தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 14,543 
 
 

”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது பார்த்து எடுத்தால்தான் நான் முட்டையிலிருந்து வெளிவருவேன். உன் அதிர்ஷ்டம் நீ என்னைப் பார்த்தாய். அப்பாடா எத்தனை வருஷமாக காத்துக் கிடந்தேன் தெரியுமா? என்னை ஒருவரும் கண்டுபிடிக்கவே இல்லை!”

”அதிர்ஷ்டமா? ஐயோ… இனிமே நீ அந்த மாதிரி சீட்டி அடிக்காமல் இரேன்!”

மறுநாள் அவர்கள் எழுந்திருக்கும்போது அதுவும் எழுந்தது. அதற்குத்தான் உடலை இஷ்டப்படி குறுக்கிக் கொள்ள முடியுமே. சின்ன பறவையாக பாபுவின் சட்டை பைக்குள் ஒளிந்து கொண்டது. பாபுவும், பவித்ராவும் பள்ளிக் கூடம் சென்றனர்.

திருந்திட்டேன்அந்த பறவை அவன் பையிலேயே தூங்கிவிட்டது. பாபுவும் பறவையைப் பற்றி மறந்தே விட்டான். ‘டிரில்’ கிளாஸ் வந்தது. மைதானத்தில் விளையாட ஓடினர். பாபுவின் கண்ணில் ஒரு பூனைக்குட்டி பட்டுவிட்டது. அவ்வளவுதான். உடனே அதன் வாலுக்கும் வந்தது ஆபத்து.

பாபுவின் தோளில் உட்கார்ந்தபடி காதை வெடுக்கென்று கொத்திவிட்டு பலமாக சீட்டி அடித்தது. விடாமல் ரொம்ப ரொம்ப பலமாக சீட்டியடித்தது. சீட்டி சப்தம் கேட்டு ஹெட்மாஸ்டர் வெளியே வந்தார். பாபுவின் காதைப் பிடித்து இழுத்துக் கைக்கு நாலு அடி கொடுத்து விட்டு, அன்று முழுவதும் பெஞ்சு மீது நிற்கும்படி உத்தரவிட்டார்.

”நான் அந்த பூனையின் வாலைப் பிடித்து இழுத்திருக்கக் கூடாது” என்று சிவந்து போன உள்ளங்கையை தடவிக் கொண்டான்.

”பவித்ரா! இந்த பறவையை எப்படியாவது ஒழித்துக் கட்டணுமே… இன்னிக்கு ராத்திரி நம்ம தோட்டத்து பாழும் கிணற்றிலே அதன் காலில் ஒரு கல்லைக்கட்டி போட்டு விடுகிறேன்,” என்றான்.
பவித்ராவும் அது நல்ல யோசனை என்றாள்.

மறுநாள் முழுவதும் அந்த பறவை வரவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோஷம் கொஞ்ச நஞ்சமல்ல… ”நல்லவேளை ஒழிந்தது!” என்றிருந்தனர்.

அன்று மாலை – பாபுவும், பவித்ராவும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டுக் கோழியை ஓடஓட விரட்டினான் பாபு.

திடீரென்று பலமான சீட்டி சத்தம் கேட்டது. மறுநிமிடம் அந்தப் பறவை பாபுவின் தோளில் உட்கார்ந்து கொண்டு ஸ்வரம் போட்டு விகாரமாக சீட்டி அடிக்க ஆரம்பித்தது. பத்து ரயில் எஞ்சின் சேர்ந்து கத்தினால் உண்டாகும் சத்தத்தைப் போல.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த பாபுவின் அப்பா கையில் பிரம்புடன் வந்தார்.
”தடிப் பயலே! நான் இந்த மாதிரி சீட்டி அடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்வது? பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் புகார் பண்றாங்க. உன்னை உதைத்தால்தான் புத்தி வரும்,” என்று பிரம்பை ஓங்கியபடி வந்தார். பாபு அலறி ஓடினான். அப்பாவிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக. அந்தக் கோழியைப் போல தோட்டம் முழுவதும் ஓடினான். கடைசியில் அவன் அப்பா கையில் சிக்கி, நல்ல அடியையும் வாங்கிக் கொண்டான் பாபு.

பிரமைப் பிடித்துப் போய் நின்று கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்து, ”நீ சீட்டி அடித்தால் உனக்கும் இதே கதிதான்,” என்று எச்சரித்தார் அப்பா.

பாவம் பவித்ரா, சாதுபோல ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தபடி புல்தரையில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள். பாபு உள்ளே விசித்து, விசித்து அழுது கொண்டிருந்தான்.

பவித்ராவுக்கு படிப்பு ஓடவில்லை. எதிரில் உள்ள செடியில் ஒரு சிலந்தி தன் கூட்டை பழுது பார்த்துக் கொண்டிருந்தது. பவித்ராவின் கெட்ட குணம் அவளை அந்த கூட்டை மறுபடி பிய்க்கும்படிச் செய்தது. பிய்த்தது தான் தாமதம். என்ன நடந்தது தெரியுமா? அதே தான்! அண்ட ரண்ட பஷியின் அட்டகாசம்தான். நல்ல வேளை அப்பா வெளியே போய் விட்டார். அம்மா வந்தாள்.

”ஏண்டி! உனக்கு மூளையில்லை? சீட்டி அடிக்கிற… அப்பா இல்லே தப்பிச்சே. வேலை இல்லாட்டா இங்கே வா. இந்த பின்னல் துண்டை முடித்து வை,” என்றாள்.

பவித்ராவுக்கு நன்றாக பின்னல் வேலை தெரியும். பத்து நிமிஷத்தில் முடித்து விட்டாள். ஆனால், குப்பென்று விசித்திர பறவை வந்தது. தன் அலகினால் பின்னி இருந்த முழுவதையும் ஒரே நிமிடத்தில் பிரித்து விட்டது.

பாவம் பவித்ராவுக்கு அழுகை அழுகையாக வந்தது.

”ஏ பறவையே! உனக்கு நாங்கள் அடி வாங்கறது சந்தோஷமாவா இருக்கு?” என்றாள்.

”ஓ… உனக்கு சிலந்திக் கூட்டை அறுத்தெறியும் போது அழுகையாகவா இருந்தது?” என்று கேட்டு விட்டுப் பலமாகச் சீட்டி அடிக்க ஆரம்பித்தது.

”ஐயையோ சீட்டி அடிக்காதயேன்,” என்று அதன் வாயை மூடினாள்.

ஆனால், அதற்குள் அம்மா வந்து பவித்ராவுக்கு சீட்டி அடித்ததற்காகவும், பின்னல் துண்டைப் பிய்த்து வீண் செய்ததற்காகவும், செம்மையான பூசை கொடுத்தாள்.

அன்றிரவு பாபுவும், பவித்ராவும், ”இதை எப்படி விரட்டுவதென்று தெரியவில்லையே,” என்ற சிந்தனையில் தூங்கவேயில்லை.

அப்போது அருகே படுத்திருந்த அந்த பறவை சிரித்து விட்டு சொல்லியிற்று.

”என்னை விரட்டவா? உங்களால் முடியாது. உங்களைப் போன்ற குழந்தைகளிடம் தான் எனக்கு வேலை. பிராணிகளிடம் அன்பும், இரக்கமும் உள்ள நல்ல குழந்தைகளிடம் என்னால் இருக்க முடியாது. ஆனால், உங்களிடம் எனக்கு நாள் முழுவதும் வேலை இருக்கிறது. ஹா… ஹா… ஹா!” என்றது.

பாபுவுக்கும் அப்போதுதான் தெரிந்தது. தாங்கள் துஷ்டத்தனமான காரியம் செய்யும் போது தான் அது வந்து சீட்டி அடிக்கிறது என்று.

‘சரி இனி அந்த பறவைக்கு வேலையே இல்லாமல் செய்ய வேண்டும். எல்லா பிராணிகளிடமும் அன்பாக இருக்க வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டனர் இருவரும்.

மறுநாள் நாயையும், பூனையையும் தடவிக் கொடுத்தனர். இவைகளுக்கு ஆச்சரியமாக இருந்தன. பறவைகளுக்கு கடலையை வாரி இறைத்தனர். ஒரு குருவிக் குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்துக் கிடந்தது. அதை எடுத்து கூட்டில் சேர்த்தனர். நாயும், பூனையும் அவர்கள் பின்னால் வாலை ஆட்டிக் கொண்டு வந்தன. பறவைகள் உல்லாசமாகப் பாடின.

பாபுவுக்கும், பவித்ராவுக்கும் இந்த புதிய அனுபவம் சந்தோஷமாக இருந்தது.

”பவித்ரா, இவற்றுக்கு துன்பம் செய்வதை விட நல்லது செய்வதால் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது பார்த்தாயா?” என்றான் பாபு. அதை ஆமோதித்தாள் பவித்ராவும்.

அண்டரண்ட பக்ஷி தூங்கி வழிந்தது; கொட்டாவி விட்டது.

அன்று முதல் பாபுவும், பவித்ராவும் ரொம்ப ரொம்ப நல்ல குழந்தைகளாக மாறி விட்டனர். கிளியும், குருவியும், மைனாவும் அவர்கள் தோளில் உட்கார்ந்து விளையாடின. நாயும், பூனையும் அவர்களை வட்டமிட்டபடி இருந்தன.

– ஏப்ரல் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *