முன்னொரு காலத்தில் வேப்பம்பட்டி என்ற ஊரில் அம்பலவாணன் என்பவன் இருந்தான். அவன் ஏட்டுச்சுவடிகளை மனப்பாடம் செய்திருந்தான். அதனால், எந்தப் புலவரைப் பார்த்தாலும் வாதுக்கு அழைப்பான். “”உருப்படியாக எதுவும் செய்யாமல் வெட்டிவாதத்தில் நாட்களைக் கழிக்கிறானே மகன்!’ என தாயார் தன் தமையனிடம் சொல்லிப் புலம்பினாள்.
“”கவலைப்படாதே! என் மகள் விசாலினி மகா கெட்டிக்காரி. உன் பிள்ளையைத் திருத்தினால் அவளை மருமகளாக ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டார் தமையன்.
“”அழகும், அறிவும் நிறைந்த உன் பெண்ணை மருமகளாக்கிக் கொள்ள கசக்குமா?” என்றாள் வசுந்தரா.
“”அம்பலா! எங்கள் ஊரில் ஒரு பண்டிதர் இருக்கிறார். அவரோடு வாதம் செய்து ஜெயித்தால் நீ பெரும் புலவன் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்!” என்றார் மாமன்.
அன்றே மாமனுடன் புறப்பட்டான் அம்பலவாணன்.
மாமா வீட்டுக்கு வந்ததும், “”பண்டிதரை எப்போது சந்திக்கலாம்?” என்று பரபரத்தான்.
“”இரு. அவசரப்படாதே! நான் போய் பண்டிதரைப் பார்த்து நேரமும், இடமும் குறித்துக் கொண்டு வருகிறேன்!” என்று போனார் மாமா. மாமனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மருமகன்.
“”பண்டிதர் வெளியூர் போயிருக்கிறாராம்! நாளை மாலைதான் ஊர் திரும்புகிறாராம்!” என்று சொல்லிக்கொண்டு வந்தார் அவர்.
அதே சமயம் விசாலினி வேலைக்காரியிடம், “”அந்த ஆள் சுத்த கமகடைகயகன்!” என்றாள்.
“”ஆமாம்மா!” என்றபடி போனாள் வேலைக்காரி .
இதைக் கேட்ட அம்பலா குழம்பினான்.
“”இது என்ன புது வார்த்தை? இதற்கென்ன அர்த்தம்?” என்று மாமனை விசாரித்தான்.
“”விசா பண்டிதரிடம் தமிழ் படிக்கிறாள். அவர் சொல்லும் புது வார்த்தை களை இப்படித்தான் அடிக்கடி உபயோகிப்பாள்!” என்றார் மாமா.
வேறுவழியில்லாமல் விசாலினியிடம் கேட்டான்.
“”நீங்கள் பண்டிதரோடு தர்க்கம் செய்யப் போகிறீர்கள்! சுத்த கபேகக்ககூவா! அவர் இந்த மாதிரி சொற்களைப் பிரவாகமாகப் போடுவதில் ககேகடி ஆயிற்றே… எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?” என்றாள்.
அம்பலவாணனுக்கு முடியைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது.
“”விசா! நிறுத்து. முதல் வார்த்தைக்கே அர்த்தம் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும்போது மேலும் இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டாய். இதன் ரகசியம் தெரியாவிட்டால் என்னால் எந்த வேலையுமே செய்ய முடியாது. தயவுசெய்து சொல்லு!” என்று கெஞ்சினான்.
“”அத்தான்! இதன் அர்த்தத்தை நான் சொல்ல வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளுக்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். முதலாவது – இனிமேல் வீண்வாதங்களில் காலம் கழிக்காமல் உருப்படியாகச் சம்பாதிக்க வேண்டும். இரண்டாவது – உடனடியாக நம் திருமணத்துக்குச் சம்மதம் சொல்ல வேண்டும்!” என்றாள்.
ஒப்புக்கொண்டான் அம்பலவாணன்.
“”ஒவ்வொரு எழுத்துக்கு முன்பு “க’னாவை நீக்கிவிட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியும். முதல் வார்த்தை “மடையன்’ இரண்டாவது “பேக்கூ’ மூன்றாவது “கேடி’ சரிதானா? என்ன விழிக்கிறீர்கள். என்றாள் விசாலினி .அவன் முகத்தில் அசடுவழிந்தது.
“”இதைப் புரிந்துகொண்டு தர்க்கம் பண்ணுவது ரொம்பக் கஷ்டம். நான் பண்டிதரோடு வாதாட விரும்பவில்லை! ஊருக்குப் போகிறேன்!” என்று புறப்பட்டான்.
“”ஐயோ! அசட்டு அத்தான்! நான்தான் பண்டிதர். போதுமா. உங்களை வழிக்குக்கொண்டு வர நானும், அப்பாவும் போட்ட நாடகம் இது. அட அத்தை வந்துவிட்டார்களே! அப்பா சாஸ்திரிகளைப் பார்த்து கமுககூகர்கத்கதகம் குறிக்கப் போயிருக்கிறார்!” என்றாள் விசாலினி.
“”ஒரு நிபந்தனை! இதோடு நீ இப்படி எழுத்தை இடையில் போட்டுப் பேசுவதை நிறுத்தணும்!” என்றான் அம்பலவாணன்.
இருவரும் சிரிப்பதன் காரணம் விளங்காமல் விழித்தாள் அத்தைகாரி. புத்திசாலி மருமகள் கிடைத்த மகிழ்ச்சியில் திகைத்தாள்.
– அக்டோபர் 22,2010