தவளைகள் வேண்டிய அரசன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 2,903 
 
 

தவளைகள் கட்டற்று சுதந்திரமாய் இருந்தன, சமுத்திரம் போன்ற குளம் மட்டுமல்லாது அதனையண்டிய நிலப்பரப்பிலும் அவை கால்கள் பதிய பாய்ந்து திரிந்தன.அவற்றின் தேவைகள் சிரமமின்றி நிறைவேறின. உண்பது உறங்குவது முதலான அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமன்றி ஏனைய தேவைகளுக்காகவும் அவை ஏங்கி நிற்கவேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை.எல்லாவற்றுக்கும் மேலாகப் தவளைகள் யாவும் உயிர்ப் பயமின்றி வாழும் சூழல் அங்கு நிலவியது…

ஆனாலும்…எதோ ஒன்று…குறைவதாய் அவை உணர்ந்தன…

ஏதாவது பிரச்சினை இருந்தால்…அதிலிருந்து விடுபடவேண்டும் என்ற வேட்கை இருந்துகொண்டே இருக்கும்.

ஏதாவது தேவை நிறைவேறாது இருந்தால் அந்தத் தேவையை அடைவதற்கான தேடல் இருந்துகொண்டே இருக்கும்…

இவை இரண்டுமே இல்லாத நிலைபோலும் தவளைகளுக்கு….

வேட்கையும் தேடலும் இல்லாத வாழ்வில் வெற்றிடம் ஏற்பட்டுவிடக் கூடும்… வெறுமை சலிப்பு ,,,அந்த வெற்றிடத்தில் வந்து உற்காந்துகொள்ளும்…

தவளைகளின் வெறுமையால் மன உளைச்சலுக்கு உள்ளாகின,அந்த உளைச்சலுக்குக் தம்முள் ஒழுங்கின்மை நிலவுவதே காரணம் என மூத்த தவளை ஒன்று விளக்கமளித்தது.ஏனைய தவளைகளும் அதனையே உண்மையென நம்பத் தொடங்கின, இந்த நம்பிக்கை மெல்ல மெல்ல வளர்ந்து உறுதி அடையலாயிற்று.தமது நடத்தைகளை ஒழுங்கு செய்ய ஒரு அரசன் வேண்டும் எனத் தவளைகள் கூடி முடிவெடுத்தன, அந்த முடிவை தங்கள் கடவுள்களில் ஒருவரான சேசுவிடம் தெரிவித்தன.அவர்களின் கோரிக்கையைக் கேட்ட சேசு தம்முள் சிரித்துக் கொண்டார். தவளைகளிடம் இருந்த ஒழுங்கான நடத்தைகளே அவற்றினது சுதந்திரமான நிறைவான வாழ்க்கைக்கு காரணமாக இருக்க தவளைகள் இவ்வாறு வேண்டினால் கடவுள் சிரிக்காமல் என்னதான் செய்வார்.

அவர் பெரிய மரக்கட்டை ஒன்றை தொப்பென அந்தக் குளத்தை நோக்கி வீசி எறிந்தார்.

மரக்கட்டை விழுந்த சத்தம் காதைப் பிளப்பதாய் இருந்தது.நீர்த்திவிலைகள் தெறித்ததில் குளத்தின் நீர்முழுவதுமே வெளியேறிவிட்டதோ என்ற கண் மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

தவளைகள் திகிலில் நடுங்கின . கிடைத்த இடத்தில் ஒளித்துக் கொண்டன. சிறிது காலம் குழப்பமும் தெளிவின்மையுமாகக் கழிந்தது.

மரக்கட்டையோ விழுந்தபோது ஏற்படுத்திய ஆரவாரம் எதுவும் இன்றிச் செயலற்று அசைவற்றுக் கிடந்தது.

தவளையொன்று சிறியது ..இளங்கன்று பயமறியாது ,பெரியவர்களின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து ஒருநாள் மரக்கட்டைமேல் ஏறியது. கட்டை அப்பொழுதும் அசைவற்றுக்கிடந்தது,தவளை குதித்தது …துள்ளிப்பாய்ந்தது, எதுவும் நடக்கவில்லை. பார்த்திருந்த சிறு பராயத்துத்துத் தவளைகளுக்கு கட்டை விளையாட்டுப் பொருளானது. பெரிய தவளைகளும் பயம்விலக்கி ஏறி இறங்கின. கட்டையின் தொடக்கப் பகுதியிலிருந்து முடிவுவரை யார் முதலில் போய் வருவதெனப் போட்டியிட்டன. பாய்ந்து பாய்ந்து களைத்தன.’ உணர்வும் செயலும் அற்ற இதுவா எம் அரசன்! தாயக்கட்டை , தவளைக்கட்டை…’ . எனக் கட்டையைப் பலவாறு கேகலிசெய்து அவமதித்தன.

இச் செயற்பாடுகளும் ஒருகட்டத்தில் தவளைகளுக்கு அலுத்துப் போயின.

மீண்டும் வெறுமை ….தம்மை சேசு ஏமாற்றிவிட்டதாக ஒரு நினைப்பு. கோபமும் கூட,..

இம்முறை வியாழ பகவானிடம் சென்று தமது குறையை முறையிடலாம் எனச் சில தவளைகள் கருதின.

ஆனால் சில தவளைகளோ சேசு போலவே வியாழபகவானும் தம்மை ஏமாற்றக்கூடும் எனக் கருதின. வியாழபகவான் மிகவும் கோபக்காரர் என்றும் பழிவாங்கும் குணம் படைத்தவர் என்றும் எந்தச் சந்தர்பத்தில் எவ்வாறு நடந்து கொள்வார் என்று தெரியாது என்றும் புறணி பேசின. .அவற்றுள்ளும் ஒரு சில ஒருபடி மேலே சென்று வியாழன் பற்றி அவதூறு பேசக்கூடத் தயங்கவில்லை. ஆனாலும் இறுதியாக தவளைகள் கூடிப்பேசி மரக்கட்டை போலல்லாத ஆற்றல் உள்ள அரசனைத் தருமாறுகேட்பதாக முடிவெடுத்துப் பகவானை அடைந்து தம் வேண்டுகோளை முன்வைத்தன.

சேசு போல வியாழ பகவான் சாந்த சொரூபி இல்லை என்பதும் உண்மைதான்.,அவருடைய செந்நிறம் போலவே அவருடைய கோபமும்,,,,சேசுவினால் வழங்கப்பட்ட .மரக்கட்டையை அவமதித்ததுடன் தன்னையும் கேலி செய்து அவதூறு பேசிய தவளைகள் மீது கடுங்கோபம் கொண்டார் வியாழ பகவான்.

உடனே மரக்கட்டைக்குப் பதிலாக நல்ல பாம்பொன்றை குளத்தை நோக்கி எறிந்தார்,

பாம்புகள் தவளைகளின் பரம எதிரியாயிற்றே,,,தவளை வேட்டை தொடங்கியது. பாம்பினது விசப் பற்களுக்கு தவளைகள் பல இரையாயின. பாம்பிடமிருந்து உயிர் தப்புவதே தவளைகளின் தலையாய செயற்பாடாக மாறியது. தவளைகளின் இருப்பே கேள்விக்குறியாயிற்று.

எஞ்சிய தவளைகள் வியாழபகாவானிடம் பாம்பைக் குளத்திலிருந்து அகற்றுமாறு கதறியடி கெஞ்சின.

பகவான் மௌனத்தையே பதிலாக்கினார்.

தவளைகளின் அவலமும் தொடர்ந்தது.

– இத்தாலி மொழி மூலத்தின் தழுவல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *