஒரு உறுதி அளிக்க வேண்டும். அதாவது “கல்வி தேவதை செய்யும் உதவிக்குப் பிறகு நானே உழைத்து நன்கு படிப்பேன்!’ எங்கே சொல் பார்ப்போம்” என்றபடியே அவனைப் பார்த்தார்.

செல்வனுக்கோ சந்தேகம். கல்வி தேவதையா? அது எப்படி உதவி செய்யும்? இருந்தாலும் ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி உறுதிமொழி கொடுத்தான்.

அன்றைக்கான தமிழ் இலக்கணங்களை நன்கு படித்து, அதை வீட்டுப் பாடமாக எழுதி வரவேண்டும் என்று ஆசிரியர் கூற அன்றைய வகுப்பு முடிந்தது.

மறுநாள்… அனைவரும் ஆசிரியரிடம் வீட்டுப் பாட நோட்டுப் புத்தகங்களைக் காட்டி கையொப்பம் பெற்றனர். செல்வன் வீட்டுப்பாடம் செய்து வராததால் எழுந்து நின்றான்.

அவனைத் தட்டிக் கொடுத்த ஆசிரியர், “”கவலைப்படாதே, உனக்கு கல்வி தேவதை ஐந்து நாள்களுக்கு உதவி செய்யும்” என்று கூறிவிட்டு அவனை அமரச் செய்தார்.

அன்றைய மதியஉணவு இடைவேளையில் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வெளியே சென்றபோது, நல்லமுத்து செல்வத்தின் வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தையெடுத்து, அவன் செய்யாத பாடங்களை எழுதி அவனுடைய பைக்குள் வைத்துவிட்டார். பிறகு அன்று கொடுக்க இருக்கும் கணக்குப் பாடத்துக்கான வீட்டு வேலையையும் அவனுடைய கணக்கு நோட்டில் எழுதி வைத்துவிட்டார்.

அன்று வகுப்பு முடியும்போது செல்வத்தின் நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதிவைத்த கணக்குப்பாடங்களையே வீட்டு வேலையாக எல்லா மாணவர்களுக்கும் கொடுத்தார்.

மறுநாள். கணக்குப் பாட வீட்டுப் புத்தகத்தை அனைவரும் காட்டியபோது செல்வன் மட்டும் அழுதபடியே நின்றான்.

“”ஏம்ப்பா செல்வா, நீ ஏன் அழுதுகொண்டு நிற்கிறாய்? உன் கணக்கு நோட்டை எடுத்துக்கூடவா நீ பார்க்கவில்லை?” என்று கேட்டபடியே அவனுடைய நோட்டைக் கொண்டு வரச் சொன்னார். அந்த நோட்டை செல்வத்தின் முன்னிலையில் பிரித்துப் பார்த்தார். அதில் அழகிய கையெழுத்தில் வீட்டுப் பாடங்கள் அனைத்தும் எழுதியிருப்பதைப் பார்த்த செல்வன் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.

“”சரி…நேற்று தமிழ் இலக்கண வீட்டுப் பாடம் எழுதாமல் வந்தாயே, அந்த நோட்டைத் திறந்தாவது பார்த்தாயா?” என்று கேட்டார் நல்லமுத்து.

அவன் இல்லையென்று தலையாட்டினான்.

அந்த நோட்டுப் புத்தகத்தையும் திறந்து பார்க்கச் சொன்னார். அதிலும் அவன் செய்யாத பாடங்கள் அழகாக எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தான். அவன் மகிழ்ச்சியில் துள்ளினான்.

“”இத பாருப்பா செல்வா… கல்வி தேவதை ஐந்து நாள்களுக்குத்தான் உதவி செய்யும் என்று சொன்னேன் அல்லவா? இப்ப இரண்டு நாள்கள் போய்விட்டன. இன்னும் மூன்று நாட்கள்தான் பாக்கி உள்ளன. அதற்குள் நீ முயற்சியெடுத்து, அச்சப்படாமல் படிக்க முயல வேண்டும். இல்லையேல் தேவதை செய்யும் அத்தனை உதவிகளும் வீணாகிவிடும்… புரிகிறதா?”

இப்போது செல்வன் தன்னம்பிக்கையுடன் தலையாட்டினான்.

அதேபோன்று, ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு என மூன்று நாட்களுக்கு வீட்டுப் பாடங்களைக் கொடுத்து, அவைகளை செல்வன் அறியாத சமயம் பார்த்து எழுதி வைத்தார் ஆசிரியர்.

ஒவ்வொரு நாளும் அவன் தன் வீட்டுப் பாட நோட்டுப்புத்தகத்தைத் திறந்து பார்த்ததும் அதில் அன்றைக்கு ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்கள் எழுதியிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தான்.

இப்போது அவனுக்குப் படிக்க வேண்டும் என்ற ஊக்கமும் அதற்காக முயற்சி செய்தால் தானும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணமும் மேலோங்கியது.

மேலும் ஆசிரியர் கூறியபடி, ஐந்து நாட்களும் இன்றோடு முடிவடைவதால், இனி கல்வி தேவதை உதவாது என்றும் அதனால் இனிமேல் நம் முயற்சியால்தான் நாம் முன்னேற முடியும் என்றும் அப்போதுதான் கல்வியின் தேவதையின் அன்பும் ஆசீரும் தன்னோடு என்றும் இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை அவனுடைய மனத்தில் வேரூன்றியது.

ஐந்தாம் நாள் மிகவும் தன்னம்பிக்கையுடனும் மகிழ்வுடனும் செல்வன் வகுப்புக்கு வந்தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே ஆசிரியர் மகிழ்ந்தார். அவன் மனம் மாறியிருப்பது தெரிந்தது. அவனிடம் இருந்த அச்சம் விலகியிருந்தது.

அவனுடைய அச்சத்தைக் களைய, மனோரீதியாகத் தான் கொடுத்த சிகிச்சை வெற்றி பெற்றுவிட்டதாக ஆசிரியர் எண்ணினார்.

அன்று அவர் கொடுத்த வீட்டுப் பாடங்களை, மறுநாள் அனவரும் செய்த வந்தபோது, செல்வனும் தனது வீட்டுப் பாடங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்திருந்தான். அத்துடன் கையில் ஒரு பேப்பரையும் கொண்டு வந்தான்.

“”என்ன பேப்பர் அது?” கேட்டார் நல்லமுத்து.

“”சார்… வீட்டுப் பாடங்களை எழுதும்போது, எனக்கு நேற்று நடத்திய பாடங்களில் சில சந்தேகங்கள் தோன்றின. அவற்றையெல்லாம் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். என் சந்தேகங்களைப் போக்கி, எனக்குத் தெளிய வைக்கவேண்டும்…” என்றான் செல்வன்.

“”வெரிகுட்… இப்போதுதான் நீ உணர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறாய். நான் உனது சந்தேகங்களைப் போக்குவதற்குப் பெருமைப்படுவதோடு என் மாணவன் என்று சொல்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். உனக்கு கல்வி தேவதையின் அருள் நிச்சயம் கிடைத்துக் கொண்டே இருக்கும். உன் முயற்சியையும் உழைப்பையும் தொடரும் வரை… சரியா?”

அவன் ஆர்வத்துடன் தலையாட்ட, அதுவே அவனுடைய வருங்கால வெற்றிக்கான அஸ்திவாரம் என்பது நன்கு தெரிந்தது.

– ஜி.சுப்பிரமணியன் (மே 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *