கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,506 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

6. நாடகம் நடந்தது | 7. ஊர் திரும்புகிறான்

ஜக்குவின் பெயர் ஒரே நாளில் பையன்களிடையே பிரபலமாகி விட்டது. தெருவில் போய்விட்டால் போதும். ஒரே அட்டகாசம்!

“அடே, இவன் தாண்டா புது ஹெட்மாஸ்டராக ஆக்ட் பண்ணினவன்!” என்பான் ஒருவன்.

“டிக்கெட்கூட இல்லாமல் எங்களை உள்ளே விட்டாண்டா” என்பான் இன்னொருவன்.

“இந்தப் பையனாடா அவ்வளவு ஜோராய் நடிச்சது?” என்று கேட்பான் வேறு ஒருவன்.

“இந்தப் பையன் இல்லேடா; இவனுக்குள்ளே வேறோர் ஆள் இருக்காண்டா!” என்பான் மற்றொருவன்.

இப்படி எல்லாரும் ஜக்குவைப்பற்றிப் புகழ்ச்சியாகவே பேசினார்கள். நந்து இதைப் பார்த்துவிட்டு ஜக்குவிடம் வந்து, “ஏய், ஊரில் ஒருவர் பாக்கியில்லாமல் உன்னைப் பிரமாதமாய்ப் பேசுகிறார்களடா!” என்றான்.

“தப்பு, தப்பு! நான் இதை நம்பவே மாட்டேன்” என்றான் ஜக்கு, படுக்கை, பை முதலியவைகளைக் கட்டி வைத்துக் கொண்டே.

“பின்னே நான் பொய்யா சொல்கிறேன்?” என்றான் நந்து.

“பொய் இல்லை; தப்பாகச் சொல்கிறாய் என்கிறேன்!”

“சரி; அப்போ என்கூட வருகிறாயா, ரைட்டா, தப்பா பார்த்துவிடலாமா?”

“ஓ! நான் ரெடி! ஆனால் நான் சொல்லுகிறவர்களிடந்தான் முதலில் போகவேண்டும்.”

“யாரிடம்? அதையாவது சொல்!”

“முதலில் ‘உல்பி’டமும் சோனிக் கபாலியிடமும் போகலாமா?”

இதை ஜக்கு சொன்னது தான் தாமதம். இருவருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள். உல்பும் சோனியும் டிராமாவுக்குப் பிறகு வெளியில் தலையைக் காட்டவே இல்லை!

“நந்து, இன்னிக்கு ராத்திரி வண்டிக்கு ஊருக்குப் போகப் போகிறேன். அதற்குள் எனக்கு ஒரே ஒரு வேலை மட்டும் இந்த ஊரில் பாக்கியிருக்கிறது. நான் என்ன பிளான் போட்டிருக்கிறேன், தெரியுமா?”

“என்ன?”

“கேள், சொல்கிறேன். இன்னிக்கு என் ஜாகை மறுபடியும் மாடிக்குப் போவது தான்!”

“ஆமாண்டா, அந்த டெலிபோன் ஆசாமியை எப்படிடா கண்டுபிடிக்கிறது? பொம்மையை எப்படிடா எடுத்துண்டு போறது?” என்றான் நந்து.

“எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஆனால் நீ மட்டும் ஒரு காரியம் செய்யவேண்டும். தயங்காமல் செய்வியோ?”

“என்னடா என்னைப் பார்த்து இப்படிக் கேட்கறே? நானாடா உன் விஷயத்தில் தயங்குகிறவன்!”

“சே சே, அதுக்குச் சொல்லல்லேடா. இது அப்படித் தயங்க வேண்டிய விஷயம்! நீ போய்விட்டுச் சரியாக ஒன்பதரை மணிக்கு, மாமா ஆபீசுக்குக் கிளம்புகிற சமயத்துக்கு இங்கே வரவேண்டும். அவ்வளவுதான்!” என்றான் ஜக்கு.

“சரி; இவ்வளவுதானே” என்று எண்ணிக்கொண்டு நந்து வீட்டுக்குச் சென்றான்.

சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் நந்து வீட்டுக்குள் நுழைந்தான். ஜக்குவின் மாமா சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குக் கிளம்பிக்கொண் டிருந்தார்.

மாடியிலிருந்து ஜக்கு ஓடோடியும் வந்தான். நந்துவே திடுக் கிட்டுப் போகும்படி ஆக்ரோஷத்துடன், “அட திருட்டுப் பயலே! ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் போட்டாயேடா, பயலே! உன் வேலையை இந்த ஜக்குவிடமா காட்டுகிறாய்? அசல் காவேரித் தண்ணீர் குடிக்கிறவண்டா! உன்னைப்போலக் குழாய்த் தண்ணீர் குடிக்கிறவன் இல்லே!” என்று சொல்லிவிட்டு நந்துவின் மேல் பாய்ந்தான். நந்து திமிறினான். ஜக்கு பிடியை விடுகிற வழியாய் இல்லை. அவன் முன் தலைமயிரைக் கெட்டியாக ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் திமிற முடியாதபடி அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். மாமா அவர்களை விலக்குவதற்குள் இவ்வளவும் நடந்துவிட்டது.

மாமா விலக்கி விட்டபின், “நீங்கள் சிநேகமாய் இருந்து விட்டு, இப்படிச் சண்டை போடலாமா?” என்றார்.

“இல்லே மாமா, ‘சரியாக ஒன்பதரை மணிக்கு வாடா’ என்றான் மாமா. வந்ததும் வராததுமாய்ச் சண்டைக்கு வந்து விட்டான், மாமா” என்றான் நந்து.

ஜக்கு ஒன்றுமே பேசவில்லை. வெகு நேரங் கழித்து டெலி போன் மணி கிணுகிணுத்தது. ஜக்கு இதை எதிர் பார்த்தவன் போலவே டக்கென்று ரிஸீவரைக் கையில் எடுத்தான்.

“ஹல்லோ! ஜக்குவா?”

“ஆமாம், ஜகந்நாத்.”

“எப்படி இருக்கிறது உனக்கு உடம்பு?”

“ரொம்ப நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு…?”

“ரொம்பத் தைரியம் வந்து விட்டதோ! இன்றைக்குள் என்னை யாரென்று கண்டுபிடிக்கப் போகிறாயாமே!”

“பாதி கண்டு பிடித்து விட்டேனே!”

“ஓஹோ! அவ்வளவுக்கு வந்துவிட்டாயா? சரி; நந்து வோடு இன்றைக்குச் சண்டைக்குப் போனாயா?”

“இல்லையே!”

“உண்மையில் நீ அவனோடு சண்டை போடவில்லை?”

“உண்மையில் போடவில்லை.”

“நீயும் அவனும் சண்டை போட்டுக்கொண்டு இப்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசுவதில்லை என்று நான் சொல்கிறேன்.”

“சொல்லுங்களேன்! நான் இல்லை என்கிறேன்.”

“என்னிடம் பொய் சொல்லுகிறாயா?” என்று மிரட்டியது அந்தக் குரல்.

ஜக்கு திரும்பினான். கதவருகில் நந்து நின்றுகொண் டிருந்தான். கையால் சைகை காட்டி, அவன் அருகில் வந்ததும் ரிஸிவரைக் கையில் கொடுத்தான்.

“ஹல்லோ ! நான் தான் நந்து – நந்து பேசறேன்.”

“யாரு, நந்துவா?”

“ஆமாம்; என்ன ஆச்சரியமாய் இருக்கோ?”

“உனக்கும் ஜக்குவுக்கும் சற்று முன்பு பலத்த சண்டை நடக்கவில்லை?”

“நான் கூட முதல்லே அப்படித்தான் நிஜச் சண்டையாக்கும் என்று நினைச்சேன. அப்புறந்தான விஷயம் புரிஞ்சுது. ஜக்கு அவன மாமா போனப்புறம் வந்து வயிறு வெடிக்கச் சிரித்தான். எனக்கே வெட்கமாகப் போயிடுத்து. ‘இப்போ பாருடா, இன்னும் சற்றைக்கெல்லாம் எனக்கு டெலிபோன் வரப்போகிறது. வாயேன், ஒரு வேடிக்கை!’ என்று என்னை இங்கே ஜக்கு அழைச்சிண்டு வந்தான். உடனே நீங்களும் டெலிபோன் பண்ணி விட்டீர்கள் ! ஜக்குவின் ஜோஸ்யம் அப்படியே பலிச்சுட்டுதே!” என்றான்.

அந்தப் பக்கத்தில் டக்கென்று ரிஸீவரைக் கீழே வைத்த ஓசை கேட்டது. நந்து, “ஹலோ, ஹல்லோ!” என்று கூப்பிட்டுப் பார்த்தான். பதிலே இல்லை. ஜக்கு சிரித்தான்.

நந்துவுக்கு எல்லாம் அதிசயமாய் இருந்தது. “சரியடா ஜகு. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிஞ்சுது? அந்தப் படத்தில் இப்படிப் பேசுவது யார் என்று கண்டு பிடிச்சு விட்டாயா? சொல்லேன்; ஏன் என்னிடம் அப்படி நிஜம்போலச் சண்டை போட்டாய்?” என்று படபடவென்று கேட்டான்.

ஜக்குவின் சாமர்த்தியமும் புத்திக் கூர்மையும் அவனை மேலும் பிரமிக்க வைத்தன. ஜக்குவோ அலட்சியமாக, “டேய், எவ்வளவு சுலபமான விஷயம் இது? இதைக் கண்டு பிடிப்பது என்னடா ஒரு பிரமாதம்!” என்றான்.

“அப்படியானால் இவ்வளவு நாளும் கண்டுபிடிக்கிறதுக்கு என்ன? பயந்து பயந்து ஓடினயே!” என்றான்,

“அதுதான், அவ்வளவுக்கு எனக்குப் புத்தி எட்டவில்லை. யோசனை பண்ணிப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. முதல்லே டெலிபோன் வரும்போது யாருமே நிதானம் தவறித்தானே போவார்கள்.”

“எனக்கு என்னமோப்பா, இன்னமும் புரியவேயில்லை” என்றான் நந்து.

“எல்லாம் ராத்திரி ஸ்டேஷனுக்கு வாயேன், புரியச் சொல்கிறேன்” என்றான் ஜக்கு.

“ஆமாம், பொம்மை?”

“எல்லாம் ஸ்டேஷனுக்குத் தன்னாலே வரும், பாரேன்.”

இரவு மணி எட்டு. எழும்பூர் ஸ்டேஷன் ‘ஜே ஜே’ என்று இருந்தது. ட்யூப் விளக்குகள் பிரகாசமாய் எரிந்தன. இந்தோ சிலோன் போட்மெயில் ரொம்பவும் கம்பீரமாக முதல் பிளாட் பாரத்தில் நின்றுகொண்டிருந்தது. ஜக்கு பீல்டு மார்ஷல் போல ஒரு தொப்பியை அணிந்துகொண்டு ‘செகண்டு கிளாஸ் கம்பார்ட்மென்’டில் உட்கார்ந்திருந்தான். நந்து கீழே பேசிக் கொண்டு நின்றான். வண்டி புறப்பட இன்னும் கால் மணிக்கு மேல் இருந்தது.

‘ணங்’ – எஞ்சின் பூட்டியாயிற்று!

நந்துவுக்கு வருத்தம் இவ்வளவு அவ்வளவு என்று இல்லை. பல தடவைகள் ரகசியமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தான் . ஜக்குவுக்கு மட்டும் வருத்தம் இல்லையா?

“இதோ இருக்காண்டா, ஜக்கு!” என்று குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் . உல்பும் சோனியுந்தான். உல்பின் கையில் ஒரு பெரிய ‘பேக்கட்’ இருந்தது.

ஜக்கு, கீழே இறங்கி அவர்களோடு கை குலுக்கினான்.

“எங்களை மன்னிச்சுடு, ஜக்கு! உன்னுடைய கெட்டிக்காரத் தனத்தையும் சிநேகத்தையும் நாங்கள் அலட்சியமாய் நினைச்சுட் டோம். நீ இங்கேயே படிக்க வரப்போகிறாயாமே! எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்றான் உல்ப்.

ஜக்கு பெருந்தன்மையுடன், ‘நான்தான் நியாயமாய்ப் பார்த்தால உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். ஸ்விம்மிங் பூலிலும் டிராமாவிலும் உங்களுக்கு ரொம்பக் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டேன். போன தெலலாம் போகட்டும். நாம் இப்ப வாவது சந்திசசு மனமவிட்டுப் பேசிக்கொண்டு பிரிகிறோமே! இதைவிட வேறென்ன ஆனந்தம் வேண்டும்?”

நந்துவோ உல்பின் கையிலிருந்த பெரிய பேக்கெட்டைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அதில்தான் அந்தப் பொம்மை இருக்க வேண்டும்! அப்படியானால் உல்புதானா அந்த டெலிபோன் ஆசாமி! ‘அட, இந்தப் பயலுடைய வேலைதானா இதுவும்?’ என்று தோன்றிற்று அவனுக்கு.

இந்தச் சமயத்தில் ஜக்குவின் தோளில் இரண்டு முரட்டுக் கைகள் வந்து அமாநதன. ஜக்கு மெல்லத் திரும்பிப் பார்த்தான. அந்தப் பழைய என்ஜின் டிரைவா!

“ஹல்லோ!” என்று திரும்பி அவனிடம் தாவிக் கைகளைப் பற்றிக்கொண்டான்.

“ஹல்லோ பச்சா!” என்றான் டிரைவர் சிரித்துக்கொண்டே. பிறகு, “டிக்கெட், கிக்கட் வாங்கியிருக்கிறாயா? இல்லாட்டி அந்தப் பழைய பாலத்துக் கிட்டயே உன்னை இறக்கிவிட்டுப் போயிடட்டுமா?” என்றான்.

“இதோ ஸீட் ரிஸர்வ் பண்ணியிருக்கிறேன்!” என்றான் ஜக்கு. அதற்குப் பிறகு டிரைவரிடம், இவர்களெல்லாம் என்னுடைய ‘பிரண்ட்ஸ்.’ இதோ, இப்போ என் மாமா வரப்போகிறார்! இந்தப் பொம்மையைக்கூட முன்னாடி கொடுத் தனுப்பி யிருக்கிறார். அவரே கொண்டு வரலாமா?” எனறு சொல்லிக்கொண்டே உல்பின் கையிலிருந்து அந்தப் பேக்கெட்டை வாங்கிப் பொம்மையைப் பிரித்துக் காட்டினான்.

“வா, அடுத்த ஜங்ஷன்லே பார்க்கிறேன் உன்னை!” என்று விடை பெற்றுககொண்டு போனான் டிரைவர். நாழிகையாக விட்டதே! நந்துவுக்கு இப்பொழுது தான இன்னும் வியப்பாய் இருந்தது. உலபின் வேலை என்று நினைத்தது பிசகாகிவிட்டதே! ‘அவன் மாமா செய்த வேலையா?’ என்று எண்ணி ஆச்சரியப் பட்டான்.

இரண்டே நிமிஷங்கள்!

மாமா அவசர அவசரமாய்ப் பிளாட்பாரத்தில் நுழைந்து வந்தார். ஜக்குவைக் கண்டு, “அடேய், ஏண்டா கீழே நிற்கிறாய்? போய் இடத்தில் உட்கார்ந்துகொள்” என்றார்.

“ரொம்ப தாங்ஸ், மாமா!” என்றான் ஜக்கு, தன் இடத்தில் உட்கார்ந்துகொண்டதும்.

“எதுக்குடா தாங்ஸ்?”

“பொம்மையை ஜாக்கிரதையாய் வைத்திருந்து கொடுத்ததுக்கும், அப்புறம் எல்லாத்துக்குந்தான்” என்றான் ஜக்கு.

“போக்கிரி! எப்படிடா தெரிஞ்சுகொண்டாய்?” என்றார் அவர் சிரித்தபடி.

“நந்து வோட நிஜமாகச் சண்டை போடுவது போலப் போடாமல் இருந்தால் மாமி எங்கிட்டே டெலிபோன் செய்யும் உண்மையைச் சொல்லியிருப்பாளா?” என்றான் ஜக்கு.

“அட போக்கிரி!” என்று மட்டுமே அவர் கூறினார். அதற்குள், ‘புஸ்’ என்றது எஞ்சின். எல்லாரும் கண்ணில் ஜலம் கசிய உற்சாகமாகக் கைவீசி அவனை வழியனுப்பினார்கள்.

– தொடரும்…

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *