கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 30,949 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்

1. கயஸ்மார்க்கியஸ் : கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்றழைக்கப்பட்டவன் – ரோமின் ஒப்பற்றவீரன் – வலம்னியா மகன் , வர்ஜிலியாகணவன் – கயஸ் தந்தை – ரோமின் பகைவனான தார்க்குவினை முறியடித்தவன்.
2. துள்ளஸ் ஆபீதியஸ் : ரோமர் பகைவரான வால்ஷியரின் தலைவன் – கோரியோலானஸால் முறியடிக்கப்பட்டவன் – கோரியோலானஸ் ரோமின்பகைவனை போது நண்பனானவன்.
3. காமினியஸ் : கோரியோலி முற்றுகையின் போது கோரி யோலானஸையும் நடத்திச் சென்ற ரோமப் படைத் தலைவன்.
4. திதஸ்லார்ஷியல் : கோரியோலி முற்றுகையில் கோரியோ லானஸுடன் சென்ற துணைத்தலைவன்.
5. மெனெனியஸ் சுக்ரிப்பா : கோரியோலானஸ் நண்பன் – நாத்திறமும் நயமு’முடையவன் – பொது மக்களை உயர்த்தும் சீர்திருத்த நோக்கமுடைய பெருமகன்.
6. தார்க்குவின் : ரோமக்குடியரசின் பகைவனான பழையரோமக் கொடுங்கோலரசன்.
7. கயஸ் : கோரியோலானஸ் புதல்வன் – சிறுவன்.

பெண்டிர்
1. வலம்வியா : கோரியோலானனின் மனைவி – அறிவும் அடக்கமும் உடையவள்.
2. வர்ஜிலியா : கோரியோ லானஸின் மனைவி –அறிவும் அடக்கமும் உடையவள்.
3. (பிறமாதர்)

கதைச் சுருக்கம்

கயஸ் மார்க்கியஸ் என்ற வீரன் ரோமப் பெருமக்கள் குடியிற் பிறந்தவன்; குடித் தருக்கு உடையவன். அவன் ரோமரின் பகைவனான பழைய ரோமக்கொடுங்கோலரசனை வென்றும், வால்ஷியர் நகராகிய கோரியோலியை வென்று அவர்கள் தலைவனான துள்ளஸ் ஆபீதியஸை முறியடித்தும் புகழ் பெற்று ரோமின்முடிசூடா மன்னனாய் விளங்கினான். கோரியோலியை வென்றதனால் கொரியோலானஸ் என்று அவன் பெருமக்கள் விருப்பப்படி அவன் நகர்த்தலைவனாகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டான். நின்றபோது வழக்கப்படி வாக்காளர் களான பொது மக்களை வணங்க மறுத்ததனால் பொதுமக்களும் அவர்கள் தலைவர்களான திரிபூணர்களும் அவனை வெறுத்து நகரினின்றும் துரத்தினர். அதனால் சினங்கொண்டு அவன் ஆபீதியஸுடன் சேர்த்து ரோமை அழிக்க வஞ்சினங் கூறினான்.

ரோமர் கோரியோலானளின் தாயையும் மனைவியையும் அவன் குழந்தையுடன், ரோம மாதர் தலைமையில் சென்று அவன்வஞ்சினத்தினின்றும் தம்மைக் காக்கும்படி வேண்டினர். அவர்களும் அங்ஙனம் சென்று அவன் மனமுருகப் பேசித் தம் திறமனைத்தும் காட்ட, கோரியோலானஸ் தன் கடமையையும், சினத்தையும் அவர்களுக்காக விட்டுக் கொடுத்தான். ஆனால் வால்ஸியர் அவன் தம்மைக் காட்டிக் கொடுத்ததாகக் கொண்டு அவனைக்கொன்று சின்னா பின்னப்படுத்தினர். ரோமர் அதன் பின் கழிவிரக்கங்கொண்டனர்.

கோரியோலானஸ்

க.வெற்றியும் செருக்கும்

கயஸ்மார்க்கியஸ் என்பவன் ரோம் நகரத்தின் பழைய அரசர் குடியிற் பிறந்தவன். இளமையி லேயே அவன் தந்தை இறந்துபோனமையால். அவன் தாயாகிய வலம்னியாவே அவனை வளர்த்து வந்தாள்.

வலம்னியா ரோம் நாட்டு வீரத்தாய்களுக்கு ஓர் இலக்கியமானவள். ஆகவே அவள் தன் மகனுக்கு உடற்பயிற்சி, வில்லாண்மை, வாள் வீச்சு முதலிய வீரருக்கான கல்விகளை முற்றிலும் பயிற்றுவித்ததுடன் அவன் பதினாறு ஆண்டு எய் தியதும் அவனைப் போருக்கும் அனுப்பினாள். அவனும் ரோமின் பழைய கொடுங்கோலரசனும் ரோமக் குடியரசின் முதற் பெரும் பகைவனுமான தார்க்குவினை எதிர்த்து முறியடித்து, அவனைச் சார்ந்த வீரரிடம் அகப்பட்டுத் துன்புறவிருந்த ரோமனொருவனையும் காப்பாற்றி மீட்டுவந்தான். இவ் வீரச் செயலை அந்நகரத்தார் அனைவரும் வியந்து பாராட்டி, அவனுக்கு அந்நாட்டு வழக்கப்படி வாகை முடி சூட்டி மகிழ்ந்தனர்.

வீரமில்லா மகன் ஒருவன் வாழ்தலினும், வீரமிக்க மக்கள் பதின்மர் மாள் தலையே சிறப்பாகக் கருதி மகிழும் பெருந்தகைமையுடைய வலம்னியா,

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும், தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்’ – திருக்குறள்.

என்பதற் கிணங்கத் தன் மகன் புகழ் கேட்டு மட் டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

Shakespeareகயஸ்மார்க்கியஸ் அவள் வளர்ப்புத்திறனுக் கோர் அரிய நற்சான்றாக விளங்கினான் என்பதில் ஐயமில்லை. அவனை ஒத்த வீரம், பெருந்தன்மை , நேர்மை, கலங்கா மன உறுதி முதலிய உயர் குணங்கள் படைத்தோர், வீரத்துக்குப் பேர்போன ரோம் நகரத்திற்கூட வேறெவரும் இல்லை எனலாம். வலம்னியா ரோம் மாதருக்கோர் இலக்கியமாக விளங்கியது போலவே, அவனும் ரோம் வீரர்களுக்கோர் இலக்கியமாக விளங்கினான்.

ஆனால், குளிர்ச்சியும் ஒளியும் நிறைந்து விளங்குந்திங்களிற் கறை என்பதொன்று காண்பது போல, அவ்வளவு குணங்களுக்கும் ஒவ்வாத ஒரு குறை கயஸ்மார்க்கியஸிடம் அதே தாயின் வளர்ப்பின் பயனாகக் காணப்பட்டது. அதுவே அவள் வாயிலாக அவன் அடைந்த குடும்பச் செருக்கும் உயர் குடிச்செருக்கும். இக் குற்றம் உண்மையில் ரோமப் பெருமக்கள் அனைவரிடமுமே இருந்தது என்பது உண்மையே. ஆனால் கயஸ்மார்க்கியஸ் களங்கமற்றவன்; உலகின் சூதுவாது அறியாதவன். எனவே அக்குற்றம் அவன் பேச்சாலும் செயலாலும் பிறருக்குத் தெரியும்படி வெளிப்படையாயிருந்தது.

ரோம் அரசு, பெயருக்குக் குடியரசேயாயி னும். அதனை உண்மையில் ஆண்டவர்கள் உயர் குடியிற் பிறந்த செல்வர்களாகிய பெருமக்களே. உண்மையில் ரோம் வெற்றிகளிற் கிடைத்த பொருள் நகருக்குப் பொது உடைமையேயாயி னும், நடைமுறையில் அந்நகரின் அரசியல் ஏற் பாட்டின்படி அது பெருமக்களுக்கு மட்டும் உரி யதா யிருந்தது. ஏழைப் பொதுமக்களுக்கு அதிற் பங்கில்லை என்று மட்டுமில்லை ; அவர்கள் கடன் சுமையால் வேறு துயருற்றனர். செல்வர்களான உயர்குடி மக்களின் பக்கமே வழக்கு மன்றங்களும் சட்டமும் நின்று ஏழை மக்களைக் குற்றுயிராக்கி வதைத்தன.

இந்த நிலையில், ‘இனி அரசியலிற் பங்கின்றி ரோமின் சண்டைகளில் கலப்பதில்லை,’ என்று அவ்வேழை மக்களின் தலைவர்கள் தீர்மானித்தனர். இக்குழப்பத்தை ரோமின் பகைவர்கள் அறிந்து படையெடுத்துவரத் தொடங்கினர். இங்ஙனம் பெருமக்களுக்கு எதிராக வெளியிற் பகை வர் படையெடுப்பும், உள்ளே பொதுமக்கள் கிளர்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன. தமது இக்கட்டான நிலைமையை உணர்ந்து பெருமக்களிற் பலர் வட்டிச் சட்டத்தையும் அரசியல் உரிமைகளையும் சற்றுச் சீர்திருத்த உடன்பட்டனர்.

கயஸ்மார்க்கியஸ் பெருமக்களை மட்டுமே மக்களாக மதித்தான். அப்பெருமக்கள் செய்யும் வழி வழிக் கொடுமைகளையோ ஏழைப் பொதுமக்களின் நிலைமைகளையோ அவன் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆயினும் பொதுமக்கள் நாட்டின் இடுக்கணைத் தமக்குப் பயன்படுத்திக் கொள்ளுவதைக் கண்டு சீற்றங்கொண்டு அவன் அவர்களுக்கு ஓர் இம்மியளவுகூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முழங்கினான். கயஸ்மார்க்கியஸைப் போலவே பெருங்குடி மக்களிற் பலரும் ஏழைப் பொதுமக்களை எதிர்த்தபடியால் அரசியல் மன்றத் தில் சீர்திருத்தக் கட்சியின் திட்டம் தோற்றது. இதனைக் கேள்வியுற்றதே பொதுமக்கள், ‘இனி இந்நகரில் இருத்தலாகாது,’ என வெளியேறினர். அப்போது பெருமக்கள் பாடு திண்டாட்டமாயிற்று. ஆடல் பாடலிலே வளர்ந்த அப்பெருமக்கள், நாட்டு மக்கள் அனைவரும் போனபின் தனியே நின்று என்ன செய்வது? அவர்கள் கயஸ்மார்க் கியஸின் நண்பனும் சீர்திருத்த விருப்புடையவர் களுள் ஒருவனுமான மெனெனியஸ் அக்ரிப்பா! என் பவனை அப்பொதுமக்களுக்கு நன்மொழிகள் கூறி அவர்களை அழைத்துவரும்படி அனுப்பினர்.

மெனெனியஸ் ஆண்டு முதிர்ந்தவன்; சொல் நயமுடையவன். அவன் பொதுமக்களைப் பலவா றாகப் புகழ்ந்து பேசினான். ‘ரோமப் பொது மக்களே! நீங்கள், உடலைவிட்டுச் செல்லும் உயிர் போலும், ஒள்ளிய விளக்கைவிட்டுச் செல்லும் ஒளி போலும் ரோமைவிட்டுப் போய்விட நினைத்தல் ஆகுமா? அங்ஙனம் போனால் தான் என்ன, உண்மையில் நீங்கள் சென்றுறையும் இடமெல்லாம் ரோமேயாதலின், ரோமைவிட்டு நீங்கள் செல்வது ஒருவன் தன் நிழலைவிட்டுச் செல்ல முயல்வதுபோலுமன்றோ?

“மேலும் நீங்கள் யாரிடம் சினங்கொண்டு போவது? பணம் பெருமக்களிடம் இருந்தால் என்ன? உங்களிடம் இருந்தால் என்ன? அவர்கள் உங்கள் பணப் பைகள், உங்கள் உணவுப் பொருட் களஞ்சியங்களே! நீங்களெல்லாரும் ரோம் நகரத்தின் உறுப்புக்கள், ரோம் நகர்த்தின் கைகால்கள் அல்லிரோ! ரோமின் வெற்றி, ரோமின் செல்வம் எல்லாம் கைகால்களாகிய உங்கள் உழைப்பால் வருவது தானே? அவ்வுழைப்பால் வரும் உணவை வைத்திருந்து, வேண் டும்போது உயிர் தருங் குருதியாக உறுப்புக்களுக்குக் கொடுக்கும் வயிறன்றோ பெருமக்கள்? அவ்வயிற்றுடன் ஒத்துழைக்காவிட்டால் வருந்தீங்கு வயிற்றுக்கு மட்டுமா? உங்களுக்குமன்றோ?” என்றிவ்வாறாக அவன் தேன் சொட்டப் பேசினான்.

அஃதோடு அவன் பின்னும், “அவ்வயிறு, இதுவரையில் தான் செய்த பிழையை உணர்ந்து வருந்துகின்றது. இன்றுமுதல் பெருமக்கள் உங்கள் வயிறார உணவும் பிற பொருள்களுந் தாமாகவே தந்துதவுவர் என்பதை உறுதியாகக் கொள்க,” என்றான்.

அவன் பேச்சினாலும் அவன் காட்டிய குறிப் பினாலும் மக்கள் பெரிதும் மனமாறினர். ஆயினும் அவர்கள் தலைவர்களுள் ஐவர் முன் வந்து, “இஃது இடுக்கண் வேளைக்கான கைத்திறனல்லது மன மார்ந்த அருள் மொழி அன்று,” எனக் கூறி அதனை ஏற்கவேண்டா மென மக்களைத் தடை செய்யலாயினர். இதுகண்ட மெனெனியஸ் அவர் களை நோக்கிப், “பொதுமக்கள் ரோமின் கைகள். ஆனால், நீங்கள் கையின் ஐந்து விரல்கள் போல் வீர்கள். கைக்கு நேர் வழி காட்டி எங்களுடன் ஒத்துழைப்பது உங்கள் கடன்,” என்றான்.

அப்பொழுதும் அவர்களுள் ஒருவன் சீறி எழுந்து, “ஆனால் உங்களுடன் ஒத்துழைப்பது தான் நேர்வழியோ,” என்றான். அவன் குள்ள மான உருவும் தடித்த உடலும் உடையவன். மெனெனியஸ் சட்டென அவன் பக்கம் திரும்பி, ஆம், அதுவே நேர் வழி; ஆனால் ரோமின் பெருவிரலாகிய நீ இதனை உணர்ந்து பிறர்க்கு உரைக் காததனாலே தான் அவர்கள் உணரவில்லை,” என் றான். அவனைப் பெருவிரலென்று அவனுரு வுடன் ஒப்புமை தோன்றக் கூறியதும் யாவரும் தம் நிலை மறந்து கொல்லென நகைத்தனர். நகைப்பில் பகை பறந்து போயிற்று.

எல்லாரும் ரோமுக்குத் திரும்பினர். நன்மை தீமைகளிற் கருத்தூன்றி அவ்வப்போது வேண்டு வனவற்றைச் செய்ய அவர்களே திரிபூணர்கள் அல்லது தலைவர்கள் ஐவரைத் தேர்ந்தெடுப்ப தெனத் தீர்மானித்தனர்.

கயஸ்மார்க்கியஸ் இச் சிறு சீர்திருத்தங்களைக் கூட வெறுத்தான். ஆனால் விருப்பு வெறுப்பைக் காட்ட அங்கே நேரமில்லை. பகைவர்களாகிய வால்ஷியர்கள் நகர வாயில் வரை வந்துவிட்டனர். அவர்கள் தலைவனோ அந் நாளின் ஒப்புயர்வற்ற போர்வீரனான துள்ளஸ் ஆஃதியுஸ் 2 ஆவான். அவ் வால்ஷியர்களை எதிர்க்கும்படி ரோம் அரசியல் மன்றத்தார், நகரத் தலைவர்களுள் ஒருவனான காமினியஸ் என்பவனை ஒரு பெரும் படையுடன் அனுப்பினர். கயஸ்மார்க்கியஸும் அவனுடன் சென்றான்.

வால்ஷியரை முறியடிப்பதற்குச் சரியான வழி அவர்கள் தலைநகரான கோரியோலியை முற்றுகையிட்டழிப்பதே எனக் காமினியஸ் நினைத்துத் தீதஸ் லார்ஷியஸ் என்பவனையும் கயஸ்மார்க்கிய ஸையும் படையின் ஒரு பகுதியுடன் அங்கே அனுப்பிவிட்டுத் துள்ளஸ் ஆபீதியஸை எதிர்க்கச் சென்றான்.

ரோமப் படையின் ஒரு சிறு பகுதி மட்டுமே தம்மை எதிர்க்க வருகின்றதென்று கண்ட கோரி யோலி நகர மக்கள் துணிவுகொண்டு, நகர்வாயில் கடந்து வெளிவந்து ரோமப் படையைப் பின்னிட் டோடும்படி துரத்தினர்.

கயஸ்மார்க்கியஸ் பின்னிடைந்த அவ் வுரோ மர்களை நோக்கி ஏளனச் சிரிப்பும் வெகுளியுங் கொண்டு வீர முழக்கத்துடன் தானே தனியாக முன்னேறிச் சென்று நகர்வாயிலிற் புகுந்தான். வாயில் காவலர் உடனே வாயிலை மூடிவிடவே கயஸ்மார்க்கியஸ் உள் அகப்பட்டுப் பகைவர் வாளுக்கும் அம்பு மாரிக்கும் இடையே தனியே நின்று போராட நேர்ந்தது. அவன் துணிவைக் கண்டு பின்தொடர்ந்த ரோம வீரர் ஒருவரிருவரும் வெளியே நின்று, அவன் பகைவர்கள் கையிலகப்பட்டு இறந்தான் என்றே கருதிக்கொண்டு வருந்தினர்.

ஆனால் யானைக் கூட்டத்தில் அகப்பட்ட சிங்க வேற்றைப்போல அவன் உடலெல்லாம் குருதி பொங்கி வழிந்தும், விடாது போர் செய்து நாற் புறமும் இடம் உண்டுபண்ணி வாயிலை வந்து திறந்தான்.

அவனது செயற்கருஞ் செயல் கண்டு வியந்த ரோமர் அவ் வாயில் வழியே உட்புகுந்து நொடிப் பொழுதில் அந்நகரைக் கைப்பற்றினார்.

காமினியஸ் தலைமையில் ஆஃபீதியஸை எதிர்க்கச் சென்ற ரோமப் படை அப் பெருந் தலைவனது தாக்குதலைப் பொறுக்கமாட்டாமல் திணறி, நாற்புறமுஞ் சிதறியோடத் தொடங்கிற்று. காமினிய ஸம் ரோம வீரர் சிலரும் பகைவரிடையில் அகப்பட்டுத் திண்டாடினர். அப்போது அவர்கள் ஒரு தூதனை அனுப்பிக் கயஸ்மார்க்கியஸினிடம் தமது நிலைமையைத் தெரிவித்தனர்.

கோட்டையைத் தீதஸ்லார்ஷியஸினிடம் ஒப் படைத்து விட்டு கயஸ், காமினியஸுடன் வந்து சேர்ந்து போர் புரிந்தான். அவனது ஒப்பற்ற திறமையால் இங்கும் வால்ஷியர் படை சிதறியோடிற்று. அதனிடையே கயஸ்மார்க்கியஸ் ஆஃபீ தியஸை நேரில் எதிர்த்து வளைக்கலானான்.

தம் தலைவன் எங்கே சிறைப்பட்டு விடுவானோ என்றஞ்சிய வால்ஷிய வீரர், அவனை வலுவில் இழுத்துக்கொண்டோடினர்.

இதுவரையிற் போரிற் புறங்காட்டா வீரனாகிய ஆஃபீதியஸ் இவ்வவமதிப்புக்குக் காரணமாகிய கயஸ்மார்க்கியஸ்மீது பழிவாங்குவதென்று வஞ் சினங் கூறி அகன்றான்.

கயஸ்மார்க்கியஸ் கோரியோலியை வென்ற அருந்திறல் வீரன் என்ற காரணத்தால் அன்று முதல் அவன் கோரியோலானஸ் என்று அழைக்கப்பட்டதோடு, ரோமின் முடிசூடா மன்னனாகவும் விளங்கினான். போருக்குப் போகுமுன் அவன் தம்மை எதிர்த்ததைக் கூட மறந்து பொதுமக்கள் அவனைத் தெய்வமாகக் கொண்டாடலாயினர்.

ரோம் நகரம் அன்று அவன் காலடியிற் கிடந்தது. அதன் தலைமையோ அதன் பொருட் குவையோ எல்லாம் அன்று அவன் நாவசைவிற்கே காத்திருந்தன.

ஏழைகளும், செல்வர்களும், பெண்டிரும், பிள்ளைகளும், சமயத் தலைவரும், அடிமைகளும், யாவரும் வீரர் பெருந்தகையான அவனை அன்று காணக் கிடைக்காமல் கூட்டத்தை நெருக்கிப் பிசைந்து கொண்டு வந்தனர்.

தென்றற் காற்றுக்கூட நேரிடையாக முகத்தில் வீசியறியாத உயர்குல மாதர்கள், முக்கா டின்றி வெயிலையும் பிறர் பார்வையையுங்கூடப் பொருட்படுத்தாமல் மாடியில் வந்து நின்று அவனைக் கண்டு மகிழ்ந்தனர்.

அன்று அவன் வெறும் ரோமன் அல்லன், ரோமர் வணங்கும் தெய்வமேயாயினான் என்னல் வேண்டும்.

உ.வணங்காமுடி மன்னன்

ஆனால், பொதுமக்கள் கொரியோலானஸின் எதிர்ப்பை மறந்துவிடினும் அவர்கள் தலைவர்களான ஜூனியஸ் புரூட்டஸும், ஸிஸினியஸ் வெலுதளம் அதை மறக்கவில்லை. அவர்கள் அவன் புகழை அழித்துப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

அவ்வாண்டு, பெருமக்கள் அனைவரும் கோரியோலானஸையே தம் தலைவனாக்க வேண்டு மென்று முடிவு செய்தனர். தலைவர் தேர்வு எப்போதும் பெருமக்கள் மனப்படியே நடப்பினும், தலைவராக விரும்புவோர் அவ்வொருநாள் பெருமக்கள் உடையையும் பெருங்குடிச் செருக்கையும் விட்டுவிட்டு எளிய உடையில் இரவலர்போல் நின்று பொது மனிதன் ஒவ்வொருவனிடமும் அவன் தருகின்ற இணக்கச் சீட்டுக்காக மன்றாட வேண்டு மென்பது அந்நகரத்தின் மரபு. போரிற் காயமடைந்தவர்கள் இத்தறுவாயில் அக்காயங்களைக் காட்டியுஞ் சீட்டிரப்பதுண்டு.

இத்தகைய வாழ்க்கைச் சடங்குகளிற் கோரி யோலானஸுக்குப் பழக்கமுங் கிடையாது. அதில் அவன் மனம் செல்லுவதுமில்லை. தன் உயர்வு தன் வீரத்தினாலேயேயன்றி இத்தகைய மன்றாடல் களாலன்று என்று அவன் நினைத்தான். ஆத லால், இதனை ஒரு வெட்கக்கேடாகக் கருதி அவன் தன் நண்பர்களுடன் நகைத்தும் கேலி செய்தும் அதனை வேண்டா வெறுப்புடன் நிறைவேற்ற எண்ணினான்.

ஆனால் ரோமப் பொது மக்களை ஒருவன், ஏமாற்றி அவமதிக்க முடியுமாயினும் எதிர்த்து அவமதிக்க முடியாது என்பதை அவன் அன்று கண்டான். என்றும் ரோம் அரசியல் வாழ்வில் தெருத் தூசிக் கொப்பாகப் பெருமக்கள் தேர்க் காலடியிற் கிடந்து புரண்ட பொது மக்களுக்கு அவ்வொரு நாள் தம் ஆற்றலையும் வெற்றியையும் அளந்தறியும் நாளாயிருந்தது.

எத்தகைய வீரனும் அன்று அவர்களுக்குப் பணிந்தே தீரவேண்டும். அன்று பணிந்து, வேண்டுமாயின் அடுத்தநாள் அவர்கள் தலையில் அச்சமும் இரக்கமுமின்றி மிதிக்கலாம். முழுப்பழியும் வாங்கலாம்; ஆனால் அன்று பணிந்தே தீர வேண்டும்.

ஒருநாள் கழிந்த பின் அவர்களனைவரும் அஞ்சி வணங்குந் தெய்வமாயினும் என்ன, அன்று அவர்கள் கையால் உருவாக்கப்படவேண்டியதே அன்றி வேறில்லை.

ஆனால் கோரியோலானஸ் இதை அறிந்து பொருட்படுத்தினால்தானே! வீரனாகிய தான்-உலகினர் அஞ்சும் வால்ஷியரின் தலைமைப் பெருங்கோட்டையைப் பிறருதவியின்றித் தனியே நின்று வென்ற தான் – ஒப்பற்ற வீரனாகிய ஆஃபீதியஸை யும் கலங்கவைத்த தான் – பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தியெனப் பதுங்கி ஓடும் இப்பதர்கள் முன் நின்றிரப்பதா என நினைத்தான் அவன். வணங்காமுடி மன்னனாகிய தான், வழி வழி அடிமைகளாகிய அவர்கள் முன் நின்று பசப்பு மொழி பேசவேண்டுமேயென்று நினைக்கும் போதே அவன் நாக்கு மேல்வாயிற் சென்று பதிவதாயிற்று.

போர் முழக்கத்தில் தேர்ந்த அவன் நாக்கு அன்று குழறிற்று. போரிற் கோட்டையினின்று பொழியும் அம்புமாரிகளினிடையே நின்று நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்கும் அவன் முகம் அன்று வணங்க முடியாமற் குழம்பிற்று. முன்பின் அறி யாதவரிடம் இன்றியமையா நிலையில் பேசும் மங்கையர்போன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உணர்ச்சியற்ற குரலில், ‘உங்கள் சீட்டைக் கொடுங்கள், நான் தலைவனாகவேண்டும்,’ என்றான்.

உணர்ச்சியற்ற இம் மொழிகளைக் கேட்டு வெறுப்புற்றும், அவன் வீரத்தை எண்ணி அவர்கள் அவனுக்குச் சீட்டை யளித்தனர். ஆனால் சீட்டளித்தபின் கூட்டத்திற் சென்று அவர்கள் முணுமுணுத்துக்கொண்டனர். தமது மரபுரிமை யான மதிப்பை இழக்க அவர்கள் மனங்கொள்ளவில்லை. இம் மனப்பான்மையைக் குறிப்பாய் அறிந்த ஜூனியஸ் புரூட்டஸும், ஸிஸினியஸ் வெலுதஸும் அவர்கள் முன் வந்து, ‘நீங்கள் கோரியோலானஸைத் தெரிந்தெடுத்தது சரிதான்; ஆனால் அவன் , முன் உங்களை அவமதித்தவன், இனி அவமதிப்பதில்லை என்று மன்னிப்பாவது கேட்க வேண்டாமா?’ என்றனர்.

கூட்டம் தன் ஆற்றலை வலியுறுத்த வாய்ப்பு நேர்ந்தது கண்டு எழுச்சியுடன், ‘ஆம், ஆம்; மன்னிப்புக் கேட்கவேண்டும்; பொதுமக்கள் விருப்பத்தை இனி மதிப்பதாக உறுதிமொழி கூற வேண்டும்,’ என்றது.

அவர்கள் உடனே, ‘திரிபூணர்கள் என்ற முறையில், நாங்களே அவனுக்குத் தலைமை நிலைக் குரிய சின்னங்கள் அளிக்க வேண்டும்; அப்போது உங்கள் சார்பில் இம் மன்னிப்பைக் கேட்போம்; நீங்கள் துணை நிற்க’ என்று கூறிவிட்டுப் பொது மன்றத்திற்குச் சென்றனர். கூட்டம் பின் தொடர்ந்தது.

கோரியோலானஸின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்ததெனவே நினைத்துப் பெருமக்களும் அவனும் அத்தேர்வை நிறைவேற்றுதற்கான விழாவிற்காக முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் தலைவனாகவிருக்கும் கோரியோ லானஸ்முன் திரிபூணர் வந்து நின்றனர். அப்போது ஜூனியஸ் புரூட்டஸ் ‘கோரியோலானஸ்! தலைமை நிலைக்குரிய பெருமை உனக்கு முற்றிலும் உண்டு; ஆயினும் நீ தலைவனாகுமுன், பொதுமக்களை அவமதிப்பதில்லை என்றும், அவர்கள் விருப் பத்திற்கு இணக்கமாக நடப்பேன் என்றும் உறுதி மொழி கூறவேண்டும் என்று அவர்கள் விரும்பு கிறார்கள்,’ என்றனன்.

கோரியோலானஸ் சட்ட நுட்பங்களையும் மர புரிமைச் சிக்கல்களையுங் கவனியாமல், அவர்களது சிறுமைத்தனமான இடையீட்டைக் கண்டு வெகுண்டு, ‘என் தலைமை நிலை பொதுமக்கள் கொடையன்றே, இத்தனை பணிந்து மன்றாட வேறு தகுதியின்றி அவர்களைப் புகழ்ந்து திரியும் உங்களைப்போன்ற சொத்தைகள் அல்லவா அவர்களுக்குப் பணியவேண்டும்? ரோமின் பகைவர் களை எதிர்த்து உயிர் கொடுக்கும் வீரர் மன்றாட வேண்டுவதேன்?

பொதுமக்களும் அவர்கள் தலைவர்களும் பொதுப்படையாக மிகவும் சிறுமையுடையவரே யாயினும் இத்தறுவாயிற் பெருந்தீங்கு செய்யும் ஆற்றலுடையவர்கள் என்று கோரியோலானஸின் நண்பர்கள் கண்டு அவனைத் தடுத்துப் பணிய வைக்க விரும்பினர்.

Shakespeare2ஆனால் அவனது வீரநெஞ்சம், கொசுக்கடிகள் போன்ற திரிபூணர்களின் மொழிகளை மதியாமல் வெகுண்டெழுந்தது. அவனை அழிக்கக் காத்திருந்த அத்திரிபூணர்கள் பேரிரைச்சல் செய்து மக்களைத் தூண்டிவிட்டனர். கைக்கெட்டியது பல வாய்க்கெட்டாமற் போனதுபோல கோரியோலானஸின் தலைமைநிலைத் தேர்வு நிறைவேறாது போயிற்று.

கோரியோலானஸுக்குமட்டும் இஃது ஒரு ‘பெருங் குறைவாகத் தோன்றவில்லை. அவன் பெருமக்களைப் பார்த்து, “இவையனைத்தும் உங்கள் ஆண்மையற்ற நிலைமையினால் வந்தன. இச்சிறுமை மிக்க நாய்களையும், இந்நாய்களின் தலைக் கோளாறுடைய தலைவர்களையும் பெருமை செய்து கொண்டு நீங்கள் பசப்புவானேன்? அவர்கள் என்ன பெரு வீரர்களா? போர் என்று கேட்டவுடன் ஆட்டுக் கூட்டம்போற் கலைந்தோடும் பேடி கள் அல்லரோ அவர்கள்? அவர்களுக்கு நீங்கள் வீண் சோறிட்டுப் பெருமைப்படுத்துகின் றீர்கள்,” என்றான்.

இதைக் கேட்டதும் திரிபூணர்கள் கையையும் கைக்குட்டைகளையும் வீசிப் ‘ பொதுமக்கள் பகை வன் கோரியோலானஸ் வீழ்க,’ என்று கூக்குர லிட்டனர். மக்களை நோக்கி அவர்கள், ‘ இவன் கையில் நீங்கள் அடைந்த அவமதிப்பு என்றென் றும் அடைந்ததாகும். அவன் உங்களை நாய்க் கூட்டம் என்கிறான் ; ஆட்டுமந்தை என்கிறான் ; நீங்கள் மனம் வைத்தால் நாங்கள் அவன் செருக்கை அடக்கி அவன்மீது பழி வாங்குவோம்,’ என்று கூறி அவர்களைத் தூண்டினர்.

பெருமக்கள் இப்போது ஒன்றுஞ் செய்ய இய லாது திகைத்தனர். கடல் போல் ஆரவாரித் தெழு கின்ற பொதுமக்கள் திரள் ஒருபுறம் ; தீயையும் புகையையுங் கக்கி வீறிட்டெழும் எரிமலை போற் குமுறி முழங்கி நிற்கின்ற கோரியோலானஸ் ஒரு புறம். அவர்கள் பாவம் யாது செய்வர்!

தலைவர் நிலையை மறுத்ததுடன் அவர்கள் சீற்றந் தணியவில்லை. கோரியோலானஸைக் குற்ற வாளியைப்போல் ஊர் மன்றத்தில் ஆராய்ந்து தண்டிக்க விரும்பினர். கோரியோலானஸ் இதற்கு இடங்கொடாமல் மீறலானான். ஆனால், நண்பர் களும் பெருமக்களும் அவனை மிகுதியும் வேண்டிக் கொண்டு அப்பால் இழுத்துச் சென்றனர். ரோமரின் வழக்கு மன்றம் நகரின் புறத்துள்ள கொடும் பாறை ஒன்றின் பக்கம் இருந்தது. அதன் பக்க நோக்கிக் கோரியோலானஸைச் சூழ்ந்து கொந்த ளித்துக்கொண்டு பொதுமக்கள் கூட்டம், ‘ வெட் டுங்கள், குத்துங்கள், நகரத்தின் பகைவனை, நகர மக்கள் களையை அகற்றுங்கள்,’ என்று கூறிய வண்ணஞ் சென்றது.

மன்றத்திலும் கோரியோலானஸ் இவ் வவ மதிப்பை ஏற்க மறுத்துச் சீறினான். பெருமக்க ளும் நண்பர்களும் அவனைப் பணியும்படி வலிந்து மன்றாடி வேண்டினர். அப்படி வேண்டியும் அவன் மொழிகள் உருக்கிய இருப்புப் பிழம்பு போல் கனன்று பாய்ந்தன. பொதுமக்களது சீற்றத்தின் முழு வன்மையும் அவன்மீது மோதியது. ஆனால் அவன் பெருவீரன் என்பதையும் அவன் எதிர்த்துவிட்டால் அவனை அடக்குதல் அரிது என்பதையும் மட்டும் நன்குணர்ந்து, திரிபூணர் அவனுக்குக் கொலைத் தீர்ப்பு அளிக்காது நாடு கடத்தல் தண்டனையே அளித்தனர்.

கோரியோலானஸ் அப்போதும் நிமிர்ந்து நின்று, கொதித்துக் கொதித்து எழுங் குழம்பு போல் இரைந்தெழுங் கூட்டத்தை அசட்டையாய்ப் பார்த்து, ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று தெரியாத அறிவிலிகளே! யார் யாரை நாடு கடத்தும் வன்மை உடையவர்கள் என் பதை உங்களுக்கு நான் காட்டவேண்டுமா? சரி, எப்படியும் நான் இல்லாமல் ரோம் வாழ்வதையும், ரோம் இன்றி நான் வாழ்வதையும் பார்க்கிறேன்,’ என்று கூறிவிட்டுச் சரேலென்று நகரெல்லை கடந்து செல்வானாயினான்.

தன் மகன் குற்றமே தன் குற்றமாதலின் அதனை வலம்னியா அறியாது, அவனை அவமதித்த அந்நன்றி கொன்ற மக்களைப் பழித்தாள். ரோம் மக்கள் அதாவது ரோம் பெரு. மக்கள், வீரமிக்க தன் மகனை இப்பதர்கள் கையில் விட்டு அவர்கள் அவனைத் துரத்த ஏன் பார்த்துக்கொண்டு வாளா நிற்கின்றனர் என்று அவள் புலம்பினாள். கோரி யோலானஸின் மனைவி வர்ஜிலியாவோ யாரையுங் குறை சொல்லாமல் தன் ஊழ்வினையையே நொந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கி நின்றாள். கோரியோ லானஸ் வெளியே செல்கின்றான் என்று கேட்ட துமே அவ் விருவருந் தங் குல மதிப்பை மறந்து தலைவிரி கோலமாய் அழுதுகொண்டு அவனைப் பின்பற்றினர். அவன் உணர்ச்சியற்ற குரலில், ‘நீங்கள் ரோம் மாதர்களாதலின், ரோமுக்கு வெளியே என்பின் வரல் தகாது,’ என்றான். அது கேட்டு அவர்கள் தம் விருப்பத்திற் கெதிராகப் பின்னிடைந்து நிற்கவேண்டியதாயிற்று.

அவன் வெளியேகுவது கண்டு, அவனுடன் நின்று போர் செய்த காமினியஸ்கூட அழுது, ‘இஃ தென்ன முறையோ, நாயும் பேயுங்கூடச் சட்டை பண்ணாத இத் துரும்புகள் பேரால் ரோமின் தனிப்பெரு வீரனை வெளியேற்றுவதா என்று நினைத்து மனம் பதைத்தவனாய்ப் பின் தொடர்ந்து வந்து கோரியோலானஸ் கண் மறையும் வரை வாயிலில் நின்றான்.

ஈ. வெஞ்சினமும் பழியார்வமும்

கோரியோலானஸ் மனத்தில் இப்போது ஒரே ஓரெண்ணம். பழி! பழிக்குப் பழி! வீரத்திற்கு விலையின்றிக் கோழைத்தனத்துக்கு விலை தரும் ரோமிற்கு-உண்மைக்கு விலையின்றிப் பசப்பு மொழிகளுக்கும் பொய்ம்மைக்கும் விலை தரும் ரோமிற்கு- நகரைப் பாதுகாக்கும் ஆற்றலின்றி நகரத்தின் செல்வத்திற் பங்குகொள்ள மட்டும் வாய் பிளந்துகொண்டு நிற்கும் பேடிக் கூட்டத்தையுடைய இந்த ரோமிற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று அவன் மனம் துடித்தது.

Shakespeare3பேடிகளான இந் நண்பர்களைவிட, நாட்டு மக்களைவிட, வீரசூரர்களான வால்ஷியரும், அவர்கள் ஒப்பற்ற தலைவனும் போர்ச் சிங்கமுமான ஆஃபீதியஸும் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று அவன் எண்ணினான். எண்ணவே குறிப் பிட்ட நோக்கமின்றி நடந்த அவன் கால்கள் அவனை அறியாமலே அவர்கள் பக்கம் திரும்பின. ரோம் மறுத்த தன் வீரத்தின் மதிப்பை அவர்கள் பக்கம் போயிருந்து காட்டுவதே பழிக்குப் பழி வாங்க நல்ல வழி என்று அவனுக்கு அப்போது தோன்றியது.

பல ஆண்டுகளாக இத்தாலி முழுமையும் நடுங்கவைத்த புறங்கொடா வீரர்களாகிய வால்ஷி யரும் அவர்கள் தலைவனும், தாம் தம் நாடிழந்து பட்ட அவமதிப்பை ஓரளவு போக்கி, ரோமரிட – மிருந்து கோரியோலியை மீட்டு ரோமையும் எதிர்த்தழித்துவிடவேண்டுமென்று சீறி நின்று ஏற்பாடு செய்யும் நேரம் அது. அவர்கள் அண்மைவரை ரோமை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. தம் பெயர் கேட்டவுடனேயே அஞ்சும் கூட்டமென்றே இதுவரை அவர்கள் ரோமரை மதித்திருந்தனர். ஆனால் இன்று எங்கிருந்தோ இக் கோரியோ லானஸ் வந்து தோன்றினான். நமது விடுதலைக்கு. நமனாகவும் நம் வீரத்துக் கொரு களையாகவும்’ என்று அவர்கள் நொந்துகொண்டனர்.

ஆபீதியஸோ , ஒன்று ரோமை அழித்து அக் கோரியோலானஸை வெல்வது, அது முடியா விடின் அவன் கையாலேனும் மாள்வது எனத் தீர்மானித்துவிட்டான். பகைவனாயினும் அவனை ஒத்த வீரர் இம் மனித உலகில் இல்லை என்று அவன் மனம் கூறிற்று. அவனை வெல்வது கூடா தாய்விடினும், அவன் கைப்பட்டு மாள்வது கூடத் தனக்குப் பெருமையே என்று நினைத்தான் அவன். கோரியோலானஸ் மட்டும் ரோமனாயிரா மல் வால்ஷியனாயிருந்தால்! ஆ, அப்போது தன் நாடு எத்தகைய இறும்பூது எய்தும் என்று எண் ணும்போதே அவனை அறியாமல் அவன் கண் களில் நீர் வடிந்தது. ஆ, பிறந்தால் அந்தக் கோரியோலானஸாகப் பிறக்க வேண்டும்,’ என்று அவன் வாய்விட்டுக் கூறினான்.

அந்நேரத்தில் அவன் முன் காவற்காரன் ஒரு வன் வந்து, ‘ஐயனே, யாரோ ஒருவன் முக்காடிட்டு மூடிக்கொண்டு நகர் வாயிலண்டை வந்து நின்று துள்ளஸ் ஆபீதியஸைப் பார்க்கவேண்டும் என்கின்றான்; ரோமன் குரல்மாதிரி இருக்கின்றது; ஆனால் நாங்கள் உறுக்கியும் போகமாட்டேன் என்கிறான்; தள்ளியும் போகமாட்டேன் என்கிறான்,” என்றான்.

அரை நினைவுடனேயே ‘அவனை உள்ளே அழை,’ என்று கூறிவிட்டு ஆபீதியஸ் பழையபடி முன்னும் பின்னும் நடந்து, “ஆ, கோரியோலானஸ்! நீ ஏன் ரோமனாகப் பிறந்தாய்? அதைச் சொல்வானேன்? ஏ, ஆபீதியஸ், நீ ஏன் கோரி : யோலானஸ் பிறந்த உலகில் பிறக்க வேண்டும்? உலகில் ஒரு கோரியோலானஸ் தானே இருக்க முடியும் என்று உனக்கு ஏன் தெரியாமற் போயிற்று,” என்றான்.

அந்நேரம் காவற்காரனுடன் முக்காடிட்ட அவ் வீரன் வந்து நின்றான். அவனைக் கவனியாது ஆபீதியஸ் பின்னும், “ஆ, கோரியோலானஸ், கோரியோலானஸ், நீ ஏன் எனக்கெதிராய் நிற்க வேண்டும் ? நீயும் நானும் மட்டும் சேர்ந்தால், ஆபீதியஸும் கோரியோலானஸும் மட்டும் சேர்ந்தால் இந்த ஓர் உலகமன்று, ஈரேழுலகமும் ஒரு கை பார்த்துவிடுவோமே,” என்றான்.

அப்போது முன் நின்ற முக்காடிட்ட வீரன், “ஆம், அப்படிப் பார்த்துவிடத்தான் நானும் வந் திருக்கின்றேன்,’ என்றான்.

தன் மனத்தில் வைத்து வாய்விட்டுக் கூறிய எண்ணங்களைக் கேட்டு விடைகூறத் துணிந்தவன் எவன் எனச் சினந்து அப்பக்கம் நோக்கினான் ஆபீதியஸ்.

உடன் தானே முக்காட்டை நீக்கி நின்றான் கோரியோலானஸ்.

‘இது கனவா, நனவா! கோரியோலானஸாவது! இங்கு வரவாவது! இது வெறும் உரு வெளித் தோற்ற மாகவே யிருக்க வேண்டும்!’ என்று நினைத்தான் ஆபீதியஸ்.

அவன் உடல் வெலவெலத்துத் துடித்தது. அவன் நாக்குப் பேசமுடியாது மரத்தது. கோரி யோலானஸையே உறுத்து இமையாமற் பார்த்துக்கொண்டு வியப்பே உருவெடுத்து வந்தது போல் நின்றான்.

அப்போது கோரியோலானஸ், ‘ஆபீதியஸ்! என்னை நீயும் வால்ஷியரும் எமனென வெறுப்பீர்கள் என்று அறிவேன். ஆனால் இன்று நான் நீங்கள் வெறுக்கும் ரோமனாகிய கோரியோலானஸாக வரவில்லை. ரோமர் வெறுத்துத் தள்ளிய, ரோமின் பகைவனாகிய கோரியோலானஸாகவே வந்துள்ளேன்,’ என்றான்.

‘கோரியோலானஸ்! ரோமின் பகைவன்! இன்னும் என்னென்ன வியத்தகு செய்திகளெல்லாம் உலகில் நிகழப் போகின்றனவோ!

கோரியோலானஸ்: ‘ தாய் நாடே என்னைக் கைவிட்டபின் எனக்கு வாழ்க்கையில் பற்றில்லையாயினும். நான் அப் பழிக்குப்பழி வாங்கும். எண்ணமுடையேன்; அதுவும் தாய் நாட்டின்மீது! அதன் பகைவர்களாகிய உங்களுக்கு, என்னுடன் பொருத இளஞ் சிங்கங்களாகிய உங்களுக்கு அப்பழி உதவுமாயின், என்னையும் அப்பழியையுங் கருவியாகப் பயன்படுத்திக்கொள்க.’

முதலில் கோரியோலானஸைக் கண்டதும் ‘பகைவன் உள் வந்துவிட்டானே, என்ன செய்ய வந்தானோ! என்று நினைத்துப் பரபரப்புடன் வந்து சூழ்ந்து வாள்களை உருவிக்கொண்டு தம் தலைவனைக் காத்து நின்றனர் வீரர். தலைவன் கையும் வாளை உருவவே முனைந்தது.

ஆனால், கோரியோலானஸ் முகத்தில் தென் பட்ட புயலொத்த சீற்றம், அவனது மழை முழக் கொத்த உருக்கமான வேண்டுகோள், அவனுடைய வெறுப்பும் துணிவும் கலந்த தோற்றம் ஆகிய இவற்றைக் கண்டதே, வீரப் பாலுடன் பெருந்தன்மையையுங் கலந்துண்டவனாகிய ஆபீதி யஸ், தன் பகைமையனைத்தையும் மறந்து, மடை திறந்த வெள்ளம் போல் தாவிச் சென்று கோரியோலானஸைத் தழுவிக்கொண்டு, ‘ஆ, என் ஒப்பற்ற வீரசிங்கம், ஆ, என் கோரியோலானஸ், உன்னை எதிரியாகப் பெற்றதையே ஒரு பெருமை யாகக் கொண்டேன் ; உன்னை இனி என் உடன் பிறப்பாகக் கொண்டு மகிழ்வேன்,’ என்றான்.

பின் அவன் வால்ஷியர் பக்கம் திரும்பி, ‘ கோரியோலானஸ் போன்ற வீரர் பிறந்ததாலன்றோ அந்த ரோம் இவ்வளவு மேன்மையுற்றது அவன் நம்மை அடைந்தது, நம் நல்வினைப் பயன். எதிரியாய் நின்று வால்ஷியர் வீரத்தைக் கண்ட அவனுக்கு யாம் வீரர்க்கே யுரிய அரிய நட்புணர்ச் சியையும் உடையோம் என்பதை இனிக் காட்டுவோம்,’ என்றான்.

அவர்களும் அதனை ஏற்று, “கோரியோ லானஸ் வாழ்க, ஆபீதியஸ் வாழ்க,” என்று முழங்கினர்.

ரோம் ஞாயிறும் வால்ஷிய ஞாயிறும் அன்று வால்ஷிய வானத்திலேயே ஒருங்கு எழுந்து ஒளி வீசின.

ரோம் மீது படையெடுக்கும் முயற்சி, முன்னி லும் விரைவாய், முன்னிலும் பன்மடங்கு துணிவுட னும் முன்னிலும் பன்மடங்கு முனைந்த எழுச்சியுட னும் நடைபெறலாயிற்று.

ச. கும்பலைக் கெடுத்த கோவிந்தாக்கள்

கோரியோலானஸ் போனபின் திரிபூணர்கள் தலைதெரிக்க வெற்றி முழக்கம் முழங்கினர். அன்று தான் அவர்கள் தங்கள் முழு வலிமையை யும் உணர்ந்தவர்களாகக் கொக்கரித்தனர். ‘பெருமக்கள் அன்று தமக்கு முன் தலை வணங்கினர் அவர்கள் ஒப்பற்ற தலைவன், அவர்கள் அனைவர் பெருமைகளும் ஒருங்கே திரண்டு வந்தவன் போன்ற கோரியோலானஸையே தாங்கள் துரத்தி யோட்டிவிட்டோம்’ என்ற நினைவில் அவர்கள் தலைகால் தெரியாமற் குதித்தனர்.

அப்போது வால்ஷியர் ரோம் மீது படை யெடுக்க ஏற்பாடு செய்கின்றனர் என்று தூதன். ஒருவன் வந்து கூறினான்.

திரிபூணர்கள் அவன் தம்மைக் கேலி செய் கின்றான் என்று கருதியதோடன்றி, அதற்காக அவனை நையப் புடைத்துச் சிறையிலும் இட்டனர்.

அதன்பின் தூதன் இன்னொருவன் வந்து, ‘வால்ஷியர் படை புறப்பட்டுவிட்டது ; கோரியோ லியை அவர்கள் கைப்பற்றிவிட்டனர், என்றான்.

அப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை வர வில்லை. ‘என்ன கட்டுக் கதை! ரோமர்களிட மிருந்து கோரியோலியை மீட்க எவனால் முடியும், என்றார்கள்.’ (கோரியோலியை வென்ற வீரனையே நாங்கள் வென்றவர்களாயிற்றே என்று அவர்கள் நினைத்தார்கள் போலும்!)

அப்போது கோரியோலியில் தலைவனாயிருந்து தோற்றோடிவந்த தீ தஸ் லார்ஷியஸ் நேராக அலங்கோல உருவுடன் வந்து, ‘ அறிவிலிகளே, இன்னும் என்ன செய்துகொண் டிருக்கிறீர்கள்? நகருக்கு இடையூறு வந்துவிட்டது! கோரியோலி வீழ்ந்துவிட்டது! இங்கும் படை வருகின்றது!” என்றான்.

அவன்பின் காமினியஸ் வந்து. ‘வீரர்களே. நீங்கள் செய்த வீரச் செய்கையின் பயனை இன்று அடையுங்கள் ; வால்ஷியர் முன் இனி என்ன செய் யப் போகிறீர்கள்? இளஞ் சிங்கத்தை வெறுத் தொதுக்கிய இளம் புலிகளே! இனி உங்கள் கெட்டிக்காரத்தனத்தைப் பார்ப்போம்,’ என்று சினந்து கூறினான்.

பெருமக்களும் இப்போது துணிகரமாக அப்பொதுமக்கள் தலைவர்களைக் கண்டிக்கலாயினர். ‘இப்பொறுப்பற்ற கும்பல்கள் சொற் கேட்டு, ரோமின் விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்துவிட்டோமே,’ என்று அவர்கள் வருந்தினர்.

அப்போது பின்னும் வேறு தூதன் ஒருவன் வந்து ‘ஐயன்மீர், வால்ஷியரின் கிளர்ச்சிக்கும் முழக்கத்துக்கும் எல்லையில்லை. அவர்கள் முகத்தில் வெற்றி வெறியும் வீம்பு நடையும் தாண்டவமாடுகின்றன. அவர்களிடையே கோரியோலானஸே நேரிற் சென்றிருந்துகொண்டு ரோமை எதிர்க்க உதவுவதாகக்கூடக் கேள்வி,’ என்றான்.

கோரியோலானஸ் என்ற பெயரைக் கேட்டதே பெருமக்கள் இடியேறுண்ட நாகம்போற் செயலிழந்தனர்.

பொதுமக்களிடையே இச் செய்தி மின் பாய் வதுபோற் பாய்ந்து பரவிற்று. அவர்களுட் பல ரும் ‘ அந்தோ , நாம் செய்த பிழை’ என் றிரங் கினர். ‘வீரத்தைப் பழித்த நமக்கு இது வேண்டும்’ என்றனர் சிலர். வாய் வீரர் சொற் கேட்டுவாள் வீரனை இழந்தோம்,’ என்றனர் மற்றுஞ் சிலர்.

இன்னுஞ் சிலர், ‘எமக்குக் கெடுமதி கூறிய அத் திரிபூணர்கள்மீது பழி வாங்குவோம்,’ என்று எழுந்தனர். ஆனால் அத் திரிபூணர்கள் இப்போது காற்று எதிர்த்தடிக்கிறதென்று கண்டு, மறை விடஞ் சென்று பதுங்கிக்கொண்டார்கள்,

ஆயினும், வெள்ளம் அணை கடந்துவிட்டதே! இனி என் செய்வது ! இனி, வந்த வினைக்கு இறை இறுத்துத்தானே ஆகவேண்டும்! பெருமக்கள் அங்குமிங்கும் ஓடி வீரர்களைத் திரட்டிக் கோட்டை மதிலைக் காக்கத் துரத்தியடித்தனர். படையின் தலைவர்களும் வாயிலில் வந்து கூடினர்.

கோரியோலானஸடன் போர் செய்ய எவர் தாம் முன்வருவர்! ஆகவே எப்படியும் கோரியோ லானஸின் சீற்றத்தை நன்மொழிகளால் தணித்து அவனை அவனது சூளினின்றும் விலக்க வேண்டு மென்று யாவரும் ஒரே மனதாகத் தீர்மானித் தனர். இதற்காகத் திரிபூணர்கள் – அவனை அவ மதித்துத் துரத்திய திரிபூணர்கள் – பெயராலேயே ஒருவனை அனுப்புவதென்று எண்ணினர். கோரியோலானஸடன் முன் படைத்தலைமை தாங்கிப் போருக்குச் சென்ற காமினியஸே அதற்குத் தக்கவன் என்று எல்லாருந் தேர்ந்தெடுத்தனர்.

காமினியஸ் கோரியோலானஸை ஒத்த வீரன் அல்லனாயினும், ரோமப் படையை அவனுக்கும் மேலாக நின்று தலைமை தாங்கி நடத்தியவன். ஆனால், படை உயர்வை ஒருபுறம் எறிந்துவிட்டுக் கால் நடையாய் நடந்து வந்து வால்ஷியரிடம் பணிந்து, ‘ கோரியோலானஸைக் காணவேண்டும்,’ என்றான்.

முதலில் வால்ஷியர் ‘அதற் கிணங்கமாட் டோம்,’ என்றனர். ஆனால் ஆபீதியஸ் கோரியோலானஸுக்கு இடங்கொடுத்துவிட்டது பற்றி உள் ளூரக் கழிவிரக்கங்கொள்ளத் தொடங்கியிருந் தான். கோரியோலானஸ் வந்தது முதல் வால்ஷி யர் அனைவருந் தன்னை விட்டுவிட்டு அவனையே தெய்வமாகக் கொண்டாடியதனால், தன் புகழ், ஞாயிறு தோன்றியபின் திங்களொளி மழுங்குவதுபோல் மழுங்கக் கண்டான். ஆகவே ரோம ருக்கு இடங்கொடுப்பதன்மூலம் கோரியோலானஸ் திரும்பிப் போகலாகும் என உய்த்துணர்ந்து அவன் அவர்களுக்கு உள்ளே செல்ல இணக்க மளித்தான்.

ஆனால், ‘பழி! ரோமின்மீது பழி’ எனத் துடித்து நிற்கும் கோரியோலானஸ் காமினியஸ் வந்ததைக் கண்டானில்லை. அவன் காதுகள் காமினியஸ் மொழிகளை ஏற்க மறுத்தன. ஆயி னும் தன் முன் மண்டியிட்டு அவன் பணிந்தபோது பழைய நட்பு நினைவு கனிந்தெழலாயிற்று. அவன் காமினியஸைக் கையாலெடுத்து நிறுத்தித் தழுவிக் கொண்டு , ‘நண்ப. மன்னிக்க வேண்டும் ; பழி என் கண்களை மறைக்கின்றது; இப்போது செல்க! ரோம் அழிந்த பின்புதான் நட்பின் ஒளி என் கண் களில் வீசும்,’ என்று கூறி அனுப்பினான்.

அதன்பின் ரோமர், முன் பொதுமக்களை வசப்படுத்திய சொல்லாளனாகிய மெனெனியஸை அவனிடம் அனுப்பிப் பார்த்தனர். அதனாலும் பயனில்லை. ரோம் மக்கள் மனமுடைந்தனர் வீரர்களோ, “கோரியோலானஸ் வருவதாயின் நாங்கள் சண்டை செய்யமாட்டோம் ; அவனை எதிர்த்துத் துரத்திய திரிபூணர்களும் அவர்கள் கும்பல்களுமே போய்ச் சண்டை செய்யட்டும்,” என்று கூறிவிட்டு விலகி நின்றனர்.

திரிபூணர் பாவம் இப்போது யாது செய்வர்! மறைந்து கிடந்த இடம் வரைத் தம் வினையின் பயன் தம்மை வந்து தாக்குகின்றது; தமது பிழையை இனித் தாமே தான் சரிசெய்ய முயல வேண்டும் என்று அவர்கள் கண்டனர். கண்டு, தமது பகைமை, தமது வெற்றிச் செருக்கு ஆகிய அனைத்தையுஞ் சுருட்டி ஒதுக்கி வைத்துவிட்டுக், குனிந்த தலையொடும் குழைந்த உருவொடும் கோரியோலானஸின் வீடு சென்று, அங்குத் திரிபுர எழுச்சிக் காலத்துக் கடவுளர் வரவுக்குக் காத் திருந்த மலைமகளும் திருமகளும் போன்று கவ லையே வடிவாக வீற்றிருக்கும் வலம்னியாவையும் வர்ஜீலியாவையுங் கண்டு, அவர்கள் காலடியில் வீழ்ந்து, தமது பொறுக்கொணாப் பிழையைப் பொறுக்கவேண்டுமென்றும், தமக்காக அன்றே னும் ரோம் அன்னைக்காகவேனும் மனமிரங்கிக் கோரியோலானஸின் சீற்றத்தைத் தணித்து அவன் பகைமையினின்று தம்மையும் ரோமையும் பாதுகாத்தல் வேண்டும் என்றும் அழுது மன்றாடினர்.

வர்ஜீலியா தன் கணவனைத் துரத்திய காதகர் களைக் கண்களால் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆனால் நாட்டுப் பற்றும் வீரமுங் கொண்ட வலம்னியா, தன் மகன் மீதுள்ள பற்றையும் அவன்மீது பழி சுமத்திய அம் மக்கள் மீதுள்ள சீற்றத்தையும் ஒருவா றடக்கிக்கொண்டு அவர்களிடம், ‘என்னால் என்ன ஆகும்? கெடுதல் செய்யும் ஆற்றலுள்ள நீங்களே கையற்றபோது நான் செய்வதென்ன?’ என்றாள்.

திரிபூணர்: ‘அன்னையே உங்களால் இப்போது ஆகாத காரியமன்று நாங்கள் கேட்பது; குற்றம் செய்த எங்கள் சொல் ஏறாவிடினும், நீங்கள் எங்க ளுக்காகப் பரிந்து கேட்டால் கோரியோலானஸ் கட்டாயம் மனமிரங்குவான்; பெண்கள் அழ, அதிலும் மனைவியும் தாயும் அழ அவன் பார்த் திருக்கமாட்டான்,’ என்றனர்.

வலம்னியா சரி என ஏற்றுக்கொண்டு வர்ஜீலியா வின் கண்களைத் துடைத்து முடி திருத்தி அவளை யும் உடன் கொண்டு புறப்பட்டாள். அவர்களைப் பின்பற்றி ரோம் நகரப் பெண்கள் அனைவரும் –

அந்தணர் வீட்டுப் பெண்களும், வீரர் பெண்களும், வணிகர் பெண்களும், வேளாளர் பெண்களும், ஏழைப் பொதுமக்கள் பெண்டிருமாக எல்லாரும் — ஒருங்கு கூடி அணிவகுத்துச் சென்றனர். நகர மூதாட்டிகள் இரு மருங்கிலும் வரிசையாக அவர் களைத் துணை தாங்கிச் சென்றனர்.

கரிய உடை உடுத்துக் கலங்கி அழுத கண்க ளோடு தலைவிரி கோலமாய் வந்த அப் பெண்கள் ஊர்வலத்தை நோக்கி எதிரிகளாகிய வால்ஷியர் முதற் கொண்டு வீர மெல்லாம் இழந்து மனங் கனி வுற்று வழிவிட்டனர். படை வீட்டைக் காத்து நின்ற காவலர்கூடக் கோரியோலானஸின் தாய் என்று கேட்டதுமே கை கூப்பி வணங்கி உட் செல்ல விடுத்தனர்.

ந. வீரத் தாயும் வீர மகனும்

படை வீட்டினுள் தனதிருக்கை அறைக்கு வெளியே வந்து வாளுன்றிய நிலையில் கற்சிலை என நின்றான் கோரியோலானஸ்.

அவன் முகத்தில் தோன்றிய மாறுதல் ஒவ் வொன்றையும் தம் இரு கண்களும் இமையாடாமல் கவனித்து நின்றனர் வால்ஷிய மக்கள்.

அவன் முன் அவன் மனைவி முதலில் வந்து தலை குனிந்து வேனிலில் தளர்ந்து வாடிய கொடி யென நின்றாள். அவள் கண்ணீர் அவள் கன்னங்களின் ஒளியையே கரைத்து மார்பகத்தை முற்றி லுல் நனைத்துப் பின்னும் வழிகின்றது. அவனது கனிந்த பார்வை ஒன்றிற்கு நெடுநேரம் காத்து நின்றும் பயனில்லாதது கண்டு அவள் மனமழுங்கி விம்மி விம்மி அழுதாள்.

தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்ப தற் கிணங்க அவ்வழுகை அவன் உள்ளத்தை ஈர்த்து ஏர்க்காலுழுதது போல உழுதது. ஆனால் அவன் தன்னை அடக்கி அவள் பக்கமிருந்து தன் கண்களைத் திருப்பிக்கொண்டு , “உன் கணவன் ரோமர் தலைவனான கோரியோலானஸ். அவன் இறந்துவிட்டான். நான் வேறு கோரியோலா னஸ்,- நான் வால்ஷியர் நண்பனான கோரியோலா னஸ் – நான் ரோமின் பகைவன்,- உங்கள் பகை வன் – ஆதலால் என்னைவிட்டுச் செல்க,” என்றான்.

வர்ஜீலியா இச்சுடு சொற்கள் கேட்டுத் துடி துடித்து அவன் கால்களில் விழுந்தழுதாள். அவர்கள் பிள்ளை ஐந்து ஆண்டு கூட நிரம்பாத சிறுவன் கயஸ் அவள் முன் தானையைப் பற்றி நின்று தந்தையின் கடுகடுத்த முகத்தைப் பார்க்கவும் அஞ்சி அம்மா அம்மா என்றழுதான்.

அக் காட்சி கண்டு கல்லும் கரையும். ஆனால் கல்லினும் கடுமையான வஞ்சினம் கோரியோ லானஸின் மனத்திற் குடிகொண்டிருந்தது.

அவன் அவளையும் குழந்தையையும் எடுத்து அப்பால் நிறுத்தி, ‘நீங்கள் போங்கள்,’ என்றான்.

பெற்ற பிள்ளையையும் கண்டு கரையாத அவன் சீற்றத்தைக்கண்டு அவனைப் பெற்ற வீரத் தாயாகிய வலம்னியாகூட அஞ்சினாள். ஆயினும் தன் கடமையை எண்ணி முன்வந்து அவனை நோக்கிக் “கோரியோலானஸ் பெண்டாட்டியையும் பிள்ளையையும் கண்டிரங்காத உன் முன் உன்னைப் பெற்ற தாயாகிய நானே வந்து நின்று மன்றாடுகிறேன்,” என்று கூறி மகனென்றும் பாராமல், அவனை வணங்கப்போனாள்.

தாய், தன்னை ஈன்றெடுத்த தாயா தன்னை வணங்குவது என்று துடிதுடித்த உள்ளத்தினனாய்க் கோரியோலானஸ் அணை மீறிய வெள்ளம் போல் முன் சென்று அவள் கால்களில் வீழ்ந்து, ‘அன்னையே, எல்லாம் அறிந்த தாங்களும் இப் பணியில் இறங்கி என்னை இருதலைப் பொறியிலிடுவானேன்! எனது தன்மதிப்பு என் பழியில் அடங்கிக் கிடக்கிறது. அதிலிருந்து என்னை விலக்க நீங்கள் முயல்வானேன்! இதற்காகப் பகைவர் இடம் என்றும் பாராமல் இவ்வளவு தொலை தாங்களும் இத்தனை மெல்லியலாரும் கால் நோக நடந்துவந்து மன்றாடும்படி நேர்ந்தது என் நெஞ்சைப் பிளக்கின்றது,’ என்று கூறி அவள் கால் களைப் பற்றித் தழுவினான்.

அவள் அவன் தலைமீது கைவைத்து வாழ்த்தி, ‘நீ ஒரு போர்வீரன். உன்னைப் போர் வீரனாக்கி யதும், தன்மதிப்புடையவனாக்கியதும் நான். என் முன் உன் தன்மதிப்பு ஒரு தடையாகாது. மேலும் நான் உனக்கெப்படி அன்னையோ அம்படியே ரோமும் உனக்கு அன்னையாவாள் அவள்மீது போர் தொடுப்பது என்மீது போர் தொடுப்பது போலவேயாம். ஆதலால் அவ்வெண்ணத்தை விடு,’ என்றாள்.

கோரியோலானஸ்: ‘தாயே, தாங்கள் கேட்பது இன்னது என்று தாங்கள் அறியீர்கள். தாங் கள் கேட்பின் நான் மறுக்கும் பொருள் யாதுமில்லை. உயிரையே கேட்பினும் நான் மறுக்க மாட்டேன். இந்தக் கணத்திலேயே கொடுப்பேன். ஆனால் இதில் என் தன்மதிப்பு, நட்பு, வாக்குறுதி ஆகிய யாவும் அடங்கிக் கிடக்கின்றன, இவ் வொரு வகையில் தங்கள் ஆணையை மறுக்க நேர்ந்தமைக் கும் தாங்கள் வந்த காரியம் நிறைவேறாமல் மீண் டேக நேர்ந்தமைக்கும் வருந்துகிறேன்.’

வலம்னியா: ‘சரி, உன் தன்மதிப்பையும் வாக்குறுதியையும் நீயே வைத்துக்கொள்,’ என்று சினந்து கூறிவிட்டுச் சரேலென்று திரும்பி வர்ஜீலியாவைப் பார்த்து, ‘வர்ஜீலியா, இனி அவன் என் பிள்ளையுமல்லன்; உன் கணவனுமல்லன்; கயஸ், நீயும் இனி அவனைத் தந்தை என அழைக்க வேண்டாம், அவனுக்கு ரோம் அன்னையின் மதிப்பைவிட ஒரு மதிப்பு இப்போது ஏற்பட்டு விட்டது. ரோம் அன்னையின் பாலுடன் கலந் துண்ட வீரத்திலும் மேலான வீர மொன்று அவ னுக்கு இப்போது வந்திருக்கிறது. நாம் இனி அவன் பகைவர்களானதனால் பகைவர்களாகவே போவோம்,’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

கோரியோலானஸ் மனத்தில் இம் மொழிகள் சுறுக்கெனத்தைத்தன. அவன் சட்டென அவள் முன் சென்று நின்று அவளைத் தடுத்தான். வர்ஜீலியாவும் கயஸம் விம்மி விம்மி அழுதனர். ஆனால் அவள், ‘ நீ ஏன் அழவேண்டும் வர்ஜீ? இனி உன் கண்ணீரை அவன் கவனியான்; தாய் தந்தையர் இருந்தும் தாய் தந்தை யற்றவன் போலக் கரைந்தழும் இக் கையேந்தலைக்கூடக் கவனியாத இக்கல் நெஞ்சனை நினைந்தழுவதை விடு; நாம் செல்வோம்,’ என்றாள்.

அவள் சொல் ஒவ்வொன்றும் பழுக்கக் காய்ந்த வேல்கள் போல் அவன் நெஞ்சில் பாய்ந்தன. அவன், “அம்மா, என்மீது ஏன் இத்தனை பழிகளைச் சுமத்தவேண்டும், நான் வேறென்ன செய்யமுடியும்? ஒரு கெடுதலும் செய்யாத என்னிடம் இப்படி எல்லாம் முகம் திருப்பிக்கொண்டு போவானேன்,” என்றான்.

அவன் மனம் திரும்புவது கண்டு வலம்னியா, ‘எங்கள் நிலைமையை நீ நினைத்துப் பார்த்தாயா? நீ எனக்குப் பிள்ளை! இதோ இக் கற்பரசிக்கு நீ கணவன்! எல்லா மாதர்களும் ரோமின் வெற்றிக்கும் உறவினர் வெற்றிக்கும் வணக்கம் செய்யும் போது நாங்கள் இருவர் மட்டும் ரோமின் வெற்றிக்கும் வணக்கம் செய்ய முடியாமல், உனது வெற்றிக்கும் வணக்கம்செய்ய முடியாமல் தவிப்பதா? நீ ஒரு வீரனாயிருந்து தாயையும் மனைவியையும் தவிக்கவிடலாமா? இதுவரை ரோமுக்காக உயிர் துறந்தவர் குலத்திற் பிறந்த நீ, ரோமர் உயிர் கொன்ற பழியையா இத்தீங்கறியா இளம் பாலன். தலையிலும் இவன் வழிவழிக் குடும்பத்தின்மீதும் சுமத்துவது?’ என்றாள்.

கோரியோலானஸின் வீர உள்ளம் வெந்தீயிற் பட்ட மெழுகென உருகி வழிந்தது. அவன், ‘நீங்கள் கூறும் உண்மைகளை நான் அறியாதவன் அல்லன். ஆனால், என்று உங்கள் ரோம் என்னைத் துரத்தியதோ அன்றே நான் ரோமுக்கு உரியவன் அல்லனாயினேன். என் கடமையும் ரோமுக்கு, அன்று, இவ்வால்ஷியருக்கே. இவர்கள் என் நண்பர்கள்; அதோடு ஒப்பற்ற வீரர்கள். தமக்கு உழைத்த நண்பர்களைப் பழித்து நாட்டைவிட்டுத் துரத்தும் கோழைகள் அல்லர்,’ என்றான்.

அவன் கூறியது உண்மையாயினும். தன் நாட்டின் குறைகளை எதிரிகள் முன் சொல்கிறான் என்று சீறிக் கண்டிக்க எழுந்த நாவைத், தான் வந்த நோக்கத்தை எண்ணித் தடுத்தடக்கிக் கொண்டு அவள் கூறுவாள்:

‘எந்த வீரருக்காவது எந்த கோழையருக்காவது அன்று, இன்று நான் உன் மனம் கரை யும்படி வந்து நின்று மன்றாடுவது. அவர்கள் உன் பகைவர்கள் என்பது உண்மையே. ஆனால் உனக்காக அழுவது அவர்கள் அல்லர். உன் தாய், உன் மனைவி, உன் பிள்ளையாகிய நாங்கள் அழுகிறோம். நாங்களல்லவோ உன்னால் பிள்ளையற்றும், துணை யற்றும், தந்தையற்றும் தவிப்பதுடன் தாய்நாட்டின் பழியையும் சுமக்க இருக்கிறோம்.’

கோரியோலானஸுக்கு “ஏன் இப் பெண்கள் முகத்தில் விழித்தோம். ஏன் இவர்கள் மொழிக்குச் செவி கொடுத்தோம்” என்றாயிற்று.

Shakespeare4ஆனால் அத தாயின் துயர் கண்டும் – அவள் பின் நின்று கண் கலங்கியழும் தன் துணைவியின் அழுகை கேட்டும்-அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்துப் பின் தன்னையும் பார்த்து மருளும் தன் இளஞ் சிங்கத்தையும் அதன் எதிர் காலத்தையும் உன்னியும், அவன் தன் உயிரினும் இனிய பழியையும் அதனுடன் தன் உயிரையும் துறப்பதென்னும் பேருறுதியைக் கொண்டான்.

“அன்னையே! நீ ரோமின் ஒப்பற்ற புதல்வி என்பதைக் காட்டினாய்! என் தாய் என்பதைமட் டும் காட்டத் தவறுகிறாய்; அதனால் என்ன? நான் மகன் தான் என்பதை நான் காட்டுகிறேன்.

“அன்னையே! என் மனித உணர்ச்சியை என் பெருமையைக் குலைத்த ரோம், உங்களை அனுப்பியது ஏன் என்று இப்போது தெரிந்தது. நீங்கள் ரோமின் உயிருக்கு மன்றாட வரவில்லை. ஒரு ரோமன் உயிருக்கு—என் உயிருக்கு-மன்றாட வந்தீர்கள். அவ்வுயிர்க்கு இனி விலையில்லை. ஏனெனில் அதனினும் மிக்க மானத்தையே நீங்கள் விலைகொண்டு செல்கிறீர்கள். உயிரையும், உயிரினும் இனிய பழியையும் அப் பழியினும் மிக்க தான என் நண்பர் வால்ஷியருக்களித்த வாக் குறுதியின் நிலையையும் நீங்கள் கொண்டு செல்லு கிறீர்கள். நீங்கள் செல்க!

“உங்கள் பெருமைக்கும், உங்கள் குடிப் பெரு மைக்கும், உங்கள் நாட்டுப் பெருமைக்கும் என் உயிர் இரையாவதாக,” என்றான்.

அவன் சொற்களின் பொருள் அவளுக்கோ ஏழை வர்ஜீலியாவிற்கோ விளங்கவில்லை. ஆனால் தம் வேண்டுகோளை அவன் ஏற்றான் என்று மட்டும் அவர்கள் கண்டனர்.

ரோமின் பக்க நோக்கி அவர்கள் கையெடுத் துக் கும்பிட்டுக் , ‘ கோரியோலானஸ், உன் பெருந் தன்மை கண்டு ரோமின் மனம் குளிர்க,’ என்று கூறி அந் நற்செய்தியை ரோம் மக்களுக்கு அறிவிக்க மீண்டேகினர்.

சு. முடிவு

அவர்கள் செல்வதைத் தன் உயிர் செல்வதாக எண்ணிப் பார்த்து நின்றான் கோரியோலானஸ். வால்ஷியரும் செய்வதின்னதெனத் தெரியாது திகைத்து நின்றனர். அவன் சொற்களை ஒருவராயினும் முழுமையாக உணரவில்லையாயினும், தாய் வந்த காரியம் வெற்றியாயிற்று என்று மட்டும் கண்டனர்.

உயிரைப் பறிகொடுத்து அதனை மீட்டுக் கொண்டுவரப் போனவர்களுக்காகக் காத்திருந்தவர்கள் போல் கவலையுற் றேங்கிய ரோம் மக்கள், தம் மாதர் அனைவரும் வலம்னியாவின் தலைமையில் மீள்வதைக் கண்டனர். அவள் முகத்தில் வீரக்களை மிளிர்ந்தது. வர்ஜீலியாவிடம் அக் களையில்லையாயினும் அவள் அழுகை ஓய்ந்து அமைந்த தோற்றத்துடனிருந்தாள். சிறுவன் கயஸை அவள் கையிலெடுத்து அணைத்து முத்த மிட்டுக்கொண்டே வருகிறாள். அவர்கள் நடையிலிருந்தே மக்கள், வெற்றி தமதென உணர்ந்தனர். கிட்டவந்ததும் வலம்னியா ‘ரோம் வாழ்க கோரியோலானஸ் வாழ்க,’ என்றாள். பெண்கள் அனைவரும் தொடர்ந்து ரோம் வாழ்க ! ரோம் வாழ்க ! கோரியோலானஸ் வாழ்க!’ என்று ஆரவாரித்தனர்.

Shakespeare5இதன் எதிரொலிபோலக் கோட்டை முழுமை யுமே, உயிர் வந்தது போல், ‘ரோம் வாழ்க, கோரி யோலானஸ் வாழ்க, என்று ஆரவாரித்திரைந்தது.

வால்ஷியர் படைவீடு மட்டும் ஒளியிழந்தது.

கோரியோலானஸ் வீரமும் அவன் உயிரும் அவன் உடலைவிட்டு விடைகொண்டு சென்றுவிட்டன என்று தோன்றிற்று.

சிங்கம் போன்ற இறுமாப்புடைய அவன் உருவம் சிறியதொரு முயலென் ஒடுங்கி நடுங்கிற்று.

அவன் தன் வாளை உறையிலிட்டுவிட்டு நேராக ஆபீதியஸ் இருக்கையை அணுகி அவனிடம் அவ்வாளை உறையுடன் கொடுத்துத் ‘தாய் நாட்டின் பகைவன், தன் உறவினர் நாட்டின் துணைவன் ஆவனோ ? நான் உங்களுக்கும் பகைவனே. என் உயிரைக்கொள்க,’ என்றான்.

அவன் வீரனென்று தெரிந்தும் அவன் மீதுள்ள பொறாமை ஒரு புறம், அவனால் அடைந்த எமாற்றம் ஒருபுறம் ஆகநின்று ஆபீதியஸையும் அவன் வீரராகிய வால்ஷியரையும் மனித உணர்ச்சியற்றவராகச் செய்துவிட்டது.

படையிழந்து பகையுணர்ச்சியும் இழந்த அவனை அவர்கள் அவன் வாய்மொழிக்கிணங்கவே, ‘தாய் நாட்டுக்குப் பகைவன், அண்டியவர்க்கும் பகைவன், மனிதவகுப்புக்கே ஒரு கோடாரிக் காம்பு,’ எனக் கூவிக்கொண்டு அவனைச் சூழ்ந்து வாளாலும் ஈட்டியாலும் கட்டையாலும் தாக்கி வெட்டியும் குத்தியும் எறிந்தும் அடித்தும் அவனைக் கொன்று அவனுடலைச் சிதைத்தனர்.

பின் அவர்கள் அவன் குடலை ஈட்டியில் குத் திக் கொடியாகப் பிடித்துக்கொண்டு, ரோம்மீது தங்களுக்குள்ள சீற்றமனைத்தையும் அவன் மீதே காட்டி, ரோம் மக்கள் கண்காண ரோம் நகர்க் கோட்டையைச் சுற்றிச்சென்று, ‘கோரியோ லானஸ் வீழ்க; வால்ஷியர் பகைவன் வீழ்க; வஞ்சக ரோமன் வீழ்க;’ என்று கதறினர்.

அவன் முடிவறிந்த ரோமர் தீ மிதித்தவர் போலத் துடி துடித்தார். வர்ஜீலியா அத்துணுக்குறு செய்தி காதில் விழாமுன் ஒரே அலறாய் அலறி வீழ்ந்து மாண்டாள்.

வலம்னியாவும், தன் மகனை – தன் வீரமகனை – நன்றி கெட்ட அந்நகருக்கே பலிகொடுத்த துயர் தாளாது வாளால் தன்னை மாய்த்துக்கொண்டாள்.

வாழ்வுநாளில் பகைத்துக்கொண்ட கோரியோலானஸை இழந்து தாழ்வடைந்து, நாணிழந்த நங்கை போல் நலனிழந்து மாழ்கியது ரோம் நகரம்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஐந்தாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1940, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *